privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஒரு வரிச் செய்திகள் – இந்தியா 14/02/2018

ஒரு வரிச் செய்திகள் – இந்தியா 14/02/2018

-

செய்தி: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஈரானிய அதிபர் ஹாசன் ரௌகானி அரசு முறைப் பயணமாக பிப்ரவரி 15-17 தேதிகளில் இந்தியா வருகிறார். அவர் வருகையின் போது இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் குறித்தும், வட்டார, சர்வதேச பிரச்சினைகளில் இந்தியா – ஈரானின் கூட்டு நலன் குறித்தும் விவாதிக்கப்படுமென வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீதி: அமெரிக்காவின் அடியாளாக பணியேற்றிருக்கும் இந்தியா யாருடைய நலனுக்காக ஈரானுடன் விவாதிக்கும்?

__________

செய்தி: ஜம்முவில் இருக்கும் சுன்ஜுவான் இராணுவ நிலைய தாக்குதலை ஒட்டி, மசூத் அசாரின் ஜெய்ஷி இ முகமது இயக்கத்தை குற்றம் சாட்டிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாகிஸ்தானை எச்சரித்ததோடு, இந்த விபரீச சாகச நடவடிக்கைகளுக்கான விளைவை பாகிஸ்தான் சந்தித்தே ஆகவேண்டும் என்று கூறியுள்ளார்.

நீதி: ஐந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இந்திய இராணுவ வீரரை நிறுத்தியிருக்கும் இந்திய அரசின் நடவடிக்கையில் மட்டும் புத்திசாலித்தனம் இல்லாத போது, விபரீதங்கள் பாகிஸ்தானில் இருந்து மட்டுமா வரும்?

__________

செய்தி: ஆகஸ்டு 2017-ல் உ.பி மாநிலத்தின் கோரக்பூரில் இருக்கும் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 60 பிறந்த குழந்தைகள் மரித்துப் போயினர். இது குறித்த வழக்கில் ஆக்சிஜன் அளிக்க வேண்டிய நிறுவனத்தின் உரிமையளாருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் பிணை அளிக்க மறுத்துவிட்டது.

நீதி: இங்கே வழக்கமாக இப்படித்தான் குழந்தைகள் மரித்துப் போவார்கள் என்று கொக்கரித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அதிகார வர்க்கத்தையும் கைது செய்யாமல், ஆக்சிஜன் அளிக்கும் நிறுவன உரிமையாளரை மட்டும் கைது செய்து என்ன பயன்?

__________

செய்தி: புதுதில்லியில் 2015 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சி இன்றோடு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதன் பொருட்டு அரவிந்த் கேஜ்ரிவாலும், அமைச்சர்களும் பொதுமக்களின் கேள்விகளுக்கு தொலைபேசி மற்றும் ஊடகங்கள் வாயிலாக பதில் அளிக்கின்றனர்.

நீதி: அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அறுவடையாக பிறந்த என்ஜிவோ வகைப்பட்ட ஆம் ஆத்மி இந்த மூன்று ஆண்டுகளில் என்ன சாதித்தது? கழுதை தேய்ந்து கரப்பான்  பூச்சியானதைத் தவிர!

__________

செய்தி: மராட்டிய மாநிலத்தின் பிம்பிரி சிஞ்ச்வாத் நகராட்சியில் 425 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை போடும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. இந்தக் குற்றச்சாட்டை பா.ஜ.க-வின் எம்பியான அமர் சாப்லேவும் கூறியிருந்தார். இது தொடர்பாக பாஜக முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் நகராட்சி ஆணையரான ஷெரவான் ஹர்திகாரை விசாரிக்குமாறு கூறியிருந்தார். அவரும் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என அறிக்கை அளித்து விட்டார். தற்போது இது குறித்து உள்ளூர் பாஜக தலைவர்களின் கூட்டத்தை முதலமைச்சர் இன்று புதன் கிழமை நடத்தப்போவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

நீதி: பாஜக-வின் கோஷ்டி மோதலால் வெளியான இந்த ஊழல் குற்றசாட்டு குறித்து முதலமைச்சர் நடத்தும் கூட்டத்தில் என்ன பேசுவார்கள்? கோஷ்டிகளுக்கிடையே பங்குகள் பிரிக்கப்பட்டு சமூகமாக போகும் கட்டப் பஞ்சாயத்து நடக்குமே அன்றி, ஊழலுக்கு நீதி லேது!

__________

செய்தி: பாஜக ஆளும் மாநிலங்கள் பிரதமர் மோடியின் சரிதையை கூறும் புத்தகங்களை சுமார் 1.5 இலட்சம் எண்ணிக்கையில் வாங்கப் போவதாக முடிவு செய்திருக்கின்றன.

நீதி: இனி மோடியின் வரலாறு தெரியாதவனை தேசத் துரோகி என்றும், அந்த புத்தகங்களை வாங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பாக்கின் கைக்கூலிகள் என்றும் அழைக்கப்படுவார்கள். காந்தி, நேரு வரிசையில் இனி மோடியும் காணும் இடங்களிலெல்லாம் காட்சி தருவார்.

__________

செய்தி: ஸ்னைஃபர் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள் என சுமார் 15,935 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய இராணுவத்திற்கு வாங்குவதை நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.

நீதி: இந்த பதினைந்து ஆயிரம் கோடி ரூபாயில் பெரும்பான்மை பங்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கும், விதேசி நாடுகளுக்கும் நேரடியாகவோ, சுற்றி வளைத்தோ சென்றாலும் திருவாளர் மோடியின் பக்தர்கள் இதை மேக் இன் இன்டியாவின் வெற்றி என பாடித் தீர்ப்பார்கள்.

__________

செய்தி: “எங்களது பிரச்சார இயக்கத்தின் அங்கமாக முசுலீம்கள், புத்தமதத்தினர், கிறித்தவர்கள், ஜைனர்கள் அடங்கிய சிறுபான்மை மக்களின் ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய கோரிக்கை மனுவை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் அளிப்போம்” என சிறுபான்மை ஒருங்கிணைப்பு கமிட்டியின் முஜாகித் நாபிஸ் தெரிவித்தார்.

நீதி: குஜராத்தின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட முஸ்லீம் கிடையாது. சிறுபான்மை மக்களுக்கென தனி வாரியமும் கிடையாது. சுமார் 80 இலட்சம் சிறுபான்மை மக்கள் வசிக்கும் குஜராத்தில் பட்ஜட்டின் போது 55 இலட்ச ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. குஜராத் மண்ணில் இருந்து பாஜகவை அகற்றாத வரைக்கும் அங்கே சிறுபான்மை மக்களுக்கு நீதி மட்டுமல்ல, நிதியும் கிடைக்காது.

__________

செய்தி: அரியாணா மாநிலத்தின் குர்கானில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வந்த ஒரு பெண், ஆதார் அடையாள அட்டையை அளிக்கத் தவறியதால் மருத்துவமனைக்கு வெளியே தனது குழந்தையைப் பெற்றெடுத்தார்.

நீதி: ஆதார் அட்டை ஒரு பயங்கரவாத கண்காணிப்பு என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

__________

செய்தி: மும்பையில் இருக்கும் கோவா உயர்நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனமும், சவுத் வெஸ்ட் போர்ட் நிறுவனமும் தங்களது நிலக்கரி இருப்பை மோர்முகோ துறைமுகத்தில் இருந்து எடுப்பதற்கு அனுமதி கோரி அவசர மனுவைத் தாக்கல் செய்தன.

நீதி: நிமிடத்திற்கு 25 டன் நிலக்கரியை அகற்றும் இந்த துறைமுகத்தில் எந்தவிதமான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளும் இந்த நிறுவனங்களுக்கு இல்லை. மோடி அரசின் வளர்ச்சி திட்டத்தில், பாதிப்பு மக்களுக்கு, ஆதாயம் நிறுவனங்களுக்கு!

__________

செய்தி: “ராம் ராஜ்ஜிய ரத யாத்திரை” நேற்று அயோத்தியாவில் துவங்கியது. ஏராளமான பா.ஜ.க மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் அவர்கள் விரைவில் ராமர் கோவில் கட்ட வேண்டுமென்றும், பள்ளி பாடப்புத்தங்களில் ராமாயணத்தை கட்டாய பாடமாக்கவும் கோரினர். கூடவே நேற்றைய தினத்தை “தேசிய ஹிந்து தினமாக”வும் அறிவித்தனர்.

நீதி: இந்து ராஷ்டிரத்தின் பகிரங்க பிரகடனத்தை அவர்கள் அறிவித்து விட்டார்கள். பார்ப்பனிய இந்துமதவெறியர்களை வீழ்த்தாமல் இந்தியாவில் இனி அமைதி இல்லை.

__________

செய்தி: சொராபுதீன் வழக்கில் நீதித்துறை அமைப்பு தோற்றுப் போய்விட்டது. இது குறித்து உயர்நீதிமன்றம் மறுபார்வை செய்ய வேண்டும் என்கிறார் இந்த வழக்கில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி அபய் எம் திப்சே.

நீதி: காவி பயங்கரவாதிகளின் ஆட்சியில் நீதித்துறை தோற்றுவிட்டது என்று இன்னும் எத்தனை நீதிபதிகள் சொல்ல வேண்டும்?