Tuesday, September 29, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

-

கடந்த 25 வருடங்களாக கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை எதிர்த்து போராடி வருகின்றார்கள். கடந்த பல மாதங்களாக  தொடர்ந்து பலவகைப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். சில நாட்களுக்கு முன்னர் போராட்டக்குழுத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரை தமிழக அரசு கைது செய்தும், அம்மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக காவல் துறையை குவிப்பது மற்றும்
அம்மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.

அப்பகுதியில் 144 தடை உத்திரவை அமல்படுத்தி அப்பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்தையும் தடை செய்து விட்டது. குழந்தைகளுக்கு பால் இல்லை என்றாலும் அம்மக்கள்
அரசுக்கு பணிய மறுத்து வீரஞ்செறிந்த போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.  அரசின் இந்த செயலை கண்டித்தும், கூடங்குளம் அணு உலையை உடனே மூட வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில்  22.03.12 முதல் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடங்குளம்-முழக்கங்கள்
முழக்கங்கள்

சென்னை:

சென்னையல் உயர் நீதிமன்றம் அருகில் 22.3.2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலை சரியாக 11 மணிக்கு திடீரென ஆங்காங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் செஞ்சட்டையுடன்  சீறிப்பாய்ந்த படி உயர் நீதிமன்றத்தின் அருகில் உள்ள குறளகத்தின் முன்னர் முள்ளிவாய்க்காலாக கூடங்குளத்தை மாற்ற எத்தணிக்கும் அரசிற்கு எதிராக முழங்கினார்கள்.  குறளகம் செங்கொடிகளால் சூழப்பட்டிருக்க ஓடிவந்த காவல் துறையோ என்னசெய்வதென்று தெரியாமல் முழிந்துக்கொண்டிருக்கும் போதே ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

சுமார் இருபது நிமிட முழக்கங்களுக்கு பின்னர்  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த ம.க.இ.க, மாவட்டச்செயலாளர்  தோழர்.வே.வெங்கடேசன் ”மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல அணு உலை என்பதையும் , கடந்த பத்து ஆண்டுகளில் ஆட்சியமைத்த கருணாவும் ஜெயாவும் ஒரு மின் உற்பத்தி நிலையங்களைக்கூட திறக்காமல் பன்னாட்டு முதலாளிகளுக்கு இலவசமாகவும் சலுகை விலையிலும் மின்சாரத்தை தாரை வார்க்கும் அயோக்கியத்தனத்தையும் விளக்கிப்பேசினார்.”

பின்னர் கண்டன உரை ஆற்றிய பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலர் தோழர் ஜெயராமன் ” சங்கரன் கோவில் தேர்தலுக்காக கூடங்குளம் மக்களின் கழுத்தை நம்ப வைத்து அறுத்த பாசிச ஜெயாவை முறியடிக்க வேண்டிய அவசியத்தையும்,  அம்மக்கள் தற்போது பால், தண்ணீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் அரசால் தடை செய்யப்பட்ட போதும் போராட்டத்தை தொடர்வதையும், அம்மக்களின் போராட்டத்தை , அந்த போராட்டத்தீயை வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமை என்றும் விளக்கினார். இதில் பெண்கள், மாணவர்கள் – மாணவிகள், இளைஞர்கள் தொழிலாளர்கள் என  150க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

தருமபுரி:

தருமபுரியில் 22.3.2012 அன்று பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், இராஜகோபால் பூங்கா பின்புறம், பூங்கா முன்புறம் ஆகிய 4 இடங்களில் விவசாய விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கோபிநாத் (வட்டச் செயலர், பென்னாகரம் வட்டம்) தலைமை தாங்கினார். போலீஸ் அனுமதியை மீறி இந்த நான்கு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் மக்கள் ஆதரவுடன் நடைபெற்றது. ஒரு சமயத்தில் நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் நூற்றுக்கணக்கில் மக்களிடையே பிரச்சாரம் சென்று சேர்ந்தது. திரளான தோழர்கள் கலந்து  கொண்டனர்.

திருச்சி:

திருச்சியில் பேருந்து நிலையம் காதிகிராஃப்ட் அருகில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். பாசிச ஜெயாவின் அடக்குமுறை இடிந்த கரையில் இறக்கிவிடப்பட்டதை கண்டித்து உடனே நடந்த ஆர்ப்பாட்டம் திருச்சி மக்களிடையே பிரச்சாரத்தை வீச்சாக கொண்டு சென்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் சேகர் கண்டன உரையாற்றினார். ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்க சிறப்பு தலைவர் தோழர். தர்மராஜ் எழுச்சியுரை ஆற்றினார். இறுதியாக பெண்கள் விடுதலை முன்னணி தோழர் நிர்மலா நன்றியுறை ஆற்றினார்.

விழுப்புரம்:

கூடங்குளத்தில் தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து பு.மா.இ.மு வும், வி.வி.மு வும் சேர்ந்து விழுப்புரத்தில் 22 .03 .12  அன்று மாலை 4 .00 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும்  மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தை மறுத்து அனுமதி தரமுடியாது என விழுப்புரம் DSP கைப்பட மறுப்பு எழுதி தந்தார். அதையும் மீறி அன்றைய ஆர்ப்பாட்டம் நடந்தது. 250 சுவரொட்டிகள் விழுப்புரம் முழுக்க ஒட்டி வலுவான பிரச்சாரம்  குறுகிய  நாட்களில் எடுத்து செல்லப்பட்டது. அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி சேனல்களும் செய்தி சேகரித்தனர். மக்கள் தொலைக்கட்சியில் செய்தியும் வந்துவிட்டது. 50 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் போலீஸ் குவிப்பை மறுத்து வெற்றிகரமாக நடந்தது! காவல் துறை கெஞ்சாத குறையாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டனர்.
வி.வி.மு தோழர் மனோகரன் தலைமையில், பு.மா.இ.மு விழுப்புரம் செயலாளர் தோழர்.செல்வகுமார் விளக்கி பேசினார். வி.வி.மு மாவட்ட அமைப்பாளர் தோழர்.அம்பேத்கர் முழக்கங்கள் எழுப்ப திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை:

மதுரையில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் விரிவான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைவருக்கும் மின்சாரம் வேண்டும், ஆபத்தான அணு உலை வேண்டாம் என்றும், கூடங்குளத்தில் கைது செய்யப்பட்ட மக்களை விடுவிக்குமாறும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தோழர்களும் மக்களும் கலந்து கொண்டனர்.

ஓசூர்:

ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின் உயிருக்கும், நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அனு உலையை இழுத்துமூடு! கூடங்குளம் மற்றும் இடிந்தக் கரை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பெரும் போலிசு படையை திரும்பப் பெறு! மக்கள் போராளிகளின்மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை நீக்கு! கைது செய்யப்பட்ட முன்னணியாளர்கள் மற்றும் பொதுமக்களை உடனே விடுவி! என்ற முழக்கங்களின் அடிப்படையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே 22.03.2012 மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சின்னசாமி தலைமைத் தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றி பேசினார். சிறப்புரையாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் அணுஉலையை கொண்டுவருவதற்கான அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தின் அரசியலை அம்பலப்படுத்திப்பேசினார். இறுதியாக, நாட்டின் இறையான்மைக்கும், மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய மக்களை விடுவி! கூடங்குளம் பிரச்சினையை தமிழக மக்களின் பிரச்சினையாக பாவித்துப் போராடுவோம். என்று முழங்கி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர். ஏறக்குறைய 1.30 மணிநேரம் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பொது மக்கள் திரளாக திரண்டு கவனித்துச் சென்றனர்.

கடலூர்:

கூடங்களம் போராட்ட முன்னணியாளர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் கடலூரில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்தியது. திரளான மக்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

கூடங்குளம் அணுஉலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்வது என்ற தமிழக அரசின் முடிவைக் கண்டித்தும், போராடும் மக்கள் மீதான பொய் வழக்குகள், கைதுகளைக் கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 21.3.2012 அன்று தஞ்சை இரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் ம.க.இ.க தஞ்சை கிளைச்செயலர் இராவணன் தலைமையில் நடைபெற்றது. ம.க.இ.க மாநில இணைப் பொதுச் செயலாளர் தோழர் காளியப்பன் கண்டன உரையாற்றினார்.

“ஜெயலலிதா கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கும் முடிவைத்தான் எடுப்பார் என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. தனக்கு ஆதாயம் தரும் வகையில் எப்படி காய் நகர்த்துவது என்பதில்தான் இவ்வளவு நாள் காலம் கடத்தினார். போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல் போக்குகாட்டிக் கொண்டே அவர்கள் மீது 156 வழக்குகளைப் பதிவு செய்தபோதே கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவார் என்பதும் உறுதியாயிற்று. அடித்தட்டு மக்களின் நலனை ஜெயலலிதா பாதுகாப்பார் என நம்புவது எவ்வளவு பெரிய அசட்டுத்தனம் என்பதை உதயக்குமார் போன்ற அறிஞர்களுக்கும் புரியவைத்துவிட்டார்.” என்று தோழர் பேசினார்.

மேலும், “5000க்கும் மேற்பட்ட போலீசு துணை ராணுவப்படைகளை குவித்துள்ளதோடு வான்வழிக்கண்காணிப்பு கடலோரக்காவல்படை கண்காணிப்பு என கூடங்குளம் சுற்றுவட்டாரமே யுத்தகளம்போல் மாற்றி மக்களை அச்சுறுத்துகிறார்கள். அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை வீடு வீடாகச்சென்று அச்சுறுத்தும் வேலையை போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இப்பகுதியில் 144 தடை உத்தரவு போட்டு மக்கள் நடமாட்டமே முடங்கியுள்ளது. வழக்குரைஞர்களைக்கூட அப்பகுதியில் அனுமதிக்க மறுக்கிறது காவல்துறை. இடிந்தகரை பகுதிக்கு குடிநீர் மின்சாரம் நிறுத்தப்பட்டு மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவியுள்ளது ஜெயலலிதா அரசு.”

“மக்கள் விரோத ஜனநாயக விரோத இத்தகைய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். பொய்வழக்குகளை திரும்பப் பெறுவதுடன் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்றார்  தோழர் காளியப்பன்.

இவ்வார்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி பட்டுக்கோட்டை வட்டாரச் செயலாளர் தோழர் மாரிமுத்து, பேராசிரியர் அரங்க சுப்பையா ஆகியோர் கண்டண உரையாற்றினார்.

மேலும் பல ஊர்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. வினவுக்கு கடுமையான கண்டனங்கள்…… போராட்டம் சென்று கொண்டிருக்கும் வேகத்திற்க்கு ஈடு கொடுக்கும் வகையில் ஊடகம் இருக்கவேண்டும்…. அதை விடுட்த்து 22 ல் நடந்த போராட்ட செய்தி புகைபடம் இன்று வெளிவருகிறது…. 22 தேதி அன்று அனைத்து செய்தி சேனல்களும் ஜெனிவா தீர்மானத்தை தான் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டனர்….அடக்குமுறைகாலத்தில் நடந்த போராட்டங்கள் உடனுக்குடன் கொடுங்கள்…போராடும் மக்களுக்கு ஊக்கமாக இருக்கும்

  2. என்னப்பா உதயகுமார் ஜகா வாங்கிட்டாப்ல போல ! திரும்பவும் அம்மாகிட்ட பேச்சுவார்த்தையா?

  3. மக்களால் செய்ய முடியாதது என்று ஒன்று இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். மக்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். தனித்தனி வீடுகளாக மக்கள் போராடுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் மக்கள் தனித்தனியாக போராட்டம் நடத்துவதை தவிர்த்து, போராடும் மக்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடி போராடினால் தான் மக்களின் பலம் என்னவென்று புரியும்

  4. ஏண்டாப்பா ஏன் இப்படி கூச்சல் போட்றேல்?நன்னா ட்வெண்டி போர் அவர்ஸ் பவர் சப்ளை தர போறா அம்மு நன்னா என்ஜாய் பண்ணுறத விட்டுட்டு எதுக்குடா அம்பி போராட்டம் ஆர்பாட்டம் எல்லாம்?நன்னா ஆட்சி பண்றா அம்மு கம்ப்ளீட் அட்மினிஸ்ட்ரேஷன் கம்ப்ளீட் கண்ட்ரோல் பாத்தேளா?ஏன் பேத்தி இன்க்லீசுல போஎம் எழுதுறா பாத்தேளா?ஏண்டிம்மா அந்த போஎஎத்த எடுத்து காடு இவாளுக்கு

  5. ஏண்டா அம்பி கூடங்குளம் வந்தா போதும் போதும்னு சொல்றாப்ல பவர் கிடைக்குமோல்யோ?ஏண்டா அம்பி இத புரிஞ்சிக்காம இப்படி பண்றேள்?

  6. From Facebook:

    ஒரு மணி நேரத்துக்கு 800 கிலோவாட் மின்சாரத்தை உபயோகபடுத்தி இரவு பகல் ஆட்டமாக IPL கிரிக்கெட் தொடங்குகிறது ..மொத்தம் 76 போட்டிகள்..குறைந்த பட்சம் ஒரு போட்டி 4 மணி நேரம் நடக்கும். சென்னையில் மட்டும் 10 போட்டிகள் நடக்கிறது..பார்த்து கூத்தடிக்க நுழைவு கட்டணம் 500 முதல் 50000 ரூபாய்க்கு மேல் வரை … நாடு கடும் மின்சக்தி தட்டுபாட்டில் இருக்கும் போது கூட எரிசக்தி சேமிப்பு பற்றிய அக்கறை இல்லாத குடிமக்களுக்கு எவன் அழிந்தாலும் கவலை இல்லை …கரண்ட் மட்டும் கூடங்குளத்தில் இருந்துதான் வேண்டும் …

    குட். குட். இப்படி ஏதாவது கிளம்பினாத்தான் ஐ.பி.எல்லையும் இழுத்து மூடலாம்..குறைந்த பட்சம் தமிழகத்திலாவது!

  7. கூடங்குளம் ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாம்! பாவம் இவர்கள். மின்சாரம் இருந்தால்தானே தடை செய்ய! அதுதான் மின் உற்பத்திசெய்யும் அணு உலையை மூட சிறு கூட்டம் ஆர்ப்பாட்டம் செய்கிறதே. மின் உற்பத்தி செய்யக்கூடதாம் ஆனால் மின்சாரம் வேண்டுமாம். என்ன நியாயம் இது!!!!! இப்போது உதயகுமாரும் பாதிரி கூட்டமும் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டது!!! ” மக்கள் கலை இலக்கிய கழகம்” என்ற பெயரில் இஸ்லாமிய ஆதரவு பயங்கரவாதிகள் ஒளிந்துகொண்டு மக்களை பயமுறுத்துகிறார்கள். மக்கள் இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை.

  8. IPL WILL START FROM TOMORROW .THERE WILL BE AROUND 18 MATCHES IN CHENNAI.THERE IS A CASE IN HIGH COURT REGARDING POWER SUPPLY TO IPL.CAN YOU TAKE THIS MATTER SERIOUSLY.

Leave a Reply to bhuvaneshwari பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க