privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்மோடியின் ஆட்சி தேசியப் பேரழிவு - கிளர்ந்தெழுந்த பு.ஜ.தொ.மு

மோடியின் ஆட்சி தேசியப் பேரழிவு – கிளர்ந்தெழுந்த பு.ஜ.தொ.மு

-

திருச்சி

“மோடியின் ஆட்சி; ‘தேசிய’ப் பேரழிவு” என்ற தலைப்பில் புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணி சார்பாக திருச்சியில் 23-03-2015 அன்று காலை 10.30 மணிக்கு மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
வளர்ச்சியின் நாயகன் என தன்னை விளம்பரப்படுத்திகொண்டு ஆட்சியை கைப்பற்றியவுடன், கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்கு சேவை செய்யும் நாயகனாக செயல்படுகிறார், மோடி.

பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் K.சுந்தரராசு, தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, “மோடி தேர்தலுக்கு முன் நாட்டின் வளர்ச்சி, வளர்ச்சியின் நாயகன் என தன்னை விளம்பரப்படுத்திகொண்டு ஆட்சியை கைப்பற்றியவுடன், கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்கு சேவை செய்யும் நாயகனாக செயல்படுகிறார். விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், வணிகர்களின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு – படுகுழியில் மக்களை தள்ளும் திட்டமே மோடியின் ஆட்சி. காங்கிரசு மோசம் என்றால், பி.ஜே.பி மோடியின் ஆட்சி படுமோசம் என்பதை மோடிக்கு வாக்களித்த மக்களே உணர்ந்துள்ளனர்” என விமர்சித்தார்.

திருச்சி மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
தொழிலாளி வர்க்கத்தினரின் நம்பிக்கை நட்சத்திரமாக பு.ஜ.தொ.மு .

அடுத்ததாக கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர் பூவண்ணன் கண்டன உரையாற்றினார். தொழிலாளி வர்க்கத்தினரின் நம்பிக்கை நட்சத்திரமாக பு.ஜ.தொ.மு செயல்படுகிறது என்பதை கோவை மாவட்டத்திலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் செயல்படுவதை சுட்டிக்காட்டி பேசினார்.

அவரை தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழரும், சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் ஞா.இராஜா  பேசியபோது “இந்திய இரயில்வே துறையில் தனியார்மயத்தின் காரணமாக சுமைப்பணி தொழிலாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. 12 மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 5 மணி நேரத்தில் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள்” என்பதை விளக்கி பேசினார்.

march-23-ndlf-trichy-3
“ஆலைமூடல், வேலைப்பறிப்பு போன்றவற்றால் மக்கள் நடுத்தெருவிற்கு தள்ளப்படுகின்றனர்”

அடுத்து பு.ஜ.தொ.மு மாநில உதவித் தலைவர் தோழர் பரசுராமன் பேசினார். “வளர்ச்சி என்ற பெயரால் கார்ப்பரேட் முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள் நலனுக்காக, அமெரிக்காவின் நலனுக்காக நமது நாட்டின் விவசாயம், மக்கள் திட்டம் என்ற பெயரில் நடக்கும் அட்டூழியம், விவசாயம் அழிவுக்கு தள்ளப்படுகிறது. விவசாய அழிப்பு கார்ப்பரேட் முதலாளிக்கு குறைவான உழைப்பு சந்தையை தேடிக்கொடுக்கிறது. அதே நேரத்தில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது. மேகதாது அணைக்கட்டும் திட்டம் கர்நாடகத்தின் கார்ப்பரேட் முதலாளிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து தமிழக விவசாயிகளை சாகடிக்கும் திட்டம்” எனவும், “ஆலைமூடல், வேலைப்பறிப்பு போன்றவற்றால் மக்கள் நடுத்தெருவிற்கு தள்ளப்படுகின்றனர்” என்பதற்கு உதாரணமாக உள்ள நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூடப்பட்டதை சுட்டிக்காட்டியும் பேசினார்.

திருச்சி மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
மோடியின் ஆட்சி பேரழிவு என்பது அனைவரும் உணர தொடங்கி விட்டோம்.

பு.ஜ.தொ.மு மாநில துணைத்தலைவர் தோழர் விளவை இராமசாமி, கண்டன உரை நிகழ்த்தினார். “மோடியின் ஆட்சி பேரழிவு என்பது அனைவரும் உணர தொடங்கி விட்டோம். ஆறுமாதத்தில் 6 அவசர சட்டங்கள், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் நிறைவேற்றியே தீருவேன் என கொக்கரிக்கிறார் மோடி. மக்களவையில் வெற்றிபெற்றாலும் மாநிலங்களவையில் வெற்றி பெற முடியவில்லை. சில திருத்தங்கள் செய்து மற்ற கட்சிகளை ஏமாற்றி, நிறைவேற்ற துடிக்கிறார். அ.தி.மு.க.வினர் எங்களின் திருத்தங்களை ஏற்றதால் ஆதரிக்கிறோம் என்கின்றனர். என்ன திருத்தம்?” என கேள்வி எழுப்பி அ.தி.மு.க.வையும் அம்பலப்படுத்தினார்.

பா.ஜ.க.வின் மதவெறி நடவடிக்கைகளான 72 வயதான கன்னியாஸ்திரியை பாலியல் வல்லுறவு செய்தது, இந்தி-சமஸ்கிருத திணிப்பு, பகவத் கீதையை தேசியநூலாக அறிவிப்பது போன்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி விமர்சித்தார்.

“கார்ப்பரேட் கொள்ளையும், காவிக் கும்பலின் மோசடியும் இருபெரும் அபாயம். இதை முறியடிக்க இன்றைய அரசமைப்பு உதவாது, அரசமைப்பு யாவும் உளுத்து நாறிக் கொண்டிருக்கிறது, தோற்றுப்போய்விட்டது. உழைக்கும் மக்களுக்கு நீதி வேண்டுமானால் புரட்சிகர அமைப்பில் ஓரணியாய் அணிதிரண்டு அதிகாரத்தை கைப்பற்றும் போதுதான் நமக்கு விடுதலை. புரட்சிகர அமைப்பான பு.ஜ.தொ.முவில் இணையுங்கள். தோழர் பகத்சிங் வழியில் இந்திய விடுதலையை சாதிப்போம்” என பேசினார்.

திருச்சி மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
பு.ஜ.தொ.முவில் இணையுங்கள். தோழர் பகத்சிங் வழியில் இந்திய விடுதலையை சாதிப்போம்.

ஆர்ப்பாட்டத்தின் இடைஇடையே, ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கடுமையான வெயிலிலும் நின்று முழக்கமிட்டனர். பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் புரட்சிகர பாடல் பாடினர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத் தலைவர் தோழர் கோபி நன்றியுரை கூறினார்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.
தொடர்புக்கு: 9791692512.

____________

சென்னை

(விரிவான செய்தி மற்றும் புகைப்படங்கள்)

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் நினைவு நாளையொட்டி பு.ஜ.தொ.மு வின் சார்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கண்டன கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் நினைவு நாளையொட்டி “மோடியின் ஆட்சி ‘தேசிய’ப்பேரழிவு” என்ற தலைப்பில் 23-03-2015 அன்று மாலை 5 மணி அளவில், அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் நினைவு நாளையொட்டி “மோடியின் ஆட்சி ‘தேசிய’ப்பேரழிவு” என்ற தலைப்பில் கண்டனக் கூட்டம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் தோழர் அ. முகுந்தன் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தோழமை அமைப்பை சேர்ந்த தோழர்களும் திரளாக கலந்துக்கொண்டனர்.

சென்னை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
‘கார்ப்ரேட் கைக்கூலி’ ‘தேச துரோகி’ மோடியின் முகத்திரையை கிழிக்கும் விதமாக விண்ணதிரும் கண்டன முழக்கங்களுடன் கூட்டம் தொடங்கியது.

‘கார்ப்ரேட் கைக்கூலி’ ‘தேச துரோகி’ மோடியின் முகத்திரையை கிழிக்கும் விதமாக விண்ணதிரும் கண்டன முழக்கங்களுடன் கூட்டம் தொடங்கியது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசால் செய்ய முடியாத அல்லது தள்ளி போடப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்ட திருத்தங்களை மோடி பிரதமரான பத்தே மாதத்தில் நிறைவேற்றியுள்ளார். பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் பாதசேவை செய்யும் நோக்கத்தில், நிறைவேற்றபட்டுள்ள சட்ட திருத்தங்களை தனது தலைமையுரையில் அம்பலப்படுத்தினார்.

சென்னை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்

இக்கூட்டத்தில் கண்டன உரையாற்றிய திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலர் தோழர் முகிலன், “தொழிலாளர் நல சட்ட திருத்தமானது, தொழிலாளிகள் போராடிப் பெற்ற உரிமைகளை காவு கொடுப்பதாக உள்ளது. (குறிப்பாக தொழில் பழகுநர் சட்ட திருத்தம் என்பது தொழிலாளிகளை கொத்தடிமையாக்கும் செயல்)” என்பதையும், “முதலாளிகளுக்கு சுலபமாக கொள்ளை அடிக்க எவ்வாறெல்லாம் வழிவகை செய்கிறது” என்பதையும் விளக்கி, “தொழிலாளி வர்க்க விரோதியாக செயல்படும் மோடி தலைமையிலான அரசை கண்டித்து தொழிலாளர் நல சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொழிலாளிகள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும்” என அறைகூவினார்.

சென்னை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்அடுத்து பேசிய காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் தோழர் சிவா மக்களுக்கான மானியங்கள் வெட்டும் சட்ட திருத்தங்களை தோலுரித்து காட்டினார். பல கோடி மக்கள் அன்றாடம் கால்வயிறு கஞ்சியாவது குடிக்க உதவியாக இருக்கும் ரேஷன் கடையை மூட வேண்டும் என துடிக்கும் மோடி கும்பல், ரேஷன், சிலிண்டர் போன்ற அத்தியாவசிய தேவைக்கான பொருட்களுக்கு மானியம் கொடுப்பதால் நாடு கடனாகி விடுவதாக கூப்பாடு போடுவது ஏமாற்று வேலை எனவும் இதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும் என தனது கண்டன உரையில் பதிவு செய்தார்.

சென்னை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்இதையடுத்துப் பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில இணைச் செயலாளர் தோழர் லோகநாதன் மக்களுக்கு மானியம் கொடுப்பதால் நாடு திவாலாகிவிடும் என ஊளையிடும் மோடி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் மக்கள் வரிப்பணத்தை வாரி இரைப்பதை அம்பலப்படுத்தினார். அப்போது இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தை அதானி என்ற தரகு முதலாளிக்கு பேரம் பேசி குத்தகைக்கு எடுத்துக் கொடுத்த மோடி அதற்கான பணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொடுக்க வேண்டும் என கட்டளையிடுகிறார். மக்களின் சேமிப்பு பணம் பல நூறு கோடிகளை ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு கொடுக்க உத்தரவிடும் மோடி இந்த நாட்டின் ஆகபெரும்பான்மை உழைக்கும் மக்கள் உயிர் வாழ வழி செய்து கொண்டிருக்கும் சமூக பாதுகாப்புத்திட்டங்களை நிறுத்திவிட வேண்டும் என கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பதை விளக்கினார். இது போன்ற மக்கள் விரோத செயல்களை கூச்ச நாச்சமின்றி செய்து மக்களை மரணக் குழியில் தள்ளும் மோடியின் ஆட்சி தேசியப் பேரழிவை தரக்கூடியது அகவே அந்தப் பேரழிவை தடுத்து நிறுத்த பகத்சிங்கின் வாரிசுகளாக களத்தில் நிற்கும் நக்சல்பாரி புரட்சியளர்களுடன் உழைக்கும் மக்கள் கரம் கோர்க்க வேண்டும் என தனது கண்டன உரையை பதிவு செய்தார்.

சென்னை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்

கண்டன உரையை அடுத்து, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சென்னை பகுதி தோழர்கள் சார்பாக புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.

சென்னை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்

இறுதியாக, பு.ஜ.தொ.மு.வின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தோழர் விகந்தர் நன்றியுரையாற்றினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை.

சென்னை பு.மா.இ.மு

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவுநாள் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக புரட்சிகர மாணவர் இளைஞர் – முன்னணியின் சார்பில் சென்னையில் கடைபிடிக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பகத்சிங்கை பொம்மை போல டீசர்ட், கீசெயின், பைக் ஸ்டிக்கர், பேனர்களில் என பல இடங்களிலும் போலி கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். பகத்சிங்கின் போர்க்குணத்தை, அரசியலை,தன்மானத்தை, தியாகத்தை அவர்கள் வரித்துக்கொள்வதில்லை; மறந்தும் கூட பேசுவதில்லை. நாடாளுமன்றத்தில் குண்டு போட்டு ”செவிட்டுக்காதுகளே கேளுங்கள்” என்ற பகத்சிங்கின் வார்த்தைகளை பாரளுமன்ற பன்றித்தொழுவத்தில் உழல்பவர்கள் எப்படி பயன்படுத்துவார்கள்? புரட்சிகர அமைப்புக்களைத் தவிர வேறு யாருக்கும் பகத்சிங்கிற்கு வாரிசுகளாக தகுதி இல்லை என்பதை போலிகள் தாங்களே தங்கள் செயல் பாட்டின் மூலம் நிரூபித்துக்கொண்டு இருக்கும் சூழலில் …

சென்னைப் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளின் நினைவு நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கும் விதமாக மதுரவாயல், குரோம்பேட்டை கிளைகளில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடை உடைப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் வாணி, சிவரஞ்சனி, செல்வா, நிவேதிதா ஆகியோர் கொடியேற்றி நினைவேந்தல் உரையாற்றினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

காந்தியின் கபட நாடகத்தை தோலுரித்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவுகளை சுமந்து மீ்ண்டும் அடிமையாக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த நாட்டை காக்க தேசவிடுதலைப் போரில் பங்கு கொள்வீர்! என்ற பிரச்சாரத்தை மதுரவாயல் முதல் பு.ஜ.தொ.மு கண்டனக் கூட்டம் நடத்திய அம்பத்தூர் வரை நடைபயணத்தினூடாக மாணவர்கள், தொழிலாளர்கள், பகுதி உழைக்கும் மக்கள் என அனைவரிடமும் கொண்டு சென்றார்கள் பு.மா.இ.மு தோழர்கள்.

அரசின் ஒவ்வொரு கட்டுமானமும் சீரழிந்து மொத்தக் கட்டமைப்புமே மக்களுக்கு எதிர் சக்திகளாக மாறிவிட்ட இந்தச் சூழலில் இந்த அரசு அமைப்பை தகர்த்து எறியாமல் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்பது தான் இப்போது உள்ள பிரச்சினை. உலகை வியாக்கியானம் செய்வதல்ல அதை மாற்றியமைப்பதே புரட்சியாளர்களின் கடமை என்பதை தன் வாழ்நாளின் மூலம் நிரூபித்த பகத்சிங்கின் வாரிசுகளாக தேசவிடுதலைப்போரில் பங்கு கொள்ள வேண்டு அரசமைப்பை தகர்க்க வேண்டும் என்ற உணர்வூட்டும் விதத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி இருந்தது.

 

தகவல்-

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.
9445112675

________________

கோவை

ஞ்ச நதிகள் பாய்ந்தோடும் பஞ்சாபில் பிறந்து பரங்கிய ஆட்சியருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மாவீரன் பகத்சிங்கின் நினைவு தினத்தை ஒட்டி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் கோவையில் சைக்கிள் பேரணியும் தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்றன.

கோவை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
பகத்சிங்கின் நினைவு தினத்தை ஒட்டி சைக்கிள் பேரணியும் தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்றன.

இறுதியில், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரின் படங்களுக்கு மாலை அணிவித்து உறுதியேற்பு முழக்கங்களுடன் நிறைவடைந்தது.

மதவெறி மலிவாக சப்ளை செய்யப்படும் மாநகரங்களில் முதன்மையானது கோவை. அரசியல் கிருமி அர்ஜூன் சம்பத் துவங்கி மானாவாரியாக லெட்டர் பேட் இந்து மதவெறி அமைப்புகளும் லேட்டஸ்டாக டிபன் பாக்ஸ் குண்டு ஜெயம் பாண்டியன் வரை ஊக்கமுடன் வளர கொங்கு மண் ஒரு முக்கிய முனையம்.

அதே சமயம் சின்னியம்பாளையம், ஸிடென்ஸ் மில் தியாகிகள் துவங்கி நக்சல்பரி அமைப்பின் முதல் தமிழ் மாநிலச் செயலர் தோழர் எல் அப்பு வரை சிவப்பு முனை, கோமணத் துணியான காவிக்கு எதிராக அப்போதும் இப்போதும் கூர்மையாகவே உள்ளது.

சிவானந்தா காலனி, கோவை மாநகராட்சியுடன் கோபித்து கொண்டுவிட்ட, உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளுள் ஒன்று. உதிரிப்பாட்டாளிகளும் அடித்தட்டு பிரிவினருமே அதிகமாக இருப்பது இதற்கு போதுமான காரணங்கள்.

கோவையின் கனவான்கள் உலாவும் ரேஸ் கோர்ஸ் நடைபாதைக்கு வண்ண விளக்குகளும் அழகுச் செடிகளும் தெரு விளக்குகளும் அமைக்க 50 லட்சமும் கோவை மாநகராட்சி பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்க 30 லட்சமும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்பவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்.

மாநகராட்சி மன்றத்தில் தெருப் பொறுக்கிகளுக்கு சவால் விடும் வகையில் வார்த்தைகளையும் வன்முறைகளையும் அரங்கேற்றும் ஜென்மங்களே ஆளுங் கட்சியாகவும் எதிர்க் கட்சியாகவும் இருக்கும் நச்சு சூழல் நடப்பில் இருக்கையில் இதற்கு விஷமுறிவு வெகுண்டெழும் மக்களை படையாக கொண்ட புரட்சிகர அமைப்புகளாகத்தான் இருக்க முடியும்.

அதற்கு ஒரு முகாந்திரமாய் இந்த நாள் அமைந்தது எனக் கூறலாம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மிகவும் குறுகலான சாலையில் நெரிசலான வீடுகளுக்குள்ளாகவும் வெளியிலும் அமர்ந்திருந்தவர்கள் ஆர்வமுடன் துண்டறிக்கைகளை வாங்கினர்.நமது தோழரின் பறையோசை ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் கடைகளில் இருந்தவர்கள் வீடுகளுக்குள் இருந்தவர்கள் என அனைவரையும் அருகே இழுத்து வந்தது.

கோவை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
தோழரின் பறையோசை அனைவரையும் அருகே இழுத்து வந்தது.

நிகழ்வை தோழர் கிரீஷ் தலைமையேற்க அடுத்து பேசிய தோழர் பாபுவின் பேச்சானது மக்களின் அன்றாட வாழ்க்கையின் கோபங்களை அப்படியே எடுத்து வைத்தது. மக்களை வசப்படுத்தியது.

கோவை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
பிரச்சாரம் பொது மக்களிடம் நல்ல அறிமுகத்தையும் கவன ஈர்ப்பையும் பெற்றது

கணபதி பேருந்து நிலையத்தில் அன்றாட வாழ்க்கையின் அவசரங்களை கடந்து வீடு திரும்ப நின்றிருந்தவர்கள் இதுவும் இன்னொரு நாள் என்ற எண்ணத்தில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இப்படியான தெருமுனைக் கூட்டம் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கும். கணபதியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள் வினோத் மற்றும் சக்தி ஆகியோரின் பேச்சு பகத்சிங்கின் வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க தருணங்களை அறிமுகப்படுத்தியது.

இறுதியில் கணபதியில் தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது படங்களுக்கு மாலை அணிவித்து முழக்கங்களுடன் நிறைவடைந்தது.

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

___________________

வேலூர்

வேலூரில் பகத்சிங் நினைவு நாள்: தெருமுனைப் பிரச்சாரம்!

வேலூர் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
பன்னாட்டுக் கொள்ளையர்கள் நமது நாட்டு வளங்களைக் கொள்ளையடித்து நமது உழைப்பைச் சுரண்டி வரும் சூழலில் நம்மைக் காக்க, நமது நாட்டைக் காக்க நாமெல்லாம் பகத்சிங்கின் பாதையிலே போராட வேண்டாமா?

கத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளை நினைவு கூறும் விதமாக மார்ச் 23 அன்று மாலை மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக வேலூரில் கொடி மற்றும் பதாகைகளை ஏந்திக் கொண்டு முழக்கமிட்டவாறு சென்று மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தோழர் வாணி உரையாற்றினார்.

”பகத்சிங் மற்றும் அவரது சக தோழர்களான சுகதேவ், ராஜகுரு ஆகியோர் 1931, மார்ச் 23-ல் வெள்ளைக்காரர்களால் எதற்காக தூக்கிலிடப்பட்டார்கள்? அன்று வெள்ளைக்காரன் நமது உழைப்பைச் சுரண்டினான். நாட்டு செல்வங்களை கொள்ளையடித்தான். எதிர்த்துப் போராடியவர்களை அடக்கி ஒடுக்கினான். படுகொலை செய்தான்.

வெள்ளையனுக்கு எதிராகப் போராடிய பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் தூக்கிலிடுவதற்கு நாள் குறித்தார்கள். ஆனால் அதன் பிறகு யாருக்கும் தெரிவிக்காமல் முதல் நாளே தூக்கிலிடப்பட்டார்கள். தோழர்களின் உடல்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தால் நாடு கொந்தளிக்கும் என வெள்ளையர்கள் அஞ்சினார்கள். அதனால் தோழர்களின் உடல்களை அரைகுறையாக எரித்து கை கால்களை துண்டு துண்டாக வெட்டி பெற்றோர்களுக்குக்கூட காட்டாமல் இரவோடு இரவாக சட்லட்ஜ் நதியில் வீசினார்கள்.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தோழர்களின் தியாகத்தை நாம் ஏன் நினைவுகூர வேண்டும்? இன்று பன்னாட்டுக் கொள்ளையர்கள் நமது நாட்டு வளங்களைக் கொள்ளையடித்து நமது உழைப்பைச் சுரண்டி வரும் சூழலில் நம்மைக் காக்க, நமது நாட்டைக் காக்க நாமெல்லாம் பகத்சிங்கின் பாதையிலே போராட வேண்டாமா?

வேலூர் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
பிரச்சாரம் தோழர் ராவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அன்று சமத்துவத்திற்காகப் போராடிய பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை தீவிரவாதிகள் என்றான் வெள்ளைக்காரன். இன்று சமத்துவத்துக்காகப் போராடும் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி அடக்கமுறையை ஏவும் மோடிக்கு பகத்சிங் மற்றும் சுகதேவ், ராஜகுரு தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அருகதை துளியும் கிடையாது.

இன்று குடிக்கத் தண்ணீர் இல்லை; சுகாதார வசதி இல்லை; மருத்துவ வசதி இல்லை; படிக்க வைக்க வசதி வாய்ப்பில்லை; படித்தவர்களுக்கு வேலை இல்லை; செய்கின்ற வேலைக்கும் உத்தரவாதம் இல்லை. இப்படி எதுவும் இல்லை என்றாகிவிட்ட பிறகு ஓட்டு மட்டும் போட்டு விட்டு புலம்பி அழுது பலன் இல்லை.

நாம் நமது சந்ததிக்கு வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்க வேண்டாமா? வாருங்கள்! பகத்சிங் பாதையிலே ஒரு சமதர்ம சமூகம் படைக்க போராடுவோம்!“ என மக்களுக்கு அறைகூவல் விடுத்து உரையை நிறைவு செய்தார், தோழர் வாணி்.

அந்த வீரன் இன்னும் சாகவில்லை…..” என்கிற ம.க.இ.க பாடல் பிரச்சாரத்தின் போது பாடப்பட்டது.

பிரச்சாரம் தோழர் ராவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்

________________

விழுப்புரம்

விழுப்புரம் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
நாடு சுதந்திரம் அடைந்ததாக சொல்லுகின்ற இப்பொழுது தான் மேலும் மிகக்கொடூரமான முறையில் மக்கள் மீதான அடக்கு முறை ஏவப்படுகிறது

மார்ச் 23 பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள். மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைபிடிப்போம்.

விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. 23-03-2015- திங்கள் மாலை மாணவர்கள்-இளைஞர்களை திரட்டி இரவு 7.00 மணியளவில் அறைக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் முத்துகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். இணைச்செயலர் தோழர் ரஞ்சித் தலைமையேற்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர்களின் ஆங்கிலேயர்களின் காலனியாதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளையும், காந்தியின் துரோகத்தையும் விளக்கி பேசினார்.

அடுத்ததாக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி பொதுக்குழு உறுப்பினர் தோழர். சிவானந்தம் நடைமுறையில் மாணவர் இளைஞர்களிடம் மண்டியுள்ள சீரழிவு கலாச்சாரத்தையும், அதை எதிர்த்து போராடவேண்டிய அவசியத்தையும் விளக்கி பேசினார். மேலும் மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம், தொழிலாளர் நல சட்ட திருத்தம் போன்ற மக்கள் விரோத போக்கையும் அதனை எதிர்த்து முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய தோழர் செல்வக்குமார், “ஆங்கிலேயர்கள் காலத்தில் நடந்த அடக்கு முறை கொடூரமனாது என்றால், நாடு சுதந்திரம் அடைந்ததாக சொல்லுகின்ற இப்பொழுது தான் மேலும் மிகக்கொடூரமான முறையில் மக்கள் மீதான அடக்கு முறை ஏவப்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமையான கல்வி, மருத்துவம்,சுகாதாரம் மற்றும் சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, பன்னாட்டு- உள்நாட்டு தரகு முதலாளிகளின் பிடியில் நாடு மீண்டும் அடிமையாகியுள்ளது. இதனை தகர்த்தெறிய பகத்சிங்கின் பாதையில் நாம் அணி திரள வேண்டும்” என்று பேசினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர பாடல்கள் மாணவர்-இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் விதமாக பாடப்பட்டன.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க