privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்சு.சாமி உருவப்படத்திற்கு செருப்படி - உச்சநீதிமன்ற உத்திரவு நகல் எரிப்பு !

சு.சாமி உருவப்படத்திற்கு செருப்படி – உச்சநீதிமன்ற உத்திரவு நகல் எரிப்பு !

-

மதுரை

கொள்ளையடிக்க தில்லைக்கோயில் மீண்டும் தீட்சிதர்களிடம் ஒப்படைப்பு
உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து – துணைபோன சு.சாமி உருவப்படத்தை செருப்பால் அடித்து – எரித்து ஆர்ப்பாட்டம்

மனித உரிமைப்பாதுகாப்புமையம் மதுரைமாவட்டக்கிளை சார்பாக தில்லை கோவிலை தீட்சிதர்களிடம் மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தை கண்டித்து 07.01.2013 காலை 10.00 மணியளவில் மதுரை உயர்நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லை கோவிலை ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி, உச்சநீதிமன்ற நீதிபதி சவுகான் கூட்டாக சதி செய்து தீட்சிதர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளதின் பின்புலத்தை அம்பலப்படுத்தி தொடக்கத்தில் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன. உச்சநீதிமன்றம் பார்ப்பனர்களுக்கு ஆதரவான மனுநீதியை அமல்படுத்துகின்ற உச்சிக்குடுமிமன்றமாக இன்னமும் இருந்து வருகின்றது என்பதற்கு இந்த தீர்ப்பு மீண்டும் ஒரு ஆவணமாக வழங்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர். திருநாவுக்கரசு அவர்கள் பேசும் போது, “இந்தத் தீர்ப்பு தமிழ் மக்களுக்கு எதிரான தீர்ப்பு. நடராஜர் கோவிலை தீட்சிதர்களிடம் ஒப்படைக்க கூறுவது அநியாயமானது. உச்சநீதிமன்றத் தீர்ப்பேயானாலும் அதுவிமர்சனத்திற்குரியது தான் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம் இங்கு நடந்து வருகிறது. இந்த அநீதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் ம.உ.பா.மையத்துடன் இணைந்து போராட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

சமநீதி வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள் கனகவேல், ராஜேந்திரன், கதிர்வேல் ஆகியோர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வின்சென்ட் அவர்கள் பேசும் போது, “உச்சநீதிமன்றம் பார்ப்பன மயமாகியிருக்கிறது. பார்ப்பனர்கள் தங்களுடைய கவுரவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக மற்றவர்களுடைய உரிமைகளைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவர்கள். அந்த அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் மக்களின் சொத்தாகிய தில்லை கோவிலையும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் தீட்சிதர்களிடம் ஒப்படைத்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பு அல்ல. சுப்பிரமணியசாமியினால் வாங்கப்பட்ட தீர்ப்பு. இதற்கெதிராக ம.உ.பா. மையம் தொடர்ந்து போராடி வருகிறது. இப்போராட்டத்தோடு நாம் இணைந்து செயல்படவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கறிஞர் சங்க இணைச்செயலாளர் வழக்கறிஞர் அப்பாஸ் பேசும் போது, “மனித உரிமைப்பாதுகாப்பு மையம் ஒரு போராட்டத்தை கையில் எடுத்தால் அதை விடாப்பிடியாக இறுதி வரை போராடும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல இந்த தில்லை கோவில் வழக்கினை பொறுத்தவரையில் ஆரம்பம் முதற் கொண்டு ம.உ.பா. மையம் மிகவும் கடுமையாக போராடி வருகிறது. அதனால் நாம் அனைவரும் ம.உ.பா.மையத்தின் இந்த போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்து இப்போராட்டம் வெல்ல உதவ வேண்டும்” என்றார்.

ம.உ.பா.மையத்தின் துணைத்தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார்.

ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டத் துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும் போது,”தில்லை கோவிலை தீட்சிதர்களிடமிருந்து பறித்து தாங்கள் வைத்துக்கொள்ள மக்களோ வேறு யாருமோ விரும்பவில்லை. அது அரசின் கட்டுப்பாட்டில் மக்கள் சொத்தாக இருக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம். சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் எப்படி ஒரு சிறிய தீட்சிதர் கும்பலுக்கு மட்டும் சொந்தமாக இருக்க முடியும்.  தில்லை தங்களுக்கு சொந்தமானது என்று சொல்வதற்கு ஒரு சிறு ஆதாரம் கூட அவர்களிடம் கிடையாது. சட்டப்படி இந்த சொத்து தங்களுடையது என்று அவர்களால் நிறுவ முடியாத நிலையில் பார்ப்பனர்கள் தான் கோவில்களுக்கு உரிமை படைத்தவர்கள் என்ற மனுதர்மத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பினை நீதிபதி சவுகான் வழங்கியுள்ளார். அரசியல் சட்டம் பெரிதா, ஆகம விதிகள் பொிதா என்றால் ஆகம விதிகள் தான் பெரிது, அது அவர்களது உரிமை, அதிலும் தீட்சிதர்கள் ஒரு தனிவகைப்பட்டவர்கள் என்று நீதிமன்றம் கூறுகிறது. அவர்கள் தனிவகைப்பட்டவர்கள் என்பதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது. சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி, தீட்சிதர்களின் கூட்டுச் சதியே இந்தத் தீர்ப்பு. இது தமிழர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய இழிவாகும். இந்தத் தீர்ப்பு தமிழனுக்கு பெரிய அவமானம் இதை துடைத்தெறிய நாம் தொடர்ந்து போராடவேண்டும்” என்றார்.

ம.உ.பா.மையம், மதுரை மாவட்டக் கிளையின் மாவட்டச் செயலாளர். லயனல் அந்தோணிராஜ் பேசும் போது, “வழக்கைப் பற்றி நீதிபதிகள் எவ்வித ஆய்வும் செய்யாமல் முன்முடிவோடு தீட்சிதர்களிடம் கோவிலை ஒப்படைப்பதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று நீதிமன்றத்திலேயே வெளிப்படையாக சவுகான் பேசியுள்ளார். பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கினால் மோட்சமும் புண்ணியமும் கிடைக்கும் என்ற அடிப்படையில், ‘நான் ஓய்வு பெறப்போகிறேன் போகும் போது ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்’ என்ற மனுதர்ம நீதியை கடைபிடித்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். தில்லை கோவில் போராட்டம் இன்று தொடங்கியது அல்ல, தீட்சிதர்களுக்கு இன்று கிடைத்துள்ள இந்த வெற்றி நிலையானதுமல்ல. மக்களைத் திரட்டி போராடி மீண்டும் தில்லைக் கோவிலை கைப்பற்றியே தீருவோம்” என்றார்.

செயற்குழு உறுப்பினர் சி.ராஜசேகர் நன்றி தெரிவித்தார். வழக்கறிஞர்கள், ம.உ.பா.மைய உறுப்பினர்கள் தோழமை அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை.

திருச்சி

மக்கள் சொத்தான தில்லை சிதம்பரம் கோயிலை தீட்சிதர் கொள்ளைக் கூடாரமாக்கி தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எரித்து போராட்டம் !

“தில்லைக் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தியது செல்லாது” என உச்சநீதிமன்றம் தடைவிதித்து சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை கண்டித்து HRPC திருச்சிக் கிளை சார்பில் எங்களுடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்க திருச்சி நீதிமன்ற வாயிலின் முன்பு 07.01.2014ம் தேதியன்று உச்சநீதிமன்ற உத்தரவின் நகலை கொளுத்துவது என்று முடிவு செய்தோம். இதை விளக்கி ஆயிரக்கணக்கில் பிரசுரம் அடித்து விநியோகிக்கப்பட்டது. எரிப்பு போராட்டம் பற்றி போஸ்டர் ஒட்டப்பட்டது.

காலை 11 மணிக்கு சுமார் 15க்கும் மேற்பட்ட தோழர்கள் கைகளில் முழக்க அட்டை மற்றும் கோரிக்கை பேனரை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டு நீதிமன்றத்திற்குள்ளேயே ஒரு முறை ஊர்வலமாக வந்தோம். பொதுமக்களும் வழக்கறிஞர்களும் ஆர்வத்துடன் கவனித்தார்கள். நீதிமன்ற பணியாளர்களும் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து வந்து ஆர்வத்தோடு கவனித்தார்கள். நீதிமன்ற வளாகம் பரப்பரப்பாக இருந்தது.

முழக்கமிட்டுக் கொண்டே தோழர்கள் வாயிலை நோக்கி வந்தனர். ஏராளமான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தார்கள். வாயிலுக்கு வந்தவுடன் சிறிது நேரம் முழக்கமிட்டோம். பிறகு உச்சநீதிமன்ற உத்தரவு நகலுக்கு தீவைக்க முயன்றோம். சுற்றிலும் குழுமியிருந்த போலீசார் தீவைக்க விடாமல் மல்லுக்கட்டி நகலை பிடுங்கினர். இதனால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளும் பரபரப்பும் ஏற்பட்டது. அதையும் மீறி தீவைத்தோம். கைது செய்து ஒரு கல்யாண மண்டபத்தில் வைக்கப்பபட்டு பின்னர் விடுவிக்கப்பட்டோம்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
திருச்சி கிளை