Wednesday, December 2, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் !

வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் !

-

‘‘ஏழைகள் யார்?” என்ற கேள்விக்கு, நகைக்கத்தக்கதும், வக்கிரம் நிறைந்ததுமான வருமான வரையறையொன்றைப் புதிதாக அறிவித்திருக்கிறது, மைய அரசின் திட்ட கமிசன்.  இதன்படி, நாளொன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ.27.20-க்கு மேலும், நகர்ப்புறங்களில் ரூ.33.40-க்கு மேலும் தமது அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலவு செய்யக் கூடிய தனிநபர்களை ஏழைகளாகக் கருத முடியாது என வறுமைக் கோட்டை வரையறுத்து, நகர்ப்புறங்களில் ஐந்து பேர் கொண்ட குடும்பமொன்று சௌக்கியமாக வாழ்வதற்கு மாதமொன்றுக்கு 5,000/- ரூபாயும்,  அதே எண்ணிக்கை கொண்ட குடும்பமொன்று கிராமப்புறத்தில் வாழ்வதற்கு மாதமொன்றுக்கு 4,080/- ரூபாயும் போதும் என்று தெரிவித்திருக்கிறது.

வறுமைக்கோடு
இந்தியாவின் புதிய பணக்காரர்களே ! வருக ! வருக !

இங்கு அத்தியாவசியத் தேவைகள் எனக் குறிப்பிடப்படுவது ஒருநாள் உணவுக்கான செலவு மட்டுமல்ல; துணிமணிகள், கல்வி, மருத்துவம் மற்றும் செருப்பு உள்ளிட்ட நுகர்பொருட்களுக்கு ஆகும் செலவுகளையும் இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு சமாளித்து விட முடியும் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள், நமது பொருளாதாரப் புலிகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வறுமைக் கோட்டை (கிராமப்புறங்களில்) ரூ.25-, (நகர்ப்புறங்களில்) ரூ.32/- என நிர்ணயம் செய்திருந்த திட்டக் கமிசன், தற்பொழுது இரண்டு ரூபாயைக் கூட்டிப் போட்டு, புதிய வறுமைக் கோட்டை நிர்ணயித்திருக்கிறது.  எனவே, திட்டக் கமிசனின் இந்த அறிவிப்பு புதிய மொந்தையில் பழைய கள்ளுதான்.

வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்த அதே கையோடு, கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டது எனவும் தடாலடியாக அறிவித்திருக்கிறது, திட்டக் கமிசன்.  2004-ஆம் ஆண்டில் 40 கோடியே 70 இலட்சமாக இருந்த ஏழைகளில் எண்ணிக்கை 2012-இல் 26 கோடியே 90 இலட்சமாகக் குறைந்து விட்டதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வானது மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தைக் கூட புலம்ப வைத்திருக்கும் நிலையில், கிராமப்புற விவசாயம் சீரழிந்துபோய் நடுத்தர வர்க்க விவசாயிகள் கூட வேலை தேடி நகரத்திற்கு அகதிகளாக ஓடிவரும் வேளையில், கடந்த 17 ஆண்டுகளில் 2,70,940 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ள சூழ்நிலையில், ஒருபுறம் வேலையில்லாத் திண்டாட்டமும், மறுபுறம் நவீனக் கொத்தடிமைத்தனமும் தலைவிரித்தாடும் சூழலில், இந்திய ரூபாயின் மதிப்பு செல்லாக்காசாகி வரும் நேரத்தில், எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த மூன்றாண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு மீண்டு வர முடியாமல் தவிப்பதாக ஆளுங்கும்பலே புலம்பி வரும் வேளையில், ஏழைகளின் எண்ணிக்கை பல கோடிக்கணக்கில் குறைந்து விட்டதாகவும், ஒரு முப்பத்தைந்து ரூபாயில் ஒருநாள் பொழுதை ஓட்டிவிட முடியும் என்றும் சொல்லுவதற்கு காங்கிரசு கும்பல் கொஞ்சம் கூடக் கூச்சப்படவில்லை.வறுமைக்கோடு-2

காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ராஜ் பப்பர், ரஷீத் மசூத் என்ற இரு கொழுப்பெடுத்த அறிவிலிகள், ‘மும்பையில் 12 ரூபாய்க்கும், டெல்லியில் 5 ரூபாய்க்கும் முழுச் சாப்பாடு கிடைப்பதாக’ப் புளுகித் திட்ட கமிசனின் வரையறுப்புக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினார்கள்.  ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் உல்லாசப் பேர்வழியுமான ஃபரூக் அப்துல்லா, ”நீங்கள் நினைத்தால் ஒரு ரூபாயிலும் உங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம்; நூறு ரூபாயிலும் நிரப்பிக் கொள்ளலாம்” எனக் கூறி சமூக ஏற்றத்தாழ்வைக் குரூரமாக நியாயப்படுத்தினார்.

விலைவாசி உயர்வு என்பது ஒரு பிரச்சினையேயில்லை என்றுதான் காங்கிரசு கும்பல் கருதுகிறது. ”பதினைந்து ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்குகிறவர்கள், இருபது ரூபாய் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்குகிறவர்கள் விலைவாசி உயர்வு குறித்துக் கத்தக் கூடாது” எனத் திமிராகக் கூறியிருக்கிறார், ப.சிதம்பரம்.  பாட்டில் தண்ணீர் வாங்குகிறவர்களை விட்டுவிடுவோம்.  இன்று சென்னை உள்ளிட்டுப் பல்வேறு நகரங்களில் ஒரு குடம் தண்ணீரை ஐந்து ரூபாய்க்கும் ஆறு ரூபாய்க்கும் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு அடித்தட்டு மக்களைத் தள்ளிவிட்டுள்ள ப.சி. வகையறாக்களுக்கு இவ்வளவு கொழுப்பு இருக்கக் கூடாது.  குடிதண்ணீர் மட்டுமல்ல, கொத்தமல்லி – கறிவேப்பிலை கூட இன்று சும்மா கிடைப்பதில்லை என்பதையெல்லாம் கணக்கில் கொண்டா இந்த வறுமைக் கோடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

திட்டக் கமிசன் அறிவித்துள்ள வறுமைக்கோடு எதார்தத்துக்குப் பொருத்தமில்லாதது மட்டுமல்ல, அதுவொரு மோசடி என்பதை நமது அன்றாட வாழ்விலிருந்தே புரிந்து கொள்ளலாம்.  சென்னையில் சிமெண்ட் ஷீட் போட்ட ஒண்டுக்குடித்தன வீட்டைக்கூட 2,000 ரூபாய்க்குக் குறைவாக வாடகைக்கு எடுக்க முடியாது.  தினந்தோறும் வேலைக்குச் சென்று திரும்ப பாக்கெட்டில் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாக இல்லாமல் ரோட்டில் காலடி எடுத்து வைக்க முடியாது.  வீட்டு வாடகையும், போக்குவரத்துச் செலவும் வாங்கும் கூலியில் ஐம்பது சதவீதத்தை விழுங்கிவிடும் அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளன.  இவையிரண்டையும் நாம் விரும்பினால் கூட குறைத்துக் கொள்ள முடியாது.  திடீரென ஏற்படும் மருத்துவச் செலவு, கல்யாணம், கருமாதி உள்ளிட்ட பிற செலவுகள் தனியானது.

விலைவாசிக்குத் தக்கபடி தொழிலாளர்களின் கூலியும் அதிகரிக்கவில்லையா என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.  ஆனால், கூலி ஒரு மடங்கு உயர்ந்தால் உணவுப் பொருட்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகள் பலமடங்கு உயர்ந்து, கைக்கும் வாய்க்கும் பத்தாத நிலையைத்தான் தோற்றுவித்துள்ளன.  இந்திய மக்களின் உணவுப் பழக்கம் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், மற்ற செலவுகளைச் சமாளிக்க உணவு உட்கொள்வதை அடித்தட்டு மக்கள் குறைத்துக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளன.

வறுமைக்கோடு-3
இந்தியாவின் இரு துருவங்கள் : ரேஷன் கடையில் அலைமோதும் ஏழைகளின் கூட்டம்

ஒரு காலத்தில் ரேஷன் அரிசி வாங்குவதைக் கவுரவக் குறைச்சலாக நினைத்தவர்கள் கூட, இன்று அதற்காக கியூவில் நிற்கிறார்கள்.  அரிசிக்கு மட்டுமல்ல, பருப்புக்கும், சர்க்கரைக்கும், சமையல் எண்ணெய்க்கும் ரேஷன் கடையைத்தான் பல கோடி குடும்பங்கள் நம்பியுள்ளன.  எவ்வளவுதான் வயிற்றைச் சுருக்கிக் கொண்டாலும், பல்வேறு சமயங்களில் நிலைமையைச் சமாளிக்க வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான் உண்மை நிலவரமாக உள்ளது.  ரேஷன் அட்டையை அடகு வைத்துக் கடன் வாங்குவது, சிறுநீரகத்தை விற்று வாழ்க்கையை ஓட்டுவது என அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், ஏழை என்று வழமையாகச் சொல்வதை விட மிகவும் கீழான நிலைக்கு, கையறு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

1970-களில் வறுமைக் கோடை நிர்ணயிப்பதற்கு, கிராமப்புற மக்களுக்குத் தினந்தோறும் 2,400 கலோரி சத்தினை அளிக்கக்கூடிய உணவையும், நகர்ப்புற மக்களுக்கு 2,100 கலோரி சத்தினை அளிக்கக்கூடிய உணவையும் பெறுவதற்கு ஆகக்கூடிய செலவு அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.  ஆனால், தற்பொழுதோ வெறும் 1,700 கலோரி சத்தினை அளிக்கக்கூடிய உணவை வாங்குவதற்கு ஆகும் செலவுதான் அடிப்படையாகக் கொள்ளப்பட்டிருக்கிறது.  வறுமைக் கோட்டைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காகவே உணவுத் தேவையைச் சுருக்கிக் காட்டியிருக்கிறார்கள்.  இது ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கும் மோசடி எனக் குற்றஞ்சுமத்துகிறார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் உத்சா பட்நாயக்.  அலுவாலியா கும்பலோ, இன்றுள்ள நிலைமைக்கு இந்தளவிற்கு உணவு உட்கொண்டாலே போதும் என ஆணவமாக நியாயப்படுத்துகிறது.

அடிமைச் சமூகத்தில்கூட, அடிமை உழைப்பதற்கும் உயிர் வாழ்வதற்கும் தேவையான உணவை வழங்குவதற்கான கடப்பாடு ஆண்டைக்கு இருந்ததெனக் கூறப்படுகிறது.  ஆனால், நவீன முதலாளித்துவ எஜமானர்களோ அப்படிப்பட்ட தார்மீகப் பொறுப்பு எதையும் தாம் எடுத்துக் கொள்ள முடியாது எனத் திமிரோடு அறிவிக்கிறார்கள்.  இன்றுள்ள நிலைமையில் 1,700 கலோரி அளவுக்கு உணவு உட்கொண்டால் போதும் எனக் கூறும் திட்டக் கமிசன், வெகுவேகமாக மாறிக்கொண்டிருக்கும் மற்ற சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வறுமைக் கோடை நிர்ணயிப்பதில்லை.  தீனி மட்டும் போட்டு மாட்டை வேலை வாங்குவது போல, உழைக்கும் மக்களுக்கு

வறுமைக்கோடு-3
இந்தியாவின் இருவேறு துருவங்கள் : அமெரிக்க கோழிக்கறியை வெட்டும் புதுப்பணக்கார கும்பல்

அளவு சோறு மட்டும் போதும் எனக் கருதுகிறார்கள்.  மாறிவரும் சூழலில், சோற்றைத் தாண்டி வேறு ஏதாவது அவனிடம் இருந்தால், தனது தொழில் மற்றும் குடும்பத் தேவைகள் கருதி செல்ஃபோன், இரு சக்கர வாகனம், தொலைக்காட்சிப் பெட்டி போன்ற சாதனங்களை வைத்திருந்தால், அதைக் காட்டியே அவனை ஏழை எனக் கருத முடியாது என முத்திரை குத்துகிறார்கள்.

மாறியுள்ள சூழ்நிலையில் இத்தாலி பீட்சா, அமெரிக்காவின் கே.எஃப்.சி. கோழிக்கறி, ஐ ஃபோன், ஐ பாட் என மேட்டுக்குடியின் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கும் இவர்கள், கந்தல் ஆடை அணிந்து நெஞ்செலும்பு துரித்துக் கொண்டிருப்பவன் மட்டும்தான் ஏழை என்ற வக்கிரமான பார்வையைத் தாண்டிச் செல்ல மறுக்கிறார்கள்.

வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களை வகுத்துக் கொடுத்த சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி பேருந்தைப் பயன்படுத்துகிறவனை ஏழையாகக் கருத வேண்டியதில்லை எனக் கூறியிருக்கிறது.  2012-இல் நடத்தப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பில், இந்திய மக்கள் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு மேல் மருத்துவத்திற்குச் செலவு செய்வதில்லை எனத் தெரிய வந்ததாம்.  அதனால், மருத்துவத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறவர்களை ஏழையாகக் கருதத் தேவையில்லை எனக் கூறுகிறது, திட்டக் கமிசன்.  விற்கிற விலைவாசியில் ஒரு ரூபாயைக் கொண்டு தலைவலி மாத்திரையைக் கூட வாங்க முடியாது எனும்பொழுது, இந்த ஒரு ரூபாயைக் கொண்டு மருந்து மாத்திரை செலவுகளை மட்டுமல்ல, ஆஸ்பத்திரி செலவுகளையும் சமாளித்து விட முடியும் என்கிறார்கள், நமது வல்லுநர்கள்.  எப்பேர்ப்பட்ட குரூரம் இது.

தாங்கள், சர்வதேச அளவுகோலைப் பயன்படுத்தி ஏழைகள் எண்ணிக்கையைக் கணக்கிட்டிருப்பதாகப் பீற்றி வருகிறது, மன்மோகன் சிங் அரசு.  பத்தாண்டுகளுக்கு முன்பு உலகிலிருந்து ஏழ்மையை ஒழிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு களமிறங்கிய ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் உலக வங்கியின் மேற்பார்வையில் தயாரித்து அளித்த அளவுகோல்தான் இந்த சர்வதேச அளவுகோல்.  கந்துவட்டிக்காரன் காருண்யத்தைப் பற்றி உபதேசிப்பதும் உலக வங்கி தலைமையில் ஏழ்மையை ஒழிக்கப் போவதாகக் கூறிக்கொள்வதும் ஒன்றுதான்.

ஏழைகள் யார்? எனக் கண்டுபிடிப்பதற்குத்தான் இந்த அளவுகோலை வைத்திருக்கிறோமே ஒழிய, அரசின் சமூக நல உதவிகளைப் பெறுவதற்கும் இந்தக் கணக்கிற்கும் எந்தவொரு சம்மந்தமும் கிடையாது எனத் தந்திரமாகக் கூறி வருகிறது, காங்கிரசு அரசு.  இது உண்மையென்றால், வறுமைக் கோட்டை வரையறுக்க முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் இன்னொரு கமிட்டியை அமைக்க வேண்டிய அவசியமென்ன?  சுரேஷ் டெண்டுல்கரை நல்லவர் என்று காட்டக்கூடிய அளவிற்குத் தனியார்மயத்திற்கும் மானியங்களை வெட்டுவதற்கும் ஆதரவானவர் இந்த ரங்கராஜன்.  ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் மானியங்கள் படிப்படியாக வெட்டப்படுகின்றன.  இதற்கு ஒரு நிரந்தரமான நியாயம் கற்பிக்க வேண்டுமல்லவா?  அதனால்தான் வறுமைக் கோட்டைக் குறைவாக நிர்ணயித்து, ஏழைகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதாக நாடகமாடுகிறார்கள், காங்கிரசு கயவாளிகள்.

–  திப்பு
___________________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013
___________________________________________

  1. , பல்வேறு சமயங்களில் நிலைமையைச் சமாளிக்க வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான் உண்மை நிலவரமாக உள்ளது.

  2. வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி…பிறர் வாழ உழைப்பாவர் சொல்லுவது எல்லாம் சட்டம் ஆகனும் தம்பி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க