privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாமுதலாளித்துவம் ஒழிக ! போலந்து மக்களின் போராட்டம்

முதலாளித்துவம் ஒழிக ! போலந்து மக்களின் போராட்டம்

-

போலந்து நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அரசின் கடுமையான பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் மீது அதிருப்தி அடைந்துள்ள போலந்து மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். கடந்த (செப்டம்பர்) 11-ம் தேதி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களும் இணைந்து துவங்கிய இந்தப் போராட்டம் இன்று போலந்து மக்களின் பெரும் ஆதரவுடன் அரசை நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

போலந்து பேரணி
செப்டம்பர் 14 அன்று போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த எதிர்ப்பு பேரணி.

போலந்திலுள்ள மூன்று முக்கியமான யூனியன்கள் தான் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன. கடந்த சனிக்கிழமை லட்சக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்று அரசு மீது தமக்குள்ள அதிருப்தியை காட்டிள்ளனர்.

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க வேண்டும், பணி பாதுகாப்பு வேண்டும், தொழிலாளர் மற்றும் ஓய்வூதிய சட்டங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை கைவிட வேண்டும் ஆகியவை போராட்டத்தின் கோரிக்கைகளில் அடங்கும். முதலாளிகளுக்கோ இவை பாகற்காயை கடித்தது போன்று கசக்கின்றன.

59 சதவீதம் போலந்து மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், 31 சதவீதம் மட்டுமே எதிர்ப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின் கடும் பொருளாதார நெருக்கடியின் விளைவை இந்த ஆண்டின் துவக்கம் முதலே உணரத் தொடங்கியுள்ள போலாந்து அதிலிருந்து மீண்டு வர கடுமையாக போராடி வருகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் போலந்து பொருளாதார வளர்ச்சி 0.1 சதவீதம் ஆக வீழ்ச்சியடைந்தது. 3.8 கோடி மக்கள் வாழும் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் 13 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த 8 மணி  நேர  வேலை நேர வரம்பு நீக்கப்பட்டுள்ளது, ஓய்வூதியம் பெறுவதற்கான வயது உயர்த்தப்பட்டுள்ளது, கணிசமான மக்கள் நலத் திட்டங்கள் வெட்டப்பட்டுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நிரந்தர வேலை கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. தொழிலாளர் நலன், மக்கள் நலன் என்பதெல்லாம் கசப்பான சொற்களாகவும், அதை பேசுபவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடும் தீவிரவாதிகளாகவும் பார்க்கப்படுகிறார்கள்.

ஊழல் மிகுந்த ஒரு கூட்டணி அரசை ஆளும் கட்சியாகவும், பிற்போக்கு கொள்கைகளை கொண்ட ஓர் கட்சியை எதிர்க்கட்சியாகவும் போலந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியான குடிமைத் தளம் கட்சியை  சேர்ந்த பிரதமர் டொனால்ட் டஸ்கின் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து தள்ளாடி வருகிறார். இந்நேரத்தில் இந்தப் போராட்டம் தன்னுடைய அரசை வீழ்த்துவதற்கான சதி என்கிறார் டஸ்க். மறுபுறம் இந்த போராட்டத்தால் பலன் அடையப்போகும் எதிர்க்கட்சி கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர மறுக்கிறது. எதிர்க்கட்சி மிகவும் பிற்போக்கான வலதுசாரி கட்சியாகும், அது முதலில் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு பிறகு அதை வேகமாக திரும்பப் பெற்றுக்கொண்டது.

அதிக வருவாய் கொண்ட நாடு, 1990-களின் போலி சோசலிச அரசின் வீழ்சிக்குப் பிறகு ஆரோக்கியமான பொருளாதாரம் கொண்ட நாடு, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களில் முதன்மையான நாடு என்று மார்தட்டிக் கொண்ட ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான போலாந்து இவ்வாறு கடுமையான பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கிறது. மக்கள் இனியும் இந்த நெருக்கடிகளை பொறுக்க முடியாமல் லட்சக்கணக்கில் வீதிகளில் இறங்கி போராட வந்துவிட்டனர். அரசோ போராடும் மக்கள் மீது குற்றம் சுமத்துவதைத் தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது.

20-ம் நூற்றாண்டின் வரலாற்றில் போலந்து மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஹிட்லரின் போர்வெறிக்கு முதன் முதலில் பலியான நாடு, இரண்டாம் உலகப் போரின் முடிவில், சோவியத் முகாமில் இருந்த நாடு, போலி சோசலிச அரசின் கீழ் இருந்தாலும் ஓரளவு வளர்ச்சியையும், சீரான தொழிலாளர் மற்றும் மக்கள் நலச் சட்டங்களையும் பெற்றிருந்தது. 1980-களில் கடுமையான கம்யூனிச எதிர்ப்பு, அவதூறு பிரச்சாரங்கள் ஐரோப்பிய, அமெரிக்க ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டன. ஏகாதிபத்திய ஆதரவு சக்திகள் போலந்து யூனியன்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.

போலந்து பேரணி
பேரணியில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர்.

கம்யூனிச எதிர்ப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சோலிடாரிட்டி சங்கம் அப்போது மிகவும் பிரபலமடைந்து கொண்டிருந்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியை தொடர்ந்து, ஐரோப்பாவில் இருந்த பல சோவியத் தொங்குசதை நாடுகளும் வீழ்ந்தன, அவற்றுடன் போலந்தும் வீழ்ந்தது, முதலாளித்துவம் வேகமாக எற்றுக்கொள்ளப்பட்டது. முதலாளித்துவ ஜனநாயகத்தை கோரும் சோலிடாரிட்டி சங்கமும் அப்பொழுது பெரும் மதிப்பை பெற்று பிரபலமாகியது.

முதலாளித்துவத்தின் வருகையால் போலந்தில் வேகமாக தனியார்மயம், தாராளமயம் அமுல்படுத்தப்பட்டது. வேகமான பொருளாதார வளர்ச்சி, அதிக வருமானம் தரும் நாடு என்றெல்லாம் கூறப்பட்ட போலாந்து முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கான அடையாளமாக வியோந்ததப்பட்டது. போலி சோசலிச அரசின் வீழ்ச்சியும், முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் போலந்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திவிட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் பெருமைப்பட்டுக் கொண்டன. ஆனால், அந்த பெருமை 20 ஆண்டுகளுக்கு கூட நிலைக்கவில்லை, தனியார்மயமும், தாராளமயமும் அதன் வேலைகளைக் காட்டத் தொடங்கின. பெரும்பாலான யூனியன்கள் தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் நலனை கைவிட்டு விட்டு முதலாளிகளின் ஊதுகுழல்களாக மாறிவிட்டன.

1990-களுக்கு பிறகு ‘இனி கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது,  ஜனநாயகம் மலர்ந்துவிட்டது’ என்று மார் தட்டிகொண்ட முதலாளித்துவ ஆதரவாளர்களின் கொக்கரிப்பு இரண்டு பத்தாண்டுகளுக்குள் பல்லிளித்துவிட்டது. கடுமையான கண்காணிப்பு, கருத்து சுதந்திர மறுப்பு, தனி நபர் சுதந்திர மறுப்பு, அப்பாவி மக்கள் மீதான போர்கள், மக்கள் நல திட்டங்களுக்கு வெட்டு, அரசின் சிக்கன நடவடிக்கைகள், தனியார்மயம், தாராளமயம் என்று உலகம் முழுவதும் மக்கள் வாட்டி வதைக்கப்படுவதும் அதற்கெதிரான போராட்டங்களும் இன்று தினசரி செய்திகளாகிவிட்டன.

இன்று அனைத்து கண்டங்களும் இணைந்து பல பத்து நாடுகளில் போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றன. ஆனால் போலந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வரும் இத்தகைய போராட்டங்கள், ஆளும் கட்சியின் இடத்தில் எதிர்க்கட்சிகளை அமர்த்துவதிலும், சில சில்லரை சீர்திருத்தங்களுக்கு பலியாவதிலும் தான் முடிகின்றன, எனினும் ஆளும் வர்க்கம் விரும்பும் அமைதி அந்நாடுகளில் நீண்ட நாட்களுக்கு நிலவுவதில்லை. மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்ட கட்சிகளுக்கு எதிரான போராட்டங்களை அறிவித்து மக்கள் இலட்சக்கணக்கில் வீதிகளில் இறங்குகிறார்கள்.

இவ்வாறு வீதிகளில் இறங்கி நிற்கும் மக்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல, மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தைக் கொண்ட முன்னணிப் படை இல்லாததால் தொடர்ந்து ஆளும் வர்க்கத்தின் சமரசத்திற்கு இப்போராட்டங்கள் பலியாகி வருகின்றன, ஆனால் முதலாளித்துவத்துவம் விரும்பும் அமைதியை அவர்கள் நீண்ட நாட்களுக்கு வழங்குவதில்லை, தொடர்ந்து ஐரோப்பிய மக்கள் அந்த அமைதியை குலைத்துக்கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ அரசுகளை தகர்த்தெறிவது தான் நிரந்தரத்தீர்வு என்பதை உணர்ந்து, அதை நிறைவேற்றுவதற்கான முன்னணிப்படை ஐரோப்பிய தொழிலாளி வர்க்கமே விரைவில் உருவாக்கிக்கொள்ளும்.

மேலும் படிக்க