privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்"கவர்ன்மெண்ட் பிராமணன்" - நூல் அறிமுகம்

“கவர்ன்மெண்ட் பிராமணன்” – நூல் அறிமுகம்

-

கவர்ன்மெண்ட் பிராமணன்

ல்லாமே இயல்பாக இருப்பதாய் பாசாங்கு செய்கின்ற பேர்வழிகளின் சாதீய மானோபாவத்தை வாழ்க்கையின் இண்டு இடுக்குகளிலிருந்து இழுத்து வந்து அம்பலப்படுத்துகிறது “கவர்மெண்ட் பிராமணன்”. “இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று யாரும் தப்பிவிட முடியாதபடிக்கு ‘மேல்சாதி’ உணர்வின் சகலவிதமான திரைச்சீலைகளையும் எடுத்துப்போட்டு “இது உன்னுடையது தானா பார்! நீயே சரி பார்த்துக்கொள்” என்று வாசகனை அனுபவத்துக்குள்ளாக்குகிறது நூல். எந்தப் பகுதியை படிக்கும் போதும் மெய்மறக்கச் செய்யாமல் வாசகனையும் வாழ்க்கைப் பரப்பிற்கு இழுத்து வந்து உணர்வினை தட்டிவிடுவதே இந்நூலின் சிறப்பு.

கவர்ன்மெண்ட் பிராமணன்“அன்று ஒரு வீர சைவரின் வீட்டில் யாரோ இறந்துவிட்டார்கள்… நாங்கள் வந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அவர்களும் பாடையை தூக்க ஆரம்பிப்பார்கள். பிணத்தின் மேல் இறைக்கப்படும் சில்லறைக் காசுகள் கீழே விழும்போது எடுத்துக் கொள்வது தலித்துகள் வேலை. தலித்துகள் இல்லா விட்டால் அவர்கள் இறைக்கும் சில்லறைக் காசுகளுக்கு என்ன மரியாதை இருக்கிறது?” (நூல் பக்கம்: 14,15).

சாதித்திமிரை ஏதோ புதிய விசயம் போல பார்க்க முற்படும் வாசகர்களின் கற்பனை உலகத்திற்கு வேட்டு வைத்து நிஜ உலகத்துக்கு நெட்டித் தள்ளுகின்றன, அரவிந்த மாளகத்தியின் அனுபவங்கள். நூல் முன்வைக்கும் விசயத்திலிருந்து நழுவி விடாதபடிக்கு பாவண்ணனின் மொழியாக்க நடை நூலுக்கு சரியான பிடிமானம்.

பள்ளிக் கூடத்திலிருந்து பல்கலைக்கழகம் வரை – மாட்டுக்கு சினை போடும் இடத்திலிருந்து மந்த்ராலயம் வரை தீண்டாமையின் நுட்பங்களை நீங்கள் கண்டதுண்டா? “சினைக்கு போன எருமையும் ஓடிவந்த காளையும்” “கவர்மெண்ட் பிராமணனின் ராகவேந்திர பக்தி” ஆகிய தலைப்புகளில் அதை நீங்கள் காணலாம். ‘மேல் சாதி’ என்ற போர்வைக்குள் நடக்கும் கீழ்த்தரமான வேலைகளை சந்திக்கு இழுக்கின்றது “மஞ்சல் நீர் என்னும் ஈஸ்மென் கலர் படம்”. தமிழ்நாட்டிலும் கூட ஊர்த் திருவிழா என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட பெண்களை சடங்கு, விளையாட்டு சாக்கில் பாலியல் வக்கிரத்தில் தள்ளி ரசிக்கும் கலாச்சாரத்தின் மீது காரித்துப்பும் பகுதி இது.

“பூணூல், சிவங்கலிங்க நூலின் பெருமை” எனும் பகுதியில் ‘மேல் சாதியின்’ இரட்டை வேடத்தை எடுத்து விடுகிறார்; இவர்கள் சும்மா தோப்புக்கு போகிற சாக்கில் தண்ணீர் நிரம்பிய செம்பை கையில் ஏந்திக் கொண்டு மலைப்பக்கம் செல்வார்கள். பார்க்கிறவர்களுக்கு என்னமோ மலம் கழிக்க போகிறான் என்ற எண்ணம் தான் தோன்றும். ஆனால் இவர்கள் செல்வது சாராயம் காய்ச்சும் இடத்திற்கு….” (பக்கம் 61) குடிக்கிறது நாட்டு சரக்கு, எதுக்குடா சாதி முறுக்கு? என்று நம்மையும் கேட்கத் தூண்டும்.

“என் முன்னாள் காதலி”, “எதிர் காலத்தோடு விளையாடும் பெண்கள்” பகுதிகள் விரிவான அளவில் அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களை காதலிப்பதாய் நெருங்கும் பிற சாதிக்காரர்களின் கையாலாகாத்தனத்தையும், காதலும் ஒரு அடக்குமுறையாக தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிக்கப்படுவதையும் விளக்கும் பகுதிகள் இவை. “மார்க்சியமும் எச்சில் தட்டும்” போலி கம்யூனிஸ்டுகளின் இரண்டகத்தை, நுட்பமாகச் சாதி பார்க்கும் அவர்களின் சாமர்த்தியத்தை அம்பலப்படுத்துகிறது.

இந்த நூலின் “படிக்கத் தொடங்கும் முன்பு வாசகர்களோடு, இன்னும்பல பகுதிகள் வாழ்க்கையின் புரியாத பகுதிகளை புரிய வைக்கிறது.” என்ற முதல் பகுதி முக்கியமானது. அரவிந்த மாளகத்தி தன்னுடைய தற்போதைய அனுபவத்தை ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார், “மாளியோடு (அதாவது மாளகத்தியோடு) கூடப்படித்த நண்பர்களே இப்போது அவனிடமிருந்து விலகி நின்று என்னங்க என்று விளிக்கிறார்கள்…. அதற்குக் காரணம் அவன் பெரிய மனிதன் என்று அவர்கள் நினைப்பதுதான்.” (பக்கம். 7)

தான் தனிமைப்படுவதாக உணரும் அரவிந்த மாளகத்தி ஓரிடத்தில் தன்னைப்பற்றிய சுய விமர்சனமாக இப்படிச் சொல்கிறார், “ஒரு தலித்துக்கு இருக்கக் கூடிய எல்லா அம்சங்களும் கூட என்னிடம் உண்டு, அதே சமயத்தில் ஒரு சாதாரண மனிதனிடம் இருக்கக் கூடய எல்லா அம்சங்களும் கூட என்னிடம் உண்டு.” (பக்கம். 7) இந்தச் சாதாரண மனிதன் என்பவன் ஒரு தொழிலாளியா? விவசாயியா? அரசு ஊழியனா? அறிவு ஜீவியா? அவர் என்னவாக இருக்கிறார்? இதில் அவர் எந்த வர்க்கத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார், எந்த வர்க்கத்தின் அரசியலுக்காக தன்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறார் என்பதைப் பொறுத்தே, அவர் தனது தலித் அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கும் முறையும், முன்னோக்கும் முறையும் அமைகிறது.

ஜெகனாபாத் (தலித்) படுகொலையைப் பார்க்கும் அடிப்படை வர்க்கத்தை சேர்ந்த தலித் ஆயுதந்தாங்கி களத்தில் நிற்பதையும், முப்படைகளையும் முதுகிற்கு பின்னால் வைத்துக் கொண்டு ‘தலித்’ ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் ஆளும் வர்க்கத்து நாற்காலியிலிருந்து வெறுமனே அறிக்கை விடுவதையும் புரிந்து கொண்டாலே போதும்! இந்த வர்க்க இருப்பைச் சரிபார்த்துக் கொள்ளும் அனுபவத்திலிருந்து எந்த ஒரு எழுத்தாளனும் தப்பித்துச் செல்வதெனபது தனிமைப்படுவதிலேயே போய் முடியும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நாம் பகிர்ந்து கொள்ளவும் “வாழ்க்கை என்பதைத் திறந்த புத்தகமாக்கி” உதவி செய்கிறார் அரவிந்த மாளகத்தி.
______________________________
புதிய கலாச்சாரம்மே 1999
______________________________

கவர்ன்மெண்ட் பிராமணன் – அரவிந்த் மாளகத்தி
தமிழில் பாவண்ணன்.

விடியல் பதிப்பகம்
விலை- ரூ 70
பக்கம்-136

கிடைக்குமிடம்
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா தெரு. எல்லீஸ் சாலை. சென்னை – 600002
புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண் : 369, 370

  1. சிரிப்புநடிகன் சோ எங்கே பிராமணன் என்ற தலைப்பில் தனது துக்ளக்கில் கிறுக்கிகொண்டு இருப்பான்.பிராமணன் உழைக்காமல் ஒட்டுண்ணிகள் போல அடுத்தவர் உழைப்பில் கொழுத்து திரிவதும்,மந்திரம் மாயம்,வாஸ்த்து,என்றெல்லாம் ஏமாற்றி ஈன வயிறு வளர்ப்பதும் போதாது,பார்ப்பன அவதாரம் எடுப்பதே ஏமாற்றி உடம்பை வளர்க்கத்தான் அதை பிராமணன் சரியாக தன் அளவுக்கு செய்வதில்லை ,ஜென்டில்மேன் படத்தில் வரும் அர்ஜுன் போல பூணூல் எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை முறையாக பயன் படுத்தாமல் பிராமண சமுதாயம் இருட்டுலகில் உழல்வதை போல் பிணாத்தல் குப்பைகளாய் இருக்கும்,.கவர்மெண்டு பிராமணன் எப்படி என தெரியவில்லை.கவர்மென்டே பிராமணனாகவும்,பிராமணனே கவர்மெண்டாகவும் .நீதிமன்றமே பிராமணனாகவும்.பிராமணனே நீதிமன்றமாகவும் இருக்கும் நாட்டில் கவர்மென்டு பிராமணனை படிக்க ஆசையாக உள்ளது.புரூக்பாண்ட் மோடியின் பின் சட்டைக்கு வெளியே பூணூல்போட்ட கூட்டத்தில் கவர்மெண்டு பிராமணன்,கார்ப்பரேட் பிராமணன் எல்லோரும் தெரிகிறார்கள்.

    • // பூணூல் எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை முறையாக பயன் படுத்தாமல் //

      உங்கள் பின்னூட்டத்திலேயே இது மட்டும்தான் எனக்கு தெளிவா புரியுது..

      // கவர்மெண்டு பிராமணன் எப்படி என தெரியவில்லை.//
      // கவர்மென்டு பிராமணனை படிக்க ஆசையாக உள்ளது.//

      எனக்கும்தான்.. வினவு விமர்சனத்தைப் பார்த்தால் நூலின் எழுத்து நடை நமது பின்னூட்டங்களைப் போல் கன்னாபின்னாவென்று இல்லாமல் அம்பேத்கரின் எழுத்துக்களைப் போல் கச்சிதமாக, துல்லியமாக இருக்கும் போல் இருக்கிறது..

  2. ****ஜாதி!! ஜாதி!! இதுவே நமது லட்சியம். ஜாதியை விடக்கூடாது. நாம் விட்டுவிட்டால் மருத்துவர் அய்யா ராமதாஸ் மற்றும் அன்புமணி அவர்களும் கையில் எடுத்துக்கொளுவார்கள். அது மட்டுமல்லாது அவர்களது வாரிசுகளும் இந்த ஜாதியை கையில் எடுத்துக்கொள்வார்கள்!! ஆகையால் ஜாதி அரசியல் நமக்கே சொந்தம் (வினாவுக்கு)!!! யாரும் இதனை தனதாக்கி கொள்ள அனுமதிக்கக்கூடாது. இதனை இந்திய காப்புரிமை சட்டத்தின்படி பதிவு செய்துகொள்ள வேண்டும்!! உடனடியாக செய்ய வேண்டும்!!!இல்லாவிட்டால் மற்றவர்கள் இதனை செய்து தனதாக்கிக் கொள்ளுவார்கள். இம்! சீக்கிரம்!!! வாழ்த்துக்கள்!!!! விரையுங்கள்.***

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க