privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ !

பூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ !

-

ரு நீண்ட நெடிய பயணத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை தொட்டிருக்கிறார் தமிழருவி மணியன். அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றில் மணியன் அதிகம் பேசியிருப்பது அறம் பற்றித்தான். பேசியதெல்லாம் அறம் என்பதை பேசுவதெல்லாம் அறமென அவர் கருதியிருக்கக்கூடும். அவரது பாஜக, மதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி ஆலோசனைக்கு இத்தனை கடுமையான எதிர்ப்பை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆயினும் அவர் இது குறித்து நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார், இத்தனைபேர் அவரை கவனிக்கிறார்கள் என்பதற்காக.

வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சிவனை சிலாகித்து சொற்பொழிவாற்றினால் நீங்கள் திகைத்துப் போவீர்களா இல்லையா? முருக பக்தன் எனும் சொல் கேட்டாலே நம் நினைவுக்கு வரும் ஏ.வி.எம் ராஜன், அல்லேலுயா பிரச்சாரகரானதன் அதிர்ச்சி நமக்கும் இன்னும்கூட இருக்கிறதில்லையா? பெரியார்தாசன் அப்துல்லாவானபோது அதை எளிதாக எடுத்துக்கொண்டோமா என்ன?

தமிழருவி மணியன்
அடிப்படையில் அவர் ஒரு சொற்பொழிவாளர்.

அப்படியான ஒரு அதிர்ச்சிதான் தமிழருவியின் கூட்டல் கணக்கை கேட்டதனால் வருவதும். ஆகவே இந்த விடயத்தில் நாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அடிப்படையில் அவர் ஒரு சொற்பொழிவாளர். என்ன புண்ணியம், அவர் பார்க்க வளர்ந்த பட்டிமன்ற ராஜாவும், ஞானசம்பந்தனும் சினிமா நாயகிகளுக்கு அப்பாவாக நடித்து பெரும் பிரபலமாகிவிட்டார்கள். ஒரு கம்பராமாயண புத்தகத்தை படித்துவிட்டு ஒரு வருட மேடைப்பேச்சை ஒப்பேற்றுகிறார் சிவக்குமார், அவருக்கு கூட்டம் கும்முகிறது. வாரிசுகள் சினிமா கதாநாயகனாக இல்லாததால் மணியனுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. பன்னெடுங்காலம் காங்கிரசில் இருந்தவர் என்பதால் அவரது பேச்சை காங்கிரஸ்காரர் கூட்டம் என கருதி நிராகரித்தவர்கள் பலர், சொற்பொழிவாளர் எனக் கருதி அவரது கூட்டத்தை பல காங்கிரஸ்காரர்களும் புறக்கணித்தார்கள்.

அரசியல் சூத்திரங்களை ஆதியோடு அந்தமாக கரைத்துக் குடித்த மணியன் நியாயமாக ஒரு ராஜகுருவாக இருந்திருக்க வேண்டும். காலத்தின் கோலம் அவரை பட்டிமன்ற ராஜா அளவுக்குக்கூட வளரவிடாமல் செய்திருக்கிறது. காங்கிரசை நம்பியதற்கு பதில் சாலமன் பாப்பையாவை நம்பியிருந்தால் நமக்கும் அவருக்கும் இப்படியொரு நிலை வந்திருக்காது, விதி வலியதென்பதால் அந்த எண்ணத்தை விட்டுத் தள்ளுங்கள்.

மணியனின் இந்த மோடி மோகம் குறித்து அதிர்ச்சியடைந்த சிலரை ஆறுதல்படுத்தவே இந்தப் பதிவு. அடிப்படையில் தமிழருவி மணியன் ஒரு பேச்சாளர் அல்லது சொற்பொழிவாளர். அவரது பணி சொன்ன தலைப்பில் பேசுவது அல்லது ஒரு தலைப்பை தானே தெரிவு செய்து பேசுவது. அந்த வகையில் அவர் தொடர்ந்து தன் தலைப்பை மாற்றி வந்திருக்கிறார், 2009-ல் மற்ற சொற்பொழிவாளர்கள் எடுக்கத்தவறிய ஈழ ஆதரவு எனும் தலைப்பை அவர் எடுத்துக்கொண்டார். அது ஒரு உணர்வுபூர்வமான தருணம். அப்போது ஈழத்தை யார் ஆதரித்தாலும் நாம் ஏற்கும் மனநிலையில் இருந்தோம். சந்தேகப்படவியலாத ஈழ வெறுப்பாளரான ஜெயாவையே ஏற்கத் துணிந்த காலமது. தமிழருவியின் உருப்படியான நகர்வாக இதை மட்டுமே கருதலாம்.

இப்போது தமிழ் தேசியக் குழுமங்களின் செல்வாக்கு சரியும் காலம். அங்கே தலைவர்களுக்கே வேலை குறைந்து வருகிறது. தமிழ் அடிபம்புக்கே தேவையில்லாதிருக்கும்போது அருவி அங்கிருப்பதில் என்ன பிரயோஜனம்? ஆகவே அவர் பற்றிக் கொள்ள ஒரு நிலைப்பாடு தேவை. இன்றைய ட்ரெண்டில் நஸ்ரியாவும் நரேந்திர மோடியும்தான் பெரும் பிரபலமாக இருக்கிறார்கள். காங்கிரசை கருவறுக்க நஸ்ரியாவால் முடியுமா? ஆகவே சித்தாந்த அடிப்படையில் அவர் நமோவை ஆதரிப்பது என்பது காலத்தின் கட்டாயம்.

சொற்பொழிவாளர்கள் புராண இதிகாசங்களின் நற்கருத்துக்களை நமக்கு சொல்பவர்கள். அவர்களும் அதன்வழி நடப்பதுதான் நியாயம். ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி ஒருநாள் வானில் பறந்து சென்ற கந்தர்வனின் நிழலைக் கண்டு ரசித்து வைத்தாள். மனைவியை உளவுபார்ப்பதில் தேர்ந்தவரான ஜமதக்கினி இதை தெரிந்துகொண்டு, தன் மகனான பரசுராமனிடம் கற்பு நெறி தவறிய அவளைக் கொன்று விடுமாறு உத்தரவிடுகிறார், பரசுவும் அம்மாவை வெட்டிக் கொன்று விடுகிறார். அம்மாவைக் கொன்ற பரசுராமனை எப்படி கொலைகாரன் என தூற்ற முடியாதோ அப்படித்தான் மோடியையும் நீங்கள் அணுக வேண்டும். அதைதான் குஜராத் கலவரத்தையும் பாபர் மசூதி இடிப்பையும் நாங்கள் மறக்கவில்லை என்பதை மட்டும் சொல்கிறார் தமிழருவி. அதாவது பரசு தன் தாயைக் கொன்ற வரலாறு மட்டும் போதும். அதற்கான தண்டனையெல்லாம் புராணத்தில் கிடையாது.

பிள்ளைக்கறி கேட்ட கடவுளே விமர்சனமின்றி வழிபடப்படும் போது கலவரத்தின் போது போலீசை சும்மாயிருக்கச் சொன்ன மோடி பிரதமராகக் கூடாதா என அவர் ஆன்மீக அறிவு யோசித்திருக்கலாம். நான்காயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிய இந்து மதத்தை நாம் புறக்கணித்து விட்டோமா?? பிறகு ஏன் பாஜகவை மட்டும் நாம் தள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் கருதியிருக்கலாம். குற்றவாளியை தெய்வமாக்கினால் குற்றம் திருவிளையாடலாகி விடும். பின்னாலிருந்து தாக்குவதை நியாயப்படுத்துவதுதான் காவாலித்தனம், தாக்கியவனை ராமனாக்குவது பக்தி. மணியன் பேசுவது அசல் ஆன்மீகம், அதைத்தான் அவர் இப்போது வலியுறுத்துகிறார். அதே பக்தனுக்குரிய சந்தேகமற்ற நம்பிக்கையில்தான் மோடியிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டு ஆதரிக்கலாமென்கிறார். வாக்கின்படி நடந்தால் வரம் இல்லாவிட்டால் திருவிளையாடல், சொற்பொழிவாளனுக்கு என்ன நட்டம்?

மணியனை ஒரு சாதாரண பேச்சாளராகவோ அல்லது அரசியல் ஆர்வலராகவோ மட்டும் கருதுவோருக்கு இதனை புரிந்துகொள்வது பிரச்சனையில்லை. வீட்டுக்குதவாத ஆண்கள் கூட சாமியாராகி ஒரு அடையாளத்தைப் பெற முயல்கிறார்கள். எல்லோரும் ஏதோ ஒருவகையில் தங்கள் இருப்பை வலுவாக்கிக் கொள்ள முனையும் சூழலில் தமிழருவி ஒரு விதிவிலக்கல்ல. உணர்வுபூர்வமாக மட்டும் அணுக கற்றுத் தரும் அனேக தமிழ்தேசிய இயக்கங்களால் இனி ஈழப்பிரச்சனையை முன்பிருந்த அளவு வீரியமாக கையாள இயலாது. ஆகவே தமிழர் ஆதரவு வாதம் அவருக்கு இனி பெரிய அளவில் உதவாது. தனக்கு அரசு கொடுத்த வீட்டைக் காலி செய்ய வைத்த பிரச்சனையை இன்னும் சில காலத்துக்கு மறக்க முடியாது என்பதால் திமுகவில் அவர் இணைய இயலாது, மேலும் அங்கே தமிழ்தேசிய டிபார்ட்மென்ட்டை சுபவீ கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிமுகவைப் பற்றி கேட்கவே வேண்டாம், சொந்தமாக வாக்கியம் அமைக்கத் தெரிந்திருப்பதே அங்கு கட்சி விரோத நடவடிக்கை. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் பக்கம் ஒதுங்கலாம் என்றால் காந்தியவாதியின் மனசாட்சி தடுக்கிறது. மேலும் அவர்களே ஜெயாவின் நிழலில் இடம் கிடைக்குமா என ஏங்கி நிற்கும் வேளையில் இவரை கண்டு கொள்ளக் கூட ஆளிருக்காது. இந்த நிலையில் எஞ்சியிருப்பது தமிழகத்தின் அரசியல் அநாதைகளை ஒன்றினைக்கும் வேலை மட்டும்தான்.

ஆம்வே, ஈமு கோழி, காந்தப் படுக்கை போன்ற திட்டங்களை நல்ல முதலீடு என நம்பி பணம் போட பலர் காத்திருக்கும் நாட்டில் மோடி பெயரில் ஒரு மல்டி லெவல் மார்கெட்டிங் ஆரம்பமானது… அதில் முதலில் சேரும் உறுப்பினர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முதல் உறுப்பினராக தமிழருவி இணைந்திருக்கிறார், இன்னுமிரண்டு உறுப்பினர்களையாவது இணைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. அதற்கான முயற்சியைத்தான் அவர் எடுக்கிறார், தொட்ட தொழிலெல்லாம் துலங்காத வைகோவும், புதிய பங்குதாரர்களைத் தேடும் நிலையில் இருக்கும் விஜயகாந்தும் அவருக்கு உத்திரவாதமான இலக்காக தெரிகிறார்கள். மற்றபடி, மணியன் ஒன்றும் நரியை பரியாக்கும் மாணிக்கவாசகருமல்ல, அருள்பாலிக்க மோடி சிவபெருமானுமல்ல (அவரே அமெரிக்காவின் சாப விமோசனத்துக்கு காத்திருக்கும் இறைத் தொண்டர்தான்).

இல்லை அவர் அப்பழுக்கற்றவர், ஈழப் படுகொலைக்கு பழி தீர்க்க காங்கிரசை ஒழிக்கவே இந்த முடிவுக்கு வந்ததாக நீங்கள் கருதினால் அதுதான் மிகப் பெரிய முட்டாள்தனம். புலிகளின் யாழ்பாண முற்றுகையின் போது சிங்கள வீர்ர்களைக் காப்பாற்ற வான் படையை அனுப்புவோம் என இந்தியா சொன்னது பாஜக ஆட்சியில்தான். காங்கிரசுக்கும் எங்களுக்கும் ஈழப் பிரச்சனையில் எந்த வேறுபாடும் இல்லை என பாஜக பலமுறை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. இப்போது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் எதிரியான சுப்பிரமணியசாமி அங்கேதான் அடைக்கலமாகியிருக்கிறார். மோடி தமது எந்த வீர உரையிலும் இலங்கை அரசின் கொலை வெறி பற்றியோ தமிழ் மக்கள் துயரம் பற்றியோ பேசியதில்லை. இந்த கட்சியை ஆதரித்து காங்கிரசை பழிவாங்குவதென்பது வன்புணர்ச்சி செய்தவனை பழி வாங்க பாதிக்கப்பட்டவளை விபச்சாரம் செய்யச் சொல்வதற்கு ஒப்பானது.

மன்மோகனை ஸ்பான்சர் செய்த கம்பெனிகள்தான் மோடியை இப்போது ஆதரிக்கின்றன. மோடியும் தமது ஆட்சி எந்த வகையில் மன்மோகனுக்கு மாற்றாக இருக்கப்போகிறது என்பதை சொல்வதில்லை. இப்போதெல்லாம் அவர் வாயிலிருந்து குஜராத் வளர்ச்சி பற்றிய பெருமிதங்களும் வருவதில்லை, ஃபாசிஸ்டுகளின் இறுதி ஆயுதமான பயமுறுத்தலும் வெற்று சவாலும்தான் அவரது சமீபகால உரைகளை ஆக்கிரமிக்கிறது. கற்றாய்ந்த அறிஞரான மணியன், மோடியின் வளர்ச்சிப் பித்தலாட்டத்தையும், அவர் குஜராத்தை கொலைக் களமாக்கியதையும் அறியாதவராக இருக்க இயலாது. இருந்தும் அவர் மோடியை ஆதரிக்க முன் வருகிறார் என்றால், அவரது நேர்மை அல்லது அறிவாற்றல் இரண்டில் ஒன்று பொய்யென்றாகிறது.

தமிழருவி மணியன் நல்லவரோ, கெட்டவரோ அல்லது நடுவாந்தரமானவரோ… யாராயிருப்பினும் அவரால் இந்திய ஜனநாயக அமைப்பில் மன்மோகனுக்கு எதிராக மோடியைத்தான் நிறுத்த முடிகிறது. கொலு பொம்மையை மாற்றி வைக்கும் சம்பிரதாயத்தை இவர்கள் தேர்தல் ஜனநாயகமென்கிறார்கள். ஒரு பொருளாதாரத் தீவிரவாதியை தோற்கடிக்க இன்னொரு பொருளாதார மற்றும் மதத் தீவிரவாதியை மாற்றாக வைக்கும் தேர்தல் முறையும் அதனை ஆதரிக்கும் நிலைக்கு ஒரு நேர்மையான!! காந்தியவாதி ஆளாவதும் காட்டுவது இந்தியாவின் அரசமைப்பு முற்றாக மக்கள் விரோதமானது என்பதைத்தான். அதனை புரிந்து கொள்ள தமிழருவி மணியன் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். அவரது சமீபத்திய முயற்சிகளால் விளைந்த ஒரே நல்ல விடயம் இதுதான்.

பூசலார்
பூசலார்

தலைப்பு புரியாதவர்களுக்கு :

பூசலார் நாயனார் என்பவர் தன் மனதுக்குள் ஒரு கோவிலை கட்டினாராம். அந்த கோயிலைத் திறக்க நாள் வேறு குறித்தாராம். அதே நாளில் அந்நாட்டு அரசனும் தான் கட்டிய கோயிலை திறக்க முடிவு செய்ய, இறைவனோ பூசலார் நாயனார் இதயத்தில் கட்டிய கோயில் திறப்பு விழாவுக்கே செல்வேன் என ராஜாவின் கனவில் வந்து சொன்னாராம். இதுதான் பூசலார் சிவனின் கடாட்சம் பெற்ற கதை.

அந்த கோயில் பூசலாருக்கும் சிவனுக்குமான ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அவ்வளவுதான். புத்தியிருப்போருக்கு அது ஒரு சூனியம் மட்டுமே. மணியன் கட்டிக் கொண்டிருக்கும் மனக்கோட்டையும் அத்தகையதே, அதனால் அவருக்கு நாயனார் பட்டம் வேண்டுமானால் கிடைக்கலாம், தமிழ் உணர்வாளர்களுக்கு ஆகப்போவது எதுவுமில்லை.

– வில்லவன்