privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்நோய்டா: விவசாயிகள் போராட்டமும், ராகுல் காந்தியின் நாடகமும்!

நோய்டா: விவசாயிகள் போராட்டமும், ராகுல் காந்தியின் நாடகமும்!

-

த்திரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி மாவட்டங்கள் கொதிநிலையில் உள்ளன. ஜெயபிரகாஷ் கௌர் என்கிற தரகு முதலாளிக்குச் சொந்தமான ஒரு கட்டுமானக் கம்பெனி, நோய்டாவில் சுமார் 2,500 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வளைத்து, ‘ஜே.பி க்ரீன் விளையாட்டு நகரம்’ எனும் பெயரில்  மேட்டுக்குடி சீமான்களுக்கான கேளிக்கை மையம் ஒன்றை அமைத்து வருகிறது. இதில், சுமார் 875 ஏக்கர் பரப்பளவில் பார்முலா ஒன் கார் ரேஸ் மைதானம் ஒன்றையும் அமைத்து வருகிறது. இதன் பணிகளை வரும் ஜூன் மாதத்துக்குள் முடித்து, அக்டோபர் மாதம் முதல் சர்வதேச போட்டியை நடத்துவதில் முனைப்பாக உள்ளது.

இதற்கிடையே, நோய்டாவையும் ஆக்ராவையும் இணைக்கும் விதமாக சுமார் 165 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறு வழி அதி விரைவுச் சாலை ஒன்றையும் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதே ஜே.பி குழுமம் அமைத்து வருகிறது. இந்த திட்டத்திற்காக 334 கிராமங்களைச் சேர்ந்த  கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான விலை குறைவாக இருந்ததால், கடந்த சில வருடங்களாகவே விவசாயிகள் உரிய விலை கேட்டு போராடிக் கொண்டிருந்தார்கள்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ஜே.பி குழுமத்திற்கு ஆதரவான தீர்ப்பை கடந்த செப்டம்பர் மாதத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்திருந்தது. தீர்ப்பளித்த நீதிபதி சிர்ப்பூர்கர், ‘பொதுநலனுக்கான இந்தச் சாலை அமைவதற்காக சில தனிநபர்கள் தியாகம் செய்வது தவிர்க்க முடியாதது’ என்று ஒரு தத்துவ முத்தையும் உதிர்த்திருக்கிறார்.

இந்நிலையில் பொறுமையாக இருந்த விவசாயிகள், கடந்த 7-ம் தேதி வேறுவழியின்றி களத்திலிறங்கினார்கள். உ.பி அரசின் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளைத் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கத்தில் சிறைபிடிக்கிறார்கள். உடனே பாய்ந்து வரும் போலீசு பட்டாளம், போராடும் விவசாயிகளைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு விவசாயி இறந்துள்ளார். ஆத்திரமுற்ற விவசாயிகள், தமது பாதுகாப்புக்காக போலீசின் மேல் எதிர்த்தாக்குதல் தொடுத்ததில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து போராட்டத்தின் குவிமைய்யமாக இருக்கும் பட்டா பர்சௌல் கிராமத்தைப் பெரும் படையுடன் சுற்றி வளைக்கும் போலீசு, நூற்றுக்கணக்கான விவசாயிகளையும் அப்பாவி கிராமத்து மக்களையும் கைது செய்து சித்திரவதை செய்துள்ளது. வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த போலீசு குண்டர்கள் பெண்களைத் தாக்கிக்கியுள்ளனர். போலீசின் இந்த வெறியாட்டத்தையடுத்து, நோய்டாவில் மையம் கொண்டிருந்த போராட்டப் புயல் அதையும் கடந்து ஆக்ரா, அலிகார் என்று உ.பியின் வடக்குப் பகுதி மாவட்டங்களெங்கும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

தற்போது போராட்டத்திலிறங்கியிருக்கும் விவசாயிகள், தங்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியுள்ள நிலங்களுக்கான நியாயமான விலையும், கையகப்படுத்தியுள்ள நிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வேலைகளில் 25 சதவீத இடஒதுக்கீடு மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு 120 சதுர மீட்டர் நிலமும், இழந்த ஒவ்வொரு ஏக்கருக்கும் ஐந்து லட்ச ரூபாய் நட்ட ஈடும் கோருகிறார்கள். உ.பி மாநில அரசோ, மக்களுக்காகத் தான் உட்கட்டமைப்பு வசதிகளை உண்டாக்கி வருவதாகவும் விவசாயிகளும் மக்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகிறது – இதையே தான் வேறு வார்த்தைகளில் அலகபாத் உயர்நீதிமன்ற நீதிபதியும் தெரிவித்திருந்தார்.

நாம் இந்த விவகாரத்தின் வெளிப்பாடுகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு முன் இதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் ‘யமுனை அதிவிரைவுச் சாலை’ என்கிற இந்தத் திட்டத்தையும், அது உண்மையிலேயே மக்களுக்குப் பயன்தரக்கூடிய திட்டம் தானா என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.  அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டத்தின் பின் இருக்கும் நியாயமும் இந்தத் திட்டத்தை ஆதரிப்பவர்களின் அயோக்கியத்தனமும் தெளிவாகப் புரியும்.

தரகு முதலாளிகளின் நவீன காமதேனு – யமுனை அதிவிரைவுச் சாலைத் திட்டம்.

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகட்டும் உள்நாட்டிலேயே பிற பகுதிகளில் இருந்து வட இந்தியாவுக்கு சுற்றுலா செல்வோராக இருக்கட்டும், இவர்கள் தவற விடாமல் தரிசிக்க வேண்டும் என்று நினைப்பது தாஜ் மகால்.  தற்போது உள்ள நெடுஞ்சாலை வழியே தில்லியிருந்து ஆக்ராவிலிருக்கும் தாஜ் மகாலுக்குச் செல்ல வேண்டுமென்றால் 210 கிலோ மீட்டர்கள் தரை வழியே பயணிக்க வேண்டும். இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் அதிவிரைவுச் சாலை அந்த தொலைவை 160 கிலோ மீட்டர்களாகச் குறைக்கிறது. இதனால் தில்லியிருந்து வெறும் 100 நிமிடங்களில் தாஜ் மகால் செல்ல முடியும்.

அதிவிரைவுச் சாலையென்பதை சாதாரண மக்கள் பயன்பாட்டுக்காக இருக்கும் சாலைகளோடு ஒப்பிட முடியாது. இதில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்த பட்ச வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். சாமானிய மக்கள் சைக்கிளிலோ, ஆட்டோவிலோ, இரு சக்கர வாகனங்களிலோ செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும். இப்போது தில்லியிலிருந்து குர்காவ்ன் செல்லும் பாதையில் கூட, சாதாரண மக்கள் செல்லும் சைக்கிளோ, விவசாயிகள் பயன்படுத்தும் மாட்டு வண்டி, டிராக்ட்டர் போன்ற வாகனங்களுக்கோ அனுமதியளிக்கப்படவில்லை.

இது ஒருபுறம் இருக்க, தில்லிப் பெருநகரம் என்பது ஏற்கனவே போதுமான அளவிற்கு பெருத்து விட்டது. ரியல் எஸ்டேட் சூதாடிகள் போதுமான அளவிற்கு தில்லியைச் சுற்றி நோய்டா, காஸியாபாத், குர்காவ்ன் என்று சாடிலைட் சொர்க்க நகரங்களை உருவாக்கிக் கறந்து தள்ளி விட்டார்கள். எனவே, தற்போது தில்லி – ஆக்ரா பாதையை யமுனை எக்ஸ்ப்ரஸ் ஹைவே எனும் பெயரில் குறிவைத்து கிளம்பியுள்ளனர்.

தாஜ் தொழில் மேம்பாட்டுக் கழகம் (Taj Industrial Developement Association) என்கிற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் கீழ் தான் யமுனை அதிவிரைவுச் சாலை, எஃப்1 ரேஸ் மைதானம் போன்ற திட்டங்களை ஜே.பி குழுமத்திற்கு ஒதுக்கியுள்ளனர். இது போக, இந்த அதிவிரைவு சாலை நெடுக அமையவிருக்கும் விளையாட்டு நகரங்கள், சாடிலைட் நகரங்கள், ஐ.டி பூங்காக்கள் என்று பல்வேறு கட்டுமானத் திட்டங்களை டி.எல்.எஃப், யுனிடெக் (ஸ்பெக்ட்ரம் புகழ்) போன்ற கம்பெனிகள் தங்கள் பங்காகப் பெற்றுள்ளனர்.

தற்போது அமையவிருக்கும் அதிவிரைவுச் சாலையை ஒட்டி, தீம்பார்க்குகள், அடுக்குமாடி அப்பார்ட்மென்ட்டுகள், விளையாட்டு நகரங்கள், கோல்ப் மைதானங்கள், ஐ.டி கம்பெனிகள் என்று சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்குமான உலகத்தை நிர்ணயிப்பது தான் இவர்களின் திட்டம். இதுவும் போக தரகுமுதலாளிகளுக்காக சிறப்பு ஏற்றுமதி மண்டலங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று நாட்டின் வளங்களை திருடிச் செல்வதற்கான ஒரு திறந்த வாசலாக இப்பிராந்தியத்தை மாற்றியமைக்கும் திட்டத்தின் ஒரு சிறிய அங்கம் தான் இந்த அதிவிரைவுச் சாலை.

அதற்குக் குறிப்பாக இந்த வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்தற்கான காரணங்களாக, இது மக்கள் அடர்த்தி குறைவான பகுதியென்றும், இங்கேயிருந்து மக்களை விரட்டியடிப்பது மிகச் சுலபமானது என்றும் காரணங்களை அவர்களே சொல்கிறார்கள். இவையெல்லாம் தான் தமது  நோக்கங்கள் என்றும், இன்னின்ன காரணங்களுக்காகத் தான் இந்த வழித்தடம் தேர்ந்தெடுக்கபப்ட்டது என்றும் இதற்கான அதிகாரப்பூர்வமான தளத்திலேயே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டும் உள்ளனர். http://yamunaexpresswayauthority.com/content/opportunities-area

ஆக, விவசாயிகளிடமிருந்து அநியாயமாக மிகக் குறைந்த விலைக்குப் பறிக்கப்பட்டிருக்கும் இந்நிலங்கள், பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் ஒரு ரியல் எஸ்டேட் தங்கச் சுரங்கமாக இருக்கப் போகிறது. சாலையின் பயன்பாடு மட்டுமல்ல, சாலை அமைப்பதற்காகவும், பிற திட்டங்களுக்காக அந்நிலத்தை ஒட்டியும் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் செயல்படுத்தப் போகும் திட்டங்களில் அம்மண்ணின் மைந்தர்களுக்கு இடமில்லை என்று சொல்வது தான் விவசாயிகளை ஆத்திரமூட்டியுள்ளது.  கொடுத்த விலையும் குறைவு, அதில் வேலையும் கிடையாது என்கிற அரசின் அயோக்கியத்தனமான பொருளாதாரக் கொள்கை தான் இன்று மேற்கு உ.பியின் விவசாயிகளும் உழைக்கும் மக்களும் போர்க்கோலம் பூண்டு களத்தில் இறங்கியிருப்பதற்கான அடிப்படை காரணம்.

இதற்கிடையே விவசாயிகளின் போராட்டம் பரந்துபட்ட மக்களிடையே ஒரு வலுவான ஆதரவுத் தளத்தை உண்டாக்கியிருப்பதைக் காணும் பிற ஓட்டுக் கட்சித் தலைவர்கள், வாயில் எச்சில் வடிய பட்டா பர்சௌலுக்குப் படையெடுத்துள்ளனர். பட்டா பர்சௌலுக்குச் சென்றுள்ள காங்கிரசு கட்சியின் அமுல் பேபியான ராகுல் காந்தி, விவசாயிகளின் துயரங்களைத் தாம் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், விவாயிகளுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரைத் தாம் இந்தப் பிரச்சினையில் இருந்து விலகப்போவதில்லை என்றும் சூளுரைத்திருக்கிறார். உச்சகட்டமாக, விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பார்த்த பின் தன்னை ஒரு இந்தியர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருப்பதாகவும் சொல்லுகிறார்.

இப்படிச் சொல்லும் ராகுலின் காங்கிரசு தான் நிலப்பறிப்பை சட்டப்பூர்வமாக்கும் வகையில் ஒரு சட்ட மசோதாவைத் தயாரிப்பதில் இப்போது மும்முரமாக இருக்கிறது. கூடியவிரைவில் அதை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றும் முனைப்பிலும் இருக்கிறது. இது போக, கோவா, மகாராஷ்ட்டிரா என்று காங்கிரசு ஆளும் பல்வேறு மாநிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டங்களுக்காகச் செய்யப்படும் நிலப்பறிப்பை எதிர்த்து போராடி வரும் மக்கள் மீது போலீசு குண்டர்களை ஏவி மிருகத்தனமாக ஒடுக்கி வருவதும் இதே காங்கிரசு தான்.

இன்றைக்கு வரை பன்னாட்டுக் கம்பெனியான போஸ்கோ, வேதாந்தா போன்ற கம்பெனிகளை தமது நிலத்தைக் கபளீகரம் செய்ய அண்டவிடாமல் தடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களின் மேல் இராணுவத்தை ஏவி நூற்றுக்கணக்கான கிராமங்களை எரித்து சாம்பலாக்கியிருப்பதும் இதே காங்கிரசு தான். மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை ஒரு பக்கத்திலிருந்து மக்களின் மேல் ஏவி ஈரத் துணி போட்டு அவர்கள் கழுத்தை அறுத்துக் கொண்டே இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்த வக்கிர புத்தியின் அயோக்கியத்தனத்தை என்ன்வென்று அழைப்பது?

பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டு மனம் நொந்து போயிருப்பதாகவும் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுவதாகவும் முதலைக் கண்ணீர் வடிக்கும் ராகுல் காந்தி, இதே காங்கிரசு ஆளும் மகாராஷ்ட்ராவின் விதர்பா பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்து செத்துப் போனதற்கு இது வரை என்ன செய்துள்ளார்? இந்த மோசடியொன்றும் இவருக்குப் புதிதல்ல. ஒருபக்கம் நிலப்பறிப்பை எதிர்த்துப் போராடும் மக்களைக் கொல்ல இராணுவத்தை மத்திய இந்தியாவிலும் ஒரிசாவிலும் குவித்து விட்டு இன்னொரு பக்கம் ஒரிசாவின் பழங்குடி மக்களை ஒன்றுமே தெரியாத அப்பாவிக் குழந்தை போல் சந்திக்கும் பச்சை அயோக்கியத்தனத்தை இவர் ஏற்கனவே செய்திருப்பவர் தான்.

ராகுல் காந்தி மட்டுமல்ல, உ.பி விவசாயிகளின் போராட்டத்தில் மஞ்சக் குளிக்க கிளம்பி வந்து பட்டா பர்சௌல் கிராமத்தை வட்டமடிக்கும் பிற ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளுக்கும் இந்த விவகாரத்தின் மூல காரணமாய் இருக்கும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளின் மேல் எந்தக் கேள்விகளும் கிடையாது. மாயாவதி ஆட்சியிலிருக்கிறார் – இவர்கள் ஆட்சியில் இல்லை என்பதைக் கடந்து இவர்களுக்குள் எந்த வித்தியாசமும் கிடையாது என்பதே உண்மை. எனவே தான் நிலப்பறிப்பு மசோதாவை இவர்கள் தீவிரமாக வலியுறுத்துகிறார்கள். நிலப்பறிப்பு நடவடிக்கைகள் சட்டபூர்வமாக நடந்து அரசியல் சட்டப்படி மக்களுக்கு பட்டை நாமம் சாற்றப் படுவது தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று இவர்கள் கோருகிறார்கள்.

ஆக, போராடும் மக்கள் இவர்களின் கள்ளத்தனத்தைப் புரிந்து கொள்வதோடு, தமது போராட்டங்களை யமுனை அதிவிரைவுச் சாலை என்பதோடு குறுக்கிக் கொள்ளாமல் அதற்குக் காரணமான பொருளாதாரக் கொள்கைகளையும் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த ஓட்டுக் கட்சித் தரகர்களையும் எதிர்த்துப் போராடி வீழ்த்துவதே இந்த மறுகாலனியாகச் சுருக்குக் கண்ணியிலிருந்து மீள்வதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

போர்க்குணமிக்க விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: