privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபிஞ்சுக் குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா

பிஞ்சுக் குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா

-

பள்ளி மாணவர்களே உஷார்….! பிஞ்சுக்குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா !

மிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவரங்களோடு ஆதார் அடையாள எண்ணையும் நவம்பர் இறுதிக்குள் இணைக்குமாறு தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆதார் எண்
மாணவர்களுக்கு ஆதார் எதற்கு?

கேஸ் மானியம் உள்ளிட்ட அரசின் உதவிகள் அனைத்திற்கும் இனி ஆதார் அவசியம் என மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் திட்டத்தை உச்சநீதிமன்றம் “இதற்கெல்லாம் ஆதாரை கட்டாயபடுத்த கூடாது” என இடைக்கால தீர்ப்பை வழங்கியதை அனைவரும் அறிவோம்.

ஆனாலும் ‘ஆதாரை நடைமுறைப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று’ என வழக்கில் மேல்முறையீடு செய்து கொண்டே மக்களிடம் ஆதார் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு.

உண்மையில் மானியம் தான் பிரச்சனை என்றால் ஏன் அனைவரும் ஆதார் எண் எடுக்க வேண்டும் என கேள்வி எழும் போது “வேண்டும் என்றால் எடுத்து கொள்ளுங்கள் அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு இத்தகைய இழப்புகளை மக்கள் சந்த்தித்து தான் ஆக வேண்டும்” என பல்வேறு விளக்கங்களை அவிழ்த்து விட்டு கொண்டே ஆதார் சேகரிப்பில் அரசு தீவிரமாக உள்ளது.

முதலில் ஆதார் எண் என்றால் என்ன வென்று பார்த்து விடலாம். ஒருவருடைய கருவிழி ரேகையும், ஐந்து விரலின் உள்ளிட்ட கைவிரல் ரேகையும் சேகரிக்கபட்டு 12 இலக்க எண் ஒன்று அவருக்கு கொடுக்கப்படும்.

இத்தகைய ஆதார் எண்ணைத்தான் தற்போது பள்ளி மாணவர்களுக்கு “இருந்தால் இணைக்கவும்” என கட்டாயமில்லாதது போல சொல்லி கட்டாயப்படுத்துகிறது அரசு. ஆனால் பல பள்ளிகளில் ஆதார் கட்டாயம் என மாணவர்களை இணைப்பதாக தகவல் வந்து உள்ளது.

கண்காணிப்பு கேமரா
“அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி 7-க்குள் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும்”

மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதார் எண் இல்லை என்பதை காரணமாக காட்டி SC / ST மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பினை கொடுக்க மறுத்து உள்ளது ஒரு பள்ளி. இது குறித்து தி இந்து நாளிதழில் வந்த செய்தி இதோ No Aadhaar, no scholarship to Jharkhand SC, ST students

மாணவர்களுக்கு ஆதார் எதற்கு எனக் கேட்டால், பள்ளியில் பாதியில் நிற்கும் மாணவர்கள் குறித்த விவரங்களை இதன் மூலம் எளிமையாக கண்காணித்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவும் என்ற அரசின் கூற்றை மேற்கண்ட ஜார்கண்ட் பள்ளியின் செய்தி ஒன்றே போதும் “பொய் என்று நிறுவுவதற்கு”….

இப்படி ஆதாரை மாணவர்களுக்கு கட்டாயப்படுத்தும் அரசு நடவடிக்கையோடு சென்னையின் அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி 7-க்குள் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது சென்னை மாநகர போலீஸ்.

கல்வி என்பது மாணவர்களின் உரிமை என்பதை மாற்றி அது கல்விக் கொள்ளையர்களின் கொள்ளைக்கான ஒரு சரக்காக ஆக்கி கொஞ்சம் கொஞ்சமாக அரசுப்பள்ளிகளை மூடி வரும் அரசு, மாணவர்களின் கல்வி பறி போவது குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதை நம்புவதற்கு எந்தவித அடிப்படையும் இல்லை. இதை ஒவ்வொரு மாணவனின் பெற்றோரும் உணர முடியும்.

இருக்கும் அரசு பள்ளிகளில் அனைத்திலும் ஆசிரியர்கள், வகுப்பறை கட்டிடங்கள், நாற்காலிகள், சாக்பீஸ் முதல் குடிதண்ணீர், கழிப்பறை வரை எந்த வித வசதிகளும் இல்லாமல் அரசு பள்ளிகளை திட்டமிட்டு ஒழிக்கும் அரசின் சதிதிட்டத்தை ஒரு அரசு பள்ளிக்கு சென்று பார்த்தாலே அறியலாம். இப்படி கழிப்பறை இல்லாத காரணத்தினாலேயே மாணவிகள் மிகப்பெரும் அளவில் பள்ளிகளிலேயே தனது படிப்பை நிறுத்திவிடுவதாக அரசாங்க புள்ளிவிவரங்களே கூறுகின்றன.

கண்காணிப்பு
பள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம் ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்?

இப்படி பள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம், அதற்கு கூட உச்சநீதிமன்றம் ஆணையிடும் நிலையில் உள்ள ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்?

இன்றைக்கு கல்வி உரிமைக்காக மட்டுமல்லாது ஈழம் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் பிரச்சனைக்காகவும் வீதியில் இறங்கி போராடும் ஆற்றல் கொண்ட ஒரு வர்க்கம் இருக்கும் என்றால் அது மாணவர் வர்க்கமாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு உலகம் முழுவதும் நித்தம் நித்தம் நடக்கும் மாணவர் போராட்டங்களே சாட்சி !

அத்தகைய மாணவர் வர்க்கத்தின் போராட்டத்தை மழுங்கடிக்கவும், வேவு பார்ப்பதற்கும் தான் இத்தகைய ஆதாரும் கண்காணிப்பு கேமராக்களும்.

மக்கள் அனைவருக்கும் ஆதார் எண், பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா, மாணவர்களுக்கு ஆதார் எண், வீட்டு வாடகைதாரர் விவரங்கள் போலீசுக்கு தர வேண்டும் என அனைத்துமே இந்த மக்கள் விரோத அரசு மேலும் மேலும் பாசிசமாகி வருவதை தான் காட்டுகிறது என்பதை தான் மாணவர் வர்க்கமாகிய நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அப்போது தான் ஆதார் எண், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அரசின் அனைத்து பாசிச நடவடிக்கைகளையும் நாம் முறியடிக்க முடியும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

– இலக்கியன், புமாஇமு