privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாகிரேக்கத்தின் துயரம் - உலகமயத்தின் அவலம் !

கிரேக்கத்தின் துயரம் – உலகமயத்தின் அவலம் !

-

2008-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து கிரேக்கம் (கிரீஸ்), ஸ்பெயின் முதலான பல நாடுகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டன. அதிலிருந்து மீள்வதற்கு முதலாளித்துவ அரசுகள் மக்கள் நலத்திட்டங்களை வெட்டியும் குறைத்தும் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்திவருகின்றன.

கிரேக்க குழந்தைகள்
கிரேக்க நாட்டு தலைநகரம் ஏதென்சில் உள்ள லூனா பார்க் கேளிக்கை பூங்காவில் குழந்தைகள்.

தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மக்கள் மீது மிக மோசமான அச்சுறுத்தும் விளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. கிரேக்கத்தில் கடந்த நான்காண்டுகளில் குழந்தைகள் பிறப்புவிகிதம் கிட்டத்தட்ட 15% குறைந்துள்ளது. கிரேக்க அரசின் குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி 2008-ல் 1,18,302 ஆக இருந்த குழந்தை பிறப்பு 2012-ல் 1,00,980 ஆக குறைந்துள்ளது.

அதேசமயம் குழந்தை இறந்தே பிறக்கும் விகிதம் சுமார் 21.5% அதிகரித்துள்ளது. தேசிய பொது சுகாதார ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2008-ல் 1,000 குழந்தைகளுக்கு 3.31 ஆக இருந்த இறந்தே பிறக்கும் விகிதம் 2011-ல் 4.01 ஆக உயர்ந்துள்ளது.

கிரேக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய நிறுவனங்கள் மீட்பு நிதியாக 24,000 கோடி யூரோக்கள் கடனளிக்க விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை குறைத்ததுடன் வரி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் அங்கு வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. கிரேக்கத்தில் தற்போதைய வேலையற்றோர் வீதம் 28% ஆக உள்ளது. அதிலும் இளைஞர்களில் 65%-த்தினர் வேலையில்லாதோர்களாக உள்ளனர்.

மொத்த மக்கள் தொகையான 1.14 கோடியில் ஐந்தில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றோர் ஆவர். மொத்தம் 48 லட்சம் தொழிலாளர்களில் 11 லட்சம்  தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் 6,000 யூரோக்களுக்கும் குறைவாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

கிரேக்க அரசு, ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் கொடுத்த நிர்ப்பந்தங்களினால் நாட்டின் சுகாதார பட்ஜெட்டை கிட்டத்தட்ட 40% குறைத்திருக்கிறது. 2008-ல் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியதிலிருந்து மருத்துவத்திற்கான அரசு நிதி, 500 கோடி யூரோக்களிலிருந்து இருந்து சுமார் 200 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், பொது மருத்துவத்திற்கு அரசு கொடுத்து வந்த மானியங்கள் வெட்டப்பட்டதுடன் தாய்மார்களுக்கு கருவுற்றிருக்கும் போதும் பிரசவத்தின் போதும் கொடுத்து வந்த மருத்துவ உதவித் தொகைகள் நிறுத்தப்பட்டன. வேலையில்லா திண்டாட்டத்தினால் மருத்துவ காப்பீட்டு தவணையையும் கட்ட முடியாததால் மக்களுக்கு மருத்துவம் என்பதே மிகப் பெரும் சுமையாகியுள்ளது.

கிரேக்கத்தில் சராசரியாக சுகப் பிரசவத்திற்கு 600 யூரோக்களும், சிசேரியனுக்கு 1200 யூரோக்களும் மருத்துவக் கட்டணமாக இருக்கிறது. இத்தொகையை கட்டமுடியாத, மருத்துவக் காப்பீடு இல்லாத ஏழைத் தாய்மார்கள் இரவோடு இரவாக தாம் பெற்ற குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறி விடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த வெளிநாட்டினர்களாக இருப்பதால் பதிவு செய்யப்படாத குழந்தை பிறப்பும் அதிகரித்து வருகிறது.

ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் 2012-ம் ஆண்டு அளித்த அறிக்கையில் கிரேக்கத்தில் மொத்தம் 4.39 லட்சம் குழந்தைகள் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளதாகவும், ஊட்டச்சத்து மிகக் குறைவான உணவையே உட்கொள்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், கிரேக்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் உணவுக்கு அளித்து வந்த மானியத்தை அரசு நிறுத்தியுள்ளது. இதனால் மானிய விலையில் கிடைத்து வந்த உணவு கிடைக்காததுடன் அவர்கள் உணவு விடுதிகளில் அதிக விலை கொடுத்து உணவருந்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் பள்ளிக் குழந்தைகள் பசியால் வகுப்பறையிலேயே மயக்கமுற்றிருக்கின்றனர்.

மொத்த மக்கள் தொகையில் 28 லட்சம் பேர் வாழ்வதற்கே பணமில்லாத நிலையிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமது குடும்பத்தில் எவருக்குமே வேலையில்லாததால் முற்றிலும் பணமில்லாத பராரிகளாக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசு அளிக்க வேண்டிய ஓய்வூதியம் போன்ற நிலுவையிலுள்ள தொகையை தவணை முறையில் அளிப்பதைக் கொண்டு தங்களால் வாழ இயலவில்லையென, அவற்றை உடனடியாக வழங்கக்கோரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

கிரேக்க வறுமை
48 லட்சம் தொழிலாளர்களில் 11 லட்சம் தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் 6,000 யூரோக்களுக்கும் குறைவாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

கிரேக்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பொதுச்செயலர் கிறிஸ்டினா, மக்கள் மீது திணிக்கப்படும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளும், வேலையில்லா திண்டாட்டமும், பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லாததும், மானியங்கள் வெட்டப்பட்டதுமே குழந்தைகள் பிறப்புவிகிதம் வீழ்ந்ததற்கு காரணமென்று குறிப்பிட்டுள்ளார்.

கிரேக்கத்தில் மட்டுமல்ல, மொத்த ஐரோப்பிய யூனியனிலும் இதேநிலை தான் இருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 12.1% ஆக உயர்ந்துள்ளது. 2012-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகப் பிரிவான ஐரோப்பிய ஆணையம் அளித்த அறிக்கையின் படி ஒன்றியத்தில் 11.6 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழிருப்பதாகவும், 20.5% குழந்தைகள் வறியவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2008-2011 ஆண்டுகளில் குழந்தை பிறப்புவிகிதம் 3.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக, அதாவது 2008-ல் 56 லட்சமாக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2011-ல் 54 லட்சமாக  குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்த நாடுகளின் எண்ணிக்கை 2007-ம் ஆண்டு 26 ஆக இருந்தது 31 ஆக உயர்ந்துள்ளது.

கிரேக்க அரசே ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையேந்தி நிற்கும் போது, தாம் வாழவே இயலாத நிலையிலிருக்கும் பெரும்பாலான மக்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், அவர்களை வளர்ப்பதும் தம்மால் இயலாதென முடிவெடுத்திருக்கிறார்கள்.

சாதாரண மக்கள் வாழவே முடியாத நிலையிலிருக்கும் அதே கால கட்டத்தில் கிரேக்கத்தின் செல்வச் சீமான்கள் தங்களது சொத்துக்களையும் பணத்தையும் நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்ல தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தனர். 2009-லிருந்து சுமார் 30 பில்லியன் யூரோக்கள் கிரீஸிலிருந்து வெளியேறியிருக்கிறது.

உலகமயத்தின் யோக்கியதை கிரேக்க நாட்டில் இப்படித்தான் இருக்கிறது. முதலாளித்துவ பொருளாதாரம் ஒரு நாட்டை எப்படி சுடுகாடாக்கும் என்பதற்கு கிரேக்க நாடு ஒரு சான்று.