privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம் திருமுடிவாக்கம் ஜீ-டெக்ஸ் காஸ்டிங்ஸ் முதலாளிகளின் அடாவடி !

திருமுடிவாக்கம் ஜீ-டெக்ஸ் காஸ்டிங்ஸ் முதலாளிகளின் அடாவடி !

-

தொழிற்சங்கம் அமைத்ததால் முன்னணி தொழிலாளர்களின் வேலை பறிப்பு !
திருமுடிவாக்கம் ஜீ-டெக்ஸ் காஸ்டிங்ஸ் நிறுவனத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

அன்பார்ந்த தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே!

புஜதொமு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

நாங்கள் திருமுடிவாக்கம் சிப்காட்டில் உள்ள, ஜீ-டெக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறோம்.

பல ஆண்டுகளாக கொத்தடிமை போல குறைந்த கூலி கொடுத்து சுரண்டப்பட்டு வந்த நாங்கள், கடந்த ஆண்டு எங்களின் சட்டப்படியான உரிமைகளைப் பெற சங்கம் துவங்கினோம். இதனைத் தொழிலாளர் துறை மூலம் அறிந்து கொண்ட நிர்வாகம், சங்க முன்னணியாளர்கள் 3 பேரை புனேயில் உள்ள தனது வாடிக்கையாளர் நிறுவனத்திற்கு பணி மாறுதல் உத்தரவினை வழங்கி அடுத்தநாளே அந்த நிறுவனத்தில் பணியில் சேருமாறு உத்தரவிட்டது. மேலும் நிர்வாகம் கடந்த காலங்களில் நடந்ததாகச் சொல்லப்படும் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் சங்க முன்னணியாளர்கள் 8 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து பழிவாங்கியுள்ளது.

வாய்வழி வேலை நீக்கத்திற்கு ஒப்பான இந்த சட்டவிரோதமான தொழிலாளர் விரோதப் போக்கை, தொழிலாளர் நலத்துறை மூலமும் முடிவுக்குக் கொண்டு வர இயலாதவாறு அதனையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இயக்குகிறது நிர்வாகம். எங்களின் தொழில் தாவாக்கள் நிர்வாகத்தின் கழுத்தறுப்புக்கு ஏற்ப தொழிலாளர் நலத்துறை மூலம் நயவஞ்சகமான முறையில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

தொழிற்சங்கம் வைக்கும் உரிமையைப் பறித்து, தொழிலாளர்களை சட்ட விரோதமாகப் பழிவாங்குவதற்கென்றே, தொழிலாளர் நலத்துறையில் DCL ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு.சந்திரமோகன், ACL ஆக இருந்து ஓய்வுபெற்ற திரு.தம்பிதுரை போன்றோரை தனது கைக்கூலிகளாக வைத்து தொழிலாளர்களை ஒடுக்கும் வேலைக்கு ஆலோசகர்களாகப் பயன்படுத்தி வருகிறது நிர்வாகம். இந்த DCL சந்திரமோகன்தான் தொழிலாளர்களைக் கண்காணிக்கும் CCTV கேமராக்களை எங்கு பொருத்துவது என நிறுவனத்தின் உள்ளே வந்து உத்தரவிடுபவர்.

இவர்கள் மூலமே தொழிலாளர் நலத்துறையின் இந்நாள் அதிகாரிகள், ஊழியர்கள் மூலம் தொழிலாளர்களுக்கு எதிராக நடக்க வழிகாட்டப்பட்டு வருகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக தொழில்துறையின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். இவர்கள் மூலம் சங்கப்பதிவை நிறுத்தி வைத்துள்ளனர்.

முதலாளிகள், திரு.சந்திரமோகன், திரு.தம்பிதுரை போன்ற ஓநாய்கள் தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகளைப் பாதுகாத்து நிலைநாட்டும் அதிகாரிகள் என்ற பெயரில், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலையில இருக்கும்போது மறைமுகமாகவும் ஓய்வு பெற்ற பின் பென்சன் வாங்கிக் கொண்டு வெளிப்படையாகவும், முதலாளிகளின் எச்சில் காசுக்கு வேலை செய்து தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகம் செய்து வரும் துரோகிகளாக உள்ளனர். தொழிலாளர் நலத்துறையையே ஜீ டெக் முதலாளிகள் தங்களது நிறுவனமாக மாற்றியுள்ளனர். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மந்திரிகளுக்கு மாமா வேலை செய்தும் இந்த அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளது நிர்வாகம்.

கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வரும் தொழிலாளர்கள் இன்றும் வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும், பணம் கொடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாமலும், அன்றாடம் ஏறிவரும் விலைவாசி உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாமலும், போதுமான சம்பளம், உரிமைகள் ஏதுமின்றி உயிர்வாழவே போராடி வருகின்ற நிலையில் உள்ளனர். இந்நிறுவனத்தின் முதலாளிகள் திரு.சேகர் என்கின்ற சந்திரசேகரன், திரு.வெங்கட் என்கிற வெங்கட்ராமன் பத்தாண்டுகளுக்கு முன்பு சிறிய “லேத்” பட்டறை மட்டுமே வைத்திருந்தவர்கள், இன்று இந்தியா முழுவதும் பல நிறுவனங்களுடன் வர்த்தக உறவை உருவாக்கி பல கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக மாறியுள்ளனர். 10 பேர் வேலை செய்த நிறுவனத்தில் இன்று 170 தொழிலாளிகள், மற்றும் 70 நிர்வாகப் பிரதிநிதிகள் உள்ளனர். மேலும் ஒரு நிறுவனம் இருந்த நிலையில் இப்போது இரண்டு மூன்று நிறுவனமாக மாறியுள்ளது.

இதற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை குறைந்த கூலிக்கு அழிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த கூலிக்கும் குறைவாக வடமாநில இந்தி பேசும் தொழிலாளர்களை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என அழைத்து வந்து எங்கள் இடத்தில் வைத்து வேலை வாங்கிக் கொண்டு எங்களை வெளியே தள்ளியுள்ளது நிர்வாகம். இந்த காண்ட்ராக்ட் முறை குறித்து தொழிற்சாலை ஆய்வாளரிடம் புகார் கொடுத்தும் இதை ஒரு மயிருக்கும் மதிக்கவில்லை நிர்வாகம்.

இந்நிறுவனத்தின் கிரிமினல்களான H.R. மேலாளர் திரு சிவக்குமார், உற்பத்தி மேலாளர் திரு காளிமுத்து, CEO திரு சாகுல் அமீது ஆகியோர் சங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களை சங்கத்தை விட்டு விலகச் சொல்லி தினந்தோறும் அச்சுறுத்தியும் மிரட்டியும் வருகின்றனர். H.R திரு சிவக்குமார் என்ற கிரிமினல் சங்கத்தில் இருக்கும் அனைவரையும் வேலையை விட்டு துரத்தாமல் ஓயமாட்டேன் என்றும், அதன்பிறகு யாரும் சிட்கோவிலேயே வேலை செய்ய முடியாது என்றும் வெறிபிடித்த நாய் போல குரைக்கிறார். கிஷோர் குமார் என்ற தொழிலாளிக்கு போன் செய்து உன் கல்யாணத்தையே நிறுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். CEO திரு.சாகுல் அமீது வெளியில் அனுப்பிய தொழிலாளர்களை “ஏய் ! கேசு, கீசு என அலையாத, ஏதாவது 25,000/-, 50,000/- செட்டில்மெண்டு வாங்கித் தரேன், புத்திசாலித்தனமாகப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என அடிக்கடி அறிவுரையும் வழங்குகிறார். இவர் TVS நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்று தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யவே மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் மூலம் சங்கத்தைக் கலைக்க இங்கு வேலை செய்ய வந்திருப்பவர் ஆவார்.

தொழிலாளர்கள் வேலை செய்யும் இடம் முதல் கக்கூசு வரை CCTV கேமராவைப் பொருத்தி தொழிலாளர்களைக் கிரிமினல்களைப் போல கண்காணிக்கிறது நிர்வாகம். கருப்புப்பூனை செக்யூரிட்டி என்ற பெயரில் காக்கிச்சட்டை அணிந்து கையில் தடியுடன் கூடிய ரவுடிகளை ஆலைக்கு உள்ளே தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் நிறுத்தி வைத்து தொழிலாளர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து அச்சுறுத்துவது, தொழிலாளர்கள் கழிவறை சென்றால் கூட பின்னால் வருவது, கழிவறையின் கதவைத் தட்டி ஏன் இவ்வளவு நேரம்? என்று கேட்பது போன்ற கேவலமான நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. வைத்தியநாதன் என்ற கருப்புப்பூனை ரவுடி எப்போதும் குடிபோதையில் அவன் வளர்த்து வைத்திருக்கும் பெரிய மீசை மயிரை திருகிக் கொண்டு தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று சங்கத்தை விட்டு விலகச் சொல்லி மிரட்டி வந்தான். ”சங்கத்திலிருந்து விலகினால் வேலை, இல்லையானால் நீ வெளியேதான்” என இந்த செக்யூரிட்டி மூலம் தொழிலாளர்களை அச்சுறுத்துகிறார்கள் முதலாளிகள்.

அரசின் உதவியுடன் வங்கிக் கடன், மானியம், வரிச்சலுகை மற்றும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படாத கூலிகள் மூலம் பெரு முதலாளிகளாக உருவாகி வரும் ஜீ-டெக் முதலாளிகள் திரு.சேகர் என்கிற சந்திரசேகரன், திரு.வெங்கட் என்கிற வெங்கட்ராமன் அவர்களும் இந்த சங்கம் துவக்கிய தொழிலாளர்களை வைத்துக் கொண்டு கம்பெனியை நடத்த முடியாது, அவர்களை ஒழிக்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என அனைத்து வகை ஒடுக்குமுறையையும் ஏவ தமது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை H.R மேலாளர் திரு சிவக்குமார், மேலாளர் திரு காளிமுத்து, CEO திரு சாகுல் அமீது ஆகியோர் திரும்பத் திரும்ப தொழிலாளர்களிடம் தெரிவித்து மிரட்டி வருகின்றனர். குறிப்பாக சங்கத்தில் உள்ள தொழிலாளர்களை மட்டும் ஒவ்வொரு நொடியும் – இரவு, பகல் பார்க்காமல் கண்காணித்து இம்சிக்கிறது நிர்வாகம்.

தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற சங்கம் சேரும் உரிமை இன்று வரை நடைமுறைக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காயாகத்தான் உள்ளது. இந்த அரைகுறை உரிமையையும் கொடுக்க முடியாது என ஆர்ப்பரிக்கிறது, நிர்வாகம். தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டி முதலாளிகளின் சுரண்டலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஆலை வேறுபாடின்றியும், டிரெயினி, காண்டிராக்டு, நிரந்தரம் என்ற முதலாளிகளின் சூழ்ச்சிகளைத் தாண்டி, தொழிலாளி வர்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து பரந்துபட்ட உழைக்கும் மக்களின் ஆதரவோடு, போராட்டத்தைக் கட்டியமைப்போம், உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள் இருக்கும் வரை உழைப்பவன் வாழ முடியாது.

தொழிலாளர்களின் உரிமையைப் பறித்துவிட்டு முதலாளிகள் ஆலையை இயக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம்!
ஜீ-டெக் முதலாளிகளின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவோம்.

கண்டன தெருமுனைக் கூட்டம்

நாள் : 3.10.2013.
நேரம் : மாலை 4 மணி.
இடம் : திருமுடிவாக்கம் – சிட்கோ.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிளை : ஜீ – டெக் காஸ்டிங்ஸ் பி லிமிடெட்,
திருமுடிவாக்கம்