privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 01/08/2014

ஒரு வரிச் செய்திகள் – 01/08/2014

-

செய்தி: தமிழகத்தில் நிகழாண்டில் ரூ 253.80 கோடியில் 1,200 புதிய பேருந்துகளும், சென்னை நகருக்கு மேலும் 100 சிற்றுந்துகளும் வாங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

நீதி: 5 சதவீதம் கழிவென்றால் 12.5 கோடி, 10 சதவீதமென்றால் 25 கோடி, அம்மாடி!
________________

செய்தி: தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஆகஸ்ட் மாதம் முதல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மீதமுள்ள 2 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரம் அடுத்த நிதியாண்டிலிருந்து பெறப்படும் என்று அவர் அறிவித்தார்.

நீதி: கொள்முதல் விலை என்ன? ஒரு யூனிட்டுக்கு எத்தனை ரூபாய்? அதற்கும் நெய்வேலி மின்சாரத்திற்கும் விலை வேறுபாடு என்ன? விற்பவர் யார்? ஆண்டுக்கு எவ்வளவு கோடி மக்கள் பணம் போகிறது? ஆயிரம் வாங்குவது பிரச்சினையா, எத்தனை கோடி போகிறது என்பது முக்கியமா?
________________

செய்தி: ”தமிழகத்தில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இந்த விஷயத்தில் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கவலையடைய வேண்டாம்,” என வேளாண் அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

நீதி: விவசாயத்தில் மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய அரசு குறித்து மௌனமாக இருந்து விட்டு தமிழகத்தில் அனுமதி இல்லை என்றால் என்ன பொருள்? மோடியை விட்டுக் கொடுக்கமாட்டார் லேடி!
_______________

செய்தி: “கரும்பு விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த பரிந்துரை விலை மற்றும் நிலுவைத் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தமிழக விவசாயிகளுக்கு பெரிய சலுகையை அறிவித்துவிட்டது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயிகளின் விடிவெள்ளியாக தமது அரசு தொடர்ந்து செயல்படும் என்று தனக்குத்தானே  ஜெயலலிதா பாராட்டிக் கொண்டிருக்கிறார்.” என்று என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நீதி: அரசு நடவடிக்கை வேண்டும், பயமிருப்பதால் நாங்கள் போராடமாட்டோம் என்று ‘போராளிகள்’ முழங்கும் போது, ஜெயா தன்னைத்தானே பாராட்டினால் என்ன, ஆள் வைத்து வாழ்த்த வைத்தால் என்ன?
__________________

செய்தி: சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, தி.மு.க. சார்பில் ‘‘தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’’ எனும் தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் சென்னை தியாகராயர்நகர் பேருந்துநிலையம் அருகில் நடைபெற்றது.

நீதி: தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ செய்யாமல் கூட்டம் நடத்தி குமுறுவது, ஜனநாயகம் படும்பாடு என்று பொருமுவது எல்லாம் எலி வளை கீச்சலில்தான் வரும்.
__________________

செய்தி: உ.பி. மாநிலம் மீரட் நகரில் 2006-ம் ஆண்டு தனியார் நிறுவனம் நடத்திய கண்காட்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக, ஐந்து லட்சம் ரூபாய் வழங்க, நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதி: அந்த ‘தனியார் நிறுவனத்தின்’ பெயரை சொல்ல மறுக்கும் ஊடகங்களும், எட்டாண்டுகள் கழித்து நிவாரணம் வழங்கும் நீதித்துறையும் இருக்கும் வரையில் இந்தியாவில் நடக்கும் விபத்துக்களுக்காக முதலாளிகள் அஞ்சத் தேவையில்லை.
_________________

செய்தி:  ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியில் இயங்கி வரும் ரயில்வே பள்ளியில் பணியாற்றி அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர், ரயில்வே அதிகாரிகளை சிபிஐ பொறி வைத்துப் பிடித்துள்ளது.

நீதி: இதே பொறி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல்களில் மறைந்திருக்கும் முதலாளிகள், அரசாங்கத்தை பிடிக்க முடியாமல் தப்பிக்க விடுகிறதே? இந்தக் கறையை அழிக்காமல் பொறிக்கு ஏது நெறி?
___________________

செய்தி: மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகாவில் மலையடிவாரத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்று முன்தினம் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு, 44 வீடுகளும், ஒரு கோவிலும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. நாட்டையே உலுக்கியுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் குறைந்தது 300–க்கும் மேற்பட்டோர் புதைந்து போய் விட்டனர்.

நீதி: ஒன்று நிலச்சரிவு இல்லையென்றால் பொருளாதாரச் சரிவு. முன்னதில் உயிரோடு சமாதி. பின்னதில் வாழும்போதே நடைபிணம். உயிருக்கு மதிப்பு இல்லாத நாட்டில் மரணத்திற்கு ஏது ஆறுதல்?
___________________

செய்தி: கட்சி தொடர்பான விஷயங்கள் அனைத்து எம்.பி.க்களையும் உடனடியாக சென்று சேரும் வகையில், 323 பா.ஜ.க. எம்.பி.க்களும் வாட்ஸ்ஆப் குரூப்ஸ்-இல் இணைந்துள்ளனர்.

நீதி: இனி கர்நாடகா சட்டசபையில் நடந்த பாரதப் பண்பாட்டின் காமசூத்ரா காட்சி புதுதில்லியிலும் வெற்றிகரமாக ஓடும்.
_____________________

செய்தி: நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 11.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் கிருஷண்பால் குர்ஜர் தெரிவித்தார்.

நீதி: வாகன உற்பத்தி அதிகரிப்பையும் வாகன கடன் அதிகரிப்பையும் ஊக்குவிக்கும் அரசாங்கம், இறந்தவர் எண்ணிக்கை அதிகரிப்பதை வளர்ச்சி என்றே எடுத்துக் கொள்ளும்! நாலு கார் விற்பதற்கு நாற்பது பேர் செத்தால் தப்பே இல்லை.
________________________

செய்தி: கருப்புப் பணத்தை வெளிக் கொணர்வதற்காக, வரி ஏய்ப்போருக்கு பொது மன்னிப்பு வழங்கும் வரிச் சலுகைத் திட்டம் ஏதும் அறிவிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நிதி: கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வரமாட்டோம், முடியாது என்பதை மறைத்து விட்டு, மன்னிப்பு கிடையாது என்றால் என்ன? திருடனை பிடிக்க மாட்டோம் திருட்டுக்கு தண்டனை நிச்சயமா?
________________________

செய்தி: கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா சட்டப்பேரவைத் தொகுதிக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.எஸ்.ஒய். ராகவேந்திரா போட்டிடுகிறார்.

நீதி: அரசியலில் வாரிசு முறையை ஒழிப்பேன் என்று முழங்கிய மோடியின் கர்நாடக சாதனை!
__________________________

செய்தி: மேற்கு டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

நீதி: ஜெசிகாலாலைக் கொன்ற துப்பாக்கியும், மனுசர்மாக்களும் இல்லாமல் தில்லி இல்லை. இந்த தில்லியை வீழ்த்தாமல் மக்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.
_________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க