privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஐ.டி அப்ரைசல் ஒரு ஊழியரின் பார்வையிலிருந்து - வீடியோ

ஐ.டி அப்ரைசல் ஒரு ஊழியரின் பார்வையிலிருந்து – வீடியோ

-

வ்வொரு ஆண்டும் ஊழியர்களின் பணித்திறனை கணக்கிட்டு சம்பள உயர்வு/குறைவு அளிப்பதாக கூறி ஐ.டி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருவது தான் அப்ரைசல் என்ற மோசடி.

அப்ரைசல்
கடந்த ஆண்டு செய்த வேலைகளுக்கு பட்டை நாமமும், வரும் ஆண்டுகளில் வேலை செய்ய வைப்பதற்கான கேரட்டும் இங்கு கிடைக்கும்.

இந்தியாவில் பல ஐ.டி நிறுவனங்களில் பணித்திறன் அளவீட்டை (appraisal) இம்மாதம் ஆரம்பித்திருப்பார்கள். அதன்படி, ஊழியர்கள் கடந்த ஆண்டு செய்த வேலைகளையும் அதற்கான மதிப்பீட்டு புள்ளிகளையும் பரிசீலிக்கும் சடங்கு ஒன்று நடைபெறும். இதற்கு அப்ரைசல் மீட்டிங் என்று பெயர். கடந்த ஆண்டு செய்த வேலைகளுக்கு பட்டை நாமமும், வரும் ஆண்டுகளில் வேலை செய்ய வைப்பதற்கான கேரட்டும் இங்கு கிடைக்கும்.

அப்ரைசல் மீட்டிங் வைபவத்தின் முடிவு யாவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் ஆரம்ப நிலை ஊழியர்கள் ஒரு சில வருடங்கள் கழித்தே இதை புரிந்து கொள்கிறார்கள். அப்படி என்ன தான் அப்ரைசல் மீட்டிங்கில் நடக்கும் என்பதைப்பற்றிய தெலுங்கு குறும்படம் ஒன்று யூடியூபில் காணக்கிடைக்கிறது.

அப்ரைசல் முறை ஊழியர்களை பிளவுபடுத்தி, ஒருவரை மற்றொருவரின் போட்டியாளராக்கி அதன் மூலம் அவர்களை மேன்மேலும் சுரண்டுகிறது என்பன போன்ற அரசியல் விசயங்கள் படத்தில் பேசப்படவில்லை; ஆயினும் அப்ரைசல் முறை மோசடியானது என்பதை சாதாரண ஊழியரின் பார்வையிலிருந்து அம்பலப்படுத்துகிறது; அதிக ரேட்டிங் வாங்க வேண்டி ஊழியர்கள் எவ்வளவு அடிமைகளாக நடந்து கொள்கிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டுகிறது.

புரியாத மேனேஜ்மன்ட் வார்த்தைகளை கூறி ரேட்டிங்கை குறைக்கும் மானேஜர்களின் பொதுப்புத்தியை அழகாக சித்தரிக்கிறது இந்த படம்.  ஆண்டு முழுவதும் மாடாக உழைத்த ஊழியரிடம் ‘எதிர்பார்ப்புக்கு மேல் உழைக்கவில்லை’ என்று கூறி ரேட்டிங்கை குறைப்பது ஐ.டி நிறுவனங்களின் வழக்கம். இதற்கு சில மானேஜ்மென்ட் பாணி கதைகளை வேறு உதாரணமாக கூறுவார்கள். அதையும் கிண்டல் செய்கிறது இந்தபடம். “குழ்ந்தை தவழ்வது என்பது இயல்பானது தான். அதே குழந்தை எழுந்து நடப்பது தான் எதிர்பார்ப்பை தாண்டுவது” என்று குட்டிக்கதை சொல்கிறார் மானேஜர்.

ரெய்ஸ் த பார்
ஆண்டு முழுவதும் மாடாக உழைத்த ஊழியரிடம் ‘எதிர்பார்ப்புக்கு மேல் உழைக்கவில்லை’ என்று கூறி ரேட்டிங்கை குறைப்பது ஐ.டி நிறுவனங்களின் வழக்கம்.

முதலாம் ஆண்டு ரேட்டிங்கின் போது, கொடுக்கப்பட்ட வேலைகளை எல்லாம் சிறப்பாக செய்திருந்தாலும் சக ஊழியர்களுடன் பழகுவதில் பிரச்சனை இருப்பதாக கூறி குறைவான மதிப்பீட்டை அளிக்கிறார் மேலாளர். அடுத்த ஆண்டு முழுவதும் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்து செய்கிறார் ஊழியர்.

அடுத்த ஆண்டு அப்ரைசலில் வழக்கம் போல புரியாத மேனேஜ்மென்ட் வார்த்தைகளைக் கூறி “அது போன வருசம் இது இந்த வருசம்” என விளக்கி  மீண்டும்  குறைந்த புள்ளிகளையே அளிக்கிறார்.

குட் இனஃப்
ஊழியரால் நிறுவனத்துக்கு என்ன மதிப்பு கூடுதல் (value add) என்று கேட்டு விட்டு ஆவணப்படுத்தும் (documentation) வேலையை செய்திருக்க வேண்டும் என்கிறார்.

ஊழியரால் நிறுவனத்துக்கு என்ன மதிப்பு கூடுதல் (value add) என்று கேட்டு விட்டு ஆவணப்படுத்தும் (documentation) வேலையை செய்திருக்க வேண்டும் என்கிறார். விரக்தியில் வெளியேறும் ஊழியர் தான் அந்த வேலையை செய்ய போவதில்லை என்று சக ஊழியரிடம் கெத்தாக கூறிவிட்டு அடுத்த நிமிடமே அடுத்த ஆண்டு ரேட்டிங்கிற்காக உழைக்க ஆரம்பிக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டு ரேட்டிங்கின் போதும் அடுத்த சில நாட்களுக்கு ரகசியமாக மேலாளரை திட்டுவதும், “இனி கூடுதல் வேலை செய்ய மாட்டேன்” என்று சவடால் விடுவதும் அனைத்து ஐ.டி அலுவலகங்களிலும் நடக்கும் ஒன்று. சில நாட்களுக்குள் அடுத்த ஆண்டு ரேட்டிங்கிற்காகன வேலையை ஆரம்பித்திருப்பார்கள். இதைத் தாண்டி சிந்திப்பதில்லை.

படத்தில் வரும் ஐ.டி ஊழியருக்கு மேலாளரை அடித்து உதைக்கலாம் என்று தோன்றினாலும், கிடைக்காது என்று உறுதியாக தெரிந்தும் அடுத்த ஆண்டுக்கான ரேட்டிங்கிற்கு உழைக்க செல்கிறார். அதற்கும் பலனில்லை என்று அதற்கும் அடுத்த ஆண்டு தெரிந்த பிறகு, அதிகபட்சமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடுகிறார். அப்படி ஓடுவதையே வீரமானதாக இப்படம் சித்தரிக்கிறது.

அப்ரைசல் என்ற மோசடி குறித்த அரசியல் பார்வை இந்த படத்தில் சொல்லப்படவில்லை. படத்தின் நாயகனான ஐ.டி ஊழியரும் பின்னொரு சமயத்தில் மானேஜராகி தகிடுதத்தம் செய்வது போல முடிக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் இது சாத்தியமில்லை என்பதைத் தான் கூம்பு வடிவ நிறுவன அமைப்பும், ஐ.டி வேலை பறிப்புகளும் நமக்கு கூறுகின்றன. ஆனாலும் அப்ரைசல், ரேட்டிங், அப்ரைசல் மீட்டிங், மேலாளர்களின் மொழி முதலியவற்றை புரிந்துகொள்ள இப்படத்தை பார்க்கலாம்.

ndlf-it-wing-meeting-2

தொடர்பு எண்  9003198576
மின்னஞ்சல் combatlayoff@gmail.com

கற்பக விநாயகம்
அமைப்பாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவு.