மார்க்சிஸ்டு கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்கள், அதிகாரப் போட்டி, கழுத்தறுப்புகள் ஆகியவை ஊரறிந்த விசயங்கள் என்பதால் உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து இதுவரை எழுதாமல் இருந்தோம்.
ஆனால் இப்போது பரிதாபத்துக்குரிய பலிகடாவாக உ.ரா.வரதராசனும், வெறுக்கத்தக்க வில்லனாக மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களும் சித்தரிக்கப்படுகின்றனர். பின் தொடரும் நிழலின் குரல்கள் பாகம் 2க்கான கதையை ஜெயமோகன் அசை போடத்தொடங்கிவிட்டார். மார்க்சிஸ்டு கட்சி மட்டுமல்ல, மொத்த கம்யூனிஸ்டு இயக்கமுமே இப்படித்தான், என்று பல தியாகசீலர்கள் புழுதிவாரித் தூற்றத் தொடங்கிவிட்டதால் நாம் இதில் தலையிட வேண்டியதாக இருக்கிறது. (ஜெயமோகனிடம் பொங்கும் கம்யூனிஸ்டு அபிமானம் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுவோம்)
________________________________________
உ.ரா வரதராசனின் மரணம் எழுப்பும் கேள்விகள் மார்க்சிஸ்டு கட்சித் தலைமையிடம் கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்திருக்கின்றன. ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் தொந்திரவு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதனால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காரத் விளக்கம் அளித்தார்.
அந்தக் குற்றச்சாட்டு உண்மையாயின் அது நடவடிக்கைக்கு உரியதே. அதுவும் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரிய மத்தியக் குழு உறுப்பினர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய தவறினை செய்யும்போது அவர் மீதான நடவடிக்கை சற்றுக் கடுமையாக இருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.
மாறாக, அவர் தவறே இழைக்காமலிருந்து, பதவிக்கான கோஷ்டித் தகராறில் எதிர் கோஷ்டியினர் புனைந்த அவதூறுதான் அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு என்று கூறப்படுவது உண்மையானால், இது தற்கொலையாகவே இருந்தாலும், கொலைக்கு நிகரானது. சட்ட மொழியில் கூறினால் தற்கொலைக்குத் தள்ளுதல் என்ற குற்றம்.
இவற்றில் எது உண்மை என்று பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே, வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த கடிதம் வெளிவந்து விட்டது.
இந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மையை மார்க்சிஸ்டு கட்சி மறுக்கவில்லை. கடிதத்திலிருந்து தெரியவரும் உண்மை இதுதான்.
வரதராசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக, மணவிலக்கு செய்ய அவரது மனைவி முடிவு செய்திருக்கிறார். அத்தகையதொரு சம்பவம் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கக் கூடும் என்பதனால், அதனைத் தடுப்பதற்காக வாசுகி உள்ளிட்டோர் வரதராசனின் மனைவி சரசுவதியிடம் பேரம் பேச நியமிக்கப் பட்டிருக்கின்றனர். வரதராசன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். மணவிலக்கு என்ற முடிவை அவரது மனைவி மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பேரம். உன் மீது ஒழுங்கு நடவடிக்கை வரப்போகிறது என்று மனைவி சரசுவதி தன்னிடம் முன்கூட்டியே தெரிவித்ததாகவும் வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இக்கடிதத்தையே மேற்கோள் காட்டி, இதுதான் நடந்தது என்று வரதராசனே கூறியிருக்கும்போது, கட்சிக்குள் அதிகாரப்போட்டி, என்று அவதூறு செய்கிறார்களே என்று அங்கலாய்க்கிறார் தமிழ்ச்செல்வன்.
ஆனால் நான் எந்தப் பெண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை. என்மீது குற்றம் சாட்டும் பிரமீளா என்ற அந்தப் பெண்ணைக்கூட விசாரிக்காமலேயே மாநிலக் குழு என்மீது நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் வரதராசன். அதுமட்டுமல்ல, இதைவிடக் கேவலமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மாநிலக் கமிட்டியிலும், மத்தியக் கமிட்டியிலும் கவுரவமாக அமர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் தனது கடிதத்தில் போட்டு உடைக்கிறார். இது எதையும் மத்தியக் கமிட்டி கண்டு கொள்ளவில்லை.
கட்சிக்குள் கோஷ்டித்தகராறு இல்லை என்று நிரூபிக்க முயலும் தமிழ்ச்செல்வனும் வரதராசன் கூறும் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கண்டு கொள்ளவில்லை.
இனி அடுத்து வேறு ஏதாவது கடிதங்களோ ஆவணங்களோ வெளியாகும் வரையில், இப்போதைக்கு வரதராசன் கடிதம்தான் நம்பத்தக்க ஆவணம் என்பதால் இதனையே அடிப்படையாகக் கொண்டு இப்பிரச்சினையைப் பரிசீலிப்போம்.
________________________________________________
மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்றால் கணவன் மனைவிக்கு இடையே முரண்பாடு வரக்கூடாது என்பதில்லை. வரலாம். அதனைத் தீர்த்து வைக்க முயல்பவர்கள் யார்மீது தவறு என்று பார்த்து கண்டிக்க வேண்டும். இணைந்து வாழவே முடியாது என்ற நிலை இருந்தால் மணவிலக்கு செய்ய அனுமதித்து விட வேண்டும். அதுதான் தீர்வு. தலைவர் டைவோர்ஸ் செய்தால், ஊடகங்கள் அதை அவலாக்கி மெல்லக்கூடும் என்பதும் உண்மைதான். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை ரத்து செய்து புதிய தாம்பத்தியத்தை தொடங்கும் மார்க்சிஸ்டு கட்சி ஊடகங்களின் கேலிப்பொருளாகவில்லையா? அதற்கெல்லாம் கவலைப்படாத கட்சித்தலைமை விவாகரத்து குறித்து இவ்வளவு கவலை கொண்டது என்பதைத்தான் நம்ப முடியவில்லை.
கவலைப்படுபவர்கள் பிரச்சினையைத் தீர்க்க யோக்கியமான வழியை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். உன் புருசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று மனைவியிடம் பேரம் பேச ஒரு குழு. அந்தப் பேரத்தின் அடிப்படையில் மாநில, மத்தியக் கமிட்டிகளின் ஒழுங்கு நடவடிக்கை! அதனால்தான் குற்றம் சாட்டிய பெண்ணிடம் கூட விசாரணை நடத்தாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கைதான் மார்க்சிஸ்டு தலைமையின் நோக்கம் குறித்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. பதவிப்போட்டியிலிருந்து உ.ரா.வரதராசனை அகற்றுவதற்குக் கிடைத்த ஆயுதமாக, எதிர் கோஷ்டியினர் அவரது மனைவியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
பாலியல் தொந்தரவு செய்ததாக வரதராசன் மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மையா, அரை உண்மையா, முழுப்பொய்யா, அல்லது ஜோடனையா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை காலப்போக்கில் அதுவும் தெரிய வரலாம். ஆனால், அவர் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு இத்தனை கடுமையான தண்டனையை மார்க்சிஸ்டு தலைமை எடுத்திருக்கிறது என்பதைத்தான் நம்பமுடியவில்லை.
ஒரு தோழர் மார்க்சிஸ்டு கட்சியில் உள்ளவர், அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் அக்மார்க் ராமர்களா சொல்லுங்கள் என்று கட்சி உறுப்பினர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருப்பதாக தமிழ்ச்செல்வன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதைத்தான் வரதராசனே தன் கடிதத்தில் கேட்டிருக்கிறாரே, அதை வசதியாக மறந்து விட்டார் போலும் தமிழ்ச்செல்வன்!
____________________________________________
இன்று மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் மத்தியிலும், அந்தக் கட்சியின் யோக்கியதை தெரிந்த அதன் அனுதாபிகள் மத்தியிலும் நடைபெறும் விவாதத்தின் சாரம் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.
அடுத்தவன் பெண்டாட்டியை சின்னவீடாக வைத்திருப்பவனெல்லாம் கட்சிப் பதவியில் இருக்கும்போது, பாலியல் தொந்திரவுக்கு ஒழுங்கு நடவடிக்கையா?
கட்டைப் பஞ்சாயத்து செய்வது, போலீஸ் ஸ்டேசனில் புரோக்கர் வேலை பார்ப்பது, தொழிற்சங்கத் தலைவராக இருந்து தொழிலாளிகளுக்கு துரோகம் செய்து சொத்து சேர்ப்பது போன்றவையெல்லாம் அங்கீகரிக்கப்படும் கட்சியில், எஸ்.எம்.எஸ் அனுப்புவது நடவடிக்கைக்கு உரிய குற்றமா?
குடும்பத்தில் பார்ப்பனச் சடங்குகள் அனைத்தையும் பேணுபவர்கள், வரதட்சிணை, மொய் முதலான எல்லா அசிங்கங்களையும் அங்கீகரித்து வக்காலத்தும் வாங்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல, வரதராசன் குற்றவாளியா?
சகல விதமான ஒழுக்கக் கேடுகளும் கட்சியின் அங்க இலட்சணமாகி விட்டதால், இந்த ஒழுக்கக் கேடுகளில் எது பெரியது- எது சிறியது, எது மன்னிக்க முடியாதது- எது மன்னிக்கத்தக்கது என்பதுதான் இப்போதைய விவாதப் பொருள்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றொரு பொன்மொழியை கவுண்டமணி ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்ற போதிலும், எதெல்லாம் சாதாரணம் என்ற பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காலந்தோறும் அது மாறிக்கொண்டே இருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவுடனே பதவி விலகவேண்டும் என்ற மரபு மாறி, எஃப்.ஐ.ஆர் போட்டால்தான் விலக வேண்டும் என்று ஆகி, பின்னர் கூற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பதவியில் இருக்கலாம் என்று ஆகி, அதுவே மேலும் முன்னேறி, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டு, கடைசியாக அப்படித் தண்டனை விதிக்கப்பட்டாலும், அப்பவும் நான் ராஜா என்று பதவியில் இருக்கலாம் என்று அம்மா நிரூபித்துக் காட்டினார்.
ஒழுக்கக் கேடுகள் மற்றும் குற்றங்களில் எவை சகஜமானவை, எவை சகித்துக் கொள்ளக் கூடியவை, எவை சகிக்க முடியாதவை என்று ஒவ்வொரு கட்சிக்காரனுக்கும் ஒரு மனக்கணக்கு இருக்கிறது. மார்க்சிஸ்டு தொண்டரும் இதற்கு விதிவிலக்கல்ல.
குற்றங்களுக்கான தரவரிசைப் பட்டியலை குற்றவியல் சட்டம் என்று அழைக்கலாம். தனிநபர் ஒழுக்க நெறிகளுக்கும் அரசியல் அறம் சார்ந்த விழுமியங்களுக்கும் அப்படி ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்க முடிவதில்லை. சட்டங்கள் திருத்தப்படுவதைக் காட்டிலும் நூறு மடங்கு வேகத்தில் ஒழுக்கம் மற்றும் அறம் குறித்த மதிப்பீடுகள் மாறிக்கொண்டிருக்கின்றன.
_____________________________________
வரதராசனுக்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்டு கட்சித் தலைமைக்கு எதிராகவும் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நிலவுகின்ற பொதுக் கருத்தின் உளவியலை ஒரு வரியில் இப்படித் தொகுத்துக் கூறலாம்: பாலியல் தொந்திரவு செய்த குற்றத்துக்காக இராவணன் மீது தசரதன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?
வரதராசன் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பாலியல் தொந்திரவு என்ற அந்தக் குற்றத்தின் உட்கிடை என்ன? ஒரு ஆண் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் தன் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையின் வழியாகப் பெற்ற அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை அவர் துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.
பாலியல் ஒழுக்கம் என்ற தளத்திலிருந்து அரசியல் ஒழுக்கம் என்ற தளத்துக்கு சற்று நகர்ந்து சென்று ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் புத்ததேவுக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கிய தொகுதிகளில் ஒன்று நந்திக்கிராம். அந்தத் தொகுதியின் மக்களுக்குத் தெரியாமலேயே, அவர்களுடைய ஒப்புதல் இல்லாமலேயே அவர்களது மண்ணை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசினார் புத்ததேவ். எதிர்ப்பை துப்பாக்கி முனையில் ஒடுக்கினார். குண்டர்களை ஏவினார்.
அந்த எதிர்ப்பு என்பது மம்தா நக்சலைட்டு கூட்டு சதி என்று வியாக்கியானம் செய்து மார்க்சிஸ்டு தொண்டர்களை உசுப்பேற்றி விட்டது கட்சித் தலைமை. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் இது மேற்கு வங்க மக்களின் கூட்டுச் சதி என்ற உண்மை மார்க்சிஸ்டு கட்சியினருக்கு லேசாக உரைக்கத் தொடங்கியது. இருந்த போதிலும் ஆபரேசன் கிரீன் ஹன்ட் நடவடிக்கையில் சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்கும் முதல் தளபதி புத்ததேவ்தான்.
தம்மை நம்பி வாக்களித்த மக்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைப்பதோ, சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச பொதுத்திட்டத்துக்காக எந்த சிதம்பரத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அதே சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்பதோ மார்க்சிஸ்டு கட்சியினர்க்கு அறம் கொன்ற அதிர்ச்சியை உருவாக்கியதாகத் தெரியவில்லை.
ஏனென்றால் அவர்களுடைய பார்வையில் அது political. இது personal. அது உணர்ச்சியற்றது. இது உணர்ச்சி பூர்வமானது.
அரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை.
தங்குவதற்கு ஒரு வீடும், உத்திரவாதமான சோறும், உடுத்துவதற்கு மாற்று உடையும் இல்லாமல், கால் போன இடமெல்லாம் அலைந்து, கிடைத்தைத் தின்று, வயலே பாயாய் வரப்பே தலையணையாய் படுத்து உறங்கும் ஒரு பரதேசியிடம் துறவுக்குரிய ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாம்.
நிலங்கள், சுயநிதிக் கல்லூரிகள், பைனான்சு கம்பெனிகள், ரியல் எஸ்டேட் வியாபாரம் என்று நிறுவனமாகி விட்ட காஞ்சித் துறவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்த்தார் சங்கரராமன். அந்த மூட நம்பிக்கைக்கு உரிய தண்டனை வரதராஜப் பெருமாள் சந்நிதியில் வைத்தே அவருக்கு வழங்கப்பட்டது. பருப்பும் நெய்யும் தின்று தினவெடுத்த ஆதீனங்கள், திடீர் சாமியார்களிடம் ஆன்ம விமோசனம் தேடிப் போகும் பெண்களுக்கோ படுக்கையறையிலும், கருவறையிலும் ஞானம் அருளப்படுகிறது.
சொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது. முதலாளித்துவமே கம்யூனிசம், தேர்தல் வெற்றியே புரட்சி என்ற நடைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் அறம் என்ற ஒரு பொருள் அந்தரத்திலா உயிர்வாழ முடியும்?
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றியவர், நேர்மையானவர், உழைப்பாளி, திறமைசாலி என்ற பல்வேறு காரணங்களுக்காக மார்க்சிஸ்டு தொண்டர்கள் இன்று வரதராசன் மீது அனுதாபம் கொள்ளலாம். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மனம் குமுறலாம். ஆனால் இந்த அநீதியின் ஆணிவேர் கட்சியின் அரசியலில் இருக்கிறது.
அச்சுதானந்தனுக்கும் பின்னாரயி விஜயனுக்கும் கேரளத்தில் நடந்து கொண்டிருப்பது கொள்கை மோதலா, அதிகார மோதலா? அவர்கள் மீது காரத் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும், வரதராசன்மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! மார்க்சிஸ்டு கட்சியின் யோக்கியதை புரியும்.
சி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.
************
தொடர்புடைய பதிவுகள்
- கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !
- புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !
- போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
- திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு
- லால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!
- மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து !
- தேர்தல் 2009 – சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் !
- வீழ்ந்தது ஈழம்! ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்!!
- அமர்நாத் – சோம்நாத்
- இலட்சாதிபதி கம்யூனிஸ்ட் தா.பாண்டியன்!
- CPI(M) கட்சியில் மோடி பக்தர்கள் !
- டைஃபியின் (DYFI) குத்தாட்டப் புரட்சி !
- ‘கோலி’வுட்டை வளைக்க ‘போலி’ கம்யூனிஸ்டுகள் சதி!
- அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!
- “சந்திப்பு” தோழர் செல்வபெருமாள் மரணம் !!
- முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!
- சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி
- மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!