privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்உயர்பதவிகளில் முஸ்லிம்கள் - பார்ப்பனியத்தின் கருணையா?

உயர்பதவிகளில் முஸ்லிம்கள் – பார்ப்பனியத்தின் கருணையா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 19

”இந்தக் காலத்தில் கூட, நம் நாட்டின் மிக உயர்ந்த ஜனாதிபதி பதவியை ஒரு முசுலீம் அலங்கரிக்க முடிந்தது; மத்திய அமைச்சரவைகளிலும், உள்நாட்டு, வெளிநாட்டு இலாகாக்களிலும் முசுலீம்கள் பெரும் பதவிகளை அடைய முடிந்தது. அவையெல்லாம் நமது தேசிய பரம்பரையின்  வலிமையினால்தான் சாத்தியமாயிற்று. பக்கத்தில் உள்ள மதவழி அரசான பாகிஸ்தானுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடுகள் மிகத் தெளிவாகப் புலனாகின்றன. இவற்றை விளக்க வேண்டிய அவசியமே இல்லை.”

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வால்கரின் – ‘ஞானகங்கை‘ 2 –ஆம் பாகம், பக்கம் 135.

பாகிஸ்தான் மட்டுமல்ல ஏதாவது ஒரு முசுலீம் நாட்டில் முசுலீம் அல்லாதோர் இத்தகைய உயர் பதவிகளுக்கு வர முடியுமா? இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் மட்டும்தான் மாற்று மதத்தவர் வர முடியும்; இதுதான் இந்து மதத்தின் மேன்மைக்கும், பிற மதங்களின் கீழ்மைக்கும் சான்று என ஆர்.எஸ்.எஸ். கும்பல் வாதிடுகிறது. ஆயினும் உண்மை என்ன?

அநேக இசுலாமிய நாடுகளில் முசுலீம் மக்கள் தொகை விகிதம் 95 அல்லது 100 சதமாக இருக்கும்போது பிற மதத்தினர் உயர்பதவிகளுக்கு  வருவதற்கான வாய்ப்போர், அடிப்படையோ இல்லை. இருப்பினும் சிரியா, லெபனான், துருக்கி, எகிப்து, முன்னாள் சோசியத் யூனியனின் இசுலாமிய நாடுகளிலும் பிற மதத்தினர் உயர் பதவிகளில் இருக்கின்றனர். இசுலாத்தின் சர்வதேசியம் பேசும் சதாம் உசேனின் ஈராக்கில் கூட தாரிக் அசிஸ் என்ற கிறித்தவர் அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார்.

அதேசமயம் வளைகுடா மற்றும் பிற இசுலாமியக் குடியரசு நாடுகளில் இந்நிலைமை இல்லை. அதனால் என்ன, அந்த நாடுகள் மதச் சார்புடன் இருக்கும்போது, நாம் மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்கிறோம். மதச்சார்பை இழிவு என்று கருதுகிறோம். ஆயினும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் மதச்சார்பைத்தான் பெருமையென்றும், மதச்சார்பின்னையை இழிவு எனவும் கருதுகிறது. அதனால்தான் இசுலாமிய நாடுகளின் மதச்சார்பைக் காட்டி இங்கேயும் அப்படியே ஒரு இந்துராட்டிரத்தைக் கொண்டு வர இந்த வாதத்தை வைக்கிறார்கள். இந்து மதவெறியர்கள் எழுவதற்கு முன்பிருந்த இந்நாட்டின் மதச்சார்பின்மை என்பது ஒரு கேலிப் பொருளாகவும், பார்ப்பனியப் பண்பாடே சகல மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இருந்து வருகிறது.

துருக்கியில் முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், அந்நாடு மதச்சார்பின்மையைக் கறாராகக் கடைபிடித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு துருக்கி பாராளுமன்றத்தில் இசுலாமிய மதவாதம் பேசிய உறுப்பினர் ஒருவரின் பதவி ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. த.மா.காவைச் சேர்ந்த ஜெயந்தி நடராசன் அங்கு சென்றிருந்தபோது இதை அறிந்து அதிர்ச்சியுற்றதாகக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். இங்கே பால்தாக்கரே, தாராசிங் வகையறாக்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பும், சமூக மதிப்பும் தரப்படுகிறது. இந்திய மதச்சார்பின்மையை துருக்கியுடன் ஒப்பிடும் போது படுகேவலமாகத்தான் இருக்கின்றது.

இருந்தபோதும் நம் நாட்டின் உயர் பதவிகளில் முசுலீம்கள் சிலர் இருப்பதற்குக் காரணம் ”இயற்கையாகவே” இந்துக்களிடம் உள்ள பெருந்தன்மை என்கிறார்கள். ஜாகீர் உசேன் குடியரசுத் தலைவராகவும், முகமது கரீம் சாக்ளா நீதிபதியாகவும், பட்டோடி, அசாருதீன் போன்றோர் கிரிக்கெட் அணித் தலைவராகவும் இருந்திருக்கிறார்கள். இதில் பெருந்தன்மை என்ன இருக்கிறது? ஒரு முசுலீமை ஜனாதிபதி ஆக்குவது என்பது ஒரு தாழ்த்தப்பட்டவரை ஜனாதிபதி ஆக்குவதைப்போல ஒரு பித்தலாட்ட வேலைதான். இப்பிரிவு மக்களிடம் ‘நம்மாள் ஜனாதிபதி’ என்ற பெருமிதத்தை உருவாக்கிவிட்டு, வழக்கமான ஒடுக்குமுறையைத் தொடருவார்கள். ரன்பீர்சேனாவின் படுகொலையைக் கண்டித்து அறிக்கை விடும் குடியரசுத் தலைவர் நாராயணன் அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? முன்பு வெங்கட்ராமன் விட்ட அறிக்கையின் இடம், காலம் மாறியதைத் தவிர விளைவுகள் எதுவும் மாறவில்லையே?

மேலும் ஒரு நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்களின் நலனுக்குச்சேவை செய்யவே ‘அரசு’ உள்ளிட்ட ஏனைய சட்ட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. எனில் இந்நிறுவனங்களின் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ பதவிகளுக்கு ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் வர வேண்டும் என்பதில்லை. அடக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவர்கள் கூட வரலாம். அப்படி வருவதையே ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. எனவே அரசு என்ற நிறுவனம் இந்துத்தரகு முதலாளிகளுக்கும், இந்து அதிகார வர்க்க முதராளிகளுக்கும், இந்து நிலப்பிரபுக்களுக்கும் அடிபணிந்திருக்கும் போது, தலித் நாராயணனோ, முசுலீம் ஜாகீர் உசேனோ கோபுரத்தின் பொம்மையாக இருப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. உண்மையில் இவர்களும் அதை அறிந்தேதான் இருக்கிறார்கள். இருவரது வர்க்க நலனும் இணைந்தே இருக்கின்றன.

இத்தகைய மோடி மஸ்தான் மோசடியை உலகமெங்கும் காணலம். சிட்னி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்கும் பெருமை ‘கதே ப்ரீமென்’ என்ற ஆஸ்திரேலிய பழங்குடி வீராங்கனைக்கு வழங்கப்பட்டது. இவரைவிடப் பிரபலமான வெள்ளையின வீரர்கள் இருந்தும் ஆஸ்திரேலிய அரசு இதைச் செய்யக் காரணம் ‘நிறவெறியை எதிர்க்கிறோம்’ என்று பம்மாத்துக் காட்டத்தான். உண்மையில் வெள்ளையர்களிடம் இழந்த தங்கள் மண்ணை மீட்க இன்று வரை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் போராடுவதும் அரசு அதை அடக்குவதும்தான் அங்கே நடைமுறையாக இருக்கிறது.

கோஃபி அன்னான் என்ற கருப்பர் செயலாளராக வந்ததினாலேயே, ஐ.நா.சபையின் ஏகாதிபத்திய அடிமைத்தனம் மாறி விட்டதா? முத்தையா முரளீதரனை இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்த்ததினாலேயே, இலங்கையில் தமிழர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் அளிக்கப்படுகிறது என ஏற்க முடியுமா? பங்காரு லட்சுமணன் என்ற தாழ்த்தப்பட்டவர்  தலைவராக வந்தததினால், பாரதீய ஜனதாவின் பார்ப்பனிய ரத்தம் மாறிவிடுமா? கருப்புக் கிழவிகளைக் கண்ட மாத்திரத்தில்  கட்டிப் பிடிக்கும் எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்துக்குக் குறையானவையல்ல மேற்கண்டவை!

நம் நாட்டின் மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் முசுலீம்களாக இருக்கின்றனர். ஆனால், இந்த தேசிய விகிதம் பாராளுமன்ற – சட்டமன்றங்களில், வேலை வாய்ப்பில், ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் பதவிகளில், கல்வியில், போலீசு – இராணுவத்தில் கிடையாது. நாட்டின் 50 பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் கூட முசுலீமாக இல்லை. மேலும் போலீசு – இராணுவ – உளவுப் பிரிவுகளின் உயர்மட்டப் பதவிகளுக்கு முசுலீம்கள் வர முடியாது என்பது எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்படுகிறது. இவைதான் யதார்த்தம் தெரிவிக்கும் உண்மை.

எனவே கிரிக்கெட் காப்டன், ஜனாதிபதி, மந்திரி பதவி எல்லாம் உலக நாடுகளிடையே மதச்சார்பின்மை எனும் பொய்யை நிரூபிக்கும் தந்திரமாகும். அதனால்தான் இந்தியாவில் வளைகுடா நாடுகளுக்கு தூதர் அனுப்புவது முதல், பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்துவது வரை எல்லாக் கட்சி அரசாங்கங்களும் சல்மான் குர்ஷித், நஜ்மா ஹெப்துல்லா, சிக்கந்தர் பகத், ஓமர் அப்துல்லா போன்ற முசுலீம்களைப் பயன்படுத்தி வருகின்றன.

இதெல்லாம் போகட்டும். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில், ஒரு தோட்டி – வெட்டியானின் வேலையைச் செய்ய, கேவலம் ஒரே ஒரு ஐயர், முதலியார், செட்டியார், நாயுடு கூடத் தயாராக இல்லையே, என்ன அநீதி? ஏர்க்கலப்பையுடன் வயலில் உழும் ஒரு மார்வாடி, சேட்டு, ஐயங்காரை திரைப்படத்தில் கூடக் காண முடியவில்லையே? எப்பேர்ப்பட்ட வஞ்சனை! இன்னும் புரியும்படி கேட்போம். பார்ப்பன – பனியா, ‘மேல்’ சாதியினர் தவிர சூத்திர – பஞ்சம சாதிகளைச் சேர்ந்த எவரும் தரகு முதலாளிகளாக இல்லையே, ஏன்? நாடெங்கும் பரவிக் கிடக்கும் பார்ப்பன -வேளாள – ‘மேல்’சாதி மடங்களில், ஒரு சூத்திரனுக்கோ, பஞ்சமனுக்கோ கேவலம் ‘சந்நியாசமா’ வது வாங்கித்தர முடியுமா? முசுலீம்களுக்கு சில உயர் பதவி பிச்சையளித்து தமது பெருந்தன்மை பற்றிப் புல்லரிக்கும் இந்து மத வெறியர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும்.

ஆகையால் முசுலீம்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோருக்கும், இவர்கள் அளிக்கும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ உயர்பதவிகளை அளிக்காமலே இருக்கலாம். அப்போதாவது அந்தச் சமூக மக்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் மாயை சுலபமாகக் கலைந்து போகும்.

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்