வினவு தளத்தின் செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட வாசகர் சர்வேயில் பலர் பங்கேற்று பொறுமையுடன் கருத்துக்களை பகிர்ந்திருக்கின்றனர். அந்த நண்பர்களுக்கு எமது நன்றி. அவர்கள் அளித்திருக்கும் கருத்துக்களை இங்கே தொகுத்திருக்கிறோம். இந்த விமர்சனங்கள், ஆலோசனைகள், பாராட்டுக்கள் அனைத்தும் எம்மை பண்படுத்தவும், தீவிரமாக பணியாற்றவும் உதவும். சர்வே முடிவுகளை வைத்து புதிய முயற்சிகள், மாற்றங்கள், அனைத்தும் யோசித்து வருகிறோம். முக்கியமாக நிதிச்சுமை எங்களது செயல்பாடுகளை பாதிப்பதோடு புதிய முயற்சிகளுக்கும் தடைபோடுகிறது. இதையும் மக்களாகிய வாசகர்களிடம் கொண்டு சென்று தீர்க்க முடியும் என நம்புகிறோம். நன்றி

நட்புடன்
வினவு

♦♦♦♦♦

ரவீந்திரன். ஆர்

இதுவே முதல்முறை வினவை படிக்கிறேன்.  இருந்தபோதிலும் முறையான சரியான எந்த உள்நோக்கமும் இல்லாமல் அரசியல் மற்றும் கார்ப்ரேட் பங்களிப்பும் இல்லாமல் இந்த சேவை தொடர விரும்புகிறேன்.

ஜெகதீசன். கி

நான்கு வருடங்களாக வினவு தளத்தை படித்து வருகிறேன். வினவு என் எண்ணத்தை பாமர மக்கள் சார்ந்து சிந்திக்க தூண்டியது. அதிர்ஷ்டமாக எண்ணுகிறேன்.

வினவு தளத்தில் உள்ள கட்டுரைகளை அச்சிட்டு படிக்கவும், விவாதம் செய்யவும் ஆசை படுகிறேன். ஆனால் அச்சிடும் போது கட்டுரை நேர்த்தியாக வடிவம் கொள்வதில்லை. கட்டுரை PDF வடிவத்தில் அச்சிடும் வகையில் அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வினவின் ஒவ்வொரு கட்டுரையும் முகநூல் வழியே வெகு வாசகர்களை சென்றடையும் வகையில் செய்ய வேண்டும்… அவ்வப்போது வினவு நடத்தும் (நடத்தும் என்று நம்புகிறேன்) இலக்கிய கூட்டங்கள், கொள்கை விளக்க கூட்டங்கள் … போன்றவற்றில் பங்கு பெற விரும்புகிறேன். நன்றி வினவு !

நிதிப் பிரச்சினையை சமாளிக்க, பண உதவியோடு விருப்பமுள்ளவர்கள் தங்கள் உழைப்பையும் ஊதியமில்லாமல் வழங்கலாம். நிருபராகவோ… புகைப்பட கலைஞராகவோ… துறைசார் கட்டுரை படைப்பாளராகவோ… வலைதள மேலாண்மை… வலைத்தள வடிவமைப்பிலோ… கட்டுரை தொகுப்பாளராகவோ… இப்படி பல வகைகளில் ஒவ்வொருவரும் பங்களிப்பை செய்யலாம்.

சிறந்த ஆளுமைகளை கொண்டு மாதத்திற்கொரு முறை விவசாயம், இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, மருத்துவம், அறிவியல் என பல்வேறு துறை சார்ந்த கூட்டங்களை நடத்தி அதன் மூலம் நிதியை திரட்டலாம். வாசகர்களுக்கும் மற்ற வாசகர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டும். ஆளுமைகளும் தங்களின் அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம். வினவிற்கும் நிதி கிடைக்கும். கூட்டங்களை இயற்கை எழில் நிறைந்த திறந்த வெளிகளில் பகல் நேரத்தில் நடத்தலாம். செலவு குறையும். சிரிய எழில்மிகு மலைகள், காடுகள், பூங்காக்கள், சிறு நகரம். இப்படி பல்வேறு இடங்களில் நடத்தலாம்.

முகமது மசூக்

வரவேற்கத்தக்க இணையதளம்! பொய்யான தகவல்களையும், ஆளும் அரசு செய்யும் அயோக்கியத்தனங்களையும், பெரு முதலாளி நிறுவனங்கள் செய்யும் ஏமாற்று வேலைகளையும், துணிந்து எதிர்த்து, உண்மைக்கு மக்கள் வாழ்வாதாரதிற்காகவும், அடிப்படை உரிமைகளுக்கும் குரல் கொடுக்கும் ஒரு சில உண்மையான செய்தித்தாள்கள் மற்றும் முகநூல் (ஆன்லைன் பக்கம்), வினவு போன்ற உண்மையான சமூக அக்கறையுடன் செயல்படும் செயல்பாட்டாளர்கள், சமூகப் போராளிகள், களப் பணியாளர்களுக்கு எப்பொழுதும் துணை நிற்போம். வினவு இணையதளம் இன்னும் சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்….

தர்மர்

வாசகர்கள், எழுத்தாளர்களைத்தாண்டி பிற மக்களும் நேசிக்கும் விதத்தில் அரசியல் சிறுகதைகள் வெளியிடலாம். வினவு தளத்தின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, மாவட்டம், தாலுகாவாரியாக தன்னார்வ நிருபர்கள், தோழர்களை பயன்படுத்தி மக்களிடம் சிறிய அளவிலும் நிதி வசூலிக்கலாம்

முத்து

வினவு – என் ஆசான்

தமிழரசி. எம்

எதார்த்த நிலைமையை அம்பலப்படுத்துகிறது வினவு. சமூகத்தில், அரசியலில், அதிகாரவர்க்கத்தில் என்ன நடக்கிறது என்பதை நமக்குக் காட்டுகிறது

வினாயக மூர்த்தி சுப்ரமணியம்

கார்ப்பரேட்டுகள் மாயையை ஏற்படுத்துகின்றன. அவர்கள் மக்களிடம் தவறான கருத்துக்களை விற்கின்றனர். வினவு அதிலிருந்து மக்களை மீட்டு வருகிறது. நமது வாழ்வில் இருக்கும் சரி தவறுகளுக்கிடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள உதவுகிறது. சமூக விழிப்புணர்வுக்கு இளைஞர்கள் வினவுடன் தொடர்பில் இருக்க வேண்டும். வினவு சமூக மாற்றத்திற்கான வழியில் உதவும். உண்மையில் இது ஒரு நேர்மையான ஊடகம். உண்மையான பார்வையில் மக்களை வெளிக் கொண்டுவருகிறது. நிதிச்சுமையைப் போக்க விளம்பரம் மோசமானது அல்ல. நீங்கள் எந்த பொருளுக்கான விளம்பரம் எனத் தேர்வு செய்து வெளியிடலாம். அதில் தவறில்லை. நன்றி

படிக்க:
நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?
என் பார்வையில் வினவு – மயூரன்

ஜெகதீசன்

எனக்கு ஒரு நண்பர் வினவை அறிமுகம் செய்தார். நான் இன்னும் சிலருக்கு அறிமுகம் செய்திருக்கிறேன். நாத்திகம் கம்யூனிசம் இவற்றை தெளிவாகப் பேச உங்களைப் போன்ற ஆட்கள் அவசியம் தேவை. செய்தி என்றாலே வினவு & தீக்கதிர் மட்டுமே படிக்கிறேன். தீக்கதிர் ஓட்டு அரசியலுக்காக எவ்வளவோ வளைந்து கொடுக்கிறது. வினவு சூப்பர்..

சமுதாய முன்னேற்றத்திற்கு மிக மிக முக்கியமான பங்கை ஆற்றி வரும் தளம் வினவு. உலகச் செய்திகள் அனைத்தயும் உள் விவரங்களோடு விவாதிக்கும் ஒரே இடம். தற்சார்பு இன்றி, புற சார்போடு கம்யூனிஸ்டுகள், திராவிட இயக்கத்தினர் எல்லோரையும் விமர்சிப்பது சிறப்பு. நோக்கம் மட்டுமே குறி.

அதிகாரவர்க்கமானது தூத்துக்குடி போராட்டம் போன்ற இடங்களில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்று புலம்புவதற்குப் பதில் வினவு தோழர்கள் ஊடுருவிவிட்டார்கள் என்று சொல்லிப் புலம்பியிருந்தாலாவது ஒரு விளம்பரம் ஆகி இருக்கும். அவ்வளவு தெளிவாக மக்கள் அதிகாரத்தின் தோழர்களைக் குறி வைத்த போதும் அந்தப் பெயர் வெளிவராமல் பார்த்துக் கொண்டனர். இப்படிப்பட்ட சூழலில் நிதி திரட்ட வேறு எதுவும் தோன்றவில்லை. ஒவ்வொரு வாசகரும் ஆள் பிடிக்க வேண்டும்.

வினவு தளத்தின் நிதிப் பிரச்சினைக்கு, புது சந்தாதாரரை சந்தா செலுத்தச் செய்வது, கடினமாக இருக்கிறது. ஆனாலும் தளராமல் ஒவ்வொரு வாசகரும் ஆள் சேர்ப்போம். அதுதான் தீர்வு. வணிக விளம்பரம் பெறச் சொல்வதை விட மூடிவிடச் சொல்வது நலம்.

பெயர் குறிப்பிடவில்லை

நிதி பிரச்சினையை சமாளிக்க, வாசகர் வட்டத்தை அதிகரிக்க செய்தல் வேண்டும்.

முகவை முஸ்தபா

வினவு வடிவமைப்பு சிறப்பு..  செய்திகளை நேர்த்தியாக தெரிவு செய்கிறீர்கள்.

பாவேந்தன் பாலசுப்ரமணியன்

வினவு எழுச்சியூட்டுகிறது. பல கட்டுரைகளையும் மீள்பதிவுகளையும் சிறப்பான உள்ளடக்கத்தில் எளிதில் பெறமுடிகிறது. தாய் நாவல் காலத்திற்கேற்ற சிறந்த மறுபதிப்பு . சமகால அரசியலை இணைத்து விளக்கம் தந்தால் கூடுதல் சிறப்பாயிருக்கும்.

அர்பன் நக்சல்கள் பற்றி இன்றைய மதிப்பீடுகளை எவ்வாறு முதலாளித்துவ ஊடகங்கள் பரப்பி வருகின்றனவோ அதே போல அன்றைய சூழலில் பயங்கரமான பேர்வழிகள் குறித்த தாயின் மனக்கணக்கு, அதன் உண்மையுணர்தல் – ஆகியவற்றையும் சிறிதே இணைத்து அதையே சமகால புரட்சிகர நாவலாகவும் உருவாக்கமுடியும் என்றெண்ணுகிறேன் . மீள்வாசிப்பிலிருந்து மீட்டுருவாக்கம் செய்தல் அதனை பயன்பாட்டுதன்மையை அமரத்துவமாக்கும் என்பது என் கருத்து. பின்னூட்டமிடுதல், அதற்கான விவாதித்தல் இன்னும் குறைபாடுடையதாகவே உள்ளது என்பதென் விமர்சனம்.

இன்றளவும் ஜனநாயக சக்திகள் பாரிய விவாதங்கள் ஏதும் நடத்தாதிருப்பதை ஆதாரமாய் கொள்ளலாம். பொ. வேலுசாமி, சுகிர்தராணி, மனுஷ்யபுத்திரன், தி வயர் கட்டுரைகள் எனப் பல ஜனநாயகப் பண்புடையவற்றையும் பிரசுரிக்கும் சாதகமான அம்சங்கள் இருந்தும் உரையாடலாக இன்னும் மாற்றமடையவில்லை என்று எண்ணுகிறேன்.

கலந்துரையாடலுக்கான மற்றும் செயலில் ஈடுபடுத்துவதற்கான தளம் வருந்ததத்தக்க வகையில் பலவீனமாக இருக்கிறது. வாசகர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது இல்லை என்பது மற்றுமொரு பலவீனமான கண்ணி. வினவு பரந்த வாசகர் வட்டம் நாடுகிறதா? அல்லது ’மா-லெ-மா’ சித்தாந்தமுடையோரின் அதிலும் அது சார்ந்த கட்சி நிலைப்பாடுடைய செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமானதா?

உயிரோட்டமான மக்கள் செய்திச் சங்கிலிதான் இப்போதைய தேவையாக இருக்கிறது. ஆல்ட் நியூஸ் இணையதளத்தைப் போல், கண்டிப்பான முறையில் பரிசோதனை செய்து உறுதி செய்த பின்னரே செய்திகளை வெளியிடவேண்டும். இதைச் செய்வதற்கு இங்கு யாருமில்லை. வினவினால் இதனைச் செய்ய முடியும்

வினவு தொடர்ந்து செயல்பட வேண்டும். ”என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலில் கட்சியின் பத்திரிகை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை தோழர் லெனின் வலியுறுத்துவதற்கு சம காலத்திய நிகரான முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தளம், கேட்காத பல்வேறு தரப்பினரின் குரல்களை எங்களுக்கு அறியச்  செய்கிறது. நான் ஒவ்வொரு புதிய பதிவிற்கும் காத்துக் கொண்டிருப்பேன். எனது தனிப்பட்ட சில குறைகள், சமூகத்திற்கான எனது பங்களிப்பைக் குறைக்கின்றன. எனது குறைகளை சரி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பிருக்கையில் வெகு விரைவிலேயே எனது பங்களிப்பை செலுத்துவேன். செவ்வணக்கங்கள்.

வினவு தளத்தின் மூலம் சாதிக்கப்பட்டவை பாராட்டத்தக்கவையே. எனினும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் வசதியை ஏற்படுத்தி வாசகருக்கு எளிமையான வழிமுறையிலான தொடர்பை ஏற்படுத்த வேண்டும். நிதி எப்போதுமே பிரச்சினைக்குரியதுதான். வயர் இணையதளம் ஒரு கட்டுரைக்கு ரூ.7/ என்ற வகையில் செய்திருக்கும் சந்தா ஏற்பாடு போல், குறைந்தபட்ச சந்தா தொகைத் திட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

படிக்க:
என் பார்வையில் வினவு – மன்னார்சாமி
வினவு ஏற்படுத்தும் குற்ற உணர்ச்சி – சீனிவாசன்

வேலு வேந்தன்

பல முற்போக்கு கருத்துக்களை அறிந்து கொண்டேன். புதிய ஜனநாயக நூல் வாசகர். என் சுற்றுவட்டாரத்தில் சில வாசகர்களை உருவாக்கினேன். தோழர்களிடம் பணம் ஆக நிதி அளிப்பேன்.

’மக்கள் மக்கள்’ என்கிறீர்கள். மக்களில் பலர் மேல வர வாய்ப்பு அமையாத சந்தர்பவாதிகள் உள்ளனர். அப்போது இவர்களுக்கு ஏன் பாடுபட வேண்டும் என அவ்வப்போது தோன்றும். ஆனால் பலர் அறியாமையில் உள்ளனர் என்பதை மறுக்க இயலாது.

பெண்களை கிரிக்கெட்டில் வீழ்த்தும் விக்கெட் போலவே வினவு வாசகராவதற்கு முன் நானும் கருதினேன். அவர்கள் வெறும் சதைப்பிண்டம், போகப்போருள் அல்ல என்ற தெளிவை உங்கள் தளம் எனக்கு கற்றுத் தந்தது. மக்களுக்காக ஊழல் அரசியல்வாதிகளை, கார்ப்ரேட்களை எதிர்க்கும் சில அமைப்புகள் பென்ஷன் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைக்குப் போராடும் அரசு ஊழியர்களை கடுமையாக கொச்சைபடுத்தினார்கள்.

சிலர் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக, பென்சன் கோரிக்கையை கேட்பது தவறு என சட்டப் பஞ்சாயத்து போன்ற அறைகுறைகள் விடும் சவுண்டு தாங்க முடியவில்லை. என்னை முற்போக்காளராக மாற்றினாலும் மக்கள் ஏன் அறியாமையில் உழலுகிறார்கள் என்ற வேதனையும் சேர்ந்தே உருவாகிறது.

பெரிய கட்டுரைகள் வருவது என்னைப் போன்று ஆழ்ந்து படிப்பவர்களுக்கு சரி. ஆனால் பாமரர்களுக்கு சுருக்கமான நான்கு வரி பதிவுகள் வர வேண்டும். அதை என்னைப் போன்றவர்கள் கட் செய்து சமூக வலைதளத்தில் போடுவார்கள்.

உதாரணம் “பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு பணிகளில் 27 % இட ஒதுக்கீடு அளித்தவர் வி.பி சிங். அப்போது பாஜகவின் தயவில் பிரதமராக இருந்தார்.  உடனே பாஜக தனது ஆதரவை வாபஸ் வாங்கி, அவர் ஆட்சியை கலைத்தது. BC, MBC மக்களுக்கு தம் பதவியை பற்றி கவலைப்படாமல் இட ஒதுக்கீடு அளித்த வரலாற்று நாயகர் வி.பி.சிங்.”

பெயர் குறிப்பிடவில்லை

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க சில வகையான மார்க்கெட்டிங் வேலைகள் அவசியம். உம்: theantimedia.com

ராம் கிஷோர்

நான் வாசிப்புத் திறனே இல்லாதவன். வினவு என்னை அதில் இருந்து மீட்டெடுத்த ஒரு நல்ல ஊடகம். என்னை அரசியல் படுத்திக் கொள்ளவும் பெரிய அளவில் உதவியிருக்கிறது. உங்களுக்கு நன்றி. இளைஞர்கள் அரசியல்பட வேண்டிய முக்கிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம், அதனை வினவு மிகச்சிறந்த முறையில் செய்து வருகிறது

ஹைதர் அலி

யோவ், முன்ன மாதிரி இல்லை. சும்மா பேஸ்புக் பதிவுகளையும், பேஸ்புக் சம்மந்தப்பட்ட சம்பவங்களும் காணக் கிடைக்கின்றது. இது ஆரோக்கியமானது அல்ல. முன்னாடி மருதையன் போன்றவர்களின் கட்டுரைகள், ஆக்கங்கள் நிறைய வரும். இப்ப பூஜ்ஜியம்.

சிந்தன் ராஜன்

நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க, இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள ஒத்த சிந்தனை கொண்டவர்களுடன் கைகோர்த்து செயல்படலாம். கைகோர்த்து ஒரு வியாபார வடிவங்களை உருவாக்கிக் கொள்ளலாம் (இதற்கு ஆய்வு செய்வது அவசியம்). அதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் சென்று அடைய வேண்டும். 10 லட்சம் பார்வையாளர்கள் மாதம் ரூ.1 செலுத்துவது பெரிய வருமானத்தை உருவாக்கும்.

லோகநாதன்

சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், என்னை பொறுத்தவரை இணையத்தை உபயோகிப்பவர்களில் பலர் வேடிக்கையாகவும், இயல்பான நகைச்சுவையுடன் கருத்தை சொல்லும் பதிவுகளையே படிக்க விரும்புகின்றனர். வினவு இந்த விஷயத்தை அழகாக கையாளுகிறது. ஆனால் இது போதாது என்றே எண்ணுகிறேன்.  ஏனெனில் வினவின் ஒரு வீடியோவை வினவு அக்கவுண்ட்டில் பகிர்ந்த போது மிக குறைவான அளவில் ஷேர் ஆகியது. அதே வீடியோவை என் அக்கவுண்ட்டில் பகிர்ந்த போது மிக அதிகமான ஷேர்களை வாங்கியது.

இதிலிருந்து நான் அறிந்தது பெரும்பான்மையான மக்கள் தன்னுடன் அடிக்கடி தொடர்பில் இருக்கும் ஒருவன் சொல்வதையே கேட்க விரும்புகின்றனர். ஆக உங்களில் ஒருவரோ அல்லது யாரோ பேஸ்புக், ட்விட்டர் போன்ற இணைய தளங்களில் நேரடியாக ஏதோ ஒரு பெயரில் மக்களுடன் மக்களாக விவாதம் செய்து கொண்டு அதன் மூலம் வினவின் பதிவுகளை கொண்டு சேர்த்தால் இன்னும் பலரை வெகு சீக்கிரம் சென்றடையும்.  நான் சொல்வதை தயவுசெய்து சிந்தித்து பார்க்கவும்.

இணையம் பல சமயம் அரசையே அதிர வைக்கும் செயல்களை செய்துள்ளது. அவர்களை அம்பலப்படுத்த இது ஒரு சிறந்த தளம். பயன்படுத்தவும். நன்றி.

படிக்க:
இணைய ஊடகத்தின் சவால் – தமிழ் சசி
மாற்று ஊடகத்திற்கான தேவை – வில்லவன்

கிரண்குமார்

பதிப்பு, மாநாடு, நிகழ்ச்சி, மற்றும் இயக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம், துறைசார்ந்த தோழர்கள் பலரை ஒன்றிணைப்பதன் மூலம்,  நிதி நிலையை சீராக்கலாம்.

செல்வராஜ் சதீஸ்

இந்தியாவில் நடைபெறும் சம்பவங்களின் உண்மைத் தன்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நற்பணியைத் தொடரும் வினவுக்கு எனது வாழ்த்துக்கள். நான் இலங்கையன். எமது படைப்புகளையும் உங்களது வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்ற முடியுமா?

ஹாஜி தஸ்தாகிர்

இந்துத்துவ அபாயம், காஷ்மீர், அமெரிக்காவின் மறைமுகத் திட்டங்கள் குறித்து பல தலைப்புகளை முன்னாட்களில் வினவில் படித்திருகிறேன். தற்போது அது போன்ற செய்திகளைக் காண முடியவில்லை.

அச்சமற்ற பல கட்டுரைகளை வினவு தளத்திலிருந்து எதிர்பார்க்கிறேன்.

தமிழ்செல்வன்

இன்றைய பாசிச ஆட்சியில், சரியான விமர்சனத்தை வாசகர்களுக்கு கொடுப்பது வினவு. அதனால் வினவு தொடர்ந்து இயங்க வேண்டும்.

பரமானந்தம் நடேசன்

மக்களிடம், வாசிப்புப் பழக்கம், நாட்டு நடப்புகளில் வேட்கை, அரசியலை ஏன் அறிய வேண்டும் என்கிற தெளிவு இருந்தால்தான் நாம் மக்களுக்கு தேவைபடுவோம். அதுவரை விழலுக்கு இரைத்த நீர்தான்.

ரெபெக்கா மேரி

பொருளாதாரம் பற்றி அதிகம் பேசுங்கள். ஏகாதிபத்திய, பாசிச கொடுங்கோன்மைகளை பற்றி நிறைய விமர்சியுங்கள். மதம் பண்பாடு பற்றி பேச வேண்டாம் என்று சொல்லவில்லை , ஆனால் உங்களை நாடி வருவோர் ’விட்டால் போதும்’ என உங்களை வெறுத்து ஒதுக்குகிற அளவிற்கு அதனை பற்றி பேச வேண்டாம்.

நிதிப் பிரச்சினைக்கு வணிக விளம்பரங்கள் பெற்றால், உங்கள் சாம்ராஜ்யம் சரிந்து விட்டது என்று அர்த்தம்.

டிஜே வகுலா

கூட்டு நிதி (crowd funding) பெறுவதன் மூலம் நிதிப் பிரச்சினையை தீர்க்கலாம்

நந்தன்

கருத்தியல் தளத்தில் வினவின் பங்கு மிகவும் முக்கியம். மார்க்சிய லெனினிய புரட்சிகர அரசியலை தெரிந்துகொள்ள நுழைவாயிலாக பங்காற்றுகிறது. உழைக்கும் மக்களுக்கென்று ஒரு இணைய தளம்.

கடந்த ஒரு வருடமாக வினவில் வரும் கட்டுரைகளில், அதற்கு முன்பு இருந்த ஆழ்ந்த மற்றும் ஆய்வுபூர்வமான விமர்சன பாணியிலான கட்டுரைகள் குறிப்பாக தரம், இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் மூன்று வருடங்களுக்கு முன்பு வினவு படிக்க ஆரம்பித்த பின்தான் மார்க்சிய அரசியலை பற்றிய புரிதல் ஏற்பட்டது. ஆனால் சமீபகாலமாக வரும் கட்டுரைகள் அதிகம் மொழிபெயர்ப்பு அல்லது பிற தளங்களில் உள்ளதை பகிரப்படுவதாகத்தான் உள்ளது. ஏன் என்ன ஆயிற்று?

படிக்க:
வினவை வாசிப்பவர்கள் யார் ? – மருதன்
மோதலில் துவங்கிய எனது அறிமுகம் : ரிஷி !

லோகு

முற்போக்கு முகமூடிகள் உலவும் காலம் .எனவே அவர்களை ஆய்வு செய்து கட்டுரை தேவை

பெயர் குறிப்பிடவில்லை

மொத்தமும் ஊழல் படித்த சூழலில் வினவு எனக்கு நம்பிக்கையையும், மேம்பட்ட சிந்தனையையும் கொடுக்கிறது.

பெரியசாமி சங்கர்

நீங்கள் சந்தாவை அடிப்படையாகக் கொண்ட தளமாக மாற்றலாம். ஒருவர் உள்நுழைந்து தமது சந்தா காலகட்டம் எப்போது முடிகிறது எனப் பார்த்துக் கொள்ளலாம்.

சந்தாவை பரிசாக ஒருவர் தமக்கு தெரிந்தவர்களுக்கு வழங்கத்தக்க வகையிலான திட்டத்தை அமல்படுத்தலாம். ஸ்க்ரோல் இணையதளத்தில் இருக்கும் சந்தா மாடல் குறிப்பிடத்தக்க உதாரணம். அதனை முயற்சிக்கலாம்

ராஜேஷ்குமார்

வினவு படிச்சு ரொம்ப நாளாச்சு. எல்லா தகவலும் இப்ப வீடியோவாகவும், முகநூலில் சுருக்கமான செய்திகளாக வந்துவிடுவதால் வினவு பார்ப்பது குறைந்து விட்டது. இப்படி கூறுவது வருந்ததக்கது தான். ஆனால் அதுதான் உண்மை.

எனக்கு தெரிந்து எல்லா செய்தி தாள்களும், பத்திரிகைகளும் முகநூல் அல்லது வீடியோ வடிவில் கிடைப்பதால் வினவு தங்கள் கட்டுரைகளையும் வீடியோ வடிவில் கொடுத்தால் ஈசியாப் புரியும், நல்லா போய் சேரும் என்று நினைக்கிறேன்.

அசுரன்

கருப்பர் கூட்டம் YouTube chanel போல முற்போக்காளர்களின் பேச்சுகளை போட வேண்டும். மாற்றத்திற்காக தொடரட்டும்

பெயர் குறிப்பிடவில்லை

மறுமொழிகள் மற்றும் விவாதங்களுக்கு இன்னும் சிறப்பான களம் அமைத்தால் நன்று. முன்பக்கத்தில் மறுமொழிகள் இன்னும் நிறைய காணக்கிடைத்தால் நலம். அதற்காக எழுத்துக்களின் அளவு குறைக்க முடியுமா என்று யோசிக்கலாம்.

சாமுவேல் சார்லி

அரசின் அலட்சியப்போக்கையும், திட்டமிட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதையும், தத்துவார்த்த ரீதியில் அம்பலப்படுத்தும் வினவு போன்ற ஊடகம் தேவை.

நிதிப் பிரச்சினையை சமாளிக்க,  உள்நாட்டு பெருமுதலாளிகள் அல்லாத நிறுவனங்களின் விளம்பரங்கள் அனுமதிக்கலாம்.

படிக்க:
என் பார்வையில் வினவு – மா சிவகுமார்
என் பார்வையில் வினவு – வளவன்

மணிகண்டன்

வினவில் மாற்று கருத்துக்களுக்கு இடம் இல்லாமல் இருக்கிறது, உங்களுக்கு எதிராக இருப்பதால் என் கருத்துக்களை தடை செய்கிறீர்கள்… நான் உங்களுக்கு எதிராக பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் நீங்கள் மற்றவர்களுக்கு எதிராக பயன்படுத்துவது தான் (உங்களை போல் இல்லாமல் நான் நாகரிகமாக வார்த்தைகளை பயன்படுத்துகிறேன்).. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கடமை தேசவிரோத (இதை உங்களால் மறுக்கவே முடியாது) கம்யூனிஸ்ட்களுக்கு இருக்கிறது.

ஊடக நேர்மை வேண்டும்… உங்களை போன்ற கம்யூனிஸ்ட் ஊடகங்கள் இந்தியாவை சீனாவின் பார்வையில் இருந்து பார்க்கிறீர்கள் என்றால் மற்றவர்கள் பிஜேபி காங்கிரஸ் என்று ஒவ்வொருவரின் நிலையில் இருந்தே செய்திகளை வெளியிடுகிறார்கள். இதனால் உங்களை போன்ற கம்யூனிஸ்ட் ஊடகங்களையும் நம்ப முடிவது இல்லை மற்ற ஊடங்களையும் நம்ப முடிவது இல்லை.. பெரும்பாலும் சமூகவலைத்தளங்களில் மக்கள் வெளியிடும் கருத்துக்களில் உண்மை இருப்பதாகப்படுகிறது. நிச்சயம் உங்களிடம் ஊடக நேர்மையில்லை அதற்கு நீங்கள் மோடி பிஜேபிக்கு எதிராக வெளியிடும் பல பொய் செய்திகளே ஆதாரம்.

உங்களின் கம்யூனிச சிந்தனை சமூகத்திற்கு அவசியம் தான் ஆனால் அதில் வெறுப்பும் தேசத்தை அழிக்கும் சிந்தனையும் இருப்பதால் முழுமையாக ஏற்க முடிவதில்லை.

ராமச்சந்திரன் வீரன்

வினவு பக்கத்தில் மருதையனுடைய ஒட்டு மொத்த உரைகளையும், கோவனுடைய அனைத்து பாடல்களையும் திரும்ப திரும்ப அப்டடேட் செய்யவும்…

பெயர் குறிப்பிடவில்லை

30 வினாடிகள் கொண்ட, அரசியல் வீடியோ வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் பதிவுகள் வெளியிடவும். மீம்ஸ் வெளியிடவும், நவீன தற்கால டிரென்டிங்கில் டெக்னாலஜியை பயன்படுத்தவும். அவசர தற்கால உலகுக்கு ஏற்றபடி, கருத்துக்களை சுருக்கமாக வெளியிடவும். நன்றி

கற்பக சுந்தரம்

எனக்கு தெரிந்து தமிழில் இருக்கும் உருப்படியான ஒரே ஊடகமே நீங்கள் தாம்.

நிதிப் பிரச்சினைக்கு, சந்தா எல்லாம் வேஸ்ட். விளம்பரம் பெறலாம். ஆனால், விளம்பரங்களை தரம் குறைந்து தேர்ந்தெடுக்கக் கூடாது

அறிவுடைநம்பி குப்புதாஸ்

வினவு மக்களுக்கு அவசியமானது. நடப்பு விவகாரங்கள், தேவைகள் குறித்த ஆழமான கட்டுரைகளை அதிகமாக வெளியிட வினவுதளம் மேலதிக ஆட்களை அமர்த்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது

கலிமுல்லா முஸ்தக் அகமது

நீண்ட கால தளமாக இருந்தாலும் இன்னும் செய்திகளை படிக்கும் ஆவல் உள்ளவர்களைக்கூட சென்று சேரவில்லை.

குறிப்பிட்ட வாசகர்களை தாண்டி பெரும்பாலான மக்களை சென்றடையும் வண்ணம் செய்திகள் (இளைய தலைமுறை அதிகம் படிப்பதை விரும்பவில்லை அல்லது படிக்கும் ஆற்றல் குறைவு) படங்களாக, மீம்ஸ்கள், பெரிய செய்திகளை சிறு பகுதிகளாக மூன்று, நான்கு செய்தியாக பிரித்து வெளியிடுதல். செய்திகளை படிக்க உதவும் ஆண்ராய்ட் ஆப்களில் வினவை இடம்பெற செய்வது என சில ஆக்கப்பூர்வமான அல்லது செயல்படுத்தக்கூடிய மாற்றங்களை செய்யலாம்.

மக்கள் நலன் சார்ந்த விளம்பரங்கள் , உள்நாட்டு தயாரிப்பு சாதனங்கள் , எளிய மக்களின் பொருட்களை விளம்பரப்படுத்துதல் மூலம் நிதிப் பிரச்சினையை சமாளிக்கலாம்.

படிக்க:
கடவுள், ஆன்மா, முக்தி…….. கேள்வி பதில்!
விபச்சாரத்தை ஏன் அங்கீகரிக்க கூடாது? – கேள்வி பதில்!

சங்கர் க

உங்கள் தளத்தில் வரும் கருத்துக்களோடு முரண் பட்டாலும் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் நீங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றே விரும்புகிறேன். வணிக விளம்பரங்கள் பெற்று நடத்தவும்.

விக்கிரமாதித்தன் அருள்நாதன்

சாதாரண மக்களுக்கு இது சென்றடையவில்லை. சிறு பிரிவு மக்களோடு நின்றுவிடுகிறது.

பெயர் குறிப்பிடவில்லை

மக்களின் உரிமைகளை அடைய வினவு தளத்தின் செயல்பாடுகள் போதுமானவை என்று கருதுகிறீர்களா? ஏற்கெனவே நீடிக்கும் அரசியலமைப்பு உங்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர அனுமதிக்காது.

மூர்த்தி. ஆர்

பல சமயங்களில், நாம் பிரச்சினைகளின் சரியான அடிப்படைக் காரணத்தை புரிந்துகொள்வதில்லை. பிரச்சினைகளின் வரலாற்றைத் தெரிந்து கொண்டு, பிரச்சினைகளின் மூலக்காரணங்களைத் தெரிந்து கொண்டால் தான் மதவாத கட்சிகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களுக்கு விளக்க முடியும்.

நிதிச் சுமையை சமாளிக்க நாம் எப்போதும் வாசகர்களுக்குப் பின்னால்தான் இருக்கிறோம். பொதுமக்கள் (உழைக்கும் மக்கள், கல்லூரி மாணவர்கள்) பங்கேற்கும் விதமாக நல்ல தலைப்பில் செமினார் போன்றவை ஏற்பாடு செய்யலாம். அதன் மூலம் நிதி திரட்டலாம். சரியான நபர்களிடமிருந்து விளம்பரம் பெறலாம்.

கனகரத்தினம் சிவசுதன்

ஒரு மாற்று ஊடகம் என்ற முறையில் மிக அவசியமானது… காப்பரேட் முதலைகள் உலகை விழுங்கி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இதன் தேவை மிக மிக அவசியமானது. மாற்று அரசியல் சிந்தனைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு வினவுக்கு உள்ளது

ஆர்வமுள்ள மாற்று அரசியல் சிந்தனையுள்ள நன்கொடையாளர்களை இனம் கண்டு அவர்களின் ஒத்துழைப்பை பெற்று நிதிச்சுமையை சமாளிக்கலாம்.

பெயர் குறிப்பிடவில்லை

உங்களால் உலக இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்ப்பதில் சிறிது கவனம் செலுத்த முடியுமா? (வினவு வித்தியாசமானதாக இருக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் அதை நிரூபித்திருக்க்கிறீர்கள். இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பது எனது வேண்டுகோள்). சில சமயங்களில் வினவு கம்யூனிஸ்டுகளுக்கு மிக அதிக ஆதரவாக இருப்பதாக நான் உணர்கிறேன்.

வெங்கட் ராகவன்

வினவு தளம், இந்த சமூகத்திற்கு அவசியமானது. ஏனெனில் அனைத்து ஊடகங்களும் மோடி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றன. இந்த நாட்டில் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு இல்லை. வினவுதளம்தான் இத்தகைய செய்திகளை தொகுத்து வெளியிடக்கூடிய சிறந்த தளமாக இருக்கிறது

செந்தில் பிச்சை

வினவு தளத்தின் தேவை மிக அவசியமானது. ஆனால் இன்னும் இந்த தளத்தை விரிவு படுத்த வேண்டும். நீங்கள் தற்போது கொடுத்த சர்வே கூட சரியாக வரவில்லை. இதுபோன்ற செய்திகளை அதிகம் புரிந்து கொள்ள, முற்போக்கு சிந்தனையுள்ள காணொளிகளாக வெளியிடுங்கள். அதுதான் எளிமையாகவும் எளிமையாக இருந்தால் தான் மக்களை சென்றடையும்.

தீரன் வீரன்

இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்திகளை துணிச்சலாக பதிவு செய்ய வேண்டும்… நட்பு சக்திகள் மீதான அடக்குமுறையையும் செய்தியாக கொடுக்க வேண்டும். மக்களை நேரடியாக சந்தித்து, மாதம் ஒருமுறை மக்களிடம் சென்று நிதி வசூல் செய்யலாம்.

சக்திவேல்

வினவு தளத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். வாசகர் வட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அதன்மூலம் நிதி பெற வேண்டும்.

மலர்வண்ணன். எம்

தனிநபரையோ, ஒரு இயக்கத்தையோ விமர்சிப்பதைத் தவிருங்கள். தனிநபரை, இயக்கத்தை கண்டிப்பதை விட ஆதாரங்கள், காரணங்களை பொதுவில் பகிருங்கள். நடுநிலையான ஊடகத்திற்கு சரியான மாற்றாக வினவு தளம் இருக்காது என்ற பார்வையை ஏற்படுத்தும்.

சிறுபிள்ளைத்தனமான ஆலோசனையாகவும் இருக்கலாம். கட்டுரைகளை ஒலி வடிவில் வழங்கக்கூடிய ஒலி சேனலை உருவாக்கி, அதனை பணம் கட்டும் சேவையாக மாற்றிவிடுங்கள். உள்ளூர்மயப்படுத்தலையும், ஆங்கில மொழி பெயர்ப்பையும் ஏற்பாடு செய்தால் நிதி திரட்டலாம்.

பிரகாஷ்

இந்துத்துவத்திற்கு எதிராக பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளை நமது மார்க்சிய கொள்கைகளோடு இணைக்கிறது வினவு. பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் பெரும் வெளியை வினவுதளத்தில் நாம் ஏற்படுத்தவேண்டும்.

பெயர் குறிப்பிடவில்லை

மிக மிக முக்கியமான தளம். அதிகமான உபயோகமுள்ள தளம். காலத்தின் தேவை வினவு

படிக்க:
என் பார்வையில் வினவு – சுந்தரி, கிளாரா
பதினோராம் ஆண்டில் வினவு ! என்ன கற்றுக் கொண்டோம் ?

சூரியகுமார் சி.ஆர்

மக்கள் உணர்வை பாராபட்சமின்றி பிரதிபலிக்கும் ஊடகம் என்ற பெரும் மரியாதை இருக்கிறது. பதிவுகளுக்கும், தொழில் நுட்பங்களுக்கும், வழக்குகளை சந்திக்கவும், சமூக எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் வினவுக்கும் நிர்வாகிகளுக்கும் என்ன வசதிகள், ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என நினைப்பதுண்டு!  மக்கள் ஆதரவு பெருக இப்போதைக்கு பதிவுகளுக்கு ஊக்கமளித்து சிறந்தவற்றை பகிர்கிறேன். இன்னும் இயன்றவரை உதவ ஆசை!

பெயர் குறிப்பிடவில்லை

இன்றைய சூழலில் யார்(அரசியல்வாதிகள், அரசாங்கம்) மீதும் நம்பிக்கை என்பதே இல்லை. மக்களுக்கு உண்மையாக இருந்து சமூக பிரச்சினைகளை பார்ப்பது என்ற வினவின் நேர்மை அவசியமானது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க