Wednesday, July 15, 2020
முகப்பு அரசியல் ஊடகம் மோடித்வா – ஆண்டவன் நம்புறவங்களைத்தாங்க சோதிப்பான்!

மோடித்வா – ஆண்டவன் நம்புறவங்களைத்தாங்க சோதிப்பான்!

-

பாஜக கருத்து கந்தசாமி – காயத்ரிக்களுக்கு சில டிப்சுகள் !

தந்திடிவி விவாதம்லகின் மிகமோசமான வேலைகள் பட்டியலில் அரசருக்கு வைத்தியம் பார்ப்பதும் அடக்கம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை அரண்மனை வைத்தியர்கள் அரசருக்கு வந்த வியாதியை அவர் மலத்தை முகர்ந்து பார்த்து கண்டுபிடிப்பார்களாம். கிட்டத்தட்ட அதே போன்றதொரு வேலையை செய்யும்படி ஆலோசனை சொன்னார் தோழர் ஒருவர். அதாவது தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் பாஜக ஆட்களின் உரை”வீச்சத்தை” பார்த்து அதைப்பற்றி பதிவெழுத வேண்டும் என்பதுதான் அந்த ஆலோசனை.

அப்படி தொடர்ந்து பார்க்கையில்தான் காவி கட்சிக்காரர்கள் அனுபவிக்கும் கஷ்டம் தெரிந்தது. சிறுவனாக இருந்தபோது படித்த சிறுவர்மலர் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. திரேதாயுகத்தில் ஊர்மக்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள். கலியுகம் பிறந்த உடனே அவர்கள் எல்லோரும் சுயநலக்காரர்களாகவும் கபடதாரிகளாகவும் மாறுவார்கள். கதையின் முடிவில் ”கலியுகத்தில் மனிதன் எப்படி மாறுகிறான், பார்த்தீர்களா குழந்தைகளே” எனும் அறிவுரையும் இருந்தது. கிட்டத்தட்ட அப்படியான ஒரு நிலைக்கு பாஜககாரர்கள் வந்து அறுபது நாளாகிறது.

ஜசோதாபென் மணாளன் ஆட்சிக்கு வரும் முன்னால் இவர்கள் பேச்சில் இருந்த ‘வீரம்’ என்ன! ஏழை மக்கள் மீதான ‘அக்கறை’ என்ன!! ஆனால் புதிய ஆட்சி வந்த பத்து நாளுக்குள் அவை பழங்கதையாகிவிட்டன. முன்பெல்லாம் தந்தி டிவி விவாதங்களில் தொகுப்பாளர் உட்பட பாஜகவுக்கு ஆதரவாக குறைந்தபட்சம் இரண்டு பேராவது இருப்பார்கள். ஆனால் தமிழக அரசியல் அநாதைகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்த பாஜக இன்று விவாதங்களில் அநாதையாக நிற்கிறது. ‘மோடி சாட்சாத் அந்த ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம்தான்’ என தேர்தலுக்கு முன்னால் சான்றிதழ் கொடுத்த கும்பலில் ஒருவர்கூட இன்று விவாதத்துக்கு வரும் நிலையில் இல்லை.

இதுகாறும் வாயை வைத்தே வண்டியை ஓட்டிய வைகோவும் தமிழருவியும் பாஜகவை தங்கள் நாவன்மையால் தாங்குவார்கள் என நடுநிலைவாதிகளே எதிர்பார்த்திருந்தார்கள். மோடி அடிக்கும் அடி ஒவ்வொன்றும் வைகோவின் ஈழ பிசினசை இருந்த இடம் தெரியாமல் செய்து கொண்டிருக்கின்றன. இனி அவர் பாதயாத்திரை போனால் காறித்துப்பக்கூட ஆளிருக்காது. ஆகவே அவரது நேரடியான ஆதரவுக்குரல் பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அமையாத சம்மந்தங்களை அமைத்துவைக்கும் தமிழக அரசியலின் தமிழ்மேட்ரிமோனி டாட்காம் தமிழருவி மணியனின் நிலை இன்னும் கேவலம். என்னோடு தேர்தலில் மோதத்தயாரா என விஜயகாந்துக்கு சவால்விட்டு யார் குடிகாரன் என தமிழக மக்கள் குழம்பும் நிலைக்கு இறங்கிவிட்டார் மணியன். இனி அவரை விவாதத்துக்கு இறக்கினால் பாஜக நிலை இன்னும் நாறிவிடும்.

செகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் எனும் அபார நம்பிக்கையை கொண்டிருக்கும் தமிழனிடம் மோடிக்காக கேன்வாஸ் செய்ய பத்ரி போன்ற முதலாளிகளும், வெங்கடேசன் போன்ற ஆடிட்டர்களும், பானு கோம்ஸ் போன்ற சமூக ஆர்வலர்களும் (எந்த சமூகத்துக்குன்னு கேக்கப்படாது) களமிறக்கப்பட்டார்கள். இப்போதோ, ‘அவன்தான் ஏட்டையா தாலிகட்டின ஒரிஜினல் புருஷன்’ என பாஜக ஆட்களை கைகாட்டிவிட்டு இந்த அறிவுஜீவிகள் ஒதுங்கிவிட்டார்கள். அமித்ஷாவை கட்சித் தலைவராக்கியதால் தான் ஏமாற்றமடைந்து விட்டதாக ஸ்டேட்டஸ் போட்டு உடைந்து போன நடுநிலை பெஞ்சில் சீட் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டார் பத்ரி.

தற்சமயத்துக்கு பாஜக, டிவி விவாதங்களின்போது ஒரு தனிமரமாய் நிற்கிறது. தேர்தலில் சரித்திரம் காணாத அளவுக்கு தோல்வியடைந்த சிபிஎம்காரர்கள் எல்லா விவாதங்களிலும் அடக்கமாட்டாட்டாத சிரிப்போடு அமர்ந்திருக்கிறார்கள். நாட்டையே விற்குமளவுக்கு பெரும்பான்மை பெற்ற பாஜகவினரோ பிரபல சீட்டிங் சாம்பியன் குரங்கு குப்பன் போல உர்ரென்று இருக்கிறார்கள். தோற்றவர்கள் கூடி ஜெயித்தவனை கலாய்க்கும் கொடுமை கலிகாலத்தில் மட்டும்தானே நடக்கும்? இந்த யுகத்தில் கலவரம் செய்வதைவிட விவாதம் செய்வது கடினமாக இருக்கும் என புருஷஸுக்தம் தெளிவாக சொல்லியிருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பிற்கே அன்னிய நாட்டின் பார்ட்னர்ஷிப்பைத் தேடும் பாஜகவை விவாதங்களில் தனித்துவிடுவது மகாபாபம். உட்காரும் இடத்தில் கட்டி வந்தவனைப் போன்ற அவர்களது உடல்மொழி பார்க்க சகிக்கவில்லை.  ஆகவே விவாதங்களை எப்படி எதிர்கொள்வது என நம்மாலான ஆலோசனை அவர்களுக்கு சொல்வதுதான் நியாயம்…!!!

வழக்கமாக பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புக்கள் மூன்று வழிகளில் விவாதத்தை சந்திக்கின்றன.

 1. சலவை நிலையங்களில் உள்பாவாடை காணாமல்போன பிரச்சனை என்றாலும் அதனை இந்திய கலாச்சாரம் பாரம்பர்யத்துடன் இணைத்து பேசுவது. (இந்தியாவில் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு அப்போதே இருந்தது, அதற்கான ஆதாரம்தான் காமசூத்ரா நூல்- பாலியல் கல்வி குறித்த விவாதம் ஒன்றில் எஸ்.ஆர்.சேகர்)
 2. பாஜகவை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லை என பதிலளிப்பது.
 3. கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்வது. (சாதிக்கொடுமை பற்றி கேள்வி கேட்டால் தங்க நாற்கார சாலையை கொண்டுவந்த்து வாஜ்பாய் என்று பதிலளிப்பது)

இவையல்லாமல் வேறு சில துணை தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. அடுத்தவன் பேச்சு கேட்காத அளவுக்கு லபலபவென கத்துவது, நிறுத்தாமல் பேசுவது, தொகுப்பாளரை மிரட்டுவது, எல்லா விவாதத்திலும் சிறுபான்மையினரை வம்புக்கு இழுப்பது என்பன அவற்றுள் சில.

இவையெல்லாம் எதிர்கட்சியாக இருந்தவரை போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் ஆளுங்கட்சியானால் இன்னும் கொஞ்சம் திறமையாக நடந்துகொள்ள வேண்டும். அதற்கான ஆலோசனைகளைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். பாஜகவினர் விவாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்.

கேனத்தனம் நம் பிறப்புரிமை: எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேனத்தனமாக பேசுங்கள். அதனால் உடன் பேசுபவர்கள் இது என்ன விவாதம் என குழம்ப வேண்டும். ஆனால் அந்த கேனத்தனம் தொகுப்பாளரை கடுப்பாக்கிவிடக்கூடாது. (25 ஜூலை தந்தி டிவி விவாதத்தில் பேசிய பாஜக நாராயணன் இயல்பான கேனத்தனத்தோடும், கேனத்தனமான இயல்போடும் சிறப்பாகப் பேசினார். ரங்கராஜ் பாண்டேவே நிலைகுலைந்து போய் இது போங்காட்டாம் என்று சொல்லி ஒதுங்கிவிட்டார்)

விதிமுறைக்குட்பட்டு திமிராக பேசுங்கள்: பட்ஜெட் விவாதம் ஒன்றில், ”பாஜக தேர்தல் அறிக்கை வருமானவரி வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என சொல்கிறது. ஆனால் நீங்கள் இரண்டரை லட்சம் வரை மட்டுமே விலக்களித்திருக்கின்றீர்கள்” என கேட்கிறார் தொகுப்பாளர். அதற்கு ராகவன், “ஐந்து லட்சமா உயர்த்துவோம்னுதான் சொன்னோம், என்னைக்குன்னு சொன்னோமா” என பதில் சொன்னார். அடுத்த நாலரை வருசங்களுக்கு எந்தப் பக்கிகளின் தயவும் தேவையில்லை என்பது நிஜம் என்றாலும் இந்த யுக்தியை எல்லா பிரிவு ஆட்களும் பயன்படுத்தக்கூடாது. திமிராக பேசுவதற்கான இரண்டாயிரம் வருட அனுபவப்பாத்தியம் கொண்ட ராகவன் போன்றோர் மட்டும்தான் இதனை செய்ய வேண்டும்.

கேள்வியை முடிக்கும் முன்பே பதில் சொல்ல ஆரம்பியுங்கள்: கேள்விகள் என்றாலே பாஜகவுக்கு சிக்கல்தான். ஆகவே கேள்வி ஆரம்பிக்கும்போதே பதிலை சொல்ல ஆரம்பித்தால் தாராளமாக விவாதத்தில் பாதி நேரத்தை காலி செய்துவிடலாம். ஆனால் கேள்வி மோடிக்கு சாதகமாக இருக்கிறதா என கவனமாக பாருங்கள். ஏனென்றால் எல்லா ஊடக முதலாளிகளும் போதிய அளவு கவனிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே சாதகமான கேள்விகள் வர வாய்ப்புக்கள் பலமாக உள்ளது.

தவறிக்கூட புள்ளிவிவரத்தோடு பேசாதீர்கள்: பாஜகவுக்கு காங்கிரசைவிட பெரிய எதிரி புள்ளிவிவரம்தான். அறிவும் நாணயமும் இல்லாதவன்தான் ஒரு வலதுசாரியாக இருக்க முடியும். ஆகவே புள்ளிவிவரத்தோடு பேசுவது பாஜகவின் தகுதிக்கு மீறிய செயல் மட்டுமல்ல. கொள்கை விரோதமும்கூட. தனுஷுக்குகூட போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் செட் ஆகலாம், ஆனால் ஒருபோதும் பாஜககாரனுக்கு அறிவாளி வேடம் பொருந்தாது. ஆகவே இவ்விடயத்தில் உங்கள் ஞானகுரு சூனாமானா சாமியின் வழியை பின்பற்றுங்கள்.

நிதானமாக ஒருபோதும் விவாதிக்காதீர்கள்: மயிருக்கு வாசம் உண்டா எனும் மொக்கை கேள்விக்கே மயிர் பிளக்கும் வாதங்களை வைத்த மரபு நம் மரபு. நீங்கள் சீரியசாக விவாதிக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் காமெடியாக முடிகின்றன. ஆகவே வாய்ப்பு கிடைக்கையில் உணர்ச்சிவயப்பட்டு பேசி ஆட்டையை கலைத்துவிடுங்கள். தொகுப்பாளர்கள் நியாயமாக நடந்து கொள்வார்களோ என அஞ்ச வேண்டாம். சாய்நாத், ராஜ்தீப் என நாடறிந்த தலைகளையே ராஜினாமா செய்ய வைக்கும் ஆற்றல் பாஜகவுக்கும் அதன் ஸ்பான்சர்களுக்கும் இருக்கிறது.

மேற்சொன்ன ஆலோசனைகளை எளிதாக புரிந்துகொள்ள சாம்பிள் விவாதம் ஒன்றை பார்ப்போம்.

தொகுப்பாளர் : தேர்தலுக்கு முன்னால் தினத்துக்கு மூன்றுமணி நேரமேனும் மோடி பேசிக்கொண்டிருந்தார்.. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மன்மோகன் சிங்கைப்போல மௌனமாகவே இருக்கிறாரே?

பாஜக : கடந்த பத்தாண்டு காலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வைத்திருக்கிறது. ஆகவே…

தொகு : நான் மோடியின் மௌனம் பற்றி…

பாஜ : அதத்தாங்க நானும் சொல்றேன். அப்போது சூப்பர் பிரதமாரா சோனியா இருந்தார். இப்போது சுயமாக முடிவெடுக்கும் பிரதமர் வந்திருக்கிறார்.

தொகு : நான் சொல்ல வந்தது என்னன்னா…

பாஜ : வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் தங்க நாற்கார சாலைகள் போடப்பட்டது. அதன் காரணமாகவே…

தொகு :அய்யய்யோ போதுங்க, கொள்கை முடிவுகளில் மன்மோகனுக்கும் மோடிக்கும் ஒரு வேறுபாடும் இருப்பதில்லையே??

பாஜ : என்ன செஞ்சாங்கன்னு பார்க்காதீங்க.. யார் செய்யிறான்னு பாருங்க.  பஞ்சபாண்டவர்கள் பொண்டாட்டியை அடமானம் வைத்தார்கள். கௌரவர்கள் அடமானம் வாங்கினார்கள். மனைவியை அடமானம் வைத்ததனால் பாண்டவர்கள் வில்லன்களாகி விடுவார்களா? அப்படியெல்லாம் நம் பாரத தேசத்தின் பாரம்பர்யத்தின் கௌரவத்தை குறைக்கும்படி பேசாதீர்கள். ஹீரோக்கள் தவறு செய்வார்கள் என எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். ஹீரோ செய்வதெல்லாம் சரிதான் என பாசிடிவாக அணுகுங்கள்.

தொகு : அவரு வந்தா வளரும்னு சொன்னீங்க. வந்து அறுபது நாளாகியும் நாடு வளந்த மாதிரி தெரியலையே?

பாஜ : ஆட்சிக்கு வந்து இரண்டே மாதத்தில் எதையும் மாற்றிவிட முடியாது.

தொகு : ஆனால் ஆம் ஆத்மியின் டெல்லி ஆட்சியை நீங்கள் நாற்பது நாளுக்குள்ளேயே விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்களே?

பாஜ : எல்லா விஷயத்திலும் அகம் புறம் என இரண்டு உண்டு. இலக்கியத்தின் அகநானூறு, புறநானூறு இருக்கிறது. மூலத்தில் உள்மூலம் வெளிமூலம் இருக்கிறது. அதுபோல நாட்டின் வளர்ச்சியும் இப்போது உள் வளர்ச்சியாக இருக்கிறது. அது வெளியே தெரிய சில காலமாகும்.

தொகு : பள்ளிகளில் பாலியல் கல்வி சொல்லித் தருவதற்கு உங்கள் சுகாதார அமைச்சரே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?

பாஜ : தவறு, ஆபாசமான பாலியல் கல்வியைத்தான் அவர் எதிர்த்திருக்கிறார்.

தொகு : ஆபாசமான பாலியல் கல்வி என்றால் என்ன? அப்படியான கல்வி முறை எங்கேயும் இருப்பதாக தெரியவில்லையே.?

பாஜ : தவறான தகவலை மக்களுக்கு தருகிறீர்கள். ஷகீலா போன்ற நடிகைகளது படங்கள் எல்லாமே பாலியல் விழிப்புணர்வு படங்கள்தானே!! அவற்றைப் பார்த்து பலரும் கெட்டுப்போகிறார்கள். அப்படி யாரும் கெட்டுப்போய்விடக்கூடாது என்பதாலேயே அவர் அப்படிச் சொன்னார். சென்ற ஆண்டு இந்த உண்மையை கண்டுபிடிக்கும் முயற்சியில் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டசபையில் ஈடுபட்டபோதுதான் பத்திரிக்கைகளின் அவதூறுக்கு ஆளானார்கள். ஆகவே இவ்விசயத்தில் பாஜக பெரிய தியாகங்களை செய்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தொகு : வளர்ச்சி வளர்ச்சி என முழங்கிய பாஜக, சமஸ்கிருதத்தை திணிப்பதில் ஆர்வம் காட்டுவது ஏன்?

பாஜ : அதனை சமஸ்கிருத திணிப்பு என ஏன் கருதுகிறீர்கள்? இப்போது பெரிய நகரங்களிலும் ஏன் கிராமங்களிலும் கூட திவசம் கொடுக்க அய்யர் கிடைப்பதில்லை. இப்படியே போனால் கருமாதி திவசம் என்றால் என்னவென்று கேட்கும் நிலை வந்துவிடும். லட்சக்கணக்கான வருட பாரம்பர்யம் உள்ள இந்து பண்பாடு அழிந்துவிடும். சமஸ்கிருத வாரம் கொண்டாடினால் அதில் ஆர்வம் கொள்ளும் பிராமண மாணவர்கள் வேதம் படிப்பார்கள், பிறகு சிறப்பாக கருமாதி, திவசங்கள் நடக்கும். இன்னும் கோடிக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகும் சூழ்நிலை வந்த பிறகு இந்த செயலின் நியாயம் உங்களுக்கு புரியும். பத்தாண்டு காலம் காத்திருந்தீர்கள் இன்னும் அறுபது மாதங்கள் மட்டும் காத்திருங்கள், அதற்கு பிறகு யாரெல்லாம் மிச்சமிருக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் வளர்ச்சியை அனுபவிப்பார்கள்.

தொகு : தேர்தலுக்கு முன்னால் உங்களை பெரிதும் ஆதரித்தது மிடில் கிளாஸ் மக்கள்தான். ஆனால் ஆட்சியமைத்த பிறகு பெட்ரோல் விலையேற்றம், மானியவிலை சிலிண்டர் குறைப்பதற்கான முயற்சி, இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளை ஒழிப்பது என மிடில்கிளாசை பாதிக்கும் செய்திகள்தானே வருகின்றன.

பாஜ : பாருங்க, ஆண்டவன் நம்புனவங்களைத்தான் சோதிப்பான். இந்திரன், கௌதமன் சம்சாரத்தைத்தானே கையைபிடிச்சு இழுத்தான். சிவபெருமான் ஆல்பர்ட்டுகிட்டயும் அப்துல்லாகிட்டயுமா பிள்ளைக்கறி கேட்டான்? இவ்வளவு ஏன் ஸ்ரீகிருஷ்ணன் ஈவ்டீசிங் பண்ணினது இந்துப் பொண்ணுங்களைத்தானே? ஆகவே பக்தனை சோதிப்பதும் போட்டுத்தள்ளுவதும் பாரத பண்பாட்டிலேயே இருக்கிறது. இது இந்து ஞானமரபின் தொடர்ச்சி, ஆரிய சாம்ராஜ்யத்தின் எழுச்சி.

thanthi-tv-2தொகு : தமிழகத்திற்கு மிகக்குறைவான அளவுக்கே ரயில்வே திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அறுநூறு கோடி திட்டமதிப்பு கொண்ட வேலைக்கு ஒருகோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் கி.பி 2614-ல்தான் பணிகள் முடியுமா?

பாஜ : மக்கள் நாங்கள் நினைப்பதை செயல்படுத்தத்தான் தனி மெஜாரிட்டி கொடுத்திருக்கிறார்கள். ஆகவே திட்டத்தை எப்போது முடிப்பது என்பதை நாங்கள் முடிவெடுத்துக் கொள்வோம். அதை கிபி 2600-ல் முடிப்பதா அல்லது நாப்பி 2614 -ல் முடிப்பதா என்பதை கட்சி தீர்மானிக்கும் (கி.பி – கிருஸ்துவுக்குப் பின் ந.பி = நமோவுக்கு பின்). (குறிப்பு : இது ராகவன் வகையறாக்களுக்கு மட்டும்).

தொகு : எல்லா கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம் கொடுக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒரு கிராமத்துக்கு எட்டாயிரம் ரூபாய் வருகிறது. இதில் எப்படி தடையற்ற மின்சாரம் கொடுக்க முடியும்?

பாஜ : கர்நாடகாவில் சென்ற ஆண்டு மழையில்லாதபோது பாஜக அரசு எல்லா ஊரிலும் மழை வேண்டி யாகங்கள் செய்தது. அதன் விளைவுதான் இன்றைக்கு மேட்டூர் அணை நிரம்புகிறது. ஆகவே தடையற்ற மின்சாரம் வேண்டி கிராமங்கள்தோறும் யாகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் தாராளமாக போதும்.

தொகு : ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதோடு மட்டுமில்லாமல் இன்னும் 5 ஆண்டுகளில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என செய்திகள் வருகின்றன. இது மக்களை பாதிக்கும் முடிவில்லையா?

பாஜ : ஏன் ஏழைகள் ஏசி ரயிலில் போகக்கூடாதா? சாதாரண மக்களும் ஏசி கோச்சில் பயணிக்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தொகு : ஈழத்தமிழர் பிரச்சனையில் உங்கள் அரசும் கங்கிரஸ் நிலைப்பாட்டைத்தானே தொடருகிறது, ஐநா விசாரணையை எதிர்ப்பதாக அரசு தெளிவாக அறிவித்திருக்கிறதே?

பாஜ : இவ்வளவு பேசும் நீங்கள் ஈழத்தமிழருக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? அவர்கள் கொல்லப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்??

தொகு : இது என்ன கேள்வி சார்? ஒரு தொகுப்பாளர் என்ன செய்துவிட முடியும்? செய்யும் காரியங்களை விமர்சனம்தானே செய்ய முடியும்?

பாஜ :  எதையும் செய்ய முடியாத உங்களுக்கு பாஜகவைப்பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. ஈழத்தமிழருக்காக தன் வாழ்வையே அர்பணித்த நெடுமாறனே எங்களை விமர்சனம் செய்யவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்து பேசுங்கள். குறைந்தபட்சம் சன் டிவி வீரபாண்டியனுக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் வைத்தாவது பேசுங்கள்.

தொகு : உரமானியம் குறைக்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் இந்த பட்ஜெட்டில் வந்திருக்கிறதே?

பாஜ : பூச்சி மருந்து விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. உரம் விவசாயிகளுக்கு மட்டும் பயனளிப்பது. ஆனால் பூச்சி மருந்து குடித்தால் எல்லா தரப்பு மக்களுக்கும் கண்டிப்பாக பயனளிக்கும். மேலும் உரவிலை உயர்ந்தால்தான் விவசாயிகள் நம் பாரம்பர்ய இயற்கை விவசாயத்துக்கு திரும்புவார்கள்.

தொகு : மரபணு மாற்ற பயிர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்..

பாஜ : பழைய முறையில் விவசாயம் செய்தால் நாடு என்றைக்கு வல்லரசாவது?? அதனால் நவீன முறை விவசாயத்தை வளர்க்கும் பொருட்டு இம்முடிவை மோடி அரசு எடுத்திருக்கிறது.

தொகு : இப்போதுதான் நீங்கள் பாரம்பர்ய முறை விவசாயத்தை வளர்க்க உரமானியத்தை வெட்டப்படப்போவதாக சொன்னீர்கள். அடுத்த நிமிடமே நவீன விவசாயத்தை ஊக்குவிப்போம் என்கிறீர்கள், எதுதான் உங்கள் நிலைப்பாடு?

பாஜ : ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய மக்களையே கொலை செய்கிறார்கள். அதனை இங்குள்ள முஸ்லீம்கள் கண்டிப்பதில்லை. மேலும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கார சாலைகளால்தான்..

தொகு : அய்யய்யோ.. சார் நிகழ்சியை முடிச்சுக்கலாம். உங்க இறுதி கருத்தை சொல்லுங்கள்.

பாஜ : இறுதி கருத்தை பிரபல சமஸ்கிருத கவிஞர் நபும்சகன்  கவிதையோடு முடிக்கிறேன்.

“ மோடியின் கால்கள்
பின்னால் உதைத்துவிட்டதே
என வருந்தாதே.
விழுந்த உன்னை
தொட்டுத்தூக்க
மோடியின் கைகள்
நிச்சயம் வரும்.
நம்பு, நம்பிக்கைதான் வாழ்க்கை”

–    வில்லவன்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. தொழிலாளர் வர்கத்துக்கு ,நடுத்தர வர்கத்துக்கு ,வருமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு என் வேண்டுகோள் :

  வரும் ஆண்டுகள் மிக கடினமான, தம் தனி வழியில் செல்லப் போகும் இந்த மோடி அரசின் பொருளாதாரம் சார்ந்த சுரண்டல்களை எதீர் கொள்ள கீழ் கண்ட வழிகளை நாம் கையாளலாம்.

  அகவாழ்வில் எதீர் கொள்ள:
  ————————————-

  [1] டாஸ்மாக் பாக்கம் போகாதீர்

  [2] மல்டிபிளக்ஸ் திரையரங்குக்கு bye bye சொல்லுங்கள் [டிவியில் மட்டும் படம் பாருங்கள்]

  [3]வடஇந்திய இட பெயர்வு தொழிலாளர்கள் போல ரேஷன் அரிசியை உண்ண பழகுங்கள்

  [4]வீலை குறைந்த காய்கறீகளை அதிகமாக வாங்கி உண்ண பழகுங்கள்

  [5] புகை பீடிப்பதை தவீர்க்கவும்

  [6] கல்யாணம் ,காது குத்து, மொட்டை அடித்தல், வளையல் காப்பு போன்ற சடங்குகளை தவீர்க்க இயலா வீட்டாலும் அவற்றில் சீக்கனமாக செலவு செய்யுங்கள்

  [7]bike போன்ற பெட்ரோலுக்கு காசு கேட்க்கும் நம் சொந்த வாகனங்களை தவிர்த்து , ஷேர் ஆட்டோ , monthly pass electric train ,பஸ் போன்ற போக்கு வரத்து வசதீகளை பயன் படுத்துங்கள்.

  [8] மணிகணக்கில் அக மொக்கை போடும் காதலர்கள் , வேலை நிமித்தம் பீரிந்து வாழும் இளம் ஜோடிகள் , ஒரே கம்பெனி சிம் கார்டை பயன்ப்டத்துங்கள். யாரேனும் ஒருவர் ரேட் cutter வசதி மூலம் 10 காசுக்கு பேசும் வசதி பெற்று மணி கணக்கில் அக மொக்கை போடுங்கள்

  [9] மோர், reliance போன்ற அங்காடிகளை தவிர்பீர். பணம் சேமிப்பீர். M R P ரேட் அய் விட குறைவான வீலையீல் வீற்க்கும் hole sale அங்காடிகளை தேடி கண்டு பீடித்து பயன் பெற வேண்டும். ஒவொரு ஊரிலும் hole sale கடை எது என்பது பெட்டி கடைகாரர்களுக்கு தெரியும்.

  [10] வீட்டில் சிறீது நிலம் இருந்தால் கூட அந்த இடத்தில்,அல்லது வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் போட்டு பயன் அடையுங்கள்

  புற வாழ்வில் எதீர் கொள்ள:
  —————————————

  இந்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை,பொருளாதார சுரண்டலை எதீர்க்க ஒரே வழி மட்டும் தான் உள்ளது. மக்கள் எதீர்த்து நின்று ,தெருவுக்கு வந்து போராட வேண்டும். போராடுபவ்ர்களுக்கு தோள் கொடுக்க வேண்டும்.

  • தோலரெ , ரூம் போட்டு யோசிபேஙலொ,நகைஷுவையும் உன்மையும் கலந்த க்லவையாக உல்லது தஙலின் பதிவு.

 2. தமிழக அரசியலின் தமிழ்மேட்ரிமோனி டாட்காம் தமிழருவி மணியனின் ,…. Terrific, lol

 3. வில்லவன் கட்டுரை மிக அருமை! உண்மையிலேயே அவர்கள் விவாதம் அப்படியா இருந்தது? Please provide links if you have.

  • தனிப்பட்ட எந்த விவாதத்தை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையேயில்லை. காணக்கிடைக்கும் எல்லா விவாதங்களும் இப்படித்தான் இருக்கின்றன (பாஜக பங்கேற்கும் விவாதங்கள்).

 4. அவர்கள் அதீத வளர்ச்சி என பம்மாத்து காட்டினார்கள். நீங்கள் குஜராத் பாணியில் ரத்த ஆறு ஓடும் என்றீர்கள். இரண்டு மாதத்தில் இரண்டும் நடை பெறவில்லை. இப்போது தினமும் பொழுது விடிந்தவுடன், பல்லு கூட தேய்க்காமல் மோடியை திட்டி கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள். உண்மை எப்போதுமே எதிரெதிர் துருவ நுனிகளில் இருப்பதில்லை, நடுவில் தான் எங்கோ கிடக்கும்.

  • மோடி வந்தால், அவரது அரசு யாருக்கானதாக இருக்கும் என்பது பற்றி போதுமான அளவு விவரங்களுடன் ஏராளமான கட்டுரைகள் வினவில் வந்திருக்கின்றன. அதனை ரத்த ஆறு ஓடும் எனும் ஒற்றை வரியில் அடக்க முற்படுகிறீர்கள். ஆனாலும் அதுவும்கூட சரியான புரிதல்தான், இப்போது இந்துத்துவ விஷம் சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் தடையில்லாமல் செலுத்தப்படுகிறது.

   மலத்தை நோக்கி ஈக்கள் வருவதைப்போல இந்த மதவாத மலத்தில்தான் கலவரக்காரர்கள் சங்கமிக்கிறார்கள். மகாராஷ்டிராவில் ஒரு முஸ்லீம் இளைஞர் இந்த ரவுடிகளால் கொல்லப்பட்டு அவர்கள் மொழியில் முதல் விக்கெட் விழுந்துவிட்டதாக அறிவிப்பும் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே நீங்கள் குறிப்பிடும் ரத்த ஆறு ஓட ஆரம்பித்துவிட்டது. உடனடிக் கடமையாக மோடிஅரசு மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் முனைப்பில் இருப்பதால் மற்ற தாக்குதல்கள் மட்டுப்பட்டிருக்கின்றன.

   உங்கள் கணிப்பு மிகச்சரியாக ஒரு இடத்தில் பொருந்துகிறது,வாழ்த்துக்கள்!!!!!!!! கட்டுரையில் பாதி ஒரு அதிகாலை வேளையில் பல்துலக்காமல் எழுதப்பட்டதுதான்.

  • வெங்கடேசன்,
   \\அவர்கள் அதீத வளர்ச்சி என பம்மாத்து காட்டினார்கள். நீங்கள் குஜராத் பாணியில் ரத்த ஆறு ஓடும் என்றீர்கள். இரண்டு மாதத்தில் இரண்டும் நடை பெறவில்லை. //

   கடந்த ஒரு மாதமாக மொரதாபாத்தில் சங் பரிவார் கும்பல் என்ன செய்து கொண்டிருக்கிறது. தலித்கள் கோயில் ஒன்றில் ஒலி பெருக்கி பயன்பாடு குறித்து முசுலிம்களுக்கும் தலித்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு பின்னர் இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.துவக்கத்தில் ஒப்பந்தத்தை ஏற்பதாக நாடகமாடிய சங் கும்பல் பின்னர் தன்முனைப்பாக தலித் மக்களின் விருப்பத்திற்கு எதிராக அதனை செல்லாது என சொல்லிவிட்டு ”மகாபஞ்சாயத்து” கூட்ட முனைந்தனர்.

   யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.ஓராண்டுக்கு முன்னர் இப்படி மகாபஞ்சாயத்து என்ற பெயரில் காலிகளையும் போக்கிரிகளையும் திரட்டி கொண்டு வந்துதான் முசாபர்பூரில் முசுலிம் மக்களை வேட்டையாடி கொன்றும்,வாழ்விடங்களை விட்டு துரத்தியும் வெறியாட்டம் போட்டன சங் பரிவார் மதவெறி மிருகங்கள்.அதே போன்ற ஒரு தாக்குதலை முசுலிம் மக்கள் மீது நடத்துவதற்குத்தான் மகாபஞ்சாயத்து என்ற பெயரில் எத்தணித்தனர்.மாவட்ட நிர்வாகம் மகாபஞ்சாயத்துக்கு அனுமதி மறுத்ததோடு மொரதாபாத்தில் சங் பரிவார் மதவெறியர்கள் கூடுவதையும் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியமையால் இன்னொரு முசாபர்பூர் தவிர்க்கப்பட்டிருக்கிறது.உ.பி.யில் BJP ஆட்சியில் இல்லாததால் மாவட்ட நிர்வாகம் இந்த அளவுக்கு செயல்பட்டிருக்கிறது.இதுவே அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் அல்லது வரும் தேர்தலில் BJP ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்.

   நீங்களே விடை சொல்லுங்கள் வெங்கடேசன்.

   அவ்வளவு ஏன்.தமிழ்நாட்டில் இந்து முன்னணி சுரேசு குமார் கொல்லப்பட்டபோது மத வெறியாட்டம் போட்டார்களா இல்லையா.அதன் மூலம் கலவரம் ஏற்படுத்த முனைந்தார்களா இல்லையா.தமிழ்நாட்டின் திராவிட இயக்க பாரம்பரியம் காரணமாக அவர்கள் அதில் வெற்றி பெற முடியவில்லை.அந்த கொலை பற்றி வினவில் கட்டுரை வந்த போது நீங்களும் அதில் பின்னூட்டம் போட்டீர்கள்.அதை எடுத்து மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்.

 5. குஜராத் பாணியில் ரத்த ஆறு ஓடும் என்பதைவிட முக்கியமான விசயமாக மோடி கார்பரேட் கம்பெனிகளின் நலனுக்கானவர், மன்மோகன் சிங்கைவிட வேகமாக தனியார்மயத்தை அமல்படுத்தத்தான் மோடியை கொண்டுவருகிறார்கள், அதை மறைக்க காவி புழுதியை கிளப்பிவிடுவார்கள் என்று வினவு மட்டும்தான் சொல்லியது.வினவு சொன்னது 100 க்கு 100% சரி. மோடிய ஆதரிச்சவனே இப்போ திட்டுறானுக.

  பொழுதன்னைக்கும் பெட்ரோல்விலை, டீசல் விலை, ரயில் டிக்கெட், சிலிண்டர்,….. தக்காளி வரைக்கும் விலைய கூட்டுறாங்க.அதை தாங்கும் அளவுக்கு சக்தி உங்களுக்கு இருக்குறதால வினவு வேலைவெட்டி இல்லாம பொழுதுவிடிஞ்சா மோடி திட்டுறது மாதிரி உங்களுக்கு தெரியலாம்.

  மோடியின் தாக்குதலால் பாதிக்கப்படாத தூரத்தில் இருப்பவர்களுக்கு உண்மை நடுவில் இருப்பது போல தான் இருக்கும். எனக்கு உண்மை எதிர் துருவத்தில் தான் இருக்கு.மோடி இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல உழைக்கும் இந்துக்களுக்கு எதிரி என்பது சரிதான் என்பதை தக்காளிவாங்க கடைக்கும் போகு ஒவ்வொரு இந்துவும் புரிஞ்சிப்பாங்க

 6. முன்பெல்லாம் தந்தி டிவி விவாதங்களில் தொகுப்பாளர் உட்பட பாஜகவுக்கு ஆதரவாக குறைந்தபட்சம் இரண்டு பேராவது இருப்பார்கள்.

 7. மோடி அடிக்கும் அடி ஒவ்வொன்றும் வைகோவின் ஈழ பிசினசை இருந்த இடம் தெரியாமல் செய்து கொண்டிருக்கின்றன. இனி அவர் பாதயாத்திரை போனால் காறித்துப்பக்கூட ஆளிருக்காது.

 8. என்னோடு தேர்தலில் மோதத்தயாரா என விஜயகாந்துக்கு சவால்விட்டு யார் குடிகாரன் என தமிழக மக்கள் குழம்பும் நிலைக்கு இறங்கிவிட்டார் மணியன். இனி அவரை விவாதத்துக்கு இறக்கினால் பாஜக நிலை இன்னும் நாறிவிடும்.

 9. தமிழனிடம் மோடிக்காக கேன்வாஸ் செய்ய பத்ரி போன்ற முதலாளிகளும், வெங்கடேசன் போன்ற ஆடிட்டர்களும், பானு கோம்ஸ் போன்ற சமூக ஆர்வலர்களும் (எந்த சமூகத்துக்குன்னு கேக்கப்படாது) களமிறக்கப்பட்டார்கள்.

  100% True

 10. நாட்டையே விற்குமளவுக்கு பெரும்பான்மை பெற்ற பாஜகவினரோ பிரபல சீட்டிங் சாம்பியன் குரங்கு குப்பன் போல உர்ரென்று இருக்கிறார்கள்

 11. வழக்கமாக பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புக்கள் மூன்று வழிகளில் விவாதத்தை சந்திக்கின்றன.

  முக்கியமான பாயிண்டை மிஸ் பண்ணிடீங்க…தே’ஷ’பக்தி…

 12. Wonderful Satire.

  // பெற்ற பாஜகவினரோ பிரபல சீட்டிங் சாம்பியன் குரங்கு குப்பன் போல உர்ரென்று இருக்கிறார்கள். தோற்றவர்கள் கூடி ஜெயித்தவனை கலாய்க்கும் கொடுமை கலிகாலத்தில் மட்டும்தானே நடக்கும்? //

  //இனி வைகோ பாதயாத்திரை போனால் காறித்துப்பக்கூட ஆளிருக்காது. ஆகவே அவரது நேரடியான ஆதரவுக்குரல் பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அமையாத சம்மந்தங்களை அமைத்துவைக்கும் தமிழக அரசியலின் தமிழ்மேட்ரிமோனி டாட்காம் தமிழருவி மணியனின் நிலை இன்னும் கேவலம். என்னோடு தேர்தலில் மோதத்தயாரா என விஜயகாந்துக்கு சவால்விட்டு யார் குடிகாரன் என தமிழக மக்கள் குழம்பும் நிலைக்கு இறங்கிவிட்டார் மணியன்.//

  // இப்போதோ, ‘அவன்தான் ஏட்டையா தாலிகட்டின ஒரிஜினல் புருஷன்’ என பாஜக ஆட்களை கைகாட்டிவிட்டு இந்த அறிவுஜீவிகள் ஒதுங்கிவிட்டார்கள். //

  // பேசிய பாஜக நாராயணன் இயல்பான கேனத்தனத்தோடும், கேனத்தனமான இயல்போடும் சிறப்பாகப் பேசினார். ரங்கராஜ் பாண்டேவே நிலைகுலைந்து போய் இது போங்காட்டாம் என்று சொல்லி ஒதுங்கிவிட்டார்//

  // அறிவும் நாணயமும் இல்லாதவன்தான் ஒரு வலதுசாரியாக இருக்க முடியும். ஆகவே புள்ளிவிவரத்தோடு பேசுவது பாஜகவின் தகுதிக்கு மீறிய செயல் மட்டுமல்ல. கொள்கை விரோதமும்கூட//

  //தனுஷுக்குகூட போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் செட் ஆகலாம், ஆனால் ஒருபோதும் பாஜககாரனுக்கு அறிவாளி வேடம் பொருந்தாது. ஆகவே இவ்விடயத்தில் உங்கள் ஞானகுரு சூனாமானா சாமியின் வழியை பின்பற்றுங்கள்.//

 13. கட்டுரை எழுதிய தோழர் வில்லவன் அவர்களுக்கு,

  கட்டுரை ஆக்கமும் சொல்வண்ணமும் அமைப்பும் அதில் அமைந்த கிண்டலும் அருமையோ அருமை. ஆனால் கடைசியில் கொஞ்சம் மிகைப்பட்டு விட்டதோ என்று அஞ்சுகிறேன். நபும்சகன் என்றால் நீசபாசையில் ஆண் அல்லாதவன் என்று பொருள். மூன்றாம் பால் என்பதாகும். அலி என்று கூறுதல் எவ்வாறு தவறோ அங்ஙனமே நபும்சகன் என்பதும் ஆகும். அறியாமல் நேர்ந்த தவறு போல் உள்ளது. எவ்வாறாயினும் சுட்டிக்காட்ட விரும்பினேன். அவ்வளவுதான்.

  • நபும்சகன் எனும் சொல்லை பயன்படுத்தியமைக்கு மன்னியுங்கள் தோழர்.

   அது தமிழருவி மணியன் பயன்படுத்தும் சொல் என்பதால் அதனை கட்டுரையில் கிண்டல் செய்ய முற்பட்டேன். அதன் பொருள் என்னவென்பது நீங்கள் சொல்லும்வரை எனக்கு தெரியாது.

   இனி கூடுதல் கவனத்தோடு இருக்க முயற்சி செய்கிறேன். பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

 14. கிராமப் பகுதிகளில் வாழும் படிக்காத பாமரன் கூட தான் பேசிய கருத்தை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ள மாட்டான்.அவ்வாறு மாற்றிப் பேசுவதை இது என்ன தப்புலித்தனமால்ல இருக்கு என்பான்.அது மட்டுமல்ல சோறு தின்னும் வாயால் மாறிமாறி பேசுவது நேர்மை அல்ல என்பதுடன் பொய் பேசும் வாயிக்கு போஜனம் கிடைக்காது என பயந்துபோவான்.ஆனால் தேர்தலுக்கு முன்புவரை சண்டமாருதம் செய்தவர்கள் இப்போது தொலைகாட்சிகளில் பேசிவருவதை பார்த்தால் அவர்கள் சோறு தின்பவர்களாக தெரியவில்லை.

 15. கள்ளம்கபடமற்ற பேச்சும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மையும் கிராமங்களில் வாழும் மக்களிடையே அதிகம் காணக்கிடைக்கிறது. நகர மக்களிடையே அரிதாக உள்ளது. இன்றைய அரசியல்வாதிகளிடமும், அவர்களுக்குக் கூஜா தூக்குபவர்களிடமும் அவையெல்லாம் காணக்கிடைப்பதற்கான வாய்ப்புக்களே இல்லை.
  நாட்டிற்குத் தேவை ஆம் ஆத்மி போன்ற வெற்றுவேட்டுக்களல்ல, நாணயமுள்ளவர்கள் அரசியலுக்கு வருவது. புரட்சி வரும் என்று மட்டும் பேசுவதை விட முற்போக்கு சிந்தனையுடையோர் அரசியலில் களமிறங்கினால் நன்றாயிருக்கும். குறைகளை மட்டும் பேசிக்கொண்டிருப்பதைவிட நடைமுறைச் சாத்தியமான வழிகளில் சிறிய அளவிலாவது மாற்றங்கள் கொண்டுவர முடியுமா என்று முயல்வது நன்று.

  • வினவு election நின்னா ஓட்டு போட நீங்க ரெடியா ? வினவுக்கு மொத்தம் எத்தனை ஒட்டு விழும்?

   ###புரட்சி வரும் என்று மட்டும் பேசுவதை விட முற்போக்கு சிந்தனையுடையோர் அரசியலில் களமிறங்கினால் ……

 16. இனியன்,

  நீங்கள் தப்பாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.

  புரட்சி என்பது நீண்ட கால நோக்காகவும் இருக்கலாம் மற்றும் அது தான் உண்மையான தெரிவாக எங்களிடம் உள்ளது.அதற்கான காரண காரியங்கள் உள்ளன.

  ஆனால் அதே நேரத்தில் , புரட்சி வரும் போது பாத்துக்கலாம் என்று தோழர்கள் சோம்பியும் கிடக்கவில்லை. தாங்கள் சொல்வது போல, நடைமுறை சாத்தியமான வழிகளிலும் கூட செயல்களைப் புரிந்து கொண்டு தான் இருக்கின்றனர். சான்றுகள் வினவில் காணக் கிடக்கின்றன. தேடிப படியுங்கள்.

  நன்றி.

  • சிவப்பு,

   நான் வினவில் வெளிவரும் செய்திகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்தும் வாசித்து வருகிறேன். உங்களது போராட்டங்கள் குறித்தும் ஓரளவு அறிவேன்.

   எனது விருப்பம் என்னவென்றால் உங்கள் சக்திகளை ஒன்றுதிரட்டி ஒரு சிறு பஞ்சாயத்துத் தேர்தலிலாவது வென்று ஒரு மாதிரி ஆட்சியைச் செய்துகாட்டுங்கள் என்பதே. செயலில் காட்டும்போதே மக்களுக்கு உங்கள்மீது மேலும் நம்பிக்கை பிறக்கும்.

   மாற்றத்தை விரும்பிய டெல்லி மக்கள் ஆம் ஆத்மியிற்கு ஆதரவு கொடுத்தபோதும் ஆம் ஆத்மி கட்சிக்காரர்களிடம் ஆட்சிசெய்வதற்கான தகுதியும், திறமையும் இருக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. ஆம் ஆத்மியினர் டெல்லியில் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் பொதுத்தேர்தலின் முடிவுகள் ஓரளவுக்கேனும் மாறுப்பட்டிருக்கும்.

   • இனியன் அவர்களுக்கு,

    இந்தப் பதிவிலேயே அரசு குறித்த புரிதலுக்கு வில்லவனின் கட்டுரை அரசியல்வாதிகளின் வாய்ஜாலத்தையும் இந்துத்துவ காலிகளின் தான்தோன்றித்தனத்தையும் புட்டு புட்டு வைத்தது.

    தேர்தல் மற்றும் அரசு குறித்த தங்களது பின்னூட்டங்களைப் படித்த பிறகு, ஒரு விசயத்தை பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது. மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று வைத்துக்கொண்டாலும் கூட அரசு என்கிற தற்போதைய வடிவம் அதற்கு உகந்ததல்ல என்கிற உண்மையை சமீபத்தில் ஹிந்து தமிழ் நாளேட்டில் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவின் கடிதம் தன்பங்கிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் அதிகபட்சம் என்ன செய்யமுடியும் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் அது;

    “தனுஷ்கோடிக்குச் சாலை – பஸ் வசதியில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, கடந்த ஆண்டே சட்டப்பேரவையில் பேசினேன். அதேபோல, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் தொடர்ந்து அரசை வலியுறுத்துவேன். ஆனால், இந்தக் கோரிக்கைகளையெல்லாம் சட்டமன்ற உறுப்பினரால் பரிந்துரைக்கவும் வலியுறுத்தவும் மட்டுமே முடியும். அரசுதான் நிறைவேற்ற முடியும்.”

    இதுதான் அரசின் உண்மையான வடிவம். இங்கு ஒரு ஜெயலலிதாவோ, பாசிஸ்ட் மோடியோ இருக்கிறார் என்பது மூலப் பிரச்சனையல்ல. பக்தன் நம்புகிற பரமாத்மாவே வந்தாலும் அரசு என்கிற இந்த வடிவம் மக்களுக்காக வடிவமைக்கப்பட்டதல்ல. ஒரு நல்ல சட்டமன்ற (நாடாளுமன்ற) உறுப்பினரால் கோரிக்கை மட்டுமே வைக்கமுடியும் (மிஞ்சிப்போனால் தொகுதி நிதியைப் பயன்படுத்தி நிழற்குடை அமைக்கலாம்; மற்றபடி சுரண்டிக் கொழுக்க நிறையவழிகள் உண்டு) என்ற நிதர்சனத்திற்கு அப்பாற்பட்டு தாங்கள் பஞ்சாயத்து தேர்தல், மக்களிடையே ஓட்டு, நல்லவர் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள். இது எப்படி நமது பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கமுடியும்?

    இந்த அமைப்பை ஏற்றுக்கொண்டவர் மட்டுமே அரசை அலங்கரிக்கமுடியும் என்பதனால் தான் வில்லவன் குறிப்பிட்டிருக்கிற இத்துணை அசிங்கங்கள். காங்கிரஸ் களவாணிகள், பாஜக தெள்ளவாரிகள், அம்மா பிழைப்புவாதிகள், பாசிச மோடிகள் என்ற பட்டியல் உறுப்பினர், பேரவை, உள்ளாட்சி, மேலவை, கீழவை, ஜனநாயகம் என்ற ஜாலங்களுக்குள் நீள்கிறது.

    இதையே லெனின் ஒருவரியில் உள்ளடக்கி இவ்வாறு சுட்டிக்காட்டினார்’ “அரசு என்பது ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட பலாத்காரம்” .நமக்கு தேவை தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிபலிக்கிற ஆட்சி; அதை யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லை. தொழிலாளிகளே தங்களின் தலைமையின் கீழ் ஆட்சியை அமைத்துக்கொள்ளலாம். அதற்கு தேவையான சமூக மாற்றமே சோசலிசப் புரட்சி.

    • ஜவாஹிருல்லா போன்ற தனிப்பட்ட ஒருவரால், அல்லது சுயேட்சைகளால் மாற்றங்கள் கொண்டுவருவது கடினம் என்பது உண்மை. அதனால்தான் கூறுகிறேன் இருக்கும் அரசமைப்புக்களில் ஒன்றினது அதிகாரத்தையாவது கையில் எடுக்க முயற்சியுங்கள் என்று. அப்பொழுது ஓரளவிற்காயினும் மாற்றங்களை உருவாக்கலாம்.

     நீங்கள் கூறும் புரட்சி, கேட்பதற்கு நன்றாயிருப்பினும், இன்னமும் இருபது வருடங்கள் சென்றாலும் நடைமுறைச் சாத்தியமற்றது.

   • இனியன்,

    கீழே, தோழர் தென்றல் சிறப்பான ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார். அதைப் புரிந்துக் கொள்ள நீங்கள் சற்று முயற்சிக்க வேண்டுகிறேன்.பிரச்சினைகளை தனித் தனியாக நீங்கள் புரிந்து கொண்டிருப்பதால் தான் இவ்வாறு கருதுகிறீர்கள்.

    இங்கே தேர்தலில் நிற்கவே ‘சில தகுதிகள்’ தேவைப்படுகிறது. ஆதிக்க சாதிகள், கோடீசுவரர்கள், முதலாளிகள் முதலான ஆளும் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களே இந்த தேர்தலில் நிற்க முடியும் என இந்த அமைப்பு அடித்து சொல்கிறது. அதையும் மீறி ஒரு அமைப்பாக இந்த தேர்தலில் நின்ற இந்த போலிக் கம்யுனிஸ்டுகளின் இன்றைய நிலை என்ன? ஜெவின் செருப்பை விட கேவலமாக நடத்தபட்டார்கள் .

    இதுகாறும் நாம் கண்ட இந்த அமைப்பின் அருகதை, ஒரு மசாலா சினிமாவைப் போல, ஒரு நாயகன்,ஒரு மீட்பன் வரமாட்டானா என இம்மக்களை ஒரு ஏக்க பெருமூச்சு மட்டுமே காண வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தாங்களும், எங்களை ஒரு சிறு பஞ்சாயத்து தேர்தலிலாவது நின்று தமது யோக்கியதையை நிரூபிக்க சொல்கிறீர்கள்.

    ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த தேர்தலில் எத்துனை பேர் பங்கெடுத்து இருப்பார்கள். அத்துனைப் பேரில் ஒரு நல்லவர் கூட இல்லையா? சுயேட்சையாக எத்துனை பேர் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் சென்றிருப்பார்கள். அவர்களில் யாரும் நல்லவர்கள் இல்லையா?

    எங்களைப் பொறுத்த வரை, இந்த நடப்பு அரசியல் சமூக பொருளாதார அமைப்பு, பெரும்பான்மையான, உழைக்கும் மக்களுக்கானது அல்ல. ஏனெனில் இது குளுளுவென AC அறையில் அமர்ந்து , விவாதிக்கும் கூட்டதிற்கானது. அங்கெ உட்கார்ந்துக் கொண்டு, வறுமைக் கோடை கணக்கிடுவதும், மானியத்தை வெட்டுவதும், வளர்ச்சி என்ற பெயரில், இயற்கை வளங்களை கொள்ளையிடுவதும் , அதை அந்த மக்கள் தடுக்க முற்படும் பொது போலிசு, ராணுவத்தை விட்டு கொல்லுவதும் இந்த அமைப்பில் நிலவும் முரண்பாடுகளாகும்.

    இந்த முரண்பாடுகள், எளிய வலியில்லாத முறையில், களையப்பட வேண்டுமென்பதே எங்களது விருப்பம். ஆனால் இயற்க்கை நியதி அப்படியல்ல.

    நன்றி.

    • உங்களுக்கே உங்கள் விருப்பத்திற்கெதிரான இயற்கை நியதி புரிகிறதென நினைக்கிறேன்.

     நல்லவர்கள் 10 பேர் நாடாளுமன்றம் செல்வதைவிட, ஒரு ஊராட்சியையாவது கைப்பற்றினால் சிறிய அளவிலாவது மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பது எனது கருத்து.

     நன்றி.

     • இனியன்,
      //உங்களுக்கே உங்கள் விருப்பத்திற்கெதிரான இயற்கை நியதி புரிகிறதென நினைக்கிறேன்.//

      உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியவில்லை என்று நினைக்கிறேன்.

      சரி, இதை உங்களிடமே விட்டு விடுகிறேன். எப்படி ஊராட்சியையாவது கைப்பற்றுவீர்கள்? எப்படி மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்பதை தயவு செய்து எங்களுக்கு விளக்கினால், நாங்கள் இந்த தவறான(!) பாதையை விட்டு விடுகிறோம்.

      நன்றி.

      • //உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியவில்லை என்று நினைக்கிறேன்.//
       புரிந்தே எழுதினேன்.

       // எப்படி ஊராட்சியையாவது கைப்பற்றுவீர்கள்? //
       ஒரு ஊராட்சியையே எப்படிக் கைப்பற்றுவது என்று புரியாமலா/இயலாமலா புரட்சி மூலம் நாட்டையே மாற்றுவோம் என்கிறீர்கள்? ஒரு ஊராட்சிக்குட்பட்ட வரையிலேயே ஆதரவுத்தளத்தை உருவாக்க முடியாதவர்கள் அல்லது உருவாக்கமுடியும் என்பதில் நம்பிக்கையற்றவர்கள் நாட்டைப்பற்றிப் பேசுவது “கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போவானாம்” என்பதையே ஞாபகப்படுத்துகின்றது.

       // எப்படி மக்களுக்கு நல்லது செய்வீர்கள் //
       ஒரு ஊராட்சியால் எதுவுமே செய்யமுடியாது என்கிறீர்களா? சரி, எதுவுமே செய்யமுடியாவிட்டாலும் ஊராட்சி மட்டத்தில் ஊழலாவது இல்லாதிருக்கச் செய்யலாம் அல்லவா?

       • ஒரு உள்ளாட்சி உறுப்பினரைவிட மாநில சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள உரிமைகள் அதிகாரங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. இன்னமும் நல்லவர்கள் வந்தால் மாற்றம் வரும் என்கிறீர்கள். இது அறியாமை மட்டுமல்ல. அராஜகமும் கூட.

        இரண்டாவது, டெல்லியின் ஆம் ஆத்மியே அம்பானியின் கணக்கை தணிக்கை செய்ய முன்வந்த பொழுது, ஒரு அரசமைப்புக்கு இருந்த அதிகாரம் என்னவாக இருந்தது?

        மூன்றாவது, தற்பொழுதைய நிலவரப்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்பை கலைப்பது உலகவங்கித் திட்டத்தின் செயல்திட்டங்களுள் ஒன்று. இது தெரியுமா தெரியாதா?

        இதற்கு முன்னோட்டமாக உள்ளாட்சி அமைப்புகளில் நிதி தொடர்பான அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றன. மாறாக, இந்தியாவில் தேர்ந்தெடுத்து 60க்கும் மேற்பட்ட துணை நகரங்களை உருவாக்குவதுதான் தற்போதைய பகாசூர கொள்ளையின் வடிவம். ஆனால் நீங்கள் உள்ளாட்சி அமைப்பில் பங்கு பெறக்கூட வழியில்லையா என்று கேட்கீறிர்கள்?

        அறியாமை பிரச்சனையில்லை இனியன். அது அனைவருக்குமே உண்டு. ஆனால் நீங்கள் எந்தளவிற்கு தனக்குத் தெரிந்ததே ஞானம் என்று வியக்கிறீர்கள் என்று பரிசிலீயுங்கள். உங்களுக்கு போராட்டம், சோசலிசம், கம்யுனிசம் போன்ற சொல்லாடல்கள் எல்லாம் செந்தட்டி தேய்த்த முதுகாக எரியும் போல் தெரிகிறதே!!! அப்படி ஒரு நிலை இருப்பின் அதை வெளிப்படையாக சொன்னால் என்ன? எதற்காக இந்த ஜனநாயக முகமூடி?

        • இருவருக்கிடையில் ஓர் இழையாகப் போகும் பின்னூட்டத்தில் நடுவில் வந்து குதித்து சம்பந்தமில்லாத கருத்துக்களைக் கூறி, மற்றைவர்களை முட்டாள்கள் என்றும் கூறி, உங்களை நீங்களே மெச்சிக்கொள்ளுங்கள்.

         // ஒரு உள்ளாட்சி உறுப்பினரைவிட மாநில சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள உரிமைகள் அதிகாரங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. //

         சரிங்க ஐயா. உங்களுக்கு மட்டும்தான் எல்லாமே தெரியும். போதுமா?

         // இன்னமும் நல்லவர்கள் வந்தால் மாற்றம் வரும் என்கிறீர்கள். இது அறியாமை மட்டுமல்ல. அராஜகமும் கூட. //

         சரிங்க ஐயா. கெட்டவர்கள் வந்தால்தான் நன்றாயிருக்கும். இப்போது திருப்தியா?

         // இரண்டாவது, டெல்லியின் ஆம் ஆத்மியே அம்பானியின் கணக்கை தணிக்கை செய்ய முன்வந்த பொழுது, ஒரு அரசமைப்புக்கு இருந்த அதிகாரம் என்னவாக இருந்தது? //

         ஒரு அரசமைப்புக்கு அதிகாரம் இல்லையென்று இறுதிவரை போராடி நிரூபிக்காமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து, எல்லாவற்றையும் நடுவழியில் கைவிட்டு, எதனையும் சாதிக்காதுவிட்டது ஆம் ஆத்மியின் தவறில்லையா?

         // ஆனால் நீங்கள் உள்ளாட்சி அமைப்பில் பங்கு பெறக்கூட வழியில்லையா என்று கேட்கீறிர்கள்? //

         சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில் என்னிடம்/எங்களிடம் அதிகாரம் இருக்கவில்லை, கோரிக்கை மட்டுமே வைக்கமுடிந்தது என உண்மையாகவோ தப்பித்துக் கொள்வதற்காகவோ கூறும் ஜவாஹிருல்லா மற்றும் சில சுயேட்சைகளின் கூற்றின் காரணமாக நல்லவர்கள் உள்ளாட்சியையாவது ஒரு அமைப்பாக கைப்பற்ற வேண்டுமென்றேன்.

         // அறியாமை பிரச்சனையில்லை இனியன். அது அனைவருக்குமே உண்டு. ஆனால் நீங்கள் எந்தளவிற்கு தனக்குத் தெரிந்ததே ஞானம் என்று வியக்கிறீர்கள் என்று பரிசிலீயுங்கள். //

         உங்கள் சான்றிதழுக்கு நன்றி.

         // உங்களுக்கு போராட்டம், சோசலிசம், கம்யுனிசம் போன்ற சொல்லாடல்கள் எல்லாம் செந்தட்டி தேய்த்த முதுகாக எரியும் போல் தெரிகிறதே!!! அப்படி ஒரு நிலை இருப்பின் அதை வெளிப்படையாக சொன்னால் என்ன? எதற்காக இந்த ஜனநாயக முகமூடி? //

         எனக்கு எந்தவொரு சொல்லாடல்களிலும் ஒவ்வாமை கிடையாது. அந்த சொல்லாடல்களைப் பயன்படுத்துவதால் மட்டும் தாங்கள் சொல்வது/செய்வது எல்லாம் சரியென்று வாதிடுபவர்களிடம் ஒவ்வாமையுண்டு.

         • உங்களது மறுமொழி நேர்மையற்ற முறையில் இருக்கிறது. என்னுடன் விவாதிக்க விருப்பமில்லை என்று ஒற்றை வரியில் எழுதலாம். ஆனால் பல்வேறு முரண்பாடுகளை வெட்டியாக தூக்கி சுமக்கிறீர்கள். இது தேவையல்ல. தாங்கள் தவறவிட்ட வாதங்களைக் குறித்துக்கொள்ளுங்கள்.

          1. “ஒரு உள்ளாட்சி உறுப்பினரைவிட மாநில சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள உரிமைகள் அதிகாரங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. இன்னமும் நல்லவர்கள் வந்தால் மாற்றம் வரும் என்கிறீர்கள். இது அறியாமை மட்டுமல்ல. அராஜகமும் கூட.” இதுதான் எனது முதல் கருத்து. இந்த அரசமைப்பு அரசியல்வாதிகளுக்கு என்னவகையான அதிகாரங்களை வழங்கியிருக்கிறது என்பது வாதத்தின் ஒரு பகுதி. அதற்கு தாங்கள் பதில் கூறவில்லை. உள்ளாட்சியையாவது கைப்பற்றக்கூடாதா என்று சொல்வதிலேயே குறியாக இருக்கிற தாங்கள் சட்டமன்றமும் நாடாளுமன்றமும் என்னவகையான அதிகாரங்களை வழங்குகிறது என்பதற்கும் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.

          2. தாங்கள் தான் மிகவும் நக்கலாக மேட்டிமைத்தனத்தோடு “ஒரு ஊராட்சிக்குட்பட்ட வரையிலேயே ஆதரவுத்தளத்தை உருவாக்க முடியாதவர்கள் அல்லது உருவாக்கமுடியும் என்பதில் நம்பிக்கையற்றவர்கள் நாட்டைப்பற்றிப் பேசுவது “கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போவானாம்” என்பதையே ஞாபகப்படுத்துகின்றது.” என்று தோழர் சிவப்பிற்கு பதில் அளித்தீர்கள். உள்ளாட்சி அமைப்பின் தற்போதைய நிலையையும் எடுத்துக்கூறியும் அதற்கும் பதில் இல்லை. இங்குள்ள குடியமைப்பு பற்றி எந்தவொரு விவாதம், பரிசீலனை என்று எதுவும் இல்லாமல் முன் கூட்டியே அனைத்தையும் முடிவுசெய்துவிட்டு விவாதம் இழையாக போகிறது என்று அடித்துவிடுகிறீர்கள்.
          3. “சரிங்க ஐயா. உங்களுக்கு மட்டும்தான் எல்லாமே தெரியும். போதுமா?” சரிங்க ஐயா. கெட்டவர்கள் வந்தால்தான் நன்றாயிருக்கும். இப்போது திருப்தியா? என்று தனித்தனியாக பதில் அளிப்பதன் மூலம் தனிநபர் தாக்குதலாக கருதுகிறீர்கள். இது அழகல்ல. உங்களைத் தாக்குவதற்காக இந்தவிவாதத்தில் பங்குகொள்ளவில்லை. உங்களை அம்பலப்படுத்தவும் ஒன்றும் இல்லை. இதுபோக புரிந்தால் புரட்சி வந்துவிடும் என்று கருதுவதும் சமூக விஞ்ஞானமல்ல. ஆக நான் விளக்கி தாங்கள் புரிந்துகொண்டு, இதன் மூலமாகத்தான் தொழிலாளிகள் தங்களை மீட்டெடுக்கிறார்கள் என்ற எந்தவொரு நிர்பந்தமும் இங்கு கிடையாது.
          4. அரசமைப்பு அதிகாரம் இல்லையென்று இறுதிவரை போராடி நிருபீக்கிற தன்மை ஆம் ஆத்மிக்கு வேண்டும் என்பது இருக்கட்டும். உங்களால் முடியுமா? கட்சிகாரர்களின் பிழைப்புவாதம் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் நடுத்தரவர்க்கத்தின் பிழைப்புவாதம் என்ற ஒன்று இருக்கிறது இல்லையா? அதற்கு யார் பொறுப்பு? உங்களின் தவறு இதில் இல்லையா?
          5. ஜவாஹிருல்லா, சுயேட்சைகளின் பிரச்சனையாக பார்த்தது உங்கள் குறுகலான பார்வை. இந்த கட்சி அமைப்பு என்ன செய்துவிட முடியும்? உழுபவனுக்கு நிலம் உழைப்பவனுக்கு அதிகாரம் என்பதை தேர்தல் பாதையால் எப்படி சாதிக்க இயலும்? உள்ளாட்சியை கைப்பற்ற வேண்டும் என்று சொல்கிற தாங்கள் தெலுங்கானாவின் நிலமீட்பு போராட்டத்தை எவ்விதம் அணுகுவீர்கள்?
          6. தாங்கள் சொல்வது செய்வது சரி என்று வாதிடுபவர்களிடம் இது தவறு என்று தங்கள் தரப்பு பார்வையை வைத்திருக்கிறீர்களா? விவாதம் அதற்குத்தானே? இதுவிவாதம் இல்லையென்றால் இந்தப்பதிவு சுட்டிக்காட்டுகிற பிஜேபி அபிமானிகளிடம் இருந்து எவ்விதம் வேறுபடுகிறீர்கள்? நடுவில் குதித்தால் கோபம் வருகிறது; அறியாமை என்று சொன்னால் முட்டாள் என்று சொன்னதாக எடுத்துக்கொள்கீறிர்கள். இதெல்லாம் எதற்காக?

          • முதலில் வினவில் எனது அனுபவத்தில் கண்டது தங்களது கருத்துக்களுடன் முற்றிலும் உடன்படாதவர்களை எதிராளிகளாகப் பாவித்துப் பின்னூட்டமிடும் தன்மை. இது ஜோர்ஜ் புஷ் கூறியதைப் போல் “எங்களுடன் முற்றிலும் ஒத்துப் போகவேண்டும், இல்லையென்றால் நீங்களும் எதிரிகளே” என்பதைப் போன்றது.

           உள்ளூராட்சியைக் கைப்பற்றுவதால் பெரிதாக ஒன்றும் சாதிக்கப்பட முடியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் அதே உள்ளூராட்சி கூட ஊழல் அரசியல்வாதிகளின் கையில் சிக்கும்போது நடைபெறும் சீர்கேடுகளாவது ஒழியும்/குறையும். இன்றைய யதார்த்த “ஜனநாயக” சூழலில் சீர்திருத்தவாதிகளால் மாநில, மத்திய ஆட்சியை ஒரே எடுப்பில் கைப்பற்றிவிட முடியாது என்று கருதுகிறேன்.

           // ஆனால் நடுத்தரவர்க்கத்தின் பிழைப்புவாதம் என்ற ஒன்று இருக்கிறது இல்லையா? அதற்கு யார் பொறுப்பு? உங்களின் தவறு இதில் இல்லையா? //

           நடுத்தர வர்க்கத்தின் பிழைப்புவாதம், கீழ் வர்க்கத்தின் பணத்திற்கு ஓட்டை விற்றல், மேல் வர்க்கத்தின் சுரண்டல் என்று எல்லாம் கொண்டதுதான் நம்மைச் சுற்றியுள்ள சமுதாயம். இதில் நடுத்தர வர்க்கத்தை மட்டும் சாடிப் பயனில்லை. அதற்காக பொல்பொட்டினைப் போல் படித்தவர்களும், நடுத்தர வர்க்கமுமே சமூகத்தின் எதிரிகள் என்று கொன்று குவிக்கப் போகிறீர்களா?

           நீங்கள் கூறும் புரட்சியை மட்டும் நம்புபவர்கள் ஆதரிப்பவர்கள் சமுதாயத்தில் எத்தனை சதவீதம் பேர்? உங்களுக்கான ஆதரவுத்தளம் எவ்வளவு என்று எவ்வாறு உங்களால் கணிப்பிட முடியும்? தேர்தலில் ஓட்டுப் போடாதவர்கள் ஒல்லோரும் உங்களின் ஆதரவாளார்கள் என்று நினைக்கின்றீர்களா?

           // தாங்கள் சொல்வது செய்வது சரி என்று வாதிடுபவர்களிடம் இது தவறு என்று தங்கள் தரப்பு பார்வையை வைத்திருக்கிறீர்களா? //

           எனது தவறென்று படுவதை எப்பொழுதும் எதிர்த்து வந்திருக்கிறேன். அதேநேரம் முட்டாள்தனமாக தாங்கள் கூறுவதே சரியென்று அடாவடி செய்பவர்களிடம் வாதிடுவதில்லை.

           மறுபுறத்தில் சமூகத்தில் அவலங்கள் நேர்கையில் உணர்ச்சி வயப்படுதல், ஆத்திரப்படுதல், குறுகிய இலக்குடன் எதிர்த்துப் போராடுதல் மட்டும் நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுத்தராது என்று அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். பல வேளைகளில் பல முனைகளில் சாதுரியமாக (இதனை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்) முயற்சிப்பதன் மூலமே இலக்குகளை அடைய முடியும் என்பது எனது கருத்து.

         • இனியன்,

          என்னைப் பொறுத்த வரையில்,வினவில், பொதுவாக, யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கருத்துரையிடலாம். தோழர் தென்றல் இங்கே கருத்திடும் பொது, அது எவ்வாறு சம்மந்தமில்லை என்பதை தெளிவு படுத்தும் பொறுப்பு உங்களுக்கு உரியது.ஏனெனில் இது நம்மிருவருக்கும் மட்டும் நடக்கும் உரையாடல் அல்ல.

          தற்போதைய அரசியலைப்பில் எனக்குத் தெரிந்து, ஊராட்சியைக் கைப்பற்றுவதென்பது,
          1) நிலவும் ஒட்டு போடும் ஜனநாயக(!) முறையில் தேர்தலை எதிர்க் கொள்வது.

          நிலவும் ஒட்டு போடும் முறையில் ஒரு ஊராட்சியில், தேர்தலில் வெற்றி பெற்றாயிற்று. அடுத்து என்ன செய்வது? மக்களுக்கு நல்லது தான் என்று நீங்கள் சொல்வீர்கள்.

          சரி சான்றாக, முதலில் நமது ஊரில் முடங்கும் நிலையில் உள்ள அரசுப் பள்ளியை சரி செய்யலாம் என்று கருதி, அதற்கான வேலைகளில் இறங்கலாம். அரசுப் பள்ளிகளுக்களின் வளர்ச்சிக்கென சட்டங்கள் பல எழுதப்பட்டு, அவை சட்டத்தின் இருட்டறையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அதை செயல்படுத்தவிடாமல் ஒரு அதிகார அமைப்பு ஊராட்சிக்கு வெளியே பாராளுமன்றத்திற்கும் வெளியே இந்த இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்திக கொண்டிருக்கிறது.

          அதாவது ஊராட்சி என்ற வரம்புக்குட்பட்ட எல்லையில் அதன் அதிகாரமானது இல்லை. அதன் அதிகாரம் அதன் வரம்புக்கு வெளியே உள்ளது.

          தற்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் பொதுவில், ஒரு எல்லைக்குட்பட்டு அதாவது அரசியலைப்பு அனுமதிக்கும் எல்லை வரைக்கும் தான். அதையே இந்த ஆளும் அதிகார வர்க்கங்கள் அனுமதிக்காது மட்டுமில்லாமல், அம்மக்களையே அடித்து நொறுக்கவும் செய்கின்றன.

          2) தேர்தலைப் புறக்கணிப்பது மற்றும் மற்றும் இந்த அரசின், கருவிகளான காவல்துறை,நீதித்துறை உள்ளிட்ட நிர்வாக மற்றும் ஆட்சித் துறைகள் ஆகியனவற்றை புறக்கணிப்பதுடன் மக்களுக்கான நிர்வாகத்தை அதாவது கிராம நிர்வாகத்தை(!) மக்களே எடுத்து கொள்வது.

          ஒரேயொரு கிராமத்தில் அப்படியொரு அதிசியம் நடக்குமா? அதாவது மக்களே அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முடியுமா? அதற்கு இந்த ஆளும் அரசு வழி விடுமா ?ஏற்கனவே தெளிவாக இதைப் பற்றி வினவில், கருத்துரையாடி இருக்கிறோம். புரட்சி என்பது வெறும் கத்தியை வைத்து செய்வது அல்ல.அது இரண்டாம் பட்சமானது. ஒட்டுமொத்த அரசமைப்பை அமைப்பை நோக்கி தான் நமது குறிக்கோள் இருக்க வேண்டுமே ஒழிய தனி தனியாக முதலில் தனிமனிதன் பின்னர் ஒரு கிராமம் அப்புறம் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது கேலிகூத்தானது.

          நன்றி.

          • // என்னைப் பொறுத்த வரையில்,வினவில், பொதுவாக, யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கருத்துரையிடலாம். தோழர் தென்றல் இங்கே கருத்திடும் பொது, அது எவ்வாறு சம்மந்தமில்லை என்பதை தெளிவு படுத்தும் பொறுப்பு உங்களுக்கு உரியது.ஏனெனில் இது நம்மிருவருக்கும் மட்டும் நடக்கும் உரையாடல் அல்ல. //

           நிச்சயம் ஏற்றுக்கொள்கிறேன். தொடர்விவாதங்களின் பிற்பட்ட ஒரு பகுதியை மட்டும் தூக்கிப்பிடித்துக் குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது என்பதனாலேயே அவ்வாறு எழுதினேன்.

           என்னைப் பொறுத்தவரையில் ஒரு முனையில்/வழி முறையில் மட்டும் போராடுவதால் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. புரட்சிவரும், அதுவரையும் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ஆட்சி செய்துவிட்டுப் போகட்டும் என்றிருத்தல் அர்த்தமற்றது.

           —-

           பி.கு.: அடுத்துவரும் சில நாட்களுக்கு பின்னூட்டமிடமாட்டேன். தப்பியோடிவிட்டேன் என்று கூறவேண்டாம் 🙂 . மீண்டும் வருவேன்.

     • இனியன் சொல்லும் கருத்துக்கு உடன்படுகிறேன். நல்லவர்கள் ஆள வேண்டும் என்றால் அவர்கள் முதலமைச்சராக தான் ஆள வேண்டும் என்ற அர்த்தம் இல்லை, சிறுதுளி பெருவெள்ளம் என சிறிய அளவில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் நலத்தில் அக்கறை உள்ள நல்லவர்கள் பதவிக்கு வந்தால் அதன் மூலம் கூட நீங்கள் எதிர்பார்க்கும் புரட்சியை மக்கள் மனதில் விதிக்கலாம். புரட்சி என்பது ஆயுதம் கொண்டு தான் நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் சக்தி, மக்கள் ஆதரவு கிடைத்தாலே போதும்.

      • புரட்சி என்பது ஆயுதம் கொண்டு நிறைவேற்றப்படுவது என்பது சினிமாப்பட ரசிகர்களின் அபிமானம். இது தொழிலாளர்களின் எழுச்சியைக் கொச்சைப்படுத்துகிறது.

       தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தத்துவ ஞானம், அரசியல் பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான சோசலிசம் என்று கூறுகள் உண்டு. ஒருவரை ஆயுதபாணியாக்குவது என்பது இந்த மூன்றிலும் தேர்ச்சி பெற வைப்பது. இதுபற்றி விவாதிக்க மனமில்லாமல் மக்கள் சக்தி மக்கள் ஆதரவு என்று வியந்தோதுகிறீர்கள்.

       அமெரிக்கா எந்த மக்கள் சக்தி ஆதரவோடு ஆயுத தொழிலை நடத்துகிறது என்று சொல்லமுடியுமா? அல்லது காந்தி எந்த மக்களின் ஆதரவோடு இரண்டாம் உலகபோருக்கு ஆள்பிடித்தார்? அல்லது இந்தப் பதிவில் விவாதிக்கப்படுகிற பாஜக அறிவுஜிவீகள் எந்த மக்கள் ஆதரவோடு பேட்டி கொடுக்கிறார்கள்? சுப்ரமணிய சாமி எந்த மக்கள் சக்தியின் பின்னணியில் “தமிழ் பொறுக்கீஸ்” என்று கூறினார்?

       தனக்கு கிடைத்த நடுத்தரவர்க்க சொகுசான வாழ்க்கைக்காக புரட்சி என்பது தன் கண்ணசைவின் கீழ் நடக்க வேண்டும் என்று சொல்வபவர்கள் நிராயுதபாணிகள் அல்லர். உண்மையில் மனது முழுக்க ஆயுதம் தரித்த இவர்கள் தான் இப்படி ஒருபக்கத் தீர்ப்பு எழுதுகின்றனர்.

       வான் ட்ராயின் இறந்தபிறகு நாடெங்கிலும் இறுதிச் சடங்கு புத்தமதத்தின் படி பத்து நாள்கள் நடந்ததாம். அஞ்சலி என்று அலட்சியப்படுத்தியது ஆளும் வர்க்கம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் புரட்சிக்குத் தயாராகினர். மக்நரமாக்கள் மட்டுமல்ல அமெரிக்கா ஒழித்துக்கட்டப்பட வேண்டுமென்ற கருத்து ஆயுதத்தை மக்கள் கைப்பற்றினார்கள். கொரில்லா படைக்கு டிராயின் மனைவி தான் தலைமைதாங்க கேட்டுக்கொள்ளப்பட்டாள். ஆக புரட்சி என்பது ஆயுதத்தால் நிறைவேற்றப்படுவதில்லை. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் என்று இலக்கியங்களால் வியக்கப்படுகிற பெண் போராட்டத்திற்கு தயாராகிறார் என்றால் புரட்சி ஆயுதத்தாலா நிறைவேற்றப்படுகிறது? ஒரு வேளை தொழிலாளர்களையே ஆயுதம் என்று நினைத்துவிட்டீர்கள் போலும். சரி தான். இப்படி நினைப்பதைத் தவிர வேறுவழியில்லை.

       • மக்கள் ஆதரவின்றி யாராலும் நிலையாக ஆட்சி அமைக்க இயலாது தென்றல்.
        வியட்நாம் போருக்கு அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?
        புரட்சிகளும் அப்படி தான். மக்களின் ஆதரவு பெறாத புரட்சியின் வெற்றி நிலைத்திருக்காது. டிராயின் மனைவி போராட்டத்திற்கு தயாராகிறார் என்றால் அந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாமலா இருந்திருக்கும்?

        இப்போது பாஜக ஆட்சிக்கு வந்திருப்பதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு பாஜகவின் மேல் பேரபிமானம் கொண்டதாலா, இல்லை. காங்கிரஸ் அரசின் மேல் கொண்ட கொடும் கோபம் தான். அவர்களின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட தான் மக்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தார்கள். அந்த மாற்றாக ஏன் நம்மில் ஒருவர் இருக்க கூடாது? காங்கிரஸ் பாஜகவிற்கு மாற்றாக ஒரு நல்ல சக்தி உருவாக வேண்டும். முதல் கட்டமாக அது சிறிய அளவில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நிலை பெற வேண்டும். மக்களுக்கு நன்மை பயத்தால், அவர்களின் முக்கிய பிரச்சினைகளை இவர்கள் தீர்த்து வைத்தார்கலானால், பின்னர் அதன் வளர்ச்சி, மக்களின் ஆதரவோடு தானாக பெருகும். கொஞ்சம் ஆக்கபூர்வமாக யோசித்து பழகலாம் நண்பரே. எப்போதும் அனைவரும் வெறுப்போடு பார்ப்பது நம்மை மக்களிடமிருந்து தனிமைபடுத்தி விடும். இப்போதும் சொல்கிறேன். ஒரு சிறு குழுவினால் இயலாத காரியத்தை மக்களின் பேராதரவை கொண்ட ஒரு அமைப்பால் நிறைவேற்ற இயலும்.

        • கற்றது கையளவு, தாங்கள் சொல்வது சரி. ஆனால் விசயத்தை தலைகீழாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். அவையாவன;

         1. புரட்சி மக்கள் ஆதரவுடன் தான் நடத்த இயலும். குறுங்குழுக்களாலோ வெறும் ஆயுதத்தாலோ சாதிக்க இயலாது. நீங்கள் ஆயுதத்தால் சில குழுக்கள் மட்டுமே வென்று எடுக்கக்கூடிய விசயமாக நினைத்துகொண்டிருக்கீறிர்கள்.

         2. பாஜகவும் காங்கிரசும் மக்கள் சக்தியோடு ஆட்சிக்கு வந்துவிடவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இவர்களின் தேர்தல் செலவுகள், மீடியா வெளிச்சம், முதாலாளிகள் ஸ்பான்சர், மேல்நிலைவல்லரசுகளுக்கு அடிமையாக தரகர்களாக இருத்தல், மதவெறி யுக்தி இதுவே இவர்கள் யாரென்றும் யாருக்கானவர்கள் என்றும் அடையாளம் காண்பதற்கு போதுமானது. ஆனால் இதற்கு மாறாக புரட்சிகர அமைப்புகளுக்கு ஆதரவு மக்கள் மட்டுமே. பாட்டாளிகளுக்காக விவசாயிகளுக்காக இதர சமூக குழுக்களின் விடுதலைக்காக இங்கு புரட்சிகர அமைப்புகள் மட்டும் தான் இருக்கின்றன. பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஒளிந்திருக்கும் சிறு குறுங்குழுக்களைத் தான் மக்கள் ஆதரவுடன் வந்தவர்கள் என்று கருதுவது சரியா? இதுவே நமக்கும் எப்படி தீர்வாக இருக்க முடியும்?

         3. உள்ளாட்சி அமைப்பு என்று சொல்கிறீர்களே, தொழிற்சாலைகளுக்கு எதாவது ஒரு ஓட்டுகட்சி வந்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை கேட்கட்டுமே! அவர்களை வென்றெடுக்கட்டுமே! இதெல்லாம் செய்யாத அரசியல் வாதிகள் தேர்தலில் பங்குபெற்று ஜனநாயகமுகமூடி அணிகிறார்கள். ஆனால் தேர்தல் பாதை திருடர்பாதை என்று சொல்கிற புரட்சிகர அமைப்புகள் இத்தேசத்தின் பெரும்பான்மை மக்களான பாட்டாளிகளை நேரடியாக சந்தித்து அவர்கள் தலைமையில் ஒரு ஆட்சியை சமூக மாற்றத்தைக் கோருகிறது. இதுதானே உண்மையான ஜனநாயகம், இது தானே நாம் விரும்பும் புதிய ஜனநாயகம். மக்கள் சக்தி யார் பக்கம் இருக்கிறது என்றும் எது ஜனநாயகம் என்றும் பரிசீலிப்பீர்கள் இல்லையா?

         • நாட்டு மக்களின் வாழ்வில் நன்மாற்றத்தை ஏற்படுத்தும் புரட்சிக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. ஆனால் புரட்சி என்ற வார்த்தை இப்போது மிகவும் மலிவாக பயன்படுத்தப்படுகிறதே, புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர், புரட்சி நடிகன், இப்போது சமீபத்தில் கல்யான் புரட்சி, பின் நவீன கோமாளி அரவிந்த் கேஜ்ரிவால், அண்ணா அசாரே புரட்சி, இதெல்லாம் பார்க்கும்போது புரட்சி என்று சொல்பவர்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் அணுக வேண்டியுள்ளது. மன்னிக்கவும்.

          தாங்கள் சொல்லக்கூடிய புரட்சியில் மக்களின் ஜனநாயக உரிமைகள் எப்படி காப்பாற்றப்படும் என்ற சிறிய ஐயம் எனக்கு உள்ளது. உலக நாடுகளில் சமீப காலங்களில் புரட்சி என்ற பெயரில் நடப்பது அனைத்தும் ஆயுத வழியையே பின்பற்றி அதனால் மக்களுக்கு முன்னரை விட மோசமான விளைவுகளையே தருகிறது. அதனால் தான் நான் தயங்குகிறேன்.

          மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த வழியாக இருந்தாலும், மக்களின் ஜனநாயக உரிமைகள் காக்கப்படும் எனில், அந்த வழிக்கு என் சம்மதம் உண்டு.

 17. மிக அருமையான கட்டுரை
  நேர்காணலில் தமிழக சட்டமன்ற உருப்பின்ர்களும் கலந்து கொள்வது போல் இருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் (அதாவது மாட்டு கொட்டயில் அடைபட்ட மாடுகளைப்போல் அம்மா அம்மா என்று கத்திக்கொண்டே இருந்திருப்பர்கள்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க