privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்50 எல் லஞ்சத்தின் பின்னே ஐ.ஏ.எஸ்-ஆடிட்டர்-முதலாளி-ஹவாலா..ஜெய்ஹிந்த்!

50 எல் லஞ்சத்தின் பின்னே ஐ.ஏ.எஸ்-ஆடிட்டர்-முதலாளி-ஹவாலா..ஜெய்ஹிந்த்!

-

சென்னை பெருங்குடியில் “எவரான் எஜூகேஷனல் லிட்” என்ற ‘கல்வி’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர்கள் கல்வி தொடர்பாக பல குறிப்பேடுகளை வெளியிட்டு வருவதோடு, இணையம் மூலமும் கல்விப் பயிற்சி அளித்து வருகிறார்கள். இவர்களது குறிப்பேடுகள் அதாவது கோனார் நோட்ஸ்கள் பல பள்ளி, கல்லூரிகளுக்கு விற்கப்படுகின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெற்று பல்வேறு ‘நலத்திட்டங்களையும்’ செய்து வருகிறார்கள்.

இந்த கல்வி வள்ளல்களின் ஆண்டு வர்த்தகம் 500 கோடியாம். இவ்வளவு வர்த்தகம் இருந்தாலே அதுவும் கோனார் நோட்ஸ் போட்டே கொள்ளையடிக்க முடியும் என்றாலே வரி ஏய்ப்பும் இருக்கத்தானே செய்யும்? வருமான வரித்துறை அதிகாரிகள் இந்நிறுவனத்தை சோதனை செய்யும் போது சுமார் 116 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்கு அபராதம் மட்டும் 40 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசே முதலாளிகளுக்காக சில இலட்சம் கோடி வரிச் சலுகைகளை ஆண்டு தோறும் அளிக்கும் போது எந்த முதலாளி வரியோ இல்லை அபராதமோ கட்டுவான்? அந்தப்படிக்கு இந்நிறுவனத்தின் முதலாளி கிஷோர் என்பவர் வருமான வரித்துறையின் சிறப்பு கூடுதல் ஆணையர் அண்டாசு ரவீந்தர் என்பவரை அணுகி பேரம் பேசியுள்ளார். மேலும் கிஷோரின் எவரான் நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விவேக் ஹரி நாராயணன், விக்ரம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அரசு பணி ஓய்வு பெறுவதற்கு முன்னரே விருப்ப ஓய்வில் சென்றுள்ளனர். எவரான் நிறுவனத்தில் இவர்களது ஆண்டு சம்பளம் தலா ரூ. 50 இலட்சம் ஆகும். ஆக அதிகார வர்க்கத்தின் நட்பும் இந்த நிறுவனத்திற்கு இயல்பாக இருப்பதினால் பேரம் படிந்து லஞ்சத்தொகை முடிவானது.

மேலும் இந்த பேரத்தில் ஆடிட்டர் உத்தம்சந்த் போரா என்பவரும் கூட இருந்து புரோக்கர் வேலை பார்த்துள்ளார். சி.ஏ படித்து முடித்து பல்வேறு  கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஆடிட்டர்கள் பலரும் இத்தகைய வரி ஏய்ப்பு வேலைகளில் ஸ்பெஷலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குத்தான் சந்தையில் பெரும் மரியாதை.மேலும் இந்த உத்தம்சந்த் போரா இது போன்ற லஞ்சப் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் ஹவாலா தரகராகவும் ‘சேவை’ புரிகிறார்.

அதன்படி எவரான் முதலாளி பணத்தை எடுத்துக் கொண்டு அதிகாரியின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியிடம் பணத்தை தருகிறார். அங்கே அதிகாரியின் ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் ஹவாலா ஏஜெண்ட் கம் ஆடிட்டர் உத்தம்சந்த் சிங், அதிகாரியின் மனைவியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். இந்த விசயம் சி.பி.ஐக்கு எப்படியோ தெரிந்து அவர்கள் வெளியே காத்திருந்து மூவரையும் கைது செய்திருக்கிறார்கள்.

இந்த விசயம் சி.பி.ஐக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? வழக்கமாக இத்தகைய லஞ்ச பேரங்களெல்லாம் குறிப்பிட்ட அதிகாரியின் நடவடிக்கைகளால் தமக்கு பங்கு வரவில்லை என்று குமுறும் போட்டி அதிகாரிகளின் மூலம்தான் புகாராக போகும். மற்றபடி வருமானவரித்துறை அலுவலமே லஞ்சத்தாயிற்கு கோவில் கட்டி கும்பிடக்கூடிய பக்தர்கள் நிரம்பியதுதான்.

இப்போது இந்த கதையில் வரும் ஹவாலா ஏஜெண்டை கொஞ்சம் பார்ப்போம். சென்னையின் சேரிகள் மற்றும் அடித்தட்டு மக்களிடம் துண்டு துக்காணி நகைகளை வைத்து அடகுத் தொழில் செய்யும் சேட்டுக்களை விட சவுகார் பேட்டை சேட்டுகள் வேறுபட்டவர்கள். சிறு அளவில் அடகுத்தொழில் செய்யும் மார்வாடி சேட்டுகள் தமது தொகைகளையும், நகைகளையும் சவுகார்பேட்டை பெரிய சேட்டுகளிடம்தான் முதலீடு செய்வார்கள். பெரிய சேட்டுகளின் வர்த்தகம் தினமும் பல கோடி ரூபாயில் இருக்கும். சினிமாத் துறையினருக்கு கடன் கொடுக்கும் பெரிய வங்கிகள் இவர்கள்தான். இது போக அதிகாரவர்க்கம், மற்றும் முதலாளிகளின் கருப்புப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி முதலீடாக்கும் வேலைகளையும் இவர்களே செய்கிறார்கள். சவுகார் பேட்டையில் கொண்டாடப்படும் ஹோலிப்பண்டிகையின் கலர் பொடிகளின் பின்னே இந்த கருப்புதான் தொழிலாதாரமான வண்ணம். சென்னையின் ஹவாலா மையமும் இந்த பேட்டைதான்.

சேட்டு உத்தம்சிங்கின் வீட்டில் நடத்திய சோதனையில் மட்டும் 48 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. ‘ரன்னிங் கேப்பிட்டலே’ இந்த அளவு என்றால் ஒரிஜினல் கேப்பிட்டல் எவ்வளவு இருக்கும்? இதே மாதிரி சில நூறு சேட்டுகளின் கேப்பிட்டலை கூட்டினால் அது தமிழகத்தின் வரவு செலவு திட்டத்திற்கு போட்டியாக இருக்குமோ?

வழக்கமாக இந்த உத்தம்சிங் போன்ற ஹவாலா தரகர்கள் ஒரு அதிகாரி வீட்டில் இருந்து வெளியே வந்தால் அவர்கள் லஞ்சப் பணத்துடன் செல்வதாக பொருளாம். மேலும் இந்தத் தொகையை ஒரு மணிநேரத்தில் வெளிநாடுகளில் முதலீடு செய்து விடுவார்களாம். அதன்படி நமது சி.பி.ஐ ஒரு மணிநேரம் தாமதமாக போயிருந்தால் இந்தப் பணம் கிடைத்திருக்காது. மேலும் இந்த ஆடிட்டர் கம் ஹவாலா தரகர் பல்வேறு நிறுவனங்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் ஆடிட்டராக இருக்கிறார். இவரது கஸ்டமர்களாக இருக்கும் பல திரைப்புள்ளிகள் அண்ணா ஹசாரேவை ஆதரித்து நடந்த சினிமா ஸ்டார் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில பத்திரிகை செய்திகளின் படி இந்த ஆடிட்டரும், ஹவலா தரகரும் ஒன்று என்றும் வேறு வேறு நபர் என்றும் வந்துள்ளன. நம்மைப்பொறுத்த வரை இரண்டும் பிரிந்திருந்தால் என்ன சேர்ந்திருந்தால் என்ன இரண்டிற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று எழுதுகிறோம்.

பிறகு அதிகாரி ரவீந்தரின் வீட்டில் சோதனை செய்த போது ஏராளமான பணம், நகைகள் கிடைத்தன. அவரது வங்கி லாக்கரில் மட்டும் ஒன்றே முக்கால் கிலோ தங்கம், வைர நகைகள் கிடைத்தன. ரவீந்தர் வீட்டில் 52 வெளிநாட்டு மது பாட்டில்களும் இருந்தன. இதில் 22 பாட்டில்கள் காலியாம். இதற்கு தனி வழக்காம். இது போக இந்த அதிகாரி சில நாட்களுக்கு முன்னர்தான் குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று ஒரு மாதம் தங்கி வந்தாராம்.

___________________________________________________

நாளிதழ்களில் அன்றாடம் வந்து போகும் மற்றொமொரு ஊழல் செய்தி என்றாலும் அண்ணா ஹசாரே குழு மூலமாக ஊடகங்கள் பேசிவரும் ஊழல் எதிர்ப்பு மூடு காரணமாக நாம் இதில் பரிசீலிப்பதற்கு சில விசயங்கள் இருக்கின்றன. ஊழலின் ஊற்று மூலம் அரசும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்தான், அவர்களை இப்போதுள்ள சட்டப்படி தண்டிக்க முடியவில்லை, அதற்காகத்தான் வலுவான லோக்பால் வேண்டுமென்று அண்ணா ஹசாரே அபிமானிகள் கூறுகிறார்கள்.

குறிப்பிட்ட இந்த வழக்கில் கூட அதைத்தான் கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரியும், பதிவுலகின் இலக்கிய குருஜியும் கூறுகிறார்கள். குருஜியின் கருத்துப்படி இங்கே லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு துறை சார்ந்த விசாரணை, பாதி சம்பளத்துடன் கூடிய சஸ்பெண்ட், பிறகு இடமாற்றம் முதலியவைதான் இருக்கும். இது போதாது என்பதால்தான் லோக்பால் சட்டம் தேவை என்கிறார் அவர்.

பத்ரி இன்னும் கொஞ்சம் ‘ஆழமாக’ பரிசீலிக்கிறார், என்ன இருந்தாலும் ஒரு துடிப்பான முதலாளியல்லவா? அவரது கருத்துப்படி இப்போதுள்ள சட்டங்களின் படியே முதலாளிகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் தண்டிக்க முடியுமாம். ஆனால் இப்போதுள்ள சட்டங்களின்படி அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தண்டிக்க முடியாதாம். மேலும் ஊழலின் ஊற்று மூலம் அரசுதான் என்றும், அரசுடனான உறவில்தான் பலரும் லஞ்சம் கொடுக்க நேர்கிறது எனவும் கூறுகிறார்.

இந்த வழக்கில் கூட வருமானவரித்துறை அதிகாரியின் சொத்துக்களை பறிமுதல் செய்து கடுமையான தண்டனை கொடுப்பது நடப்பில் சாத்தியமில்லை என்றும், ஆனால் முதலாளி கிஷோர் இனி கட்டத்தவறிய வரியை கட்டுவதோடு, சிறைக்கும் செல்வார் என்று பத்ரி கூறுகிறார். ஹசாரே குழுவினரை எதிர்ப்பவர்கள் ஜன் லோக்பாலில் கார்ப்பரேட் நிறுவனங்களையும், என்.ஜி.ஓக்களையும், ஊடகங்களையும் ஏன் சேர்க்கவில்லை என்று பேசுவது அபத்தம் என்கிறார். அவர்களை இப்போதே தண்டிக்க முடியுமென்றும் கூறுகிறார்.

மேலும் நிறுவனங்கள் தமது நோக்கத்தை ஒட்டியே அரசிடம் லாபியிங் செய்கின்றன. இது வெளிப்படையாக இருந்தால் பிரச்சினை இல்லையாம். சிலருக்கு இலாபம், பலருக்கு நட்டம் என்று ஏற்றத்தாழ்வு இருந்தால் மட்டுமே இந்த லாபியிங்கில் ஊழல் புகுந்து விடுகிறது என்கிறார் அவர். அமெரிக்கா போல லாபியிங்கை வெளிப்படையாக சட்டப்பூர்வமாக அறிவித்துவிட்டால் என்ன பிரச்சினை என்பதும் அவரது கருத்தாக இருக்கும்.

குறிப்பிட்ட இந்த வழக்கில் பத்ரி முன்வைக்கும் கருத்துக்களிலேயே அவரது பக்கச்சார்பு தெளிவாக பல்லிளிக்கிறது. அதாவது லஞ்சம் வாங்கிய அதிகாரியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது, அவருக்கு கடுமையான தண்டனை தருவது இப்போது சாத்தியமில்லை என்று கூறும் பத்ரி, அந்த நீதியை முதலாளி கிஷோருக்கு மட்டும் அளிக்க முன்வரவில்லை. அதாவது 116 கோடி வருமானத்திற்கு வரி கட்டாமல் வெறும் அறுபது கோடிக்கு மட்டும் வரி கட்டுமாறு அவர் முனைந்ததும், அதற்கு அவர் அளித்த 50 இலட்ச ரூபாய் ஊழலுக்கு என்ன தண்டனை?

பத்ரியைப் பொறுத்த வரை முறையாக வரியை வாங்கிக் கொண்டு கிஷோர் சில நாட்கள் சிறையில் இருந்தால் மட்டுமே போதுமானது என்கிறார். இது தவறு என்கிறோம். ஏனெனில் தனது வருமானத்தை குறைத்து வரி கட்டவில்லை என்பதும், அதற்காக லஞ்சம் கொடுக்க முன்வந்தார் என்பதும் பாரிய குற்றங்கள். இது அரசுக்கு வரியாக வர வேண்டிய மக்கள்பணத்தை கொள்ளையடித்தோடு அரசு அதிகாரியை விலை பேசி அரசையே அதாவது அரசாட்சியையே கவிழ்க்க முயன்றிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் இது அரசை தகர்க்க நினைக்கும் பயங்கரவாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன்படி கிஷோரின் நிறுவனம் இனி தடை செய்யப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவருக்கு பத்தாண்டுகள் தண்டனை தருவதுதான் சரியான நீதியாக இருக்கும். அதே போல வருமானவரித்துறை அதிகாரியின் சொத்துக்களை அனைத்தும் பறிமுதல் செய்யப்ப்ட்டு, அவருக்கும் இதே காலம் தண்டனை அளிக்கப்படவேண்டும். இதை பத்ரி ஏற்றுக் கொள்வாரா?

வரி ஏய்ப்பு செய்தாலோ, இல்லை அதற்காக லஞ்சம் கொடுத்தாலோ இனி சம்பந்தப்பட்ட முதலாளிகள் தொழில் செய்ய முடியாது, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், ஆயுள் தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தால் எந்த முதலாளியும், எந்த நிறுவனமும் கனவில் கூட லஞ்சம் கொடுக்க முன்வரமாட்டார்களே? ரவீந்திரன் போன்ற ஊழல் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு தயாராக இருந்தாலும் எந்த முதலாளியும் லஞ்சம் கொடுக்க முன் வரமாட்டானே? அப்படியும் கூட ஊழலை ஒழிக்க முடியுமே?

முதலாளி கிஷோர் வரி கட்டாமல் லஞ்சம் கொடுக்க முன்வந்திருக்கிறார் என்றால் அவரை வரியையும் அபராதத்தையும் கட்ட வைத்து விட்டு சில நாட்கள் சிறையில் இருந்தால் மட்டும் போதுமானது என்பதை ஏற்கும் பத்ரி அதே போல லஞ்சம் வாங்கிய அதிகாரி ரவீந்திரா லஞ்சப்பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, துறை சார்ந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்?

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வரி ஏய்ப்பு என்பது வங்கிக் கொள்ளை, வழிப்பறி போன்ற ஒரு கொள்ளை நடவடிக்கை. அத்தகைய கொள்ளையர்களை சட்டப்படி காப்பாற்றுவதான் லஞ்சம் வாங்கும் வருமானவரித்துறை அதிகாரியின் நடவடிக்கை. ஆக முதன்மைக் குற்றம் கொள்ளையடிப்பதுதான். இதனால் அதிகாரிகளுக்கு நாம் வக்காலத்து வாங்கவில்லை. அவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றுதான் சொல்கிறோம். ஆனால் அப்படி இரு தரப்பினரையம் இப்போது உள்ள சட்டப்படியும், ஊழல் எதிர்ப்பு ஆசான் அண்ணா ஹசாரே கொண்டு வரும் ஜன்லோக்பால் சட்டப்படியும் தண்டிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

அதிபர் பத்ரியைப் பொறுத்த வரை சில முதலாளிகளின் சட்டவிரோதமான லாபியிங் வேலைகளுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை மட்டும் தண்டித்துவிட்டால் போதுமானது என்று நினைக்கிறார். இது ஒரு அசட்டுத்தனமான ஆனால் காரியவாதமான லாஜிக். அதாவது முதலாளிகள் மோசடி செய்தவற்கு வாய்ப்புகள் இருப்பதினால்தானே ஊழல் வளர்வதற்கு இடமளிக்கிறது. அதை விடுத்துவிட்டு லஞ்சம் வாங்குபவனை மட்டும் தண்டிப்பதில் என்ன பயன்? மேலும் லஞ்சம், ஊழல் என்பதை வெறுமனே ஒரு பண ரீதியான ஆதாயம் என்று மட்டும் பார்ப்பது பிழை. அது இந்த அமைப்புமுறையை, சட்ட முறையை ஏற்றுக் கொள்ளாமல் தொழில் நடத்துவேன் என்று நடப்பதோடு சம்பந்தப்பட்டது.

அதனால்தான் லாபியிங் வேலைகளை வெளிப்படையாக செய்யலாம் என்பது பத்ரியின் கருத்து. அவர் வியந்தோதும் அமெரிக்காவிலேயே இப்படி சட்டப்பூர்வமான லாபியிங் செய்து  பல தொழிலாளி அமெரிக்கர்களை தெருவுக்கு அனுப்பிய நிர்வாக நடவடிக்கைகள் ஏராளம். இங்கே பதிப்பக தொழிலையை எடுத்துக் கொள்வோம். அ.தி.மு.க, தி.மு.கவிற்கு ஆதரவாக இருக்கும் பதிப்பக உரிமையாளர்கள் மட்டும் நன்கு சம்பாதிக்கிறார்கள். இனி லாபியிங் தொழிலை சட்டப்பூர்வமாக்கினால் என்ன நடக்கும்? மேற்கு பதிப்பகத்தின் உரிமையாளர் சட்டப்படி ஒரு லாபியிங் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கிறார். அந்த லாபியிங் நிறுவனம் சட்டப்படியே அ.தி.மு.கவின் விழுப்புரம் நகர அலுவலகத்தை அல்ட்ரா மாடர்னாக கட்டிக் கொடுக்கிறது. அதனால் சட்டப்படியே மேற்கு பதிப்பகத்தின் நூல்கள் அ.தி.மு.க ஆட்சியில் வாங்க்ப்படுகின்றன. அதன்படி மேற்குபதிப்பகம் சட்டப்படியே நன்கு தொழில் செய்து வளர்கிறது. இதில் எதுவும் சத்தியமாக ஊழல் இல்லை. நம்புங்கள்!

ஆனால் பத்ரி கவலைப்படும் அளவுக்கு இங்கே லாபியிங் வேலைகள் சட்டப்படியே நடப்பதற்குத் தேவையில்லாத நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. சான்றாக வரி கட்டவில்லையா,வரிச் சலுகை, கருப்புப்பணமா, அதற்கும் வரிச் சலுகை,  கருப்புப் பணம் வெளிநாடு போகிறதா, இனி வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்தின் ரிஷி மூலத்தை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்யாது…. இப்படி இருக்கும் போது பத்ரி ஏன் கவலைப்பட வேண்டும்?

அடுத்து இந்த வழக்கில் ஜ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற படித்த அதிகாரிகள்தான் மோசடி செய்திருக்கின்றனர். இவர்களில் பலர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் ‘மேல்’ சாதியினர் என்பது சொல்லாமலே விளங்கும். சமூகரீதியாகவும் சரி, அதிகாரிகள் என்ற வகையில் சட்டப்படியும் சரி இவர்களிடம்தான் எல்லா அதிகாரமும் நிலவுகிறது. இவர்கள் யாரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்லர். அதனாலேயே இவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற நிலைமை இருக்கிறது.

இந்தியாவில் அரசியல்வாதிகளின் ஊழலை விட இத்தகைய படித்த மேட்டுக்குடி அதிகாரிகள் செய்யும் ஊழலின் மடங்கு மிக மிக அதிகம். இத்தகைய அதிகார வர்க்கத்தின் பல்லை பிடுங்க வேண்டுமென்றால் முதலில் நியமன முறைகள் ஒழிக்க்கப் படவேண்டும். அனைத்து அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும், திருப்பி அழைக்கப்படவும் உரிமை வேண்டும். மேலும் இன்று அரசில் இருக்கும் அதிகாரிகள் பலர் விருப்ப ஓய்வு பெற்று தனியார் நிறுவனங்களிடம் பல மடங்கு சம்பளத்தில் வேலை செய்கின்றனர். பொதுத்துறை சொத்தை நாசமாக்கும் பணி இவர்கள் மூலம்தான் நடக்கிறது.

ஊழலை ‘ஒழித்த’ கையோடு அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதோடு, திருப்பி அழைக்கவும் உரிமை வேண்டும் என்று அண்ணா குழு தற்போது பேச ஆரம்பித்திருக்கிறது. அதையே ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமல்படுத்துமாறு அண்ணா குழு ஏன் கேட்கவில்லை? அப்படிக் கேட்டால் ஒரு பயலும் மெழுகுவர்த்தி பிடிக்கக் கூட வரமாட்டான். அரசு அதிகாரிகள் எவரும் ஒய்வு பெறும்போது தனியார் நிறுவனங்களிடம் வேலைக்கு செல்லக்கூடாது, அரசு அதிகாரிகள் வாங்கும் தங்கம், பிற பொருட்கள், வீடு முதலான சொத்துக்கள் முதலானவை அனைத்தும் கண்காணிப்பிற்குள் கொண்டு வரவேண்டும். அதாவது அவர்களது மாத வருமானமும், செலவும் அரசிடம் காட்ட வேண்டும் என்ற நிலை வரவேண்டும்.

அரசு அதிகாரிகள் போதிய வருமான சான்றிதழ்களை அளித்தால்தான் அவர்களுக்கு சொத்துக்களையோ, தங்கத்தையோ வாங்க முடியும், அவர்கள் அமெரிக்க சுற்றுலா கூட இந்த விதிப்படிதான் நடக்க முடியும் என்ற நிலை வந்தால் இதை ரியல் எஸ்டேட், சுற்றுலா, தங்க முதலாளிகளே எதிர்ப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் அரசு அதிகார அமைப்பு மக்களின் பங்கேற்போடு மக்களுக்கு கட்டுப்பட்டதாக இருக்கும்போதுதான் இவையெல்லாம் நடக்கமுடியும். அதைத்தான் நாங்கள் புரட்சி என்கிறோம்.

அதுவரை முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல் கொள்ளை தொடரத்தான் செய்யும். அதில் முதலாளிகளின் பங்கை மறைப்பதற்கே அண்ணா ஹசாரேவின் அலட்டல்கள் பயன்படும். அந்த வகையில் பத்ரியும், குருஜியும் தங்களது ஊழலை ஒழிக்கும் உலக மகா கண்டுபிடிப்புகளை எடுத்து விடலாம். நாமும் வேறுவழியின்றி இந்த கண்டுபிடிப்புகளை படிக்க வேண்டிய துர்பாக்கியத்தில் இருக்கிறோம். வேறு வழி?

ஆனாலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த லஞ்ச வழக்கில் உள்ளது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரி, வட இந்தியாவைச் சேர்ந்த ஆடிட்டர், எவரானில் வேலை செய்யும் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று ஒரு விதமான இந்திய ஒற்றுமை இருப்பதைக் காணலாம். அந்த வகையில் இந்த தேசிய ஒற்றுமைக்கு ஒரு ராயல் சல்யூட்.

வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய், ஜெய் ஹிந்த்!

_________________________________________________

 வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: