privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 1/11/2012

ஒரு வரிச் செய்திகள் – 1/11/2012

-

செய்தி: “தமிழகத்தில் காவலர்கள் பற்றாக்குறையைப் போக்க, “தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை’ எனும் துணைப்படை உருவாக்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் பணியமர்த்தப்படும் இவர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படும். “என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

நீதி: இனி மெயின் படை செய்து வந்த வழிப்பறி, மாமூல், லாக்கப் படுகொலைகளை துணைப்படையும் செய்யும்.

_______

செய்தி: “என் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்; எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார். காங். தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள காங். கட்சியினர் தயாரா?” என பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி கூறினார்.

நீதி: வாய்தா ராணியையே விசாரித்து ஒன்றும் பிடுங்க முடியவில்லை என்பது கட்காரிக்குத் தெரியும். அதனால் வதேராவுக்கு சவால் விடுவது போல தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார். சவாலுக்கு சவால், திருட்டுக்குத் திருட்டு!

_______

செய்தி: மது குடிப்பது வீட்டுக்குக் கேடு, நாட்டுக்குக் கேடு என்று தெரிந்தாலும், தில்லியில் மது குடிப்பதன் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது அண்மையில் நடத்தப்பட்ட ஒரு சர்வே முடிவு. 5000 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட அந்த சர்வேயில், 18 வயதை அடையும் முன்பே மதுவை ருசிபார்த்துள்ளதாக 81 சதவீதம் மாணவர்களும், 60 சதவீதம் மாணவியரும் தெரிவித்துள்ளனர்.

நீதி: அமெரிக்கப் போதையில் இந்தியாவின் இறையாண்மை தள்ளாடும் போது சிறார்கள் மதுவின் போதையில் தாலாட்டு பாடுவதுதான் வல்லரசுக்கு அழகு!

_______

செய்தி: மத்திய அமைச்சரவையை மாற்றி அமைத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர்களைப் பதவி விலகச் செய்து, கட்சிப் பணிக்கு அனுப்பி, புதியவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த டில்லி ஃபார்முலாவை ஆந்திர மாநிலத்திலும் அமல்படுத்திட‌ அம்மாநில ஜூனியர் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன‌ர்.

நீதி: வேட்டிக் கிழிப்பையும், கோஷ்டி மோதலையும் தேசிய சாதனைகளாகக் கொண்டுள்ள காங்கிரசுக் கட்சியில் முதியோர், இளையோர் வேறுபாடு எங்ஙனம்? புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. காங்கிரசுக்காரன் கோவணமே கட்டவில்லை என்றாலும் வேட்டியைத்தான் கிழிப்பான்.

______

செய்தி: காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் ஊழலில் திளைத்திருப்பதால், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 3ஆவது அணி மாற்று சக்தியாக உருவெடுக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

நீதி: முலாயம், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா போன்ற ஊழல் பெருச்சாளிகள் புது தில்லி அரசியலில் புகுந்து விளையாட சிபிஎம் கட்சி ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் ஸ்பான்சர் செய்வதைப் பார்த்த பிறகு அந்தப் பெருச்சாளிகளே வெட்கப்படும் என்பதை தோழர்கள் அறிவார்களா?

_______

செய்தி: உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சியினர் தங்களுக்கு பதவி கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் சாலைகளில் ரூபாய் நோட்டுக்களையும், நாணயங்களையும் வீசி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதி: வெடிகுண்டு வீசி ஓய்ந்த நேரங்களில் நாணயங்களையும் வீசுவார்கள்! ரெண்டும் வீசவில்லை என்றால் தான் பரபரப்பு!!

______

செய்தி: ஊழல், முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ள தங்கள் கட்சித் தலைவர்கள் மீது பா.ஜ.க எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதி: கொஞ்சம் பாத்து கேளுங்கண்ணே! முதல்ல மச்சான் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா என்று கட்காரி கேட்க தகுதியில்லை என்றாலும் மக்கள் கேட்கலாமில்லையா?

______

செய்தி: சாண்டி புயல்: அமெரிக்காவில் 50 பேர் பலி – அணு உலைகள் மூடப்பட்டன.

நீதி: மூடினால் என்ன?! காயலான் கடைக்குப் போக வேண்டிய அணு உலைகளைக் கூட இந்தியாவின் தலையில் கட்டலாம் என்று ஒப்பந்தமே போட்டாச்சு!

______

செய்தி: தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2013) ஜூன் மாதத்துக்குள் படிப்படியாக மின்வெட்டு சீரடையும் என்றும், அதுவரை பொறுத்துக் கொள்ளும்படியும் பொது மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதி: தடையற்ற மின்சாரத்தை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்க புரட்டுத் தலைவிக்கு தைரியம் உண்டா?

______

செய்தி: “பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவது தேசிய அவமானம்”- பால் தாக்கரே

நீதி: உண்மைதான் ஐயா! பால் தாக்கரே போன்ற மதவெறி கிரிமினல்களை தண்டிக்க முடியாத இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடுவது அந்நாட்டிற்கு தேசிய அவமானம் தான்!

______

செய்தி: அரவிந்த் கெஜ்ரிவால் பணத்திற்காக ஆசைப்படுபவர் அல்ல‌. ஆனால் அவர் பதவிக்கு ஆசைப்படுபவராக இருக்கலாம் என சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

நீதி: காந்தி குல்லாய் போட்ட ஒரு பெரிசு மட்டும் ஃபிரைம் டைம் டிவி விளம்பர வெறிக்கு ஆசைப்படலமா?!