privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவாஷிங்டன்: அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு !

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு !

-

நேற்று 16.9.2013 அமெரிக்க நேரப்படி காலை சுமார் 8.20 மணிக்கு தலைநகர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கடற்படை தலைமையகக் கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 8 பேர் காயமடைந்தனர்.

அலெக்சிஸ் ஆரோன்
அலெக்சிஸ் ஆரோன்

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கட்டிடம் கடற்படையின் கட்டளை மையத்தின் தலைமையகமாகும். கடற்படைக்குத் தேவையான கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் வடிவமைப்பது, வாங்குவது, கட்டுவது, பராமரிப்பது போன்ற பணிகள் இந்த வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்த கட்டளை மையத்தின் வருடாந்திர செலவுத் தொகை $3,000 கோடி (சுமார் ரூ 1.8 லட்சம் கோடி). இந்த வளாகத்தில் கப்பற்படையின் உயர் அதிகாரிகளும், சுமார் 3,000 கப்பற்படை மற்றும் சிவில் ஊழியர்களும் பணி புரிகின்றனர். அந்த வளாகத்துக்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளே செல்பவர்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகிறார்கள். உரிய அனுமதி அட்டை இல்லாமல் யாரும் நுழைய முடியாது.

அலெக்சிஸ் ஆரோன் என்ற இளைஞர் 5 ஆண்டுகளாக கடற் படையில் மூன்றாம் கிரேடு, கடைநிலை ஊழியராக பணி புரிந்து, 2011-ல் விடுவிக்கப்பட்டார். அவர் இப்போது அமெரிக்க கடற்படையின் கணினி அமைப்பை பராமரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள எச்பி (ஹியூலெட் பாக்கார்ட்) நிறுவனத்தின் உப ஒப்பந்ததாரர் “தி எக்ஸ்பர்ட்ஸ்” நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடற்படையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனுமதி அட்டை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. கடற்படை அலுவலக வளாகத்துக்குள் தனது அனுமதி அட்டையை பயன்படுத்தி நுழைந்த ஆரோன் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தி விட்டு 197 எண் கட்டிடத்திற்கு போயிருக்கிறார். தரைத்தள நடைபகுதிக்கும், உணவகத்துக்கும் மேல் எழுப்பப்பட்டுள்ள தளத்துக்குப் போய் அங்கிருந்து கீழ் நோக்கி கண் மூடித் தனமாக சுட்டிருக்கிறார்.

அவரது தாக்குதலில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர், வாஷிங்டன் மாநகர போலீஸ் வளாகத்தைச் சூழ்ந்து திருப்பிச் சுட்டதில் அலெக்சிஸ் ஆரோனும் கொல்லப்பட்டிருக்கிறார். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவ ஒப்பந்த ஊழியர்கள். மைக்கேல் அர்னால்ட் (59), சில்வியா ஃபிரேசர் (53), கேத்தி கார்டே (62), ஜான் ரோஜன் ஜான்சன் (73), ஃபிராங்க் கோலர் (50), கென்னத் பெர்னார்ட் புராக்டர் (46) ஆகியோருடன் இந்தியாவைச் சேர்ந்த 61 வயதான பாதுகாப்புத் துறை காண்டிராக்ட் ஊழியர் விஷ்ணு பண்டிட்டும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார். வீடியோ பதிவுகளின் அடிப்படையில் இன்னும் இரண்டு நபர்களை சந்தேகிப்பதாக அறிவித்த போலீஸ் இறுதியில் இந்த சம்பவத்துக்கு அலெக்சிஸ் ஆரோனை மட்டும் பொறுப்பாக்கியுள்ளது.

மக்கள்
பயந்து ஓடும் மக்கள்.

34 வயதான அலெக்சிஸ் ஆரோன் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஃபோர்ட் வொர்த் என்ற இடத்தைச் சேர்ந்தவர். புத்த மதத்தை பின்பற்றுபவர். 2001, செப்டம்பர் 11 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் கோபத்தை கையாள்வதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவரது தந்தை கூறியிருக்கிறார்.

2004-ம் ஆண்டு சியாட்டிலில் ஒரு கட்டிடத் தொழிலாளரின் கார் டயர்களை சுட்டு சேதப்படுத்தியதாகவும், 2010-ம் ஆண்டு ஃபோர்ட் வொர்த்தில் தன் வீட்டுக் கூரையில் சுட்டதாகவும் அலெக்சிஸ் ஆரோன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2004-ம் ஆண்டு சம்பவத்தின் போது தொழிலாளர் இவரை இன ரீதியாக திட்டியதால் ஆத்திரத்தில் சுய நினைவு இழந்து விட்டதாகவும், சுட்டதாக நினைவில்லை என்றும், 2009-ல் துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது அது தற்செயலாக வெடித்து விட்டதாகவும் ஆரோன் கூறியிருக்கிறார்.

அலெக்சிஸ் ஆரோன் 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கடற்படையில் மின்சார வேலைகள் செய்யும் கடைநிலை ஊழியராக பணி புரிந்தார் என்று அமெரிக்க கடற்படை அமைச்சர் ரேய் மாபுஸ் தெரிவித்திருக்கிறார். பல்வேறு சிறு முறைகேடுகளைத் தொடர்ந்து பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக கடற்படை கூறுகிறது.

போலீஸ்
தளத்தை சூழ்ந்து கொண்ட போலீஸ்.

அதைத் தொடர்ந்து தி எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் ஆரோன். கடந்த சில மாதங்களில் பல்வேறு கடற்படை அலுவலகங்களில் பணி புரிந்த அலெக்சிஸ் ஆரோன் சென்ற வாரம் கடற்படை வளாகத்தில் வேலை செய்ய ஆரம்பித்ததாக தி எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலர் ஹோமஸ் ஹொஷ்கோ கூறியிருக்கிறார்.

தி எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனம், “தகவல் தொழில்நுட்பம், பொறியியல், தொலை தொடர்பு மற்றும் நிறுவன செயல்பாடு தொடர்பான சேவைகளை வழங்குவதாகவும், வெளிநாடுகளில் போர்களுக்கும் உள்நாட்டில் பாதுகாப்புக் கொள்கைக்கும் தேவையான சேவைகளை வழங்குவதாகவும்” அதன் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

டெக்சாசில் ஆரோனின் நண்பர் மைக்கேல், ஆரோன் பண விவகாரமாக ஒப்பந்த நிறுவனத்திடம் கோபமாக இருந்ததாகவும் ஆனால் இது போன்ற வன்முறை செயலில் ஈடுபடும் போக்கு அவரிடம் தென்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறார். இணையத்தில் துப்பாக்கி வீடியோ கேம்கள் விளையாடுவது ஆரோனின் பொழுதுபோக்காக இருந்துள்ளது.

பாதுகாப்பு வளையம்
தளத்தைச் சுற்றிய பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

தாக்குதலின் போது கடற்படை வளாகத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த கடற்படை தளபதி ஜொனாதன் கார்னெட் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். 197-ம் எண் கட்டிடத்தில் பணி புரியும் கேப்டன் மார்க் வாண்ட்ரோஃப் அவருடன் பணி புரிபவர்களுடன் விவாத அறையில் இருந்ததாகவும், நிலைமை பாதுகாப்பானதுதான் என்று தெரிவது வரை தரையில் மண்டியிட்டு பதுங்கியிருந்ததாகவும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். தரையில் பதுங்கியிருந்த போது பயமாக இருந்தாலும் அவரும் சக ஊழியர்களும் அமைதியாக இருந்ததை நினைத்து பெருமைப் படுவதாக கூறியிருக்கிறார். அந்த இடம் பாதுகாப்பானது என்றும் போலீஸ் வந்து நம்மை மீட்டு விடும் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க செனட் கட்டிடங்களும், அருகில் உள்ள 6 பள்ளிகளும் சீல் செய்யப்பட்டன. ரீகன் உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது சிறிது நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. வெள்ளை மாளிகையின் வெளிச் சுவருக்குள் பட்டாசு கொளுத்திப் போட்டவரை கைது செய்த பாதுகாப்புப் படையினர் வெள்ளை மாளிகையின் முன் பகுதியை சீல் செய்தனர். கப்பற்படை வளாகத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டது.

அரசு முறை துக்கம்
அமெரிக்க அரசு கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஒபாமா உத்தரவிட்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆரோனின் செயலை கோழைத்தனமானது என்று கண்டித்திருக்கிறார். கொல்லப்பட்டவர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்கக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

“அமெரிக்காவில் இன்னும் ஒரு படுகொலை நிகழ்வை நாம் சந்திக்கிறோம். இந்த முறை அது நாட்டின் தலைநகரில் உள்ள ராணுவ தளத்திலேயே நடைபெற்றிருக்கிறது. ராணுவ வீரர்களும், பாதுகாப்புத் துறை ஊழியர்களும் வெளிநாட்டில் பணி புரிவதில் உள்ள அபாயங்களை புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால், இன்று அவர்கள் சொந்த நாட்டிலேயே நாம் நினைத்துப் பார்த்திருக்காத வன்முறையை எதிர் கொண்டிருக்கிறார்கள்” என்று அமெரிக்கப் பேரரசின் கையறு நிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹாலிவுட் உளவு திரைப்படங்களில் வருவது போன்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன, அலெக்சிஸ் ஆரோன் கொல்லப்பட்டது ஏன் போன்றவை குறித்த உண்மை விபரங்கள் வெளிவரப் போவதில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும், சிரியாவிலும் உலக மக்களை பாதுகாக்க தனது இராணுவ வல்லாதிக்கத்தை பயன்படுத்துவதாக முழங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, தனது சொந்த நாட்டில் இத்தகைய ‘எதிரிகளை’ சமாளிக்க முடியாமல் அபாயத்தால் சூழப்பட்டிருக்கிறது.

ஏகாதிபத்திய இராணுவங்களிலும் அரசு அமைப்புகளிலும் பணியாற்றுவோர் இத்தகைய மனப்பிழற்வை கொண்டிருப்பது என்பது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போர்களின் சிக்கலோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆரோன் ஒரு கருப்பினத்தவர் என்றாலும் இத்தகைய உளவியல் சிக்கல்களை வெள்ளையின சிப்பாய்களும் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்களது தற்கொலை விகிதங்கள் காட்டுகின்றன. அதே நேரம் ஒரு கருப்பினத்தவர் அமெரிக்காவின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பால் தீவிரவமாக பாதிக்கப்படுவதும் உண்மையே.

ஆக்கிரமிப்பு இராணுவம், அரசுகளில் பணிபுரிவோர் தமது நடவடிக்கைகளால் ஏழை நாடுகளில் கொல்லப்படும் மக்கள் குறித்து கவலைப்படமாட்டார்கள் என்பது ஒருபுறமிருக்க, இத்தகைய போர் நடவடிக்கைகளும் காரணங்களற்ற ஆக்கிரமிப்பு கொலைகளும் அவர்களை என்றாவது ஒரு நாள் அசைத்து விடுகிறது. விளைவு இத்தகைய துப்பாக்கி சூடுகளாகவோ இல்லை தற்கொலைகளாகவோ இருக்கின்றது.

இதை இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் தமது மேலதிகாரிகளை சுடுவதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம். சுருங்கக் கூறின் எந்த ஒரு ஆக்கிரமிப்பாளனும்  நிம்மதியாக இருந்து விட முடியாது. ஏழை நாடுகளின் மக்களை குறிபார்க்கும் அவர்களது துப்பாக்கி சில நேரங்களில் அவர்களையே சுட்டு விடுவது நடந்தே தீரும்.

மேலும் படிக்க