privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

-

கடந்த 25 வருடங்களாக கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை எதிர்த்து போராடி வருகின்றார்கள். கடந்த பல மாதங்களாக  தொடர்ந்து பலவகைப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். சில நாட்களுக்கு முன்னர் போராட்டக்குழுத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரை தமிழக அரசு கைது செய்தும், அம்மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக காவல் துறையை குவிப்பது மற்றும்
அம்மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.

அப்பகுதியில் 144 தடை உத்திரவை அமல்படுத்தி அப்பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்தையும் தடை செய்து விட்டது. குழந்தைகளுக்கு பால் இல்லை என்றாலும் அம்மக்கள்
அரசுக்கு பணிய மறுத்து வீரஞ்செறிந்த போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.  அரசின் இந்த செயலை கண்டித்தும், கூடங்குளம் அணு உலையை உடனே மூட வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில்  22.03.12 முதல் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடங்குளம்-முழக்கங்கள்
முழக்கங்கள்

சென்னை:

சென்னையல் உயர் நீதிமன்றம் அருகில் 22.3.2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலை சரியாக 11 மணிக்கு திடீரென ஆங்காங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் செஞ்சட்டையுடன்  சீறிப்பாய்ந்த படி உயர் நீதிமன்றத்தின் அருகில் உள்ள குறளகத்தின் முன்னர் முள்ளிவாய்க்காலாக கூடங்குளத்தை மாற்ற எத்தணிக்கும் அரசிற்கு எதிராக முழங்கினார்கள்.  குறளகம் செங்கொடிகளால் சூழப்பட்டிருக்க ஓடிவந்த காவல் துறையோ என்னசெய்வதென்று தெரியாமல் முழிந்துக்கொண்டிருக்கும் போதே ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

சுமார் இருபது நிமிட முழக்கங்களுக்கு பின்னர்  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த ம.க.இ.க, மாவட்டச்செயலாளர்  தோழர்.வே.வெங்கடேசன் ”மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல அணு உலை என்பதையும் , கடந்த பத்து ஆண்டுகளில் ஆட்சியமைத்த கருணாவும் ஜெயாவும் ஒரு மின் உற்பத்தி நிலையங்களைக்கூட திறக்காமல் பன்னாட்டு முதலாளிகளுக்கு இலவசமாகவும் சலுகை விலையிலும் மின்சாரத்தை தாரை வார்க்கும் அயோக்கியத்தனத்தையும் விளக்கிப்பேசினார்.”

பின்னர் கண்டன உரை ஆற்றிய பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலர் தோழர் ஜெயராமன் ” சங்கரன் கோவில் தேர்தலுக்காக கூடங்குளம் மக்களின் கழுத்தை நம்ப வைத்து அறுத்த பாசிச ஜெயாவை முறியடிக்க வேண்டிய அவசியத்தையும்,  அம்மக்கள் தற்போது பால், தண்ணீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் அரசால் தடை செய்யப்பட்ட போதும் போராட்டத்தை தொடர்வதையும், அம்மக்களின் போராட்டத்தை , அந்த போராட்டத்தீயை வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமை என்றும் விளக்கினார். இதில் பெண்கள், மாணவர்கள் – மாணவிகள், இளைஞர்கள் தொழிலாளர்கள் என  150க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

தருமபுரி:

தருமபுரியில் 22.3.2012 அன்று பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், இராஜகோபால் பூங்கா பின்புறம், பூங்கா முன்புறம் ஆகிய 4 இடங்களில் விவசாய விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கோபிநாத் (வட்டச் செயலர், பென்னாகரம் வட்டம்) தலைமை தாங்கினார். போலீஸ் அனுமதியை மீறி இந்த நான்கு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் மக்கள் ஆதரவுடன் நடைபெற்றது. ஒரு சமயத்தில் நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் நூற்றுக்கணக்கில் மக்களிடையே பிரச்சாரம் சென்று சேர்ந்தது. திரளான தோழர்கள் கலந்து  கொண்டனர்.

திருச்சி:

திருச்சியில் பேருந்து நிலையம் காதிகிராஃப்ட் அருகில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். பாசிச ஜெயாவின் அடக்குமுறை இடிந்த கரையில் இறக்கிவிடப்பட்டதை கண்டித்து உடனே நடந்த ஆர்ப்பாட்டம் திருச்சி மக்களிடையே பிரச்சாரத்தை வீச்சாக கொண்டு சென்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் சேகர் கண்டன உரையாற்றினார். ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்க சிறப்பு தலைவர் தோழர். தர்மராஜ் எழுச்சியுரை ஆற்றினார். இறுதியாக பெண்கள் விடுதலை முன்னணி தோழர் நிர்மலா நன்றியுறை ஆற்றினார்.

விழுப்புரம்:

கூடங்குளத்தில் தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து பு.மா.இ.மு வும், வி.வி.மு வும் சேர்ந்து விழுப்புரத்தில் 22 .03 .12  அன்று மாலை 4 .00 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும்  மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தை மறுத்து அனுமதி தரமுடியாது என விழுப்புரம் DSP கைப்பட மறுப்பு எழுதி தந்தார். அதையும் மீறி அன்றைய ஆர்ப்பாட்டம் நடந்தது. 250 சுவரொட்டிகள் விழுப்புரம் முழுக்க ஒட்டி வலுவான பிரச்சாரம்  குறுகிய  நாட்களில் எடுத்து செல்லப்பட்டது. அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி சேனல்களும் செய்தி சேகரித்தனர். மக்கள் தொலைக்கட்சியில் செய்தியும் வந்துவிட்டது. 50 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் போலீஸ் குவிப்பை மறுத்து வெற்றிகரமாக நடந்தது! காவல் துறை கெஞ்சாத குறையாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டனர்.
வி.வி.மு தோழர் மனோகரன் தலைமையில், பு.மா.இ.மு விழுப்புரம் செயலாளர் தோழர்.செல்வகுமார் விளக்கி பேசினார். வி.வி.மு மாவட்ட அமைப்பாளர் தோழர்.அம்பேத்கர் முழக்கங்கள் எழுப்ப திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை:

மதுரையில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் விரிவான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைவருக்கும் மின்சாரம் வேண்டும், ஆபத்தான அணு உலை வேண்டாம் என்றும், கூடங்குளத்தில் கைது செய்யப்பட்ட மக்களை விடுவிக்குமாறும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தோழர்களும் மக்களும் கலந்து கொண்டனர்.

ஓசூர்:

ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின் உயிருக்கும், நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அனு உலையை இழுத்துமூடு! கூடங்குளம் மற்றும் இடிந்தக் கரை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பெரும் போலிசு படையை திரும்பப் பெறு! மக்கள் போராளிகளின்மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை நீக்கு! கைது செய்யப்பட்ட முன்னணியாளர்கள் மற்றும் பொதுமக்களை உடனே விடுவி! என்ற முழக்கங்களின் அடிப்படையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே 22.03.2012 மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சின்னசாமி தலைமைத் தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றி பேசினார். சிறப்புரையாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் அணுஉலையை கொண்டுவருவதற்கான அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தின் அரசியலை அம்பலப்படுத்திப்பேசினார். இறுதியாக, நாட்டின் இறையான்மைக்கும், மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய மக்களை விடுவி! கூடங்குளம் பிரச்சினையை தமிழக மக்களின் பிரச்சினையாக பாவித்துப் போராடுவோம். என்று முழங்கி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர். ஏறக்குறைய 1.30 மணிநேரம் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பொது மக்கள் திரளாக திரண்டு கவனித்துச் சென்றனர்.

கடலூர்:

கூடங்களம் போராட்ட முன்னணியாளர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் கடலூரில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்தியது. திரளான மக்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

கூடங்குளம் அணுஉலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்வது என்ற தமிழக அரசின் முடிவைக் கண்டித்தும், போராடும் மக்கள் மீதான பொய் வழக்குகள், கைதுகளைக் கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 21.3.2012 அன்று தஞ்சை இரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் ம.க.இ.க தஞ்சை கிளைச்செயலர் இராவணன் தலைமையில் நடைபெற்றது. ம.க.இ.க மாநில இணைப் பொதுச் செயலாளர் தோழர் காளியப்பன் கண்டன உரையாற்றினார்.

“ஜெயலலிதா கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கும் முடிவைத்தான் எடுப்பார் என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. தனக்கு ஆதாயம் தரும் வகையில் எப்படி காய் நகர்த்துவது என்பதில்தான் இவ்வளவு நாள் காலம் கடத்தினார். போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல் போக்குகாட்டிக் கொண்டே அவர்கள் மீது 156 வழக்குகளைப் பதிவு செய்தபோதே கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவார் என்பதும் உறுதியாயிற்று. அடித்தட்டு மக்களின் நலனை ஜெயலலிதா பாதுகாப்பார் என நம்புவது எவ்வளவு பெரிய அசட்டுத்தனம் என்பதை உதயக்குமார் போன்ற அறிஞர்களுக்கும் புரியவைத்துவிட்டார்.” என்று தோழர் பேசினார்.

மேலும், “5000க்கும் மேற்பட்ட போலீசு துணை ராணுவப்படைகளை குவித்துள்ளதோடு வான்வழிக்கண்காணிப்பு கடலோரக்காவல்படை கண்காணிப்பு என கூடங்குளம் சுற்றுவட்டாரமே யுத்தகளம்போல் மாற்றி மக்களை அச்சுறுத்துகிறார்கள். அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை வீடு வீடாகச்சென்று அச்சுறுத்தும் வேலையை போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இப்பகுதியில் 144 தடை உத்தரவு போட்டு மக்கள் நடமாட்டமே முடங்கியுள்ளது. வழக்குரைஞர்களைக்கூட அப்பகுதியில் அனுமதிக்க மறுக்கிறது காவல்துறை. இடிந்தகரை பகுதிக்கு குடிநீர் மின்சாரம் நிறுத்தப்பட்டு மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவியுள்ளது ஜெயலலிதா அரசு.”

“மக்கள் விரோத ஜனநாயக விரோத இத்தகைய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். பொய்வழக்குகளை திரும்பப் பெறுவதுடன் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்றார்  தோழர் காளியப்பன்.

இவ்வார்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி பட்டுக்கோட்டை வட்டாரச் செயலாளர் தோழர் மாரிமுத்து, பேராசிரியர் அரங்க சுப்பையா ஆகியோர் கண்டண உரையாற்றினார்.

மேலும் பல ஊர்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: