Sunday, February 23, 2020
முகப்பு கட்சிகள் பா.ஜ.க பேராசிரியர் சாய் பாபாவை சாகடிக்க காவி பயங்கரவாதிகள் சதி !

பேராசிரியர் சாய் பாபாவை சாகடிக்க காவி பயங்கரவாதிகள் சதி !

-

டெல்லி பேராசிரியர் சாய் பாபாவுக்கு மீண்டும் சிறை! சித்திரவதை செய்து சாகடிக்க காவி பயங்கரவாதிகள் சதி!

மதுரை ம.உ.பா.மையம் சார்பில் அரங்கக் கூட்டம்

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,மதுரை மாவட்டக் கிளை சார்பாக,டெல்லி பேராசிரியர் சாய் பாபா பிணையை ரத்து செய்து, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து 17-01-2016 அன்று அரங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் லயனல் அந்தோணி ராஜ் தலைமை ஏற்றார்.

கிளைச்செயலாளர் லயனல் அந்தோணிராஜ்
கிளைச்செயலாளர் லயனல் அந்தோணிராஜ் தலைமை

பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய டெல்லி பேராசிரியர் சாய் பாபாவுக்கு மீண்டும் சிறை ! முற்போக்கு சிந்தனைகளை முடமாக்கும் காவிகள்!” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

“பேராசிரியர் சாய் பாபா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆந்திராவில் இருந்தபோது பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அவர் 90% மாற்றுத் திறனாளி. இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டதால் அவர் கைகளால் தவழ்ந்து செல்லும் நிலையில் இருந்தார். டெல்லிக்கு வந்த பிறகு தான் அவர் சக்கர நாற்காலி பயன்படுத்தினார். பழங்குடி மக்களின் மீது தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.இதை உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி சிறப்புரை.

புரட்சிகர ஜன நாயக முன்ணணி என்ற அமைப்பின் இணைச் செயலராக இருந்தார். டெல்லி பல்கலைக் கழக மாணவர்களுடன் அவர் நெருக்கமான தோழமை உறவு ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.இதனால் 2014-ம் ஆண்டு மே மாதம் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) என்ற ஆள்தூக்கி கருப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரது உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் கடந்த ஜூன் மாதம் அவருக்கு சிகிச்சைக்காகப் பிணை வழங்கப்பட்டது. இப்போது பிணை ரத்து செயப்பட்டு மீண்டும் அவர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளர். சிறையில் அவருக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி அவரது மனைவிக்கு அவர் பல கடிதங்கள் எழுதியுள்ளார். அதை வைத்துப் பார்க்கும் போது அவர் சிறையிலிருந்து உயிரோடு வருவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.

ரவுடிகளையும், கொள்ளையர்களையும், தேசவிரோதிகளையும் கண்காணிக்க வேண்டிய போலீசு உளவுத்துறை, அரசின் தவறான செயல்பாடுகளை விமர்சிப்பவர்களையெல்லாம் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளுகின்றது. இவர்களைக் கண்காணிப்பதற்கு உளவுத்துறையில் பல பிரிவுகள் செயல்படுகின்றன.

dr-saibaba-hall-meeting-4ஆந்திரா, ஒரிசா, சதிஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நமது இயற்கை வளங்களையெல்லாம் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு நமது ஆட்சியாளர்கள் அகலக் கதவைத் திறந்துவிட்டுள்ளனர். இதனால் காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள். போராடுகிற அனைவரையும் மாவோயிஸ்டுகளாகப் பார்க்கின்றது அரசு. இவர்களைக் காடுகளிலிருந்து விரட்டியடிப்பதற்காக பசுமை வேட்டை போன்ற பெயரில் போலீசு, ராணுவத்தைக் குவித்து மக்களைக் கொல்கிறது.இதனை எதிர்த்துக் குரல் கொடுத்ததினால் தான் சாய் பாபாவுக்கு இந்த கதி.

சாய் பாபாவைக் கைது செய்த போது போலீசு எந்த சட்ட நெறிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை. தீவிரவாதியைப் போல கடத்திக்கொண்டு போய்விட்டது. போலீசு நினைத்தால் யார்மீது எத்தனை கேசு வேண்டுமானாலும் போடலாம்.யாரும் கேள்வி கேட்க முடியாது.அதை நீதிமன்றங்களும் ஏற்றுக்கொள்கிற அவல நிலை உருவாகியிருக்கிறது. ஊடகங்களும் “பயங்கரவாதி கைது” என்று பரபரப்பாக செய்தி வெளியிட்டு ஒரு கருத்தை உருவாக்கி விடுகிறார்கள். இந்த நிலைமை தொடர்வதற்குக் காரணம் இந்த மாதிரி விஷயங்களில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அரசு பயங்கரவாதம் எப்படி செயல்படுகிறது என்பதை மக்கள் உணரும்போதுதான் இதில் மாற்றம் வரும்.

dr-saibaba-hall-meeting-3குஜராத்தில் 97 இசுலாமியர்களைக் கொன்ற பாபு பஜ்ரங்கி என்பவனுக்கும், இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற மாயா கோத்னானிக்கும் உடல் நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றம் பிணை வழங்கியிருக்கிறது. மூன்று பேர் என்கவுண்டர் படுகொலைக்கு காரணமாயிருந்த அமித் ஷா சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். குண்டுவெடிப்புகளுக்கு காரணமாயிருந்த இந்து பயங்கரவாதிகள் உட்பட பலரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போதுமான குற்றசாட்டுகள் இல்லாத நிலையிலும் சாய் பாபா சிறைக் கொடுமைகளை அனுபவித்து வருகிறார். தற்போது அவரது சக்கர வண்டியும் உடைந்துவிட்ட நிலையில் அவர் தனிமைச் சிறையில் கழிவறையையே வாழுமிடமாகக் கொண்டு மரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். இது அவரை சிறையில் தள்ளியவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது காவி பாசிஸ்டுகளின் திட்டமிட்ட சதியாகும். இதற்கெல்லாம் அஞ்சி அவர் பின்வாங்கிவிடவில்லை.

கோவில்களைச் சுற்றித் திரியும் பண்டாரங்களையும் காவிகள் என்று சொல்வதுண்டு.ஆனால் இவர்கள் கார்ப்பரேட் காவிகள்.

  • புராணப் புரட்டுகளையெல்லாம் அறிவியல் கண்டுபிடிப்புகளாகப் பிதற்றித் திரிபவர்கள். வரலாற்றைத் திருத்தி எழுதத் துணிந்தவர்கள். இதற்காக 90 வயதை நெருங்குகிற பலர் உட்பட 700-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.அரசு.
  • அரசு கட்டுப்பாட்டில் உள்ள 500-க்கும்மேற்பட்ட அகாடமிகளில் ஆர்.எஸ்.எஸ். காவிகளைக் கொண்டு நிரப்பி வருகின்றனர்.
  • காந்தியைக் கலவரக்காரராகவும், கோட்சேயைத் தியாகியாகவும் சித்தரித்துபாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. மஹாபாரதத்தையும், ராமாயணத்தையும் வரலாறாகப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்க முனைந்துள்ளனர் .

மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன்
மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன் நன்றியுரை

  • உ.பி.மாநிலம் அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கையையும், யமுனையையும் உருவாக்கியது சரஸ்வதி நதி தான். அது பூமிக்கு அடியில் ஓடுகிறது என்றும் அதைக் கண்டுபிடிக்க பல கோடி மக்கள் வரிப் பணத்தில் செலவழிக்கின்றனர். இதற்காக அறிவுஜீவிகள் அலைகின்றனர்.
  • இது இந்து நாடு. இங்கே முஸ்லீம்கள் வாழலாம்.ஆனால் அவர்கள் இந்துக்களுக்குக் கட்டுப் பட்டவர்களாக வாழ வேண்டும் என்ற கோல்வால்கரின் தத்துவத்தைத் தூக்கிக்கொண்டு கலவரத்தை உருவாக்கி வருகின்றனர்.
  • தலித்துகளை உருவாக்கியது இந்து மதம் அல்ல. இசுலாமிய மதம்தான் என்று சரடு விடுகின்றனர்.
  • அம்பேத்கார் தலித்துகளை இந்து மதத்தை விட்டு வெளியேறச் சொன்னார். காவிகளோ தலித்துகளையும் முஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் இந்து மதத்திற்குத் திரும்பி வாருங்கள் என்கின்றனர். திரும்பி வந்தால் எந்த சாதியில் வைக்கப் படுவார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை.
  • மோடியைக் கடவுளின் அவதாரம் என்றும் நம்மை மீட்பதற்கு வந்திருக்கிறாரென்றும் பரப்புகின்றனர்.
  • அவர்களது கற்பனைகளையெல்லாம் வரலாறாக மாற்றத் துடிக்கின்றனர்.அதற்கு ஏற்றாற் போல பல நீதிமான்கள் அமர்ந்துகொண்டு தீர்ப்பளிக்கின்றனர். பண்பாட்டு ரீதியாகவும் தாக்குகின்றனர்.

இந்தக் காவி பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். பேரா.சாய் பாபாவை விடுதலை செய்யக் கோரி ஆசிரியர்-மாணவர்-எழுத்தாளர்கள்-அறிவுஜீவிகள் மக்கள்திரள் அனைவரையும் ஒன்று திரட்டிக் குரல் கொடுக்க வேண்டும்” என்று பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி அவர்கள் பேசினார்.

மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன் நன்றி கூறினார்.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை, 9443471003

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க