privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 09/04/2013

ஒரு வரிச் செய்திகள் – 09/04/2013

-

செய்தி: 1970களில் இந்திரா காந்தியின் இளைய மகனான சஞ்செய் காந்தியின் மாருதி நிறுவனம் பிரிட்டீஷ் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் விமானங்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான தரகனாக செயல்பட்டது, விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆதராங்களின் படி தெரியவந்துள்ளது.

நீதி: இந்தியாவையே கூறுபோட்டு விற்பனை செய்யும் காங்கிரசு கட்சியின் தவப்புதல்வன் இந்தியாவின் விமானப்படை பட்ஜெட்டை கமிஷன் வாங்கிக் கொண்டு விற்கக் கூடாதா என்ன?

_____

செய்தி: விஸ்வநாதன் ஆனந்தும், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென்னும் போட்டியிடும் உலக சதுரங்க சாம்பியன் போட்டி சென்னையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்காக ரூ 29 கோடி ரூபாயை தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா ஒதுக்கியிருக்கிறார்.

நீதி: எனவே இந்தப் போட்டி அம்மா உணவகம் வழியில் அம்மா சாம்பியன்ஷிப் போட்டி என்று அழைக்கப்பட்டு, வெற்றி பெறுபவர் அம்மா சாம்பியன் என்று அழைக்கப்படுவதோடு அடுத்த தேர்தலில் அம்மாவுக்காக குரல் கொடுக்கவும் செய்வார்.

_____

செய்தி: சென்ற ஜூலை மாதம் துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஆறுமுகம் சேகரைக் கொன்று மூவரை சுட்டுக் காயப்படுத்திய அமெரிக்க கப்பற்படை வீரர்களை அந்நாட்டு கடற்படை நிர்வாகம் குற்றவாளிகள் இல்லை என்று விடுவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பால் இந்தியா அதிருப்தி அடைந்திருக்கிறது.

நீதி: ஆண்டவன் அமெரிக்காவை எதிர்த்து ஆவேசம் அடைவதற்கு அடிமை இந்தியா இறையாண்மை உள்ள நாடா என்ன?

_____

செய்தி: இங்கிலாந்தின் இரும்பு சீமாட்டியும், முதல் பெண் பிரதமர் மந்திரியாகவும், ஏறக்குறைய பத்தாண்டுகள் ஆட்சி புரிந்த மார்கரட் தாட்சர் நேற்று திங்கட் கிழமை காலமானார்.

நீதி: சாதாரண மக்களின் வாழ்வை அழித்து முதலாளிகளின் சுரண்டலுக்காக தனியார் மயத்தை வெறி கொண்டு அமல்படுத்தியவருக்கு இதயம் இரும்பில் இல்லாமல் ரோஜாவிலா இருக்கும்!

_____

செய்தி: ” உஜினி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடவேண்டுமென்று ஷோலப்பூரிலிருந்து வந்த நபர் ஒருவர் 55 நாட்களாக உண்ணா விரதம் இருக்கிறார். தண்ணீர் இல்லையென்றால் என்ன செய்ய முடியும்? சிறுநீர் கழித்து கொடுக்கலாமா?” – மகாராஷ்டிரத்தின் துணை அமைச்சர் அஜித் பவார்.

நீதி: நீர்ப்பாசன ஊழலில் 35,000 கோடி ரூபாயை சுருட்டிய இந்த பகல் கொள்ளைக்காரனை செருப்பாலடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி சொத்துக்களை வழிப்பறி செய்து ஆயுள் முடியும் வரை சிறையில் அடைக்கவில்லை என்றால் இப்படித்தான் பேசுவான்.

_____

செய்தி: வெளியார்களும், விவசாயி அல்லாதாரும் இமாச்சல் பிரதேசத்தில் விவசாய நிலங்கள் வாங்க முடியாது என்ற சட்டம் பிரியங்கா காந்தி உட்பட 881 நபர்களுக்கு தளர்த்தப்பட்டு நிலம் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது.

நீதி: நிலம் வாங்கக்கூடாது என்பது சட்டம். நிலம் வாங்க வைத்தது சட்டத்தின் ஆட்சி!

_____

செய்தி: இந்திரா காந்தியின் அவசர கால நெருக்கடியின் போது அதை எதிர்த்து மக்கள் எழுச்சியை உருவாக்க அமெரிக்க சிஐஏவிடமும், பிரெஞ்சு அரசிடமும் நாடறிந்த சோசலிஸ்டு தலைவர் ஜார்ஜ் பெர்ணாடன்டஸ் நிதி உதவி கோரினார் என்பதற்கான ஆதாரங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

நீதி: இந்த ‘சோசலிஸ்டு’ தலைவர் ஒரு அமெரிக்க ஏஜெண்ட் என்று அன்றே நக்சல்பாரி கட்சியினர் அம்பலப்படுத்திய போது கேலி பேசிய அறிஞர் பெருமக்கள் இன்று என்ன சொல்வார்கள்?

_____

செய்தி: கர்நாடகாவில் லிங்காயத்து சாதி மடாதிபதி ஸ்ரீ கணேஷ்வர் ஆவாதூத் மகாராஜ் கடந்த பிப்.28 அன்று மறைந்தார். அவரது மரணத்தை தாங்க முடியாமல் மூன்று சீடர்கள் நேற்று தீக்குளித்து இறந்தனர்.

நீதி: அக்னி வழியாக பரலோகத்தில் குருஜியை சந்திக்கச் சென்றிருக்கும் இந்த சீடர்கள் எதை முற்றிலும் துறந்தவர்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை செத்துப் போன சீனியர் சொத்து ஏதும் எழுதி வைக்கவில்லையா?

_____

செய்தி: தென் பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு நீர்த்தேக்கம் அமைப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் அறிவித்தார்.

நீதி: வாய்தா ராணி ஆட்சியில் வழக்கு மேல் வழக்கு போடுகிறது தமிழக அரசு. வக்கீலுக்கு காசு மேல காசு!

_____

செய்தி: கூட்ட நெரிசலைச் சமாளிக்க தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களைக் கை வைத்து தள்ளும் செயலை நிறுத்த வேண்டும் என்று ஊழியர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் பாபிராஜூ திங்கள் கிழமை உத்தரவிட்டார்.

நீதி:  உண்டியலில் கருப்பு வெள்ளையென்று பணத்தை தள்ளி வைக்காத பெருமாளின் பக்தர்கள் மட்டும் நெரிசல் தள்ளு முள்ளுக்கு கவலைப்படுவார்களா என்ன?

______

செய்தி: 1970-ம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது ராஜீவ் காந்தியை தரகராக வைத்திருந்த ஸ்வீடனைச் சேர்ந்த சாப்-ஸ்கேனியா நிறுவனம் போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயன்றது என விக்கிலீக்ஸ் ஆதாரங்கள் திங்கட் கிழமையன்று வெளியாகின.

நீதி: தம்பி இங்கிலாந்திற்கு தரகனாக இருக்கும் போது அண்ணன் ஸ்வீடனுக்கு இருக்கும் விதமாக இந்திரா காந்தி தனது வாரிசுகளுக்கு சண்டை வராத வண்ணம் சமமாக வாய்ப்புகளை அளித்துள்ளார் என்பதை தாயுள்ளத்தோடு பார்க்க வேண்டும்.

______