privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்வாயேஜர் பயணம் - ஒரு அறிமுகம்

வாயேஜர் பயணம் – ஒரு அறிமுகம்

-

த்திய காலத்தில் மதம் அதிகாரத்துடன் கோலோச்சிய போது சூரிய மையக் கோட்பாட்டை முன்வைத்த காரணத்திற்காக கலீலியோவை வீட்டுச் சிறையில் வைத்து கொடுமைப்படுத்தியதுடன், கலீலியோ ஆய்வு செய்யவும், முடிவுகளை வெளியிடவும் தடைசெய்து வைத்திருந்தது கத்தோலிக்க திருச்சபை.

வாயேஜர் ஒரு சித்திரம்
வாயேஜர் ஒரு ஓவியரின் சித்திரம்.

கலீலியோவுக்கு பின் விஞ்ஞானம் வளர்ந்து மனிதனால் எட்ட முடியாத தூரங்களையும் கடந்து வெகு தூரம் சென்றுவிட்டது. வாயேஜர் என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு 36 ஆண்டுகளுக்கு பின் 1,800 கோடி கிலோமீட்டர்களை கடந்து  சூரியக் குடும்பத்தையே தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் போட்டி போட்டுக் கொண்டு விண்வெளி ஆய்வுகளை நடத்தி வந்தன. விண்வெளி ஆய்வுகளில் முதன்மையடைவது தேசிய பெருமிதமாகவும், தேசிய பாதுகாப்பிற்கு அவசியமானதாகவும், தொழில்நுட்ப மற்றும் சித்தாந்த மேலாண்மையை நிறுவுவதற்கு தேவையானதாகவும் இருநாடுகளும் கருதின. குறிப்பாக 1957-1975ம் ஆண்டுகளுக்கிடையில் இப்போட்டி உச்சத்திலிருந்தது.

இப்பின்னணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 1977-ம் ஆண்டு வாயேஜர் – 1, 2 என்ற இரு விண்சோதனை கலங்களை சூரிய குடும்பத்தின் அனைத்து கோள்களையும் தாண்டி பயணம் செய்து ஆராய விண்ணில் ஏவியது. வாயேஜர் -2 முதலில் ஏவப்பட்டது. அதற்கு 16 நாட்களுக்கு பின்னரே, பல முறை தள்ளிப் போடப்பட்ட வாயேஜர்-1 செப்டம்பர் 5, 1977 அன்று ஏவப்பட்டது.  36 ஆண்டுகளுக்கு பின் வாயேஜர்-1 பூமியிலிருந்து சுமார் 1820 கோடி கிலோமீட்டர் தூரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இவ்விரு விண்கலங்களும் கோள்களின் சுழற்சி, இயக்கம், அமைப்பு, வளிமண்டல உள்ளடக்கம், நிறை, ஈர்ப்புவிசை, நிலவியல், காந்தப்புலம், துணைக்கோள்கள், அவற்றின் பண்புகளை அறிவதுடன் சூரியக் குடும்பத்தின் கோள்களுக்கிடையேயுள்ள வெற்றிடத்தில் இருக்கும் காந்தப்புலம், ஆற்றல் துகள்கள், பிளாஸ்மா துகள்களை ஆய்வு செய்து வரையறுக்கும் முக்கிய நோக்கங்களுடன் ஏவப்பட்டன.

நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகத்தால் (Jet Propulsion Laboratory) உருவாக்கப்பட்ட வாயேஜர்  விண்கலங்கள் 12 அடி (3.7 மீட்டர்) விட்டமுள்ள டிஷ் ஆண்டனாவையும், அதை எப்போதும் பூமியின் திசையை நோக்கி திருப்பி வைக்க சூரிய உணர்கருவியும் (Sun Sensor) அகத்திய (Canopus) நட்சத்திர கண்காணிப்பு (Tracker) கருவியும் கொண்டுள்ளன. பயண திசையை சரிசெய்ய மூன்று அச்சு உறுதிப்படுத்தும் சுழல்காட்டிகளுடன் (gyroscopes), 16 ஹைட்ரஜன் உந்துவிப்பான்களும் உள்ளன. இவற்றுடன் விண்பொருட்களை, கிரகங்களை ஆய்வுசெய்ய 11 அறிவியியல் ஆய்வுக் கருவிகளும் உள்ளன. வாயேஜர் விண்கலத்திலுள்ள கணினியின் நினைவுத்திறன், செயல்திறன் இப்போதைய ஐ-போன்களின் செயல்திறனைவிட 2 லட்சம் மடங்கு குறைவாகும்.

வாயேஜர்
வாயேஜர்

இவற்றில் விமானத்தை போல் இறக்கைகளோ, ஓட்டும் கருவியோ, இயந்திரங்களோ இல்லை. பின்னர் எப்படி 35 ஆண்டுகளுக்கும் மேல் பறக்கின்றன? ஏவப்படும் போது கிடைத்த ஆரம்ப உந்து விசையோடு, கோள்களின் ஈர்ப்பு விசையையும் பயன்படுத்திக் கொண்டு தனது பயண திசையை மாற்றிக் கொள்கின்றன.

175 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியக் குடும்பத்தின் வெளிக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வரிசையாக வரும். புவியிலிருந்து ஏவப்பட்ட பின் இக்குறிப்பிட்ட கால இடைவெளியில் வியாழன் கோளை நெருங்கி அதன் ஈர்ப்பு விசையால் கிடைக்கப்பெற்ற கவின் விசையால், சனிக்கோளை அடைந்து, அதன் ஈர்ப்பு விசையால் சூரியமண்டலத்தின் விளிம்பை நோக்கி பயணிக்கிறது. இப்பயணப் பாதை சிக்கலானதென்பதால் ஆய்வாளார்கள் விண்கலத்தை ஏவுவதற்கு சுமார் 10,000-த்திற்கும் மேற்பட்ட சாத்தியமான வீசுபாதைகளை (Trajectory) கணக்கில் எடுத்துக்கொண்டு, அதில் துல்லியமான ஒன்றை தேர்வுசெய்துள்ளனர். பயணத்தின் போது விண்கலத்தின் பயண பாதையில் சிறு சிறு திருத்தங்களை, மாற்றங்களை செய்ய அதில் 16 ஹைட்ரஜன் உந்துவிப்பான்கள் உள்ளன.

வாயேஜர்-1 விண்கலம் 1979-ல் வியாழன் கோளின் அருகாமையில் பறந்தும் 1980-ல் சனிக் கோளின் அருகாமையில் பறந்தும் கடந்தது. வியாழன் கோளின் பெரும் சிவப்பு புள்ளி, சனியின் வளையங்கள், இக்கோள்களின் 23 துணைக்கோள்கள் ஆகியவற்றை படமெடுத்து அனுப்பிய பின் வாயேஜர்-1 சனிக் கோளின் ஈர்ப்புவிசையால் பெற்ற கவின் விசையின் மூலம் புளூட்டோவை தாண்டிய தனது பயணத்தை ஆரம்பித்தது.

1990-ல் வாயேஜரின் காமெராக்களை திருப்பி சுமார் 60 பிரேம்கள் கொண்ட மொத்த சூரியக்குடும்பத்தின் முதல் “குடும்ப புகைப்படம்” எடுக்க வைக்கப்பட்டது.

சூரியனின் ஈர்ப்புவிசை, எக்ஸ்-ரே, காமா கதிகள், ஆற்றல் துகள்கள் மற்றும் பிளாஸ்மா ஆகிவை சூரிய மண்டலத்தை சுற்றி கோடிக்கணக்கான கிலோமீட்டர் தூரம் எல்லை வரை இருக்கும். அதன் பின் இவற்றின் அளவு படிப்படியாக குறைந்துவிடும். எல்லா நட்சத்திரங்களுக்கும் இது பொருந்தும். வாயேஜர்-1 கலம் சென்ற ஆண்டு இந்த எல்லையை கடந்ததாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விண்கலத்திலுள்ள ஆய்வுக்கருவிகளுக்கு அதில் உள்ள மூன்று புளுட்டோனியம் அணுசக்தி பேட்டரிகள் மின்னாற்றலை வழங்குகின்றன. அணுச்சிதைவில்(Decay) இருந்து நேரடியாக மின்னாற்றலை உற்பத்தி செய்யும் இவற்றின் ஆற்றல் 1977 விண்ணில் ஏவும் போது 470 வாட் ஆக இருந்ததாகவும், 1997ல் 335வாட்டாக சரிந்துவிட்டதாகவும், இது 2020 வரை மட்டுமே விண்கலத்திற்கு மின்சாரத்தை வழங்குமென்பதால் 2020-க்கு மேல் விண்கலத்திடமிருந்து எந்த தகவலையும் பெற இயலாதென நாசா அறிவித்துள்ளது.

வாயேஜர் - 1
வாயேஜர் – 1

சூரிய மண்டலத்தை விட்டு வெளி நோக்கி சென்று கொண்டிருப்பது வாயேஜர் கலங்கள் மட்டுமே அல்ல. 1972-ல் ஏவப்பட்ட பயோனியர்-10, 11 ஆகிய இரு கலங்களும் கூட வெளிச்சென்று கொண்டிருக்கின்றன. முன்னர் புவியிலிருந்து அதிதூரம் சென்றிருந்த பயோனியர் கலத்தை 1998-லேயே வாயேஜர் விஞ்சிவிட்டது.

கோள்கள் சூரியனை சுற்றுவது போலவே நட்சத்திரங்களும், மொத்த சூரியக் குடும்பமும் பால்வெளி மண்டலத்தை சுற்றி வருகின்றன. வாயேஜர் விண்கலம் தற்போது பயணிக்கும் திசையில் சென்டரி (centauri) நட்சத்திரம் 26,000 ஆண்டுகள் கழித்து 3.1 ஒளிஆண்டுகள் தூரத்திலும்,  க்ளைஸ்-445 (Gliese 445) நட்சத்திரம் 40,000 ஆண்டுகள் கழித்து 1.6 ஒளி ஆண்டுகள் தூரத்திலும், சூரிய மண்டலத்துக்கு அருகாமையில் வருகின்றன.

ஒளியின் வேகமான வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் ஒரு ஆண்டில் கடக்கும் தூரம் ஒரு ஒளி ஆண்டு எனப்படுகிறது. விண்கலம் தற்போது பயணிக்கும் வேகமான வினாடிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் அதே திசையில் பயணித்தால் 40,000 ஆண்டுகளில் 1.6 ஒளி ஆண்டுகள் தொலைவை கடந்திருக்கும். இப்போதைக்கு இந்த பயணம் மனிதகுலத்திற்கு என்ன மாதிரியான அறிவை நலனை பெற்றுத் தருமென்று கூறுவது கடினம்.

எதிர்காலத்தில் வேற்றுகிரக உயிரினம் வாயேஜரை சந்திக்க நேர்ந்தால் அதற்கு பூமியை பற்றி அறியத் தரும் முயற்சியாக வாயேஜரில் ஒரு அடி விட்டமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட ஒரு பதிவுத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. அதில் பூமியில் உயிரினங்கள் வாழ்ந்து வருவதற்கான சான்றுகளாக அலை, காற்று, இடி, மற்றும் பறவைகள், திமிங்கிலங்கள், விலங்குகளை உள்ளிட்ட இயற்கை ஒலிகளையும், பல்வேறு கலாச்சாரங்களின் இசை துணுக்குகளையும், 56 மொழிகளில் பேச்சு வாழ்த்துக்களையும், சூரியமண்டலம், பூமியின் வரைபடம், புவிவாழ் உயிரினங்களின் வரைபடங்களை உள்ளிட்ட 116 படங்கள் தொகுப்பாக பதியப்பட்டுள்ளன. ஒருவேளை விண்வெளியில் பயணிக்கும் எதிர்கால மனிதர்கள் வாயேஜரை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு இத்தகடு காலப்பதிவாக இருக்கும்.

அறிவியல் பல படிகள் முன்னேறி செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களையும் சூரியனையும் பற்றியும் ஆய்வுகள் நடந்து பல உண்மைகளை கண்டறிந்த பின்னரும் கூட நம் நாட்டில் ஐந்தாமிடத்தில் சுக்கிரன், ஆறாமிடத்தில் சந்திரன், சூரிய தசை, சனி தசை என்று மக்களை ஏமாற்றும் பித்தலாட்டங்கள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக நடந்து வருகின்றன. இந்த மோசடியாளர்களை எல்லாம் வாயேஜர்களில் ஏற்றி அனுப்பி வைப்பதுதான் அறிவியலை வளர்ப்பதற்கான வழி.

மேலும் படிக்க