Tuesday, September 24, 2019
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் மாண்புமிகு எருமை மாடுகள் !

மாண்புமிகு எருமை மாடுகள் !

-

லகிலேயே இன்றைய தேதியில் மிகவும் மகிழ்ச்சிக்குரிய மனிதராக இருக்கிறார் உத்திரபிரதேச மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி அரசில் அமைச்சராக இருக்கும் திருவாளர் ஆஸம் கான். அன்னாரின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம்? உத்திரபிரதேச மாநிலத்தில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும் என்றோ அல்லது அவரது தொகுதியில் மக்கள் நல்ல வேலைகளிலும், அடிப்படை வசதிகளோடும் வசிக்கும் நிலைக்கு உயர்ந்து விட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது காரணமல்ல. காணாமல் போன அவரது எருமை மாடுகள் திரும்பக் கிடைத்து விட்டதே முதன்மைக் காரணம்.

ஆஸம் கான்
ஆஸம் கான்

கடந்த ஜனவரி 31-ம் தேதி, உத்திர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆஸம் கானின் பண்ணை வீட்டுக்குள் நுழையும் கள்வர்கள், அவருக்குச் சொந்தமான ஏழு எருமைகளை ஓட்டிச் சென்றுள்ளனர். தனது பிரியத்துக்குரிய மாடுகள் களவாடப்பட்டதை அறிந்த அமைச்சர் பதறிப் போயிருக்கிறார். நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவும் இருந்தாலும் தன்னுடைய எருமைகளுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை எண்ணிக் கொந்தளித்துள்ளார். அமைச்சரின் நியாயமான கொந்தளிப்பு காவல்துறையையும் தொற்றிக் கொண்டுள்ளது. மழை பெய்தாலும் கண்டு கொள்ளாத எருமை மாடுகளைப் போலன்றி அதிகார வர்க்கம் அலறிக் கொண்டு களத்தில் இறங்கியது.

உடனடியாக ஐந்து போலீசு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. ராம்பூர் மாவட்ட போலீசு சூப்பிரெண்டு சாதனா கோஸ்வாமி ஒரு படையையும், துணை கமிஷனர் தேவேஷ் பாண்டே ஒரு படையையும், டி.எஸ்.பி அலெய் ஹஸ்ஸன் ஒரு ப்டையையும் தலைமை தாங்கி வழி நடத்தியுள்ளனர். ஆக இரண்டு எருமைகளுக்கு ஒரு படை. ஜீவகாருண்யத்தில் இனி வள்ளலாருக்கு போட்டி ஆஸம் கான்தான். என்னே ஒரு எருமை பக்தி!

அமைச்சர் எருமைகளின் உரிமைகளைக் காக்க நடத்தப்பட்ட குருஷேத்திரப் போரில் மாண்புமிகு பைரவர் அணியும் களத்திலிறக்கப்பட்டது. ஆம், மோப்ப நாய்கள் சகிதம் ஒரு படை தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது. எருமைக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்!

போதுமான சாலையோ, மின்சாரமோ இல்லாத ஊரில் ஆங்காங்கு இருக்கும் சி.சி.டி.வி கேமரா பதிவுகள் சல்லடை போட்டு சலித்தெடுக்கப்பட்டது. பால் பண்ணைகள், மாட்டிறைச்சிக் கூடங்கள் போன்ற ‘எதிரி’களின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் உளவுத்துறை போலீசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. கிரைம பிரான்ச் போலீசு, சிவில் போலீசு, மோப்ப நாய்படை என்று தனது அதிகாரத்துக்குட்பட்ட சகல படைகளையும் ஏவி விட்டது மாவட்ட நிர்வாகம்.

இந்த கடுமுழைப்பு தேடுதல் வேட்டையின் பலனாக மூன்று எருமைகள் கன்ச் காவல் நிலைய எல்லைக்குள்ளும், இரண்டு எருமைகள் சாவெல் காவல் நிலைய எல்லைக்குள்ளும், மேலும் இரண்டு எருமைகள் ஷெய்ஷாத் நகர காவல் நிலைய எல்லைக்குள்ளும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

எனினும் எருமை மாடுகள் மீட்பு நடவடிக்கையின் வெற்றியை காவல்துறை வீரர்கள் சுவைக்க முடியாதபடி இரண்டு சிக்கல்கள் ஏற்பட்டன. அமைச்சராக இருக்கும் தனது பண்ணை வீட்டுக்குள்ளேயே கள்வர்கள் அத்துமீறி நுழைந்து தனது பிரியத்துக்குரிய எருமைகளை ஓட்டிச் செல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு நிலைமை பங்கமடைந்திருப்பதால் எரிச்சலுக்குள்ளான திருவாளர் ஆஸம் கான், களவு நடந்த நேரத்தில் ரோந்துப் பணியில் இருந்த மூன்று காவலர்களை பணி இட மாற்றம் செய்துள்ளார்.

எருமைகளைக் கண்டுபிடித்ததும் போலீசார் மேலும் ஒரு பெரும் சிக்கலை எதிர்கொண்டனர். அதாவது தேடுதல் வேட்டையில் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ எருமைகள் தான் காணமல் போன எருமைகளா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. என்னதான் அமைச்சரின் எருமை என்றாலும், பிறக்கும் போதே மூன்று கொம்புகளுடன் பிறப்பதில்லை அல்லவா? எனவே இவர்கள் தான் அவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இயலாமல் திணறியிருக்கின்றனர்.

எருமை வேட்டை
எருமை வேட்டை

கடைசியில் அமைச்சர் எருமைகளைப் பராமரித்துக் கொண்டிருந்த பணியாளரை வரவழைத்து அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஒருவழியாக அமைச்சர் எருமை அவைதான் என அடையாளம் காணப்பட்டு பிரச்சினை ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

எருமைகளுக்காக நடந்த தர்மயுத்தத்தின் நீதியைப் புரிந்து கொள்ளாத உள்ளூர் பத்திரிகைகள் காவல்துறையை அமைச்சர் துஷ்பிரயோகம் செய்து விட்டதாக எழுதின. எதிர்கட்சிகளின் முணுமுணுப்புகளோடு பத்திரிகை ஒன்றில் வந்த கார்ட்டூன் படம் அமைச்சரை லேசாக அசைத்துப் பார்த்திருக்கிறது. அமைச்சரின் கேலிச் சித்திரம் எருமைச் சாணியை தலையில் வைத்து சுமப்பது போல் வரையப்பட்டிருந்த கார்ட்டூன் அமைச்சரை தர்மாவேசத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

”பத்திரிகைகளில் எருமைச் சாணியைத் தலையில் சுமப்பது போன்ற கார்ட்டூன்கள் வெளியாகியுள்ளது. நான் இறைவனிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் இது தான், இதே போன்ற பாக்கியம் பிறருக்கும் கிட்ட வேண்டும்” என்று பேட்டியளித்தவர், தனது எருமைகள் தற்போது இங்கிலாந்து ராணி எலிசபெத்தை விட புகழடைந்து விட்டது என்று புளகாங்கிதத்தை பகிர்ந்திருக்கிறார். மீண்டும் எருமைகளுக்கு பங்கம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்கிற கவலையில் காவல்துறையும், எருமைகளின் மேல் அமைச்சருக்கு இருக்கும் அன்பிலிருந்து ஏதாவது சிறு சிதறல்களாவது தங்கள் மேல் படாதா என்கிற ஏக்கத்தில் மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆஸம் கான் உத்திரபிரதேச மாநிலத்தின் சிறுபான்மையினர் மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் அமைச்சராக இருக்கிறார். ஆஸம் கான்கள் இந்தியாவெங்கும் அமைச்சர்களாக, எம்.எல்.ஏக்களாக, எம்.பிக்களாக, முதல்வர்களாக இருக்கிறார்கள். இந்த நாடும் பராரிகளான நாட்டு மக்களும் ஆஸம் கான்களின் கருணையை எதிர்பார்த்தே காத்துக் கிடக்கிறார்கள். உத்திரபிரதேசத்தின் எருமைப் பாசம் இங்கே ப்ளெக்ஸ் பேனர்களாகவும், டொயோட்டா கார்களின் கான்வாய்களாகவும் நம்மைக் கடந்து செல்கின்றன. உத்திரபிரதேசத்தில் காவல் துறையினர் எருமை மாடுகளுக்காக தொடுத்த தர்மயுத்தம் இந்தியாவெங்கும் அதிகாரவர்க்கத்தினரின் திமிராகவும், மெத்தனமாகவும், மக்களைக் கிள்ளுக்கீரைகளாக மதிப்பதாகவும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இதே உபியில் முசாபர் நகர் இந்துமதவெறி கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஏழை முசுலீம்கள் உறையும் குளிரில் முகாம்களில் தங்கி தமது கைக்குழந்தைகளை பறிகொடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த முசுலீம்களின் வாக்குகளை வாங்கி அமைச்சரான ஆஸம் கானின் எருமைகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை.

இது தான் இந்திய ஓட்டுக் கட்சி அரசியலின் தராதரம். வாழ்க அமைச்சரின் எருமை பாசம்..!

மேலும் படிக்க

  1. எருமைகளை கானம் என்று ஒரு எருமை பன்றிகளிடம் கூறி உள்ளது உடனே பன்றிகள் எறுமைகளை தேடி கண்டுபிடித்துவிட்டது.
    நாடாளும் மன்றம் என்ற மாட்டு தொழுவத்தை மட்டும் அல்ல மாடுகளையும் அதிகார வர்கம் என்னும் பன்றிகள் கூட்டம் தான் பாதுகாக்கின்றது என்பது நன்றாக தெரிகின்றது

  2. வள்ளலாருக்கு போட்டியாக?
    வள்ளலார் எருமை மாமிசம் சாப்பிடுபவர் அல்ல….
    எருமைகளை அன்புடன் நடத்த ஆசைப் பட்டவர்…
    ஆனால்..ஆசம்கான்?
    எருமையை வறுவல் செய்து வயிறு கிழிய திண்டு கொழுப்பவன்

    • ராமதாசு உங்க ராமரு கூட எருமை மாடு இறைச்சி சாப்பிட்டவாறு தான்.
      வேதங்களை பாருங்க வேள்விகளில் எப்படி மாடு அடிச்சு சாப்பிடிருன்கான்க என்பது தெரியும்

      • எஙக ராமர் பசு மாமிசம் கிடைத்தாலும்
        பசியாற உண்டு மகிழும் வர்க்கம்.
        …இதிலெனக்கென்ன?
        நான் என்ன ராமருக்கு மருமகனா?மச்சானா?

  3. முஸ்லிம்களை சீண்டவே வினவு இந்த பதிவை போட்டிருக்கின்றது.
    வினவு ஒரு பார்பனிய அடிமை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது .

    ஒரு நாள் முஸ்லிம்கள் எவ்வளவு மேன்மையாவவர்கள் என்பது உலக்குக்கு புரியும் .

    இம்ரான்
    நாகூர்

  4. எருமை மாட்டிற்காக பதறிப்போன இந்த அமைச்சர் முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கபட்டு தன்னுடைய குழந்தைகளை உறையும் குளிரில் பறிகொடுத்த மக்களின் துயர் கண்டு பதறவில்லை. இது போன்ற அயோக்கியர்கள் இருக்கும்வரை பொதுமக்களுக்கு என்றும் துன்பம்தான்

  5. ஊழல், இலஞ்சம், திருட்டு, கொலை தொடங்கி அரசியல் வரை, அரசு ஆதரவுடன் கூடிய குற்றக்கும்பலின் அதிகாரம் தான் காணப்படுகின்றது. அது பாசிசமாக வெளிப்பட்டு இயங்குகின்றது. அது இனப் படுகொலையாளன் மோடி முதல்அஸ்ஸான் மற்றும் அனைத்து ஓட்டுப் பொறுக்கிகள் வரை தொடர்கிறது முதலாளித்துவ சமூக அமைப்பு முறை என்பது இது தான். இதற்கு எதிரான போராட்டத்தை நோக்கி அணிதிரட்டுவதும், அதை கோரிப் போராடுவதுமே எம்முன்னுள்ள இன்றைய அரசியல் கடமையாக இருக்கின்றது.

  6. இதே இந்தியாவில்தான் எட்டு நிமிடங்களுக்கு ஒரு குழ்ந்தை காணாமல் போகின்றது. அதில் 40 சதவீதம் குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவதேயில்லை. பாவம் அவர்களெல்லாம் மந்திரி வீட்டில் எருமையாய்ப் பிறந்திருந்தால் கூட வீடுதிரும்பியிருப்பார்கள்.

  7. //முஸ்லிம்களை சீண்டவே வினவு இந்த பதிவை போட்டிருக்கின்றது.
    வினவு ஒரு பார்பனிய அடிமை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது .

    ஒரு நாள் முஸ்லிம்கள் எவ்வளவு மேன்மையாவவர்கள் என்பது உலக்குக்கு புரியும் //

    ஐயோ பாவம் தம்பிக்கு கட்டுரையே பிரில………….

  8. காணா போன எருமை மாடுகளை தேடி கண்டு பிடிக்குறது ஒரு குத்தமாய்யா????

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க