ன்பார்ந்த நண்பர்களே,

இன்றோடு உங்களின் வினவு தளம் ஐந்தாண்டு பயணத்தை முடித்துக் கொண்டு ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஐந்தாண்டு அனுபவத்தை ஒரு வரியில் கூறுவதாக இருந்தால், ஆரம்பத்தில் தனிநபர் வலைப்பூவாக இருந்த வினவு பின்னர் ஒரு மக்கள் திரள் மாற்று ஊடகமாக பரிணமித்திருக்கிறது.

surat1

முதலில் புள்ளிவிவரங்கள்…..

பதிவுகள் : 2,517
மறுமொழிகள் : 77,142

பார்வையாளர்கள் : 1.04 கோடி
மின்னஞ்சல் சந்தாதாரர்கள் : 5,150
பேஸ்புக்  : 4,931 (முகநூல் சந்தாதாரர்கள் : 5,711)
பேஸ்புக் பக்கம் : 13,193
ட்விட்டர் : 4,586
கூகிள் பிளஸ் : 7,379

புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது ஆரம்ப கால நினைவுகள் வெட்கத்துடன் நகைக்கின்றன. முதல் ஆண்டில் ஆன்லைன் பார்வையாளருக்கான விட்ஜெட்டை தொழில்நுட்ப வேலை செய்து வந்த தோழர் போட்ட போது, ஒன்றிரண்டு பேர்கள் என்பதாக அது காட்டுவது நமக்கு குறையில்லையா என்ற போது அது கூட பலருக்கு இல்லையே என்றார் அந்த தோழர். பின்னர் ஒரு நாளில் பத்து, 100 என வரும் வாசகர் வருகையை எங்களுக்கிடையில் செல்பேசி குறுஞ்செய்தியில் பறிமாறியிருக்கிறோம். உண்மையைச் சொன்னால் வினவு இப்போது இருக்கும் நிலையை நாங்கள் கற்பனை கூட செய்ததில்லை. பதிவுலகில் காத்திரமான சில அரசியல் கட்டுரைகளை நேரம் கிடைக்கும் போது வெளியிடுவோம் என்பதைத் தாண்டி பெரிய நோக்கமெல்லாம் அப்போது இருந்ததில்லை.

ஆனால் விரைவிலேயே வினவின் வளர்ச்சி இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதை வாசகர்களின் ஆதரவு தீர்மானித்திருக்கிறது. அதற்கேற்ற முறையில் நாங்களும் ஒரு குழுவாக திட்டமிட்ட முறையில் வேலை செய்வதாக மாறியிருக்கிறோம்.

கூடங்குளம் போராட்டம், விஸ்வரூபம் பிரச்சினை, இளவரசன் மரணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் நமது கட்டுரைகள் வாசகர்களிடம் பெருவரவேற்பு பெற்றிருக்கின்றன.

இளவரசன் மரணத்தை ஒட்டி எமது விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் தருமபுரியில் நேரடி விசாரணைகள், விவரங்கள், புகைப்படங்களை உடனுக்குடன் அனுப்ப, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் இளவரசன் மரணம் தொடர்பான வழக்கு போடும் வேலையினைச் செய்ய, நாங்கள் இவற்றினை இணையத்தில் வெளியிடும் வேலையினை செய்தோம்.

ஒரே நேரத்தில் களத்திலும், நீதிமன்றத்திலும், இணையத்திலும் தோழர்கள் செய்த வேலையின் தாக்கம் பெருமளவிலான வாசகர்கள் ஆதரவைப் பெற்றுத் தந்தது. அன்று மட்டும் வினவு தளத்திலிருந்து தகவல் தெரிந்து கொள்ள வருகை தரும் வாசகர் பார்வை 50,000-ஐ தாண்டியது. அன்று முழுவதும் 200, 300 என்ற அளவில் பார்வையாளர்கள் ஆன்லைனில் இருந்தார்கள். அதன்படி வினவின் சிறு வெற்றி என்பது இணையத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. தமிழகமெங்கம் அன்றாடம் களப்பணி செய்து வரும் எமது தோழர்களின் உற்சாகமும், எமது அமைப்புகளின் அரசியல் மேலாண்மையும்தான் இந்த இணையப் பாதையில் வினவு தடம் பதித்தவாறு ஓடுவதற்கு அடிப்படைக் காரணங்கள்.

இடையில் செய்திகளை அதிகம் தரவேண்டுமென்று முயன்றாலும் போதிய அளவில் வெற்றிகரமாக நடக்கவில்லை. தற்போது நான்கைந்து பதிவுகள் வெளியிடுகிறோம் என்பதைத் தாண்டி அன்றாடம் எழுத வேண்டிய செய்திகள் என்பது பல நாட்கள் இயலாததாகவே இருக்கிறது. அதை வரும் நாட்களில் களைந்து கொள்கிறோம்.

கேள்வி பதில் பகுதியும், மார்க்சிய கல்வியும் கூட வாக்களித்தபடி எழுத இயலவில்லை. நேரமின்மை, ஆள் பற்றாக்குறை காரணமாக இவற்றினை தொடர முடியவில்லை. இவற்றையும் சரி செய்து கொள்ள முயல்கிறோம்.

ஒரு வரிச் செய்திகள், சினிமா ஒரு வரிச் செய்திகள் எல்லாம் இன்னமும் சோதனை முயற்சியிலேயே இருக்கின்றன.

அரசியல் சித்தாந்த ரீதியில் முக்கியத்துவமுடைய கட்டுரைகள் அதிகம் எழுத வேண்டுமென்பதுதான் எமது விருப்பம். அதுவும் அன்றாட வேலைச்சுமையில் சாத்தியமில்லாமல் போகிறது. இதையும் சரி செய்ய வேண்டும்.

இவை எல்லாமும் வெற்றிகரமாக நடக்கவில்லை என்பதற்கு முக்கியமான காரணம் ஆள் பற்றாக்குறையே. வரும் நாட்களில் எழுதும் ஆற்றலும், விருப்பமும் உள்ள நண்பர்களை கண்டுபிடித்து எழுத பயிற்சி கொடுத்து தோழர்களாக உயர்த்துவதே இந்த சிக்கலை நீக்கும். இந்த ஐந்து ஆண்டுகளில் அப்படி சில தோழர்கள் உருவாகியிருந்தாலும் வினவின் வளர்ச்சிக்கு அது போதுமானதாயில்லை.

ஆங்கிலத்தில் வினவு, வீடியோ செய்திகள் போன்றவையும் கூட கனவாகவே நீடிக்கின்றன. இதற்கும் பொருத்தமான ஆட்களை நாம் இன்னும் பெற்றிருக்கவில்லை என்பதே காரணம். எனினும் வளர்ச்சிக்கும், தேவைக்குமான இந்த முரண்பாடு எப்போதும் இருந்தே தீரும். ஆளும் வர்க்கத்திற்கு எதிராக எழுந்து போராடும் அமைப்புகள், ஊடகங்கள் அனைத்திற்கும் இத்தகைய வசதிக்குறைவு என்பது இருக்கத்தான் செய்யும். அரசியல் ரீதியில் நமது வெற்றிகளும், சாதனைகளும் ஈட்டப்படுவதற்கேற்பவே இத்தகைய ஊடக முயற்சிகளும் இயங்கும்.

ஆதலால் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய முடியும் என்பதை வரையறுத்துக் கொண்டே செயல்படுகிறோம். அதே நேரம் அந்த வரையறையை விரிப்பதற்கு புதியவர்களை கண்டறியவும் முயல்கிறோம். அத்தகைய முயற்சிதான் இன்று நீங்கள் பார்க்கும் வினவின் இடத்தை கொண்டு வந்திருக்கிறது. அதை உங்கள் ஆதரவுடன் தொடருவோம்.

வினவுக்கு நன்கொடை தாருங்கள்!

வினவின் அடிப்படையான செலவுகளுக்கு ஒரு சில தோழர்கள், நண்பர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். எனினும் அது போதுமானதில்லை என்பதால் வாசகராகிய உங்களிடமும் கோரிக்கை வைக்கிறோம். எமக்கு பேபால் வசதி இருந்த போது நிறைய நண்பர்கள் கிரமமாக அனுப்பினார்கள். தற்போது சில பிரச்சினை காரணமாக பேபால் வசதி எமக்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. இடையில் வினவின் புதிய வடிவமைப்பிற்கும் நிறைய செலவழித்துள்ளோம். எனவே நண்பர்கள் ஆன்லைன் மூலம், அல்லது டிடி, காசோலை, வெஸ்ட்ரன் யூனியன் மூலம் உங்களால் முடிந்த தொகையை அனுப்புமாறு கோருகிறோம். முக்கியமாக மாதந்தோறும் ஒரு தொகையை நீங்கள் தொடர்ந்து அனுப்பினால் பெரும் உதவியாக இருக்கும்.

விவரங்கள் கீழே :

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE : 044- 23718706.
செல்பேசி : அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876
__________________________________
வெஸ்டர்ன் யூனியர்ன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

அனைவருக்கும் ரசீது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
__________________________________

உங்கள் பார்வையில் வினவு

நண்பர்களே, இந்த ஐந்தாண்டு நிறைவில் வாசகர்களாகிய நீங்கள் வினவு குறித்து என்ன கருதுகிறீர்கள், உங்கள் விமரிசனங்கள், ஆலோசனைகள், கருத்துக்களை ஒரு கட்டுரையாக எழுதி எங்களுக்கு அனுப்பலாம். “என் பார்வையில் வினவு” என்ற வரிசையில் அவற்றினை இம்மாதம் முழுவதும் பிரசுரிக்கிறோம். இதன் மூலம் நாங்கள் மட்டுமல்ல, ஏனைய வாசகர்களும் பலரது கருத்துக்களை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும். இதை பதிவர்கள், சமூக வலைத்தளங்களில் இயங்குவோர், வாசகர்கள், தோழர்கள் யார் வேண்டுமானாலும் அனுப்பலாம். இந்த கருத்து பரிமாற்றம் 5 ஆண்டு அனுபவத்தை தொகுத்துக் கொண்டு சரி, தவறுகளை திருத்திக் கொள்வதற்கும், இன்னும் பல்வேறு முறைகளிலும் பயன்படும். ஆகவே உங்கள் கருத்துக்களை எதிர்கொள்வதற்கும், வெளியிடுவதற்கும் ஆவலாய் காத்திருக்கிறோம்.

இளவரசன் மரணத்தினால் சோர்ந்து போயிருக்கும் சமூக ஆர்வலர்களை ஜெயங்கொண்டம் விமல்ராஜ், செந்தமிழ்ச் செல்வி தம்பதியினரின் போராட்ட மணவாழ்க்கை உற்சாகப்படுத்தியிருக்கும். பாமக மட்டுமல்ல, சமூகத்தை பின்னுக்கிழுக்கும் அனைத்து பிற்போக்கு சக்திகளும் எக்காலத்திலும் வெல்ல முடியாது என்பதை இந்த காதலர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். வினவின் ஆறாவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு இதை விட வேறு என்ன வேண்டும்?

வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் எமது தோழமையான நன்றிகளும், வாழ்த்துக்களும்!

நட்புடன்,

வினவு

____________________