ந்த ஆண்டு மே மாதத்தோடு மோடி அரசின் பதவிகாலம் முடிகிறது. ஆகவே இந்த ஆண்டின் இடைக்கால வரவு செலவு அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது மோடி அரசு. இன்று (01.02.2019)  காலை 11 மணி முதல் அருண் ஜெட்லிக்கு பதிலாக நிதியமைச்சராக செயல்படும் பியூஷ் கோயல் நிதிநிலை அறிக்கையை படித்து வருகிறார். நண்பகல் 12 மணி வரை அவர் கூறிய அருளுரைகளை ஒட்டி இந்த பதிவு முதல்கட்டமாய் வருகிறது.

இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னால் தேசிய சாம்பிள் சர்வே அலுவலகத்தின் வேலைவாய்ப்பின்மை குறித்த அறிக்கை அரசல் புரசலாக வெளியாகியிருக்கிறது. இந்த அறிக்கை வெறுமனே நகல் அறிக்கைதான் என்று நிதி ஆயோக் கூறி சமாளிக்க முயன்றது. ஆனால் தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் முன்னால் தலைவர் மோகனன், அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதற்காக கடந்த வாரம் பதவி விலகினார்.

மேலும் இது நகல் அறிக்கை இல்லை, இதுதான் இறுதி அறிக்கை என்றும் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். மோடி அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை விகிதம் நகர்ப்புறத்தில் 7.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் இருக்கிறது.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

மேலும் 15 முதல் 29 வயது பிரிவினரின் வேலையின்மை விகிதம் 2011 – 12-ம் ஆண்டில் 5 சதவீதமாக இருந்தது 2017 – 2018-ம் ஆண்டில் அது 17.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோன்று கிராமப்புற பெண்கள் வேலையின்மை விகிதம் 2011 – 12-ம் ஆண்டில் 4.8 சதவீதமாக இருந்தது 2017 – 18-ல் 13.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. மோடி அரசின் இடைக்கால வரவு செலவு அறிக்கை ஒரு மோசடி என்பதற்கு இந்த விவரமே போதுமானது.

இந்த பட்ஜெட், முழு பட்ஜெட் என்று ஊடகங்களிடம் செய்தியை கசிய விட்ட பாஜக, தற்போது மோடி மூலம் இது இடைக்கால பட்ஜெட்தான் என்று தெரிவித்திருக்கிறது. ஒருவேளை வேலை வாய்ப்பின்மை பிரச்சினையை திசை திருப்புவதற்காக கூட அவர்கள் இதை கிளப்பி விட்டிருக்கலாம். ஆற்றோடு போகிறவன் அலங்கார உடை போட்டு போனால் என்ன அம்மணமாக போனால் என்று யோசிப்பதற்கு கூட இவர்கள் விடுவதில்லை.

நேரு அல்லது மோடியின் ஜாக்கெட்டை சாம்பல் வண்ணத்தில் அணிந்து வந்த பியூஸ் கோயல் சட்டையில் மூவர்ணக்கொடியை பதித்திருக்கிறார். என்ன இருந்தாலும் தேசபக்தி முக்கியமல்லவா? கூடவே வழக்கமாக நிதியமைச்சர்கள் சூட்கேசுடன் போஸ் கொடுப்பது போல கொடுத்துவிட்டுதான் பாராளுமன்றத்திற்கு சென்றார். இவரது வருகையை ஒட்டி மும்பை பங்குச் சந்தையின் பங்குச்சந்தை குறியீட்டு எண் தாழ்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. பங்குசந்தை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் நாட்டு மக்களுக்கு பிரச்சினை இல்லை என்றாலும் கார்ப்பரேட் உலகில் இது ஒரு அபசகுனமாக பார்க்கப்படக் கூடும்.

படிக்க:
♦ அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் !
♦ மோடி அரசின் பட்ஜெட் முதல் மரியாதை யாருக்கு ? பி. சாய்நாத்

“மோடி அரசு வேலைவாய்ப்பின்மை குறித்த அறிக்கை வெளியிட மறுப்பது தவறு. அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுவது முக்கியமாகும். ஏனெனில் அதுதான் நம்பகமான தகவல்களை அறியுமாறு நாட்டு மக்களுக்கு உதவுகிறது. மேலும் பொருளாதார தளத்தில் என்ன நடக்கிறது என்பதோடு அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்வதற்கும் அது உதவுகிறது” என ஜே.என்.யூ பொருளாதார பேராசிரியர் ஜெயதி கோஷ் தெரிவித்திருக்கிறார். அதனால் என்ன அறிக்கை விவரங்களுக்கு ஒரு ஃபோட்டோஷாப் வித்தையோடு படம் காண்பித்தால் போயிற்று! இந்த நான்கு ஆண்டுகளில் சங்கிகள் உருப்படியாக கற்றுக் கொண்ட கலையே அடோப் நிறுவனத்தின் ஃபோட்டோஷாப் மட்டும்தான்.

வழக்கமாக பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை படிக்கப்படுவதற்கு முன்னால் நிதி அமைச்சரும் அவரது சக அமைச்சர்களும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேனீர் விருந்தில் கலந்து கொள்வார்களாம். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து சடங்கு இனிதே நடந்ததாக குடியரசுத் தலைவரின் டிவிட்டர் கணக்கு தெரிவித்திருக்கிறது. சாகப் போற நேரத்திலும் சங்கரா ஜெபிப்பது முக்கியமல்லவா!

போதிய இடமின்றி இருக்கும் அரசு மருத்துவமனைகள்

இடைக்கால நிதிநிலை அறிக்கை படிக்கப்படுவதற்கு முன்னர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மறுத்து வரும் மத்திய அரசை கண்டித்து நடந்திருக்கிறது. இதே நேரம் ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில், திருப்பதி தேவஸ்தானம் 150 கோடி ரூபாயில் திருமலைக் கோவில் கட்டப் போகிறதாம். அதை முதல்வர் சந்திரபாபு துவக்கி வைத்திருக்கிறார். இங்கே ஆன்மீகம், அங்கே சிறப்பு அந்தஸ்து!

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் அருண்ஜேட்லி நலம் பெற வாழ்த்தி, தனது உரையை பியூஸ் கோயல் தொடங்கினார். அடுத்தபடியாக 2022-ல் புதிய இந்தியா பிறந்தே தீரும் என்று அவர் முழங்கினார். அந்த இந்தியாவில் சுத்தம், சுகாதாரம் உடல் நலம் அத்தனையும் சக்கை போடு போடும் என்றார். ஆனால் நிதியமைச்ச்ர் அருண் ஜெட்லி உடல்நலத்திற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். ஒருவேளை 2022-ல் இவர்கள் இங்கேயே சிகிச்சை பெறுவார்கள் என்று நம்பிவிடாதீர்கள். அவர்கள் சொல்லும் சிகிச்சை, அறுத்து விட்டு “நூல் இல்லை” என்று அவதிப்படும் அரசு மருத்துவமனை”களுக்குரியது.

மேலும் 2022-ல் அனைவருக்கும் வீடு, கழிப்பறை, மின்சார வசதி சொந்தமாக இருக்கும் என்றார். அப்போது விவசாயிகளுக்கு வருமானம் இருமடங்காக உயர்ந்து இருக்கும் என்று வேறு அடித்துவிட்டார். இந்தப் பொய்களை பார்த்து பாராளுமன்றத்து தூண்களுக்கே அழுகை வந்திருக்கும், அவை அஃறிணைப் பொருட்கள் என்றாலும்!

படிக்க:
♦ ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே – காணொளி !
♦ மோடியின் தூய்மை இந்தியா! காறி உமிழ்ந்த ஐ.நா !

வெளிப்படையான நிர்வாகத்தில் புதிய யுகத்தை துவங்கியதாக கூறினார் நிதியமைச்சர். வேலை வாய்ப்பின்மை அறிக்கை வெளியே விடாமல் அமுக்கியதிலேயே இவர்களது வெளிப்படைத் தன்மை வெளிப்படையாக தெரிகிறது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், பினாமி சட்டம் இரண்டும் ரியல் எஸ்டேட் துறையை புதிதாக மாற்றி இருக்கிறது என்றார். அது என்ன மாற்றம் என்று அம்பானி – அதானிகளைத்தான் கேட்க வேண்டும். மேலும் நிலக்கரி மற்றும் அலைக்கற்றை போன்று இயற்கை வளங்களுக்கு வெளிப்படையான ஏலம் நடத்தி இருக்கிறோம் என்றும் அவர் கூறினார் நிலக்கரியில் கோவா முதல் கர்நாடக துறைமுகங்கள் வரை அதானி செய்த ஊழல் முறைகேடுகள் ஆஸ்திரேலியா வரை பிரபலமாக இருக்கிறது.

நிதி அமைச்சரின் வரவு செலவு அறிக்கை ஒலி அலைகளாக வெளியே வருவதற்குள் ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து, தற்போது டாலருக்கு நிகரான மதிப்பு 70.17 ஆக உள்ளது.

பாஜகவின் ஆசியோடு தப்பிச் சென்ற ‘தொழிலதிபர்கள்’

வராக்கடனை குறைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் வங்கித்துறை செயல்பாடு சிறந்த பலனை தர தொடங்கியுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இதை கேட்டு மல்லையாவும் நீரோ மோடியும் வெளிநாடுகளில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

மேலும் தவறு செய்த தொழிலதிபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுவதாகவும் 98% கிராமங்களில் சுகாதாரம் வெற்றிகரமாக செயல்படுவதாகவும் 5.45 லட்சம் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியாவின் புள்ளிவிவர மோசடிகள் குறித்து வினவு தளத்திலேயே நிறைய கட்டுரைகள் உள்ளன.

ஹரியானாவில் நாட்டின் 22-ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அவர் கூறினார். ஏற்கனவே நான்காண்டுகளில் அடிக்கல் நாட்டப்பட்ட 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பத்து சதவீதம் கூட வேலைகள் முடியவில்லை, நிதி ஒதுக்கவில்லை என்ற செய்தி சமீபத்தில் ஊடகங்களில் வந்து சந்தி சிரித்தது. பாஜக-வினருக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பதால் அவர்கள் சிரிக்காமலேயே அவலப் பொய்களை அடித்து விடுகிறார்கள்.

படிக்க:
♦ மேக் இன் இந்தியா : சுதேசி வேசத்தில் வரும் விதேசி முதலீடு !
♦ மேக் இன் இந்தியா : வல்லரசா ? கொத்தடிமை தேசமா ?

செல்போன் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. மொத்தம் 15 சதவீதம் கூடியிருக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவில் செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளதாக அவர் கூறினார். வேலை வாய்ப்பின்மையில் 45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி அரசு இங்கே வேலை வாய்ப்பு என்று எதைக் கூறுகிறது?

முத்ரா திட்டத்தில் 70 % பெண்கள் பயனடைந்துள்ளனர். இதற்கு 7.2 லட்சம் கோடி செலவாகிறது என்றார் அமைச்சர். அந்த 70% பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று இந்தியா முழுவதும் தேடிப்பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. கும்பமேளாவிலேயே ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் இறக்கப்படும் போது, முத்ரா திட்டத்திற்கு யாரை இறக்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

மேலும் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் பேறுகால விடுப்பு தரப்பட்டிருப்பதாக கூறுகிறார். இந்த அரையாண்டு பேறுகால விடுமுறைகள் அரசுப் பணி தவிர தனியார் நிறுவனங்களில் கூட கிடையாது.  கூடுதலாக 8 கோடி இலவச கியாஸ் இணைப்புகள் தரப்படும் என்றார் அமைச்சர். சமையல் எரிவாயு விலையை உயர்த்தி விட்டு, மானியத்தை ரத்து செய்துவிட்டு இணைப்புகள் அதிகரித்து என்ன பயன்?  பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காமதேனு என்ற சிறப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் அமைச்சர். மடி விற்றிய மாடுகளை விற்பதற்கு விவசாயிகளுக்கு தடை போட்டுவிட்டு தேனும் பாலும் ஓடுவதாக கூறுவதற்கும் ஒரு அழுத்தம் வேண்டுமல்லவா?

மீனவர்களுக்காக மீன்வளத்துறை அமைப்பதாக அமைச்சர் கூறியிருப்பது வரும் தேர்தலில் மீனவ கிராமங்களில் வாக்கு சேகரிப்பதற்கு பயன்படுமே அன்றி மீனவர்களுக்கு என்ன பயன்?

தொடர்ந்து ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாகவும் அதன் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நுகர்வோருக்கு பலன் கிடைத்திருக்கிறது என்கிறார் அமைச்சர். ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தபிறகு அனைத்து நிறுவனங்களும் தமது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியை நுகர்வோர்வசம் தள்ளிவிட்ட நிலையில் ஓட்டல் முதல், ரீசார்ஜ் வரை மக்கள் படும் கஷ்டங்கள் அதிகம். மறைமுக வரியாக நாம் அளிக்கும் பணம் முன்னெப்போதைக் காட்டிலும் அதிகம்.

படிக்க:
♦ ஜி.எஸ். டி. – பணமதிப்பு நீக்கத்தால் ரூ. 4.75 இலட்சம் கோடி இழப்பு
♦ இந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம் !

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பெரும்பான்மை பொருள்கள் தற்போது 0% முதல் 5% ஜிஎஸ்டி வரி வளையத்திற்குள் வந்திருப்பதாக அமைச்சர் கூறினார். இந்த வளையத்தை அவர்கள் இஷ்டம்போல அவ்வப்போது மாற்றி வருகிறார்கள். உண்மையில் அத்தியாவசிய பொருட்களின் வரிவிதிப்பிலோ, விலைவாசி உயர்விலோ இன்றுவரை மாற்றமில்லை என்பதே உண்மை.

நான்காண்டுகளுக்கு முன்னர் இருந்த நேரடி வரி, ரூ.6.38 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது என்றார் அமைச்சர். இதே போன்று மறைமுக வரி எவ்வளவு உயர்ந்தது என அவர் கூறவில்லை. மறைமுக வரிதான் மக்களை கசக்கி பிழியும் வரி முறை. இது குறைவாகவும், நேரடி வரி அதிகமாகவும் இருந்தால்தான் மக்களுக்கு வரிச்சுமை குறையும்.

அதிகாரிகள் இன்றியே 99.5% வருமானவரி நடவடிக்கைகள் இணையத்தில் நடந்திருப்பதாக அவர் கூறினார். இதற்காக வணிகர்கள் புதிய ஆடிட்டர்கள், புதிய இணைய புரோக்கர்கள் என்று இந்த ஆண்டு மட்டும் அழுத தொகை எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. இரயில்வே துறையை பொருத்தவரைக்கும் வந்தே மாதர விரைவு வண்டி அல்லது ட்ரெயின் 18 வேகத்தையும் சேவையையும் பாதுகாப்பையும் வழங்குவதாகவும் அது முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்று பெருமை பேசினார். இத்துடன் புல்லட் ரயில் எனும் வெட்டி திட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் ‘மேக் இன் இந்தியா’வின் இலட்சணம் புரியும்.

இராணுவத்திற்கு கூடுதல் நிதி வேண்டுமானாலும் ஒதுக்குவாராம் ! யாருக்கு அம்பானிக்கா ? அதானிக்கா?

பாதுகாப்பு துறைக்கு ரூ. 3 லட்சம் கோடியை அள்ளி வழங்கியிருக்கிறார். மேலும், தேவைப்படும் எனில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ரஃபேல் விமானங்களுக்கு 41% கூடுதல் விலை அளிக்கப்படும்போது, இந்த தொகை உயர்வதில் ஆச்சரியம் இல்லை. தொழில் துவங்கும் முயற்சிகளுக்கான தரப்பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், இந்திய இளைஞர்கள் வேலை தேடுவதற்கு பதில் வேலை கொடுக்கும் நிலையை அடைந்து இருப்பதாகவும் அவர் கூறினார். அதனால்தான் 45 ஆண்டுகால வேலையில்லா திண்டாட்ட சாதனை முறியடிக்கப்பட்டு விட்டது போலும். இனி டிவிக்களில் வாசிக்க வரும் பாஜக நிலைய வித்வான்கள் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பிற்கு காரணம் அனைவரும் வேலை கொடுக்கும் முதலாளிகளாக மாறிவிட்டார்கள் என்று பொய்யே தற்கொலை செய்யும் வண்ணம் புளுகுவது உறுதி.

முறைசாரா துறையில் இருக்கும் தொழிலாளிகளுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்படுமாம். இந்த மகா பென்ஷன் திட்டம் பிரதான் மந்திரி சரம் யோகி மந்தன் என்று அழைக்கப்படுகிறது. இதற்காக மாதம் 100 ரூபாய் ஒரு தொழிலாளி அளிக்க வேண்டும். அவருக்கு 60 வயது ஆன பிறகு மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்படுமாம் இதன் மூலம் 10 கோடி முறை சாரா தொழிலாளர்களுக்கு பலன் இருக்கும் என்று அவர் கூறினார். அமைப்பு சாரா தொழிலாளர்களின் முதல் பிரச்சினையே அவர்களுக்கு சான்றிட அங்கீகாரம் மற்றும் அடையாளம் இல்லை. அது இல்லாத போது இவர்கள் அளிக்கும் பென்சன் திட்டம் என்பது நடைமுறையில் ஒரு சில லட்சம் பேர்களுக்கு கிடைப்பது கூட கடினம்.

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார நிலையை அடைந்து விடுவோம் நமது இளைஞர்கள் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தலைமை தாங்குவார்கள். வேலைகளை உருவாக்குவார்கள் எதிர்கால எலக்ட்ரானிக் கார்களின் இடமாக இந்தியா இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஏன் இனி இந்தியாவில் ஏழைகள், தொழிலாளிகள் என்று யாருமில்லை, எல்லாரும் முதலாளிகள்தான் என்று ஒரே போடாக போட்டு விடலாமே?

மதன்