privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திராஜஸ்தான்: மதுவிலக்கு கோரிய சப்ரா மரணம்!

ராஜஸ்தான்: மதுவிலக்கு கோரிய சப்ரா மரணம்!

-

ராஜஸ்தான் மாநிலத்தில் மதுவிலக்கு கோரியும், லோக் ஆயுக்தாவை பலப்படுத்த கோரியும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த காந்தியவாதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான குருசரண் சப்ரா (Gurusharan Chhabra) மதுவிலக்கு போராட்டத்திற்கு மற்றொரு களப்பலியாகியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பட்டினி போராட்டத்தை ஆரம்பித்த அவர் 04-11-2015 அன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 68.

குர்சரண் சாப்ரா
குர்சரண் சாப்ரா

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே கோரிக்கைக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சப்ரா-விடம் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று ஆளும் பா.ஜ.க அரசு உறுதியளித்திருந்தது. அதையடுத்து தனது போராட்டத்தை நிறுத்தி வைத்திருந்தார் சப்ரா. ஆயினும் அரசிடமிருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் கடந்த ஜூலை மாதம் மாநில முதல்வர் வசுந்திரா ராஜே சிந்தியாவிற்கு தனக்களித்த வாக்குறுதியை நினைவூட்டி கடிதம் எழுதினார். “அரசு தன் வாக்குறுதியை நிறைவேற்றாத பட்சத்தின் மீண்டும் போராடுவதை தவிர வேறுவழியில்லை ” என்று அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

தனது கடிதத்திற்கு எவ்வித பதிலும் இல்லாததால் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார் சப்ரா. இதையடுத்து போலீஸ் சப்ராவை கைது செய்தது. ஆயினும் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்தார். அக்டோபர் 10-ம் தேதி விடுவிக்கப்பட்டவர் மீண்டும் அக்டோபர் 17-ம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதுக்கு பிறகும் போராட்டத்தை தொடர்ந்த சப்ராவின் உடல் நிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.

மாதக்கணக்கில் உண்ணாவிரதமிருந்தாலும் வசுந்திரா ராஜ சிந்தியா தலைமையிலான ஆளும் பா.ஜ.க அரசு இவரை கண்டுகொள்ளவில்லை. உண்ணாவிரதமிருக்கும் போது கண்டுகொள்ளாத அரசு மூளைச்சாவடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டபின் இரண்டு அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளதை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். இவரது சாவுக்கு ராஜஸ்தான் அரசு தான் காரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மதுவிலக்குக்காக போராடுவது இவருக்கு இது முதல்முறையல்ல. “ சுதந்திர போராட்ட வீரர் கோகுல்பாய் பட் உடன் இணைந்து ராஜஸ்தான் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் வெற்றிகண்டவர் சப்ரா. இவர்களின் முயற்சியினால் தான் 1980-ல் அன்றைய ராஜஸ்தான் முதல்வர் பைரோங் சிங் செகாவத் மதுவிலக்கை அமல்படுத்தினார்.” என்கிறார் சப்ராவுக்கு நெருங்கியவரான சவாய் சிங். ஆயினும் 1981-ல் காங்கிரஸ் முதல்வர் ஜெகன்னாத் பகடியா- வினால் மதுவிலக்கு கைவிடப்பட்டது. தற்போது பா.ஜ.க அரசும் மதுவை வளர்த்து வருகிறது.

குர்சரண் சாப்ரா
உண்ணா விரதத்தில் குர்சரண் சாப்ரா

சப்ரா வின் மறைவிற்கு பிறகு சாவுக்கு யார் காரணம் என்றும், யார் மதுவிலக்கை திரும்பபெற்றது என்றும் ஆளும் பா.ஜ.கவும் எதிர்கட்சியான காங்கிரஸ்-ம் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்கின்றன. தமிழ்கத்தில் ஓடும் மதுவெள்ளத்திற்கு திராவிட கட்சிகளை குற்றம் சொல்லும் தேசிய கட்சிகளின் யோக்கியதை இது தான். குஜராத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும் முன்னரே அமல்படுத்தப்பட்ட மதுவிலக்கை பா.ஜ.க-வின் சாதனையாக தமிழ்கத்தில் பிரச்சாரம் செய்யும் இந்துத்துவா கும்பல் ராஜஸ்தான் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.

ராஜஸ்தான் பா.ஜ.க அரசு மதுவிலக்கு கோரி உண்ணாவிரதமிருந்த முதியவரை சாகவிட்டு வேடிக்கை பார்க்கும் அதே பாதையை பின்பற்றி தமிழகத்தில் மதுவிலக்கு பாடலுக்காக கோவன் கைது செய்யப்பட்டதை ஆதரிக்கிறார்கள் அவர்களது சகாக்கள். தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மதுவிலக்கு கோரிக்கையை செவிசாய்க்காதவர்கள் தமிழ்கத்தில் ஆட்சியதிகாரத்திற்கு வந்து மதுஒழிப்பார்களாம்.

காந்திய வழி போராட்டங்கள் இனி வேலைக்கு ஆகாது என்பதையும், பட்டினிகிடந்து கெஞ்சுவதாலோ, மனுபோடுவதாலோ இந்த அரசின் கருணைப்பார்வை பெற்றுவிட முடியும் என்று இனியும் நம்புவது மடமை என்ற உண்மையை சசிபெருமாளை தொடர்ந்து சப்ராவின் இறப்பும் தியாகத்தோடு உறுதி செய்திருக்கிறது.

போர்குணமிக்க வலுவான மக்கள் திரள் போராட்டங்களின் மூலம் தான் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதன் மூலம் தான் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அதை தவிர சாத்தியமான வழியேதுமில்லை.

இது தொடர்பான செய்திகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க