Friday, January 22, 2021
முகப்பு கலை இலக்கிய விமரிசனங்கள் கஜினியை சந்தித்த ரஜினி – தி இந்து சுட்ட கதை

கஜினியை சந்தித்த ரஜினி – தி இந்து சுட்ட கதை

-

anton-chekhov
ஆன்டன் செகாவ்

“ஃபில்டர் காஃபியும், தி இந்துவும் இல்லாத காலைப் பொழுதை கற்பனை செய்ய முடியாது” – இது தன்னைப் பற்றி நடுத்தர வர்க்கம் கொண்டிருக்கும் பெருமை என மவுண்ட்ரோடு மஹாவிஷ்ணு கருதுகிறது.

ஆங்கில இந்துப் பத்திரிகையின் எடையில் மூன்றாம் பக்க மாநகர அக்கப்போர் தீனிகளே ஆக்ரமித்திருக்கும் நிலையில் தமிழ் இந்துவின் நிலை எப்படி இருக்கும்? ஏற்கனவே விகடன், குமுதம் வகையறாக்கள் நொறுக்குத் தீனி வாசிப்பையும், வீக் எண்ட் சமூக உணர்வையும் உருவாக்கி விட்ட நிலையில் இப்பேற்பட்ட பத்திரிகைகளில் பயிற்சி எடுத்து “தி இந்து”-வில் பணியில் சேர்ந்திருக்கும் அறிஞர் பெருமக்கள் என்ன சாதனையை ஏற்படுத்த முடியும்?

தி இந்துவின் 29.01.2015 இதழைப் பிரித்து இரண்டாம் பக்கத்திற்கு செல்லுங்கள். “கில்லாடி கேவான்” படக்கதையின் கீழே வலதுபுறம் முதல் பெட்டி செய்தியை படியுங்கள்!

“ஆண்டன் பாவ்லோவிச் செக்கோவ்” எனும் தலைப்பில் ராஜலட்சுமி சிவலிங்கம் என்பவர் எழுதியிருக்கிறார். புகழ் பெற்ற எழுத்தாளரான செகாவின் பிறந்த தினைத்தை முன்னிட்டு அவரைப் பற்றிய பத்து துணுக்கு செய்திகளை தொகுத்திருக்கிறார்கள்.

இலக்கிய வட்டத்திலும், இடதுசாரி கட்சிகளிலும் பிரபலமான செகாவைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்த போது………….

“‘இலக்கிய உத்தியிலும், வடிவமைப்பிலும் செகோவை மிஞ்சக் கூடியவர்கள் யாருமே இல்லை,” என்று ஷேக்ஸ்பியர் இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.” –

இந்த வரிகள் தூக்கி வாரிப் போட்டன. (தற்போது “தி இந்து” இணையத்தில் இந்த கட்டுரையின் மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் தூக்கிவிட்டார்கள். அச்சு இந்துவில் மட்டும் இருக்கிறது)

பதினாறாம் நூற்றாண்டின் சேக்ஸ்பியர் (26.04.1564 – 23.04.1616) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த செக்காவை (29.01.1860 – 15.07.1904) எப்படி சந்தித்தார்?

இந்த அநீதியை புரிய வைக்கவே தலைப்பில் 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கஜினி முகமது, 21-ம் நூற்றாண்டில் வாழும் நடிகர் ரஜினியை சந்தித்தார் என்று வைத்திருக்கிறோம். தமிழ் கூறும் நல்லுலகம் மன்னிக்க!

பிறகு “தி இந்து” செய்தியை கூர்ந்து படித்த போதே இது சொந்த புரிதலில் எழுதாத ஒரு சுட்ட எழுத்து என்பது தெரிந்தது. சரி, எங்கே சுட்டிருப்பார்கள்? ஆங்கில விக்கிபீடியாவில் பார்த்த போது அதில் சுடுமளவு “தி இந்து” அறிஞர்களுக்கு அறிவில்லை என்பது உடன் தெரிய வந்தது. பிறகு தமிழ் விக்கிபீடியாவில் பார்த்தோம்.

ஆங்கில விக்கிபீடியாவில் ஒரு உண்மை குறித்து ஆராய்ந்தால் ஒன்றுக்கு பதில் பல பத்து ‘உண்மைகள்’ இருக்கும். எது உண்மை என்று குழப்பம் வந்துவிடும். தமிழ் விக்கி பீடியாவில் அந்தக் குழப்பம் இல்லை. முழுப் பொய்யையே அறுதி உண்மை போல அடித்து விடுவார்கள். இந்த அடித்து விடுதலை செய்பவர்கள் இந்துமதவெறியர்கள். உண்மை தெரிந்த தமிழ் விக்கி பீடியா நண்பர்கள் செய்வது அறியாது திகைத்து நிற்பார்கள் என்று ஊகிக்கிறோம். இது குறித்து தனியே எழுத வேண்டும்.

சரி இரண்டிலும் இல்லை என்று ஆன பிறகு பத்து நிமிட ஆராய்ச்சியில் “தி இந்து” சுட்ட செக்கோவ்  கதையை கண்டுபிடித்து விட்டோம். தோழர் மாதவராஜின் “தீராத பக்க”ங்களில் அந்தக் கட்டுரை இருக்கிறது. “செகாவுக்கு வயது 150” எனும் அந்தக் கட்டுரை மாதவராஜின் நண்பரும் விமரிசகருமான எஸ்.ஏ.பெருமாள் எழுதியிருக்கிறார்.

இந்த கட்டுரையை “தி இந்து” அறிஞர்கள் நிச்சயம் படிக்கவில்லை. பார்த்திருப்பார்கள். பிறகு அதில் ரேண்டமாக சில பத்திகளை எடுத்து அதை சுருக்கி போட்டிருக்கிறார்கள். வழக்கமாக “மண்டபத்தில் எழுதப்படும்” கவிதைகளுக்கு கூட இடையில் மானே, தேனே என்று போட்டு ஒரிஜினாலிட்டி காட்டுவார்கள். இந்தக் கருமத்தில் அதுவும் இல்லை. சரி மூலத்தையாவது சரியாக காட்ட வேண்டாமா?

இனி சில சாம்பிள்கள்……

இது பெருமாள் சொன்னது:

“அன்டன் செகாவின் கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தாண்டு காலத்தில் தங்குதடையின்றி நானூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதிவிட்டார். 1884ம் ஆண்டு செகாவுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. அதன்பின் அவர் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அங்கு செகாவின் எழுத்துக்கள் பிரபலமடைந்து புகழ்பெற்றிருந்தார்.”

இது தி இந்து சுட்டது:

“1879-ல் நிதியுதவி கிடைத்ததால், மருத்துவம் பயின்றார். மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இவரது கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தே ஆண்டுகளுக்குள் 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.”

இது பெருமாள் சொன்னது:

“44 ஆண்டு வாழ்க்கையில் செகாவ் 24 ஆண்டுகள் எழுதியிருக்கிறார்….

செகாவ் வாழ்ந்த காலத்தில் எழுத்தாளர்களுக்கும் நாடகம் எழுதும் ஆசை தீவிரமாக இருந்தது. அவரும் நாடகங்கள் எழுதினார். “இவானோவ்” என்ற அவரது நாடகம் 1887ம் ஆண்டு மாஸ்கோவில் அரங்கேற்றப்பட்டது. நாடக ரசிகர்களுக்கு அந்த நாடகம் புரியவில்லை………

பீட்டர்ஸ்பர்க்கில் அரங்கேற்றியபோது “கடல்நாரை” நாடகம் படுதோல்வியடைந்தது. பின்பு புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் கடல் நாரை நாடகத்தை மாஸ்கோவில் மீண்டும் மேடையேற்றினார். நாடகம் பெரும் வெற்றி பெற்றது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் நட்பு ஏற்பட்ட பின்பு செகாவ் மேலும் மூன்று நாடகங்கள் எழுதினார்.மூன்றும் பெரும் வெற்றி பெற்றன….”

இது தி இந்து சுட்டது:

ஒரு கட்டத்தில் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, முழு நேர எழுத்தாளராகிவிட்டார். 44 ஆண்டுகால வாழ்க் கையில் 24 ஆண்டுகள் எழுதிக்கொண்டே இருந்தார். இவரது படைப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாடகம் தி சீகல் படுதோல்வி அடைந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற நாடக இயக்குநர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் இவரது நாடகம் மீண்டும் மேடையில் அரங்கேறி வெற்றி பெற்றது. அவருடன் நட்பு ஏற்பட்ட பிறகு, செகோவ் மேலும் மூன்று நாடகங்களை எழுதினார். அனைத்தும் வெற்றி பெற்றன.”

(ஆங்கில மொழியில் கல்வி பயின்றிருக்கும் “தி இந்து” அறிஞர்களுக்கு கடல் நாரை என்ற பெயர் தெரிந்திருக்காது. அதனால் அதை சீகல் என்று போட்டிருக்கிறார்கள்.)

இது பெருமாள் சொன்னது:

“புகழும் பணமும் மரியாதையும் செகாவுக்கு குவிந்த நேரத்தில் அவரது உடல்நலம் வேகமாகக் கெட ஆரம்பித்தது. காசநோயும் ரத்த வாந்தியும் அதிகரித்தது. அவரது கடைசி நாடகமான “செர்ரிப் பழத்தோட்டம்” 1904ல் அரங்கேறியபோது பல தடவை ரத்தமாக வாந்தி எடுத்தார். ஒரே நாளில் பல கதைகளை எழுத முடிந்த அவருக்கு ஒரு நாளில் நான்கு வரிகள் கூட எழுத முடியாமல் போய் விட்டது. ஆனால் அவரது நோயும் துன்ப துயரமும் அவரது இலக்கியப் படைப்புகளில் வெளிப் பட்டதேயில்லை. வாழ்க்கையை அதன் இயல் போடு ஒட்டியதாக நுட்பமான தகவல்களை மிக எளிமையாக எழுதினார். சுருக்கமாகவும், நகைச் சுவையோடும் மிகுந்த பரிவோடும் எழுதியிருப்பதை இன்றும் நாம் வாசித்து உணரலாம்.”..

இது தி இந்து சுட்டது:

“பணமும் புகழும் குவிந்த நேரத்தில் காசநோய் தாக்கியது. ஆனாலும் தங்கு தடையின்றி எழுதி வந்தார். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டாலும் அவை எதையும் தன் எழுத்துக்களில் அவர் கொண்டு வந்ததேயில்லை. லியோ டால்ஸ்டாய், மக்ஸிம் கார்கி ஆகியோர் இவரது நண்பர்கள்.”

இது பெருமாள் சொன்னது:

“ஊழல் குடும்பம், ஊழல் அரசு,ஊழல் சமூகம் இவற்றைச் சகித்துக் கொள்ள முடியாத வராக செகாவ் திகழ்ந்தார். மனிதகுலம் இவற்றைச் சகித்துக் கொள்வதை அவர் ஒரு போதும் ஏற்கவில்லை. அதே சமயம் அவர் தன்னை ஒரு சீர்திருத்த வாதியாகவோ, தர்மோபதேசியாகவோ எண்ணிக் கொண்டதில்லை. வாழ்க்கையில் திறமையோடு வாழ வேண்டும். எதிலும் ஒரு அளவும், அழகும் வேண்டும். அனைவரும் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. வாழ்க்கை எவ்வளவு மோசமானதாக, சாரமற்றதாக இருக்கிறது என்பதை உறைக்கச் செய்வதே தனது நாடகங்களின் குறிக்கோள் என்றும் கூறினார். அதற்காக நான் நீதிகளைப் புகுத்தவில்லை என்று கூறினார்.”

தி இந்து கொடூரமான எடிட்டிங்கில் சுட்டது:

“தன் எழுத்துகளில் சீர்திருத்தக் கருத்துகளையோ தர்ம நெறிகளையோ உபதேசம் செய்ததில்லை. திறமையோடு, எதிலும் ஓர் அளவோடும் அழகோடும் செயல்பட வேண்டும். நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதே இவரது வாழ்க்கைத் தத்துவம்.”

(அடப்பாவிகளா சுடுவதைக் கூட ஒழுங்காக செய்ய தெரியவில்லையே. இந்த பத்தியில் செகாவ் சமூக நேயமுள்ள மனிதராகவே பெருமாளால் காட்டப்படுகிறார். அதை எந்த பொருளுமின்றி ஏனா தானோவென்று எழுதி அந்த எழுத்தாளரையே கொலை செய்திருக்கிறார்கள்.

இது பெருமாள் சொன்னது:

“வாழ்க்கையில் போலித்தனத்தையும், போலித்தனமான மனிதர்களையும் செகாவ் வெறுத்தார். நாடக மேடையில் நடிகர்கள் நடிப் பதைப் பார்த்து “இந்த நடிகர்கள் இன்னும் கொஞ்சம் குறைவாக நடித்தால் நன்றாக இருக்கும்.” என்பார். மாக்சிம் கார்க்கியைக் கூட செகாவ் கண்டித்துள்ளார். “உங்கள் எழுத்தில் அடக்கம் குறைவு. இயற்கையை வர்ணிக்கும் போது உரையாடலில் குறுக்கிடுகிறீர்கள். உங்கள் வர்ணனைகளைப் படிக்கும் போது அவை இரண்டு மூன்று வரிகளில் சுருக்கமாக நறுக்குத் தெறித்தாற் போல இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்று கார்க்கியிடம் கூறியுள்ளார். ஆனால் கார்க்கியை அவர் ஒரு போதும் புறக்கணித்ததில்லை. கார்க்கிக்கு எழுதிய கடிதமொன்றில் “நீங்கள் ஒரு அற்புதக் கலைஞர், அறிஞர், வாழ்வின் விசயங்களை அற்புதமாக உணர்ந்து எழுதுகிறீர்கள்” என்று செகாவ் குறிப்பிட்டுள்ளார்.”

“செகாவின் கதைகள், நாடகங்களில் சொற்கள் சிக்கனமாய் கையாளப்பட்டுள்ளதைக் காணலாம். அவரது நாடகங்களில் “மௌனம்” என்ற குறிப்பு இருக்கும். செர்ரிப் பழத்தோட்டத்தில் மட்டும் 35 மௌனங்கள் உள்ளன. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஊழல்களையும், அராஜகங் களையும் அம்பலப்படுத்தியதால் லெனினும், ஸ்டாலினும் செகாவைப் பிற்காலத்தில் கொண்டாடினர். செகாவின் ‘ஆறாவது வார்டு’ தோழர் லெனினுக்கு மிகவும் பிடித்தமான கதையாகும்.”

இது தி இந்து சுட்டது:

போலித்தனத்தை வெறுத்தவர். வாழ்க்கையின் மிக நுட்பமான விஷயங்களை மிக எளிமையாக எழுதியவர். இவரது படைப்புகள் அதிக வார்த்தைகளில் இல்லாமல் மிகவும் சுருக்கமாகவும் நகைச்சுவையோடும் இருக்கும்.”

(போலித்தனத்தை வெறுத்தவர் என்ற வார்த்தைகளுக்கு பொருள் தெரிந்திருந்தால் இப்படி சுட முடியுமா? இல்லை ஒரு விசயத்தை புரிந்து கொண்டு சுருக்கமாக எழுத தெரிந்திருந்தால் இப்படி செகாவை குற்றுயிரும் கொலையுயிருமாய் சிதைத்திருக்கமுடியுமா?)

இது பெருமாள் சொன்னது:

சேக்ஸ்பியர்
சேக்ஸ்பியர்

“டால்ஸ்டாய், செகாவைப் பற்றி “எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உனது நாடகங்கள் தூக்கியடித்து விடுகின்றன. ஷேக்ஸ்பியர் வாசகனை எங்கேயோ அழைத்துச் செல்வது போல் உணர முடிகிறது. ஆனால் உனது படைப்புகளோடு எங்கே போவது? இங்கேதான் இருக்க வேண்டும்” என்று செகாவிடம் கூறினார். அதே டால்ஸ்டாய் “இலக்கிய உத்தியிலும் உருவ அமைப்பிலும் செகாவை மிஞ்சக்கூடியவர்கள் எவருமில்லை அவர் ஈடு இணையற்றவர்” என்றும் கூறினார். டால்ஸ்டாய் மணிக்கணக்காகப் பேசுவதை செகாவ் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். இந்தச் செகாவ் ஒரு நாத்திகன் என்று கூறிவிட்டுப் போவார்.”

இது தி இந்து கொலை செய்து கொடூரமாக சுட்டது:

“‘இலக்கிய உத்தியிலும், வடிவமைப்பிலும் செகோவை மிஞ்சக்கூடியவர்கள் யாருமே இல்லை,” என்று ஷேக்ஸ்பியர் இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். வார்ட் நம்பர் 6, தி லேடி வித் தி டாக் உள்ளிட்ட மொத்தம் 568 சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார்.”

____________

நண்பர்களே,

ராயல் விக்டோரியன் மொழியில் படித்து தென்னிந்தியாவிலேயே தாங்கள்தான் அறிவுள்ளவர்கள் என்று “தி இந்து”வில் எழுதுபவர்களும், படிப்பவர்களும் கருதிக் கொள்கிறார்களே, அதன் யோக்கியதை எப்படி இருக்கிறது பாருங்கள்!

ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகரை தமிழ் “தி இந்து” பத்திரிகை மதிக்கும் இலட்சணம் இதுதான். இது ஏதோ இந்த துணுக்கை எழுதிய ராஜலட்சுமி சிவலிங்கத்தின் தவறாக நாம் பார்க்கவில்லை. “தி இந்து” இதழின் ஆசிரியருக்கே கூட மாஸ்கோ எங்கு இருக்கிறது, சேக்ஸ்பியர் எந்த மொழியில் எழுதினார், செகாவ் எந்த காலத்தில் வாழ்ந்தார் போன்ற பொது அறிவு விவரங்கள் தெரியுமா என்பது சந்தேகமே.

பொது அறிவே இருக்காது என்றால் இவர்கள் வரலாறு, அறிவியல், அரசியல் போன்ற துறைகளின் அரிச்சுவடி கூட அறிந்திருக்கமாட்டார்கள். செகாவை விடுங்கள், இதே தேதியிட்ட “தி இந்து”வில் 11-ம் பக்கத்தில் வந்த செய்தியைப் பாருங்கள்.

“மேடைகளில் ஆங்கிலத்தில் சரளமாக பேச மோடிக்கு உதவும் அதிநவீன ‘டெலிபிராம்டர்’ “ எனும் செய்தியை படியுங்கள். ஆங்கிலம் சரளமாக பேச தெரியாத மோடி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களைப் போல கண்ணுக்கு முன்னே ஓடும் பெரிய எழுத்துக்களை படித்து உரையாற்றுகிறாராம். அவர் படிக்கும் கருவியை நாம் பார்க்க முடியாது என்பதால் அவர் நம்மை பார்க்கிறார் என்று நாம் நினைக்கிறோம். இது செய்தி.

இந்த செய்தியை கண்ணோட்டமின்றி இந்த அளவில் போட்டால் கூட தொலையட்டும் சனியன் என்று விட்டுவிடலாம். மாறாக இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மோடி முன்னணியில் இருக்கிறார் என்று அடித்து விடுகிறார்கள். இது செய்தியல்ல, கண்ணோட்டம். அதாவது மோடிக்கு ஜால்ரா அடிக்கும் வெட்கம் கெட்ட தனம்.

ஆங்கிலம் தெரியாது என்று காட்டினால் அது ஒன்றும் பிழையில்லை. மாறாக அப்படி ஒரு பிரமையைக் காட்டி ஷோ பண்ணும் மோசடியான மனிதராக மோடி திகழ்கிறார். கோட்டு சூட்டிலேயே தனது பெயரை போட்டு ரசிக்கும் அந்த நார்சிச மனிதனைக் கண்டிக்காமல் அல்லது அற்பத்தனமாக நடக்கிறார் என்று கூட பேசாமல் ஏதோ சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டு டெக்னாலஜியில் பட்டையைக் கிளப்புகிறார் என்று ஏன் எழுத வேண்டும்?

ஆகவே விளம்பரம் தரும் முதலாளிகள், அரசு, ஆளும் கட்சிகளின் தயவில் பிழைக்கும் இந்த கனவான்களுக்கு சொந்த அறிவு என்பது எப்படி இருக்க முடியும்?

கோயம்பேட்டில் கருவாடு விற்பதற்காக இவர்கள் நடத்திய அழுகுணி ஆட்டத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறோம். அதில் பெரும்பான்மை மக்களின் கருவாட்டை விட சில பத்து மூக்குகளின் பிரச்சினையே இவர்களை அழச் செய்கிறது.

நம்மைப் போன்றவர்களுக்கு செகாவை படிக்கவும் பிடிக்கவும் தேவை இருக்கிறது. இவர்களுக்கு? “அஜித் படத்துக்கு வந்த மிரட்டல் கடிதம்” என்று அரைப்பக்கத்தில் செய்தி போட்டு தமிழுக்கு சேவை புரியும் “தி இந்து” கனவான்களுக்கு செகாவுக்கும் செக்குமாட்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியும்?

சரி, போகட்டும் விடுங்கள்!

உலகம் போற்றும் ஒரு எழுத்தாளரின் பிறந்த நாளில் அவரை எழுத்தில் கொலை செய்த “தி இந்து” அதற்கு பிராயச் சித்தம் செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட மூன்றில் ஒன்றை தெரிவு செய்யலாம்.

1.   இளம் வாசகருக்கு செகாவைப் பற்றி அழகாக அறிமுகம் செய்த தோழர் பெருமாள் மற்றும் மாதவராஜுக்கு தலா ஒரு இலட்சம் அபராதத் தொகை கட்ட வேண்டும். இந்த தொகை “தி இந்து” சேர்மேன், ஆசிரியர், இலவச இதழ் ஆசிரியர், நடுப்பக்க ஆசிரியர் போன்ற இதர ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து அளிக்க வேண்டும்.

2.   அபராதம் அதிகம் என்று கருதினால் வினவு அலுவலகத்திற்கு ஏதேனும் ஒரு  அதிகாலையில் வந்து அனைத்து ஆசிரியர்களும் 100 தோப்புக் கரணம் போடவேண்டும்.

3.   இதுவும் சரியில்லை என்றால் மூன்று நாட்களுக்கு “தி இந்து” பத்திரிகையை நிறுத்த வேண்டும்.

இப்படியெல்லாம் நடக்காமல் செகாவை செதுக்கி எழுதிய அந்த நபரை திட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவும் அவர்கள் போகலாம். நம்மைப் பொறுத்த வரை எழுதியவரை விட எடிட்டரையே குற்றம் சாட்டுகிறோம்.

“தி இந்து” தமிழ் இதழ் வெளியான போது உலக அரசியலை “குலோப் ஜாமூன்” என்று பா.ராகவன் எழுதிய தொடரை பார்த்த போதே குமட்டிக் கொண்டு வந்தது. டவுண்லோடு பதிப்பகத்திலிருந்து பல்வேறு டவுண்லோடு அதுவும் அமெரிக்க பிரச்சாரக் குப்பைகளை டன் டன்னாக தரவிறக்கி வரலாறு என்று உளறும் ஒரு நபரை போய் உலக அரசியலை எழுத வைக்கிறார்களே என்று அதிர்ச்சியடைந்தோம்.

பத்திரிகை, பத்திரிகையாளர்கள் என்ன தரத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. உண்மையில் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற கூடிய அறிஞர்கள், செய்தியாளர்கள் அனைவரும் வெளியே வேறு வேறு வேலையில் இருக்கிறார்கள். விளம்பரக் கம்பெனியில் பிழைப்பவர்கள் பத்திரிகைகளை நடத்துகிறார்கள்.

எனினும் செகாவுக்கு இழைக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் அநீதியை அம்பலப்படுத்தியிருக்கிறோம் என்பதுடன் முடித்துக் கொள்கிறோம்.

வினவில் வெளிவந்த செகாவ் சிறுகதை: சிறுகதை: எழுத்தரின் மரணம்! – ஆன்டன் செகாவ்

பதிவர் தீபா மொழிபெயர்த்த செகாவ் சிறுகதைகள்:

 1. காலையில் இதைப் படித்த போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இது ஏதோ copy and pasteல் நடந்த editing error ஆக இருக்கும் என்று யூகித்தேன். சரிதான்…

 2. ஒரு ஆண்டுக்கு முன் UGC -NET தேர்வு இடை வேளையில் தினமணியில் வேலை செய்யும் கால் ஊனம் உற்ற ஒரு மனிதரை கண்டு பேச முடிந்தது. மிகவும் தன்னம்பிக்கையான மனிதராக தெரிந்தார். தினமணி தலையங்கம் மற்றும் சிறப்பு கட்டுரைகள் தவிர்த்து மீதம் உள்ள அனைத்தும் செய்திகளாகவே வெளியிடும் ,செய்திகளில் சொந்த கருத்துகளை வெளியிடாது .., அப்படி செய்திகளுடன் சுய கருத்துக்களை வெளியிடுவது தவறான முறை என்று கூறினார். ஆனால் தமிழ் ஹிந்து செய்தித்தாள் அத்தகைய தவற்றை செய்கின்றது என்றார். பெரும்பாலான அரசியல் தொடர்பான செய்திகளில் தமிழ் ஹிந்து செய்தித்தாள் தனது சுய கருத்துக்களை சேர்த்து வெளியிடுவதை நாம் தினம் தினம் வாசிக்கும் போது காணமுடியும். தமிழ் ஹிந்து செய்தித்தாள் உங்களுக்கு[தினமணிக்கு ] போட்டியா என்று கேட்டேன். அதற்கு அவர் தமிழ் ஹிந்து செய்தித்தாள் போன்று வேறு ஒன்று இருக்கின்றதே அதற்கு பெயர் என்ன என்று சிரித்துக்கொண்டே கேட்டார் ? நான் உடனடியாக தினமலர் என்றேன் . ஆமாம் அவர்களுக்கு தான் தமிழ் ஹிந்து செய்தித்தாள் போட்டியாக உள்ளது என்றார். செய்தித்தாளும் அல்லது வார இதழ் ,மற்றும் தொலைகாட்சியும் இரண்டுமே கொண்ட சன்
  மற்றும் புதிய தலைமுறை குழுமங்கள் பற்றி பேச்சு மாறியது. இவர்கள் தனிதனியாக செய்தி சேகரிக்கும் நிருபர்களை வைத்து உள்ளார்களா ? அல்லது ஒரே நிருபர் இரண்டு ஊடகத்துக்கும் செய்தி சேகரிப்பாரா என்று கேட்டேன் ? அவரும் நிலையை விளக்கினார். மேலும் நிருபர்கள் சேகரிக்கும் செய்திகளை சப் எடிட்டர்கள் தரக்கட்டுப்பாடு செய்வார்கள என்று பலவாறாக விளக்கியவர்…….. மணி அடித்தவுடன் தேர்வுக்கு சென்றேம்.

  இந்த விடயத்தில் பெருமாள் மற்றும் ஹிந்து இருவருமே ஒரே ஆங்கில புத்தகத்தை/ இணையதளத்தை பார்த்து தமக்கு தேவையான முறையில் மொழிமாற்றம் செய்து இருக்க வேண்டும் என்று நினைகின்றேன்.

 3. மாதவராஜ் கட்டுரையை அச்சுபிச்சு ரீதியில் சுட்டது பற்றிய விமர்சனம் நியாயம். ஆனால், அதற்காக, அப்பத்திரிகையின் ஆசிரியர்கள் சர்வ மடையர்கள் என்ற ரீதியிலும், அவர்கள் உங்கள் முன்பு தோப்புக்கரணம் போட வேண்டுமென்றும் ஏமநாத

  பாகவதர் ரேஞ்சில் பேசுவது அருவருப்பாக இருக்கிறது.

  சரி, உங்கள் அறிவியல் கட்டுரைகள் ஆழமாக படித்து உணர்ந்தபின் எழுதப்படுகின்றனவா? ஹிக்ஸ் போஸான் பற்றி எழுதினீர்களே! ஸ்டாண்டர்ட் மாடல் பற்றியும், அதில் ஹிக்ஸ் போஸானின் முக்கியத்துவம் பற்றியும் கற்றுணர்ந்தாகி விட்டதா?

  அல்லது விக்கிபீடியா, பத்திரிகை செய்தி ஆகியவற்றில் இருந்து சுட்டு எழுதினீர்களா? ‘கடவுள் துகள்’ என்ற டப்பாங்குத்து வார்த்தை பிரயோகத்தை தவிர அது பற்றி உமக்கு ஈர்ப்பு உண்டா?

  பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றி எந்தளவு ஆழமாக படித்துள்ளீர்கள்? அப்படி படித்த பின்னர் தான் கீழே உள்ள கட்டுரை எழுதினீரா? அல்லது ‘Darwain for dummies’ என்ற ரீதியில் ஏதாவது படித்து விட்டு எழுதினீரா?

  https://www.vinavu.com/2014/06/19/the-genius-of-charles-darwin-documentary-intro/

  இந்தக் கட்டுரையில் இமாயலப் பிழை செய்துள்ளீர்களே ஐயா!

  // பிற்காலத்தில் ஓவன் பறவையும் மீனும் சேர்ந்த கலவையாக இருந்த ஆர்ச்சியோபெட்ரிக்ஸ் (Archaeopteryx) புதைபடிவத்தை கண்டுபிடித்தார். //

  முதலில் இரு சிறு பிழைகள். அது “ஆர்ச்சியோபெட்ரிக்ஸ்” அல்ல. “ஆர்க்கியாப்டெரிக்ஸ்” (https://www.youtube.com/watch?v=S6yG_P3mKpE). அடுத்து ரிச்சர்ட் ஓவன் ஆர்க்கியாப்டெரிக்ஸ் படிமம் எதையும் கண்டுபிடிக்கவில்லை.

  யாரோ கண்டுபிடித்து இவரிடம் வந்து சேர்ந்த படிமம் என்ன ஏது என விவரித்தார். He did not discover any fossils, but only described them.

  போகட்டும். அது என்ன “மீனும், பறவையும் சேர்ந்த கலவை” என சொல்லி குண்டு போடுகிறீர்கள். பல்லிகள், டைனசார்கள், பறவைகள் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இவைகளின் தொடர்பை சுட்டிக் காட்டும் transitional படிமம் அது.

  மீனுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? மீன் என்ன ஜாதி? பல்லி என்ன ஜாதி? பறவை என்ன ஜாதி? மீனும், பறவையும் கலந்த படிமம் ஒன்று கிடைத்தால் அறிவியல் உலகம் அல்லோகலப்படும். பரிணாம வளர்ச்சியின் முக்கிய கோட்பாடுகளை மீளாய்வு

  செய்ய வேண்டி இருக்கும். சாதாரண மனிதரின் கட்டுரை என்றால் இதை தட்டச்சுப் பிழை என்று சொல்லி முடித்து விடலாம். ஏமநாத பாகவதரை அப்படி விட முடியுமா?

  அறிவியல், சமூகவியல், வரலாறு, பொது அறிவு, அரசியல் என எல்லாம் கரைத்து குடித்து மூளை வீங்கிப் போன ஏமநாத பாகவதர் தமிழின் தலையாய நூல்களில் ஒன்றான திருக்குறளை படிக்காதது வருத்தம் தருகிறது. அதில் நமது பாகவதருக்காகவே

  ஒரு வரி உள்ளது.

  அடக்கம் அமரருள் உய்க்கும்.

  ——————————————

  உங்களது ஏமநாத பாகவத பாணி கொக்கரிப்பு தந்த அதிர்ச்சியில் கோவமாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும். அறிவியல் பற்றி தமிழில் நீங்கள் எழுதுவது எனக்கு உண்மையில் மிகுந்து மகிழ்ச்சி தருகிறது.

  • //மாதவராஜ் கட்டுரையை//

   திருத்தம் : மாதவராஜ் இணைய தளத்தில் எஸ்.ஏ.பெருமாள் அவர்களால் எழுதபட்ட செகாவை பற்றிய கட்டுரையை………

  • நன்றி தமிழ். நான் மூல கட்டுரை யார் எழுதியது என்பதை சரியாக கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.

  • வெங்கடேசன் சார்,
   வினவு சைட்ட நீங்க ஓசியில படிக்கிறீங்க, இன்டுவ காசு கொடுத்து படிக்கிறீங்க. நீங்க ஓசினாலும் வினவு சைட்டுல நியூசும், வியூசும் பொறுப்புணர்வோட எழுதுராங்க. இவங்க ஆபிசு வெறும் டாய்லட் அளவுதான்னு டிஎன்டிஜே ஆளுங்க கிண்டல் செஞ்சாங்க. இன்டு ஆபிசுக்கு எல்லா வசதி, நூலகம்,எழுதுரவனுக்கு சேலரின்னு ஒன்னு பாக்கி கிடையாது.ஆனா அவங்க பொறுப்பு உங்கள மாதிரி அப்பாவிங்க இன்னோசென்ட வெச்சு சந்தி சிரிக்கிது.

   இப்பக்கூட இங்க வந்து ஏமநாத பாகவதர்னு சாபம் போட உங்களால முடியுது. இதே மாதிரி இன்டுவுல போய் போட்டு பாருங்க பாப்போம். நீங்க போடலேன்னாலும் பரவாயில்ல உங்கள மாதிரி நல்லவங்களுக்காக இன்டு அவங்க பண்ண தப்ப பத்தி ஒரு சின்ன எஸ்கியூசாவது கேட்டிருக்கலாம்ல. இல்லையே ஏன்?
   அங்கதான் உங்கள நினைச்சு பாவமா இருக்கு!

   டெலிபிராம்டர டெக்னாலஜியில மோடி தூள்னு நியூசு போடுறாங்கன்னா அது உங்கள மாதிரி நல்லவரங்களா வெச்சுத்தான் சார்!
   என்னவோ போ மாதவா, அப்பாவிங்கள நீதான் காப்பாத்தனும்!

   • நண்பர் நசீம் இக்மத்,
    அது அதற்கு அதனதன் இடம் உண்டு. இந்துவின் தொழில் வேறு. வினவின் பணி வேறு. புரிந்துதான் இரண்டையும் அணுகிறோம். சமயங்களில், வினவு கூட ஆங்கில இந்து பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டுகிறது அல்லவா?

    // இப்பக்கூட இங்க வந்து ஏமநாத பாகவதர்னு சாபம் போட உங்களால முடியுது

    உண்மைதான். இப்படி எல்லாம் அவர்களை திட்ட கூட வேண்டாம். மற்ற சிலரை கிண்டலடித்த எனது மறுமொழிகள் சிலவற்றை கூட வெளியிடவில்லை. மாறாக, வினவு எனது மறுமொழிகளில் ஒரு வார்த்தையை கூட மட்டிறுத்தியதாய் நினைவில் இல்லை.

 4. வெங்கடேசா நீ சூப்பர் வேக்காடு__.தமிழ் இந்து பத்திரிக்கை செக்காவ் பற்றிய செய்திகளை சுட்டிருக்கிறது.அதை மறைத்திருக்கிறது.வெட்கக் கேடு.ஷேக்ஸ்பியர் செக்காவைப் பாராட்டினார் என்று எழுதி அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறது.திருட்டுத் தனமாக வலைத்தளத்தில் திருத்திவிட்டு பத்திரிக்கையில் தவறுக்கு வருந்துகிறோம் என்றுகூடப் போடவில்லை.மானக்கேடு.முண்டம் முண்டமாக எழுத்துப் பிழை வருகிறது.எடிட்டர் என்ன செய்துகொண்டிருக்கிறார்.தகுதியற்றவர்களை வைத்துக்கொண்டு வாசகர்களின் ஏமாளித்தனத்தை நம்பி முதலீடு போட்டுக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது ம.மகாவிச்னு.இதை சுட்டிக்காட்டினால் பொத்துக் கொண்டு வருகிறதேன் .வினவு பற்றிய பதிவுப்படி அது உச்சரிப்பு மற்றும் சிறு தகவல் பிழை தானே.தவறுகளை ஒப்புக்கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் வினவு எப்போதும் தயராகத்தானே இருந்து வருகிறது.ஒரு கொத்து மசாலாப் பத்திரிக்கைக்கு இவ்வளவு வக்காலத்தா?புழுக்கத்தனமா கொஞ்சம் பேர் இப்பிடித் திரியிறீங்க.

  • “மீனும்-பறவையும் கலந்த” என்பது தகவல் பிழை எல்லாம் இல்லை. “செக்காவை ஷேக்ஸ்பியர் பாராட்டினார்” என்பதற்கு ஈடான பிழை அது! பல்லிகள்-டைனசார்கள்-பறவைகள் ஆகியவற்றின் தொடர்பு பற்றியும், பறவைகளில் பரிணாம வளர்ச்சி பற்றியும், பறத்தல் எவ்வாறு உருவானது என்பது பற்றியும் சுட்டிக்காட்டும் படிமம் அது. அது மீன்-பறவை கலந்த கலவை என்றால் கதை டமால் ஆகிவிடும். சீதை ராவணனின் தங்கை என்றால் (வால்மீகி) ராமாயணம் டமால் ஆவது போல! அல்லது, தவளையும்-மனிதனும் கலந்த விலங்கு கண்டறியப்பட்டுள்ளது என சொல்வதற்கு ஈடானது அது! பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றி விக்கிபீடியா அளவு விஷய ஞானம் உள்ளவர்களுக்கு கூட இது புரியும். இது தவிர இரண்டு உதிரி பிழைகளும் சுட்டிக்காட்டினேன். மூன்றும் ஒற்றை வரியில்! (இந்த மீன்-பறவை பிழையை பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டினேன். திருத்தவில்லை. அப்படியேதான் உள்ளது).

   செக்காவ், ஷேக்ஸ்பியர் என்றெல்லாம் படித்தறியாமல் சும்மா இணையத்தை மேய்ந்து அந்த கட்டுரை எழுதப்பட்டது இந்துவின் கட்டுரை. சரி. ஹிக்ஸ் போஸான் பற்றிய வினவின் கட்டுரை அணு இயற்பியல் பற்றி ஆழக் கற்றுணர்ந்தபின்னர் தான் எழுதப்பட்டதா? பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றி கட்டுரை எழுதும் முன் இது தொடர்பாக எந்தளவு ஆழமாக கற்றனர்?

   இந்து பத்திரிகை ஆசிரியர்கள் வினவு அலுவலகத்தில், காலை நேரத்தில் வந்து தோப்புகரணம் போட வேண்டும். சரி. அப்படியானால், “மீனும்-பறவையும் கலந்த படிமத்தை ஓவன் கண்டுபிடித்தார்” என எழுதியதற்காக, வினவு ரிச்சர்ட் ஓவன் சமாதி முன்பு மொட்டை போட்டு பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என சொல்லலாமா?

   —————————————————————–

   சில விஷயங்களை சொல்லி முடித்துக்கொள்கிறேன்.

   இந்து பத்திரிகை கட்டுரை சுட்ட காதை பற்றி விரிவாக எழுதியதில் எனக்கு விமர்சனம் ஏதுமில்லை.

   அப்பத்திரிகை ஆசிரியர்களை தோப்புக்கரணம் போடச்சொல்லியும் அப்பத்திரிகை ஆசிரியர்கள் சர்வ மடையர்கள் (ஷேக்ஸ்பியர் என்ன மொழியில் எழுதினார் என்பது கூட அவர்களுக்கு தெரியாதாம்) என்றும் ஏமநாத பாகவதர் போல கொக்கரிப்பதில் தான் எனக்கு அருவருப்பு வருகிறது.

   அப்படி என்ன அப்பாடக்கரா வினவு?

   அடுத்து, அந்த கட்டுரை ஆசிரியரின் அறிவியல் ஈடுபாட்டை நான் உணர்கிறேன். மீனுக்கும், பறவைக்கும் வித்தியாசம் தெரியாமல் அவ்வரியை எழுதிவிட்டார் என என்று நான் கருதவில்லை. அது கை தவறி நிகழ்ந்த தட்டச்சு பிழை என்றுதான் நினைக்கிறேன்.

   அடுத்து, ஒன்றை பற்றி ஆழமாக அறிந்தபின்னர் தான் எழுத வேண்டும் என நான் நினைக்கவில்லை. அப்படி சொல்லி விட்டால் கிட்டத்தட்ட நாம் எல்லாருமே கிட்டத்தட்ட எல்லா பொழுதும் சூயிங்கம் மென்று கொண்டு சும்மா இருக்க வேண்டியது தான். கற்றதில் பிடித்ததை, கற்ற அளவு பகிர்ந்து கொள்கிறோம்.

   சுருங்கக் கூறின், இந்துப் பத்திரிகை ஆசிரியர்கள் ஒன்றும் முற்றும் முழுதுணர்ந்த அப்பாடக்கர்கள் இல்லை. வினவும் முற்றும் முழுதுணர்ந்த அப்பாடக்கர் இல்லை. எனவே, “அடக்கம் அமரளுள் உய்க்கும்” என்பதை நினைவில் வைப்போம்.. எனது விமர்சனத்தின் மையம் இது.

   அவ்வளவுதான்.

  • அப்புறம், செங்கதிர்செல்வன், “மீன்-பறவை” மேட்டரை “தகவல் பிழை” என்ற அளவில் இந்த விஷயத்தில் புரிதல் கொண்டுள்ள நீங்கள் என்னை “டா” போட்டு ஒருமையில் பேசுகிறீர்களே! இது ஓவரா தெரியலையா உங்களுக்கு?

  • என்ன இது செங்கதிர்செல்வன் நண்பரே ! வெங்கட் மீதான உங்கள் விமர்சனம் மிக்க சரியென்றாலும் ” டா ” தேவை இல்லை அல்லவா ? அவரும் வினவில் தம் ஆசிரியர்களை பற்றி கட்டுரை எழுதிய , வினவில் ஓரளவிற்காவது முற்போக்காக பின்னுட்டம் எழுதுகின்ற நம்மை போன்ற சக மனிதர் தானே?

   //வெங்கடேசா நீ சூப்பர் வேக்காடுடா.//

  • நண்பர் செங்கதிர்செல்வன்,

   நண்பர் வெங்கடேசன் வினவின் மீது வைத்த விமர்சனத்திற்கு தாங்கள் சரியான முறையில் எதிர்வினையாற்றுவது தான் முறையானது என்று நினைக்கிறேன். ஏனெனில் வெறும் வார்த்தை விளையாட்டுகள் உண்மையில் பதிவின் நோக்கத்தை(அது எதுவானாலும் சரி) கெடுத்து விடும்.

   நன்றி.

  • யோவ்..செங்கதிர்..உம்மால மன்னிப்பு கேட்க முடியுமா முடியாதா? இல்ல ஒரு 10 தோப்புக்கரணமாவது போட முடியுமா? முடியாதா? ஊருக்குத்தான் உபதேசமா?

 5. வார்த்தைகளை பயன்படுத்துவதில் நாகரீகமற்றது, மரியாதையை குறைவானது என்பதெல்லாம் படிக்காதவர்கள், படித்தவர்கள், மெத்தப்படித்தவர்கள், ரொம்ப மெத்தப்படித்தவர்கள், நுட்பமாக கவனித்து படித்தவர்கள், குறிப்பாக படித்தவர்கள் என்று பலரும் வெவ்வேறு விதமாக பயன்படுத்துவது என்ற பட்டியல் நீளமானது. ‘டா’ என்ற வார்த்தை மேலே சொன்ன பட்டியலில் உள்ள பலருக்கும் மேலோட்டமாக பார்த்தால் மரியாதைக்குறைவாக தான் தோன்றும். இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஏன் இன்றளவும் அந்த வார்த்தை பெரும்பான்மை உழைக்கும் மக்களை நோக்கி சர்வ சாதாரணாமாக திட்டுவதற்காக மட்டுமல்ல சாதாரணமாக அழைப்பதற்கே குறிப்பாக வயதில் மூத்தவர் என்ற பாகுபாடுகளை பார்க்காமல் பயன்படுத்தபடுகிறது. ஆனால் இங்கு இந்த வார்த்தைக்காக சண்டமாருதம் செய்யும் திரு.வெங்கடேசன் உள்ளிட்ட அனைவருக்கும் அதே திரு.வெங்கடேசன் சொன்ன பதிலில் அவர் எழுதிய வார்த்தைகளை எத்தகைய நாகரீகத்தை கடைபிடித்தார்? ‘டா’ என்ற வார்த்தைக்கும் மேலான வார்த்தைகள் அவரின் ‘நாகரீக’ விமர்சனத்தில் இல்லையா? என்பதை திரு. வெங்கடேசன் உள்ளிட்ட அவர்க்காக மன்னிப்பு கேட்க சொல்லும் நண்பர்களும் பதிலளிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன்.

  அவர் பயன் படுத்திய வார்த்திகள் கீழே!

  #### ‘ஏமநாத பாகவதர் ரேஞ்சில் பேசுவது அருவருப்பாக இருக்கிறது’.

  ‘‘கடவுள் துகள்’ என்ற டப்பாங்குத்து வார்த்தை பிரயோகத்தை தவிர அது பற்றி உமக்கு ஈர்ப்பு உண்டா?’

  ‘பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றி எந்தளவு ஆழமாக படித்துள்ளீர்கள்?
  அல்லது ‘Darwain for dummies’ என்ற ரீதியில் ஏதாவது படித்து விட்டு எழுதினீரா?’

  ‘ஏமநாத பாகவதரை அப்படி விட முடியுமா?’

  ‘அறிவியல், சமூகவியல், வரலாறு, பொது அறிவு, அரசியல் என எல்லாம் கரைத்து குடித்து மூளை வீங்கிப் போன ஏமநாத பாகவதர்’

  ‘உங்களது ஏமநாத பாகவத பாணி கொக்கரிப்பு’ ####

  • எனது விமர்சனத்தின் மையத்தை விட்டுவிட்டு எவை நாகரீக-அநாகரீக வார்த்தைகள் பற்றி சொல்லாராய்ச்சி செய்வதில் எனக்கு விருப்பமில்லை.

  • மீண்டுமொருமுறை எனது மறுமொழிகளை படித்துப் பார்த்தேன். முதலாவது மறுமொழியில் வார்த்தைகள் தடித்து உள்ளன. இரண்டாவது மறுமொழி அதே கருத்துகளை சற்று தணிந்த முறையில் கூறியுள்து.

   கோவத்தில் வார்த்தைகள் தடித்தமைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

   எனது முதல் மறுமொழியின் இறுதியிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

   // உங்களது ஏமநாத பாகவத பாணி கொக்கரிப்பு தந்த அதிர்ச்சியில் கோவமாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும். அறிவியல் பற்றி தமிழில் நீங்கள் எழுதுவது எனக்கு உண்மையில் மிகுந்து மகிழ்ச்சி தருகிறது. //

   முந்தைய மறுமொழியில் சொல்லாராய்ச்சி பாணியில் விவாதம் தொடராமல் இருந்தால் நலம்.

   • அன்புள்ள வெங்கடேசன்,

    முதலில் நண்பர் செங்கதிர் செல்வன் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகத்திற்கு எனது கண்டனங்கள்.

    அடுத்து, உங்களது மறுமொழிகளின் சாரத்திற்கான எனது பதில் – முடிந்த வரை சுருக்கமாகவும்.

    நாங்கள் கம்யூனிஸ்டுகள். உங்களைப் போல் ஏதேனும் ஒரு துறை சார்ந்த விஞ்ஞானிகள் அல்ல. மார்க்சிய கோட்பாடுகள் என்பது சமூக வளர்ச்சி பற்றிய அறிவியல் விதிகள். சமூகத்தில் பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் மாற்றங்களை வளர்ச்சி குறித்த இயக்கவியல் விதிகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்கிறது மார்க்சியம்.

    ஒரு சமூகத்தின் பரிணாமம், அதன் வளர்ச்சிக் கட்டங்கள், வளர்ச்சி விதிகளை ஆய்வு செய்து அதன் தற்போதைய நிலை மற்றும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வேண்டிய வேலைகளைச் செய்கிறது கம்யூனிஸ்டு கட்சிகள்.

    விஞ்ஞானம் அல்லது வேறு துறைகளின் வளர்ச்சி என்பதை ஒரு ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தில் மார்க்சியம் ஆய்வு செய்கிறது. இது ஒரு சோதித்து உறுதி செய்யப்பட்ட ஆய்வுக் கண்ணோட்டம்.

    அந்த அடிப்படையில் தான் கடவுள் துகள் போன்ற விஞ்ஞானத் துறை தொடர்பான கட்டுரைகள் எழுதப்படுவதாக எடுத்துக் கொள்கிறேன். இக்கட்டுரைகளில் நீங்கள் பல்கலைக்கழகங்களிலோ அல்லது விஞ்ஞானக் கருத்தரங்குகளிலோ வைக்கப்படுபவைகளில் உள்ளதைப் போன்ற உள்ளடக்கங்களைத் தேடி ஏமாற்றமடைந்திருப்பதாக தெரிகிறது.

    விஞ்ஞான விவரங்களை புதிதாக கண்டுபிடித்து எழுத வினவு நண்பர்கள் விஞ்ஞானிகளும் அல்ல – விஞ்ஞான விவரங்களை மறுவுற்பத்தி செய்து விளக்க பேராசிரியர்களும் அல்ல. இவர்களின் பணி என்பது அத்துறையின் வளர்ச்சி என்பது எப்படி முன்னோக்கியதாக உள்ளது என்பதையும், சமூகத்தில் அந்த வளர்ச்சி (அல்லது ஒரு புதிய கண்டுபிடிப்ப்பு) எந்தவிதமான தாக்கத்தை செலுத்துகிறது என்பதையும் ஆய்வு செய்வதே என்பது எனது புரிதல்.

    எனவே என்னைப் பொறுத்தவரை வினவின் விஞ்ஞான கட்டுரைகளில் விஞ்ஞான விவரங்களைத் தேடி சோர்ந்து போவதை விட(அதற்கு நிறைய சைன்ஸ் ஜர்னல்கள் உள்ளன – உங்களுக்கே கூட தெரிந்திருக்கும்), அக்கட்டுரைகளின் கண்ணோட்டத்திற்காகவே படிக்கிறேன்.

    முற்றிலும் தவறான விவரங்களின் மேல் ஒரு சரியான கண்ணோட்டம் நிற்க முடியாது என்பதை ஏற்கிறேன். அதே நேரம் விஞ்ஞானிகளாக இல்லாத சாதாரணர்களான வினவு தோழர்கள் சில வேளைகளில் விவரங்களைத் தொகுப்பதில் நீங்கள் சுட்டிக்காட்டியதைப் போன்ற சிறு பிழைகள் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதையும் புரிந்து கொள்கிறேன்.

    ஒரு முழுமையில் இருந்து பார்க்கும் போது, எழுதப்படும் கட்டுரைகளில் (விஞ்ஞான) விவரங்களின் சாராம்சத்தை புரிந்து கொண்டு அதனடிப்படையில் வினவு எழுதுகிறதா என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் கண்ணோட்டங்களை நோக்கி எனது கவனத்தைத் திருப்பிக் கொள்கிறேன். என்னைப் பொருத்தமட்டில் விவரங்களில் வினவின் பலம் இல்லை – அதன் கண்ணோட்டமே முதன்மையான செல்வாக்கு செலுத்துகிறது.

    இந்து கட்டுரையைப் பொருத்தமட்டில், அந்தக் கட்டுரை இந்து பத்திரிகையை நோக்கி செய்யப்பட்ட கிண்டல் என்பதை விட அதை எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக் கொள்ளும் மத்தியதர வாசகர்களை நோக்கி செய்யப்பட்ட கிண்டல் என்பதாக நான் புரிந்து கொள்கிறேன். நீங்கள் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு இப்படி ஏமாற்றுகிறானே, காசைக் கொடுத்த நீங்கள் விழித்துக் கொள்வது எப்போது – என்பது போன்ற ஒரு தொனியையே நான் காண்கிறேன்.

    நன்றி.

   • அன்புள்ள மன்னாரு,
    உங்களது நிதானமான பதிலுக்கு நன்றி. வினவு, செங்கதிர் செல்வன் மற்றும் என்னைப் போலன்றி நாகரீகமாக பேசியுள்ளீர்கள்.

    வினவு பற்றிய உங்கள் விளக்கம் எனக்கு ஏற்கும்படி உள்ளது. அறிவியல் அதன் நேரடி நோக்கம் இல்லை என்பதால், விவரமான கட்டுரைகளை எதிர்பார்க்க முடியாது என்பது புரிகிறது. அந்த பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றிய கட்டுரையில் எனது மறுமொழியும் இந்தக் கருத்தை ஒத்து உள்ளது. மீன்-பறவை பிழையை சரி செய்வதற்காக சுட்டிக் காட்டியதற்கு மேல் பேசவில்லை என்பதையும் நோக்குங்கள். வினவின் அறிவியல் கட்டுரைகளை குறை கூறுவதல்ல என் நோக்கம்.

    https://www.vinavu.com/2014/06/19/the-genius-of-charles-darwin-documentary-intro/#comment-144366

    இந்துப் பத்திரிகை தோழர் எஸ் ஏ பெருமாளின் கட்டுரையை சுட்டது பற்றிய விமர்சனத்தில் பிழை இல்லை.ஆனால், அதற்காக வினவு தேர்ந்தெடுத்த வரிகளை காணுங்கள்.

    // “தி இந்து” இதழின் ஆசிரியருக்கே கூட மாஸ்கோ எங்கு இருக்கிறது, சேக்ஸ்பியர் எந்த மொழியில் எழுதினார், செகாவ் எந்த காலத்தில் வாழ்ந்தார் போன்ற பொது அறிவு விவரங்கள் தெரியுமா என்பது சந்தேகமே. //

    // பொது அறிவே இருக்காது என்றால் இவர்கள் வரலாறு, அறிவியல், அரசியல் போன்ற துறைகளின் அரிச்சுவடி கூட அறிந்திருக்கமாட்டார்கள். //

    // “தி இந்து” கனவான்களுக்கு செகாவுக்கும் செக்குமாட்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியும்? //

    // வினவு அலுவலகத்திற்கு ஏதேனும் ஒரு அதிகாலையில் வந்து அனைத்து ஆசிரியர்களும் 100 தோப்புக் கரணம் போடவேண்டும். //

    ஒரு முன்னணி பத்திரிகை ஆசிரியர்களை இப்படித்தான் பேசுவதா? நியாயம்தானா?

    அதனால் தான் வினவு மட்டும் ஒழுங்கா என கேட்க வேண்டி வந்தது. அவர்களுக்கு செக்காவுக்கும், செக்கு மாட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் கட்டுரை எழுதினர் என்றால், வினவு மீனுக்கும், பறவைக்கும் வித்தியாசம் தெரியாமல் கட்டுரை எழுதியதே என்று கேட்டேன். அவர்கள் செக்காவ் பற்றி படித்தறியாமல் கட்டுரை எழுதினர் என்றால், வினவு ஹிக்ஸ் போஸான் பற்றி எழுதும் முன் அணு இயற்பியல் படித்ததா என்று கேட்டேன்.

    வினவின் அறிவியல் கட்டுரைகள் பற்றிய எனது கேள்விகள் அந்தக் கட்டுரைகளை முன்வைத்து கேட்கப்பட்டவை அல்ல. வினவு ஆணவத்தோடு பேசிய பேச்சுகளை முன்வைத்து எழுதியவை.

    நீங்கள் வினாவுக்கு கூறிய விளக்கங்கள் இந்துப் பத்திரிகைக்கும் பொருந்தும் அல்லவா? அவர்கள் அறிவியல் விற்பன்னர்கள் அல்ல. இலக்கிய விற்பன்னர்களும் அல்ல. எனவே ஆழத்தை எதிர்பார்க்க முடியாது. தவறுகளும் நேரலாம். இந்து பத்திரிகையின் முக்கிய செயல்பாடு செய்திகள் தருவது. கூடவே “பொது அறிவு”, “விழிப்புணர்வு” என்ற அளவில் சில கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. அந்த வகையில் செக்காவ் பற்றிய சிறு குறிப்பு கொடுத்துள்ளார்கள். செக்காவ் பற்றி ஒன்றுமே தெரியாத எனக்கு இந்த துணுக்கு பயனுள்ளது. மாறாக, அவரைப் பற்றி விரிவாக அறிய விரும்பினால், செக்காவ் எழுத்துக்களில் இருந்து தொடங்க வேண்டும். அதே போல, அறிவியலின் ஏதாவது விஷயம் பற்றி உருப்படியாக படிக்க விரும்பினால் அத்துறை சார்ந்த புத்தகங்கள் படிக்க வேண்டும். குறைந்தது “Scientific American” பக்கம் ஒதுங்கலாம். இந்துப் பத்திரிகையில் துணுக்கு அளவுக்கு மேல் அதிகம் எதிர்பார்க்க முடியாது. இவை ஏதோ கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவும். இந்த அளவு தெரிந்தால் போதும் என நான் எண்ணும் என்ற துறைகளில் அது பயனுள்ளது.

    இந்துப் பத்திரிகை வியாபார நிறுவனமும் கூட. எனவே காசு .வாங்குகிறார்கள். ஆம், ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள். சரி, இந்து பத்திரிகை வாங்காமல் நிறுத்தி விட்டு இந்த ஐந்து ரூபாயை வைத்து என்ன செய்யலாம்? ஒரு சிகரட் வாங்க முடியுமா?

    முடிவாக இந்துப் பத்தரிகையை விமர்சித்தது தவறல்ல. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் ஒப்புக்கொள்ளும்படி இல்லை.

    • வெங்கடேசன்,

     இந்துப் பத்திரிகை தோழர் எஸ் ஏ பெருமாளின் கட்டுரையை சுட்டது ஒரு குற்றமில்லை. வினவின் முறைப்பாடும் அது இல்லை.
     மூலக்கட்டுரையிலிருந்த கவனமாக சில முக்கியமான பகுதிகளை அழித்துவிட்டதுதான் குற்றம். இடது சாரி பார்வையில் இது முக்கியமான குற்றம். அதற்காகத்தான் இந்த பதிவாளர் தனது அறச்சீற்றத்தை வெளியிட்டிருக்கிறார். நீங்கள் கூரியபடி இந்து ஒரு முன்னணி பத்திரிகை என்பதாலும் அதனிடம் கூடுதல் கண்டிப்பு காட்டியது சரிதான். வினவிடம் குறை காணும் ஆர்வத்தில் உடனே ஒருமையில் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள். (தற்போது மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்கள். பரவாயில்லை.)

     காப்பி அடித்தது குற்றம் என்ற அளவில் தான் நீங்கள் திரும்பத்திரும்ப பேசுகிறீர்கள். திரிபு வேலையைப்பற்றி நீங்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அங்கே தான் வினவுத் தோழர்களும் நீங்களும் வேறு படுகிறோம்.

     இந்துப் பத்திரிகை செக்காவ் பற்றி சிறு குறிப்பு கொடுத்துள்ளார்கள். ஆனால் இந்த குறிப்பு அவரைப் பற்றி விரிவாக அறிய விருப்பத்தை ஏற்படுத்துமா என்றால் கண்டிப்பாக இல்லை. பொது நலனில் அக்கறை கொண்டவர்கள் குறிப்பாக இளைஞர்கள் இந்த குறிப்பைப்படித்துவிட்டு இவர் பத்தோடு பதினொன்னு என்று தவிர்த்துவிடவே வாய்ப்பிருக்கிறது. நானே இதற்கு எடுத்துக்காட்டு. தினமும் இந்துவை படித்து விட்டு பத்து வருடங்களாக நம் சமூகத்தைப்பற்றி தெரியவேண்டியவைகள் எதுவும் தெரியால் ஒரு ஜடமாக இருந்தேன் என்றால் அது மிகையல்ல. இத்தனைக்கும் நான் மிகச்சிறுவயதிலிருந்தே பொது நலனில் அக்கறை கொண்டவன். (இப்போது அதை நான் வாங்குவதில்லை, படிப்பதுமில்லை. எனக்கு படிக்க வேறு நிறைய இருக்கிறது.)

     வினவின் அறிவியல் கட்டுரைகள் குறுங்குழு நலனைக்கருத்தில் அல்லது பொது நலனைப்பற்றி சிந்திக்க வைப்பதைத் தவிர்க்கும் விதத்தில் திரிபு வேலைகள் செய்யப்பட்டவை அல்ல. சில தவறுகள் இருந்தாலும் அவை வேண்டுமென்று திணிக்கப்பட்டவை அல்ல. உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு குறைந்த பட்ச பார்வையை அளிப்பதற்கானது.

     கடைசியாக,

     நம் நாட்டில் அனாதையாக சாலைகளில் பிச்சை எடுக்கும் வயதானவர்கள் ஊனமுற்றோர்கள் பலர். ஐந்து ரூபாயை அவர்களைக்கு கொடுக்கலாம். சேர்த்து வைத்து அவ்வப்போது ரயிலில் பஸ்களில் வரும் தோழர்களின் உண்டியலில் போடலாம். வினவுக்கும் கொடுக்கலாம்.

     • Univerbuddy,

      “முத்துக்கள் பத்து” என பெயர் கொண்ட அந்தப் பகுதியில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? செக்காவ் பற்றி மட்டுமல்ல. அந்த வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் தொடங்கி சத்ய சாய் பாபா வரை பலரைப் பற்றியும் குறிப்புகள் வந்துள்ளன. அரசியல், அறிவியல், இலக்கியம் என எல்லா துறை பிரபலங்களும் இடம் பெறுகிறார்கள். அந்த தேதியில் பிறந்த பெரிய மனிதர் யாராவது பற்றி துணுக்குகள் என்ற ரீதியில். இதை எல்லாம் ஒருவரே எழுதுகிறார். இதில் எப்படி ஆழத்தை எதிர்பார்க்க முடியும்?

      ஹாக்கிங் பற்றி சிறப்பாக எழுத வேண்டுமென்றால் பிளாக் ஹோல், ரிலேட்டிவிட்டி பற்றி எல்லாம் ஆழமாக புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவரது கண்டுபிடிப்புகளின் உன்னதத்தை வெளிக் கொணர முடியும். இல்லாவிட்டால், “ஐன்ஸ்டீன் போல அறிவாளி” என்ற வகையிலும், “உடற்குறைபாடு இருந்த போதும் சிறப்பான கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்” என்ற வகையிலும் தட்டையாகத்தான் எழுத முடியும்.

      ராமானுஜன் பற்றி கூட குறிப்பு வந்துள்ளது. பொதுவாகவே இவரை பற்றி எழுதினால், அவர் மற்ற பாடங்களில் அக்கறை இன்றி இருந்தது, ஹார்டி உடனான தொடர்பு போன்றவை தான் எழுதுகிறார்கள். அவரது கணித சூத்திரங்கள் பற்றியும், அவை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது பற்றியும் எழுதுவதில்லை. அவ்வாறு எழுத நம்பர் தியரி பற்றி ஆழமாக தெரிந்து இருக்க வேண்டும். இரண்டாவது பாணியில் எழுதுவது தானே அவரக்கு சிறப்பு.

      செக்காவ் பற்றிய துணுக்கில் அவரது சிறப்புகளை வெளிக் கொணரவில்லை என்பது சரி. ஆனால், அவரை மோசமாக எழுதிவிட்டதாகவும் சொல்ல முடியாது. “ராமானுஜன் பெரிய கணித மேதை” என்று எழுதுவது போல, “செக்காவ் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். “முத்துக்கள் பத்து” என்பதின் எல்லை இவ்வளவுதான்.

      ஒன்று இது போன்ற தொடர்கள் வரகூடாது என்று சொல்லலாம். அல்லது, அதில் செக்காவ் பற்றி துணுக்கு தொகுப்பு எழுதக் கூடாது என்று சொல்லலாம். இரண்டும் ஒரு விதத்தில் ஒன்று தான். ஏனென்றால், எந்த ஒரு ஆளுமை பற்றியும் அவரில் ஈடுபாடு கொண்ட ஒருவர் இது போன்ற துணுக்கு தொகுப்பு எழுத தடை கோருவார். உதாரணமாக, அறிவியலில் ஈடுபாடு கொண்ட ஒருவர், ஹாக்கிங் பற்றிய துணுக்கு தொகுப்புக்கு காரசாரமாக எதிர்வினை ஆற்றக் கூடும்.

      இந்த துணுக்கு தொடரை முன்வைத்து தோப்புக்கரணம் வரை போவது சரிதானா? ஒரு துணுக்குக்கு இவ்வளவு பிணக்கா?

      ———————————

      நீங்கள் சொன்ன தான தருமங்கள் செய்தது போக, ஒரு பத்திரிகை வாங்க ஐந்து ரூபாய் செலவழிப்பது பெரிய விஷயமா?

      • வெங்கடேசன்,

       //முத்துக்கள் பத்து//

       இந்த பகுதியில் பல வகைப்பட்ட நபர்களைப் பற்றி குறிப்புகள் வந்திருக்கின்றன என்கிறீர்கள். பரவாயில்லை. யார் யாரைப் பற்றி என்ன சொல்ல படுகிறது என்ன சொல்லாமல் விடப்படுகிறது என்பது தான் பாலிடிக்ஸ். இது தான் இங்கே பேசுபொருள். செக்காவ் விசயத்தில் இது அப்பட்டமாக தெரியவந்திருக்கிறது. சத்ய சாய் பாபா (பெரிய ஆரஞ்ச் வடிவ முடியலங்காரம் உள்ளவரா) என்ன சொல்ல பட்டது என்ன சொல்லாமல் விடப்பட்டது என்பதை கவணித்தவர்களுக்குத் தெரியும். “செக்காவ் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்” என்று குறிப்பிட்டுள்ளார்கள், எல்லை இவ்வளவுதான் என்கிறீர்கள். இந்த எல்லையைத்தானே நாங்கள் விமர்சிக்கிறோம். தோப்புக்கரணம் ஒரு அடையாள தண்டனைதான். சரிதான்.

       /////////////

       பத்திரிக்கை வாங்காவிட்டால் அந்த ஐந்து ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும் என்ற ரீதியில் உங்கள் கேள்வியிருந்தது. அதனால் தான் அட்வைஸ். செய்த தான தருமங்களுடன் இதையும் சேர்த்தே செய்யலாம் என்பது புதிய அட்வைஸ்.

       • அவர்கள் வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு செக்காவ் பற்றி எழுதியதாக நான் கருதவில்லை.

        “இன்றைய பிறந்த நாள் பிரபலங்கள்” என்று ஒரு பகுதி போட்டு அன்று பிறந்த பிரபலங்கள் சில பேரை பட்டியல் இடுவதாக வைத்துக்கொள்வோம். அதில் பேர் மட்டும் தான் போட முடியும், ஏன் அந்த பிரபலம் பற்றி குறிப்பு ஏதும் எழுதவில்லை என்று கேட்க முடியாதல்லவா? அது போல துணுக்கு தொகுப்பில் இவ்வளவு தான் முடியும்.

        • வெங்கடேசன்,

         அவர்கள் எதை நீக்கியிருக்கிறார்கள் என்று அப்பட்டமாக தெரிகிறது. அதில் உள்நோக்கம் இல்லை என்று நீங்கள் கருதிக்கொள்ளலாம். ஆனால் பொது நலத்தில் அக்கறையுள்ளவர்கள் அப்படிச் செய்ய கருதிக்கொள்ளமுடியாது.

         பிறந்த நாள் பிரபலங்கள் பட்டியலில் கூட யாரை போடுகிறார்கள் யாரைப் போடவில்லை என்பதில் ஒரு பாலிடிக்ஸ் இருக்கிறது.

 6. Univerbuddy,
  வெங்கடேசனின் 6.2.2 பின்னூட்டத்திற்கு தங்கள் பதிலை அறிய விரும்புகிறேஏன்.

  • நண்பர் சரவெடி,

   எனது கருத்து கேட்டமைக்கு நன்றி. கொடுத்திருக்கிறேன்.

   ஆமாம், உங்கள் பெயர்தான் சரவெடியே தவிர உங்கள் பங்கு ஊசிவெடியாக இருக்கிறதே. ஒன்று பெயரை மாற்றுங்கள். இல்லை சரத்தைக் கொளுத்திப்போடுங்கள். 🙂

 7. நன்றி யுனிவர்படி. வகை வகையாய் சரத்தை கொளுத்திப் போட கிரியேட் செய்த முகமூடிதான் சரவெடி. என்ன.. வேலைப்பளுவும் சிந்தை மாற்றங்கலும் வெறும் பார்வையாள்ர் லிஸ்டில் என்னை வைத்திருக்கிறது. பொறுத்தருள்க நண்பா 🙂

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க