முகப்புசெய்திஒடுக்கப்பட்ட மக்களே அதன் களம் : உண்மெய், தமிழ் அமன்

ஒடுக்கப்பட்ட மக்களே அதன் களம் : உண்மெய், தமிழ் அமன்

-

என் பார்வையில் வினவு – 29 : தமிழ் அமன்

ரம்பத்தில் இணையம் என்றாலே ஏதோ ஆபாச படம் பார்க்கும் பொருளாகவே பார்க்கப்பட்ட காலம் அது. என்னுடைய அலுவலகத்தில் இணையத்தின் தேவையை வேண்டி இணைப்பு கொடுக்கப்பட்டது. அப்பொழுது நான் பெரியார் சம்பந்தப்பட்ட இணைய பக்கங்களை விரும்பி பார்ப்பேன். பிறகு வழக்கம் போல் சினிமா சம்பந்தப்பட்ட பக்கங்களை பார்ப்பேன். அவ்வளவுதான் இணையம் இவ்வளவுதானா என்ற எண்ணம் கூட வந்தது உண்டு.

அந்த தருணத்தில் தான் நண்பர் பெரோஸ் அவர்கள் சொல்லி வினவுவை வாசிக்க ஆரம்பித்தேன். கோவையில் இருக்கும் ம க இ க செயலர் மணிவண்ணன் அவர்கள் அறிமுகத்துக்கு பிறகு முழுக்க முழுக்க வினவுவின் வாசகனாகவே ஆகி விட்டேன். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இதே பு ஜ, பு க வை நானும் பெரோசும் விமர்சிப்போம்.

“ இவுங்க என்ன எல்லோரையும் திட்டுறாங்க . அட யாருதான் நல்லவன்னு சொல்லுங்கப்பா என்றெல்லாம் பேசுவோம். ஆனால் அதை இப்போது நாங்கள் நினைத்து பார்க்கும் பொழுது தான் எங்களின் அறியாமை எப்படி இருந்தது என்று தெரிகிறது. ஒரு முறை அலுவலகத்தில் வினவுவை படித்து கொண்டு இருக்கும் பொழுது என்னுடைய முதலாளி வந்து பார்த்து விட்டார். என்ன இது என்று அவரும் படிக்க ஆரம்பித்து விட்டு இப்படி சொன்னார்….. “இதெல்லாம் நக்சலைட் ஆளுகளின் வேலை இதையெல்லாம் பார்க்காதே.”

என்று சொன்னார். அப்போது நான் நினைத்து கொண்டேன். ஆபாசத்தை பார்த்தால் கூட அதை பார்க்காதே என்று சொல்லுவதற்குஆள் இல்லை. ஆனால் புரட்சிகரமான எழுத்துக்களை பார்க்கதே என்று தடுப்பதற்கு மட்டும் ஆள் வருகிறார்கள். இனி என்னுடைய முதல் பக்கமே வினவு தான் என்ற வகையில் செட்டிங்கை மாற்றி அமைத்தேன். இணையத்தை திறந்தாலே வினவு தான் வரும். பார்க்காதே என்றவரின் பார்வைக்கு தினமும்தெரிய வேண்டும் என்று நினைத்தேன்.

தொடர்ச்சியான கால கட்டங்களுக்கு பிறகு நானும் விவாதத்தில் பங்கு கொண்டு எழுத ஆரம்பித்தேன். இஸ்லாமிய அடிப்படை வாத விவாதத்தில் பங்கு கொண்டு கடுமையான வாதங்களை முன் வைத்து கருத்தை பதிவிட்டேன். அனைத்தும் வினவுவில் வந்தது . என்னுடைய கருத்துக்கு எந்த வரவேற்பும் கிடைக்க வில்லை. மாறாக வசவு தான் வார்த்தைகளில் வந்தது.

தற்பொழுது நானே தனியாக நிறுவனம் ஆரம்பித்த பிறகு வேலை பளுவின் காரணமாக கருத்துக்களை போடுவதில்லை. ஆனால் இப்பொழுது கருத்துக்க்களை பதிவிடும் தோழர்களை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. தொடர்ந்து ஐந்து வருடங்களாக வினவு செயல்படும் விதம் இணையத்தில் புரட்சியை செய்து கொண்டு இருக்கிறது. என்னை திட்டிய பல தோழர்கள் இன்று வினவுவின் பக்கம் நிற்கிறார்கள். மகிழ்ச்சியாக உள்ளது. இணையம் என்ன செய்ய முடியும் என்பதை தெருவில் இறங்கி போராடும் மக்களை முதன்மை படுத்தி செய்தியை போடும் வினவிவுன் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

மேலும் சில ஆலோசனைகள்…….

வினவு வெப் டிவி ஆரம்பித்தால் என்ன….அரசியல்வாதிகளை நம்முடைய நிருபர்கள் கேள்வியால் துளைத்த எடுத்தால் என்ன ……….வெப் டிவி ஆரம்பிக்க அதிகம் செலவாகாது என்று நினைக்கிறன்……இதை முதல் கட்டமாக சோதனை முறையில் கோவையில் இருந்து துவங்க முற்ப்பட்டால் நானும் தொழில்நுட்ப உதவிகள் அளிக்க தயார்….. என்னுடைய நண்பர்களும் இதற்க்கு உறுதுணையாக இருப்பார்கள்……

வினவுக்கு என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துக்கள்……..

என் பார்வையில் வினவு – 30 : உண்மெய்

டுக்கப்படும் உழைக்கும் மக்கள் அரசியலை உள்ள‌டக்கிப் போராடும் “வினவு” தளத்திற்கு எம் வாழ்த்துக்கள். கடந்த 5 ஆண்டுகளை வினவு கடந்து விட்டதா ! என்பதில் எமக்கு மிகுந்த ஆச்சரியம். காரணம் வினவு சந்தித்து வரும் தடைகளையும், எதிர்நீச்சலோடு போராடுவதையும் உற்றுக் கவனித்து வருகிறோம்.

மக்களுக்காகப் போராடக்கூடிய வினவு எங்கிருந்து போராடுகின்றது, தகவல் திரட்டுகின்றது என்பதைக் கண்டறிய முடிவதில்லை. தலைமைச் செய்தியாளர், முதன்மைச் செய்தியாளர், மொழி பெயர்ப்பாளர், ஒளிப்பதிவாளர் என இது போன்று இன்னும் நவீனக் கட்டமைப்பு வசதிகளுடன் இயங்கிக் கொண்டிருக்கும் பந்தா விளம்பர ஊடகத் தளங்களின் மத்தியில் எவ்வித விளம்பரமும் இல்லாமல், எவருடைய விருதுகளுக்கும் ஆசைப்படாமல், வினவு இயங்க முடிகிறது என்றால் அதன் களம் நேரடியாக ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதைப் புரிந்து கொள்ள‌ முடிகின்றது.

வினவுக்கு தேவையான நிதியும் – எண்ணிக்கையில் அதிகமான வாசக ஆதரவும் – வசைபாடும் விமர்சனங்களும் – கிடைத்தாலும் – கிடைக்காமல் போனாலும் – எடுத்துக் கொண்ட நோக்கத்திலிருந்து வழி விலகாமல் – கருத்தியலில் சமரசம் இல்லாமல் – சோர்ந்து போகாமல் – முரண்பாடுகளைக் கொண்ட தன் மீதான விமர்சனங்க‌ளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் – எழுதும் செய்திகள்  தொடர்பான களப்பிரச்சனைகளையும் – வழக்குகளையும் சந்தித்துக் கொண்டு – சவாலுடன் செயல்படுவதைப் பார்க்கும்போது இது போன்று நம்மால் எழுதவும் – இயங்கவும் முடிவதில்லையே என வினவைப் படிக்கும் எம் போன்றவருக்குள் ஒருவித குற்ற உணர்ச்சியை அது உருவாக்குகிறது என்பதை வெட்கம் இல்லாமல் பதிவு செய்கிறோம்.

எல்லோருக்கும் பொதுவான, எல்லோராலும் ஏற்றுக் கொள்ள‌ப்படக்கூடிய, எல்லா மக்களின் ஆதரவைப் பெற்று இயங்கும் “கருத்தியல் பொது முகம்” என்பது இச்சமுகத்துக்கு முற்றிலும் ஆபத்தானது அல்லது அத்தகைய வரவேற்பைப் பெற்ற கருத்தியல் பொது முகங்களால் மக்களுக்கு (குறிப்பாக ஒடுக்கப்படுகின்ற உழைக்கும் மக்களுக்கு) எவ்வித‌ பயனும் இல்லை என்று பொருள்.

நிச்சயம் வினவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்ப‌டாது. காரணம் அது இந்துத்துவ எதிர்ப்பு – மத அடிப்படைவாத எதிர்ப்பு – சாதி ஒழிப்பு – உழைக்கும் வர்க்க புரட்சிகர ஜனநாயக விடுதலை – பெண் விடுதலை – தலித் பழங்குடியினர் விடுதலை – உலக ஏகாதிபத்திய, முதலாளித்துவ வல்லாதிக்க எதிர்ப்பு – பாலியல் சுரண்டலற்ற அரசியல் பொருளாதார விடுதலை – சுற்றுச்சூழல் பாதுகாப்பு – நான் நீ அவன் அவள் அது என்கிற விமர்சன பகுப்பாய்வு என்கிற கருத்தியல் முகம் கொண்டு இயங்குவதால் அதற்கென ஒரு தனித்துவம் (Uniqueness) உண்டு. எனவே ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலையில் இத்தகைய வினவு தவிர வேறெதுவும் அவ்வளவு எளிதில் இடம் பெற்று விடவும் முடியாது என்பதை உளமாற நேசிப்பதால் ஒடுக்குதல் உள்ள‌வரை வினவு வினவிக் கொண்டிருக்க வாழ்த்துகிறோம்.

நிச்சயம் இதன் வள‌ர்ச்சியில் எமக்கும் பொறுப்பிருக்கின்றது என்பதால் எம்மால் முடிந்த சிறு நிதி உதவியை தங்களின் முகவரிக்கு விரைவில் அனுப்பி வைக்கிறோம்.

சில ஆலோசனைகள்:
——————————

– சாதாரண வாசகர்களை மிக எளிதாகப் படிப்பதற்கு ஈர்ப்பது போல‌ ஆய்வு மாணவர்கள், எழுத்தாளர்கள், ஊடக விவாதச் செயல்பாட்டாள‌ர்கள் போன்றோரை கல்வித்தளம் ஆதாரம் (Academic Resource) சார்ந்து ஈர்ப்பதற்கு ஏதுவாக ஒரு சில கட்டுரைகள் ஆய்வுக் கண்ணோக்கிலும், அடிக்குறிப்புகள், தரவு ஆதாரங்கள் உள்ளடக்கி வந்தால் மிக சிறப்பு.

– மாணவர்கள், தொழிலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாள‌ர்கள், வழக்கறிஞர்கள், கலை – இலக்கிய அணிகள் என்று இயங்குவதைப் போல விளம்பரம் தேடாத, ஆய்வுக் கண்ணோக்குடைய எழுத்தாளர்களையும் அணிதிரட்டி வினவுக்கு வலு சேர்க்கலாம். தரமான கட்டுரைகளை ஆவண வெளியீடாகக் கொண்டு வரலாம்.

– ஆண்டுக்கு ஒருமுறை கருத்தியலை விளக்கும் அறிக்கை ஒன்றை வினவு வெளியிடலாம்.  உதாரணமாக, தமிழ்த் தேசியம் – பவுத்தம் – அம்பேத்கரின் பன்முக ஆளுமை – பின்னைக் காலனியம் – பின்னை நவீனத்துவம் – வட்டார பொதுவுடைமைச் சித்தாந்தம் – தற்கால தலைமுறையினருக்கு புரட்சிகர ஜனநாயகம் என்பதன் புரிந்து கொள்ளுதல் – விமர்சிக்கின்ற ஒவ்வொன்றுக்கும் ஆக்கப்பூர்வமான மாற்று என்ன? – என்பதில் ஒரே கொள்கை ரீதியான முடிவில் தான் இயங்க முடியுமா? அல்லது காலத்துக்கேற்றார்போல் மாற்றம் பெறுமா? என்பதில் தெளிவு ஏற்படவும், கருத்தியல் தளத்தில் புரிந்து கொள்வதற்கும், தொடர்ந்து வினவுடன் பயணிப்பதற்கும் இந்த அறிக்கை உதவியாக இருக்கும்

– வினவு என்றால் அது எழுதும், மற்றவரை விமர்சித்துக் கொண்டே இருக்கும் என்கிற பார்வை தான் பரவலாக மேலோங்கி இருக்கிறது. ஆனால் அது சந்திக்கும் போராட்டக்களம், செயல்பாடுகள், சந்திக்கின்ற வழக்குகள், எதிர்கொள்ளும் இழப்புகளையும் அவ்வப்போது தெரியப்படுத்துவது நல்லது.

– பெண்கள் மீது தொடரும் பாலியல் பிரச்சனகளை அதிகமாகப் பேசியது போன்று “ஆணாதிக்கம் – பெண்விடுதலை” போன்றவற்றில் மிகவும் குறைவான பதிவுகளைப் பார்க்க முடிந்தது. ஒருவேளை பெண் எழுத்தாள‌ர்களின் ஈடுபாடு தேவைப்படுகிறதோ என தோன்றுகிறது.

– வினவு தரும் செய்திகளை சிலர் லாவகமாக உருவி தங்கள் பார்வையில் சுடச்சுட செய்தியாக தருவதையும் பார்க்க முடிகின்றது. பரவாயில்லை. வினவுக்கு அங்கீகாரம் தரவில்லை என்றாலும் ஏதோ ஒரு விதத்தில் அந்த கருத்து சமுகத்துக்கு பயனளிக்கிறதே என எடுத்துக் கொள்ள‌லாம். இருப்பினும் இதனை தவிர்க்க அவர்களையும், வாசகர்களையும் பங்கேற்கச் செய்யும்படி ஒரு இணைந்த எழுத்துத் தளமாக வினவு விரிவடைய வாய்ப்பிருக்கிறதா?

ஆங்கிலத்திலும் வெளிவந்தால் மிகவும் சிறப்பு.

நிதி என்பது தொடர்ந்து இயங்குவதற்கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் அது தொடர்பான விளம்பரங்களோ, திரட்டல்களோ இணையங்களின் வழியாகப் பார்க்க முடிவதில்லை. அதனை இன்னும் சற்று ஊக்குவிக்கலாம். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி அதனை வெளியிட‌லாம்.

நன்றி.

வாழ்த்துக்களுடன்
– உண்மெய்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க