Tuesday, August 9, 2022
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் கடலூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரின் ஆதிக்க சாதி வெறி

கடலூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரின் ஆதிக்க சாதி வெறி

-

புழு பூச்சிகள் மனிதனாக பரிணமித்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதன் நாகரீக நிலையை இன்னும் அடையவில்லை. தமிழகத்தில் ஆதிக்க சாதி வெறியின் கொடுங்கரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில் 700 குடும்பங்களைக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வன்னிய சாதியைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் முதல் முதலாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வன்னிய சாதி அரசியல்
வன்னியர் சாதி அரசியல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட புலியூர் காலனியை சார்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கடந்த 2/01/2015 அன்று காலை 8 மணியளவில் அரசு பேருந்தில் கல்லூரிக்கு பயணித்து கொண்டிருந்த போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகனின் சொந்த வகையறாக்களால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

‘தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்-மாணவர்கள் நாகரீகமான உடையணியக் கூடாது, சட்டையை அயன் பண்ணி போடக்கூடாது. காலில் ஷூ போடக் கூடாது. பேருந்துகளில் சத்தமாக பேசக்கூடாது. ஆதிக்க சாதி பெண்கள் நிற்கும் பகுதிகளில் கண்டிப்பாக நிற்கக் கூடாது’ என்பன போன்ற எழுதப்படாத சட்டங்கள் இந்த முந்திரி காட்டு கிராமங்களில் ஆதிக்க சாதியினரால் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ‘சட்டங்களை’ மீறியதற்காக பேருந்தில் இருந்த புலியூர் த.வா.கட்சி சாதி வெறியர்கள், “என்னடா பரத் தே…… பயனுகளா உங்களுக்கெல்லாம் திமிர் ஏறிப் போச்சி” என்று திட்டிக் கொண்டே யாருக்கோ போன் போட்டு, “சேரிப்பயனுங்க எங்ககிட்ட திமிறா பேசுறானுங்க உடனே கிளம்பி வாங்க” என்று அழைத்தனர். தொடர்ந்து அம்பலவாணன் பேட்டையில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் பேருந்தை வழி மறித்தனர். அவர்களுடன், ஏற்கனவே பேருந்திற்குள் இருந்த த.வா.கட்சியினர் 20 பேர் சேர்ந்து 5 தாழ்த்தப்பட்ட இளைஞர்களை உருட்டுக் கட்டையாலும், கற்களாலும் தாக்கினார்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்களின் ஷூவை பிடுங்கி அடித்தார்கள்.

தாக்கப்பட்ட மாணவர்கள் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்திற்கு சென்று எழுதிக் கொடுத்த புகார் மனுவை வாங்காமல்,

“நீங்கள் எல்லோரும் 108-ல கடலூர் அரசு மருத்துவமனைக்கு போங்க, நாங்கள் அங்கு வந்து விசாரித்து வழக்கு பதிவு செய்கிறோம்” என அனுப்பியது போலீசு. தலையில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் மயக்க நிலையில் இருந்த ஒரு மாணவரிடம் அசிங்கமாகப் பேசுதல், கொலை செய்வதாக மிரட்டுதல், கட்டையால் அடித்தல் என்ற முறையில் புகார் மனு எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.

அடிபட்ட மாணவர்கள் தலை, உடம்பு பகுதிகளில் ரத்தம் ஒழுகியவாறு 108-ல் ஏற்றப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் வந்து இறங்கினர். அதே பகுதியைச் சார்ந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் கடலூர் பகுதி தோழர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்தனர். புலியூர் தோழர்களும் கடலூர் பகுதி பு.மா.இ.மு செயலாளர் கருணாமூர்த்தியும், தோழர்களும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட இணைச் செயலர் செந்தில் குமார் உடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களுடன் வந்திருந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் ,

“ஆதிக்க சாதியினரோடு போலீசு சேர்ந்துகொண்டு தலித் இளைஞர்கள் மீது சுமார் 30-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அவற்றைத் திரும்ப பெற வேண்டும். தாக்குதல் நடத்திய த.வா கட்சியை சார்ந்த குண்டர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து புகார் கொடுக்கலாம்” என்று கோரப்பட்டது.

சிறிது நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் தாமரைசெல்வன் காரில் வந்து இறங்கி பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு, அங்கு கூடி இருந்தவர்களையும் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு, “இன்று வெள்ளிக்கிழமை. திங்கள்கிழமை நாம்  எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அனைவரும் இப்போதைக்கு கலைந்து செல்லலாம்” என்று கூறினார். நடந்த சம்பவத்தையும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் புகைப் படத்தையும் பேஸ்புக்கில் போட்டு விட்டுக் கிளம்பிவிட்டார்.

பு.மா.இ.மு தோழர்கள் உறவினர்கள் மற்றும் வி.சி கட்சியை சார்ந்தவர்கள், புலியூர்காரர்களை மருத்துவமனையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அறிவிக்கப்படாத பேரணியாக, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும்படி அழைத்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரும், தோழர்களும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து  புகார் மனுவை கொடுத்தனர். அவர் “கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறினார். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் சடங்கு அளவிற்குக்கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த இளைஞர்கள், “ஆண்டாண்டு காலமாக நாங்கள் நல்ல சட்டை போடமுடியாது தோழர். எங்கள் கருத்தை நாங்கள் சத்தமாக பேச முடியாது. வன்னியர்கள் எங்களை அடிச்சிட்டு எங்கள் மேலேயே வழக்கு போட்டுவாங்க. எங்க மேல ஆடு திருடினான், கரும்பை கொளுத்திட்டான் என்று படிச்ச பசங்க மேல போட்ட வழக்கு மட்டும் சுமார் 30 வழக்குகள் இருக்கும். ஆனால் அவங்க எவ்வளவு அடிச்சாலும் நாங்கள் நீட்டாத்தான் சட்டையைப் போடுவோம். எந்த காரணத்துக்காக அடித்தார்களோ அதற்கு எதிராக இன்று நாங்கள் எல்லோரும் அயன் பண்ண பேன்ட், சட்டையை, ஷூவையும் போட்டுக்கிட்டு வந்துள்ளோம்” என்று ஆத்திரம் பொங்க பேசினார்கள்.

4/01/15 அன்று கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டிருந்த மாணவர்களுக்கு எந்த விதமான மருத்துவமும் பார்க்காமல் 108 ஆம்புலன்சில் போட்ட இரத்தக் கட்டை பிரித்து கூட பார்க்காமல், அது எப்படி இருக்கிறது என்று தொட்டுக் கூட பார்க்காமல், “உங்க உடலுக்கு எந்த பிரச்னையும் இல்லை எல்லோரும் இப்போதே டிச்சார்ஜ் ஆகிடுங்க” என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்கு மாணவர்கள் “எங்களுக்கு மருத்துவம் பார்க்காமல் இப்படி வெளியேற்றுவது சரியா டாக்டர்” என கேள்வி எழுப்பியதற்கு “நான் டாக்டரா நீங்க டாக்டரா” என்று கூறி வெளியேற்ற முயற்சி செய்தனர். பு.மா.இ.மு தோழர்கள் மருத்துவமனைக்கு சென்று நிர்வாக அதிகாரியை சந்தித்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்காமல் வெளியேற்றுவது சரியில்லை என்று வாதிட்ட பிறகு மீண்டும் மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

5/1/15 அன்று மீண்டும் போலீசின் உதவியுடன் மாணவர்களை மிரட்டி வெளியேற்ற முயற்சி செய்தார்கள். அப்போது மாணவர்கள், “எங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை, ரத்தக் கட்டுகளை பிரித்துக்கூட பார்க்கவில்லை. குள்ளன்சாவடி காவல்துறையும் இதுவரை விசாரிக்க வரவில்லை” என்று பேசியதும், “உங்க மீது வழக்கு போடுவேன்” என மிரட்டியது போலீசு.

வி.சி.கட்சியினர் பெருங்கூட்டமாக திரண்டுவந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களிடம், “எங்களை எதற்குடா கூப்பிடல. அந்த மாணவர் அமைப்புகாரனுங்க கடைசி வரைக்கும் உங்க கூட இருப்பாங்களா? நாங்க வேணுமா வேணாமா? எங்களை மீறி நீங்க என்ன செய்து விட முடியும்” என்று மிரட்டினர். “உங்களை எவன் டிஸ்சார்ஜ் பண்ணச் சொன்னான்” என்று மருத்துவமனையின் பெருக்கும் பெண்களையும், மாத்திரை மருந்து தரும் நர்சுகளையும் மிரட்டிக் கொண்டிருந்தனர்.

தோழர்கள் மருத்துவமனை நிர்வாகி சாயிலீலாவை சந்தித்து பேசுவதற்காக சென்றிருந்தபோது, “புலியூர் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை அவங்க வேண்டுமென படுத்துக்கொண்டு இருக்கானுங்க. சாதாரண காயத்தைக் காட்டிக் கொண்டு திமிராக பேசுறானுங்க” என ஒரு நர்சு அந்த அதிகாரியிடம் தவறான புகார் கூறியிருந்தார்கள்.

மருத்துவமனை நிர்வாகியிடம் தோழர்கள் “மாணவர்கள் மருத்துவமனையில் சேர்த்து நான்கு நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் 108 ஆம்புலன்சில் போட்ட கட்டை இன்றுவரை பிரித்து பார்க்கவில்லை. எக்ஸ்ரே ஸ்கேன் என எதுவும் எடுக்கவில்லை. ஒரு மாணவருக்கு இரண்டு நாட்களாக வயிற்றுப்போக்கு. மாத்திரை கேட்டுப் பார்த்து விட்டு வெளிக்கடைகளில் வாங்கி சாப்பிடுகிறார்கள். நோயாளிகளை வெளியேற்ற போலீசுக்கு மருத்துவமனையில் என்ன வேலை?” என்று கேட்டனர்.

“இவ்வளவு பிரச்சனை இருக்குன்னு தெரியாது. போலீசு உள்ளே வந்தது தப்பு. மாணவர்களை பார்க்க டாக்டரை அனுப்புறேன்” என்று கூறினார்கள்.

தோழர்கள் பேசிய விவரம் தெரியாத வி.சி. கட்சியினர் மீண்டும் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது ஒரு மருத்துவர் வந்து “போலீசு உள்ளே வந்தது தவறுதான். உங்களுக்கு சிகிச்சையில் சந்தேகம் இருந்தால் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுங்க. அதுல பிரச்சனை இருந்தா மீண்டும் மருத்துவமனையிலே இருங்க. இல்லைனா வெளியே போய்டுங்க” எனக் கேட்டதும் அதற்கு மேல் பேசத்தெரியாமல் வி.சி கட்சியினர் கையை பிசைந்து கொண்டு நின்றனர்.

உடனே தோழர்கள் குறுக்கிட்டு “சிகிச்சை பார்க்கவே இல்லை. நோயாளியின் பதிவேட்டில் அவர்களுடைய எடை, உயரம் இவையெல்லாம் தவறாக பதிவு செய்யபட்டுள்ளது. மேலும் ஆம்புலன்சில் முதல்உதவிக்காக போட்ட கட்டு இன்னும் பிரிக்காமல் இருக்கிறது” என்று விளக்கிபேசியதும் மருத்துவர் அமைதியாக மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்று விட்டார்.

போலீசு, மருத்துவமனை என்று எங்கு சென்றாலும் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களை விரட்டுவதற்கு எதிராக அவர்களை கண்டித்து ஆதிக்க சாதிவெறிக்கு பல்லக்கு தூக்கும் போலீசு என்ற தலைப்பில் போஸ்டர் போட்டு சம்பவம் நடந்த அருகாமையில் உள்ள கிராமங்களில் அம்பலப்படுத்தி ஒட்டப்பட்டது.

puliyur-caste-posterசம்பவம் நடந்த இரண்டு நாட்களில் போலீசு கைது நடவடிக்கைக்காக சென்றபோது வேல்முருகன் அண்ணன் திருமால்வளவன் கைதிகளுக்கு அடைக்கலம் கொடுததது மட்டும் இல்லாமல் “எங்க வீட்டுக்கு வந்து கைது செய்திருவீங்களா” என்று திமிராக பேசி பக்கத்தில் இருந்த கழியை எடுத்து போலீசை விரட்டி அடித்து இருக்கிறார். பின்னர்தான் கொலை மிரட்டல், தகராறு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி இந்த சம்பவத்துக்கு பக்கபலமாக த.வா.க வேல்முருகன் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

மேலும் 4/01/15 அன்று வேல்முருகன் அப்பா இறந்ததற்கு படத் திறப்பு விழாவிற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், ம.தி.மு.க வைகோ, சீமான் வந்தார்கள். இறந்த அன்று வந்திருந்த வி.சி.க திருமாவளவனும் படத்திறப்புக்கு வருவதாக இருந்தார். மக்கள் அவர் வந்தால் வழிமறித்து கேக்கலாம் என்று இருந்த செய்தி தெரிந்த பிறகு நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்து விட்டார். ஆனால் அந்தப் பகுதி வி.சி.கவை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

இப்படிப்பட்ட  வேல்முருகன்தான் தமிழர்களின் பாதுகாவலன் என்றும் திருமாவளவன் தலித்துகளின் அண்ணன் என்றும் வலம் வருகின்றனர். தலித் அமைப்புகள், 150 தமிழின அமைப்புகள், பல்வேறு தொழில் சங்கங்கள் இணைத்து கொண்டு தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகிறார்கள். பா.ம.கவிற்கும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. இருவரும் தமிழினம், ஈழம் என்று ஒன்றையும் விட்டு வைக்க மாட்டார்கள். மேலோட்டமாக தலித்துக்களை ஆதரிப்பதாக கூறிக் கொண்டு அடிப்படையில் ஆதிக்க சாதிவெறியை பாதுகாப்பார்கள்.

உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடையும் இவர்களை அம்பலப்படுத்தி,

 • தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்,
 • அவர்கள் மேல் போட்டுள்ள வழ்க்குகளை வன்கொடுமை சட்டத்துக்கு மாற்ற வேண்டும்

என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட இருக்கிறோம்.

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.

 1. இதில் த.வ.க.வைவிட உச்சகட்டப் பிழைப்புவாதத்தில் ஊறிவிட்ட வி.சி.க.வின் சீரழிவுதான் அதிகம் வெறுக்கக்கூடியதாகவும் கீழ்த்தனமானதகவும் இருக்கிறது. திருமா கட்சியைத் தொடங்கியபோது எங்களுக்கு விடிவு பிறக்குமென்று எங்கள் ஊர்களில்/சேரிகளில் பல இளைன்கர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அக்கட்சி பிற எல்லாக் கட்சிகளையும் போலவே சீரழிந்து போய், ஆனால் வெட்டிச் சவடாலுக்கு மட்டும் ‘தலித் உரிமை’, ‘விடுதலை’, ‘அதிகாரப் பகிர்வு’ என்று பேசிக்கொண்டு அவர்களின் அணிகளை/அப்பாவி தலித் இளைங்கர்களை ஏமாற்றி வருகின்றது. தலித் இளைன்கர்கள் வி.சி.க.வைப் புறக்கணிப்பதே சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறவும் விடுதலை அடையவும் முதல்ப்படி.

  • //puratchikara maanavar kku pathila padikkura manavar raa iruntha vela, soru kidaikkum. sathi veriyai thoondum vinavu pecha kekkathingooooo// இவர் என்ன சொல்றாருன்னா, சோறு வேல வெட்டி இல்லாமதான் இந்த ஈன சாதிப் பயலுவ பிரச்சின பன்றானுங்களாம். __ வேலையும், சோறும் தான் பிரச்சினை என்றால் அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சாதி அடிமைத்தனத்தின் ஊடாக எங்களுக்கு கிடைத்துதான் வந்துள்ளது. சோறும், வேலையும்தான் தேவையென்றால் எருமை மாட்டுக்கும் – உனக்கும், மனுசனுக்கும் என்னதாண் வித்தியாசம். சோடு சொரனை உள்ளவன் உன்ன மாதிரி பேசமாட்டான்.

 2. பேருந்தில்,
  “பெண்கள் நிற்கும் பகுதிகளில் கண்டிப்பாக நிற்கக் கூடாது” என்பன….

  முக்கியமான பிரசினையே இதுதான்.
  தலித் பெண்களின் பெற்றோர்கலும் இதனை விரும்புவதில்லை கண்டிக்கவே செய்வார்கள்.
  இதில் என்ன தவறு.

 3. தமிழக வாழ்வுரிமை!!!!!????? கட்சியின் அடிப்படையே சாதிதான்,அது சாதி கட்சிதான்,பெயரை மட்டும் யோக்கிய சிகாமணி போல் வைத்துக்கொண்டு,அருவெருப்பான சாதி அரசியல் செய்கிறார்கள்.
  இந்த சாதி அமைப்பின் தலைவரின் பேட்டி எல்லா பொது பிரச்சனைகளைப் பற்றியும்,சன் டிவியில் வந்துவிடும்.தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர வேறு எந்த சாதியினருக்கும் சாதிக் கட்சி தேவையில்லை,ஆனால் இங்கே கிட்டத்தடட எல்லா சாதியினரும் ஒரு சாதி கட்சி வைத்துள்ளனர்,அந்த கட்சிகளின் கூட்டங்களுக்கு போகிறவர்கள்,பேனர் வைத்து தெருவை நாறடிப்பவர்களுக்கு எல்லாம் ___________ உருப்படவே கூடாது.________ என் நாட்டையே வீணாடிக்கின்றார்கள்..1000 வருடங்களாக மனிதத் தன்மையே இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமைகள் செய்துவிட்டு,இப்போது அவர்களுக்கு கொடுக்கும் இட ஒதிக்கீட்டையும் மனசாட்சியே இல்லாமல் எதிர்க்கின்றார்கள்.அதைவிட கொடுமை,தங்களை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொண்டு,எங்களுக்கும் இடஒதிக்கீடு தரவேண்டும் என வெட்கமே இல்லாமல் பிச்சை எடுக்கின்றார்கள்.(20 வருடங்களுக்கு முன்பு எல்லா சாதியிலும் 75% பேர் சோற்றூக்கு வழியில்லாத அன்னாடங்காய்ச்சிகள்தான்).
  தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான கட்சிகள்,பொதுவுடைமை பேசுபவர்களெல்லாம்,தங்கள் அதிமே(ல்)தாவி தனத்தைக் காட்ட,தங்களை அறிவுஜீவகள் என நிரூபிக்க தாழ்த்தப்பட்டவர்களை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.இவர்கள் எப்படி சமத்துவதை வளர்க்கின்றார்கள் என்றால்,”அந்த ஜாதிக்காரன் உன்னைக் குனிய வைத்து கும்மியடித்தான்,நீயும் அவனை குனிய வைத்து கும்மியடிக்க வேண்டும்”என்பது போலதான்.இதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன நன்மை??? தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசாங்க சலுகைகளெல்லாம் வீணாக போகின்றன. என் சொந்த அனுபவம் ஒன்று “ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த என் முன்னாள் நண்பனுடன்(ஆம் முன்னாள்தான்) முதுகலை பொறியியல் படிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்,அவன் பணம் அதிகமாக செலவாகும் என்பதால் படிக்கவில்லை என்றான்.ஆனால்,தாழ்த்தப்பட்டவர்களுக்கான் முதுகலை பொறியியல் கட்டணத்தை அரசே செலுத்திவிடும்,கிட்டத்தட்ட இலவச கல்வி போலத் தான். இது அவனுக்குத் தெரியவில்லை,பொறியியல் படித்த ஒரு பையனுக்கு இந்தா சலுகைகலெல்லாம் தெரியவில்லை!!!நான் அவனிடம்,இந்த சலுகைகளைப் பற்றிக் கூற,அவன் நான் சாதிப் பற்றிப் பேசுவதாக எண்ணிக்கொண்டுவிட்டான்.இதைப் பற்றி அவனுக்கு யார் சொல்லியிருக்க வேண்டும்????யார் அவனுக்கு விழிப்புணர்வு தந்திருக்கவேண்டும்???விடுதலை சிறுத்தைகளும்,பொதுவுடைமைக்கட்சிகளும் தான்,ஆனால் அவர்கள் சொல்லித்தருவதெல்லாம் அம்பேத்கர் பேனர் வைப்பதுதான்(சத்தியமாக அது மட்டும்தான்) அல்லது புரட்சி செய்யக் கூப்பிடுகிறார்கள்,இங்கே என்ன சர்வதிகார ஆட்சியா நடக்கிறது?புரட்சி செய்ய?இவர்கள் அடிக்கும் கூத்துக்களைப் பார்க்கும்போது வயிறு எரிகிறது.
  தமிழகத்தில்,என் கண்ணுக்கு எதிரே பார்க்கிறேன்,75% 12 வயதிலிருந்து 30 வயதுக்காரர்களெல்லாம் இப்போது,சாதி பற்றாளர்கள்,இன்னும் 20 வருடம் கழித்து அவர்கள் சாதி வெறியர்களாக மாறுவார்கள்.இன்னும் 50 வருடத்துக்கு கண்டிப்பாக சாதி ஒழியாது.அப்போதும் விடுதலை சிறுத்தைகள் திருப்பி அடிக்க சொல்வார்கள்,பொதுவுடைமைக்காரர்கள் வெட்கமே இல்லாமல் புரட்சி செய்யக் கூப்பிடுவார்கள்.
  இப்போதே,மக்கள் மனரீதியாக பிளவுப் பட தொடங்கி விட்டார்கள்,முன்பு மக்களை ஒன்றினைத்த கடவுளோ,கட்சிகளோ,மொழியோ இப்போது ஒன்றினைக்க முடியாது.யாருக்கும் வெட்கமில்லை.ஆனால் பாரதி அன்றே சொல்லிவிட்டான்,நடிப்பு சுதேசிகளென்று.மக்கள் முன்பை விட முட்டாள் மாக்கள் ஆகிவிட்டார்கள்.பொய்யும்,புரட்டும் பேசுவனின் சொல் அம்பலம் ஏறுகிறது,இந்தியனாக வாழுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க