Tuesday, December 1, 2020
முகப்பு அரசியல் ஊடகம் கிரிக்கெட் தோல்வி : டிக்கி கிழிந்தால் எங்கு முறையிடலாம் ?

கிரிக்கெட் தோல்வி : டிக்கி கிழிந்தால் எங்கு முறையிடலாம் ?

-

லகை ஆளும் “கடவுள்கள்” ஆசீர்வாதத்தோடு ஆட்சியை அமைத்த மோடி பின்னால் நாட்டின் வளர்ச்சி தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை 40 சதம் அதிகமாகிவிட்டது. அது கூட பரவாயில்லை, பவர்ஸ்டாரின் ஆட்சியில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் கூட வலுவடைந்து விட்டதாம்.

கிரிக்கெட் உலகக்கோப்பை
மோடி பின்னால் நாட்டின் வளர்ச்சி தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்திய அணியும் உலகக் கோப்பையை கைப்பற்றியிருக்க வேண்டும்.

இப்படி எல்லாமே வளர்ந்து வரும் வேளையில் நியாயமாக இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை கைப்பற்றியிருக்க வேண்டும். ஆனால் களமிறங்கிய நேரம் சரியில்லையா அல்லது குடித்த கோமியத்தில் தரமில்லையா, தெரியவில்லை; இந்திய வீரர்களுக்கு வந்திருக்க வேண்டிய சில பல கோடிகளை பசு மாமிசம் சாப்பிடும் மிலேச்சர்கள் தட்டிப்பறித்து விட்டார்கள்.

அதே நேரம் ஐ.சி.சி.யை ஆட்சி செய்யும் புனிதப்பசுவின் நாடும், கங்கா தீர்த்தத்தை அன்றாடம் பருகும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனாரும்தான் சர்வதேச கிரிக்கெட் கஜானாவை கையில் வைத்திருப்பவர்கள் என்பதால் காசு குறித்த கவலை வேண்டாம். காசு வந்தாலும் கௌரவம் என்ற ஒரு வஸ்து உண்டல்லவா? அதுதான் பிரச்சினையே.

ஜட்டி கிழிந்தால் தைத்து உடுத்திக்கலாம், டிக்கி கிழிந்தால் எங்கு முறையிடலாம் என அன்றே ஒரு மகா கவிஞன் பாடிவைத்தான். அத்தகைய துயர நிலைக்கு இந்திய தேஷ்பக்தன் 26/03/2015 அன்று ஆளாகி விட்டான்.

என் சீனிவாசன் - கிரிக்கெட் உலகக் கோப்பை
ஐ.சி.சி.யை ஆட்சி செய்யும் புனிதப்பசுவின் நாடும், கங்கா தீர்த்தத்தை அன்றாடம் பருகும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனாரும்தான் சர்வதேச கிரிக்கெட் கஜானாவை கையில் வைத்திருப்பவர்கள்

தேசத்துக்கு போராடினால் தேசதுரோகம் என்கிறது அரசு. அரசாங்கம் சொல்வதையெல்லாம் ஒத்துக் கொள்வதுதான் தேசதுரோகம் என்கிறார்கள் போராடுபவர்கள். இந்தக் குழப்பத்தை போக்கவந்த அருமருந்துதான் நம் முன்னாள் எஜமானர்களால் அறிமுகம் செய்யப்பட்டு இன்னாள் எஜமானர்களால் ஊட்டி வளர்க்கப்படும் கிரிக்கெட்.

அத்தகைய சிறப்பு கொண்ட கிரிக்கெட் மூலம் தேசபக்தி ஒரு காட்டாற்று வெள்ளத்தைப் போலவும், கடுமையான பேதியைப் போலவும் இறுதிப் போட்டிவரை புடுங்கிக் கொண்டு ஓடியிருக்க வேண்டும். ஆனால் மிலேச்சர்களின் சதியால் மூன்று நாள் முன்பே இந்த தேசபக்தி பொசுக்கென்று மறைந்து போகும்படி ஆகிவிட்டது.

உலகக் கோப்பை துவங்கும் முன்பு ஆஸ்திரேலிய – நியூசிலாந்து தொடரில் தொடர்ந்து அடிவாங்கிய காரணத்தாலும் சொத்தை அணியை தேர்வு செய்துவிட்டார்கள் எனும் விமர்சனங்களாலும் இந்தியர்களுக்கு தேசபக்தி கொஞ்சம் அடைத்துக் கொண்ட மாதிரிதான் இருந்தது. அதில் குச்சியை விட்டு குத்தி கிளியர் செய்வதற்காக எண்ணற்ற முயற்சிகள் செய்யப்பட்டன. “ஹே சேம்பியன் ஸ்டே சேம்பியன்” என பூஸ்ட் கம்பெனி பத்து நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரம் போட்டது. மேக்கப் மாமா எல்லா அணிகளுக்கும் வாழ்த்து சொன்னார். அப்போதும் பெரிய அளவில் தேச பக்தி பொங்கவில்லை.

கிங் ஃபிஷர் நாட்டுப்பற்று
நாட்டுப்பற்று, கிங்பிஷர் பீர் போல பொங்கிப் பிரவாகம் எடுக்க ஆரம்பித்தது.

லீக் ஆட்டங்களில் வெற்றி தொடர ஆரம்பித்து அதில் பாகிஸ்தானை வென்றபிறகே எல்லா அடைப்புகளும் உடைபட்டு, வெட்கத்துடன் மறைந்திருந்த நாட்டுப்பற்று, கிங்பிஷர் பீர் போல பொங்கிப் பிரவாகம் எடுக்க ஆரம்பித்தது. இப்போது விட்டால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தேசபக்தியை காட்டும் வாய்ப்பு வராது என்பதை தாமதமாக அறிந்த இந்தியர்கள் வீறுகொண்டு எழுந்தார்கள்.

மோக்கா மோக்கா என அடுத்த அணிகளை கிண்டல் செய்யும் வீடியோக்கள் வெளியாகி பக்கத்து நாடுகளை கடுப்பாக்கின. ‘எல்லா பச்சை சட்டைகளையும் இந்தியா வென்றுவிட்டது, ஆஸ்திரேலிய மஞ்சள் சட்டையிலும் பச்சை எழுத்துக்கள் உள்ளது. ஆகவே அதையும் துவம்சம் செய்வார்கள் நம் வீரர்கள்’ என உசுப்பேற்றல்கள் நாடெங்கும் கேட்டன. சென்னை அண்ணாநகரில் ஒரு சீன தேசத்து வாஸ்து மீன் போட்டிகளை முன்கூட்டியே கணித்து யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தத்ரூபமாக சொல்லியதாம். அதிலும் இந்தியா வெல்வதை அதிசயத்தக்கவிதத்தில் தெரிவித்ததாம்.

தேஷ்பக்தி ஒருவாறாக ஃபார்ம் ஆகிய நேரத்தில்தான் அந்த காலிறுதி ஆட்டம் வந்தது. வங்கதேசத்துடனான அந்த ஆட்டத்திற்கே சென்னை வீதிகள் வெறிச்சோடின. விளம்பரதாரர்களுக்கு எந்த பலனும் தராத வங்கதேசம் அப்போட்டியில் ஜெயிப்பதற்கு உண்டான எந்த நியாயமும் இல்லை, அதற்கான வலுவும் அவர்களுக்கு இல்லை என்பதும் உண்மை. ஆகவே அந்தப் போட்டியிலும் சைவர்கள் அதிகம் நிறைந்த இந்திய அணி வென்றது.

ஆஸ்திரேலியா பச்சை
‘எல்லா பச்சை சட்டைகளையும் இந்தியா வென்றுவிட்டது, ஆஸ்திரேலிய மஞ்சள் சட்டையிலும் பச்சை எழுத்துக்கள் உள்ளது. ஆகவே அதையும் துவம்சம் செய்வார்கள் நம் வீரர்கள்’

செமி ஃபைனலுக்கான தேஷ் பக்தி தயாரிப்புகள் மீண்டும் துவங்கின. சிட்னி அரங்கில் 70 சதம் நுழைவுச் சீட்டுக்களை இந்தியர்கள் வாங்கிவிட்டார்கள் எனும் செய்தி வந்தது. உடனே ஆஸ்திரேலிய அணி கேப்டன் பதறிப்போய் மண்ணின் மைந்தர்களே மைதானத்துக்கு வாருங்கள் என அறைகூவல் விட்டார். ஆனால் தேசபக்தியற்ற ஆஸி. மக்கள் அதை பொருட்படுத்தவில்லை. ‘மைதானத்தில் இருக்கும் கூட்டத்தின் இந்திய ஆதரவு ஆஸ்திரேலியாவுக்கு உளவியல் ரீதியிலான அச்சுறுத்தலை கொடுக்கும்’ என இந்திய ஊடகங்கள் துள்ளிக் குதித்தன.

‘சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது, எனவே அதனை மாற்ற வேண்டும் என மைக்கேல் கிளார்க் (ஆஸி. கேப்டன்) கேட்டுக் கொண்டதாகவும் அதனை பிட்ச் பராமரிப்பாளர் மறுத்ததாகவும்’ ஒரு செய்தி பரவியது. ஆஹா இதுபோதும் இந்தியா ஜெயிக்க என மீண்டும் ஒரு பெக் ஊடகங்களால் ஊற்றப்பட்டது.

இந்தியா அரையிறுதியில் தோற்கலாம் என்பதற்கு 50% வாய்ப்பிருக்கிறது எனும் சிந்தனையே கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டு தேசபக்தர்கள் எல்லோரும் அந்த நாளை எதிர்கொண்டார்கள். இதையெல்லாம் சாதாரண ரசிகன் நம்பினால் பிரச்சினையில்லை..

விராட் கோலி
“ஆஸ்திரேலியாவை ஜெயிக்காவிட்டால் இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு அர்த்தமேயில்லை” என விராட் கோலி முழங்கினார்.

இந்திய அணி வீரர்களும் நம்பித்தொலைத்தால் என்னவாகும்?. அதுதான் சிட்னியில் நடந்தது. “ஆஸ்திரேலியாவை ஜெயிக்காவிட்டால் இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு அர்த்தமேயில்லை” என விராட் கோலி முழங்கினார். அதை அனுஷ்கா சர்மா நம்பினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. இரசிக தேசபக்தர்களும் இந்திய வெற்றியை பெப்சி விளம்பரம் போல நினைத்துக் கொண்டு எழுச்சி பெற்று நெஞ்சு நிமிர்த்தி வேலைக்கு லீவு போட்டால் அதற்கு கோலி எப்படி பொறுப்பாவார்?

லூஸ் மோஷனை கொடுத்த இறைவன்தான் மனிதர்களுக்கு கான்ஸ்டிபேஷனையும் கொடுத்தான் எனும் உபநிஷத்தில் உள்ள தத்துவத்தை மறந்தவர்கள் அதற்கான பலனை ஒருநாள் அனுபவிப்பார்கள் என ஆதிசங்கரர் ராசலீலாவில் சொல்லிவிட்டார் (ஆதாரமெல்லம் கேட்கக்கூடாது, அதில் அப்படித்தான் எழுதியிருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை). கோட்டு வாங்கும் அவசரத்தில் அதை மறந்ததால்தான் டெல்லி தேர்தலில் மோடியை அந்த ஆண்டவன் முரட்டுக்குத்தாக குத்தினான். மோடிக்கே இந்த கதி என்றால் தோனிக்கு இன்னும் மோசமாகத்தானே நடக்கும்! நடந்தது. எது நடந்ததோ அது ஏடாகூடமாகவே நடந்தது. இந்தியாவின் மீது பணம் கட்டிய சூதாட்டக்காரர்களால்கூட காப்பாற்ற முடியாத நிலைமைக்கு இந்தியா சென்றுவிட்டது.

தேசபக்திக்கு சாம்பிராணி ஆராதனை
படிப்பறிவற்ற பக்தர்களே இப்படி சினம் கொண்டு வீதிக்கு வரும்போது தேசபக்திக்கு நாள்தோறும் சாம்பிராணி போட்டு தீபாராதனை காட்டும் தலைமை குரு அர்னாப் கோஸ்வாமி சும்மாயிருப்பாரா?

டாஸ்மாக்கில் வண்டியை நிறுத்துகையில் கடை சாத்தப்பட்டால், சொம்பை நீட்டுகையில் பசுமாடு உச்சா போவதை நிறுத்திவிட்டால் உண்டாகும் வலியை இந்தியனாய் பிறந்த எல்லோரும் உணர்வார்கள். அவ்வாறே 29 மார்ச் வரை வேலிடிட்டி உள்ள தேசபக்திக்கு 26 மார்ச் அன்றே வேலைக்கு போகாமல் இருந்த இந்தியன் பொங்கியெழுவானா, மாட்டானா? அறச்சீற்றம் தேசமெங்கும் பொங்கிற்று. விராட்கோலியின் படங்கள் நாடெங்கும் கொளுத்தப்பட்டன, வடக்கே டி.வி பெட்டிகள் உடைக்கப்பட்டன.

படையெடுப்பில் பெண்களை வன்புணர்ச்சி செய்வதும் வாய்த்தகராறில் சம்மந்தமில்லாமல் அடுத்தவன் வீட்டு பெண்களை அசிங்கமாய் பேசுவது எனும் நெடிய இந்துஞானமரபு பண்பாட்டின் நீட்சி இங்கும் வெளிப்பட்டது. விராட் கோலியின் காதலி அனுஷ்காவே இந்த தோல்விக்கு காரணம் என சொல்லி அவரது உருவப்படங்களும் எரிக்கப்பட்டன.

படிப்பறிவற்ற பக்தர்களே இப்படி சினம் கொண்டு வீதிக்கு வரும்போது தேசபக்திக்கு நாள்தோறும் சாம்பிராணி போட்டு தீபாராதனை காட்டும் தலைமை குரு அர்னாப் கோஸ்வாமி சும்மாயிருப்பாரா? ஷேம் இன் சிட்னி என ஹேஷ்டேக் போட்டு இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான ட்விட்டர் போரை துவங்கினார். இந்திய அணியின் தோல்வி பற்றி விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கும் அளவுக்கு விவாதங்கள் நடத்தி டைம்ஸ் நவ் தன் நாட்டுப் பற்றை கதறக் கதற நிரூபித்தது.

தேசபக்திக்கு சாம்பிராணி ஆராதனை
இந்திய அணி தோற்றதை அடுத்து ராஞ்சியில் தோனி வீட்டுக்கு காவல்.

இதை வைத்து கோஸ்வாமி அய்யர் இந்தியா பேரில் பெட் கட்டி ஏமாந்திருப்பாரோ என சந்தேகிக்க வேண்டாம். இறுதிப் போட்டியில் வென்றால் ஏராளமான அன்னிய செலாவணி கிடைக்கும். டாலர்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதே உண்மையான தேசசேவை எனும் திருத்தம் இருபதாண்டுகளுக்கு முன்பே மனுதர்மத்தில் கொண்டுவரப்பட்டு விட்டது.

இந்தியா தோற்கும் என்று சொல்லி பந்தயம் கட்டும் வில்லனை ரட்சகன் படத்தில் நாகார்ஜுன் விரட்டி விரட்டி அடிப்பார். இந்தியா ஜெயிச்சா ஒவ்வொரு இந்தியனும் ஜெயிக்கிறான் என அவனுக்கு அறிவுரையும் சொல்வார். அப்படிப்பட்ட ரட்சகன் நாகர்ஜுன்கள் இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவை.

தேசமே கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் மட்டும் சிலர் கொண்டாடிக் கொண்டிருப்பதை காண சகிக்கவில்லை. இவர்கள் ஏன் எதையுமே பாசிடிவாக பார்க்க மறுக்கிறார்கள்?

எழவுக்கு போன மோடி மூன்று ஜோடி ஆடைகளை மாற்றுகிறார் என புலம்புவதைவிட ஆடை மாற்றும் பெருங்கடமைக்கு மத்தியிலும் எழவுக்கும் போயிருக்கிறார் என்பதுதானே நேர்மறையான சிந்தனை.. இதை என்றைக்கு இவர்கள் கற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. கட்டெறும்பு டைப் பாடலோடு கூடிய எத்தனை ஜெய்ஹிந்த் படம் வந்தாலும் இவர்களுக்கு தேசப்பக்தியை ஊட்ட முடியாது போலிருக்கிறது.

கேட்டால் கிரிக்கெட் மட்டும் என்ன ஒஸ்த்தியா என வாதம் செய்கிறார்கள்..

கிரிக்கெட் வணிகம்
தொழில் செய்யாத இந்திய கிரிக்கெட் வீரனை விரல் விட்டு எண்ணிவிடலாம் தெரியுமோ??

ஆமாம் ஒஸ்திதான். மற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் வெறுமனே விளையாடினால் போதும். கிரிக்கெட் அப்படியா? இந்திய அணியில் விளையாடுபவன் நிதி நிர்வாகத்தைக் கற்க வேண்டும், காரணம் ட்வல்த் மேனுக்கே அங்கு மாதம் 15 லட்சம் சம்பளம் வருகிறது. நடிப்பு பயிற்சி எடுக்கவேண்டும், முக அழகை பராமரிக்க வேண்டும்… விளம்பரங்களில் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தானே இந்தியர்கள் குளிர்பானம் முதல் காப்பீடு வரை வாங்கவேண்டிய எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். முன்பெல்லாம் மைதானத்தில் கதியாக இருந்த வீரர்களெல்லாம் இன்று விளம்பர ஸ்டூடியோக்களில் கதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தொழிலை நடத்த முடியாது.

எந்தத் தொழில் துவங்குவது என மூளையை கசக்கி யோசித்த ஒரேயொரு தடகள வீரரையாவது காட்ட முடியுமா உங்களால்! ஆனால் கிரிக்கெட் வீரர்கள் இந்திய பொருளாதாரத்துக்கு சேவை செய்ய வேண்டிய பெருங்கடமையையும் அல்லவா தோளில் சுமக்கிறார்கள். தொழில் செய்யாத இந்திய கிரிக்கெட் வீரனை விரல் விட்டு எண்ணிவிடலாம் தெரியுமோ??

அதுமட்டுமா, இந்தியாவின் செல்வாக்குள்ள கடவுள்கள் எல்லோரும் சைவ உணவுக்காரர்கள். அதைப்போலவே இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படுவோர் பெரும்பாலும் ஷைவாளே. இந்தியாவின் நீதித்துறையும், தேசிய ஊடகங்களும் ‘உயர்’ஜாதிக்காரர்களால் கட்டுப்படுத்தப்படுபவை, அதனால் அவை புனிதமானவையாக போற்றப்படுகின்றன. அதேபோல கிரிக்கெட்டும் ‘உயர்’சாதிக்காரர்களால் நிறைந்திருக்கிறது. அதனால் அவர்கள் பெரிய மரியாதைக்கு உரியவர்களாகிறார்கள். அதில் உங்களுக்கு என்ன காண்டு?

மோடி கிரிக்கெட் ஆட்டம்
கிரிக்கெட் பார்ப்பதில் இந்தியர்களே மெஜாரிட்டி என்பதால், மற்ற நாடுகள் தாங்கள் ஒரு மைனாரிட்டி என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேச விரோதிகளைப் பற்றி பேசி நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஆகவே கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்க என்ன செய்யலாம் என நாட்டுப்பற்றோடு யோசிக்கலாம்.

1.   கிராமங்களில் கிரிக்கெட் போட்டி நடத்தும் சங்கங்கள் உள்ளூர் அணியை நேரடியாக இறுதிப் போட்டிக்கு அனுப்பும். அந்த பாணியை பின்பற்றினால் இந்தியா ஃபைனலுக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது. 100 கோடி ரசிகர்களோடு ஐ.சி.சி.-க்கு படியளக்கும் இந்தியாவுக்கு இந்த கோரிக்கை வைக்க எல்லா உரிமையும் உண்டு..

2.   அணியில் குறைந்தபட்சம் 7 பேராவது அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டும் என விதி வைக்கலாம். உலகம் முழுக்க பசுவதை தடை கொண்டுவரலாம். உலகிலேயே பெரிய கட்சியான பா.ஜ.க இந்தியாவை ஆளும்போது இதெல்லாம் ஒரு மேட்டரேயில்லை.

3.   கிரிக்கெட் ஒளிபரப்பு விஜய் டிவி அளவுக்கு இறங்கி வந்துவிட்ட பிறகும் வைல்ட் கார்டு ரவுண்டு, பார்வையாளர்கள் ஓட்டுபோட்டு அணியை வெற்றிபெற வைப்பது போன்ற மாற்றங்கள் உலகக்கோப்பையில் அறிமுகமாகாமல் இருப்பது பண்பாட்டு மற்றும் டி.ஆர்.பி ரேட்டிங் விரோதம்.

4.   ஐ.பி.எல்லில் ஆட வரும் வெளிநாட்டு வீரர்களை கட்டாய கர்வாப்சி செய்துவிடலாம். அதன்பிறகு அவர்கள் இந்தியாவுக்கு எதிராக ஆட மாட்டார்கள்.

5.   கிரிக்கெட் பார்ப்பதில் இந்தியர்களே மெஜாரிட்டி என்பதால், மற்ற நாடுகள் தாங்கள் ஒரு மைனாரிட்டி என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். ஆகவே அவர்கள் ஒழுங்கு மரியாதையாக இந்தியாவின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இவ்விசயத்தில் கருத்தொற்றுமையை உருவாக்க அமித்ஷா தலைமையில் ஒரு ஆணையத்தை உருவாக்கலாம்.

6.   இந்தியா தவிர மற்ற நாடுகள் தங்கள் அணி பயிற்சியாளர்களாக இந்திய அணி முன்னாள் வீரர்களையே நியமிக்க வேண்டும். அதுக்கு அப்புறம் எவனாச்சும் கோப்பையை எடுப்பான்னு நினைக்கிறீங்க?!

போலோ பாரத் மாதாகீ, ஜெய்யீ!!

–    வில்லவன்

 1. செம காமெடி ,இருந்தாலும் அய்பிஎல்னு அடுத்த ஆட்டம் இருக்கே ரசிகர்களுக்கு சலைக்காம பார்ப்பார்கள் கிரிக்கெட் ரசிகர்கள் தேச பக்தி மாநில பக்தியா மாறும் பக்தி யாவரம் மட்டும் குறையாது …

 2. தேவையில்லாத கட்டுரை…. இதில் வினவு கும்பலின் வயிதெரிச்சல் மட்டுமே தெரிகிறது… தனியா கொள்ளை அடிக்காமல், கும்பலாக சேர்ந்து கொள்ளை அடிக்கும் நக்சலைட் கொள்கையை ஆதரிக்கும்,வழுக்கு விழுந்த வினவு போன்ற சிவப்பு சட்டைக்காரன் கடைசி வரைக்கும் தனக்கும், தன்னை சார்ந்த மக்களுக்கும் ஒரு மண்ணும் செய்யாமல் மண்ணோடு மண்ணாக போவது தான் மரபு… இவனுங்கள தவிர மத்த எல்லோரும் அறிவில்லாதன் மாதிரியே நடப்பானுங்க…

  • தனியா கொல்லையடிக்கணும். அதெப்படி கூட்டம் சேரலாம். அடப்பு எடுத்துகிச்சி பாருங்க, டேஷ பத்தி.

 3. வெற்றியாவது, தோல்வியாவது….
  குரங்கு பிராண்டு சீயக்காய் தூள்,
  கிடா மார்க் சுருட்டு விளம்பரத்தில்
  நடித்தாலே 40,50 கோடி கிடைக்குமே!

 4. செம்ம…..,!!!!!!!!!!

  /////தேசமே கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் மட்டும் சிலர் கொண்டாடிக் கொண்டிருப்பதை காண சகிக்கவில்லை. இவர்கள் ஏன் எதையுமே பாசிடிவாக பார்க்க மறுக்கிறார்கள்?

  எழவுக்கு போன மோடி மூன்று ஜோடி ஆடைகளை மாற்றுகிறார் என புலம்புவதைவிட ஆடை மாற்றும் பெருங்கடமைக்கு மத்தியிலும் எழவுக்கும் போயிருக்கிறார் என்பதுதானே நேர்மறையான சிந்தனை.. இதை என்றைக்கு இவர்கள் கற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. கட்டெறும்பு டைப் பாடலோடு கூடிய எத்தனை ஜெய்ஹிந்த் படம் வந்தாலும் இவர்களுக்கு தேசப்பக்தியை ஊட்ட முடியாது போலிருக்கிறது./////

 5. “லீக் ஆட்டங்களில் வெற்றி தொடர ஆரம்பித்து அதில் பாகிஸ்தானை வென்றபிறகே எல்லா அடைப்புகளும் உடைபட்டு, வெட்கத்துடன் மறைந்திருந்த நாட்டுப்பற்று, கிங்பிஷர் பீர் போல பொங்கிப் பிரவாகம் எடுக்க ஆரம்பித்தது. இப்போது விட்டால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தேசபக்தியை காட்டும் வாய்ப்பு வராது என்பதை தாமதமாக அறிந்த இந்தியர்கள் வீறுகொண்டு எழுந்தார்கள்.”

  “லூஸ் மோஷனை கொடுத்த இறைவன்தான் மனிதர்களுக்கு கான்ஸ்டிபேஷனையும் கொடுத்தான் எனும் உபநிஷத்தில் உள்ள தத்துவத்தை மறந்தவர்கள் அதற்கான பலனை ஒருநாள் அனுபவிப்பார்கள் என ஆதிசங்கரர் ராசலீலாவில் சொல்லிவிட்டார் (ஆதாரமெல்லம் கேட்கக்கூடாது, அதில் அப்படித்தான் எழுதியிருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை). கோட்டு வாங்கும் அவசரத்தில் அதை மறந்ததால்தான் டெல்லி தேர்தலில் மோடியை அந்த ஆண்டவன் முரட்டுக்குத்தாக குத்தினான். மோடிக்கே இந்த கதி என்றால் தோனிக்கு இன்னும் மோசமாகத்தானே நடக்கும்! நடந்தது. எது நடந்ததோ அது ஏடாகூடமாகவே நடந்தது. இந்தியாவின் மீது பணம் கட்டிய சூதாட்டக்காரர்களால்கூட காப்பாற்ற முடியாத நிலைமைக்கு இந்தியா சென்றுவிட்டது.”

  இப்படி இரசிப்பதற்கு ஏராளம். வாழ்த்துகள்!

  2011 உலகக் கோப்பையின் போது…..

  ”இந்திய வீரர்கள் வீழ்த்தப்பட்ட போது, தானே வீழ்ந்ததைப் போல உணர்ந்தான். துவண்டு போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. சோகம் கவ்வியது. செய்வதறியாது திகைத்து நின்றான். கண்களில் கண்ணீர் முட்டியது. கைகளில் இருந்த கைக்குட்டை ஈரத்தால் உறைந்து போனது. இதுதான் இன்றைய இந்தியனின் நிலை. இவன் வீட்டில் இழவு விழுந்தால்கூட இத்தனை சோகத்திற்கு ஆளாவானா என்பது ஐயமே!”

  துன்பக் கடலில் துவளும் இந்தியா!
  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்….
  http://hooraan.blogspot.in/2011/04/blog-post_02.html

 6. என்னதான் இருந்தாலும் சரவெடிகளை வாங்கி அவற்றை பத்திரமாகப் போற்றிப் பாதுகாத்து வைத்து இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்தால் மட்டுமே பட்டாசு கொளுத்தி மகிழும் கலாச்சாரத்தை நாடு முழுமைக்கும் பரப்பி அடைகாத்துவரும் இளைஞர் சமுதாயத்தின் தேசபக்திப் பரவசத்தைப் பற்றி ஒற்றை வரிக்கூட இல்லாமல் கிரிக்கெட் பற்றிய கட்டுரை எழுதும் தைரியம் உங்களுக்கு எப்படி வந்தது என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

 7. தோற்கடித்த ஆஸ்திரேலியா நியுசிலாந்திடம் மண்ணை கவ்வ வேண்டும்
  என்று பில்லி சூனியம் வைத்தார்கள் என்று கேள்வி.இந்து ஞான மரபில்
  இதுவும் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதால் இதை நாம் எளிதாக
  கடந்து செல்லலாம்.ஆனால் அந்த அற்ப ஆசையிலும் ஒரு கண்டைனர்
  மண்ணை அள்ளி போட்ட ஆண்டவனை என்ன செய்வது?

 8. //படையெடுப்பில் பெண்களை வன்புணர்ச்சி செய்வதும் வாய்த்தகராறில் சம்மந்தமில்லாமல் அடுத்தவன் வீட்டு பெண்களை அசிங்கமாய் பேசுவது எனும் நெடிய இந்துஞானமரபு பண்பாட்டின் நீட்சி இங்கும் வெளிப்பட்டது. //
  Typical vinavu style venom.
  __________________

 9. //படையெடுப்பில் பெண்களை வன்புணர்ச்சி செய்வதும் வாய்த்தகராறில் சம்மந்தமில்லாமல் அடுத்தவன் வீட்டு பெண்களை அசிங்கமாய் பேசுவது எனும் நெடிய இந்துஞானமரபு பண்பாட்டின் நீட்சி இங்கும் வெளிப்பட்டது. //
  வினவு தளம் தன்னைத் தானே வினவ வேண்டிய கேள்வி இதுதான். உலகெங்கிலும் நடந்த போர்களில் அனைத்தும் சரியாக நடந்தது. இங்கு மட்டும் இப்படிநடந்ததா ? எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி எழுத வாசகர்களை மடையர்கள் என்றுநினைப்பவர்களால் மட்டுமே முடியும். அடுத்தவன் வீட்டு பெண்களை அசிங்கமாய் பேசுவது நெடிய இந்துஞானமரபு என்றால் ஒரே மதத்தை சம்பந்தமில்லாமல் வாரித் தூற்றுவதற்கு என்ன பெயரோ?

 10. கடந்த முறை இந்த வினவு தீவிரவாத கும்பல் உலககோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்திய பாகிஸ்தான் அணியிடம் தோர்க்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.இவர்கள் வாழ்த்திய ராசிக்கு இந்திய அணி பாகிஸ்தானை வென்றதோடு அல்லாமல் கோப்பையும் கைப்பற்றி இந்தியர்களை மகிழ்வித்தது .இந்த முறையும் இந்த “ராசியான மனிதர்கள் ” ஆஸ்திரேலியா வெற்றி பெற வாழ்த்தி ஒரு கட்டுரை எழுதி இருக்கலாம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க