Sunday, January 17, 2021
முகப்பு கட்சிகள் பா.ஜ.க மோடி கெடு முடிந்தது - அரசு கருவூலம் முற்றுகை !

மோடி கெடு முடிந்தது – அரசு கருவூலம் முற்றுகை !

-

பாசிச மோடியின் 50 நாள் கெடு முடிந்தது !
உழைக்கும் மக்களின் துயரம் தீரவில்லை !
கருப்புப் பணமும் ஒழியவில்லை !

SBI வங்கி முற்றுகைப் போராட்டம்!

29.12.2016
வியாழன் காலை 11.30 மணி
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய (அரசு கருவூலம்)
ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

ந்தியாவை வல்லரசாக மாற்றப் போகிறேன் என்று ஆரவார கூச்சலிட்டு ஆட்சியைப் பிடித்த மோடி டாட்டா, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் எடுபிடியாகவும், கைத்தடியாகவும் செயல்பட துவங்கினார். தனது வர்க்கத்திற்கு சேவைபுரியும் வகையில் மேக்-இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என அடுக்கடுக்கான திட்டங்களை அறிவித்துக் கொண்டே செல்கிறார்.

modi-6-finalகார்ப்பரேட் முதலாளிகளின் நலனைக் கொண்ட வளர்ச்சி, வல்லரசு என்கிற பொருளாதார கொள்கையின் ஒரு பகுதியாகத்தான் கடந்த நவம்பர்- 8 அன்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்தார். ஆனால், இதனை மூடிமறைத்து இதன் மூலம் கருப்புப் பணம், ஊழல்பணம் அனைத்தையும் ஒழித்து கிரெடிட், வாலட் கார்டுகளைக் கொண்டு பணமற்ற பரிவர்த்தனையை உருவாக்குவதன் மூலம், நாட்டை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்வதாக, அதிரடி பொருளாதாரத் தாக்குதலுக்குக் காரணம் சொன்னார், மோடி.

ரிசர்வ் வங்கி கவர்னர், நிதி ஆயோக் தலைவர், நிதி செயலர், பிரதம மந்திரி உள்ளிட்ட கையடக்க அதிகாரக்கும்பலுக்குபின் இருந்து திட்டமிடும் சிந்தனை குழாம்களின் ஆலோசனைப்படி, இந்தத்திட்டத்தை அறிவிக்கும் முன்னரே மக்களின் எதிர்ப்பை நசுக்க முப்படைகளை அழைத்து ஆலோசித்து அதன் பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பதே உண்மை. மக்களின் மீதான தாக்குதலை நியாயப் படுத்த முடியாமல் கடந்த 46 நாட்களில் 126 முறை புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு தனது ராஜகுரு சோ பாணியில் துக்ளக் தர்பாரை நடத்திவருகிறார், மோடி.

ஆனால், எதிர்க்கட்சிகளும், படித்த அதிமேதாவிகளான அறிவுத்துறையினரும் இந்த நடவடிக்கையை முன்தயாரிப்பு இல்லாத அறிவிப்பு என்பதை மட்டும் முதன்மைப்படுத்தி கூச்சலிட்டனர். இதன் மூலம் உழைக்கும் மக்களின் மீதும், இந்தியப் பொருளாதாரத்தின் மீதும் நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்பது மறைந்து விடுகிறது.

மொத்தம் 125 கோடி மக்களில் ஒரு சதவீதம் மட்டுமே வரிகட்டுகின்றனர். 90 சதவீத மக்கள் ரூபாயின் மூலம் பரிவர்த்தனை செய்வதால், வரியை ஏய்க்கின்றனர். இன்னும் வங்கிப் பக்கம் வராத 40 சதவீதம் மக்களையும், வங்கிக்குள் இழுத்து சேமிப்பை பிடுங்கத்தான் இத் திட்டம் என்பதை நிதி ஆயோக் நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட 15.4 லட்சம் கோடி, 500,1000 ரூபாயில் இன்றுவரை 14 லட்சம் கோடி வங்கிகளிலும், 75 ஆயிரம் கோடி ஜன் தன் யோஜனா திட்டத்திலும் டெபாசிட்செய்யப் பட்டுள்ளது. இந்தத் தொகை மட்டுமல்ல, இனிமக்களின் வருவாய் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரிபோட்டு சுரண்டுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த போகிறார்களாம்.

மொத்தப் பொருளாதாரத்தில் அரசின் கணக்குப்படியே வெறும் 6 சதவீதமுள்ள கருப்புப்பணத்தை ஒழிக்க உழைக்கும் மக்களின் கையிருப்பு பணத்தை, சம்பளத்தை, வங்கியில் செலுத்திவிட்டு வெறும் 500, 2000 எடுக்கக்கூட வழியின்றி பிச்சைக்காரர்களாக்கி தெருவிலும், வங்கியின் வாசலிலும் நிறுத்தியுள்ளது. இத்துடன் 125 பேரை ’பலி’ வாங்கி இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது பாசிச மோடி அரசு.

slideநாட்டின் பெரும்பான்மை மக்கள் ஈடுபடும் விவசாயத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை வாங்குவது முதல் விளைந்த பொருட்களை சந்தையில் விற்பனை செய்வது வரை பண மதிப்பு நீக்கத்தால், பணம் கையில் கிடைக்காததால் ஏறக்குறைய 40 கோடி கூலி விவசாயிகளிலிருந்து சிறு, நடுத்தர விவசாயிகள் வரை வாழ்விழந்து நிற்கின்றனர்.

விவசாயத்திற்கு அடுத்து 10 கோடி மக்கள் ஈடுபடும் சில்லறை வர்ததகம், சிறுகடைகளில் வெறும் 30 சதவீதம் வியாபாரம் மட்டுமே நடைபெறுவதால் வணிகர்கள் வாழ்க்கை இழந்து நிற்கின்றனர். கட்டுமானத் தொழிலில் தமிழ்நாட்டில் மட்டும் 20 ஆயிரம் கோடி அளவிற்கு வேலைகள் தேக்கம் அடைந்துள்ளது. நாடுமுழுவதும் 1 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்து வீதியில் நிற்கிறார்கள்.

தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்புதொழில், லாரி போக்குவரத்து, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, பெங்களூரு ஆயத்த ஆடை உற்பத்தி, குஜராத்தின் ஜவுளி பூங்கா போன்ற தொழில்கள் அனைத்தும் பணமின்றி அழிவின் விளிம்பில் நிற்கிறது. பலகோடி தொழிலாளர்கள் வாழ்விழந்து நிற்கின்றனர்.

நாடு முழுவதும் தேயிலை, ரப்பர், காப்பி, வாசனைபொருட்கள் உற்பத்தி செய்யும் தோட்டத்தொழில்களில் பணப்பரிவர்த்தனையின்றி, ஊதியம் இன்றி பட்டினிச் சாவுக்கும், தற்கொலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த மக்களின் வாழ்வும் பணமின்றி அழிந்து கொண்டுவருகிறது.

மறுபுறம் ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட 4 லட்சம் கோடி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அரசு அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள், கனிமவள கொள்ளையர்கள், அரசியல்வாதிகள் கையில் எந்தக் கட்டுப்பாடும் இன்றி குவிகிறது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் முதல் உள்ளூர் வங்கி மேலாளர் வரையிலான அதிகாரிகள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவுவதையும் இந்த நடவடிக்கைக்கு வடஇந்தியாவில் 20 சதவீதம் கமிஷனும், தென்னிந்தியாவில் 20 முதல் 40 சதவீத கமிஷனும் பெற்றுக்கொண்டு மாற்றித்தர புதிய பட்டாளமே கிளம்பியுள்ளதை பற்றி அன்றாடம் வெளியாகும் செய்திகள் மோடியின் கருப்புப்பண ஒழிப்பு என்பது நாடகம் தான் என நிரூபித்துவிட்டன.

பொதுத்துறைகளை கார்ப்பரேட் முதலாளிகளும், சில்லறை வர்த்தகத்தை வால்மார்ட், ரிலையன்சு, கே மார்ட், பிக் பஜார் போன்ற பகாசுர வியாபாரிகளும், விவசாயத்தை ஒப்பந்த விவசாயமாக மாற்றி கொள்ளையிட பாயர், எக்ஸான், மோபில் போன்ற வேளாண் வர்த்தககழகங்களும், ஊறுகாய், ஊதுபத்தி உள்ளிட்ட 20 சிறு தொழில்களை கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாடவும் அனுமதிப்பதை ஊக்கப்படுத்துவதே பணமற்ற பரிவர்த்தனை, டிஜிட்டல் இந்தியா திட்டம். இந்த சூறையாடலுக்கு தேவைப்படும் பணத்தையும் நமது சேமிப்பிலிருந்து வழிப்பறி செய்வதே வங்கிப் பரிவர்த்தனை.

இத்தனை கொடுமைகளும், கருப்புப் பணத்தை உருவாக்கும், நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடும் கார்ப்பரேட்டுக்கள், வங்கிகளிடம் கடன் வாங்கி தொழில் நடத்தும், தேசங்கடந்த தரகு முதலாளிகளின் நலனுக்காக நடத்தப்படுகிறது என்பதே உண்மை. இந்த நடவடிக்கையில் மோடி ஆரவாரமாக அறிவித்த கருப்புப்பணம் எங்கே ஒழிந்தது?

ATM Queueபணமற்ற வங்கிப் பரிவர்த்தனை ஊழலை, கருப்புப் பணத்தை, கள்ளப்பணத்தை தீவிரவாதத்தை ஒழிக்கும் என்பது பொருளாதாரம் அறியாத முட்டாள்களின் வாதமாகும். டிஜிட்டல் பரிவத்தனை நடக்கும் ஐரோப்பிய நாடுகளான அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன், பிரான்ஸ், ஸ்வீடன் போன்ற நாடுகளில் மேற்கண்ட நடவடிக்கைகள் தொடர் கதையாகி சந்தி சிரிக்கிறது. இதே போன்ற பணமதிப்பு நீக்க நடவடிக்கை கென்யா, ஆப்கான், தான்சானியா போன்ற நாடுகளில் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்தப் பணமற்ற பரிவர்த்தனை – பணமதிப்பு நீக்க நடவடிக்கை 27 பொதுத்துறை வங்கிகளை கடன் என்ற பெயரில் கொள்ளையடித்த கார்ப்பரேட் முதலாளிகளின் 8 லட்சம் கோடியை ஒன்றுமே அசைக்காது. மாறாக, வங்கிக்கடனை கட்டாத முதலாளிகளுக்கு மீண்டும் நமது சேமிப்பு பணத்தை வாரிக்கொடுக்கவே வழிவகுக்கும். நமது வாழ்க்கையை சூறையாடிய, வீதியில் வீசியெறிந்த பொருளாதாரத் தாக்குதலை அரசியல் நடவடிக்கையை, அரசு கட்டமைப்பின் தோல்வியுடன் இணைத்து புரிந்துக் கொள்வோம். நாட்டை நாசகார வழியில் கொண்டு செல்லும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகளை தூக்கியெறியாமல் பரிவர்த்தனை பொருளான பணத்தை மாற்றுவது எந்தவகையிலும் மக்கள் பிரச்சினையை தீர்க்காது.

தினம் தினம் வங்கி வாசலில் காத்திருந்தது போதும்… 50 நாட்களில் அனைத்தும் சரியாகாவிட்டால் தெருவில் நிற்க வைத்து கேளுங்கள்“என்று வாக்குறுதி அளித்தமோடி, ‘சுகமான சுமைதான் தாங்கிக் கொள்ளுங்கள்“என்று அறிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், “சட்டையைப் பிடித்து கேளுங்கள்“என்று சவடால் அடித்த இல.கணேசன் உள்ளிட்ட பா.ஜ.க. கும்பலின் வீடுகளை தேடிச்சென்று அவர்களின் அறிவிப்புகளை உண்மையாக்குவோம். மக்களின் சேமிப்புப் பணத்தை சட்டப்பூர்வமாகவே வழிப்பறி செய்துள்ள அரசின் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அலையலையாக திரண்டு வங்கிகளை முற்றுகையிடுவோம். இதன் மூலம் அதானி, அம்பானி முதலாளிகளுடன் கூடிக்குலாவும் பாசிசமோடியின் 50 நாள் நாடகத்திற்கு முடிவுகட்டுவோம்.

முழக்கங்கள்:

மோடி கேட்ட 50 நாட்கள்
அவகாசம் முடிந்தது !
400 கோடி கள்ளப்பணத்தை
ஒழிக்கப்போவதாக சொல்லி
127 கோடி மக்களை
நடுத்தெருவில் நிறுத்திய
கருப்புப்பண ஒழிப்பு நாடகம்
முடிவுக்கு வந்தது!

உழைக்கும் மக்களின்
கடுகு டப்பா சேமிப்பைக் களவாடி
முதலாளிகளுக்கு தாரை வார்த்ததுதான்
மோடியின் 50 நாள் சாதனை!

காசு – பணம் – துட்டு – மணி! மணி!
கருப்பு வெள்ளையாகும்
மர்மத்தை நீ கவனி!
மோடி – அதானி,
ஓ.பி.எஸ் –  ரெட்டி ஓரணி!
கருப்புப்பண கும்பலை
விரட்டியடிக்க தயாராகு நீ!

அம்பானி – அதானி – மல்லையா
போன்ற கார்ப்பரேட் முதாளிகளுக்கு
பல லட்சம் கோடிகளை
கடனாக வாரி இறைத்து
திவாலாகிப்போனது வங்கிகள்!
திவாலான வங்கிகளை தூக்கி நிறுத்த
மக்களின் சேமிப்பை
வழிப்பறி செய்துள்ளது மோடி அரசு!

சில்லரை வணிகம்,
சிறு தொழில்களை அழித்து
ரிலையன்சு, வால்மார் போன்ற
கார்ப்பரேட் கொள்ளைக்கார
கம்பெனிகளை வாழ வைக்கவே
பணமற்ற பரிவர்த்தனை –
டிஜிட்டல் இந்தியா!

நாம் உழைத்து சம்பாதித்த
பணத்தை – சேமிப்பை
வங்கியில் போட்டுவிட்டு
செயல்படாத ஏ.டி.எம்
பணமில்லாத வங்கியின் முன்
காத்திருந்து என்ன பயன்?
களத்தில் இறங்கிப் போராடு!

லஞ்சம், ஊழல், கருப்புப்பணம்
கள்ளப்பணம் ஆகியவற்றின்
ஊற்றுக்கண்ணே முதலாளித்துவம்தான்!
இந்த முதலாளித்துவத்தை ஒழிக்காமல்
கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது!

மோடி கேட்ட 50 நாட்கள்
அவகாசம் முடிந்தது !
தெருவில் நிற்க வைத்து
கேளுங்கள் என்ற மோடி,
சட்டையை பிடித்து கேளுங்கள்
என்ற இல.கணேசன்,
சுகமான சுமைதான் தாங்கிக்கொள்ளுங்கள்
என்ற பொன்.ராதாகிருஷ்ணன்
ஆகியோரை தண்டிக்க
அவர்கள் வீடுகளை முற்றுகையிடுவோம்!

கருபுப்பண முதலைகளை தப்பவிட்டு
மக்களின் சேமிப்பை கொள்ளையடித்த
பார்ப்பன பாசிச மோடி கும்பலுக்கு
எதிராக அலையலையாகத் திரள்வோம்!
கருப்புப்பண ஒழிப்பு நாடகத்திற்கு முடிவுகட்டுவோம்!

முதலாளிகள் – வங்கி அதிகாரிகள்
கூட்டு சேர்ந்து கருப்புப்பணத்தை
வெள்ளையாக்குறான்!
நாம் போட்ட பணத்தில்
2000 எடுக்க தெருவில் நிற்கிறோம்!
நம் பணத்தை எடுக்க நமக்கேன் தடை!
வங்கிகளை முற்றுகையிடுவோம்!
போட்ட பணத்தை எடுப்போம்! 

சென்னை முற்றுகைப்போராட்டத்திற்கு திரள்வீர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தமிழ்நாடு – புதுச்சேரி
தொடர்புக்கு: 9445112675, 8807532859, 9597789801

  1. மனனோயாளியின் கையில் நாட்டை ஒப்படைத்துவிட்டு அட்ஷே தின் ஆயெகா அப்டின்னு சொன்னா கப் ஆயெகா கெய்செ ஆயெகா? மெரா சவால்கொ ஜவாப் தீஜியெ மோடி…

  2. You have criticized the role of bank officials.Barring few incidents bank employees have suffered and serviced the customers across the country. Your call for conducting demonstrations surrounding the banks is completely wrong and it diverts the wrath of public against bank employees instead of against central govt. You try to rewrite the article and make corrections…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க