Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 810

விலைவாசி உலகத்தரமானது! பட்டினி நிரந்தரமானது!!


vote-012அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்குச் சந்தைக்கு வரும் ஏழை-எளிய மக்கள் விலைவாசியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தும் கொதித்துப் போயும் கிடக்கிறார்கள். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, பால், காய்கறிகள் முதலிய இன்றியமையாப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக எகிறிக் கொண்டே போகிறது. சந்தையில் கிலோ 13 ரூபாயாக இருந்த அரிசி 28 ரூபாயாக, அதாவது இரண்டு மடங்குக்கு மேலாகி விட்டது. 8 ரூபாயாக இருந்த கோதுமை 15 ரூபாயாகி விட்டது. 17 ரூபாயாக இருந்த சர்க்கரை 47 ரூபாயாகிக் கசக்கிறது.

கடந்த 11 ஆண்டுகளிலேயே மிக அதிக அளவாக 2009 டிசம்பர் கணக்குப்படி உணவுப் பொருட்களின் பணவீக்கம் 19.75 சதவீதத்தை எட்டிய பிறகு, எதிர்க்கட்சிகளும் செய்தி ஊடகங்களும் புலம்பத் தொடங்கின. நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் நடத்தும் வழக்கமான பம்மாத்துக்களால் மக்கள் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை நாலுகால் பாச்சலில் முன்னேற்ற விரும்பி ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் ஏதோ எதிர்பாராத காரணங்களால் தற்செயலாகவோ, தானாகவோ பணவீக்கம், விலைவாசி உயர்வு என்ற நெருக்கடிக்குள் பொருளாதாரத்தைச் சிக்க வைத்து விட்டன என்பதாகச் செய்தி ஊடகங்கள் புலம்புகின்றன. அதேசமயம், மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பலின் தலைமையிலான பொருளாதாரப் புலிகள் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைச் சரி செய்து விடுவார்கள் என்று செயற்கையான நம்பிக்கையூட்டப்படுகின்றன.

தற்போது நிலவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பணவீக்கம் – விலைவாசி உயர்வு என்ற நெருக்கடி எதிர்பாராத காரணங்களால் தானாகவோ, தற்செயலாகவோ ஏற்பட்டுவிட்ட பிரச்சினை அல்ல. பொருட்களின் விலையைக் கேட்டவுடன் தெருமுனையில் உள்ள சில்லரை விற்பனையாளர் வேண்டுமென்றே திடீரென்று அதிக விலை வைத்து விற்கிறார் என்று பாமர மக்கள் கருதுவதைப் போன்று இது நடக்கவில்லை. உண்மையில் விலைவாசி உயர்வு என்பது தமது ஆட்சியையோ, தாம் கட்டியமைக்கத் திட்டமிட்டுள்ள பொருளாதாரத்தையோ, தாம் அக்கறைப்படும் மக்கள் பிரிவினரின் நலத்தையோ பாதிக்கும் ஒரு பிரச்சினையாகக் கருதி ஆட்சியாளர்கள் அஞ்சிவிடவில்லை. குட்டையில் நீந்திக் களிக்கும் எருமை மாடுகளை, சாக்கடையில் படுத்துப் புரளும் பன்றிகளைப் போலத்தான் மன்மோகன் – மாண்டேக் சிங் கும்பலுக்கு விலைவாசிஉயர்வு என்பது ஒரு பிரச்சினையே இல்லை. விலைவாசி உயர்வு என்பது தமது எஜமானர்களுக்கும் தமக்கும் ஆதாயம் தரத்தக்கதாகவே இவர்கள் கருதுகிறார்கள்.

எனவேதான், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பரிதவிக்கையில் கூட 30 இலட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கு மன்மோகன் சிங் அரசு அனுமதித்திருக்கிறது. இந்த ஏற்றுமதிக்கான சலுகையாக பல கோடி ரூபாய்களை மத்திய அரசு பெருமுதலாளிகளுக்கு மானியமாக வழங்கியிருக்கிறது. அதேசமயம், விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக என்று சொல்லிக் கொண்டு, அதைவிடக் கூடுதலான விலையில் சர்க்கரை இறக்குமதிக்கும் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு தனிநபரும் 50,000 டன் வரை உணவு தானியத்தை இருப்பு வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருப்பதன் மூலம், உணவுப் பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கும், சந்தையில் விலையை ஏற்றுவதற்கும் சட்டப்படி அனுமதி அளித்துள்ளது. அம்பானி, பிர்லா போன்ற முதலாளிகள் சில்லரை விற்பனையில் நுழைந்த பிறகு இந்த சலுகையின் மூலம் கொள்ளை இலாபமடிப்பதற்குச் சட்டபூர்வ அனுமதி அளித்துள்ளது.

அம்பானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகள் பெருமளவு சில்லரை வணிகத்தில் நுழைந்து ஏகபோக ஆதிக்கத்தை நிறுவத் தொடங்கிய பிறகு, உணவு தானியங்கள், பருப்பு வகைகளில் மட்டுமல்லாது, சமையல் எண்ணெய், சர்க்கரை, காய்கறி-பழம் ஆகியவற்றிலும் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்வது, புறநகர்ப் பகுதிகளில் குளிர்பதன வசதிகளுடன் பிரம்மாண்டக் கிடங்குகளில் சேமித்து வைத்து ஏகபோகமாக்கிக் கொள்ளையடிக்கின்றனர்.

இதைத் தடுக்காத அரசு, விவசாய உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாகக் கோரியும் உணவுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்குகளை அமைத்துக் கொடுக்க மறுத்தே வருகிறது. ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் 70,000 டன்கள் உணவு தானியங்கள் வீணாகிப் போகின்றன. சென்னை கோயம்பேடு மையக் காய்கறி-பழச்சந்தையில் மட்டும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன்கள் அழுகி நாறிக் குப்பையில் கொட்டப்படுகின்றன. சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஏகபோக தரகு முதலாளிகள் மட்டுமல்ல, விவசாய விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு வந்து குவிக்கும் சரக்கு உந்து, (லாரி) ஏகபோக முதலாளிகள், தரகு பெரு வணிகர்கள் ஆகியோரின் பகற்கொள்ளைக்குப் பிறகு, எல்லாச் சுமையும் நுகர்வோர்களாகிய ஏழை-எளிய மக்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது.

“இனி அரசு ஆதரவுகள், மானியங்கள், நியாயவிலை விற்பனைகள் என்று எதுவும் இருக்கக் கூடாது; சந்தைகளே எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டும், சந்தைக்கான தொழில் போட்டி, உற்பத்தி, விநியோகம்தான் ஆட்சி நடத்தவேண்டும்; இதுதான் இந்த நாட்டின் தொழிலையும், உற்பத்தி-விற்பனையையும் உலகத் தரத்துக்கு உயர்த்துவதற்கான பாதை” என்று மன்மோகன் – மாண்டேக் சிங் ஆகிய ஆளும் கும்பல் மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக நம்புகின்றன. மொத்தத்தில், அமெரிக்காவின் வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் முழு மூச்சில் புகுந்துவிட்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் இவர்களின் எண்ணம்!

மத்தியிலோ, மாநிலங்களிலோ எங்கு, எந்தக் கட்சி  ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன. குறிப்பாக, காங்கிரசு மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் இந்தக் கொள்கையை உறுதியுடன், இன்னும் சொல்வதானால் “வெறி”யுடன் அமல்படுத்துகிறார்கள். இந்தப் பாதையிலிருந்து தாங்கள் விலகிப் போவிடமாட்டோம் என்று இவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதியளிக்கிறார்கள். அவர்களது சிந்தனை, செயல், அறிவிப்பு எல்லாவற்றிலும் இதுதான் வெளிப்படுகிறது.

இப்படிச் செய்வதற்காக ஆட்சியாளர்கள் ஒருபோதும் கூச்சப்படுவதோ, தயங்குவதோ கிடையாது. தங்களுக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வருபவர்கள் என்ன எண்ணுவார்களோ என்று அஞ்சுவதும் கிடையாது. ஏனென்றால், ஆட்சியாளர்கள் எப்போதும் எண்ணுவதும் பேசுவதும் உலகச் சந்தையில் போட்டி, உலகத் தரத்துக்கு தொழில் – உற்பத்தி! உலகத்தரம், உலகச் சந்தையில் போட்டி எனும்போது, உலகிலுள்ள பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க, தென்அமெரிக்க ஏழை நாடுகளை மனதில் கொள்வதில்லை.

மிகமிக முன்னேறிய, பணக்கார நாடுகளாகச் சொல்லப்படும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத்தான்! இதன் பொருள் என்ன? தொழிலும் உற்பத்தியிலும் மட்டுமல்ல, சந்தையிலும் நுகர்விலும் கூட உலகத் தரத்தை எட்டவேண்டும் என்பதுதான்! இதெல்லாம் உலகத் தரம் என்கிறபோது, சந்தையிலும் நுகர்விலும் மட்டும் இந்தியத் தரம் என்பதை ஆட்சியாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இந்த நாட்டின் மக்கள் தொகை 100 கோடி என்றால், அவர்களில் 10 கோடிப் பேரையாவது உலகத் தரம், உலகச் சந்தை பொருட்களைப் பாவிப்பதற்கான நுகர்வாளர்களாக்கு என்பது மட்டும்தான் ஆட்சியாளர்களின் குறிக்கோளாக உள்ளது.

எனவேதான், கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 10 கோடி “இந்திய மக்களின்” வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, அவர்களின் வாங்கும் சக்தியைப் பன்மடங்கு அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்திய ஆட்சியாளர்கள் முக்கியக் கவனம் செலுத்தினர். ஏற்கெனவே கூட்டுப் பங்கு நிறுவனங்களின் பணியாளர்களின் ஊதியம் சராசரி இந்தியரின் வருமானத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகம். அரசு மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விலைவாசி-வீட்டு வாடகை போன்ற சந்தை விலையேற்றத்துக்கு ஈடாக அவ்வப்போது கிரமமாக ஊதியம் உயர்த்தப்பட்டு வந்தது. இது போதாதென்று, இப்போது அரசு மற்றும் அரசுத் துறை தொழில்-வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களது ஊதியம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது.

ஆகக் கூட்டிப்பாருங்கள். கூட்டுப்பங்கு நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள்; அரசு மற்றும் அரசுத்துறை தொழில்-வர்த்தக நிறுவன அதிகாரிகள், “ஊழியர்கள்”; ஏற்கெனவே கொழுத்துப் போயுள்ள தரகு முதலாளிகள் – தரகு வர்த்தகர்கள், கிராமப்புற முதலாளிய விவசாய உற்பத்தியாளர்கள், மற்றும் ஏற்றுமதி-இறக்குமதிக்கான உற்பத்தி வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள முதலாளிகள், அவர்களின் பணியாளர்கள்; பல்வேறு சேவைத்துறை முதலாளிகள், பணியாளர்கள்; தொழில்முறை அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கிரிமினல் குற்றக் கும்பல்கள் இவர்கள் அனைவருமாக, இவர்களின் குடும்பத்தோடு ஒரு 10 கோடிப் பேராவது உலகத்தர வாழ்க்கையும், வாங்கும் வசதியும் படைத்தவர்களாக இந்த நாட்டில் இருக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு இந்தப் பிரிவினரைப் பாதிப்பதே இல்லை. அம்பானி, பிர்லாக்களின் “சூப்பர் மார்க்கெட்”களில் என்ன விலை வைத்தாலும், உலகத் தரத்திற்கு டப்பாக்களில், பெட்டிகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனப் பொருட்களையே பாவிக்கிறார்கள்.

இந்த 10 கோடி இந்திய மேட்டுக்குடியினருக்கான சந்தையைப் பற்றி மட்டுமே மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பல் அக்கறைப்படுகிறது. எனவேதான், அது மிகவும் திமிரோடு பேசுகிறது. விலைவாசி உயர்வு என்பது “தவிர்க்கமுடியாதது”; “நிச்சயமான ஒன்று” என்று நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசுத் தலைவர் ஆற்றிய உரையில் பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது. இந்தியச் சந்தையை உலகச் சந்தையுடன் இணைப்பது, சந்தையே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து நுகர்பொருட்களின் விலையைத் தீர்மானிப்பது என்றான பிறகு, விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது, எதிர்பார்க்க வேண்டியதுதான்.

10 கோடி இந்திய மேட்டுக் குடியினரின் வருவாயைப் பெருக்கி, வாங்கும் சக்தியை உயர்த்திய மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பல் மீதி விவசாயிகள், தனியார்துறைத் தொழிலாளர்கள், அமைப்புசாரா உழைப்பாளர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினரை உள்ளடக்கிய 90 கோடி இந்திய மக்களுக்கு என்ன செய்தது? இவர்களின் மலிவான உழைப்புச் சக்தியை மட்டுமல்ல, இம்மக்களடங்கிய பரந்து விரிந்த சந்தையிலும் கொள்ளையிடுவதற்கான சகல வசதிகளையும் ஏகாதிபத்திய ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்திய ஏகபோகத் தரகு முதலாளிகளுக்கும் செய்து கொடுத்துள்ளது.

2008 ஆம் ஆண்டு 30 கோடி ரூபாய் இலாபம் ஈட்டிய 33 சர்க்கரை உற்பத்தி முதலாளிகள் 2009-ஆம் ஆண்டு மட்டும் 900 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருக்கின்றனர்; அவர்களின் இலாபம் 2,900 சதவீதம்அதிகரித்திருக்கிறது. 2007 மற்றும் 2008 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நமது நாட்டிலிருந்து சர்க்கரையை ஏற்றுமதி செய்யச் சொல்லி டன்னுக்கு 2350 ரூபாய் மத்திய மற்றும் மராட்டிய அரசுகள் மானியமாக வழங்கின. 2008 டிசம்பரில் ஏற்றுமதிக்குத் தடைவிதித்த மத்திய அரசு, அதன்பிறகு சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டபோது சர்க்கரை இறக்குமதி செய்யச் சொல்லி பல ஆயிரம் கோடி ரூபாய் இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி தள்ளுபடி செய்தது. ஆக, இரண்டு வகையிலும் மத்திய வேளாண் மற்றும் உணவு அமைச்சர் சரத்பவார் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்க்கரை ஆலை கும்பல் ஆதாயம் அடைந்து கொள்ளையடித்தது.

மிகை உற்பத்தியின் போது அரசே கிடங்குகளில் சேமித்து வைப்பது, பற்றாக்குறையின் போது சேமிப்பை விடுவித்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்ற “பொது நலப் பொறுப்பு” எதையும் அரசு மேற்கொள்ள வேண்டியதில்லை; எல்லாம் தனியார் கவனித்துக் கொள்வார்கள் என்பதுதான் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை. இந்தக் கொள்கை வருவதற்கு முன்பிருந்தே தனியார்-பெரு வர்த்தக முதலாளிகள் மிகை உற்பத்தியின்போது பதுக்கி வைப்பதையும், பற்றாக்குறையின் போது பன்மடங்கு விலைவைத்து விற்பதையும் செய்து வந்தார்கள். முன்பு சட்டவிரோதமாகக் கருதப்பட்ட இந்த நடவடிக்கைகளை இப்பொழுது அரசே துணை செய்து ஊக்குவிக்கிறது.

சந்தையில் “நிலவும்” போட்டியே விலைவாசியைக் கட்டுப்படுத்திவிடும் என்ற முதலாளிய பொருளாதாரவாதிகளின் வாதத்தை இத்தகைய நடவடிக்கைகளும் ஏகபோக நிலையும் பொப்பித்து விடுகின்றன. இவ்வளவு விலைவாசி உயர்வுக்கு மத்தியில் கூட பெட்ரோலிய பொருட்களின் விலையை அரசு அவ்வப்போது உயர்த்தியதோடு, இனி சந்தைப் பெருமுதலாளிகளே தீர்மானித்துக் கொள்வதற்கு விட்டு விடுவது; அரசு கட்டுப்பாட்டில் இருந்து உரவிலையையும் விற்பனையாளர்களே தீர்மானிப்பது என்றும் முடிவு செய்து விட்டது. அதற்கு முன்பாக அரசே விலையையும் உயர்த்திவிட்டது. அரசு நிறுவனங்கள் உட்பட ஒருசில நிறுவனங்கள் ஏகபோக நிலையில் உள்ள இந்தத் தொழில்களில் வரைமுறையற்ற கொள்ளைக்குத்தான் இது வழிவகுக்கும்.

உலக சராசரிக்கும் குறைவாக இந்தியாவில் விளைபொருட்கள் கிடைக்கும் நிலையை மாற்றி, உலகச் சந்தையின் நிலைக்கு விலைவாசியை ஏற்றி விடுவது என்பது தான் ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது. கடும் எதிர்ப்பின்றி அதை எப்படிச் சாதிப்பது என்பதற்குத்தான் பல்வேறு நாடகமாடுகிறார்கள். இதுதவிர, தொழில் துறையும், சேவைத்துறையும் மட்டுமல்ல, பங்குச் சந்தையிலும் நிதி ஆதிக்கத்துக்கு வசதி செய்து கொடுத்துள்ள இந்திய அரசு, சமீப ஆண்டுகளில் விவசாய விளைபொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் ஊகவணிகம், முன்பேர வணிகம், ஆன்-லைன் வணிகம் ஆகியவற்றிலும் சூதாட்டம் மற்றும் நிதி ஆதிக்கம் செலுத்துவதற்கும் எல்லாவசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

ஆகவே, விலைவாசி உயர்வு என்பது பல்வேறு வகையிலும் அரசே ஊக்குவித்து வரும் திட்டமிட்ட சமூகவிரோதச் செயலாகும். ஆனால், அதுபற்றித் தாமும் கவலைப்படுவதாக அனைத்துக் கட்சி ஆட்சியாளர்களும் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை!

–          புதிய ஜனநாயகம், மார்ச் – 2010

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

விண்ணைத் தாண்டி வருவாயா – காதலை அவமானப்படுத்தவா…?

80

vote-012காதலை வைத்து தமிழகத்தில் கல்லா கட்டியவர்கள் ஏராளம். காதலிக்க எளிதாக வாய்ப்பில்லாத நாட்டில் காதல் குறித்த கனவுகளும் அதை நனவு போல சித்தரிக்கும் படங்களும் விலைபோகாமல் இருக்குமா என்ன?

கருப்பு வெள்ளைப்படங்களில் காதலன் பட்டப்படிப்பு படித்துவிட்டு படியவாரிய தலையுடன் நாசுக்காக காதலிக்க, காதலியோ இரட்டைத்தலை சடையோடு தளையக்கட்டிய சேலையோடு வெட்கப்பட ….ஓவர் டு 2010

__________________________________________

பொறியில் படிப்பு, டீ ஷர்ட், பைக், சினிமா உதவி இயக்குநர், மாடர்ன் தங்கச்சி, அழகான அம்மாவுடன் சிம்பு காதலுக்கு 22 வயதில் ரெடியாகிறார். ஜெஸ்ஸி , டிசைனர் காட்டன் சேரி, சல்வார், அலைபாயும் முடி, ஐ.டி துறை வேலையுடன் 23 வயதில் த்ரிஷா வருகிறார்.

“காதல் என்பது தானா வரணும், நாம அதை தேடிப் போகக்கூடாது, நம்மள அடிச்சுப் போடணும்” என்று காதலுக்கு இலக்கணம் பேசும் சிம்புவுக்கு அது வந்துவிட்டது. மலையாளப் பெண், கிறித்தவ மதம், தந்தை மறுப்பு என்று த்ரிஷா அவ்வப்போது சிணுங்குகிறார். அதனால் காதலின் கிக் அல்லது அவஸ்தை ஏறுகிறது.

“காதலிக்காக அவனவன் அமெரிக்கா போறான், நாம ஆலப்பிக்கு போகக்கூடாதா” என்று அமெரிக்கா ஏதோ உசிலம்பட்டி போல பேசும் சிம்பு எதிர்பார்க்கமலேயே த்ரிஷா தேவாலயத்தில் பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளைக்கு ஒப்புதல் கொடுக்காமல் புரட்சி செய்கிறார். அவஸ்தையின் அளவு கூடுகிறது.

இதற்குள் மூன்று பாட்டு முடிகிறது. தாமரை எப்போது ஆங்கிலத்தில் பாடல் எழுத ஆரம்பித்தார்? இடைவெளி முடிந்து அமர்ந்தால் மீண்டும் மீண்டும் த்ரிஷா சிணுங்குகிறார். ” டேய் படத்தை எத்தனை வாட்டி ரிவைண்ட் பண்ணி போடுவ” என்று இரசிகர்கள் (தியேட்டர் கமெண்ட்) தாங்க முடியாத அளவில் அந்த அவஸ்தை சவ்வாக இழுக்கப்படுகிறது. நாங்க படம் பார்த்தது A சென்டரில்ல இல்லை!

ஒரு வேளையாக த்ரிஷா அந்த காதல் உலக்கத்திலிருந்து லூசுத்தனமாக (தியேட்டர் கமெண்ட்) மறைந்து போக சிம்பு சினிமா இயக்குநராக ஆகிறார். தனது ஜெஸ்ஸியின் கதையையே படமாக எடுக்கிறார். நிஜத்தில் த்ரிஷா வேறு ஒருவரை திருமணம் செய்ய…. படம் எப்போது முடியுமென்று பொறுமையிழந்த மக்களின் பொறுமலில் கடைசிக் காட்சிகளின் வசனங்கள் சுத்தமாக கேட்கவில்லை. சிம்புவின் படத்தில் அவர்கள் சேருவதுபோல எடுக்கப்பட்டு படம் முடிகிறது.  விட்டால் போதுமென்று தியேட்டரிலிருந்து எஸ்கேப்!

___________________________________________

நடுத்தர வர்க்கம் பொருளாதரத்தில் தனது மேல் வர்க்கத்தைப் பார்த்து கனவு கண்டு விட்டு நிஜத்தில் சாதாரண வாழ்க்கையை சலித்துக் கொண்டே வாழும். இந்த வர்க்கத்தின் பொதுப் பண்பு என்னவென்றால் எதையும் பட்டு பட்டுனு முடிவெடுக்காமல் ஜவ்வாக இழுக்கும். அவ்வகையில் காதல், வீரம், சோகம் எல்லாம் ஜவ்வுதான்.

நடுத்தர வர்க்கம் துணிந்து காதலித்து, காதலின் பிரச்சினைகளை எதிர் கண்டு போராடி வெல்வது அபூர்வம். இதனால் பிரச்சினைகளை விட்டுவிட்டு காதலைப் பற்றிய மயக்கங்கள், அவஸ்தைகள் அதற்கு தேன்தடவிய பர்கராக தாலாட்டி வருடுகிறது. எங்களோடு படம் பார்த்தவர்கள் இந்த ஜவ்வை எவ்வளவு கேலி செய்ய முடியுமோ அவ்வளவு செய்ததுதான் எங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல்.

சாதியும், மதமும், வர்க்கமும் சேர்ந்து திருமணத்தின் குற்றவியல் சட்டமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நாட்டில் அந்த அசலான பிரச்சினையைப் பற்றி பேசினால்தான் அது காதல் படம். வி.தா.வ யில் கிறித்தவம், இந்து மதம் எல்லாம் ஒரு பேச்சுக்கு வந்து சென்றாலும் படத்தின் இதயம், காதலின் இனிய அவஸ்தையையே  பழைய முரளி படங்களுக்கு இணையாக அலுப்பூட்டும் விதத்தில் சுவாசிக்கிறது.

ஆனால் அலைகளின் கடற்கரை வாழ்க்கையில் இல்லாத அமெரிக்கா, அமெரிக்கர்கள் காறித்துப்பிய கென்டகி சிக்கன் கடை, ஷாப்பிங் மால்கள், செல்பேசி, எஸ்.எம்.எஸ், பளீர் சாலையில் பைக் பயணம் இவைதான் இது போன்ற காதல் படங்கள் வந்தடைந்திருக்கும் பரிணாமம். பா வரிசைப் படங்களில் நிலப்பிரபுத்துவ மேன்மையிலிருந்த காதல் இன்று முதலாளித்துவ முன்னேற்றங்களில் வந்து நிற்கிறதே அன்றி இந்தியாவின் காதல் வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிராதரமான ஜீவன் இங்கு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. மேக்கப் இல்லாமல் போராட்டத்தில் உயிர்வாழும் உண்மையான தமிழகக் காதலர்களை சந்திக்க வேண்டுமா? 27.02.10 நக்கீரனின் 24 ஆம் பக்கத்தில் பாருங்கள்.

விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல்  காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

குழந்தைகள், காதல் இரண்டும் மனித குலத்தை உடல்ரீதியாகவும், அதனால் இனரீதியாகவும் நேசிக்கவைக்கும் அடிப்படைத் தூண்டுகோல்கள். ஆனால் அவை இரண்டும் அதன் வெளியை சுயம், தனிமை, வீடு என்ற தளைகளிலிருந்து பரந்த சமூக வெளிக்கு நகர்த்தும் போக்கில்தான் புடம் போடப்படுகின்றது.

காதல் ஒரு மனிதனை அதீதமான பலத்துடன் வாழ்க்கையை விருப்பமாக அணுகுவதற்கு தயார் செய்கிறது. காதலின் உதவியால் மனிதன் தனது சுற்றத்தை முன்னர் பார்த்திராத வகையில் அன்புடன் அணுகுகிறான். அவனுக்கு இதுகாறும் சலித்துப்போயிருந்த வாழ்க்கைத் தடைகள் இப்போது தாண்டுவதற்கு எளிதான விசயங்களாக மாறுகின்றன. ஆனால் காதலின் இந்த மகத்துவ ஆயுள் மிகவும் குறுகியது என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை.

ஒரு ஆணும், பெண்ணும் தமது காதல் உண்மையானதா, பொருத்தமானதா என்பதை தத்தமது சமூக நடவடிக்கைகளிலிருந்தே கண்டுபிடிக்க முடியும். அதை அமெரிக்க, கேரளா லோகேஷன்களோ, அலங்கார உடைகளோ, ரஹ்மானின் உணர்ச்சியைக் கிளறும் இசையிலோ கண்டு தெளிய முடியாது. சரியாகச் சொல்லப்போனால் தமிழ் சினிமா தற்போது உருவாக்கியிருக்கும் இந்த புதிய சினிமா மொழி அதற்கு தடையாகவும் இருக்கிறது. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை மட்டும் ஒரு பரவச உணர்ச்சியாக எண்ணி எண்ணி இன்பமடையலாம்தான். ஆனால் வாழ்க்கை கோரும் சிக்கல் நமக்கு உணர்த்தும் ஒரே ஒரு யதார்த்தம் கூட இந்த இன்பத்தை வேகமாக முடிவுக்கு கொண்டுவந்து விடும்.

____________________________________

தமிழ் படங்கள் காதலிக்க கற்றுக்கொடுப்பதில்லை, போராடி வெற்றபெற வேண்டிய காதலை  அற்ப உணர்ச்சிகளின்  நொறுக்குத்தீனி இரசனையாகத் அவமானப்படுத்தி, திருப்பித் திருப்பிக் காட்டுகிறது. அதனால்தான் காதலர்களது திருமண வாழ்க்கையின் இன்பம் ஒரு சில மாதங்களுக்குள் முடிவுக்கு வருகிறது. இப்படி பத்தாண்டுகளுக்கொரு முறை வரும் தலைமுறைகளிடம் சில காதல் படங்கள் வெற்றியடைகின்றன. ஆனால் சமூகத்தில் இன்னமும் காதல் வெற்றி பெறவில்லை.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் காதல் உணர்ச்சியில் நீங்கள் விழுந்திருப்பது உண்மையானால், மன்னியுங்கள்…….நீங்கள் காதலிப்பதற்கு தகுதியானவரல்ல.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

‘தல’யும் ‘தலி’வரும் தமிழனின் தலையெழுத்தும் !!!

78


vote-012காந்தி, நேரு, அண்ணா வரிசையில் சேர விரும்பி, கனவு கண்டு இப்போது சேர்ந்ததாக எண்ணும் கருணாநிதி சமீபகாலமாக என்ன செய்கிறார்? காலையில் வண்டியை அரசினர் தோட்டத்திற்கு விடுகிறார். 500 கோடியில் கட்டப்படும் புதிய சட்டப் பேரவையை காரிலிருந்தபடியே பார்க்க, அதிகாரிகள் வரைபடத்தின் மூலம் கர்ம சிரத்தையாக விளக்க, கலைஞரின் வரலாற்றுச் சாதனையை நிறைவேற்ற உயரத்தில் நூற்றுக்கணக்கான வட மாநிலத் தொழிலாளிகள் தமிழினித்தின் தனிப்பெருமை கட்டிடத்தை புயல் வேகத்தில் கட்டுகின்றனர்.

அப்புறம் வண்டி கோட்டூர்புரத்தில் கட்டப்படும் அண்ணா நூலகத்திற்கு செல்கிறது. அங்கும் அதே அதே. பிறகு தலைமைச் செயலகத்தில் செம்மொழி மாநாட்டிற்கு வருபவர்களுக்கு என்ன தீனி போடுவது என்று அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வு. குடிமைப்பணி இப்படி முடிய வீடு செல்லும் தலைவர் அப்புறம் இருமனைவிமார்களின் வாரிசுப் பிரச்சினைகள் பற்றி பேசும் குடும்பப்பணி, பஞ்சாயத்துக்கள். இடையில் ஜெயாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அறிக்கை, கேள்விபதில்களை ரெடிமேடான வங்கியிலிருந்து எடுத்துக் கொடுக்கும் உதவியாளர்கள் மூலம் சரிபார்த்து விட்டு, கலைஞர் டி.வியின் அடுத்த வார மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு வந்த தீம்களை ஒகே செய்து முடித்தால் வருகிறது மாலை.

வள்ளுவர் கோட்டத்திலோ, ஜவஹர்லால் உள்ளரங்கு விளையாட்டு மைதானத்திலோ நடத்தபடும் பிரம்மாண்டமான ஜால்ராபிஷேகம். கோட்டத்தில் கவிதை மழை என்றால் மைதானத்தில் குத்தாட்ட மழை. கன்னத்தில் கை வைத்து முழுவதையும் இரசித்து உருகி மருகி தோய்ந்து நனைந்து இதற்குமேல் வார்த்தைகள் தேவைப்படுவோர் வைரமுத்துவிடம்தான் கேட்க வேண்டும். நடனம், நாடகம், நகைச்சுவை, சொற்பொழிவு எல்லாம் அந்தத் தங்கத் தலைவனை தமிழின் எல்லா வார்த்தை மற்றம் கலைகளைக் கொண்டு பாராட்டி, சீராட்டி, தாலாட்டித் தள்ள தலைவர் அடையும் மோன நிலை இருக்கிறதே அதோடு ஒப்பிடத்தகுந்தது இந்த உலகில் ஜெயமோகன் அடையும் படைப்பு மோன நிலை மட்டும்தான்.

ஜெயலலிதா கட்டவுட்டில் தன்னைக் கண்டு புளகாங்கிசத்திற்கு புதுமை படைத்திட்டதைப் போல கருணாநிதி வார்த்தைகளில் தன்னைக் கண்டு புல்லரிப்பிசத்திற்கு இலக்கணம் படைக்கிறார். இந்த இரண்டு இசங்களும் சேர்ந்தால் அது நார்சிசம். தன்னையே மோகமுறுதல். தலைவரின்றி வேறுயாருக்கும் கிட்டாத இந்த மோகம்தான் தள்ளாத வயதிலும் அந்த தங்கத் தலைவனை குடும்பத்திற்காக ஓயாது ஓடி ஓடி உழைக்க வைக்கிறது.

அதிலும் திரைப்பட ரசிகர்கள் விசிலடித்து, தமது மனைவிகளின் தாலியறுத்து பிளாக்கில் வாங்கி ஆராதிக்கும் நட்சத்திரங்களே தலைவனது முன்னால் நாணிக்கோணி வாழ்த்தும் போது அடையும் பரவசம் வார்த்தைகளில் பிடிபடாது. பெண் பெயரில் ஒரு ஆண் சும்மா கலாய்ப்பதற்காக சாருவை கண்டேன், வாசித்தேன், விழுந்தேன் என்று விட்டு விளையாடினால் சாருநிவேதிதாவிற்கு மூன்று நாள் தூக்கம் கெடும் போது கருணாநிதிக்கு அழைத்து வரப்படும் ஐஸ் கட்டிகள் அதுவும் பிரிட்ஜில் வைக்கப்படும் கோடம்பாக்கத்து கட்டிகள் என்றால் என்னவெல்லாம் கெடும்?

விலைவாசி உயர்வா, முல்லைப்பெரியாறு பிரச்சினையா, ரயில் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பா எல்லாம் பஞ்செனப் பறந்து போகும். கண்ணில் அந்த அலங்கார மனிதர்களைக் கண்டு, கேட்டு, இரவில் படுக்கும் போது அடையும் பிரம்மநிலையை யாரும் கனவில் கூட புரிந்து கொள்ள முடியாது. கட்டாயப் பாராட்டா, வெறுப்புப் பாராட்டா, பயந்து பாராட்டா, ஆளும் கட்சிக்கு ஜே போடும் சீசனல் பாராட்டா, எதுவாக இருந்தால் என்ன? பாராட்டுக்கு உருகும் அந்தப் ‘பச்சைப்பிள்ளை’க்கு எந்த பேதமும் இல்லை.

பாராட்டு தலைவனுக்கு என்றால் அதை வைத்து தலைவனது குடும்பம் பணமாக்குவதற்கு கலைஞர் டி.வி. ஒரே கல்லில் இரண்டு ஸ்டாராபெர்ரி. சூப்பர் ஸ்டார், உலக ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளையத தளபதி ஸ்டார், என எல்லா ஸ்டார்களும், ஸ்டார்ரினிகளும் வந்தால்தான் டி.விக்கு ஸ்பான்சர். ஸ்டார்களை வரவழைக்க என்ன செய்தார்கள்? பையனூர் அருகே 115 ஏக்கர் நிலத்தை சினிமாத் தொழிலாளிகளுக்கு என்று கலைஞர் தனது சட்டைப்பையிலிருந்த சொந்த சொத்திலிருந்து கொஞ்சம் கிள்ளிக் கொடுக்க முடிந்தது மேட்டர். இப்போ ஒரு கல்லில் மூணு ஸ்டாரபெரி. பாராட்டு, பணம், ஏழைப் பங்காளன்.

எல்லாம் கூடிப் பேசி திரைக்கதை எழுதி, செட்போட்டு, ரிகர்சல் பார்த்து மூகூர்த்த நாளும் வந்தது. திட்டமிட்டபடி ஐஸ் நிகழ்வு நல்லபடியாக செல்லும்போது அஜித் மட்டும்,” எங்கள மிரட்டுராங்கையா” என்று வரலாற்றில் இடம்பெற்று விட்ட வார்த்தையைப் பேச, ரஜினி ஆவேசமாய் எழுந்து கைதட்ட விழுந்தது கரும்புள்ளி.

தானைத் தலைவன் அப்செட்டாகி தொழிலாளிகளுக்கு கட்டிக்கொடுப்பதாக இருந்த வீட்டுத் திட்டத்தையும், முதலாளிகளுக்காக கட்டவிருந்த பிரம்மாண்டமான ஸ்டூடியோவைக் குறித்தும் தனது பேச்சில் டெலிட்டோ, எடிட்டோ செய்து விட்டதாக பெப்சி சங்கம் குமுற அப்புறம் ஜாகுவார் தங்கத்தின் பேட்டி, வீடு தாக்கப்படுதல், வி.சிறுத்தை ஆதரிப்பு, ரெட் கார்டு, நடிகர் சங்கம் – பெப்சி மோதல், தயாரப்பாளர் சங்கம் பஞ்சாயத்து எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போதைக்கு அஜித் வருத்தம் தெரிவிக்க வேண்டும், ரஜினிக்கு கண்டனம் என்ற வகையில் முடித்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் அஜித்தின் அடுத்த படம் அண்ணன் அழகிரியின் பையனது தயாரிப்பு என்பதால் அல்டிமேட் போங்கடா வெண்ணைகளா என்று போல்டாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதற்கு மேல் அந்தக் கரும்புள்ளியை அழிக்க சூப்பரும், அல்டிமேட்டும் கோபாலபுரத்திற்கு மலையேறி சாமியைக் குளிர்வித்திருக்கிறார்கள். தலைவரும் சூப்பரின் மகள் நிச்சயதார்த்ததிற்கு சென்று வாழ்த்தியிருக்கிறார்.

இத்தோடு இதை உண்மைத் தமிழன் முடித்திருந்தால் நாம் இந்த இடுகையை எழுதியிருக்க வேண்டியதில்லை.

இதற்குமேல் அல்டிமேட்டும், சூப்பரும் மாபெரும் கலகக்காரர்களாக, அவர் காட்டியதையும் அதற்கு கிடைத்த ஆதரவும்தான் நீங்கள் இதை வாசிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள்.

இந்த உலகிலேயே பெரும் வித்தியாசமான அவலமான தொழிற்சங்கமென்றால் அது பெப்சி சங்கம்தான். பெரும் சினிமா முதலாளிகளின் சுரண்டல் கொடுமைக்கு எதிராக நிமாய் கோஷ் போன்ற மூதாதைகள் கம்பீரமாக ஆரம்பித்த அந்த சங்கம் இன்று அதே முதலாளிகளின் கைப்பாவையாய் பலவீனமாகிவிட்டது. ஒரு ஆட்டோ தொழிற்சங்க கிளைக்கு இருக்கும் குறைந்த பட்ச வர்க்க உணர்வு கூட இங்கு குறைந்து வருகிறது.

நிலையான வேலை, ஒழுங்கான வேலை நேரம் இல்லை. சங்கங்களில் சேர்ந்தால்தான் சினிமா வாய்ப்பு. அதற்கு கட்டணம். நடனம் போன்ற சங்கங்கங்களில் கட்டணமும் அதிகம். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு பெப்சி படைப்பாளிகள் பிரச்சினை வந்த போது இந்த சினிமா தொழிலாளர்களை அணிதிரட்டி பொதுக்கூட்டமெல்லாம் நடத்தினோம். துணை நடிகர்கள், லேட்மேன் போன்ற சாதாரண மக்களின் துன்பமும் அந்த துன்பத்தை உணர்ந்து அணிதிரளவிடாத சினிமா கலாச்சாரமும் அவர்களை என்றும் விடுவிக்கப் போவதில்லை.

வி.சி குகநாதன் இன்று பெப்சியின் தலைவராக இருக்கிறார். இவருக்கும் தொழிலாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது அந்த முருகனுக்குத்தான் தெரியும்.  தி.மு.க ஆதரவினால் குகநாதன் ஏதோ கொஞ்சம் ஏக்கர் நிலங்களை கலைஞரின் சட்டைப்பையிலிருந்து தொழிலாளிகளுக்கு தானம் பெற்றார். இது உண்மையிலேயே தொழிலாளிகளுக்கு போகிறதா என்றால் அதிலும் தி.மு.க தொழிலாளிகள், கமிஷன் கொடுக்கும் தொழிலாளிகள் என்று ஏகப்பட்ட வில்லங்கங்கள் உள்ளன. சரி சில தி.மு.க ஆதரவு தொழிலாளிகளுக்கு கூட அந்த இடம் கிடைத்துவிட்டு போகட்டுமே. அடுத்து அம்மா வந்தால் அ.தி.மு.க தொழிலாளிகளுக்கு வாங்கிக்கொடுத்தால் போயிற்று. ஜவகர்லால் விளையாட்டரங்கமும், ஜெயா டி.வியும் ஓடவா போகிறது?

கலைஞரின் தானத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஐஸ் நிகழ்ச்சிக்கு, ஏதோ நம்ம நடிப்பிற்கு லைட் பிடித்து, டூப்பாக உயிரைக் கொடுத்து நடித்து பாடுபடும் தொழிலாளிகளை மனதில் நினைத்தாவது தலையைக் காட்டிவிட்டு, கொஞ்சம் வார்த்தைகளை பாராட்டாக கொட்டி விட்டு வந்திருக்கலாம். தொப்புளில் ஆம்லெட் போடுவது, டூயட்டிற்காக உலக அதிசயங்களை கேவலப்படுத்துவது, சண்டைக்காக காய்கனி வண்டிகளை உடைப்பது போன்ற லூசுத்தனங்களை ஒப்பிடும்போது இது ஒன்றும் அவ்வளவு இழிவானவையல்ல.

ஏற்கனவே ஈழத்திற்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடத்திய ஆறு மணி நேர உண்ணாவிரதத்தில் ஈழமும் ஈழத்தமிழ் மக்களும் என்னபாடு பட்டார்கள் என்பதை வினவில் எழுதியிருக்கிறோம். அந்த உலக மகா ஃபிராடு நிகழ்ச்சியைக் கூட நம்ம அல்டிமேட்டால் தாங்கமுடியவில்லை. மேடைக்கு போனவர் “சினிமா இன்டஸ்ட்ரியை சினிமா இன்டஸ்ட்ரியாக இருக்க விடுங்கள்” என்று முழங்கிவிட்டுத்தான் சென்றார். அய்யா அல்டிமேட் கூறியபடிதான் அந்த சினிமா மேக்கப் நிகழ்ச்சி படு செட்டப்பாக சீனைப் போட்டிருந்தது. சினிமா ஈழத்திற்காகப் போராடுகிறது என்று அகமதாபாத் ஐ.ஐ.எம்மில் படித்த முட்டாள் கூட நம்ப மாட்டானே? இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே?

அல்டிமேட் கூறுவிரும்புவது என்னவென்றால் நைட் ஒரு ஃபுல்லை போட்டுவிட்டு காலையில் லேட்டாக எழுந்து அல்லக்கைகளோடு ஷூட்டிங்கிற்கு போய் கையையும், காலையையும் சோம்பல் முறிப்பது போல நடித்துவிட்டு அதில் களைத்துப் போய் சொகுசு கேரவானில் ஓய்வு எடுத்துக் கொண்டு இப்படி ஒரு முப்பதோ, அறுபதோ நாட்களைக் கழித்தால் ஐயாவுக்கு ஊதியமாய் ஐந்தோ இல்லை பத்தோ கோடிகள் வரும். அந்தக் கோடியும் சினிமா ஓப்பனிங்கில் ஏலமிடப்பட்ட காட்சிகள் மூலம் ரசிகர்கள் அடகுவைத்து அழும் ரத்தப்பணம்தான். இதுதான் சினிமா இன்டஸ்ட்ரி இருக்க விரும்பும் இலட்சணம்.

“ஒரு லைட்மேன் வாங்கும் 250 அல்லது 350 ரூபாய் சம்பளத்தை நடிகனான எனக்கும் கொடுங்கள், இயக்குநருக்கும் கொடுங்கள், நாமெல்லாம் ஒரு இன்டஸ்டரியாக இருப்போம்” என்று சொன்னால் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. இவரு கோடி கோடியாக வாங்குவாராம். அந்த கோல்மால்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் மேல் ஒரு தூசிகூட விழக்கூடாதாம். இதுதான் அல்டிமெட்டின் தன்மானக் கர்ஜனையின் பின்னணி.

நட்சத்திரப் பதவி, அதை முதலாளிகள் உருவாக்கும் விதம், இரசிகர்கள் கொடுக்கும் அங்கீகாரம், ஊடகங்களில் பில்டப்புக்கள் எல்லாம் இருந்தால்தான் கோடி சம்பளமும், சொர்க்க வாழ்வும் கிடைக்கும். அப்படிக் கிடைப்பதால் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதும் செய்யவேண்டும். எல்லா ஊழலும் ஒன்றோடு ஒன்று கலந்ததுதான். இதில் நான்மட்டும் யோக்கியம் என்று காட்டுவது அம்மணாண்டிகளின் ஊரில் கோவணம் கட்டியவனின் கதைதான்.

ஒப்பனிங்  காட்சிகள் ஏலம் கிடையாது, பிளாக் டிக்கெட் கிடையாது, திரையரங்கின் வழக்கமான கட்டணம்தான் என்று நேர்மையாக இருந்திருந்தால் சூப்பர் ஸ்டார் எப்படி மில்லியனராக மிளிர்ந்திருக்க முடியும்? இந்தப் பகல் கொள்ளைக்கு முதலாளிகள், அரசு, அதிகாரிகள், போலீசு, பத்திரிகைகள் எல்லாருடைய ஆதரவை வைத்துத்தானே ஜமாய்க்கிறீர்கள்? அது உண்மையெனில் நீங்கள் கருணாநிதி காலில் விழுந்து நாக்கால் நக்கினால் கூட தப்பில்லையே முண்டங்களா?

ஆபாசத்தையும், அண்டப் புளுகையும் வைத்து இரசிகனை உணர்ச்சியால் திறமையாக சுரண்டுவதினால்தானே நீங்கள் நட்சத்திரங்கள்? பதிலுக்கு அந்த இரசிகர்கள் ‘அண்ணன் வருங்கால முதலமைச்சரானால் நாமளும் பொறுக்கித் தின்னலாமே’ என்றுதானே உங்களுக்கு தோரணம் கட்டுகிறார்கள்? நடிகன் – இரசிகன் உறவே இப்படி ஊழல்மயமாக இருக்கும் போது வெள்ளித்திரையில் போடும் டூபாக்கூர் ஹீரோ வேடத்தை வெளியில் காட்டுவதை சகிக்க முடியவில்லை.

அஜித் உண்ணாவிரத்த்திற்கு வரவில்லை என்ற செய்தியினால் ஏகன் படத்திற்கு ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அல்டிமேட் என்ன செய்திருக்கவேண்டும்? வெளிநாடு ரைட்ஸை என்ன ரேட்டுக்கு விற்றீர்களோ அதன் நட்டத்தை நான் தருகிறேன் என்று அப்போதே தன்மானஸ்தனாக காட்டியிருக்கலாமே? அதே போல குசேலன் படம் பெங்களூருவில் வெளியிட எதிர்ப்பு வந்த போது ரஜினியும் தயாரிப்பாளரிடம் கர்நாடகா ரைட்சுக்குரிய பணத்தை திருப்பியிருக்கலாமே? ஆனால் இரண்டு ஸ்டார்களும் என்ன செய்தார்கள்?

அஜித் கருப்பு சட்டையைப் போட்டுவிட்டு உண்ணாவிரத்த்தில் போஸ் கொடுத்தார். ரஜினி ஒகேனக்கல் பிரச்சினைக்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏன்? தனது ஊதியம், வர்த்தகத்திற்கு பிரச்சினை என்றால் இவர்கள் அவுத்துப்போட்டு ஆடவும் செய்வார்கள். விட்டால் ஊர் ஊராக ஓடவும் செய்வார்கள்.

இத்தகைய மோசடிப் பேர்வழிகளைப் போய் தன்மானத்திற்காக குரல் கொடுத்த சிங்கங்கள் என்று புகழ்ந்தால் சுண்டெலிகள் கூட தற்கொலை செய்து கொள்ளும். எனில் ரஜனி மற்றும் அஜித்தின் தன்மான பின்னணியில் இருப்பது என்ன? பச்சையான சுயநலம். தனது நட்சத்திர அந்தஸ்தை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் திமிர். பொது நலன், அரசியல் போன்ற விசயங்களில் எங்களை இழுக்காதீர்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும் தந்திரம். இவர்களைப் போல சுயநலவெறியர்களாக இருந்திருந்தால் சார்லி சாப்ளின் என்ற அந்த மகத்தான கலைஞனின் இறுதி வாழ்க்கை பிரச்சினையில்லாமல் இருந்திருக்கும். ஆனால் மக்களுக்காகவும் நீதிக்காகவும் அந்தக் கலைஞன் தனது நட்சத்திர தகுதியை கைவிட்டான்.

இந்த விடயத்தை பலரும் கலைஞருக்கு ஜால்ரா போட மறுத்த விசயமாக மட்டும் பார்ப்பதில் பலனில்லை. கருணாநிதியை எதிர்ப்பது வேறு. அதற்காக இரண்டு அல்பைகளை தூக்கி வைத்துக் கொண்டாடுவது வேறு. ரஜினியை வைத்து முதலாளிகள் சம்பாதித்தது போல அந்த முதலாளிகளை வைத்து ரஜினியும் சம்பாதிக்கிறார். அதற்கு மாஸ் நடிகன் என்ற பம்மாத்து தேவைப்படுகிறது. ஆனால் ரஜினியின் மாஸ் பேஸ் என்ன என்பதை அவரது புகழ்பெற்ற பாபா படம் வரும்போது ரஜினி தலைமை ரசிகர் மன்றம் இருக்கும் திருச்சியிலேயே நேருக்கு நேர் சந்தித்து விரட்டியிருக்கிறோம்.

தமிழ்சினிமா உருவாக்கியிருக்கும் இரசனைதான் தமிழ்மக்களின் எல்லாப் பார்வைகளிலும் ஊடுருவியிருக்கிறது. அரசியல், சமூகப் பிரச்சினைகளின் பால் உள்ள அக்கறையற்ற நிலைக்கும் கூட இதுவே அடிப்படைக் காரணம். இந்த பலவீனத்தை வைத்தே தமிழ் சினிமாவின் பிரபலத்தை எல்லா அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றனர். இன்று கட்சிக் கூட்டங்கள் கூட குத்தாட்ட நடன கேளிக்கைகளாக மாறிவருகின்றன. இப்படி சினிமா என்பது நம்மை மேலும் மேலும் சமூகத்திடமிருந்து அன்னியப்படுத்துகிறது.

விலைவாசி உயர்வு, முல்லைப் பெரியாறு, பழங்குடி மக்களின் துயரம், வன்னி முகாம் அவலம் என்ற கண்ணை அறுக்கும் யதார்த்தத்தில் அஜித்தின் தன்மானப் பிரச்சினைதான் நமது பேசுபொருளாக என்றால், நம்மை அந்த பழனி பிக்கினி முருகனால் கூட காப்பாற்ற முடியாது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!

vote-012சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடந்த ம.க.இ.க பொதுக்கூட்டத்தின் காணொளியை இங்கே வெளியிடுகிறோம். உடனடியாக வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தில் படத்தொகுப்பு முடிந்தவுடன் இதை வலையேற்றியிருக்கிறோம், நல்ல தரமுள்ள காணொளியை குறைவான  அளவுடனான கோப்புகளாக மாற்றும் தொழில்நுட்பத்தை இதுவரை நாங்கள் அறிந்திருக்கவில்லை எனவே இந்த காணொளி கோப்புகள் தரவிரக்கமாக மிகுந்த நேரமாகும். சிரமத்துக்கு வருந்துகிறோம், அடுத்த சில நாட்களில் இதை சரி செய்து மறுபதிப்பு செய்துவிடுவோம். பிராட்பான்ட அல்லாத பயனாளர்களுக்கு காண்பதில் தடங்கல் ஏற்படும், ஒரு ஆலோசனை, ‘பிளே’ பட்டனை அழுத்தி படம் தரவிரக்கம் துவங்கியவுடன் ‘பாஸ்’ பட்டனை அழுத்திவிடவும்… இருபது நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ‘பிளே’ வை அழுத்தினால் தடையிலாமல் காணொளியை காணமுடியும்.

சிறப்புரை – தோழர் பாலன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

முதலில் பேசிய தோழர் பாலன், , ஒரிசா, ஜார்கண்டு மாநிலங்களில் புதைந்திருக்கும் அரிய கனிமவளங்களைப் பட்டியலிட்டுக் கூறினார். மனித குலத்துக்கு என்றென்றைக்கும் தேவைப்படுகின்ற கனிம வளங்களை, அடுத்த 50 ஆண்டுகளுக்குள் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டி எடுத்துவிட்டால், எதிர்காலத்தில் நம் தேவைக்கு அவர்களிடம் கையேந்தி நிற்க நேரிடும் என்ற  அபாயத்தை சுட்டிக் காட்டினார். ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட கவுந்தி வேடியப்பன் மலையில் இருக்கும் கனிவளங்களை ஜின்டால் நிறுவனத்துக்குத் தாரை வார்த்துவிட்டு, விற்பனைத்தொகையில் 0.02% மட்டுமே தமிழக அரசு ராயல்டியாகப் பெற இருக்கிறது என்பதைக் கூறி, இந்த மறுகாலனியாக்க கொள்ளை என்பது எங்கோ ஒரிசா மாநிலத்தில் மட்டும் நடப்பது அல்ல என்பதையும் விளங்கச் செய்தார்.

சிறப்புரை – தோழர் வரவரராவ், புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரா

சிறப்புரையாற்றிய தோழர் வரவரராவ் தோழர் வரவரராவ், மாவோயிஸ்டு அமைப்புக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் போரின் பின்புலத்தில் இருக்கும் ஏகாதிபத்திய நலனை அம்பலப்படுத்தினார். பிர்சா முண்டா முதல் அல்லூரி சீதாராமராஜு வரையில் பல பழங்குடித் தலைவர்கள் காலனியாதிக்கத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். ஆனால், நக்சல்பாரி இயக்கம் தோன்றிய பின்னர், பழங்குடி மக்கள் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தால் வழிநடத்தப்படுவதால், அவர்கள் இப்போது தாங்கள் கொள்ளையிடப்படுவதைத் தடுப்பதற்காக மட்டும் போராடவில்லை, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் போராடுகிறார்கள் என்று விளக்கினார்.

ஏகாதிபத்திய உலகமயமாக்கல் காலத்தில் அரசு நிறுவனத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், உலகவங்கித் அதிகாரியாக இருந்த மன்மோகன்சிங்கும், பன்னாட்டு நிறுவனங்களின் வழக்குரைஞரான ப.சிதம்பரமும், முன்னாள் சி.ஐ.ஏ தலைவரான ஜார்ஜ் புஷ்ஷும் அரசியலில் ஈடுபடாமலேயே அதிபர், அமைச்சர் பதவிகளைக் கைப்பற்றிக் கொள்வது உலகு தழுவிய போக்காக எழுந்துள்ளதையும், அனைத்திந்தியக் கட்சிகளான பா.ஜ.க, காங்கிரசு, மார்க்சிஸ்டு கட்சி போன்றவை மட்டுமின்றி, பிராந்தியக்கட்சிகளான திமுக முதல் அகாலி தளம், அசாம் கனபரிசத் முதலான கட்சிகளும் கூட ஏகாதிபத்திய உலகமயமாக்கத்துக்கு ஆதரவான கட்சிகளாக மாறியிருப்பதையும் குறிப்பிட்டார். மாவோயிஸ்டு செயலர் கணபதி, பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சமீபத்திய பேட்டியொன்றில் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய தோழர் வரவரராவ், பேச்சு வார்த்தை குறித்து இரண்டு நாக்குகளால் பேசுபவர் சிதம்பரம்தான் என்பதை அம்பலப்படுத்தியதுடன், எத்தனை இரத்தம் சிந்தினாலும்,எத்தனை உயிர்களைப்பலியிட்டாலும் இந்தப்போராட்டம் தொடரும் என்பதையும் பெருத்த கரவொலிக்கு இடையே கூறி முடித்தார்.

சிறப்புரை தோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க, தமிழ்நாடு

இறுதியில் சிறப்புரையாற்றிய தோழர் மருதையன் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதை நோக்கத்துக்காக இராக்கின்மீது போர் தொடுத்த அமெரிக்கா, அதற்கு சதாமின் சர்வாதிகாரத்தை ஒழிப்பது என்று ஒரு போலி முகாந்திரத்தைக் கூறியது போலவே, காடுகளையும் கனிவளங்களையும் கைப்பற்றும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு மாவோயிஸ்டுகளை முகாந்திரமாக்கியிருக்கிறது மத்திய அரசு என்றார். வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடி மக்களிடமிருந்து காடுகளைக் கைப்பற்றும் அரசு, அவற்றில் பொதுத்துறை சுரங்க நிறுவனங்களை உருவாக்கவில்லை; மாறாக பன்னாட்டு நிறுவனங்களுக்குததான் காடுகளைத் தாரை வார்க்கிறது. இது பழங்குடி மக்களுக்கு மட்டும் நடக்கவில்லை. காடுகளையும், கடல்வளத்தையும், பொதுத்துறைகளையும், சிறுவணிகத்தையும், விவசாயத்தையும் மக்களிடமிருந்து கைப்பற்றி ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரின் பெயர்தான் மறுகாலனியாக்கம் என்றார்.  இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கு நம்முடைய வரிப்பணத்திலிருந்து, நாளொன்றுக்கு 700 கோடி ரூபாய் வரிச்சலுகை வழங்கப்படுவது, குஜராத்தில் டாடாவின் கார் கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், அனில் அம்பானி விமானநிலையம் அமைக்க மகாரராட்டிர அரசு வழங்கியுள்ள நிலம் என்பன போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறி, மக்களுடைய சொத்துக்களைப் பறித்து முதலாளிகளிடம் ஒப்படைக்கும் இந்த அரசு, மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதைப் போல நடிப்பதையும் அம்பலப்படுத்தினார். மஞ்சள் பையில் தனது முகத்தை அச்சிட்டு மக்களுக்கு இலவச அரிசியை வழங்கும் கருணாநிதி, ஃபோர்டுக்கும், ஹூண்டாய்க்கும், நோக்கியாவுக்கும் வழங்கிய சலுகைகளையும் மஞ்சள் பையில் போட்டுத்தான் வழங்கினாரா, என்று எள்ளி நகையாடினார். பயங்கரவாதத்துக்கு கூறப்படும் இலக்கணத்தின்படி, மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும்தான் முதலாளித்துவப் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதிகளுடன் நாம் பேசுவதற்கு எதுவுமில்லை என்றும் கூறி முடித்தார்.

காட்டுவேட்டை – இசைச்சித்திரம், ம.க.இ.க மையக்கலைக்குழு

இசைச்சித்திரம் என்பது ம.க.இ.க தோழர்கள் புதிய கலைவடிம். இதில் தனிச்சிறப்பாக பதிவு செய்யப்பட்ட இசையும், இணைப்புரையும் மேடையில் ஒலிக்க, அதற்கேற்றபடி கலைஞர்கள் நடிப்பது, ஆடுவது, கருப்பொருளுக்கேற்றபடி மேடையொளி ஒளிர மொத்தத்தில் ஒரு எழுச்சியூட்டும் கலையை பார்வையாளர்கள் உணர்வார்கள். இங்கே பழங்குடி மக்களின் வாழ்க்கையும், போராட்டமும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலும் இசைச் சித்திரமாய் விரிகின்றது.

கலைநிகழ்ச்சிகள் – ம.க.இ.க மையக்கலைக்குழு

தமிழகத்தில் ம.க.இ.க கலைக்குழு மிகவும் பிரபலம் என்றால் அது மிகையில்லை. எமது அரசியல் போராட்டத்தின் பிரச்சாரத்தை கலையால் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இந்த கலைக்குழு தோழர்கள் பாடிவருகின்றனர். இவர்களது பாடல்கள் இதுவரை பதினொரு குறுந்தகடுகளாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான படிகள் விற்பனையாகியிருக்கின்றன. இங்கு ஆளும்வர்க்கங்களும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும்தான் இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நாய்களென்பதையும், நாட்டைக் காக்கும் நாயகர்கள் நக்சல்பாரிகளே என்பதையும் கலைக்குழுவின் பாடல்கள் வெவ்வேறு கோணங்களில் விளக்குகின்றன.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மக்கள் மீதான போருக்கு எதிராக ம.க.இ.க பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்!

vote-012காட்டு வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான போரைத் தொடுத்திருக்கும் இந்திய அரசை எதிர்த்து சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். பதிவுலகைச் சேர்ந்த பதிவர்களும், வாசகர்களும் கூட நிறையப் பேர் வந்திருந்தனர்.

முதலில் இந்தக் கூட்டத்திற்கு போலீசு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தது. பிறகு உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்த பிறகே கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு ஆட்சேபணையில்லை என்று நீதிமன்றத்தில் கூறி அனுமதி வழங்கியது. தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு தோள் கொடுக்கும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் திட்டமிட்ட முறையில் மாநிலமெங்கும் வீச்சாக பிரச்சாரம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் இயக்கம் இதுதான். இந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த மக்களிடம் வசூல் செய்த தொகை ரூ.17,000 என்று தோழர்கள் மேடையில் அறிவித்தனர். இதுவே இந்தக்கூட்டத்தின் உணர்வுப்பூர்வமான எழுச்சிக்கு சான்று. இங்கே கூட்டத்தின் நிகழ்வுகளைக் குறிக்கும் சில புகைப்படங்களை வெளியிடுகிறோம்.

சிறப்புரைகள்

தலைமை தாங்கிய தோழர் முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.


சிறப்புரை ஆற்றிய தோழர் பாலன், உயர்நீதிமன்ற வழக்குறைஞர், பெங்களூரு.

சிறப்புரை ஆற்றிய தோழர் வரவரராவ், புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரா.

தோழர் வரவரராவின் ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்க்கும் தோழர் மருதையன்

சிறப்புரை ஆற்றிய தோழர் மருதையன், ம.க.இ.க, தமிழ்நாடு.


கலை நிகழ்ச்சிகள்


மக்கள் திரள்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும் !!

16

vote-012அண்மை காலமாக ஒரு வித்தியாசமான காட்சியை நாம் காண்கிறோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் பல தரப்பினரால் பரவலாக நடத்தப்படுகின்றன. அறிவுத்தள செயற்பாட்டாளர்கள், தன்னார்வக் குழுக்கள், இயற்கை வேளாண் விசுவாசிகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பத்தி எழுத்தாளர்கள், நடிகர்கள் என யூகிக்கவே முடியாத பல தரப்பினரும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

போராட்டம், எதிர்ப்பு என்பதை எல்லாம் வாழ்வில் அறிந்தே இராத உயர் மேல்தட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கூட இதற்காக பேசுகின்றனர். இப்போராட்டங்கள் தொடர்பாக நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் ‘திருந்திட்டாய்ங்களோ’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை விவசாயத்தை வலியுறுத்துபவர்கள் இதற்காகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பா.ஜ.க.வின் இல.கணேசன், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக மாய்ந்து, மாய்ந்து குரல் கொடுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். கூட இதை கண்டிக்கிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றன. குறிப்பாக இந்துத்துவ, பார்ப்பன ஊடகங்கள் என்றுமில்லாதக் கூத்தாக மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பிரசாரமே செய்கின்றன.

பொதுவாக இத்தகைய தனது ஏகாதிபத்திய தரகு வேலைகளுக்கு எதிர்ப்புகள் வரும்போது அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து செல்வது அல்லது போலீஸ் லத்தி மூலம் பதில் சொல்லி அடக்கி ஒடுக்குவது என்பதுதான் ஆளும்வர்க்கத்தின் காலம் காலமான வழிமுறை. ஆனால் அந்த அரசு கூட மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு அஞ்சுவது போல நடிக்கிறது. ‘பி.டி. கத்தரிக்காயை சந்தையில் விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்’ என பெயரளவுக்கேனும் மத்திய அரசு சொல்ல வேண்டியிருக்கிறது. புறத்தோற்றத்தில் இப்போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதைப் போன்று ஒரு சித்திரத்தை உருவாக்க இவ்வரசு முனைகிறது. உள்ளடக்கத்தில் அது தீவிர முனைப்போடு இருக்கிறது என்பது வேறு விசயம்.

சரி, என்னவாயிற்று இவர்களுக்கு எல்லாம்? பா.ஜ.க.வும், அதிகார வர்க்கமும் திடீரென உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக மாறிவிட்டார்களா? இந்தியாவின் உணவு இறையாண்மையை காலில் போட்டு நசுக்கும் மரபணு மாற்ற விதைகளின் பின்னுள்ள முதலாளித்துவ நச்சு அரசியலை புரிந்துகொண்டுவிட்டார்களா? ‘மாண்சாண்டோவில்தான் கொஞ்சம் கவனப்பிசகாக இருந்துவிட்டோம். இப்போதேனும் விழித்துக்கொள்வோம் அல்லது பி.டி.காட்டன் என்ற கொலைகார விதையின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சாகக் கொடுத்தது போதும். இன்னொரு பி.டி. கத்தரிக்காயைக் கொண்டு வந்து பல ஆயிரம் விவசாயிகளை காவு கொடுக்க வேண்டாம்’ என்பது அவர்களின் எண்ணமா?

ஒரு வெங்காயமும் கிடையாது. மரபணு மாற்ற விதைகளுக்கு கிளர்ந்து வரும் எதிர்ப்பின் பேர்பாதி எங்கிருந்து வருகிறது என்ற திசையைப் பார்த்தால் தெரியும், அவர்கள் அத்தனை பேரும் எப்போதும், எதன் பொருட்டும் மரபுகளை மாற்ற விரும்பாதவர்கள். கோயிலாக இருந்தாலும், கத்தரிக்காயாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மரபு காக்கப்பட வேண்டும். ராமன் என்றொருவன் வரலாற்றில் இருந்தானா, இல்லையா என்பதே தெரியாது. ஆனால் கடலின் மணல் திட்டை ராமர் பாலம் என்பார்கள். கேட்டால் இந்து மரபு என்பார்கள். கருவறைக்குள் என்னைத் தவிர வேறு எவனும் நுழையக்கூடாது என்பது இந்திய மரபு. அதை மாற்றினால் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. தமிழ் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற தமிழ் மரபின் குணங்களுடன் வாழ வேண்டும். மீறினால் ‘தமிழனுக்கு சொரணையே இல்லைங்க’ என்று தங்கர்பச்சான் ரப்பர் ஸ்டாம்புடன் கிளம்பிவிடுவார் ‘யார் தமிழன்?’ என சீல் குத்த.

ஆண்களின் உடலுக்கு வெளியே இருக்கும் உபரி உறுப்பாகவே பெண்கள் நடத்தப்படுவதும், ஆதிக்கச்சாதிக்காரன் தலித் மக்களை அடிமைச் சேவகம் செய்ய வலியுறுத்துவதும், ஆண்டைகளுக்கு பணிந்து நடக்க ஏழைகள் பணிக்கப்படுவதும், மத, மொழி, இன மற்றும் பாலியல் சிறுபான்மையினரை விளிம்பில் தள்ளி அவர்களின் தினவாழ்வை அச்சத்துக்கு உள்ளாக்குவதும் இந்திய மண்ணின் மரபுகள்தான். அவை மீறப்படும்போதும் பதற்றமான குரல்கள் மேலெழும்பும். தற்போதைய மரபணு மாற்ற விதைகளுக்கு எதிரான குரல்களின் சரிபாதி அத்தகையவே.

“உங்களுக்கு இதே பொழப்புடா. எவனையும் ஒண்ணு சேர விட மாட்டீங்களே. அவன் மத்த விசயத்துல எப்படியாவது இருந்துட்டுப் போறான். பி.டி. கத்தரிக்காயை எதிர்க்கிறது நல்ல விசயம்தானே… அதுக்குள்ளேயும் எதுக்குப் பூணூலை தேடுறீங்க?” என்பது உங்களில் சிலரது உடனடி எண்ணமாகவும், எதிர்வினையாகவும் இருக்கக்கூடும். சரி, ஒரு வாதத்துக்காக பி.டி.கத்தரிக்காயை எதிர்க்கும் எல்லோரும் போராளிகள், சமூக நலனின் அக்கறைக் கொண்டவர்கள் என வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு இந்த நாட்டின் கத்தரிக்காய் வளம் பறிக்கப்படுவது பற்றி மட்டும்தான் கவலையா? அதற்கு முன்னும், பின்னும் இம்மண்ணின் வளங்கள் சூறையாடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

இதோ… சமகாலத்தில் சட்டீஸ்கர், ஜார்கண்ட் காடுகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிட துடிக்கின்றன. மரபுரிமை அடிப்படையில் தண்டகாரன்யா காட்டின் ஆதிவாசிகளுக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் இருந்து அவர்கள் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இதை பன்னாட்டு நிறுவனங்களின் புரோக்கர்களாக இருந்து பிரதமரும், உள்துறை அமைச்சருமேதான் செய்கின்றனர்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் நீர்வளம் முழுவதையும் ரத்தம் உறிஞ்சுவதைப் போல கோக்கோகோலா நிறுவனம் இன்னமும் உறிஞ்சிகொண்டேதான் இருக்கிறது. அருகாமை மாநிலங்கள் சொந்தம் கொண்டாட முடியாத, தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, இங்கேயே கடலில் கலக்கும் ஒரே நதியான தாமிரபரணியின் வளம் மரபு ரீதியாக கோககோலாவுக்கு சொந்தமா, தமிழ் மக்களுக்கு சொந்தமா? தண்டகாரண்யாவிலும், தாமிரபரணியிலும் நமது பூர்வீக மரபுரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக இந்த மரபின் மைந்தர்கள் என்ன செய்து கிழித்தார்கள்? ஒரு கண்டனம், ஒரு அறிக்கை, ஒரு போராட்டம்… எதுவுமில்லை.

1987-ல் அமெரிக்காவில் முதன் முதலில் மரபணு மாற்ற உயிரினம் உருவாக்கப்பட்டது. நாம் கண்ணாடித் தொட்டிகளில் பார்க்கிற வண்ண மீன்கள்தான் இந்த உலகின் முதல் மரபணு மாற்ற உயிரினம். அவை வெறுமனே அழகுக்கானவை என்பதால் உடனடியாக ஆபத்துத் தெரியவில்லை. கொத்த வரும் சர்ப்பம் கூட அழகுதான். இந்த மரபணு மாற்றம் என்ற சர்ப்பம் முதலாளிகளின் கண்களுக்கு மிகப்பெரிய கர்ப்பகத்தருவாக தெரிந்தது. அதன் பிறகு அவர்கள் உருவாக்கியதுதான் பிராய்லர் கோழிகள். கோழியின் சதைப்பகுதி மட்டும் அதிகமாக வரும்படி அதன் மரபணுவை மாற்றியமைத்து பிராய்லர் கோழிகளை உருவாக்கினார்கள். எது விற்பனையாகிறதோ அதன் உற்பத்தியை பெருக்குவது இயல்பான உற்பத்தியாளர் உத்தி. ஒரு வருடம் உளுந்து அதிகம் விலைபோனால் அடுத்த வருடம் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து பயிரிடுவது வழக்கம்தான். ஆனால் ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பையே விற்பனைக்கேற்ப மாற்றுவதன் பின்னால் இருக்கும் லாபவெறியின் கொடூர முகத்தைப் பாருங்கள்.

இன்றைய நுகர்வு கலாசாரத்தில் மனித உடம்புக்கும், பிராய்லர் கோழிக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட கிடையாது. பிராய்லர் கோழிக்கு சதை அதிகமாக வரும்படி மரபணு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்றால் கண்டதையும் வாங்கிக்கொண்டே இருக்கும்படி மனிதனின் மூளை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. நிறுவனங்கள் தங்களின் பொருட்களுக்கு ஏற்றதுபோல வாழ்வதற்கு மக்களை பழக்கியிருக்கிறார்கள்.

கிராமங்களில் மாடு மேய்ப்பதில் இரண்டு வகை உண்டு. மாட்டை புல் உள்ள இடத்தில் மேயவிட்டு ஓட்டி வருவது ஒரு வகை. வெள்ளாமை வயல்களின் வரப்புகளுக்கு நடுவே பசும்புல்லை மாட்டை கையில் பிடித்தபடி மேயவிடுவது இன்னொரு வகை. ‘பிடி மாடு மேய்ப்பது’ என்றிதைச் சொல்வார்கள். இன்றைய சந்தை உலகில் நிறுவனங்கள் மேய்க்கும் பிடிமாடுகளாகத்தான் இருக்கின்றனர் மனிதர்கள். ஆகவே பிராய்லர் கோழியை தின்பதால் நீங்கள் அதை விட பெரிய ஆள் என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நீங்களும் ஒரு பிராய்லர் கோழியே.

சரி, இப்படி கோழியின் மரபணுவை மாற்றினார்களே… அப்போது இந்த so called எதிர்ப்பாளர்கள் எங்கேப் போனார்கள்? ‘கோழிக்கறியை மாத்தினா எங்களுக்கு என்ன? அதெல்லாம் அவா ஃபுட். கத்தரிக்காய்தான் எங்க ஃபுட்’ என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாமா? உண்மையில் பி.டி. கத்தரிக்காய் என்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை நாம் முழு வீச்சோடு எதிர்க்க வேண்டும். இன்று பரவலாக பி.டி.கத்தரிக்காய் என்ற வார்த்தையே அறியப்படுகிறது.

Bacillus Thuringiensis  என்ற பாக்டீரியாவின் சுருக்கம்தான் பி.டி. இந்த வைரஸை கத்தரிக்காயின் மரபணுவில் செலுத்தி அதன் தன்மையை மாற்றுகின்றனர். ஏன்? இந்திய கத்தரிக்காயில் தண்டு துளைப்பான் புழு அதிகமாக இருக்கிறதாம். ’ஆகவே அந்தப் புழுவை எதிர்க்கும் விதமாக கத்தரிக்காயின் மரபணுவை மாற்றி அமைத்திருக்கிறோம்’ என இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறை யதார்த்தம் வேறாக இருக்கிறது. இதே போன்றதொரு ’பூச்சி தாக்காது’ காரணத்தை சொல்லிதான் முன்பு பி.டி.பருத்தியை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்த பருத்தி முன்னெப்போதும் இல்லாததைவிட மிகப்பெரிய நஷ்டத்தை பரிசளிக்கவே ஆந்திராவிலும், மஹாராஷ்டிராவிலும் பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோனார்கள்.

விசயம் என்னவெனில் எந்தவொரு பூச்சியினமும் மருந்தின் தன்மைக்கு மிக விரைவில் பழகிவிடும். பின் அதைவிட வீரியமான மருந்தைதான் தெளிக்க வேண்டும். இவர்கள் மரபணுவை மாற்றி உருவாக்கிய விதைக்கும் இது பொருந்தும் என்பதால் அவ்விதைகள் மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தன. எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின. பி.டி.பருத்திக்கு நேற்று இதுதான் நடந்தது. நாளை பி.டி.கத்தரிக்காய்க்கும் இதுதான் நடக்கும்.

மரபணு மாற்ற விதைகளை ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தன் நிலத்தில் பயிரிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அருகாமை வயல்களில் வேறு எந்த தாவரம் பயிரிட்டிருந்தாலும் அதன் மரபணுவிலும் தானாகவே மாற்றம் நிகழும். தொற்றுநோய் மாதிரி. ஆக, ஒரு ஊரில் ஒரே ஒரு விவசாயி இதைப் பயிரிட்டாலும் மெல்ல, மெல்ல அப்பிராந்தியத்தின் தாவர மரபணு சூழல் மாறுதலுக்குள்ளாகும். வேறு வழியே இல்லாமல் மரபணு மாற்ற விதைகளை விற்கும் நிறுவனங்களிடம் போய் நிற்க வேண்டும். அவன் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய விவசாய நிலங்களையும் மோனோபோலியாக ஆட்சி செலுத்துவார்கள். மரபணு மாற்ற தாவரங்களுக்கான விதைகளுக்கும் அந்த நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டும்.

விளைந்ததை விதையாகப் பயன்படுத்த முடியாது. ’பயன்படுத்தவும் கூடாது’ என்கிறது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான India-US knowledge initiative on Agriculture என்ற ஒப்பந்தம். 1,2,3 அணு ஒப்பந்தம் சமயத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற அமெரிக்கா தொழில்நுட்ப உதவி செய்யுமாம். இந்தியா இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்கித் தருமாம். வருடத்துக்கு 350 கோடி ரூபாய். இந்திய மரபை காப்பாற்ற அமெரிக்காவுக்குக் காசு தரும் இந்த அறிவாளிகளை என்ன செய்வது? இந்த ஒப்பந்தம் இம்மியளவும் மாற்றமில்லாமல் அப்படியேதான் இன்னமும் அமுலில் இருக்கிறது. மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சும்மாவேனும் எதிர்ப்புகளை மட்டுப்படுத்தும் தந்திரமாக ‘தற்காலிகத் தடை’ என்கிறார். மரபா, லாபமா என்றால் அவர்கள் லாபத்தின் பக்கமே சாய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேற்சொன்ன இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரான மிக மோசமான அம்சங்களும் அடக்கம். பொதுவில் அனைத்துலக சட்டங்களின்படி தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினத்துக்கும் தனி சொத்துரிமை கோர முடியாது. இவர்கள் மரபணு மாற்றத்தின் மூலம் சிற்சில மாற்றங்களை விதைகளில் ஏற்படுத்தி அவற்றை தங்களின் அறிவுசார் சொத்துரிமையாக மாற்ற முனைகின்றனர். இதன்மூலம் உயிரினங்களுக்கும் காப்புரிமை பெறத் துடிக்கின்றனர்.

ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் லாபத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முயலும் இந்த லாபவெறிக்கு எதிராக நாம் அனைவரும் எதிர்குரல் எழுப்ப வேண்டும். நமது எதிர்ப்புகளை உழைக்கும் விவசாயிகளுடன் பொருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, மரபின் மைந்தர்களுடன் அல்ல!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி !!

52


vote-012மத்திய இந்தியாவில் ஆபரேஷன் கிரீன் ஹண்ட் என்ற பெயரில் மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்! – என்பதை தமிழக மக்களிடையே ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் கடந்த இரு மாதங்களாக பிரச்சாரம் செய்து வந்தன. முதற்கட்டமாக பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்கங்கள் நடைபெற்றன. அடுத்து பேருந்துகள், தொடர் வண்டிகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகளில் மக்களிடம் நேரடியாக பிரச்சாரம் செய்யப்பட்டன. மக்களுக்கு இந்தப்பிரச்சினை தெரியவில்லை என்றாலும் தெரிந்த பின்னர் உணர்வுப்பூர்வமாக ஆதரித்தனர். நிதி தந்தனர்.

இந்த பிரச்சார இயக்கத்தின் முத்தாய்ப்பாக கடந்த சனிக்கிழமையன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக சென்னை நகரம் முழுவதும் மக்களிடையே பிரச்சாரம் வீச்சாக நடைபெற்றது. பிரபல எழுத்தாளரும் சமூக சேவகியுமான அருந்ததி ராய் எழுதிய ‘இந்தியாவின் இதயத்தின் மீதான போர்’ என்ற கட்டுரையின் தமிழாக்கம் சிறு வெளியீடாய் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டன. கீரீன் ஹண்ட் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளும் ஒரு நூலாக வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

காட்டு வேட்டையின் அரசியல் விவரங்களை எளிமையாகவும் போர்க்குணத்துடனும் அறிமுகம் செய்யும் துண்டுப் பிரசுரம் இலட்சக் கணக்கில் அச்சிடப்பட்டு மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டன. மேலும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இந்த துண்டுப் பிரசுரம் மொழிமாற்றம் செய்யப்பட்டு மற்ற மொழி மக்களிடத்தில் விநியோகிக்கப்பட்டன. இவையனைத்தும் வினவிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆர் நகர் பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்தும் தோழர்கள், பெண்கள் குழந்தைகள் முதியவர்களை உள்ளிட்டு வந்திருந்தனர். சென்னை நகரம் முழுவதிலுமிருந்தும் அரசியல் ஆர்வலர்களும் பகுதிவாழ் மக்களும் கூட பெருந்திரளாக வந்திருந்தனர். எம்.ஜி.ஆர் நகரின் சந்தைத் தெருவின் கோடியில் போடப்பட்டிருந்த மேடையிலிருந்து முக்கிய சாலையின் சந்திப்பு வரைக்கும் மக்கள் வெள்ளம்தான். தெரு முனையிலிருந்த மதுரை தேவர் ஹோட்டலின் உரிமையாளர் இதைப் பார்த்துவிட்டு இது மதுரை சித்திரைத் திருவிழாதான் என்று ஆச்சரியப்பட்டார். தியாகிகளுக்கு வீரவணக்கம் தெரிவித்து கூட்டம் துவங்கியது. தமிழக பு.ஜ.தொ.மு தலைவர் தோழர் முகுந்தன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

முதலில் பேசிய பெங்களூருவின் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பாலன் கீரின் ஹண்டிற்கு பின்னே உள்ள பல இலட்சம் கோடி பொருளாதாரக் கொள்ளையினை விரிவான ஆதாரங்கள்,புள்ளிவிவரங்களுடன் விளக்கிப் பேசினார். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக எப்படி பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் பறிபோகின்றன என்பதை உணர்ச்சியுடன் விவரித்தார்.

அடுத்து ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் தோழர் வரவரராவ் ஆங்கிலத்தில் உரையாற்ற அதை தோழர் மருதையன் மொழிபெயர்த்தார். தோழர் வரவரராவ் தனது உரையில் நக்சல்பரி எழுச்சி, குறிப்பாக அந்த எழுச்சி பழங்குடி மக்களின் பகுதியில் பெற்ற வெற்றிகள், பின்னர் மா.லெ அமைப்பினர் அந்த மக்களிடம் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஆற்றிவரும் களப்பணியினை வரலாறாக விவரித்தார். மன்மோகன் சிங், ப.சிதம்பரம் முதலான பன்னாட்டு நிறுவன அடியாட்களின் உதவியோடு மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களுக்கெதிரான போர் நடைபெறுவதையும் விளக்கினார். பழங்குடி மக்கள் மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் இந்தப் போரை எதிர்த்து போராடி வருவதையும் புரியவைத்தார்.

இறுதியில் பேசிய ம.க.இ.க பொதுச்செயலர் தோழர் மருதையன் இந்தப்போர் என்பது மறுகாலனியாதிக்கத்தின் அங்கமாக நடைபெறுவதையும் இதை அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டுமெனவும் அறைகூவி முடித்தார். அதன் பின்னர் எழுச்சியூட்டும் கலைநிகழ்ச்சி ம.க.இ.க மையக் கலைக்குழுத் தோழர்களால் நடத்தப்பட்டது. காட்டுவேட்டையை கண்முன்னிறுத்தும் இசைச்சித்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மாலை 6 மணிக்கு துவங்கிய பொதுக்கூட்டம் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் இரவு 10.30மணிக்கு முடிவுற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தின் வீடியோப் பதிவு வினவில் வெளியிடப்படும்.

பொதுக்கூட்டம் முடிவுற்றாலும் இந்தப்பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. காட்டு வேட்டை நிறுத்தப்படும் வரை நமது வேலைகளும் ஓயப்போவதில்லை.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சென்னைவாழ் பதிவர்களே, வாசகர்களே…!!

சொந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் இராணுவ நடவடிக்கை அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஒரு வீச்சான விவாதத்தைக் கிளப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால், மயான அமைதிக்கு இடையில், தனது பலத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறது.

– ஷோமா சவுத்ரி, எழுத்தாளர்

உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே.  அதற்காகத்தான் இந்த ஆயுதப் படைகள் அங்கே ஏராளமாய் குவிக்கப்படுகின்றன.

ஹிமான்சு குமார்,  காந்தியவாதி

இதுவரை அம் மக்களுக்கு (பழங்குடியினர்)  புறக்கணிப்பையும், வன்முறையையும் தவிர வெறெதையும் வழங்காத அரசாங்கம், இப்போது அவர்களிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அவர்களது பூமியையும் பிடுங்க விரும்புகின்றது. பழங்குடி மக்கள் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இதுதான்.

– அருந்ததி ராய், சமூக ஆர்வலர்

‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’   காடுகளை வேட்டையாடுவது, அவற்றுக்குக் காவலிருக்கும் பழங்குடிகளை வேட்டையாடுவது, அதற்குத் தடையாக இருக்கும் நக்சல்பாரிகளை வேட்டையாடுவது என்ற மூன்று நோக்கங்களையும் உள்ளடக்கியது. இதுவரை ஒரு இலட்சம் பழங்குடி மக்கள் சட்டிஸ்காரிலிருந்து ஆந்திரத்துக்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள். ஈழத்தின் தமிழின அழிப்புப் போரில்
இலங்கை இராணுவம் கையாண்ட அதே உத்திகளை பழங்குடி மக்களுக்கு எதிராக கையாண்டு வருகிறது மத்திய அரசு. ஆம் நண்பர்களே, மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்பு போர்

இன்று மாலை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் (அசோக் பில்லர் அருகில்) நடக்கவிருக்கும் எமது கூட்டத்திற்கு கண்டிப்பாக வாருங்கள்! போராடும் மக்களுக்கு துணையாய் நில்லுங்கள்!!

தலைமை: அ. முகுந்தன்
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு

உரையாற்றுவோர்:

தோழர் எஸ். பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

தோழர் மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

தோழர் வரவரராவ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரப் பிரதேசம்.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்  புரட்சிகர கலைநிகழ்ச்சி

விவரங்களுக்கு: வினவு – 97100 82506,

vote-012

தொடர்புடைய பதிவுகள்

நாளை – நாட்டைக் காக்கும் நக்சல்பாரிகளின் பொதுக்கூட்டம்! வந்து பாருங்க!!

vote-012

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!

சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

பிப்.20 சனிக்கிழமை மாலை 6 மணி
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் (அசோக் பில்லர் அருகில்), சென்னை.

தலைமை: அ. முகுந்தன்
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு

உரையாற்றுவோர்:

தோழர் எஸ். பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

தோழர் மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

தோழர் வரவரராவ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரப் பிரதேசம்.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி

__________________________________________

சென்னை வாழ் பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வருக!

விவரங்களுக்கு: வினவு – 97100 82506

__________________________________________

காடு மலைகளின் அடிமடி ஆழத்தில்,
தங்கம்-வைரம்-பாக்சைட்-
செம்பு-இரும்பு-குவார்ட்சைட்டு
நிலக்கரி-பளிங்கு-சுண்ணாம்பு
கனிவளம்-நீர் வளம்-காட்டுவளம் !

எல்லா வளமும் அள்ளி எடுக்குது
டாட்டா, பிர்லா, மிட்டல், ஜிண்டால்
தரகு முதலாளிக் கும்பல்களும்
போஸ்கோ, லபார்க், வேதாந்தா
அன்னிய முதலாளிகளும் !

ஒரு டன் இரும்பு
உலகச் சந்தையில் 10,000 ரூபாய் !
முதலாளிகளுக்கு
அரசு விற்பதோ 27 ரூபாய் !

சின்னஞ் சிறிய ஜார்கண்ட் மாநிலம்
உலகச் சந்தையில் ஏலம் போகுது !
பத்து, நூறு, ஆயிரம் அல்ல,
லட்சம் ஏக்கர் பறிபோகுது !
கார்ப்பரேட் கம்பெனிகள் கொத்தி எடுக்குது !

இந்தியாவின் மானம் காக்க மண் காக்க
போராடும் உழைக்கும் மக்களை,
நக்சல்பாரி புரட்சியாளர்களை
அடக்கி ஒடுக்கவே ‘காட்டுவேட்டை’ !

பழங்குடிக்கெதிராய் ‘காட்டுவேட்டை’
மீனவர்க்கெதிராய் ‘காட்டுவேட்டை’
வேட்டைகள் தொடர அனுமதியோம் !

கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் !
பன்னாட்டு கம்பெனிகள்,
தரகு முதலாளிகளுடன் போடப்பட்டுள்ள
தேசத்துரோக ஒப்பந்தங்களை
கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் !

உண்மை என்ன, உண்மை என்ன ?
மண்ணைப்பறிக்கும்
மறுகாலனியத்திற்கு எதிராய்
மாபெரும் போரை மக்கள் நடத்துகிறார்கள் !

மக்களை அடக்கி ஒடுக்கி
மண்ணை விற்குது இந்திய அரசு !
இதுவே ரகசியம் ! இதுவே ரகசியம் !
‘சிதம்பர’ ரகசியம் ! ‘சிதம்பர’ ரகசியம் !

ஒரு லட்சம் இராணுவத்தை
சட்டீஸ்கர்-ஒரிசா-ஜார்கண்டிலும்
தண்டகாரண்யா காடுகளிலும் குவித்து வைத்து
இந்த மண்ணின் பூர்வக் குடிகள் மீதே
இந்திய அரசு போரை நடத்துது !

பழங்குடிகளுக்குத் துணை நிற்போம் !
மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில்
நக்சல்பாரிகள் தலைமையில்
அணிவகுப்போம் ! அணிவகுப்போம் !

பகத்சிங் பெயரால், திப்புவின் பெயரால்
மீண்டும் ஒரு சுதந்திரப் போரை
உடனே தொடங்குவோம் ! உடனே தொடங்குவோம் !

நேற்று வரை ‘சல்வாஜீடும்’
இன்று முதல் ‘காட்டுவேட்டை’
700 கிராமங்கள் எரிப்பு,
3 லட்சம் பழங்குடி மக்கள் விரட்டியடிப்பு,
50,000 மக்கள் முகாம் சிறைகளில்.

இனியும் பொறுக்கப் போகிறோ‌மா ?
சும்மா இருக்கப் போகிறோ‌மா ?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

காதலர் தினக் கொலைகள் !!

14


1. குமரியில் ஒரு கொலை!

vote-012குமரி மாவட்டம் மார்த்தாண்டம், அருமனை அருகேயுள்ள சிதறால் சந்திப்பு பகுதியைச் சேர்ந்த தாஸ், கனகம் தம்பதியினரின் மகள் ஷர்மின்(24வயது) எம்.இ முடித்துவிட்டு நாகர்கோவில் அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார். அதே பகுதியைச்சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஷாஜினை (25) ஷர்மின் காதலித்து வந்தார்.

முதலில் ஷாஜின் எம்.ஃபில். ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருவதாக கூறியுள்ளார். இதை உண்மையென தனது தோழிகளிடம் ஷர்மின் பகிர்ந்திருக்கிறார். ஆனால் தோழிகளோ ஷாஜின் இப்படித்தான் பலரிடம் பொய் கூறி வருவதாக எச்சரித்தனர். எச்சரிக்கையடைந்த ஷர்மின் படிப்பு சான்றிதழ்களை கொண்டு வருமாறு ஷாஜினைக் கேட்டார். குட்டுடைந்த ஷாஜின் பட்டப்படிப்பு மட்டும் படித்துவிட்டு வேலையின்றி இருப்பதாக கூறினான்.

காதலின் தொடக்கமே பொய்யாக இருப்பதை எண்ணிய ஷர்மின் காதலைத் துண்டித்துவிட்டு ஷாஜினை சந்திப்பதை நிறுத்தினார். தனது தாயிடமும் காதலைக் குறித்தும் அதை முறித்துக் கொண்டது பற்றியும் தெரிவித்துவிட்டு தனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு கேட்டிருக்கிறார். இடையில் ஷாஜின் பெண் கேட்டுச் சென்றிருக்கிறான். ஷர்மினின் தாயார் அது சாத்தியமில்லையென்று மறுத்திருக்கிறார்.

ஆத்திரமடைந்த ஷாஜின் 16.2.10 அன்று காலை ஷர்மின் வீட்டிற்கு அவரது தாயார் இல்லாத நேரத்தில் சென்றிருக்கிறான். சமையலறைக்குள்ளிருந்த அந்தப் பெண்ணை ஆத்திரம் தீரும்வரை அரிவாளால் வெட்டிக் கொன்றான். பின்னர் ரயில் முன் பாய்ந்து சாக முயன்றிருக்கிறான். அந்த முயற்சி நிறைவேறாமல் தலையில் அடிபட்டு இப்போது போலீசின் பாதுகாப்பில் மருத்துவமனையில் உள்ளான். இந்தக் கொலை குறித்த அவனது வாக்குமூலத்தை வைத்து போலீசார் அவனைக் கைது செய்தனர்.

2. சென்னையில் ஒரு தற்கொலை!

சென்னை வில்லிவாக்கம் திருநகரைச் சேர்ந்த சண்முகவர்தினி (வயது 24) கே.கே.நகரிலுள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர். காலையில் பாடம் நடத்திவிட்டு மாலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ மேற்படிப்புக்கும் சென்று வந்தார். இவரது தந்தை செல்லதம்பி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்.

16.2.10 காலையில் கல்லூரிக்கு பேருந்தில் சென்ற போது யாருடனோ செல்பேசியில் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார். கல்லூரி சென்ற பிறகு தனது அறையில் அழுது கொண்டிருந்தவர் காலை 10.30மணிக்கு ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். படுகாயமடைந்த அவரை கல்லூரி ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் இறந்து போனார்.

போலீசின் விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு: சண்முகவர்தினி பி.இ படிக்கும்போது சக மாணவனான ஜெகனை காதலித்துள்ளார். படிப்பு முடிந்த பிறகும் அவர்களது காதல் தொடர்ந்தது. ஆனால் சண்முகவர்தினியின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு வேறு மாப்பிள்ளையும் தேடத்துவங்கினர்.

இது தொடர்பாகத்தான் அவருக்கும் அவரது தந்தைக்கும் செல்பேசியில் கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. பின்னர் தனது காதலன் ஜெகனோடு பேசினார். ஜெகனோ,”பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்யும்படியும், தன்னை மறந்துவிடும்படியும்” கூறியிருக்கிறார். ஒரே நேரத்தில் தந்தையும், காதலனும் பேசிய கருத்துக்களால் மனமுடைந்த சண்முகவர்தினி தனது முடிவை தேடிக்கொண்டார்.

_________________________________________________

இருபத்தி நான்கு வயதில் பூத்துக்குலங்க வேண்டிய இரண்டு மொட்டுக்கள் கருகிவிட்டன – இல்லை கருக்கப்பட்டன. காதலை மறுத்ததற்காக ஷர்மின் கொல்லப்பட்டார். காதல் நிறைவேறாததற்காக சண்முகவர்தினி இறந்து போனார். காதலிக்கவும் உரிமையில்லை, காதலை மறுக்கவும் உரிமையில்லை.

சோர்ந்து போகும் நடுத்தர வயது போலல்லாமல் வாழ்வை தேனியின் சுறுசுறுப்போடு உறிஞ்சும் இருபதுகளின் வயதில் அந்தப் பெண்கள் என்னவெல்லாம் கனவு கண்டிருந்திருப்பார்கள்? அநேக பெண்களுக்கு கிடைக்காத பொறியியல் கல்வி, அதிலும் முதுகலைக் கல்வியைத் தொட்டுவிட்ட அவர்களது மனதில் எதிர்காலம் குறித்த விருப்பம் எப்படியெல்லாம் கருக்கொண்டிருந்திருக்கும்? மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் இளம் ஆசிரியைகளாக கற்பிப்பதின் உற்சாகத்தை கண்டிருப்பவர்கள் ஏன் மரணத்திற்கு பயணித்தார்கள்?

அந்தப்பெண்களைப் பெற்ற தாய்மார்கள், தாங்கள் பாராட்டி சீராட்டி அரும்பாடுபட்டு படிக்கவைத்து ஆளாக்கியவர்கள், இன்று ஆற்றாமை தீராது நினைத்து நினைத்து அழுதுகொண்டிருப்பார்கள். தினசரிகளின் பரபரப்பு சம்பவங்களான அவர்களது மகள்களின் கதைகள் மற்றவர்களுக்கு வேண்டுமானால் பத்தோடு ஒன்றாக இருக்கலாம். படித்து விட்டு சற்றே அனுதாபத்துடன் நினைத்துவிட்டு மறந்து போகும் வழமையாக இருக்கலாம். பெற்ற மனதிற்கோ அது இனி வாழ்நாள் முழுதும் பின்தொடரப்போகும் துயரத்தின் குறியீடாக செதுக்கப் பட்டிருக்கும். அவர்களை என்ன சொல்லி தேற்றுவது?

ஒருவேளை அந்த இரண்டு பேராசிரியைகளும் பெண்ணாகப் பிறந்ததுதான் பெருங்குற்றமா? இல்லை இளம்வயதில் இயல்பாக துளிர்க்கும் காதலை வரித்துக்கொண்டதுதான் குற்றமா? குரோமோசோம்களின் கலப்பையும், ஹார்மோன்களின் விளைவையும் அறிவியலின் விதியென்று புரிந்து கொள்வதா? இல்லை சமூகவியலின் சதியென்று சம்மதிப்பதா? கேவலம் ஒரு பெண்ணுயிர் காதலிப்பதும், காதலிக்க வேண்டாமென்று மறுப்பதும் உயிரைப் பறிக்கக் கூடிய கொலை குற்றங்களா?

நேசத்தை உணர்த்தவேண்டிய காதல் வெறுப்போடு மரணத்தை தழுவவைத்தது என்ன முரண்?

பிப்ரவரி 14 காதலர் தினம். பிப்ரவரி 16 அந்தப் பெண்களின் மரண தினம். இரண்டு நாள் வேறுபட்டாலும் இரண்டையும் காதல்தான் இணைக்கிறது. காதலர் தினம் வருடா வருடம் தனது கொண்டாட்டத்தை அதிகரித்தபடிதான் செல்கிறது. ஆனால் அந்த அதிகரிப்பு காதலின் தன்மையில் ஒரு முதிர்ச்சியையோ, அறிவையோ சார்ந்திருக்கவில்லை. ‘ஜோடி’ ஆஃபர்க்ளில் நவீன பொருட்கள்,  காதலர்கள் சந்திக்கும் பொது இடங்கள், ஊடகங்களின் காதல் நினைவுக் கதைகள், காதல் சினிமா வசனங்கள், காதல் கவிதைகள் என்று காதலின் உலர்ந்து உதிரும் அலங்காரங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளப்படுகிறது.

எங்கு பார்த்தாலும் ஆர்ட்டின் பலூன்கள் அங்காடிகளையும், அலுவலகங்களையும் அழகுபடுத்துகின்றன. அன்பைக் காட்டும் அந்த இதயம் காதலுக்கென்று பரவசம் கொள்ள மட்டுமே நினைவுபடுத்தப்படுகிறது. ஆனால் அந்த அன்பை அடைவதற்கு பல தடைகளைக் கடக்கவேண்டும், போராடவேண்டுமென்ற நடைமுறை அந்த இதயத்தின் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்திய சமூகத்தில் காதலிப்பதற்கு என்னென்ன தடைகள், அந்த தடைகளை எப்படிக் கடக்கவேண்டும், கடந்தவர்களின் வீரக்கதைகள் என்றல்லவா இங்கு காதலர்தினம் கடைபிடிக்கப்படவேண்டும்? மாறாக தள்ளுபடி விலையில் விற்கப்படும் புத்தம் புதிய செல்பேசியில் காதல் எஸ்.எம்.எஸ் அனுப்புவதைத்தான் ஊடகங்கள் கற்றுக் கொடுக்கின்றன.

ஷாஜின் அந்தப் பெண் ஷர்மினோடு கொண்டது காதலா இல்லை வன்மமா? தனது கல்வித்தகுதியை ஊதிப்பெருக்கி பொய் சொல்லி காதலித்திருக்கிறான். பொய்யை அறிந்ததும் காதலை இரத்து செய்கிறாள் ஷர்மின். இது இயல்பானதுதானே? தன்னைப் பற்றிய உண்மைகளை மறைக்கும் ஒருவனை அதுவும் காதலுக்காக செய்யும் ஒருவனை எந்தப்பெண் காதலிப்பாள்? தனது உயர்கல்வியின் தகுதிக்கு நிகராக அவனது கல்வியில்லை என்பதற்காகக்கூட ஷர்மின் காதலை துண்டித்திருக்கட்டும். அப்போது கூட அது தவறென்று சொல்ல முடியாதே?

ஷாஜின் போன்ற ஆண்கள் பொய் சொல்லுவது கூடப்பிரச்சினையில்லை. காதல் என்று வரும் போது இருபாலாரும் தனது நல்லெண்ணங்களை மட்டும் வெளிப்படுத்த முயல்வார்கள். தத்தமது குறைகளை, பலவீனங்களை ஆனமட்டும் மறைக்க முனைவார்கள். போகட்டும். ஆனால் ஷாஜின் தன்னை சுதந்திரமான ஆணாகக் கருதிக்கொண்டது போல ஷர்மினை சுதந்திரமான பெண்ணாக அங்கீகரிக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை அவள் அவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய ஒரு காதல் அடிமை. அவன் அவளைக் காதலிக்கத்தொடங்கியதுமே அவளது சுதந்திரவாழ்க்கை முடிவுக்கு வந்தேயாகவேண்டும். அதைத் தாண்டி அவளுக்கு வாழ்க்கையில்லை.

எப்படி காதலிக்க உரிமையிருக்கிறதோ அப்படி காதலை இரத்து செய்யவும் உரிமையிருக்கிறது என்பது ஆண்களைப் பொறுத்தவரை செல்லுபடியாகாது. அப்படித்தான் அவர்கள் சினிமாவால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பதறி ஓடும் வெள்ளாட்டை விடாது துரத்தி வீழ்த்தும் வேட்டை நாயின் தந்திரங்கள்தான் தமிழ் சினிமாவின் காதல் பற்றிய பாடங்கள். இதனால் ஒரு பெண்ணிடம் ஜென்டிலாக காதலைத் தெரிவிப்பது நமது இளைஞர்கள் அறியாதது. மாறாக அந்தப்பெண் தன்னைக்காதலித்தே ஆகவேண்டும் என்று குறியாய் அலைவார்கள். இந்தத் தொந்தரவு தாங்காமலே அல்லது தன்னை இவன் இவ்வளவு வெறியாய் காதலிக்கிறானே என்றெண்ணி அந்தப்பெண்களும் அந்த ஆதிக்கக் காதலை அடிபணிந்து ஏற்றுக் கொள்வார்கள். எனில் இது எந்தவகைக் காதல்?

காமம் என்ற உணர்ச்சி மனிதனை உள்ளிட்டு எல்லாவகை விலங்குகளுக்கும் பொதுவானதுதான். காமத்திலிருந்து காதல் என்ற பண்பாடுதான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரிக்கிறது. ஒத்த தகுதியுடைய மனிதர்களில் இன்னாரைத் தெரிவு செய்து காதலிப்பது என்பது மனிதன் உருவாக்கிய பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு. அதே சமயம் தனிப்பட்ட இருவரது காதல் எப்போதும் தனிப்பட்ட விசயமாக மட்டும் இருப்பதில்லை. அது சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைக் கணக்கில் கொண்டே காரியசாத்தியமாகிறது. ஆனால் இன்னமும் தனிப்பட்ட வாழ்வில் அடிமைத்தனத்தின் பிடிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அவள் தெரிவு செய்வதற்கும் மறுப்பதற்கும் உரிமை பெற்றவளாக இருப்பதில்லை.

பெண்களின் இந்த சமூக அடிமைத்தனத்தைத்தான் ஷாஜின் போன்ற ஆண்கள் கேடாகப் பயன்படுத்துகிறார்கள். தமது வாழ்க்கைத் துணைக்கு சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ அவர்கள் கிஞ்சித்தும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் இத்தகைய ஆண்கள் கூட ஜனநாயகத்தின் வாசனையை தமது சமூக வாழ்க்கையில் நுகர்ந்திருப்பதில்லை. தந்தை மகன் உறவு, ஆசிரயர் மாணவன் உறவு, உற்றார் சாதியினரோடு தனிநபர் உறவு, முதலாளி தொழிலாளி உறவு, மேலதிகாரி ஊழியர் உறவு என எல்லா உறவுகளிலும் அடிமைத்தனத்தை ஒழுகிவாழும் ஒரு ஆண் தனது பெண்ணிடம் மட்டும் சரிசமமாக நடந்து கொள்வானா என்ன?

இப்படி சமூக வாழ்க்கையில் அடிமைத்தனம் ஊடுறுவியிருக்கிறது என்றால் அதை எதிர்த்த போராட்டங்களில்தான் ஒரு மனிதனிடம் ஜனநாயகம் என்பது முகிழ்ந்து வரும். சாதி, மத, வர்க்க ரீதியான இழிவுகளுக்கெதிரான போராட்டங்களில் புடம்போடப்படும் ஒரு மனிதன்தான் தன்னிடம் இருக்கும் கேவலமான ஆணாதிக்கம் என்ற வைரஸை வேரறுக்க முடியும். அதன்றி அவன் சொக்கத்தங்கமாக இருக்கவேண்டுமென்றால் அது கற்பனையில் கூட சாத்தியமில்லை. இந்த விசயத்தை குறிப்பாக பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஷாஜின் தனது முன்னாள் காதலியை ஒரு பண்டமாக, பொருளாக தனக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய அடிமையாக, தான் மட்டுமே துய்த்துணரவேண்டிய காமச்சதைப் பிண்டமாக கற்பித்துக் கொண்டான். தனது காமவெறியை அல்லது காதலை மட்டும் தரிசிக்கவேண்டிய அந்த உடல் வேறு ஒரு ஆணுக்கு சொந்தமென்று ஆகப்போவதை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. அந்த அஜீரணம்தான் அவனிடம் வன்மம் கொண்டு வெறியாய் கொலையில் முடிந்திருக்கிறது. ஷர்மினை அடிமையாக கருதிக்கொண்டு காதலித்ததால்தான் அவளை துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டி அவள் செத்ததை உறுதி செய்யும் நிதானம் அவனிடம் இருந்தது.

ஆனால் மனிதகுலத்தில் சரிபாதியான பெண்கள் அடிமையாக இருக்கும் போது ஆண்கள் மட்டும் சுதந்திரத்தின் வெளியை அனுபவிக்கமுடியாது. அதனால்தான் ஷாஜின் கொலை செய்த கையுடன் தற்கொலைக்கும் முயன்று தோற்றுவிட்டான். இனி ஆயுள்முழுவதும் கழுத்தறுப்பட்ட அந்தப் பேதைப்பெண்ணின் முகம் அவனை அணுஅணுவாய்ச் சித்திரவதை செய்யும். காதல் கற்றுக்கொடுக்காத ஜனநாயகத்தின் வாசனையை அவனது கோரக்கொலை சிறிதாவது கற்றுக்கொடுக்கும். இப்படி தன்னுயிரை பலிகொடுத்துத்தான் பெண்கள் ஆண்களுக்கு சமத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய அவலமான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம்.

காதலை மறுக்க சுதந்திரமின்றி ஷர்மின் கொல்லப்பட்டார் என்றால் காதலிக்க உரிமையின்றி சண்முகவர்தினி கொல்லப்பட்டார். ஷாஜின் தனது முன்னாள் காதலிக்கு காதலை மறுப்பதற்கு அனுமதி மறுத்தானென்றால் ஜெகன் தனது காதலிக்கு காதலைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஷாஜின் என்ற நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் ஜெகன்.

இத்தகைய ஆண்கள் காரியவாதத்தில் மூழ்கி பிரச்சினையற்ற முறையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயல்வார்கள். சண்முகவர்தினியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றால் அந்த எதிர்ப்பை மீறி மணம் செய்து வாழலாம் என்ற உறுதி இத்தகைய கோழைகளுக்கு இல்லை. காதல் என்றால் குடும்பம், உற்றார், உறவினர், சாதியினரின் எதிர்ப்பை மீறித்தான் நிறைவேற முடியும் என்பது இந்தியாவின் விதி. இதற்கு முகங்கொடுக்காமல் பெற்றோர் அனுமதியுடன்தான் காதலிக்க முடியுமென்றால் இங்கே காதலுக்கு இடமில்லை.

ஜெகன் அந்தப் போராட்டத்திற்கு ஏன் தயாராக இல்லை? அதன் விடை இந்தக்காலத்து படித்த இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் சிக்குண்டிருக்கிறது. பணம் கொடுத்து சுயநிதிக் கல்லூரிகளில் படிப்பதோ, பணமும், சிபாரிசும் கொடுத்து வேலை தேடுவதோ, பணமும், பொன்னும் வாங்கி திருமணம் புரிவதோ, பங்குசந்தையில் சூதாடி சம்பாதிக்கலாம் என முனைவதோ, சுயமுன்னேற்ற நூல்களைப்படித்து ‘அறிவை’ வளர்ப்பதோ, கார்ப்பரேட் சாமியார்களின் துணை கொண்டு உடல்நலத்தையும், தொழிலையும் குறுக்குவழியில் முன்னேற்ற நினைப்பதோ எல்லாம் ஊழலிலும், சுயநலத்திலும் மூழ்கித்தான் இந்தத் தலைமுறை வாழ்க்கையில் கால்பதிக்கிறது.

இந்தக் கால்தடத்தின் வலிமை கொண்டு காதலிக்கும் போது காதலும் அங்கே ஊழல்படுத்தப்படுகிறது. இயல்பான காதல் தடைகளைக்கூட இவர்கள் பொறுப்பதில்லை. இவ்வளவிற்கும் சண்முகவர்தினி பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் நல்ல நிலையில்தான் இருந்தார். ஜெகன் நினைத்திருந்தால் அந்த மணவாழ்க்கை பொருளாதாரச்சிக்கல் இல்லாமலேயே கூட ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவன் மனதில் என்ன இருந்திருக்கும்? பெற்றோர்கள் தடையால் வரும் சமூக விலக்கத்தின் இழப்பை லாப நட்ட கணக்கு போட்டிருப்பானோ? இல்லை சண்முகவர்தினியை விட அழகான, வசதிபடைத்த பெண்ணை அடையலாம் என்று யோசித்திருப்பானோ? இல்லை தேவையற்ற பிரச்சினைக்குள் சிக்கி மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பாதுகாப்பாக யோசித்திருப்பானோ? நமக்குத் தெரியவில்லை.

நமக்கு தெரிந்தது ஒன்றுதான். அவன் காதலியின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய விரும்பவில்லை. அதனால் தன்னை மறந்து விடும்படி சண்முகவர்தினியிடம் முடித்துக் கொண்டான். இத்தகைய வீராதி வீரன் இதுதான் தன்னுடைய நிபந்தனை என்று காதலிப்பதற்கு முன்னரே சொல்லித் தொலைத்திருக்கலாமே? தான் பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாகத்தான் இருப்பேன் என்பதை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக உடைத்திருக்கலாமே? கல்லூரிப்படிப்பின் போது பில்லியனில் உட்கார்வதற்கும், சினிமா பார்ப்பதற்கும், ஒரே கோக்கை இருவரும் குடிப்பதற்கும், கடற்கரையில் கைபிடித்து காலாற நடப்பதற்கு மட்டும்தான் அவனுக்கு சண்முகவர்தினி தேவைப்பட்டிருப்பாள் போலும்.

காதலிப்பது ஜாலிக்காக, கல்யாணம் செட்டிலாவதற்காக என்பதுதானே இன்றைய இளைஞோரின் வாழ்க்கைச் சூத்திரம். ஆனால் சண்முகவர்தினி போன்ற அப்பாவிப் பெண்கள் சிலர் காதலை உண்மையாக பற்றி நடக்கும்போதுதான் பிரச்சினை வருகிறது. அதனால்தான் அவள் இறப்பதற்கு முந்தைய விநாடி வரை தனது தந்தையிடம் விவாதித்திருக்கிறாள். அவளது தந்தை செல்லத்தம்பி எல்லா நடுத்தர வர்க்க தந்தையும் போல ஒரு தந்தை. மகளை உயர்கல்வி படிக்கவைத்து அழகு பார்த்தவர் அவளது காதலை மட்டும் அழகாக பார்க்கவில்லை. அங்கே என்னுடைய உடமை ஒன்று என்னை மீறி வெளியே செல்ல நினைப்பதா என்று அவர் இயல்பாக யோசித்திருக்கலாம்.

எம்.இ படிக்கும் தனது மகளுக்கு அறிவியலின் சிக்கலான சூட்சுமங்களை கற்றறிந்தவளுக்கு வாழ்க்கை குறித்தும் ஒரு சுயேச்சையான கண்ணோட்டம் இருக்கும் என்பதை இந்தத் தந்தைகள் உணர்வதில்லை. அறிவில், கல்வியில் தன்னைக் கடந்து செல்லும் மகளை வாழ்க்கையில்மட்டும் கடந்து செல்வதற்கு அனுமதிப்பதில்லை. ஒருவேளை இப்போது செல்லதம்பி தனது மகளின் தேர்வை அங்கீகரிக்காததன் துயரத்தை விளங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த விளக்கத்தையும் புரிதலையும் அருகே நின்று பார்க்க மகளில்லையே? தனது தந்தைக்கு ஒரு பெண்ணின் வலியை இப்படி ஐந்தாம் மாடியில் குதித்துத்தான் ஒரு மகள் உணர்த்த வேண்டியிருக்கிறது.

தந்தையின் கண்டிப்பான நிராகரிப்பை அடுத்து தனக்கு உள்ள ஒரே ஆதரவான காதலனிடம் பேசிய சண்முவர்தினி அவனும் கைவிட்டு விட்டதைக் கேட்டு மனமுடைந்திருக்கலாம். ஆனால் அவனது காதலின் யோக்கியதையை அவள் புரிந்து கொள்ளவில்லையே? இத்தகைய கோழையை ஏன்தான் காதலித்தோம் என்ற வெறுப்பு அல்லவா அவளிடம் வந்திருக்கவேண்டும். ஒருக்கால் அவள் கண்ட ஆண்களில் அவனே ஆகச்சிறந்தவனாக இருக்கட்டும். ஆனால் அந்த ஆகச்சிறந்தவனிடம் இருக்கவேண்டிய குறைந்தபட்ச உறுதி, காதல் மீதான நம்பிக்கை அவனிடம் இல்லையே?

இங்குதான் பெண்களும் தங்களது உண்மையான சுதந்திரமான காதல் தெரிவை கொண்டிருப்பதில்லை. அவர்களும் கூட அடிமை நிலையிலிருந்துதான் காதலையும் காதல் குறித்த பிரச்சினைகளையும் பார்க்கிறார்கள். அடிமை மனதிலிருந்து உதிக்கும் காதல், அது சாத்தியமில்லை என்றாகும் போது தனது வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறது. இதனால் சண்முகவர்தினியின் மனப்போராட்டத்தை நாம் கொச்சைப்படுத்தவில்லை. தந்தையும், காதலனும் ஒருசேர கைவிரித்ததும், அதை எந்தப் பெண்ணும் எதிர்கொள்ள இயலாது என்ற உண்மையும் புரியாமல் இல்லை.

ஆனால் தனது காதலின் தகுதி இதுதான் என்று புரிந்து கொள்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பில்லையா? இவனையா இத்தனை நாள் உயிருக்குயிராய் காதலித்தோம் என்று ஒரு குற்ற உணர்வும், அந்தக் குற்ற உணர்விலிருந்து தான் உருவாக்கிய காதல் நினைவுகளிலிருந்து மெல்ல மெல்ல குறிப்பிட்ட காலம் கடந்து மீண்டிருக்கலாமே? வாழ்வின் இக்கட்டான தருணங்களில்தான் நாம் கொண்டிருக்கும் உறவுகளின் உண்மை முகத்தை அறிய நேரிடுகிறது. சமாதானக் காலங்களில் இனிய இசையாக நெஞ்சை வருடும் அதன் ராகங்களில் நாம் மனதை பறிகொடுத்திருக்கலாம். அதனால் போர்க்காலங்களில் அதே இசையை எதிர்பார்த்து கிட்டாத போது கடும் ஏமாற்றமாகத்தான் இருக்கும். என்றாலும் அந்த ஏமாற்றம் நமக்கு மனிதர்களின் உண்மை நிலையை நேருக்குநேர் காட்டிவிடுகிறது.

அது எந்த உறவாக இருந்தாலும் அதன் தராதரம் எத்தகையதாக இருந்தாலும் அதன்பால் நாம் கொண்டிருக்கும் அன்பு என்பது அத்தனை சீக்கிரம் மறைந்து விடாதுதான். ஆனால் பொது நலன், சமூக அக்கறை, சுயநலமின்மை முதலான அளவுகோல்களை குறைந்த பட்சமாகவேனும் நாம் நமது உறவுகளை மதிப்பிடுவதற்கு முயலவேண்டாமா? ஒருவனது சுயநலத்தின் எல்லை எது என்பது பொதுநலனோடு அவன் முரண்படுவதில்தான் வெளிப்படும். சராசரி வாழ்க்கையில் உள்ளோருக்கு இந்த ஆய்வுமுறைகள் எதற்கு என்று உங்களில் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் வாழ்க்கை எப்போதும் அதுபாட்டுக்கு சராசரியாகவே போய்விடாது. மேடுகளும், பள்ளங்களும், திடுக்கிடும் திருப்பங்களும் கொண்டதுதான் வாழ்க்கை. அதில் சுமூகமாக பயணிக்கவேண்டுமென்றால் அடிப்படையில் நாம் ஒரு போராட்டக்காரராகத்தான் இருந்தாக வேண்டும்.

பொறியியலில் உயர்கல்வியெல்லாம் படித்து வந்த சண்முகவர்தினி வாழ்க்கை கல்வியில் படிப்பறிவற்ற பெண்களுக்கு இருக்கும் போராட்ட மனதினைக் கொண்டிருக்கவில்லை. ஏழை எளிய பெண்களைப் பொறுத்தவரை வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்காக சமூகத்துடன் கொண்டிருக்கும் அவர்களது உறவு அந்த குணத்தை பெற்றுத்தருகிறது. நடுத்தவர்க்க பெண்களுக்கு அது அமைவதில்லை. அதனாலேயே அவர்கள் தங்களுக்குள் புழுங்கிச் சாகிறார்கள். அந்த புழுக்கம் அளவை மீறும்போது வெடிக்கிறது. சிலசமயம் முடித்துக் கொள்ளவும் செய்கிறது.

காதலர் தினத்தின் கொண்டாட்டங்களில் மற்றவர்கள் ஈடுபட்டிருக்கும்போது சண்முகவர்தினி மட்டும் நிறைவேற முடியாத தனது காதலை நினைத்து மனம் வெம்பியிருக்கலாம். இறுதி வரை தனது காதலை சாத்தியமாக்குவதற்கு அவள் தன்னளவில் தீவிரமாகத்தான் போராடியிருக்கிறாள். ஆனால் அந்தப் போராட்டத்திற்கு அவளோடு இருந்து உதவுதற்கு யாரும் இல்லை. நிர்க்கதியான நேரத்தில் அனாதையாக்கப்பட்ட அவளது மனம் என்னவெல்லாம் கொந்தளித்திருக்கும் என்பது வார்த்தையால் விவரிக்க முடியாதது.

அவளது மரணம் திட்டமிடப்பட்டதல்ல. அப்படி இருந்திருந்தால் தற்கொலை செய்வோர் வழக்கமாக செய்யும் முறைகளில் அவள் போயிருக்கக் கூடும். ஐந்தாவது மாடியில் இருந்து கபாலம் வெடித்துச் சிதறும் கொடூரமான முறையை நாம் கற்பனையில் கூட தாங்கிக் கொள்ளமுடியாது. அவள் கணநேரத்தில் அதை முடிவு செய்து துணிச்சலாகக் குதித்துவிட்டு முடித்துவிட்டாள்.

நான் வசிக்கும் சமூகத்தில், நாட்டில் இரண்டு பெண்கள் அநியாயமாக இறந்து போனதை இந்த இரண்டு நாட்களில் பலவிதங்களிலும் யோசித்துப் பார்த்து விட்டேன். மரணத்தை அவர்கள் எதிர்கொண்ட அந்த கடைசித் தருணங்களை நான் அசைபோட்டபோது என்னிடம் அதை எதிர்கொள்வதற்கு எந்த ஆயுதங்களும் இல்லை. அரிவாளால் அறுக்கப்பட்ட கழுத்து, தரையில் மோதித் தெறித்த தலை இரண்டும் என்னை மங்கலான தோற்றத்தில் தொடர்ந்து சித்திரவதை செய்கின்றன. அந்த தோற்றத்தில் இரண்டு ஜோடிக் கண்களின் வலிமையான பார்வை குத்தீட்டியாக துளைப்பதை கண்ணீருடன் ஏற்றுக் கொள்கிறேன். அந்த எளிய, புத்துணர்ச்சியூட்டும் கண்களை காப்பற்ற வக்கில்லாத இந்த சமூகத்தின் உறுப்பினர் என்ற முறையில் நாணிக் குறுகுகிறேன்.

_________________________________________________

வினவில் விமரிசனம் மட்டுமே எழுதுகிறீர்கள், தீர்வு குறித்து எதுவும் சொல்வதில்லை என பல நண்பர்கள் கருதுகிறார்கள். இந்தப்பிரச்சினைக்கு என்ன தீர்வு சொல்லமுடியும்?

வினவை படிக்கும் நண்பர்கள் இத்தகைய காதல்பிரச்சினைகளில் சிக்குண்டிருந்தால் விபரீதமான முடிவை தேடாதீர்கள். எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் காதலை போராடி நிறைவேற்றுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம். இது எங்களுக்கு சுமையல்ல. வேறு என்ன சொல்ல?

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பயங்கரவாதி: மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!

10

vote-012“பாக்சைட்டுக்காக”
பழங்குடி மக்களின் கழுத்தை அறுக்கும்
ப.சிதம்பரம் சொல்கிறார்,
நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்தாம்!

தாதுக்கிழங்கைச் சூறையாட
வெறிகொண்டு பாயும் ஓநாய் கம்பெனி “வேதாந்தாவோடு”
சூதுசெய்யும் காங்கிரசு பன்றிகளைப் பார்த்து
நடுங்குகிறது நியாம்கிரி மலை…
பசுந்தளிர்களின் குரல்வளையை மிதிக்கும்
இந்திய இராணுவ பூட்சுகளின்
பன்னாட்டுக் கம்பெனி பற்களைப் பார்த்து
அலறுகிறது தண்டகாரண்யா…

எப்படிப் பிறந்தான்
எனும் சிக்கலே இன்னும் தீராத
செப்படி ராமனுக்கு நம்பிக்கை அடிப்படையில்
பிறப்பிடம் அயோத்தியென
உரிமை வழங்கி அதற்கு ஊறு நேராதவாறு
உத்திரவு வழங்கும் நீதிமன்றம்,
நிறைந்துள்ள நாட்டில்,
கானகத்து அரும்பிலும்
காட்டுமர நரம்பிலும்
காட்டுப்பூச்சிகள் தீண்டிய தழும்பிலும்
மலைப்பொருட்களின் தாதிலும்
வரலாறாய் கலந்திருக்கும்
பழங்குடி மக்களுக்கு காடு சொந்தமில்லையாம்!

இப்படி பேசுபவனுக்கு
இனி நாடு சொந்தமில்லையென
எழுந்துவிட்டது டோங்கிரி!
மண்ணை விட்டால் தன்னை விட்டதாய்
கருதும் அந்த பழங்குடி
காடும் மலையும் கூட இனி
இந்திய  ஆளும் வர்க்கத்திற்கு பதிலடி!

பழங்குடி மக்களின் கண்களில்
பத்திரமாக இருக்கிறது மலை..
அவர்களின் தாலாட்டில்
வேரோடியிருக்கிறது காடு…

பறக்கும் வண்-ணத்துப்பூச்சிகளின் சிறகிலும்
துளிர்க்கும் பச்சிலைகளின் நுனி நாக்கிலும்
படிந்திருக்கிறது அவர்கள் மொழி….

கடும் பாறைகள் அவர் மார்புகள்..
கரும் மரக்கிளைகள் தலைமுறைக் கைகள்…
அடர்ந்த காடும், நிமிர்ந்த மலைகளும்
பழங்குடி மக்களின் பரம்பரை உணர்ச்சிகள்.
அவர்கள்,
பேசும் காடுகள், நகரும் மலைகள்
உதடுகள் கொடுத்து
காட்டு மூங்கிலை பேச வைத்தவர்கள்…
உணர்ச்சிகள் கொடுத்து
மலை, நீர்ச்சுனைகளை வாழ வைத்தவர்கள்…

பால்வடியும் தம் பிள்ளைகளோடு
பனிவடியும் செடி, கொடிகளுக்கும்
பெயர் வைத்து அழைத்தவர்கள்…
தயங்கும் ஓடைகளை அழைத்துவந்து
தாவரங்களோடு பழக வைத்தவர்கள்…
கிழங்கு, கனிகள், பச்சிலைகள் என
காடு, மலைகளின் இயற்கை பெருமிதத்தை
தங்கள் இரத்தத்தில் அறிந்தவர்கள்….

இயற்கை உரிமையுள்ள
இந்த எண்ணிறந்த மக்களை
ஒரு அந்நியக் கம்பெனியின் இலாபவெறிக்காக
அவர்கள் பெற்றெடுத்த மண்ணை விட்டே
அவர்களை அடித்து துரத்தும்
ஆபத்தான பயங்கரவாதி யார்?

மன்மோகனிஸ்ட்டா?
மாவோயிஸ்ட்டா!

ஒன்பது டஜன் சோடாபாட்டிலை
சைக்கிளில் கட்டிக் கொண்டு,
எதிர்காற்றை முறித்து
மிதிவண்டி அழுத்துகையில்
பாட்டிலில் கலந்த காற்று
நெஞ்சக் கூட்டில் வந்து வெடிக்கும்
கமறும் இரத்தத்தை
எச்சிலாய் காறித்துப்பி மேட்டினில் ஏறி
ஒற்றை மனிதர்களாய்
உள்ளூர் சந்தையை உருவாக்கிய தொழிலாளர் தலையில்
ஒரே நாளில்
கோக் பெப்சியை
டன் கணக்கில் இறக்கவிட்டு
சிறுதொழில் முகத்தையே சிதைத்த
படுபயங்கரவாதி யார்?

இந்த நாடுமாறி அரசா?
இல்லை நக்சலைட்டா!

நீங்கள் கஞ்சிச் சட்டை போட
தன் நெஞ்சுக் கட்டை தேய
கைத்தறியை இழுத்து, இழுத்து அடிக்கும் கைகள்,
தலைமுறையாய் தறியாடி
இடுப்பெலும்பு கழலும்
தறிநூலாய் தொண்டை நரம்புகள்
அசைந்து அசைந்து வெறும்வயிற்றில்
உயிர் உழலும்
நசுங்கிய சொம்புத் தண்ணி
அவ்வப்போது நாவுக்கு பசைபோடும்…

பசியின் நெசவு வெறுங்குடல் பின்னும்
படாதபாடுபட்டு கைத்தறியை நூலாக்கி
சுயதொழில், சுயமரியாதையுணர்வோடு வாழ்ந்த நெசவாளர்களின்
கைத்தறி ரகங்களை பிடுங்கி விசைத்தறிக்குக் கொடுத்து
அன்னிய மூலதனத்தால் தறிக்கட்டைகளை உடைத்து
கைத்தறிக்கான பஞ்சை கட்டாய ஏற்றுமதி செய்து
மானங்காத்த நெசவாளிகள் கடனை அடைக்க
தன் உடலை விற்கும்படி
உருத்தெறியாமல் சிதைத்த இரக்கமற்ற  பயங்கரவாதி யார்?

இந்த நாடாளுமன்ற சாடிஸ்ட்டுகளா?
நக்சலைட்டுகளா!

கண்தோல் காய்ந்தாலும்
மண்தோல் காயாமல்
மடைபார்ப்பான் விவசாயி.

பிள்ளை முகத்தில் கட்டிவந்தாலும்
பெரிதாக அலட்டாமல்
சுண்ணாம்பை தடவிவிட்டு…
நெல்லின் முகத்தில் ஒரு கீறல் எனில்
வட்டிக்கு கடன் வாங்கி
வைப்பான் அடி உரம்

வரப்பின் சேற்றில் பல் துலக்கி
மடையின் நீரில் முகம் கழுவி
வயல் நண்டில் உடல் வலி போக்கி
கதிரின் வாசத்தில் உயிர்வலி போக்கி
களத்து மேட்டில் நெல்லைத் தூற்றும்
உழைப்பின் வேகத்தில் தூரப் போய்விழும் சூரியன்.

அவரை, மொச்சை, துவரை
ஊடுபயிரோடு
அத்தை, மாமன், தமக்கை உறவும்
வளர்ந்து நிற்கும்.

பால்மாடு, வண்டிமாடு
பசுந்தழை மேயும் ஆடு,
அறுவடைக்காலத்தில் தன்பங்கையும் சேமித்து
மாட்டுக் கொட்டகைக்குள் மகிழ்ந்திருக்கும் குருவிக்கூடு

இப்படி ஒட்டுமொத்த உயிர்ப்பு பொருளாதாரமாய் விளங்கிய
வளங்களை நீரின்றி, விலையின்றி திட்டமிட்டு அழித்து
சிறப்பு பொருளாதாரமண்டலமென சீரழித்து வளைத்து
ஏர்முனை ஒடித்து, கால்நடை அழித்து
நாடோடிகளாக விவசாயிகளை துரத்தி;
நகரத்து உழைப்பில் இரத்தம் குடிக்கும்
பச்சை பயங்கரவாதி யார்?

இந்த தேசத்துரோக ஆட்சியாளர்களா?
தேசப்பற்றுள்ள நக்சலைட்டுகளா!

கடும்பனிக்கு அஞ்சி
சூரியனே தலைமறைவாய் கிடக்கும்
கம்பளிப் பூச்சியும் நகர்ந்து இலை மறைவாய்ப் படுக்கும்.

சிறுகடை வியாபாரி கைகளோ போய் வேகமாய்
பஜாஜ் எம்.எய்.டியை எடுக்கும்…
கோயம்பேடு சரக்கை குந்த இடமின்றி அடுக்கும்
வந்த காய்கறியை குடும்பமே வகை பிரிக்கும்

நடுத்தர வர்க்கத்தின் நாக்கு விழிக்கும் முன்னே
பால் கவர் போட்டு,
அடுத்த வேலையாய் தண்ணீர் கேன் போட்டு
அடுத்தடுத்த குரலுக்கு அளந்து போட்டு
திரிந்த பாலுக்கும் குழைந்த அரிசிக்கும்
எரிந்து விழும் பார்வையை ஆற்றுப்படுத்தி, மாற்றிக் கொடுத்து
மெல்ல மெல்ல சில்லறை வணிகச் சந்தையை
தன் கையால் காலால் கட்டி எழுப்பிய வியாபாரிகளை
ஒரே போடில் தலைவேறு, முண்டம் வேறாய்,
சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தையும்
ரிலையன்ஸ் டாடா வணிக மிருகங்களையும்
உலவவிட்டு
சிறுகடை வியாபாரிகளை கடை கடையாய் வேட்டையாடிய
கண்மூடித்தனமான பயங்கரவாதி யார்?

இந்தக் கயவாளி அரசா?
மக்களை காக்கத் துடிக்கும் நக்சலைட்டா!

ஹூண்டாய் கார் போகும் சாலையில்
குடிசைகளின் நிழல் விழுந்தால் கறையாகுதாம்,
மேட்டுக் குடிகள் மிதக்கவிட்ட கூவம்
ஒட்டுக் குடிகளின் மூச்சுபட்டு அழுக்காகுதாம்
சிங்காரச் சென்னையின் அழகுக்காக
அடிக்கடி தீக்குளிக்கின்றன குடிசைகள்.

பற்றவைக்கும் பயங்கரவாதி யார்?

உள்நாட்டு தொழிலாளர்க்கோ
உயிர் வாழும் உரிமையில்லை
அன்னிய பன்னாட்டு கம்பெனிகளுக்கோ
உன்னை சாகடிக்கவும் சலுகைகள்..

போர்டுக்கு, ஹூண்டாய்க்கு முன்னே போராடினால்
அடித்துத் துவைக்க அதிரடிப்படையை அனுப்பிடும்
அந்த பயங்கரவாதி யார்?

வெள்ளைக்காரன், வெளிநாட்டு கம்பெனியை
விரட்டத்தானே சுதந்திரபோராட்டம் நடத்தியதாய்
சொல்கிறீர்கள்?
பின்னே ஏன் இத்தனை வெளிநாட்டுக் கம்பெனிகளை
இழுத்து வருகிறீர்கள் இப்போது
சுரண்டும் வர்க்கத்தை அழைத்து வருவதற்கு
சுதந்திர போராட்டம் நடத்தியது எதற்கு?
கேட்டுப் பாருங்கள்..
பயங்கரவாதிகளுக்கு பதில் சொல்லிப் பழக்கமில்லை…
படையோடு வருகிறார்கள்.
சத்தீஸ்கர், ஒரிசாவிற்கு ஒரு லட்சம் ராணுவம்…
சற்றே காத்திருங்கள் நாடு முழுக்க முப்படையும்…

பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு
பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன்
பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால்
நீங்கள் ஏமாந்து போவீர்கள்

அதோ பாருங்கள்…
பளிச்சென வெண்ணிற உடை…
பார்த்ததும் புன்முறுவல்..
கொலைக்குறிப்புகள் தெரியாத
குளிரூட்டும் பார்வை…
கண்ணக் கதுப்பில் வழியும்
காதிகிராப்ட் காந்திய வெண்ணெய்
தளுக்கான பேச்சில் வழுக்கும் உதடுகள்….
தாய்நாட்டுப் பற்றுக்காகவே வாழ்வது போல
தயங்காமல் பேசும் தோரணை…

இவைகள்தான்… இவைகள்தான்…
உண்மையான பயங்கரவாதியின்
மென்மையான அடையாளங்கள்

இன்னும் குழப்பமா
எதற்கு இத்தனை அடையாளம்
பழுத்த, கனிந்த, தேசவிரோத பயங்கரவாதியை
நீங்கள் பார்க்க வேண்டுமா?

அதோ.. ப.சிதம்பரத்தைப் பாருங்கள்!

தாயின் மார்பை அறுத்து
பிஞ்சுக் குழந்தையின் விரலை ஒடித்து
பழங்குடிப் பெண்களின் உடலைக் குதறி

அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகள் காசு பார்க்க
தன் அடிமைப் பிழைப்பில் ருசி பார்க்க
தாய்மண்ணின் தாதுக்களையே வெட்டிக் கொடுக்கும்
கேடுகெட்ட, கீழ்த்தரமான, தேசத்துரோக பயங்கரவாதி
ப.சிதம்பரத்தை அதோ பாருங்கள்..

– துரை.சண்முகம்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

காடுகளைக் காப்பாற்ற நிலம் அதிராதோ.. உறக்கம் கலையாதோ?

68

vote-012அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை. தொண்டையை நனைக்கவும், பேசியும் ஊதியும் உலர்த்தவும் விரும்பும் நண்பர்கள் கேண்டீனை விட்டு அங்கு செல்வது வழக்கம்.  அன்று தேநீர்க்கடையில் சில நண்பர்கள் வேலை நிலைமைகள், ஊதியக் குழு, வருமானவரி என்ற அவர்களின் உலகப் பிரச்சினைகளை அலசிக்கொண்டிருந்தனர்.  ”அம்மாவப் பொட்டியால அடிச்சிட்டு மேலப் போயிட்டான்..யா சிதம்பரம், நல்லவேள அவனை நிதியமைச்சராக்குல, உள்துறை அமைச்சருன்னு உக்கார வச்சுட்டாங்க, நாம பொழச்சோம் ..” என்ற அவர்கள் பேச்சின் இடையில் ஒரு சந்து கிடைத்தது, நானும் சற்று உள் நுழைந்தேன்.

என்னங்க அப்படி சொல்லிட்டீங்க.. என்று நான் ஆரம்பிப்பதற்குள், ”அதுக்கில்லீங்க, பிரணாப் முகர்ஜி பெங்கால்காரன்; காங்கிரஸ்காரனா இருந்தாலும், பெங்கால் ரத்தமில்ல, அவங்கள்ளாம் ஒரு டைப்பு, ஏதாச்சும் நாலு நல்லது செய்யிலன்னாலும் கெடுக்க மாட்டாங்கள்ள”, என்று தன் அபிப்ராயத்தைச் சொன்னார் நண்பர்.  அபிப்பிராயங்களுக்கு எல்லாம் அடிப்படை தேவையா என்ன? சிறு மாற்றமும், அதைத் தொடர்ந்து வழக்கமான ஒரு எதிர்பார்ப்பும் போதாது?  பேச விரும்பும் விசயத்தில் இருந்து விலக வேண்டாம் என்று ஒரு புன்னகையில் அந்த அபிப்பிராயத்தைப் புதைத்தேன்.  “ நான் அதுக்கு சொல்ல வரலீங்க, சிதம்பரம் என்ன சாதாரண ஆளா, இல்ல, உள்துறைன்னா என்ன சும்மாவா?…” எனக் கேட்டு முடிப்பதற்குள் “நரி வலம் போனா என்ன, இடம் போனா என்னங்க, நம்பள விழுந்து புடுங்காம இருந்தா சரி”  என்றார் நண்பர். மற்றவர்களும் புன்னகைத்தனர். தொடர்ந்து.. ”போனாலும் போனான், நல்லா செருப்படி பட்டான். நம்மளாலதான் அடிக்க முடியல, சர்தார்ஜீல்ல.. சந்தோசமா இருந்தீச்சு” என்றார் அவர்.

நாங்கள் எல்லோரும் நகைக்க, சிறு மௌனத்திற்குப் பின் விசயத்துக்கு வரலாம் என்று, ”சரி, இந்த காட்டு வேட்டை பற்றி என்ன நினைக்கிறீங்க”, என்று கேட்டேன்.  அது என்னது காட்டுவேடை என்றார் ஒருவர். மற்றவர்களுக்கும் பிடிபடவில்லை என்று அவர்கள் முகம் காட்டியது.  சற்று புரியும்படி சொல்லுவோமே என்று நினைத்து, அதாங்க, ”ஆப்பரேஷன் க்ரீன் ஹண்ட்”  என்றேன்.  ஒருவருக்குப் பொரிதட்டிவிட்டது. பக்கத்தில் இருந்த சுடக்குடிக்கி நண்பர், ”என்ன, சினிமாவா, இல்ல டிஸ்கவரி சானல்ல வர்ர விசயமா?” என்றார்.   விசயம் விட்டு விசயம் தாவுவதும், ஜாலியாகப் பேசுவதும் இத்தகையவர்களிடம் சகஜம்தான்.  ஆனாலும் நல்ல நண்பர்கள், இந்த நாட்டின் பரந்துபட்ட படித்தவர்கள்.

”இல்லைங்க, நம்ப அரசாங்கத்துல புதுசா டிஸ்கவர் பண்ணியிருக்காங்க. அதுக்குப் பொருத்தமான டைரக்டர் தேவையா இருந்துச்சு. அதுக்காகத்தான் சிதம்பரத்தை அங்க போட்டிருக்காங்க”  என்று நகைச்சுவையாகச் சொன்னேன்.  ஆனால், அவர்களுக்குப் புரியவில்லை.  ஏண்டா இந்த ஆளு வர்த்தகம், நிதியை எல்லாம் விட்டுட்டு உள்துறைக்குப் போனார்ன்னு எனக்கும்கூடத்தான் ஆரம்பத்தில் புரியவில்லை.  பின்னர்தான், கலைஞரின் ஆத்ம நண்பர், பாராளுமன்றத்திலேயே குரளோவியம் தீட்டியவர், அதன் எஜமானர்களான வேதாந்தா, டாடாக்களின் காதில் “இதனை இதனால் இவன்முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்”  என்ற தந்திரோபாயத்தை கிசுகிசுத்திருக்க மாட்டாரா? அவர்கள் அதைப் புரிந்துகொண்டு சிங்கு சோனியாக்களுக்கு ஆணையிட்டிருக்க மாட்டார்களா? அக்கணமே அந்த அமைச்சர் பதவிக்கான தேர்தலே முடிந்திருக்காதா என்றெல்லாம் ரிஷிமூலம் தொட்டு புரிய ஆரம்பிப்பதுபோல் இருந்தது.

”எல்லாம் காரணம் கருதித்தாங்க அவர அங்க உக்கார வச்சிருக்காங்க; ஏதோ ஒதுக்கி வச்சிடல…. ஆதிவாசி மக்களை மிருகத்தனமாகவும், ஜனநாயக வாதிகளை இண்டலெக்சுவலாகவும், மீடியா மழுமட்டைகளை பாமர லாஜிக்கிலும் சந்திக்கப் பொருத்தமான ஆள் அந்த நாற்காலிக்குத் தேவையாய் இருந்தது.. அவர்தான் அந்த சிதம்பரம்,  அதுதான் அந்த காட்டு வேட்டைங்கிற ஆப்பரேஷன் க்ரீன் ஹண்ட்”  என்ற விசயத்தை சொன்னேன். அப்போது, அதுபற்றி சற்று புரிந்து வைத்திருந்த நண்பர், “அது நக்சலைட்டு தீவிரவாதிகளை ஒழிக்கிறதுக்குன்னுல்ல சொல்றாங்க. நீங்க என்ன வித்தியாசமா சொல்றீங்க” என்று கேட்டார்.

அவர்கள் அகராதியில், அல்லது அவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட அகராதியில், நக்சலைட், தீவிரவாதி என்ற சொற்களுக்குத் தனித்தனியே பொருள் ஏதும் கிடையாது.  அது, அந்த சொற்களைத் தாங்கியவர்கள், தாங்கியவர்களாய் சொல்லப்படுபவர்கள் மீது எழுதப்பட்ட தீர்ப்பு மாதிரி.  தீர்ப்பை விமர்சிப்பதும், எதிர்ப்பதும் கண்டெம்ட் ஆஃப் கோர்ட் இல்லையா, அதைக் கற்பனையும் செய்யலாமா?  அவர்களிடம் என்ன சொல்வது.. “ஆமாங்க அப்படித்தான் சொல்லிக்கிறாங்க.  ஆனால் அது அவங்க மாதிரியே, அவங்க பேசுற அரை உண்மை, பொய்யை விட அபாயகரமானது” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில், ”அப்ப நக்சலைட் எல்லாம் நல்லவங்கன்னு சொல்றீங்களா?” என்று மறித்தார் நண்பர்.  இந்த ஆப்ஜெக்டிவ் டைப் கேள்வியை எல்லாம் ஈசியாக டிக் அடித்துவிடலாம்.  ஆனால், அது சப்ஜெக்டிவாக அவர்களுக்குள் பதிந்து இருக்கும் ஒரு கருத்தை அசைக்க வேண்டுமே, சொல்லுவது அவர்கள் சிந்தைக்குத் தடையின்றிப் போய்ச் சேரவேண்டுமே.  “ஆமாம். நல்லவங்க தான்.. இருந்தாலும் நீங்க உடனே ஒரு கருத்துக்கு வரவேண்டியதில்லை, நடப்புகளை நிதானமாக ஆலோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தா நல்லது”  என்று மேலே சொல்லத் தொடர்ந்தேன்.

சரி, அவர்களிடம் எதைச் சொல்ல, எப்படிச் சொல்ல?

பசுமையாய் அடர்ந்து நிற்கும் காடுகளான அந்த கற்பக தருக்களை வேரறுத்து;
தாம் உள்ளளவும் தம் உயிர்களின் மூச்சாய், உயிர் நீராய், வளம்பலவாய் வாரி வழங்கிவரும்
மக்களின் உண்மையான அந்த காமதேனுவின் மடியறுத்துப் பால் குடிக்க
வெறிகொண்டு அலைகிறார்கள் நவயுக மைதாஸ்களான
பல பன்னாட்டு, இன்னாட்டு தொழில் முதலைகள்.
அவர்கள் தொடுவதெல்லாம் பணமாக வேண்டும், அதற்காக மனிதம் பிணமாக வேண்டும்.
ஆமாம், அய்யா சொன்னா சரிதான்.  அதுதான் வளர்ச்சி.

சீன நாகம் தோற்க வேண்டும், சிங்கநாதம் கேட்கவேண்டும்.  மூலதனத்தை ஈர்த்தாக வேண்டும். அன்னியச் செலாவணியை மலையாய்க் குவித்தாக வேண்டும்.
அதற்குப் பத்து சதவீத வளர்ச்சியை நாம் எட்டிப் பிடித்தாகவேண்டும்.
எனவே, அப்பசுவின் மடியை அறுத்தாக வேண்டும்.  இந்தா பிடி அரிவாளை
என்று தூக்கிக் கொடுக்கிறார்கள், பி.ஜே.பி., காங்கிரஸ் என பேதமில்லாது
எல்லா ‘அரசியல்’ கட்சிகளும்..

ஐந்தாண்டுகளாய் இந்த அமைதிப்படை – சல்வா ஜுடூம் (peace march) –  என்ன ஆமைவேகத்தில் நடைபோடுகிறது? வெறும் 700 ஆதிவாசி கிராமங்களைத்தான் சுட்டுப் பொசுக்கி சுடுகாடாக்கி இருக்கிறார்கள்.

வளர்ச்சியின் வேகம் போதாது.  விழுந்து பிடுங்க வேண்டாமா .. இதோ, வேட்டை நாய்கள், கருநாகங்கள் என இந்திய இராணுவத்திற்கு உரிய பெயர் சூட்டி இறக்கிவிட்டிருக்கிறார்கள், காட்டு வேட்டைக்கு.  இயற்கை அன்னையின் மடியில் தவழும் குழந்தைகளையும், அவள் கருவையும் சேர்த்து அறுத்தெரிவதற்கு.
அவள் மடியறுக்கத் துணிந்தவர்களின் ஏவல் நாய்கள்,
அந்த முதிய அன்னையின் மார்பகங்களை அறுத்து ஊன் குடித்தார்கள்.
வளர்ச்சிப் பார்வை கொண்டவர்களின் அடியாட்கள்,

பார்வை மங்கிய எழுபது வயது முதியவரை அவர் படுக்கையிலேயே குத்திக் கிடத்தினார்கள்.
அந்த மரங்களை விட்டகல மறுத்த மரவர்களை மரத்தில் கட்டி வைத்து சுட்டு,
பின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள்.  அவர்தம் இறுதி விருப்பத்தை நிறைவேற்றினார்கள்.
அவரை, அவர் மனைவியை, மக்களை, பேரன் பேத்திகள் என்று தொடரும் விழுதுகளை
வீட்டிலேயே வைத்து என்கவுண்டர் செய்து சாதனை படைத்தார்கள்.

அம்மா என்ற ஒரே முழக்கத்தை மட்டுமே எழுப்பத் தெரிந்திருந்த அந்த சிசுவின் நாவை அறுத்தார்கள், அதன் எதிர்காலத் தீண்டுதலைக் கண்டு அஞ்சியோ என்னவோ
துப்பாக்கியின் அடிக்கட்டையால் அதன் பற்களை இடித்து உடைத்தார்கள்,
பிஞ்சு விரல்களை வெட்டி எரிந்தார்கள்.

தன் துண்டு நிலத்தை உழுதுகொண்டிருந்த அறுபது வயது முதியவரை,
கோவணத்துக்கும் உனக்கு அருகதையில்லை, நிலமொரு கேடா என
நிர்வாணமாக்கி வெட்டிக் கொன்றார்கள்.

ஆநிரையையும் அடித்து மேய்த்தறியாத அந்த முதியவரை அடித்து இழுத்துவந்து
கை கால்களைக் கட்டி கிராமத்து நடுவே ஒரு மரத்திலிருந்து தலைகீழாய்த் தொங்கவிட்டனர்.
அவர் தலைக்கடியில் எரியூட்டப்பட்ட எண்ணைக் கொப்பரையில்
ஒரு முக்கு முக்கி எடுத்தனர். பின் அவர்மேல் தண்ணீர் ஊற்றித் தூர எரிந்து சென்றனர்.
இன்று அவர் உடலில் புழுவாய் புழுத்து நெளிந்து அவரைத் தின்பவர்களும் அவர்கள்தான். இக்கொடுமையை மறுக்க முடியாத அந்த தன் கையறு நிலையை நொந்துகொண்டு
வெந்து வெதும்பி நிற்கிறது அந்த மரம், ஒரு சாட்சியாக.

இவ்வளவுதானா, சிறை, சித்திரவதை, கற்பழிப்புகள், தானியங்களையும், ஆடு, கோழிகளையும் அவர்களின் பண்ட பாத்திரங்களையும், பத்தம்பது ரூபாய் சொத்துக்களையும் திருடிச் செல்வது எனப் பாதுகாப்புப் படையினரின் வீரசாகசங்கள் ஏராளம்.

இதில் எதைச் சொல்ல, எப்படிச் சொல்ல?  ஏதேதோ சொன்னேன்.

”என்னங்க, இவ்வளவு கொடுமையா இருக்குது, இதெல்லாம் நெசமான்னே பயமா இருக்குதேங்க.
இதை ஏன் எந்த பத்திரிகைக் காரனும், டி.வி. யும் கவர் பண்ணல?”
“இலங்கையில தான் தமிழர்களுக்கு எதிரா இப்படி அட்டூழியங்கள் நடந்துக்கிட்டு இருந்துச்சு..
அதப்பத்தி நிறைய வந்துச்சு, இப்ப இங்கயுமா?”

என்ற கேள்விகளுக்கும் சிறு மௌனத்துக்கும் இடையில் இடைவேளை முடிந்தது.
அலுவல் அகம் நோக்கி கால்கள் நடந்தன.

பரவலாய் இந்த விசயம் தெரிந்திருக்கவில்லை என்பது உண்மைதான். உண்மை மீளா உறக்கத்தில் இருப்பதற்காக பரந்துபட்ட மக்களை ஜனநாயக ஊடகங்கள் ஜாலியாய்த் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பதும் உண்மைதான். அவர்கள் அவர்களது வேலையைச் செய்கிறார்கள்…  நாம்?

எதார்த்தம் நெருப்பாய் சுட்டெரிக்க, அந்தக் காடு மலைகளையும் அதன் மக்களையும் காக்க  இந்த நிலம் அதிராதோ, உறக்கம் கலையாதோ என மனம் ஏங்குகியது.

……………………………………………………………………………………………………………………………………….

எரி எண்ணையில் அமிழ்த்தப்பட்ட உண்மைகள்:

செப்டம்பர்- அக்டோபர், 2009ல் தண்டிவாடாவில் நிகழ்த்தப்பட்ட  காட்டு  வேட்டை அல்லது பச்சைப் படுகொலை நடவடிக்கை பற்றிய உண்மை அறியும் குழுவின் அறிக்கை-  ஷர்மிளா புர்கயச்தா, ஆஷிஷ் குப்தா, ஹிமான்ஷு குமார் ஆகியோரால் உண்மையறியும் குழுவின் சார்பாகக் கையொப்பம் இடப்பட்டது – அக்.21, 2009.

[பி.யு.சி.எல்; பி.யு.டி.ஆர், வன்வாசி சேத்னா ஆஸ்ரம்; மனித உரிமை சட்டக் குழு; ஆக்‌ஷன் எய்ட்; மன்னா அதிகார்; மற்றும் மாவட்ட ஆதிவாசிகள் ஒருமைப்பாட்டு சங்கம் ஆகிய அமைப்புகள் அக்டோபர் 10 – 12 தேதிகளில் பல தடைகளையும் குறுக்கீடுகளையும் கடந்து தண்டிவாடா சென்று சேகரித்த தகவல்களின் சுருக்கம்].

செப்டம்பர் 17ம் நாள்

கசன்பள்ளி கிராமத்தில் பாதுகாப்புப் படை நடத்திய கொலைவெறியாட்டம்

நடக்கக்கூட முடியாத துகி முயீ என்ற 70 வயது மூதாட்டி மார்பகங்கள் அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தாள்.

அதுபோலவே கண்பார்வை மங்கிய கவாசி கங்கா என்ற 70 வயது முதியவர் அவரது படுக்கையிலேயே குத்திக் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

வீட்டு வேலையாக வெளியே சென்று திரும்பிய மாத்வி தேவா என்ற 25 வயது இளைஞர் மரத்தில் கட்டப்பட்டு மும்முறை சுடப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்டார் என்கிறார் அவருடன் கிராமம் திரும்பிய அவரது பாட்டனார்.  அவரது உடலைத் தேடி அலைந்த குடும்பத்தாரிடம் அவரது உடல் சிண்டகுஃபா காவல் நிலைய காம்பவுண்ட் சுவர் அருகே புதைக்கப்பட்டதாக அவ்வேலையை மேற்பார்வையிடப் பணிக்கப்பட்ட படேல் என்பவர் இரண்டு தினங்களுக்குப் பிறகு தெரிவித்திருக்கிறார்.

தனது துண்டு நிலத்தை உழுதுகொண்டிருந்த மாத்வி ஜோகா என்ற 60 வயது முதியவரைப் பிடித்து இழுத்து வந்து ஆடையை உருவி நிர்வாணமாக்கி வெட்டிக் கொன்றிருக்கிறார்கள் பாதுகாப்புப் படையினர்.

மாத்வி ஹத்மா [35 வயது] மற்றும் மத்கம் சுல்லா ஆகியோர் சுல்லாவின் மனைவியின் கண்முன்னாலேயே கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டனர்.

அன்று காலை மாடுமேய்த்துக் கொண்டிருந்த ஆந்தர்பராவை சேர்ந்த முசகி தேவா என்ற 60 வயது முதியவரைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து அடித்து கிராமத்துக்குள் இழுத்துச் சென்றனர்.  கைகாலைக் கட்டி ஒரு மரத்திலிருந்து அவரைத் தலைகீழாகத் தொங்கவிட்டனர்.  அவரது தலைக்குக்கீழ் ஒரு எண்ணைக் கொப்பரை எரியூட்டப்பட்டது.  கொதிக்கும் எண்ணைக்குள் அவரை ஒரு முக்கு முக்கி எடுத்தனர் பாதுகாப்புப் படையினர்.  பின்னர் அவர்மீது தண்ணீர் உற்றினர். பிறகு அவிழ்த்துப் போட்டுவிட்டு சென்றனர். அவரது இரணம் இன்று புழுபுழுத்து நெளிகிறது. மருத்துவ வசதியின்றி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

கிராமத்தின் அனைத்து வீடுகளும், அடித்து உடைக்கப்பட்டு தீயிடப்பட்டன. பாதுகாப்புப் படை வருவது அறிந்து ஒட்டுத் துணியோடு ஓடமுடிந்தவர்கள் உயிர்தப்பினர். காடுகளில் கூடாரமிட்டும், உறவினர்களின் அடைக்கலம் புகுந்தும் காலம் தள்ளுகின்றனர். பாதுகாப்புப் படையினரின் செயல்களால் கிராமமே பீதியில் உறைந்து கிடக்கிறது.

அக்டோபர் 1 ம் நாள்

கோம்பட் கிராமத்தில் பாதுகாப்புப் படை நடத்திய கொலைவெறியாட்டம்

மாத்வி பாஜார், அவரது மனைவி மாத்வி சுபி, அவர்களது மணமான மூத்தமகள் கர்தம் கன்னி மற்றும் இளைய மகள் மாத்வி முட்டி ஆகியோர் அவர்களது வீட்டுக்குள்ளேயே குத்திக் கொலை செய்யப்பட்டனர்.  அவர்கள் வீட்டில் தங்கியிருந்த மந்தர்பதார் கிராமத்தை சேர்ந்த முச்சகி ஹண்டாவும் மத்கம் தேவாவும் அதுபோலவே குத்திக் கொல்லப்பட்டிருந்தனர்.

மாத்வி பாஜாரின் இரண்டே வயதான பேரப் பிள்ளையையும் பாதுகாப்புப் படை விட்டுவைக்கவில்லை. அக்குழந்தையை அடித்து, அதன் நான்கு விரல்களை அறுத்து, கதறும் குழந்தையில் பல்லை உடைத்து, நாக்கையும் அறுத்திருக்கிறது இத்தேசப் பாதுகாப்புப் படை.       [அதன் தாய் வெட்டிக் கொலை செய்யப்படும்போது அவள் அணைத்திருந்த குழந்தையின் விரல்கள் துண்டிக்கப்பட்டதாக வேறொரு செய்தி கூறுகிறது]

சோயம் சுபாவும் அவரது மனைவி சோயம் ஜோகியும் அவர்களது வீட்டுக்குள்ளேயே குத்திக் கொல்லப்பட்டிருந்தனர்.

மாத்வி என்கா என்பவரது வீட்டில் புகுந்து அவரைக் கத்தியால் குத்தி வெளியே தள்ளி கிராமம் நெடுகத் தறதறவென இழுத்துச் சென்றனர்.  இறுதியில் அவரை சுட்டு வீழ்த்திவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறினர் பாதுகாப்புப் படையினர்.

கோம்பட் கிராமத்தில் பாதுகாப்புப் படையுடன் நடந்த ”சண்டையில்”  ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.  பாதுகாப்புப் படையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கொல்லப்பட்டவர்களை மாவோயிஸ்டுகள் இழுத்துச் சென்றுவிட்டனர் என்கிறார் தண்டிவாடா காவல் கண்காணிப்பாளர்.

சிண்டகுஃபா கிராமத்தில் பாதுகாப்புப் படை நுழைவதைப் பார்த்த தோமர் முட்டா தன் வீட்டு மக்களைக் காக்க விரைந்தோடும்போது சுடப்பட்டு பின்னர் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். அக்கிராமத்தில் 10 போர் கொலை செய்யப்பட்டதை மட்டுமே உண்மையறியும் குழுவால் உறுதி செய்ய முடிந்தது.  ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. கோப்ராக்களும் போலீசாரும் இரண்டு அணியாய் அன்று செயலில் இறங்கியதை எஸ்.பி. உறுதி செய்கிறார்.  எத்தனை கிராமங்களில் எத்தனை கொலைகள் விழுந்தது என அறிய முடியவில்லை.

முகுட்டோங்க் மற்றும் ஜினிடொங்க் கிராமங்களில் இருந்து 18 முதல் 32 வயது வரையான பத்து இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் அடித்து இழுத்துச் சென்றனர்.  அக்டோபர் 1 ம் தேதி இழுத்துச் சென்ற இவர்களில் எட்டு பேர் மீது 3ம் தேதி இ.கு.சட்ட்த்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது கோண்டா காவல் நிலையம். இருவரைப் பற்றிய விவரமில்லை.  அவர்களைத் தேடிச்சென்ற அவர்களது உறவுக்காரப் பெண்கள் கோண்டா காவல் நிலையத்தில் கொடுமைப்படுத்தப்பட்டு வெற்றுத் தாளில் கைநாட்டு பதித்துக்கொண்டு விரட்டப்பட்டனர்.  இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பெண்கள்  விசாரிக்கச் சென்றபோது அவர்கள் கேவலமாக ஏசப்பட்டு, அவர்கள் இருவரையும் கண்காணாத இட்த்துக்கு அனுப்பிவிட்டோம் இனி ஒருமுறை தேடிக்கொண்டு வரக்கூடாது என மிரட்டி அனுப்பிவிட்டனர்.

செப்டம்பர் 17 அன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலின்போது, கிராமத்தாரைக் கொலை செய்வதிலும், அதைத் தொடர்ந்து அவர்கள் வீடுகளை தாக்கி அழிப்பதிலும் தீயிடுவதிலும் ஈடுபட்டனர்.  அக்டோபர் 1 அன்று நட்ததிய தாக்குதலின்போது விசயம் சற்று வித்தியாசமாக இருந்தது.  அவர்கள் கிராமத்தார் வீடுகளில் புகுந்து தானியங்கள், பருப்புகள், பணம், பண்டபாத்திரங்கள் எல்லாவற்றையும் அள்ளிச் சென்றதோடு, கால்நடைகளையும் ஓட்டிச் சென்றனர். சூரையாடலுக்குப் பிறகு ஆங்காங்கே வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தினர்.  மக்கள் 300 ரூபாயிலிருந்து 10000 ரூபாய் வரையிலான தொகையைப் பாதுகாப்புப் படையிடம் திருட்டு கொடுத்திருந்தனர்.

அடித்து சித்திரவதை செய்து விசாரிப்பது, பின்னர் காலில் சுட்டு ஓடவிடுவது; நாள் முழுவதும் அடித்து சித்திரவதை செய்வது, ஆங்காங்கே கத்தியால் குத்துவது பின் விடுவிப்பது போன்ற பயங்கர ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படை கையாள்கிறது.

பாதுகாப்புப் படை மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின்போது கூலிப்படைகளான சல்வா ஜுடூம், எஸ்.பி.ஓ வைச் சேர்ந்த ஆட்கள் உடன் வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.  சல்வா ஜுடூம் தலைவன் பொட்டு ராஜா, பாண்டேகுடா கிராமத்தை சேர்ந்த பாண்டே சோமா, அசர்குடா கிராமத்தை சேர்ந்த கங்கா, தங்கள் கோம்பட் கிராமத்தை சேர்ந்த மாத்வி புச்சா ஆகிய எஸ்.பி.ஓ கூலிப்படை ஆட்களை மக்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

15

vote-012நக்சல்பாரிகளுக்கு எதிரான காட்டு வேட்டை நடவடிக்கையால் நம் கன்னம் பழுக்கக் கூடும்… சிக்கலானதும், அபாயகரமானதுமான இவ்விரிந்த தளத்தை ஆய்வுசெய்கிறார் ஷோமா சவுத்ரி.
……………………………………………………………….

செப்டம்பர் 22, 2009 அன்று வெளியான “நக்சலைட்டுகளின் அரசியல் தலைவர் கோபட் காந்தி தில்லி போலீசிடம் பிடிபட்டார்” என்ற செய்தியால் பரபரப்பானது இந்தியா.  அவருக்கு வயது 58.  தென் மும்பையைச் சேர்ந்த பார்சி இனத்தவர்.  வொர்லியில் கடற்கரையில் அமைந்திருந்த மாளிகையில் பிறந்து வளர்ந்தவர்.  டூன் ஸ்கூலிலும், பிறகு லண்டனில் சார்டர்ட் அகவுண்டண்ட் படிப்பும் படித்தவர்.  நாடு திரும்பியதும், இந்தியக் குடிமக்களில் ஆகக் கொடிய வறுமையில் இருந்த மகாராட்டிர மக்கள் மத்தியில் வேலை செய்யத்தொடங்கினார். பின்னர் 1970களில் தலைமறைவு அரசியல் வாழ்வை மேற்கொண்டார். சமூகவியலாளரான அவரது மனைவி அனுராதாவும் அவருடன் இணைந்த வாழ்வை மேற்கொண்டார்; சென்ற ஆண்டு மூளையைத் தாக்கும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.  [மத்திய இந்தியாவின் வெறுத்தொதுக்கப்பட்ட இந்த மையநிலப்பகுதியில், இறப்பை ஏற்படுத்தும் இவ்வகைக் கொடூரமான மலேரியா, நமக்கு தலைவலி, காய்ச்சல் போல சகஜமான நோய்].  காந்தி பிடிபட்டதை “அரசின் முக்கியமான நக்சல் வேட்டை”  என்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

செப்,22 அன்று இரவு ’டைம்ஸ் நௌ’ தொலைக்காட்சி, கோபட் காந்தி கைது செய்யப்பட்டதன் முக்கியத்துவம் பற்றிய ஒரு ‘ப்ரைம் டைம் விவாதம்’ நடத்தியது.  வெறிக்கூச்சலிடும் பகட்டு ஆரவார நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, நகர்ப்புற மேட்டுக்குடிகளின் நக்சல் பிரச்சினை பற்றிய வழமையான கண்ணோட்டத்தின் சாரத்தைத் தனது பேச்சில் வெளிப்படுத்தினார். அவர் நடத்தும் நிகழ்ச்சியை நீங்கள் காண நேர்ந்தால், பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவரும்.  உள்துறை அமைச்சர் கடந்த ஒர் ஆண்டாகவே நக்சல்களுக்கு எதிரான, குறிப்பாக சடீஷ்கரில், ஒரு பெரும் படையெடுப்புக்குத் திட்டமிட்டுவருகிறார். கிடைக்கின்ற செய்திகளின் படி,  மத்திய சேமக்காவல் படையின்[CRPF] அதிரடிப்படையினர், இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர்[ITBP] மற்றும்  எல்லைப் பாதுகாப்புப் படையினர்[BSF] அடங்கிய 75000 துருப்புக்களை இந்தியாவின் மையநிலத்தில் நிரந்தரமாய் நிறுத்துவது என்பதையும் உள்ளடக்கியது அவரது இந்தத் திட்டம். பல செய்தித்தாட்களில் வரும் விவரங்களின்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து படைகள் தருவிக்கப்படுகின்றன;  ஒத்துவராத அண்டைநாடுகளின் மீதான ஊடுருவல் நடவடிக்கைக்காகவே உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ் படையும் கொண்டுவரப்படுகிறது; பீரங்கி வண்டிகள், குண்டு விரிப்புகள், கொத்துக் குண்டுகள், மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. அவசியம் ஏற்படுமானால் இராணுவத்தின் சிறப்புப் படைகளையும் கூடக் கொண்டுவருவேன் என்கிறார் சிதம்பரம்.

சொந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் இராணுவ நடவடிக்கை [வரும் நவம்பரில் தொடங்கும்படியாக]  திட்டமிடப்பட்டிருப்பது அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஒரு வீச்சான விவாதத்தைக் கிளப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால், காட்டு வேட்டை என அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, நிலவும் மயான அமைதிக்கு இடையில், தனது பலத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும் நக்சலைட்டுகளை அல்லது மாவோயிஸ்டுகளை “உள்நாட்டுப் பாதுகாப்புக்கான மாபெரும் அபாயம்”  என்ற வகையில் குறிப்பிடுகிறார்கள்.  அவர்கள் மீதான இராணுவ நடவடிக்கை ஒரு தீர்வாக இருக்கலாம்.  ஆனால், அதுதான் ஒரே தீர்வா? அதுதான் தீர்வுகளுள் சிறந்த தீர்வா? இத் தீர்வால் உண்மையில் தீர்வு கிடைக்குமா? இந்தத் தாக்குதல் நடவடிக்கையால் பாதிப்பு அடையப்போகிறவர்கள் யார்? இந்த நடவடிக்கையின் எதிர்விளைவுகள் என்னவாய் இருக்கும்? உண்மையில் நாம் யார் மீது போர்ப் பிரகடனம் செய்திருக்கிறோம்? போர் என்ற பெயரில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? கண்ணைத் திறந்துகொண்டுதான் இந்தக் கிணற்றில் குதிக்கிறோமா? காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இவ்வாறான நடவடிக்கை தோற்றுவித்திருக்கும், வெளிப்படையாகத் தெரியும், சரிசெய்ய முடியாத உளவியல் குழப்பங்களில் இருந்து கற்றறிய வேண்டியது ஏதாவது இருக்கிறதா?  ஒரு ஜனநாயக உணர்வுள்ள சமூகம் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பிப் பதில் தேட முனைந்திருக்க வேண்டும்.  வசதிமிக்க மேட்டுக்குடிகள் இப்படிப்பட்ட சங்கடமான கேள்விகளுக்குத் தன் புட்டத்தைக் காட்டுவதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்.  நாட்டைக் கவிந்திருக்கும் இத்தகையதொரு பயங்கரமான நடவடிக்கையின் பால் விவாதமின்றி ஊமையாய் நிற்கின்றனவே தேசியக் கட்சிகள், அதற்கு என்ன நியாயமிருக்கிறது?

ஒருக்கால், மௌனம் கவலையைக் குறைக்கும் போலும்.  இந்த அரசு சில தினங்கள் முன் தன் உளவியல் ஆயுதமாக ஒரு விளம்பரத்தை வெடித்தது. ”ஈவிரக்கமற்ற கொலைகாரர்களே நக்சல்பாரிகள்” என நாட்டின் அனைத்துப் பெரும் தினசரிகளிலும் உரக்க அலறியது அந்த விளம்பரம். நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்ட ஆண், பெண், குழந்தைகளின் பிரேத வரிசையை அதன் காட்சிப்பதிவு கொண்டிருந்தது.

செப்டம்பர் 22, இரவு கோபட் காந்தியைப் பற்றிய விவாதத்தில், நாட்டின் உட்பகுதி எதற்கும் சென்றறியாத நகர்ப்புறத்து கிணற்றுத் தவளையின் ஒழுக்க நெறி நின்று திருவாய் மலர்ந்தார் அர்னாப் கோஸ்வாமி… இவர் “பயங்கரவாதியா, கொள்கைவாதியா?”  என எக்காளமிட்டார். “ மிஸ்டர் காந்தியின் மேற்பார்வையில் ஆறாயிரம் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” (கோபட் காந்தி ஏதோ வாழைப்பழ குடியரசைத் தலைமைதாங்கும்  இடியமின் போன்ற நபர் போல) ”இருந்தும், மனித உரிமை அமைப்புகளும், சில அரசு சாரா அமைப்புகளும் அவர் விடுதலையைக் கோருகின்றன”  என்கிறார் கோஸ்வாமி. (திரு கோஸ்வாமி அவர்களிடம் மனித உரிமைக் காரர்கள் மீது எப்போதுமே ஒரு எகத்தாளம் உண்டு. அவரைப் பொருத்தவரை இவர்கள், பல்வேறுபட்ட சுய சிந்தனை உள்ள மக்கள் அல்ல, பயங்கரவாத சக்திகளின் வளர்ப்புப் பிராணிகள்).  “ஜார்க்கண்டில் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட 12 வயது சிறுமியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” “அவர்கள் கொன்ற 15 சி.பி.எம். அணிகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?”  என அவர் முழங்குகிறார்.  குற்றம்சாட்டப்படுபவர், நக்சலிசத்தின் பின்னால் இருக்கும் விரிந்த அரசியல் சூழலை விவரிக்க அல்லது மிகச் சிக்கலான விவாத்ததுக்குள் இறங்க முற்படும் ஒவ்வொரு தருணத்திலும் அவரால் மடையடைக்கப்படுகிறார். எப்படி? “நாங்கள் கேட்கும் கேள்வி மிகச் சாதாரணமானது; அவர் பயங்கரவாதியா அல்லது கொள்கைவாதியா? அவர் இந்த வன்முறைக்குப் பொறுப்பானவரா, இல்லையா? 6000 பேர் சாவுக்கு அவரைக் குற்றம்சாட்ட முடியுமா? முடியாதா?”..  ஒத்தையா , இரட்டையா?

இந்த நிகழ்ச்சியைப் பார்த்தது, திருடன் போலீஸ் விளையாட்டில் திருடனைச் சுட்டுக்கொல்லும் சிறுவர்களின் செயலை சற்று வேடிக்கைபார்த்து வந்தது போலிருந்தது. தனிப்பட்ட முறையில், இதில் ஒரு சரக்கும் இல்லை. ஆனால், தற்போது மிகப் பிரபலமான ஆங்கில டி.வி. சேனலான ’டைம்ஸ் நௌ’ ன் குரலாக ஒலிக்கும் திரு கோஸ்வாமி அவர்களின் மூளையற்ற வெட்டுப் பேச்சுகள், விரிந்த, நகர்ப்புற, ஆங்கிலம் பேசும் மக்களின் சிந்தனைப்போக்கை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது. அரசாங்க விளம்பரங்களுடன் இணைந்து, கவலையளிக்கத் தக்கதொரு கண்ணோட்டத்தை பொதுவிவாதம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தொகுத்தளிக்கிறது. இது அரசாங்கப் பிரச்சாரம் எனத் தெளிவாய்க் குறிப்பிடத்தக்க வகையிலும்,  மறுபுறம், அறியாமை மற்றும் சிறுபிள்ளைத்தனமானதாகவும் உள்ளது. இரண்டையுமே ஏற்க முடியாது.

இந்த நக்சல்பாரிப் புதிருக்குள், மூன்று அடிப்படைக் கேள்விகள் அடங்கியுள்ளன: நக்சலைட் என்பது யார்? போராட்டத்தின் ஒரு கருவியாக வன்முறையைக் கொள்வது பற்றிய ஒருவரது நிலைப்பாடு என்ன? நாடெங்கிலும் நக்சலிசம் ஏன் வளர்ந்துகொண்டிருக்கிறது?  முதலாவது கேள்வியை அறிந்துகொள்ள ஒரு உவமையை எடுத்துக்கொள்ளுங்கள், நீரில் இருக்கும் மீனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நக்சல் தலைவர்கள் மீன்கள், இன்னார் என்று சுட்டத்தக்கவர்கள் (சுடத்தக்கவர்களும்- தண்டிக்கப்படக்கூடியவர்களும் கூட); நீர் என்பது விரிந்த எண்ணற்ற மக்கள் கூட்டம், அவர்கள் பிரதிபலிக்கும், அவர்கள் நீந்தித் திளைக்கும் மக்கள் வெள்ளம்.

கோபட் காந்தியைப் போல, ஒரு நக்சல் கொள்கையாளர், போர்த் தலைவர் அல்லது பொலிட் பீரோ தலைவர் எந்த சமூகத் தட்டிலிருந்தும் வரமுடியும்.  ஒடுக்கப்பட்ட ஆந்திரத்து தலித்துகளில் இருந்தும், சட்டீஷ்கரின் புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசியிலிருந்தும், வங்காளத்து நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளிலிருந்தும், வசதிவாய்ப்பு மிக்க மும்பைப் பணக்கார வர்க்கத்திலிருந்தும்கூட வரமுடியும். இந்த “புரிந்த புரட்சியாளர்கள்”  இரண்டு நிலைகளில் செயல்புரிகிறார்கள். அரசியல் நிலையில், அவர்களுக்குப் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. (இதில் அதிகாரம் இன்னமும் நிலப்பிரபுத்துவ மேல்தட்டு வர்க்கத்தின் கைகளிலேயே குவிந்து இருப்பதாகப் பார்க்கிறார்கள்) அவர்களது நீண்டகால குறிக்கோள், ஆயுதப்போராட்டத்தின் மூலம் மக்களுக்கான அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதே.  இவ்விசயத்தில், அவர்கள் இந்திய அரசின் இறையாண்மையை அச்சுறுத்துகிறார்கள்.  2004ல் ஆந்திர அரசுக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே நடந்து முறிந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த கே. பாலகோபால் உள்ளிட்ட பலரும், இவ்விசயத்தில் அவர்களை எதிர்த்துப் போராட அரசு தன்னளவில் உரிமை பெற்றிருப்பதாகவே கருதுகிறார்கள். “மாவோயிஸ்டுகளே அதிகாரத்துக்கு வந்துவிட்டால்,  அவர்களும் இவ்வாறான சாவால்களை சகித்துக்கொள்ள மாட்டார்கள்” என்கிறார் பாலகோபால். நக்சலைட்டு தலைவர்கள், இந்திய அரசு செயல்பட முடியாத வகையில் “விடுதலைப் பிரதேசங்களை”  உருவாக்குவது பற்றியும் பாலகோபால் விமர்சனக் கண்ணோட்டம் கொண்டிருந்தார். “தாங்கள் மக்களின் பிரதிநிதிகளே என்று அவர்கள் உரிமை கொண்டாடும்போது, மக்களைப் பாதிக்கும்படியான ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை – தனது செயல்கள் மூலமாகவோ அல்லது அதனால் தருவித்துக்கொள்ளும் விளைவுகள் மூலமாகவோ- அவர்கள் முன்னெடுக்க முடியுமா?  ஒருக்கால், அடையப்பட முடியாத எதிர்காலக் கற்பனா உலகத்திற்காக தற்போதைய சடீஷ்கர் ஆதிவாசித் தலைமுறை தம்மைத் தியாகம் செய்துகொள்ள விரும்புகிறதா?” என்று கேள்வி எழுப்புகிறார் பாலகோபால்.

இந்த நீடித்த தத்துவார்த்தச் சண்டையில், இரண்டாண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட பயங்கரமான ராணிபோட்லி போலீஸ் நிலையத் தாக்குதல் முதல் சமீபத்திய ராஜ்நந்த்கான் தாக்குதல் ஈராக பல நக்சல் தாக்குதல்களும் அவ்வியக்கம் மூர்க்கமான தாக்குதல்களையும், வன்முறை மீதான மூட வழிபாட்டையுமே தழுவி நிற்கிறது என்பதையே காட்டுகிறது. அடக்குமுறையும், ஊழலும் நிறைந்த போலீசுக்கு எதிராகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்ற போதிலும், யாருமே இதைக் கண்டிக்கவும், இவ்வாறான வன்முறைகளை எதிர்க்கவுமே செய்வர். அல்லது இதைத் தூண்டியவர் தண்டிக்கப்படவேண்டும் என்பர். ஆனால் டஜன்கணக்கான அறிவுஜீவிகளைப்போல, பாலகோபால் அவர்களும் குறிப்பிடுவது என்னவென்றால், இந்த தத்துவார்த்தப் போராட்டத்தை நோக்கி மட்டும் கவனத்தைக் குவிப்பதோ அல்லது சட்டவிரோதமான வழிகளில் மட்டுமே இதை ஒழிக்கமுடியும் என்பதோ தற்கொலைக்கு ஒப்பானது என்பதே.  மூர்க்கமான எதிர்த் தாக்குதல்களால் நக்சலிசத்தை ஒழிக்க முடியுமா?  அது சாத்தியமென்றால், 70களில், மேற்கு வங்கத்தின் சித்தார்த்த சங்கர் ரேயின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் அதை என்றென்றைக்குமாய் பிடுங்கியெறிந்திருக்க வேண்டும். ஆனால், உண்மையில், நக்சல் வன்முறை பற்றிய கதைகளில் உண்மை இருப்பினும், நக்சல் தலைவர்கள் விரிந்த மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள்.   ஏனெனில், அவர்கள் சமூகப் பொருளாதாரக் காரணங்களை வெளிப்படுத்துகிறார்கள், இந்திய அரசால் 60 ஆண்டுகளாய் அயோக்கியத்தனமாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களை சக்திமிக்கவர்களாக்குகிறார்கள், ஆயுதபாணியாக்குகிறார்கள்.  ஆக, பெரும்பாலான நக்சல் அணிகள் தனது இயக்கக் குறிக்கோளுக்காக நிற்கும் [”Informed revolutionaries”] “புரிந்த புரட்சியாளர்கள்” அல்ல. அவர்கள் தங்களது வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் தமது வாழ்விடத்தில் போராடும் பழங்குடியினரும், தலித்துகளும் ஆவர்.  “நீங்கள் என்னை நக்சல் என்றோ, வேறு மாதிரியோ உங்கள் விருப்பம்போல் அழைத்துக்கொள்ளுங்கள்.  எனது 3 கிலோ அன்னாசிப் பழத்துக்காவே நான் துப்பாக்கி எடுத்திருக்கிறேன்”  என்று தான் சந்தித்த பீகார் தொழிலாளியும் நக்சல் கேடருமான ஒருவர் கூறியதாக பெலா பாட்டியா என்ற மனித உரிமை செயல்வீரர் கூறுகிறார்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில்,  இந்திய அரசு தன் மிகவும் பரிதாபத்திற்குறிய மக்கள் மீது இந்த ஆயுதப் போரை நடத்தித்தான் தீரவேண்டுமா? அவர்களையும் உரிமையுள்ள மக்களாக்கி, துப்பாக்கிகளின் அரவணைப்பில் இருந்தும் ”புரிந்த புரட்சியாளர்களின்” குற்றப் பிடியில் இருந்தும் விடுவிக்க வேறு வழி ஏதுமில்லையா?  என்பதே. அர்நாப் கோஸ்வாமி சென்ற வாரம் மேற்கு வங்கத்தில் இறந்த அந்த 15 சி.பி.எம். உறுப்பினர்களை நினைவுபடுத்தியபோது வசதியாய் சொல்ல மறந்த விசயம், பத்திரிகைகளில் வெளிவந்த விசயம் ( எந்த டி.வி. சேனலும் குழு அனுப்பி விசாரிக்க நினைகாத விசயம்) என்னவென்றால், பத்தாயிரம் போர் கொண்ட உறுதியான மலைவாழ் மக்கள் கூட்டம் ஆயுதக் கிடங்காக ஆக்கப்பட்டிருக்கும், லால்கர் அருகில் உள்ள இனாயத்பூரில் இருக்கும் சி.பி.எம். அலுவலகத்தை சுற்றிவளைத்துத் தாக்கியது. அவரால் குற்றம் சாட்டப்படுபவர்கள் இவ்விசயத்திற்கு அவரது கவனத்தை இழுக்க முயன்றபோது அவர் மிகவும் கேலிக்குரிய வகையில், அந்த பத்தாயிரம் பழங்குடியினருக்கு  நொடிப்பொழுதில் மாவோயிஸ்ட் முத்திரை குத்திவிட்டார்.  ஆக, ”காட்டு வேட்டை”  இந்த பத்தாயிரம் பேரையும் வேட்டையாடவேண்டும், இல்லையா? ஒருக்கால், பத்தாயிரம் மாவோயிஸ்டுகள் ஒரு அலுவலகத்தைத் தாக்கியிருந்தால் வெறும் 15 பேர்தான் செத்திருப்பார்களா?  சி.பி.எம். அலுவலகத்தின் மீது சென்ற வாரம் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய உண்மைதான் என்ன?  மறுநாள் அங்கு சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் சடலங்கள் எதையும் காண முடியவில்லையே, ஏன்?  அங்கு முகாமிட்டிருந்த மத்திய துணைராணுவத் துருப்புகள் சம்பவங்கள் எதையும் தடுக்க முடியாமல் போனதேன்? நக்சல் புதிர் பற்றிய விசயத்தில் லால்கர் சம்பவம் கற்றறியப்பட வேண்டிய ஒன்று. கடந்த ஆறு மாதமாகவே மையநீரோட்ட ஊடகங்கள் லால்கரில் “மாவோயிஸ்ட் அபாயம்” பற்றி அதீத ஆர்வம் காட்டிவந்தன. ஆனால், அவர்களில் யாருக்குமே, லால்கரில் இந்த மாவோயிஸ்ட் வீச்சு மே மாதம் தொட்டு திடீர் என்று ஏற்பட்ட ஒன்றா எனக் கேட்கத் தோன்றவில்லை.(sui generis) ஒரே நாளில் மொத்த சமூகமும் மாவோயிஸ்டாக மாறிவிடுமா? இந்த ஆண்டுத் தொடக்கத்தில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைக் கொல்ல மாவோயிஸ்டுகள் முயன்றதைத் தொடர்ந்தே லால்கர் பிரச்சினை தொடங்கியது என மிகச் சிலரே கூறினர். அதற்குப் பழிவாங்கும் முகமாக பெங்கால் போலீசு லால்கரைச் சுற்றிவளைத்து அந்தச் சுற்றுவட்டாரத்தில், இக் கொலைமுயற்சிக்கு சிறிதும் சம்பந்தமற்ற அப்பாவி ஆதிவாசி இளைஞர்கள் ஏராளமானோரைக் கொடூரமாகத் தாக்கியது. இப்படிப் பல மாதங்களாக, இலக்கற்ற போலீசு ஒடுக்குமுறைக்கு இலக்காகி, ஆத்திரமும் வெறுப்புமுற்ற ஆதிவாசிமக்கள் தன்னெழுச்சியாய்த் தங்களை ஒரு எதிர்ப்பு சக்தியாக அமைப்பாக்கிக்கொண்டு, கைக்கோடாரி, வில், அம்பு போன்ற தங்களது வழமையான ஆயுதங்களை ஏந்தி, இந்திய அரசின் வல்லமையை எதிர்த்து மோதினர். சில வாரங்களுக்குப் பின், துப்பாக்கி மற்றும் ஆலோசனைகளோடு இழையோடும் ஒற்றுமை பற்றிய தந்திர உபாயங்களைப் போதிக்கவும், எதிர்ப்பு அலையை வீச்சாய் எழுப்பவும் கிஷன் ஜீ என்ற மாவோயிஸ்ட் தலைவர் ஆந்திரத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது. காட்டு வேட்டைக்கு ஒரு முன்னோட்டம் போல, பதிலுக்கு அரசு, தனது துருப்புக்களை அதிகரித்ததுடன் துணைராணுவப்படையையும் இறக்கியது. பலநாட்கள் கடும் துப்பாக்கி சூடு நடத்திய பிறகு அரசு, மாவோயிஸ்ட் கூவலையே கேலியாகப் பயன்படுத்தி, லால்கரைப் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து “விடுதலைப் பிரதேசம்” என அறிவித்தது.  ஆனால், உண்மையில் அன்றிலிருந்து லால்கர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.  சி.பி.எம் அலுவலகத்தின் மீதான தாக்குதல் அப்பகுதியில் கனன்றுகொண்டிருக்கும் கோபத் தீயின் சமீபத்திய வெளிப்பாடு மட்டுமே.

காட்டு வேட்டை நடவடிக்கை தொடங்க இருக்கும் வெகுதொலைவில் உள்ள தண்டிவாடாவில், நிகழ்ச்சிக் களத்தில் இருக்கும் காந்தியவாதியும், ஒரே மனித உரிமை செயல்வீரருமான ஹிமான்ஷு குமார் சொல்கிறார், “நக்சலிசம் ஒரு பிரச்சினை என்ற கருத்தில் நாம் ஒத்துப்போகலாம். ஆனால், இந்த ஏழை மக்கள் தன் சாவை வரவழைத்துக்கொள்ளத் தக்க ஒரு அரசியலின்பால் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள்?  வெறுத்து ஒதுக்குதலையும், இழிவுபடுத்துதலையும் விட சாவே கவர்ச்சிகரமானதாக உள்ள அவ்வளவு பயங்கரமான ஒரு சமூக அமைப்பை நாம் உருவாக்கி இருக்கிறோமா? அப்படியானால், நான் இந்த சமூக அமைப்பை ஏன் பாதுகாக்கவேண்டும்? உணவு, உடை, சுகாதாரம், கல்வி, தன் நிலத்தின் மீது தனக்குள்ள நியாயமான உரிமை இவையே இந்த மக்களுக்கு வேண்டியவை. இருந்தும், நமது ஜனநாயக வழிமுறைகளை வலுப்படுத்தி அவர்களை வென்றெடுப்பதற்கு பதிலாக, நாம் நமது ஜனநாயகத்தைத் துப்பாக்கி முனையில் நடத்திச் செல்லப் போகிறோம் என்றால், நாம் பயங்கரமான மீளமுடியாத நிலைமையை நோக்கி நகர்கிறோம் என அஞ்சுகிறேன். நாம் ஒரு உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறோம்”.  ஹிமான்ஷு குமார் போன்றோர் நன்கறிவர்.  காயமுற்ற சமூகத்தின் விளிம்பில் ஒரு அவசர சிகிச்சை முகாம் [ICU] போல கடந்த 17 ஆண்டுகளாய் செயல்பட்டிருக்கிறார். கல்வி, மருத்துவ உதவிகள் செய்துகொண்டு பொருமையோடு அவர்களை தேர்தல் மற்றும் சட்டபூர்வமான வழிமுறைகளுக்குக் கொண்டுவர உழைத்திருக்கிறார். இக் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள மறுக்கும் அரசு, சவுகரியமாகத் தன் பணிகளை இவருக்கு ஒப்பந்த வேலை [out sourcing ] அளிப்பதுபோல் அளித்திருந்தது.  இருப்பினும், இப்போது இவரது அறிவார்ந்த கருத்துக்குக் காதுகொடுக்க மறுக்கிறது. இவரைக் கலந்து ஆலோசிக்கவும் அது தயாராய் இல்லை.

நக்சல் பற்றிய உவமானத்தில் எது நம்மை நீர் எனும் பொருளை நெருங்கச் செய்கிறது.  மனித உரிமையாளர்களையும் அவர்களது கேள்விகளையும் தேச விரோத முத்திரை குத்துவோர், பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இந்த நக்சல் பிரச்சினை பற்றி முன்னர் என்ன சொல்லிவந்தனர் என்பதை அறிந்தால் வியப்புக்குள்ளாவர். பார்வையாளர் இருக்கையில் இருக்கும் நீதிபதிகளையும் இவ்வரசியல் அமைப்பின் ஆதரவாளர்களையும் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

2006 ம் ஆண்டு திட்டக் கமிஷன், “தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்” முன்னேற்றப் பணிகளுக்கான சவால்கள் பற்றி ஒரு அறிக்கை தருமாறு வல்லுனர் குழுவைப் பணித்தது.  முன்னாள் உ.பி. காவல்துறைத் தலைவர் பிரகாஷ் சிங், முன்னாள் உளவுத்துறைத் தலைவர் அஜித் தோவல், பி. பந்தோபாத்யாய், ஈ.ஏ.எஸ். சர்மா, எஸ்.ஆர். சங்கரன், பி.டி. ஷர்மா போன்ற மூத்த அதிகாரிகள், பெலா பாட்டியா, கே. பாலகோபால் போன்ற மனித உரிமையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வல்லுனர் குழு அது. அவர்கள் 2008ல் சமர்ப்பித்த அறிக்கை எதிர்கால நோக்கில் நல்ல ஆய்வையும்,  ஆலோசனைகளையும் கொண்டிருந்தது.

”நக்சலைட் இயக்கத்துக்கான ஆதரவு பிரதானமாக தலித்துகளிடம் இருந்தும், ஆதிவாசிகளிடமிருந்தும் கிடைக்கிறது” என்கிறது அந்த அறிக்கை. இதுதான் நமது உவமையில், நீர் எனும் நக்சல் தலைவர்கள் நீந்தித் திளைக்கும் எல்லையில்லா மக்கள் கடல்.  இந்தியாவின் மாபெரும் மக்கள் தொகையில் தலித்துகளும், ஆதிவாசிகளும் நான்கில் ஒரு பங்கினர். இருப்பினும் அவர்கள் விகிதாச்சாரத்துக்கு சம்பந்தமில்லாத அளவில் பரம ஏழைகளாய், மனித மேம்பாட்டு  அளவுகோலின் அடிமட்டத்தில் கிடப்பவர்களாய் இருக்கிறார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அப்பட்டமான மனிதத்தன்மை அற்ற இழிநிலையில் நடத்தப்படுகிறார்கள்.  கிராமப்புறத்தில் காணப்படும் விரக்திக்கும் வன்முறைக்கும் காரணமானவை பற்றிய, கவனமாகத் தொகுக்கப்பட்ட விவரங்களும், கள ஆய்வுகளும் அடங்கிய விரிவான திரட்டு இந்த அறிக்கை.  ஆனால், இந்த விவாதத்தின் மையப்பொருளாக, “ நமது சமூக-பொருளாதாரக் கட்டமைவின் உட்கிடையான வன்முறை” தான் நக்சல் வன்முறைக்கான அடிப்படைக் காரணம் என்பதை வெளிப்படுத்துகிறது. அரசாங்கத்தின் கொள்கைகள் புதிய தாராளவாதம் நோக்கித் திருப்பப்பட்டிருப்பதை இடித்துரைத்துவிட்டு, நக்சல் பிரச்சினைக்கான தீர்வாக, பாதுகாப்பை மையப்படுத்திய அணுகுமுறைக்கு மாறாக, முன்னேற்றத்தை மையப்படுத்திய அணுகுமுறையை இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

1982ம் ஆண்டில் திட்டக்குழு உறுப்பினராய் இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் சொந்த அறிக்கையையும், 2002ல் பிரணாப் முகர்ஜி எழுதியதையும் நினைவூட்டி, மனித உரிமை வழக்கறிஞர் கண்ணபிரான் அவர்கள் 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார்.  அவையும் மேற்சொன்ன அறிக்கையின் சாரப்பொருளையே கொண்டிருந்தன. ”ஏற்கனவே இந்தப் பார்வையும் புரிதலும் அவர்களுக்கு இருந்தும் ஏன் அவர்கள் தங்களது சொந்த புரிதலுக்கும், பரிந்துரைக்கும் எதிராய் பாதுகாப்பை மையப்படுத்திய வழியைக் கையாள்கிறார்கள் என்பது பெருத்த புதிராய் இருக்கிறது” என்ற பெலா பாட்டியா தொடர்ந்து, ”உண்மையில் இது புதிரான விசயமல்ல.  இச் செயல் இந்திய அரசின் பண்பை (character ) மிகத் தெளிவாகக் காட்டுகிறது” என்கிறார்.

பிரதமர் இந்திரா காந்தியின் முன்னாள் பொருளாதார ஆலோசகராய் இருந்த அர்ஜுன் சென்குப்தா அவர்களும் சென்ற இரு வாரங்களுக்கு முன்பு, செப்டம்பர் 15 அன்று, ”நக்சலிசம் என்பது காதுகொடுக்கப்படவேண்டிய ஒரு அவலக் குரலே” என எழுதியிருக்கிறர். ”நக்சல் பயங்கரத்தை” க் கட்டுக்குள் வைக்க அரசு மேற்கொண்ட அதிகபட்ச முயற்சிக்குப் பின்னும் வன்முறை அதிகரித்திருக்கிறது என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலுக்குப் பதிலளிக்கும் வகையில் சென்குப்தா மேலும் கடுமையாக எழுதினார், “இது ஏன் என்பதையும், மேலும், எவ்வகையில் நக்சல் வன்முறை பிற வன்முறை வெளிப்பாடுகளில் இருந்து வேறுபடுகிறது என்பதையும் புரிந்துகொள்வது அவசியம்.  அது எப்போதுமே வன்முறை, கொலை, பயங்கரமான குற்றச் செயல்கள் மூலம் சட்டம் ஒழுங்கை மீறுவதாகவுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு இயக்கத்தை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்ப்பதும், காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைக் கையாள்வதும் புத்திசாலித்தனமான செயல் அல்ல. இவ்வகைத் தீவிரவாதம் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல. அதற்கு அப்பால், சமூகத்தில் வேறோடியிருக்கும் அநீதிகளின்  வெளிப்பாடே.  நாம் முதலில் அப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.  இல்லையேல், வன்முறை என்றும் கடக்க முடியாததாகவே தொடரும்”. இக் கருத்தைக் கேட்டபின் அரசின் ’பண்பு’  மேலும் வெறுக்கத்தக்கதாகிறது.

(1996ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி எம். என். ரோ தனது தீர்ப்பு ஒன்றில், “இடதுசாரித் தீவிரவாதம் நிர்வாகத்தால் ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படும் அதே வேளையில், அது தங்களது பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வாக வஞ்சிக்கப்பட்ட மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.  இது ஏன் இப்படி? என்று, இன்று எகிறிக்குதிக்கும் தேசியாவாதி ஒவ்வொருவனும் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.)

சென்குப்தா பிரதமரை எச்சரித்த போது, நக்சல் வன்முறை மீண்டும் மீண்டும் தலைதூக்கும் என அவர் அஞ்சியது சரியே.  ஏனெனில், அதன் உயிர்நாடி இந்த சமூக அமைப்பில் புரையோடிப்போயிருக்கும் உள்ளார்ந்த வன்முறையே; நாட்டின் 5 சதவீத மக்கள் சுகபோகத்தில் திளைக்கையில்,  77 சதவீத இந்திய மக்களை நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான தொகையில் காலம் தள்ளும்படி நிர்ப்பந்திக்கும் வன்முறையே; நமது ஜனநாயகக் குடியரசு முகங்கொடுக்க மறுக்கும் இந்த வன்முறையே.

கட்டமைவு வன்முறை: அது நயத்துடன் நன்கு உருவாக்கப்பட்டிருக்கும் சூனியம். பெரும்பாலான நகர்ப்புற இந்தியர்களைப் பொருத்தவரை, பழங்குடியினர், தலித்துகளின் வாழ்க்கை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.  நமது புத்தகங்கள் இது பற்றி எழுதுவதில்லை,  நமது சினிமாக்கள் இது பற்றிய நினைவை எழுப்புவதில்லை, நமது பத்திரிகையாளர்களோ இவ்விசயத்தின் பக்கம் திரும்புவதுமில்லை.  இது வெறும் வறுமையாக நொடித்துவிடவில்லை; இப்போது இது, நீங்கள் இதுநாள் வரை பார்க்கத் தவறிய இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைகிறது.  மிருகத்தனமான, சட்டவிரோதமான, விழுந்து  புடுங்குகின்ற, இப்படி ஒரு சிலரின் விருப்பத்துக்கு  மாமா வேலை பார்க்கின்ற இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைகிறது. சட்டீஷ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் ஆந்திரத்து தொலைத்தூரக் காடுகள், பீகார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசத்தின் அனாதையாக்கப்பட்ட மூலைமுடுக்குகள் இப்படி இந்தியத் தாயின் புகைந்துகொண்டிருக்கும் இதயத்தில் ஒருவர் பயணித்து வராத வரையில் அவருக்கு இப்பிரச்சினையின் பயங்கரம் புரியாது.  இப்பிரச்சினையை காட்டு வேட்டை நடவடிக்கை எப்படித் தீர்க்கும்? நீங்கள் உங்கள் கருநாகக் கமேண்டோப் படையை இந்த சூனியப் பிரதேசத்தில் சீறிப் பாயச் செய்யலாம். ஆனால், அது  நமது தேசம் உருவாக்கியிருக்கும் மலையும் மடுவுமான ”இருவகைப்பட்ட மனிதர்களை”  எப்படி ஒன்றாய்ச் சேர்த்து உருக்கும்?  இந்தக் காட்டு வேட்டை பல நூறு “புரிந்த புரட்சியாளர்களையும்”   அவர்களுடன் ஆயுதம் எடுத்திருக்கும் பரிதாபத்திற்குறிய பல்லாயிரக்கணக்கான ஏழைமக்களையும் கொன்றொழிக்கலாம்.  ஆனால், வீசிய குண்டுகளால் புதைக்கப்பட்ட கோபத்தில் இருந்து உயிர்த்தெழும் புதிய கோபங்களுக்கு அது என்ன பதில் சொல்லும்?

மனித குல ஆய்வாளரும், வரலாற்றாளருமான ராம் குகா, “வீட்டில் இருந்த மூன்று அறைகளில் ஒன்று தீப்பிடித்திருந்தது.  அதை அணைப்பதற்கு பதில் மற்றொரு அறைக்கு நீங்களே தீ வைக்கிறீர்கள். பிறகு மொத்த வீட்டையும் இடித்துத் தள்ளிவிடுகிறீர்கள்.  இது எப்படியோ, அப்படித்தான் இருக்கிறது நடப்பு” என்கிறார்.

இந்த காட்டு வேட்டை நடவடிக்கையை வடிவமைத்தவர்களுள் ஒருவரான உள்துறைச் செயலர் கோபால் பிள்ளை அதிகாரம் கோலோச்சும் ‘நார்த் பிளாக்’ கட்டிடத்தில் அமர்ந்திருக்கிறார்.  சராசரி சிடுமூஞ்சி இந்திய அதிகாரிபோல் எமது முதல் சந்திப்பில் அவர் இல்லை. நட்புணர்வும், சிந்தனையும் உடைய மனிதராகத் தோன்றுகிறார்.  தாம் பல ஆண்டுகள் வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றி இருப்பதாகவும், பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறை மக்களுக்கு என்ன செய்யும் என்பது பற்றி அறிந்திருப்பதாகவும் கூறுகிறார்.  இது எப்படி பெருத்த குளறுபடிகளைத் தூண்டி, எதையுமே உள்ளது உள்ளபடிப் பார்க்க முடியாத நிலையைத் தோற்றுவிக்கும்; எங்கும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் விதைக்கும் என்பது பற்றியெல்லாம் தாம் அறிந்திருப்பதாகவும் கூறுகிறார். வெளிப்படையானவராகவும், எதற்கும் காது கொடுக்கத் தயாராய் இருப்பவராகவும் தோன்றினார்.  ஆச்சரியப்படத் தக்க வகையில் நேர்மையான ஒப்புதல்களை அவரிடம் காண முடிந்தது.  மணிப்பூரின் மொத்த சமூகமும் விரக்தியுற்றிருக்கிறது; மனித உரிமையாளர்கள் பெருத்த கூச்சல் போடும் பிரச்சினையான, சட்டீஷ்கரில், சல்வா ஜுடூம் அமைப்பை வளர்த்துவிட்டது தவறுதான்; அரசு முன்னெடுக்கத் தவறிய மக்கள் பிரச்சினைகளை பலமுறை நக்சலைட்டுகள் கையிலெடுத்து நிறைய செய்திருக்கிறார்கள் என்பது உண்மையே .. ஆனால், அவர்களது வன்முறை வழிப்பட்ட குறுக்கீடுகள் அரசின் செயல்பாடுகளுக்கு உண்மையான இடர்பாடுகளாய் இருக்கின்றன. என்று அவர் சொல்லும்போது அதற்கு என்ன பதில் சொல்வது?

அவரைப் பொருத்தவரையில் இந்த காட்டு வேட்டை நடவடிக்கை, அந்தப் பகுதிகளை அரசின் ஆளுமைக்கு உட்படுத்தும்படியாகத் திட்டமிடப்படும் ஒன்றே.  “நாங்கள் அந்த நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெற விரும்புகிறோம்; ஆனால், நாங்கள் சுடப்பட்டால் மட்டுமே திரும்பச் சுடுவோம்” என்கிறார் இவர்.  ”லால்கர் ஒரு முன்மாதிரி; நாங்கள் அம்மக்களுக்கு சேதம் விளைவிக்க விரும்பவில்லை; அந்தப் பகுதியில், பொது வினியோகம், நகரும் மருத்துவ ஊர்திகள், உறுதியான போலீசு நிலையம், பள்ளிகள்.. இப்படி அரசின் சமூக நிர்வாகத்தைத் மீளக் கொணர்வதே எமது உண்மையான வெற்றியாக இருக்கும்,  இவையே எமது இலக்குகள்” என்கிறார் இவர்.  உங்களுக்கு இவர் சொல்வது நடக்காதா என்று ஏங்கத் தோன்றும்.

சட்டீஷ்கர் மாநிலக் காடுகளில் உள்ள கிராமங்களை நிர்வாகம் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன.  அக்கிராமங்கள் வெகு தொலைவில் தனித்தனித் தீவுகளாக உள்ளன.  மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையில் இருக்கும் யாருக்கும் அம்மக்களது மொழி தெரியாது.  காட்டு வேட்டை நடவடிக்கை வெகுநாட்கள் முன்பிருந்தே திட்டமிடப்பட்டு வருகிறது.  நாடெங்கிலும் உள்ள மத்திய சேமக்காவல் படையினர் மற்றும் துணைராணுவத் துருப்புகளுக்கு தொடங்கவிருக்கும் இந்த நடவடிக்கைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.  காட்டுப் போர்ப் பயிற்சிக்கான 20 புதிய பள்ளிகள் தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது.  கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமானமுள்ள இராணுவத் தளவாடங்களை வாங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், அதுபோல் சிவில் நிர்வாகத்தை ஊக்குவிக்கவும், நிலைமையை உணரச்செய்யவும் அதிவேகப் பயிற்சித் திட்டங்கள் ஏதும் உண்டா என்கிறீர்களா? இவர், இப்பிராந்தியத்தில் உள்ள சமூக ஆர்வலர்களை தங்களது பங்களிப்பை செய்வதற்காக அழைத்திருக்கிறாரா, என்கிறீர்களா? திரு. பிள்ளை, ஆ.. மறந்துவிட்டோமே என்பது போன்ற அதிர்ச்சிக்கு உள்ளாகி.. இல்லை என்ற ஒப்புதலுடன் “பயிற்சி”,  “பேச்சுவார்த்தை” என தனது மஞ்சள் குறிப்பேட்டில் எழுதிக்கொள்கிறார்.

காட்டு வேட்டை தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.  சொல்லப்பட்ட நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையே தொடர்பில்லை; அனுமார் வால் போல் நீண்டு சென்ற ஆய்வறிக்கைகளும், நல்ல பல ஆலோசனைகளும் திட்டக் கமிஷன் அலுவலகப் புழுதியில் புதைகின்றன. நன்கறிந்த விரக்தி மீண்டும் துளிர்விடத் தொடங்குகிறது.

நியாயமானதும் சமத்துவமானதுமான உலகத்தைக் காண விரும்பும் எவருக்கும் அரசியல் போராட்டத்தில் வன்முறை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிப்பதா இல்லையா என்பதே இன்றைய பெரும் பிரச்சினையாக உள்ளது. அரசு தனது அக்கறையின்மையை வெளிப்படுத்தும்போது, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் போன்ற மக்களது அமைதிவழி இயக்கங்களுக்கும், பாக்சைட் சுரங்கப் பணியை எதிர்த்து நிற்கும் பழங்குடியினருக்கும், நர்மதா அணை எதிர்ப்புப் போராட்டத்துக்கும் அரசு செவிசாய்க்காதபோது, தனது சுகவாழ்வைத் துரந்து சக குடிமக்களான அந்த கையறுநிலையில் உள்ள மக்களோடு இணைந்து நிற்க முன்வராத ஒருவர் அம்மக்களின் ஒரே தற்காப்பான ஆயுதங்களைக் கைவிடக் கோருவதில் என்ன நியாயம் இருக்கிறது?

நக்சல் வன்முறையையும் தன்னெழுச்சியான மக்கள் வன்முறையையும் ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க வேண்டுமா?  இருந்தும், ஒரு ஜனநாயக சமூகத்தில், வன்முறை, அது எத்தன்மையதாயினும் அதை மன்னிக்க முடியுமா?  அது எங்குதான் ஜனநாயக வழிமுறையை விட்டுவைத்திருக்கிறது?

இவ்வகையிலான உள்போராட்டங்களுக்கு இடையிலும், அர்னாப் கோஸ்வாமி அடித்துக் கூறியதற்கு மாறாக, கிட்டத்தட்ட, மனித உரிமை சமூகம் முழுவதும், நக்சல் வன்முறை கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, அடக்கப்பட வேண்டியதே என்ற கருத்தை ஏற்றது. ஆயுதங்கள் அதிகரித்திருப்பதும், அன்னிய நாடுகளில் இருந்து தருவிக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதும் வன்முறையை வளர்த்திருக்கிறது.  பலரும் மதிக்கும் முன்னாள் காவல்துறைத் தலைவர் பிரகாஷ் சிங் சொல்வது போல, “நக்சல்கள், வழக்கமாக 20 போரைக் கொண்ட ’தளம்’ என்ற குழுவாக இயங்குவார்கள். இப்போது, தளம் 100 போர் அளவுக்கு அதிகரித்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. அவர்கள் அதிநவீன ஆயுதங்களை வைத்துள்ளனர். அவர்களது தாக்குதல்கள் மிகக் கொடூரமாக நடத்தப்படுகிறது.  இப்படிப்பட்ட ஆயுதக் கிளர்ச்சிகள் சகித்துக்கொள்ளத்தக்கவை அல்ல என்பதை நாம் அவர்களுக்குக் காட்டவேண்டும்”.

இந்த செயல்தந்திரம் பற்றியும் அதன் வல்லமை பற்றியும் மாற்றுக் கருத்து எழுகிறது.  உதாரணத்துக்கு, பெயர் சொல்ல விரும்பாத, பொதுவாய் தாக்குதல் குணம் கொண்டவர் எனக் கருதப்படும் ஒரு இராணுவத்துறை வல்லுனர் இந்த காட்டு வேட்டை நடவடிக்கை தொடர்பாக சில பாரதூரமான சந்தேகங்களை எழுப்புகிறார். பெரும்பாலான மனித உரிமைச் செயல்வீரர்கள் கொண்டிருக்கும் கவலையையே இவரும் பிரதிபலிக்கிறார்.  ”உங்கள் நிலத்தில், உங்கள் மக்களையே எதிர்த்த இப்படி ஒரு போலீசு நடவடிக்கை ஒரு பயங்கரமான படுகுழியில் விழுவதற்கு ஒப்பானது.  இந்த நடவடிக்கை ஒத்துவராத அண்டை நாடுகள் மேல் கையாளப்படும் ஒன்று. போலீசு ஒரு குற்றவாளியை, உதாரணத்திற்கு, ராம் லாலைப் பிடிப்பதற்கு அலையவேண்டிய ஒன்று. ஆனால், இப்படிப்பட்ட நடவடிக்கையில்  ராம்லால் யாரென்றும் தெரியாது, அவனைப் பற்றிய, அவனது செயல்பாடு பற்றிய தெளிவான துப்பும் கிடைக்காது.  நீங்கள் ராம்லாலின் சொந்தங்களையோ, அவனது மொத்த கிராமத்தையுமோ கொன்றழிப்பதில் போய் நிற்பீர்கள்.  மேலும், நீங்கள் அதை விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்றால், நீங்கள் யாரைக் கொன்றிருக்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியாது” என்கிறார் அவர்.

துணைராணுவத் துருப்போ அல்லது இராணுவமோ நுழைக்கப்பட்டுவிட்டால் அதைத் திரும்பப் பெருவது என்பது நடவாத செயல். அதிகார வர்க்கமோ, இராணுவத் தந்திரியோ, வல்லமைபெற்ற மந்திரியோ யாராய் இருந்தாலும், இந்நடவடிக்கை  ஏற்படுத்தும் திகில் உணர்வையோ, வீண் கொலைகளையோ, நியாயமான தவறுகளையோ, இவை ஏற்படுத்தும் பழிவாங்கும் உணர்ச்சியையோ தடுத்து நிறுத்த முடியாது. நண்பனும், குடும்பத்தாருமே உளவு சொல்பவரானால், பிறகு பார்ப்பவரெல்லாம் எதிரிகளே. இதற்கெல்லாம், காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களும் வேதனை மிக்க இரத்த சாட்சியங்களாய் நிற்கின்றன.

ஏற்கனவே இந்தப் பயனற்ற ஓட்டம் சடீஷ்கரில் தொடங்கிவிட்டது. தாக்குதலின் முதல் நடவடிக்கையாக, சென்ற வாரம், சிண்டகுஹா என்ற இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலையை அழிப்பதற்கு 100 கோப்ரா அதிரடிப்படையினர் கொண்ட குழு விரைந்தது.  அவர்கள் நக்சல் தீயால் சூழப்பட்டனர். ஏழு கோப்ராக்கள் கொல்லப்பட்டனர்.  பதிலுக்கு, 9 நக்சல்கள் தங்களால் கொல்லப்பட்டனர். (அவர்களது சடலம் தங்கள் வசம் உள்ளது) தாக்குண்ட மேலும் பலரை நக்சல்கள் இழுத்துச் சென்றுவிட்டனர் என்று அறிவிக்கின்றனர்.  இதை மாபெரும் வெற்றி என அறிவிக்க முயன்றது அரசு.  ஆனால், பயங்கரமான சூனியக்காரியின் சித்து வேலை (smoke and mirror) ஏற்கனவே அரங்கேறத் தொடங்கிவிட்டது. உள்ளது உள்ளபடி எதையும் இனி பார்க்கமுடியாது. கோப்ராக்கள் யாரையும் கொல்லவில்லை; சிலரைப் பிடித்துச் செல்வதற்காக ஏதுமறியா மக்களைக் கிராமத்தில் இருந்து வெளியே இழுத்துவந்தனர்;  அவர்களுள் ஒரு கிழவரும், ஒரு கிழவியும் இருந்தனர், என்கின்றனர் கிராம மக்கள்.  சட்டீஷ்கர் டி.ஜி.பி விஷ்வராஜன் ”என்னிடம் விவரம் ஏதுமில்லை” எனக் கூறி மேற்கொண்டு பதிலளிக்க மறுத்துவிட்டார்.  முதல் நடவடிக்கையிலேயே 6 கோப்ராக்களைப் பலிகொடுத்த வலி அவரிடம் வெளிப்பட்டது.

காட்டு வேட்டை தீவிரமடையும்போது இப்பிரச்சினைகள் எல்லாம் பூதாகாரமாய் பெருத்து நிற்கும்.  கணப்போழ்தில் மறையும் தீவிரவாதிகள், அடிபட்ட நாகங்களின் கோபத்திற்கு இலக்காக அவர்கள் விட்டுச் செல்லும் கிராமத்தினர், உள்ளும் புறமும் சூழும் பீதி, சந்தேகம், பழிவாங்கும் உணர்ச்சி, சல்வார் ஜுடூம் நடவடிக்கையின் போது நடந்ததைப்போல், நக்சல்களின் கோபத்துக்கும் அரசின்  கோபத்துக்கும் இடையே சிக்கும் அப்பாவிப் பழங்குடியினர், எனக் கண்ணில் விரிகிறது கட்டுக்கடங்காது காட்டின் மருட்சி.

ஒரு அழுத்தம் அதற்கு சமமானதும் எதிரானதுமான பதில் அழுத்தத்தை உருவாக்கும்.  பிரதமர் மன்மோகன் சிங்கால் இந்த எளிய வேதியியல் சமன்பாட்டைப் புரிந்துகொள்ள முடியவில்லை.  சல்வா ஜுடூம் செயல்பாட்டின் விளைவு ஏராளமான பழங்குடியினரை நக்சல்கள் பக்கம் துரத்திவிட்டது.  காட்டு வேட்டை நடவடிக்கை அவ்விடத்தைத் தீயிட்டுக் கொளுத்த உறுதியேற்கிறது. சல்வா ஜுடூமை எதிர்த்துப் பேசியதால் பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிகையால் வரவிருக்கும் உள்நாட்டுக் கலகத்தைப் பற்றி ஹிமான்ஷு குமார் எச்சரிக்கும்போது, அவர் சொல்லைக் கேட்பாரில்லை.

“கமாண்டோக்களை அல்ல, சுகாதார ஊழியர்களை, பள்ளி ஆசிரியர்களை சி.ஆர்.பி.எப் பாதுகாப்புடன் அனுப்புங்கள்” ;  “ஆதிவாசிகளுக்கு வாய்ப்புகளைத் திறந்து காட்டுங்கள், அவர்கள் சாவுக்கு பதில் வாழ்வைத் தெரிவு செய்வர்” என அவர் இரைஞ்சுகிறார்.  ஆனால் அவர் குரலின் வீச்சு உள்துறை அமைச்சகத்தின் வாயிலில் படிந்திருக்கும் தூசியைக்கூட அசைக்கவில்லை.

வளர்ந்து வரும் நக்சல்பாரி வன்முறை தொடர்பாக, பலமாய் நாட்டைக் கவ்வியிருப்பதும், அடக்கிவாசிக்கப் படுவதுமான இறுதி அம்சம் ஒன்று உள்ளது. அதுதான் புதிய தாராளவாத –பொருளாதார- நில ஆக்கிரமிப்பும் அந்த நிலத்தின் மீதான பழங்குடியினரின் உரிமையும் என்ற அம்சம்.  இன்றைய, பெரும்பாலான நக்சல் தலைவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விசயம் ஏதோ தற்செயல் நிகழ்வு அல்ல.   பத்திரிகையாளர் என். வேணுகோபல் கூறுவதுபோல, கம்யூனிஸ்ட் கட்சியால் அப்பட்டமாகக் கைவிடப்பட்ட 1946-51 ம் ஆண்டுகளின் தெலங்கானா இயக்கத்தில் வேர்கொண்டிருப்பதுதான் இந்த நக்சல்பாரி இயக்கம்.  இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (1956), ஆந்திராவில் 60 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது.  ஆனால், நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 1973ம் ஆண்டில், பணக்கார நிலவுடைமையாளர்களுக்குத் தாராளமான சலுகைகள் அளிக்கப்பட்ட பின் வெறும் 17 லட்சம் ஏக்கர் உபரி நிலம் மட்டுமே இருப்பதாக அரசு அறிவித்தது.  இறுதியில் 4 லட்சம் ஏக்கரே வினியோகிக்கப்பட்ட்து.  நிலம், வேலை, விடுதலை என்பதே அன்றைய அறைகூவலாய் இருந்தது.  இன்றும் நிறைவேறாத அந்த வேட்கையால் உந்தப்பட்டு, 46-51 தெலங்கானா போராட்டத்தில் முன்னின்ற குடும்பங்களில் இருந்து வந்தவர்களே இன்றைய நக்சல் இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள்.

முன்னாள் பழங்குடியினர் நல ஆணையரும், செலவீனங்கள் மற்றும் பொருளியல் விவகாரத் துறையின் (Dept. of Expenditure & Economic Affairs) முன்னாள் செயலருமான ஈ.ஏ.எஸ். சர்மா இப் பிரச்சினையின் மையமான விசயத்தை வெளிப்படுத்துகிறார்.  “நான் எந்த வகையான வன்முறையையும் முற்றாக எதிப்பவன், ஜனநாயக வழிமுறையில் உறுதியான நம்பிக்கை உள்ளவன்… ஆனால், இப்பிரச்சினையில் இடது தீவிரவாதம் என்பது ஒரு இரண்டாம்பட்சமான அம்சமே.  அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பது எத்தனை பழங்குடியினருக்குத் தெரியும்?  அரசு என்றால், அவர்களைப் பொருத்தவரை போலீசு, ஒப்பந்தக்காரர்கள், நில வர்த்தகக் கொள்ளைக்காரர்கள்.. அவ்வளவுதான்.  மேலும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை, பாரம்பரியமாய் பழங்குடியினர் அனுபவிக்கும் நிலத்தின் மீதும் காடுகளின் மீதும் அவர்களுக்கு முற்றுரிமையை வழங்கியுள்ளது.  தனியார் நிறுவனங்கள் அவர்களது நிலத்தில் சுரங்கம் தோண்டுவதைத் தடை செய்திருக்கிறது.  உச்சநீதிமன்றத்தில் 1997ம் ஆண்டு நீதிபதி சமந்தா அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த அரசியல் அமைப்பு அட்டவணைப்படியான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.  அடுத்தடுத்து வரும் அரசுகள், அரசமைவுச் சட்டம் மற்றும் மேற்சொன்ன தீர்ப்புகளின் உண்மைப் பொருளை [சொல்லைத் திரிக்கலாம்] உணர்ந்து பின்பற்றுவாராயின் பழங்குடியினரின் வெறுப்புணர்ச்சி தானாகவே வடிந்துவிடும்” என்கிறார் இவர்.

திரு சர்மா கிட்டத்தட்ட சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.  பழங்குடியினரின் நிலங்களை அபகரித்து, அதில் நிரம்பி வழியும் கனிவளத்துக்காக, அந்நிலத்தைத் தனியார் நிருவனங்களுக்குத் தாரைவார்ப்பதே சட்டீஷ்கரில் சல்வா ஜுடூம் நடவடிக்கையின் உண்மையான நோக்கம், என்று மனித உரிமையாளர்கள் வெகுவாய் விவாதித்திருகின்றனர்.  கடந்த சில ஆண்டுகளிலேயே 600 பழங்குடியினர் கிராமங்கள் காலிசெய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மை இக்கருத்துக்கு வலுசேர்க்கிறது.  பழங்குடியினர் அந்த நிலத்தில் வாழவில்லை என்றால், அரசியல் நிர்ணயச் சட்ட்த்தின் வலுவற்ற இந்த ஐந்தாவது அட்டவணை பயனற்றுப்போகும்.

சல்வா ஜுடூம் கலைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், காட்டு வேட்டை நடவடிக்கை ஒருக்கால் அதன் இரண்டாவது சுற்றாக இருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது.  எது எவ்வாறாயினும், அதன் கெடு நோக்கத்திற்காகவோ, மோசமான செயல்பாட்டுக்காகவோ அல்லது திட்டமிடப்படாத சகமனிதர்களின் பெருத்த அழிவுக்காகவோ இப்படிப் பலவற்றுக்காக, தொடங்க இருக்கும் இந்தக் காட்டுவேட்டை நடவடிக்கை பற்றிப் பயப்பட வேண்டியிருக்கிறது.

இடைப்பட்ட வேளையில், நாம் அனைவரும் அரசியல் நிர்ணய சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையை சற்று ஊன்றிப் படிப்போம்.

ஆங்கில மூலம் தெகல்கா, vol 6, இதழ் 39, 3.10.2009 ,  தமிழாக்கம்: அனாமதேயன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

– தமிழாக்கம்: அனாமதேயன்

தெலுங்கானா : புதைந்துள்ள உண்மைகள்

vote-012இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது, ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் தொடர்ந்து, ஒருமித்த கருத்து உருவாகும்வரை உடனடியாகத் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கப் போவதில்லை என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அடித்த பல்டி, அதை எதிர்த்து தெலுங்கானாவில் மீண்டும் போராட்டம் – என ஆந்திர மாநிலம் தொடர் போராட்டங்களால் நிலைகுலைந்து போயுள்ளது.

+++

கடலோர மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா ஒப்பீட்டளவில் பெரியது. வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப் நகர், ரங்கா ரெட்டி, கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் தெலுங்கானா என்றழைக்கப்படுகிறது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால், தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு, தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.

காந்தியவாதியான பொட்டி சிறீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாக, அன்று சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரப் பிரதேசம், மொழிவழி மாநிலமாக 1953-இல் பிரிக்கப்பட்டது. அப்போது கர்நூல்தான் அதன் தலைநகர். பின்னர், மொழிவாரி மாநிலம் என்ற அடிப்படையில் தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட தெலுங்கானாவையும் உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசமாக 1956-இல் ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா பிராந்தியத்தைக் கொண்ட நிஜாம் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஐதராபாத், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரானது. ஒட்டுமொத்த ஆந்திராவின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள ரெட்டிகளும் சவுத்திரிகளும் தெலுங்கானா பகுதியில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டனர். நிலப்பிரபுக்களான இவர்களின் ஆதிக்கம், அரசாங்கப் பதவிகளில் இவர்கள் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டதன் காரணமாக, தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஆந்திராவுடன் இணைய மறுத்து, தனி மாநிலமாக்கக் கோரினர்.

அதன் பின்னர், 1961 தேர்தலுக்குப் பிறகு உருவாகும் அம்மாநில சட்டசபை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆந்திரப் பிரதேசத்தில் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், தெலுங்கானா பிராந்தியத்தை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைப்பது; இல்லையேல், தனிமாநிலமாக நீடிக்க அனுமதிப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. அப்பரிந்துரையையும் இதர எழுதப்படாத ஒப்பந்தங்களையும் மைய அரசு கைகழுவியது. இதனால் தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாக வெளிப்பட்டு வந்தது.

ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள்-முதலாளிகளின் ஆதிக்கம், கல்வி – வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் தெலுங்கானா நடுத்தர வர்க்கத்துக்கு உரிய பங்கு கிடைக்காமை ஆகியவற்றினால் ஏற்பட்ட குமுறல்களின் காரணமாக 1969-இல், தெலுங்கானா பகுதியில் மாணவர்கள்-இளைஞர்கள் தனித் தெலுங்கானா மாநிலம் கோரிப் போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் அப்போராட்டத்தில் உயிரிழந்தனர். கடும் அடக்குமுறைக்குப் பிறகு, அந்தப் போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.

தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கல் குவாரி, நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறை, சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் தெலுங்கானாவுக்கு வெளியேயுள்ள பிற மாவட்டங்களின் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கமும் சூறையாடலும் தெலுங்கானா பிராந்தியத்தில் தீவிரமடைந்தன. ஆடம்பர, உல்லாச, களிவெறியாட்டங்களில் இக்கும்பல் கொட்டமடித்தது. இப்புதுப் பணக்கார கும்பலின் வாரிசுகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளைப் பெருமளவில் கைப்பற்றிக் கொண்டனர். தெலுங்கானா நடுத்தர வர்க்கம் அவர்களோடு போட்டியிட இயலாமல் குமுறியது.

அதன் எதிரொலியாக, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சி 2001-இல் உருவாகியது. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் மையமான கோரிக்கை.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து, காங்கிரசில் நிலவும் கோஷ்டிச் சண்டையைச் சாதகமாக்கிக் கொண்டு, தோல்வியடைந்து கிட்டத்தட்ட முடமாகிவிட்ட தமது கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், தனித் தெலுங்கானா கோரி கடந்த நவம்பர் இறுதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், சந்திரசேகர ராவ். அதை ஆதரித்து மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். மாணவர்கள் மீதான போலீசின் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என அம்மாநிலமெங்கும் போராட்டத்தை ஆதரித்து நடுத்தர வர்க்கத்தினர் அணிதிரண்டனர். தனித் தெலுங்கானா மாநிலம் கோரி சிலர் தற்கொலை செய்து கொண்டதும், உணர்ச்சிமிகு போராட்டமாக அது மாறத் தொடங்கியது.

இதற்கு மேலும் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையைத் தட்டிக் கழித்தால், தெலுங்கானா பிராந்தியத்தில் காங்கிரசு செல்லாக்காசாகிவிடும் என்பதாலும், இதேபோல நாட்டின் இதர பகுதிகளிலும் தனி மாநிலம் கோரி போராட்டங்கள் பெருகத் தொடங்கிவிடும் என்ற அச்சத்தாலும், போராட்டத்தைச் சாந்தப்படுத்தி நீர்த்துப் போக வைக்கும் உத்தியுடனும் காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கையளவில் ஏற்பதாக அறிவித்தனர். தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதோடு, போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து, 2014-க்குள் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கித் தருமாறு மைய அரசிடம் கோரினார்.

ஆனால்,தெலுங்கானா மாநிலம் உருவானால், அது இன்றைய ஆந்திரப் பிரதேசத்துக்கு இழப்பாக இருக்கும், தலைநகரான ஐதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்றெல்லாம் வாதங்களை வைத்து, தெலுங்கானா கோரிக்கையை ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ள பெருமுதலாளிகளும், புதுப் பணக்கார நில மாஃபியா-சுரங்க மாஃபியாக்களும் எதிர்க்கின்றனர். தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள்தான். ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள பெரு நகரங்களில் சினிமாத் துறை, வீட்டுமனைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை முதலானவற்றில் கோடிகோடியாய் முதலீடு செய்து சூறையாடுவதும் இந்தக் கும்பல்கள்தான். இவர்கள்தான் இப்போது தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியிலிருந்து இயக்குகிறார்கள்.

அரசியல் சட்டப்படி, புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, அரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, கருத்தறிவதற்காக அம்மாநிலச் சட்டமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும். சட்டமன்றத்தின் கருத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் காங்கிரசு ஆட்சியாளர்களோ, இத்தீர்மானம் ஆந்திர சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமித்த கருத்தின்படி முடிவு செய்யப்படும் என்று கூறுகின்றனர். காங்கிரசின் நிதியாதாரமாக உள்ள புதுப் பணக்கார மாஃபியா கும்பலைச் சாந்தப்படுத்தவும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று காரணம் காட்டி,மீண்டும் இழுத்தடிக்கவுமே காங்கிரசு கயவாளிகள் முயற்சிக்கின்றனர். இதனாலேயே, தனித் தெலுங்கானாவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, தீர்மானம் நிறைவேறாத வகையில் ஆந்திர சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் இசைவு தெரிவித்துள்ளதன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது. வன்னியர் நாடு என்ற கோரிக்கையுடன் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று முன்பு கோரி வந்த பா.ம.க.வின் ராமதாசு, இப்போது மீண்டும் சென்னையைத் தலைநகராகக் கொண்ட வட தமிழ்நாடு என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்ட தென் தமிழ்நாடு என்றும் பிரிக்க விரும்புவதாக சாதிய அடிப்படையில் அறிவித்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கடந்த 50 ஆண்டுகளில் 12 புதிய மாநிலங்கள் உருவாகியுள்ளதைக் காட்டி, உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கக் கோருகிறார், மாயாவதி. உ.பி.-பீகாரிலிருந்து போஜ்பூர், அசாமிலிருந்து போடோலாந்து, உ.பி.-ம.பி.யிலிருந்து பண்டேல்கண்ட், மகாராஷ்டிராவிலிருந்து மரத்வாடா மற்றும் விதர்பா, ஒரிசாவிலிருந்து மகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ்தானிலிருந்து முரு பிரதேஷ், உ.பி.யிலிருந்து பூர்வாஞ்சல், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா – எனத் தேசிய இன அடிப்படையில் அல்லாமல், ஒரே இனம் – ஒரே மொழி பேசும் மாநிலத்திலேயே, பிராந்திய அடிப்படையில்-சாதிய அடிப்படையில், மொழிச் சிறுபான்மையினர் அடிப்படையில் தனி மாநிலக் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டுமானத்தில், நிர்வாகத்தைத் துறை வாரியாகப் பிரிப்பதும், அது போல மாநிலங்களையும், மாவட்டங்களைப் பிரிப்பதும் நடக்கக்கூடியதுதான். அவ்வாறு மாவட்டங்களைப் பிரிக்கக் கோரி மக்கள் போராடுவதை ஜனநாயகக் கோரிக்கையாகக் கருத முடியாது. பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூரைச் சேர்க்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டமும், செங்கல்பட்டில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்ற வேண்டும், மாற்றக் கூடாது என்று அந்தந்த பகுதிவாழ் மக்கள் நடத்திய போராட்டமும், அரசுத் திட்டங்கள்-சலுகைகளைப் பெறுவதற்கான பொருளாதாரப் போராட்டம்தானே தவிர, அது முற்போக்கான – ஜனநாயகக் கோரிக்கையுடன் நடத்தப்படும் போராட்டமல்ல.

இப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தையும் பார்க்க முடியும். பிராந்திய உணர்விலிருந்து எழும் பொருளாதாரவாதக் கோரிக்கைதான் இது. ராயலசீமா மற்றும் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம்-சூறையாடலைக் கண்டு குமுறி, அவர்கள் இடத்தை தாங்கள் பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்துதான் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் நடக்கிறது. தெலுங்கானா பிராந்தியத்தில் வீட்டுமனை, கல் குவாரிகள், கனிமச் சுரங்கங்கள், காட்டுவளம் முதலானவற்றைச் சூறையாடி ஆதிக்கம் செலுத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தெலுங்கானா பிராந்திய மக்கள் இதுவரை எந்தவொரு போராட்டத்தையும் கட்டியமைக்கவில்லை. மாறாக, தாங்கள் வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக, பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே நடுத்தர வர்க்கம் குமுறுகிறது. உயர்கல்வி,-வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகள் முதலானவற்றில் தாங்களும் அமர வேண்டும் என்ற வேட்கையே தனி மாநிலக் கோரிக்கையாக எழுந்துள்ளது.

ஆனால் மாவோயிஸ்டுகளோ, அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நாம் ஆதரிக்க வேண்டும், அது முற்போக்கான போராட்டம் என்று கருதுகின்றனர். போராட்டத்தின் கோரிக்கையைப் பற்றிப் பரிசீலிக்காமல், அப்போராட்டத்தைப் போர்க்குணமிக்கதாக மாற்றுவதன் மூலம், அதை புரட்சிகரப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். ஏற்கெனவே, காலிஸ்தான் போராட்டத்தை இந்த நோக்கத்தில்தான் ஆதரித்தனர். பின்னர், ’80-களில் தனித் தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுப்பது என்ற பெயரில் தெலுங்கானா பகுதியில் சில சாகசவாத நடவடிக்கைகளிலும் இறங்கினர். இப்போது நடந்த தனித் தெலுங்கானா போராட்டத்தையும் இந்த அடிப்படையிலேயே ஆதரித்துப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கின்றனர்.

ஓட்டுக்காக, சந்தர்ப்பவாதமாக பல கட்சிகள் தனி மாநிலக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டத்தை இந்துவெறி பா.ஜ.க.வும் ஆதரிக்கிறது. அது, ஒரே மொழி பேசும் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட மாநிலத்தை, நிர்வாக வசதிக்காகப் பிரிப்பதில் தவறில்லை என்று வாதிடுகிறது. இதன்மூலம் நிர்வாகம் எளிமையானதாகவும் சிறப்பாகவும் அமையும் என்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் வேறானது. ஒரே மொழி பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த மாநிலம் என்றால், அங்கு தமிழ்நாடு போல தேசிய இனப் போராட்டங்கள் எழும்; தேசிய ஒருமைப்பாடு கந்தலாகிப் போகும்; ஒரே இனத்தை பல மாநிலங்களாகக் கூறு போட்டால், அத்தகைய போராட்டங்கள் எழுவது நீர்த்துப்போகும். எனவே, தேசிய இன-மொழி அடையாளங்களுக்கு அப்பால், இந்துத்துவ அடிப்படையில் “தேசிய’ ஒருமைப்பாட்டை நிறுவவே அது விழைகிறது. காங்கிரசும் இதே நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

மேலும், பெரிய மாநிலம் என்றால் பிராந்திய கட்சிகள் செல்வாக்கு செலுத்தி மைய அரசை ஆட்டிப் படைக்கின்றன. எனவே, மாநில அளவில் செல்வாக்கு பெற்றுள்ள பிராந்திய கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் கூடுதல் பங்கு கேட்டு நிர்ப்பந்திப்பதைத் தடுக்க, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்பதே ராகுல் காந்தியின் பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டம். இதனால்தான் வெள்ளோட்டமாக இப்போது தெலுங்கானாவைப் பிரிப்பதாக அறிவித்து, விளைவுகளைப் பரிசீலித்து, அடுத்த கட்டமாக பிற மாநிலங்களையும் பிரிக்க மைய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்போல, மொழி-இன அடிப்படையில் அல்லாமல், நிர்வாக அடிப்படையிலான பிரிவினை கொண்டதாக, பெரிய மாநிலங்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன்தான், தற்போது மாநில மறுசீரமைப்புக் கமிசன் உருவாக்கப்படுகிறது.

மறுபுறம், ஒரே தேசிய இனத்தைக் கொண்ட பெரிய மாநிலம் என்றால், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மறுகாலனியாக்கச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களைப் போடுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. பிராந்திய நலன்களை முன்வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒப்பந்தங்களை எதிர்த்து நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிக்கின்றன. சிறிய மாநிலங்கள் என்றால், பின்தங்கிய மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை வாயடைக்கச் செய்து, இத்தகைய மறுகாலனியச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களை அதிக சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடிகிறது. இதற்கு, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஜார்கண்டும், சட்டிஸ்கரும் சான்றுகளாக உள்ளன. ஏகாதிபத்தியவாதிகள் இந்த நோக்கத்தோடுதான் நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதை ஆதரிக்கின்றனர். ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பத்தையே தேசியக் கட்சிகளும்எதிரொலிக்கின்றன. இந்த உண்மைகளைக் காண மறுத்து, தனி மாநிலக் கோரிக்கையை குருட்டுத்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அடிப்படையிலேயே தவறானதாகும்.

எனவே தற்போது தனி தெலுங்கானா கோரி நடக்கும் போராட்டம், பொருளாதாரவாதக் கோரிக்கைதானே தவிர, அது தேசிய இன உரிமைக்கான போராட்டமே அல்ல. அரசுக்கு எதிரான போராட்டம், மக்களின் நீண்டகால விருப்பம் என்பதை வைத்து அதை முற்போக்கான-ஜனநாயகக் கோரிக்கையுடன் நடக்கும் போராட்டமாகவும் கருத முடியாது. அதேசமயம், தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி சூறையாடிவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள், தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து, ஒரே ஐக்கியப்பட்ட ஆந்திரா என்ற கோரிக்கையுடன் நடத்தும் எதிர்ப்போராட்டமும் நியாயமானதல்ல. அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

வரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்!!

211

vote-012ஞாயிற்றுக் கிழமை (14.02.10) டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் புரட்டிக் கொண்டிருந்த போது அந்தச் செய்தி கண்ணில் தென்பட்டது.

செல்பேசி செக்ஸ் முறைகேடுகள் மலிந்து விட்ட நாட்டில் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக சொந்த மனைவியை நிர்வாணப் படமெடுத்து வரதட்சணைக்காக மிரட்டியிருக்கிறான் ஒரு சென்னைக் கணவன்.

26வயது சதீஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) டிசம்பர் 2008இல் திருமணம் செய்து கொண்டான். பொன்னும், பொருளும், பணமுமாய் 20 இலட்சம் வரை வரதட்சணையாக பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் வரதட்சணை வெறியடங்காத சதீஷ் வீட்டார் அந்தப் பெண்ணை மேலும் கொண்டு வருமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்காகவே அந்தப்பெண்ணுடன் தாம்பத்ய உறவு கூட வைக்காமல் இருந்திருக்கிறான் அந்தக் கணவன்.

பொறுமையிழந்த அந்தப்பெண் தனது பெற்றோரிடம் இந்தக் கொடுமைகளை சொல்லி அழுதிருக்கிறாள். அவர்களும் இது குறித்து சதீஷ் வீட்டில் நியாயம் கேட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகு கொடுமை அதிகரித்ததே தவிர குறையவில்லை. சதீஷும் அவனது சகோதரர்களும் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்திருக்கின்றனர். சதீஷின் அப்பா மருமகளிடம் எல்லை மீறி நடக்க முயற்சித்திருக்கிறார். இதை கணவனிடம் புகாராகச் சொல்லியும் அவன் அதை சட்டை செய்யவில்லை.

இறுதியாக அந்தப் பெண்ணை தனியறையில் அடைத்து சன்னல் வழியாக உணவு மட்டும் கொடுத்து, அவளது நிர்வாணப் படங்களை நண்பர்கள் மூலம் வெளியிட்டு நாசப்படுத்துவேன் என்று சதீஷ் மிரட்டியிருக்கிறான். இதற்கு மேலும் பொறுமை காப்பதில் பலனில்லை என்று அந்தப் பெண் அந்தச் சிறையிலிருந்து எப்படியோ தப்பிவிட்டு தனது வீட்டுக்குக் கூட போகாமல் நேராக போலீசிடம் போய் புகார் செய்திருக்கிறாள். போலீசும் வரதட்சணை பிரிவு, பெண்ணை அடித்து துன்புறுத்துதல் முதலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சதீஷையும் அவனது உறவினர்களையும் தேடிவருகிறார்கள்.

இதுவரை இந்தச்செய்தியை படித்துவிட்டு செல்லும் ஆண்கள் சதீஷின் வக்கிரத்தை எல்லோரையும் போல் கண்டித்துவிட்டு மறந்துவிடக் கூடும். ஆனால் தம்முள்ளும் சதீஷ் அளவுக்கு வக்கிரமாயில்லையென்றாலும் சற்று மென்மையான ஒரு சதீஷ் இருப்பான் என்பதை எத்தனை பேர் மறுக்க முடியும்?

ஊடகங்களில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை மூலம் காதலர் தினம் தனது பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தி விட்டுச் சென்று விட்டது. இந்து மதவெறியர்கள் வழக்கம் போல தாலிகளை வைத்து காதல் என்றால் ஆபாசம், மேலைநாட்டு வக்கிரமென்ற உதார்களும் நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். சாதிக்குள்ளே மணம் முடித்து இந்து மதத்தின் மேன்மையை காப்பாற்றுவது அவர்களது நோக்கம். ஆனால் அவர்களது நோக்கத்திற்குப் பங்கம் வராமல் பெற்றோர் பார்த்து முடிக்கும் சம்பிரதாய திருமணங்கள்தான் நாட்டில் அதிகம்.

காதலும் கூட சாதி மறுப்பு என்பதை விட சம தரத்திலான சாதி, வர்க்கம், அந்தஸ்து, பணம், வேலை எல்லாம் பார்த்துத்தான் நடக்கிறது என்பது வேறு விசயம். இதையே சாதிக்குள் நடத்தினால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த எழவுகளை பொருத்தம் பார்த்து எப்படியோ திருமணம் செய்து கொண்டு ஒழியட்டும். ஆனால் எனக்கு வரதட்சணை வேண்டாமென்று இத்தகைய திருமணங்களில் கூட செய்து காட்டலாமே?

தன்னை முற்போக்காளன், நல்லவன், புரட்சிக்காரனென்று அற்ப விசயங்களுக்காக சித்தரித்துக் கொள்ளும் இளைஞர்கள் கூட இந்த வரதட்சணையை வேண்டாமென்று மறுப்பதில்லை. அல்லது நாசுக்காக மொக்கையான காரணங்களைச் சொல்லி சமாளிக்கிறார்கள்.

மணம் முடிக்கும் பெண்களை ஆண்கள் ஆயுசு வரைக்கும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த வரதட்சணையை பெண்ணின் தந்தை தரவேண்டுமென்று பாரம்பரிய விளக்கத்தை முதலில் சொல்வார்கள். இதன்படி பெண்ணென்பவள் சுமை. அல்லது மாடு. அந்த மாட்டிற்கு தீனியும், தண்ணீரும் கொடுத்து தொழுவத்தில் கட்டிவைப்பதற்குத்தான் அந்த தட்சணை. பதிலுக்கு அந்த மாட்டுப்பெண் சமையல், துவையல், இல்லப் பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு, செவிலியர் வேலை, இரவில் தாசி வேலை எல்லாம் நேரத்திற்கு செய்யவேண்டும்.

இப்படி எல்லாவகையிலும் பெண்ணின் இரத்தத்தை அட்டைகள் போல உறிஞ்சிக்கொள்ளும் ஆணிணத்து புண்ணியவான்கள் என்றைக்காவது இந்த வேலைகளை செய்வதற்கு முன்வந்தது உண்டா? கிடையாது. போகட்டும். செய்யாத, செய்ய முடியாத, விரும்பாதா இந்த வேலைக்கு ஊதியம் கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு கணவனும் முழு ஆயுளில் பல இலட்சங்களை செலவிட வேண்டியிருக்கும்.  குடும்பத்து வேலையை எல்லாம் பணத்தால் மதிப்பிட முடியாது என்று நொள்ளை பேசும் வீட்டின் பெருசுகள் திருமண நேரத்தில் வாங்கும் வரதட்சிணையின் மதிப்பை வைத்தே அந்தப் பெண்ணை அளவிடுவார்கள். கூடவே இந்த மதிப்பிட முடியாத வேலை செய்வதற்கு ஒரு பெண்ணோடு வரதட்சணையாக பெரும் சொத்தையும் பிடுங்குகிறோமே என்று எள்ளளவும் குற்ற உணர்வு கிடையாது.

அடுத்து இந்த வரதட்சணையை அந்த பெண்ணின் நன்மைக்காகத்தானே வாங்குகிறோம் என்று அளப்பார்கள். விசேசங்களுக்கு குடும்பத்தின் அந்தஸ்தை நிலைநாட்டும் அலங்காரக்கடை பொம்மையாக மருமகள் அவதரிக்க உதவும் நகைகள் மற்ற நேரத்தில் பீரோவில் தூங்கும். பெரும் செலவுகள் வரும்போது கணவனுக்கு கைகொடுப்பது அந்த நகைகள்தான். பின்னர் பெண் குழந்தை ஆளாகி மணமகளாக செல்லும்போது அந்த நகைகளும் புதிய தட்சணையாக செல்ல நேரிடும். இதைத் தவிர அந்த நகைகள் அந்தப் பெண்ணுக்கு ஒரு மயிரும் பலனளிப்பதில்லை.

“பையனை செலவு செய்து படிக்க வைத்திருக்கிறோம், அதனால் கை நிறைய சம்பளம் வாங்குகிறான், அப்படி உயர்ந்த இடத்திற்கு வாக்கப்பட வேண்டுமென்றால் வரதட்சணை கொடுப்பதுதானே முறை” என்று வியாபாரக் கணக்கு பேசுவார்கள். இல்லையென்றால் ஏழை பாழைகளைக் கல்யாணம் செய்யலாம் என்றும் உபதேசிப்பார்கள். காசுக்கேற்ற தோசை மாதிரி ஏழைகளும் ஏதாவது செலவழித்துத்தானே திருமணங்கள் செய்யவேண்டியிருக்கிறது. சமூகத்தில் வரதட்சணை என்பது அழிக்க முடியாத விதி என்று ஆகிவிட்டபோது ஏழை மட்டும் அதை மீறுவது எப்படி சாத்தியம்?

ஏற்கனவே கை நிறைய சம்பளம் வாங்கும் கபோதிகள் அத்தோடு திருப்தி அடையவேண்டியதுதானே? நியாயமான உழைப்பில் கல்விச் செலவை செய்திருந்தால் இந்த அநியாயமான தட்சணையை எதிர்பார்க்கத் தோன்றாது. ஊரைக் கொள்ளையடித்தோ, லஞ்சம் வாங்கியோ, முறைகேடுகள் செய்தோ செலவழித்திருந்தால் கண்டிப்பாக தட்சணை மூலம் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்றுதான் தோன்றும். சுயநிதிக் கல்லூரிகளில் சில பல இலட்சங்கள் கொடுத்து சீட்டு வாங்கி டாக்டராகவோ, இன்ஜினியராகவோ குதிப்பவர்கள் திருமண வியாபாரம் மூலமே அதை சரிக்கட்டுகிறார்கள்.

இத்தகைய உயர் குடி ஆண் குதிரைகள் அதிகம் விலைபோகும் என்பது பெண்கள் விற்கபடும் சந்தையை வைத்தே உருவாக்கப்படுகிறது. மணமகளின் தந்தையும் ஊரைக் கொள்ளையடித்து வந்திருந்தால் தட்சணையை கணக்கு பார்க்காமல் கொடுப்பான். நேர்மையானவானாக இருந்தால் இருக்கும் சொத்துபத்துக்களை விற்றுவிட்டோ இல்லை கந்து வட்டிக்கு கடன்வாங்கியோ வரதட்சணை கொடுப்பதற்கு தயாராக இருப்பான். இதன் மூலம் அந்த தந்தை தனது எஞ்சிய வாழ்நாட்களை ஆயுள்கைதி போல கழிப்பதற்கு தயாராவார்.

இதில் 100பவுனுக்கு ஒரு பவுன் குறைந்தால் கூட போதும், பையன் வீட்டார் அந்தப் பெண்ணை ஏமாற்றுக்காரியாகவே நடத்துவார்கள். தமிழகத்தின் ஏழை மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை என்பது இந்த வரதட்சணை அநீதியின் காரணமாகத்தான் நடக்கிறது என்பது உண்மை. அந்த வகையில் வரதட்சணை வாங்கும் ஒவ்வொருவரும் தருமபுரியிலோ, உசிலம்பட்டியிலோ கொல்லப்படும் பெண் சிசுக் கொலைக்கு காரணமாகத்தான் இருக்கிறார்கள்.

சமீபத்திய வரவான ஐ.டிதுறை மற்றும் அமெரிக்க மாப்பிள்ளைகள் என்பது மேட்டுக்குடியின் வரதட்சணையை ராக்கெட் வேகத்தில் எகிற வைத்திருக்கிறது. தனது பெண் அமெரிக்காவில் சீரும் சிறப்புமாக வாழ்வாள் என்று நம்பி மொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் மகளுடன் அனுப்பி வைக்கும் தந்தைமார்கள் அதன்பிறகாவது நிம்மதியாக வாழ்கிறார்களா? இல்லை காரில் இருந்து தள்ளப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாக வரும் மகளுக்காக விமான நிலையத்தில் காத்திருக்கிறார்களா?

வாரிசுகளில் இருபாலாரும் இருந்தால் வரதட்சணை கொடுப்பதற்காக வரதட்சணை வாங்குவதாக நியாயம் பேசுவார்கள். ஏன் வரதட்சணை வாங்காதவனுக்குத்தான் எனது மகள் என்று முடிவெடுக்க வேண்டியதுதானே? அப்படி முடிவெடுத்து விட்டு திருமணம் செய்ய நினைக்கும் இளைஞர்களை சமூகம் பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்று வைத்திருக்கிறது என்பதால் எந்தத் தந்தையும் தனது மகளின் வாழ்வில் ரிஸ்க் அல்லது நல்ல முடிவு எடுப்பதில்லை.

இன்னும் விதவையாக இருந்தால் மனிதாபிமானம் அதிகம் இருக்கும் என்று எண்ணாதீர்கள். விதவையைக் கல்யாணம் செய்யும் ‘தியாக’ உள்ளங்களுக்கு பிரதிபலனாக லஞ்சம் அதிகம் கொடுக்க வேண்டும். அதுவும் குழந்தை உள்ள பெண்ணாக இருந்தால் ரேட் இன்னும் அதிகம். இரண்டாம் மணம் என்றாலும் அங்கே முதல் மணம் ஏன் தோல்வியுற்றது என்று பாடம் கற்காமால் அதே போல தட்சணை கொடுத்துத்தான் அடுத்த மணமும் நிறைவேறும்.

இறுதியாக “வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும்” என்று நல்லவர்கள் போல பேசுவார்கள். உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது. இதன்மூலம்தான் பெண் வீட்டார் தங்கள் தகுதிக்கும் மேல் சீர்வரிசை செய்வது நடக்கிறது. வரதட்சணையில் நல்லது கெட்டது என்று ஏதும் இருக்க முடியுமா என்ன?

இப்படி எல்லா வழிகளிலும், வகைகளிலும் கண்கொத்திப் பாம்பாக பெண்களை குதறக் காத்திருக்கிறது வரதட்சணை.

இந்தக் கயமைத்தனத்தை ஜீன்ஸ் பேண்டிலும், செல்பேசியிலும் நவீனத்தை தேடும் இளைஞர்கள் நேரடியாகவும், நாசுக்காகவும், மறைமுகமாகவும் செய்தே வருகிறார்கள். ரொம்ப இறுக்கிப் பிடித்துக் கேட்டால் “நான் வாங்க மாட்டேன், என் பெற்றோர் விரும்பினால் என்ன செய்வது” என்று வாகாய் நழுவுவார்கள். சாதி பார்த்து, ஜாதகம் பார்த்து, அந்தஸ்து பார்த்து எல்லா எழவும் பார்த்துக்கூட தொலையட்டும். குறைந்த பட்சம் வரதட்சணையாவது வாங்க மாட்டேன் என்று முடிவெடுப்பதற்குக்கூட நேர்மையற்ற இந்த இளைஞர்களை வைத்துத்தான் அப்துல் கலாம் 2020இல் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறாராம்.

குழந்தைகள் உழைப்பை எதிர்ப்பார்கள், சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுப்பார்கள், சுயமுன்னேற்ற நூலென்றால் விழுந்து விழுந்து படிப்பார்கள், ரோட்டோரத்துப் பிச்சைக்காரனுக்காக சில்லறைகளையும் கொடுப்பார்கள்…இப்படியெல்லாம் நல்லது செய்வதாக கற்பித்துக் கொண்டிருக்கும் இந்த இளைய சமூகம்தான் இந்த வரதட்சணைப் பேயை இன்னும் வீரியமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது. குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதன் சமூக அங்கீகாரத்தில்தான் வரதட்சணையும் சாகாவரம் பெற்று ஜம்மென்று உயிர் வாழ்கிறது.

வட இந்தியாவில் கேஸ் அடுப்பு வெடித்து கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. தென்னிந்தியாவில் படித்தவர்கள் அதிகம் என்பதால் இந்த வரதட்சணை கொடுமைகள் சதீஷ் போல நாகரீக கனவான்களின் நவீன தொழில்நுட்ப சித்திரவதையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. சதீஷைப் பொறுத்தவரை அவனது மனைவி என்பவள் வெறும் உடம்பு மட்டும்தான். அந்த உடம்பிற்கு மானமிருக்கிறது என்பதனால்தான் அவன் அவளது நிர்வாண படங்களை வெளியில் விடுவேன் என்று பயமுறுத்த முடிகிறது. உடல் மானம் மட்டுமல்ல குடும்ப மானமும் போனால் கூடப் பரவாயில்லை என்று துணிந்து அந்தப் பெண் போலீசுக்கு வரவேண்டுமென்றால் அவள் எவ்வளவு துன்பம் அடைந்திருக்க வேண்டும்?

வரதட்சணைக் கொடுமைகளை நிறுத்துவது பெண்களிடம் இருந்துதான் துவங்க வேண்டும். இப்படி பொன்னும், பொருளும் வாங்கிக் கொண்டு திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களை காறித்துப்புவதற்கு பெண்கள் முன்வரவேண்டும். வரதட்சணை மறுப்பதுதான் ஆண்மையின் தகுதி, விரைக்கும் ஆண் குறியில் அல்ல எனுமளவுக்கு அந்தப் போர் நடைபெற வேண்டும். காதலோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ வரதட்சணை மறுப்புத்தான் முதல் தகுதி என்றாக்கப்படவேண்டும். ஊழலால் சூழ வாழும் இந்த சமூக அமைப்பில் வரதட்சணைக்கெதிரான போராட்டம் துவங்கினால் அது ஏனைய பிணிகளை எதிர்த்து விரியும் போராட்டமாகக்கூட மாறும்.

எதெல்லாம் வரதட்சணை?

  1. பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு பெண் திருமணமாவது – தங்க தட்சணை!
  2. பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும் பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!
  3. வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது, அமெரிக்கா செல்வது – வேலை தட்சணை!
  4. வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!
  5. தீபாவளி, பொங்கள் இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – பண்டிகை தட்சிணை!
  6. முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத் தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை!
  7. குழந்தை பிறந்தால் அதற்கும் காது  குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை!
  8. மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை!
  9. மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை
  10. எந்த முக்கியமான விசயங்களிலும் மனைவியோடு கலந்தாலோசிக்காமல் இருப்பது – அடிமை தட்சணை!
  11. மனைவியை அடிப்பது, சித்திரவதை செய்தவது – டார்ச்சர் தட்சணை!

……… மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை!

இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் சதீஷை கண்டிக்கிறீர்கள்?

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்