Saturday, October 23, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கரகாட்டம் கறிவிருந்து காட்டு தர்பார் - ஸ்ரீரங்கம் நேரடி ரிப்போர்ட்

கரகாட்டம் கறிவிருந்து காட்டு தர்பார் – ஸ்ரீரங்கம் நேரடி ரிப்போர்ட்

-

ழல் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய சாட்டையடித் தீர்ப்பினால் முதுகுத்தோல் உரிந்து போன ஜெயலலிதாவுக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய கூட்டாளிகள் விசிறியால் ஒருபுறம் விசிறி அமைதிப்படுத்தி கொண்டிருந்த போது பிரம்மஸ்ரீ ஜெயாவுக்கு இழைக்கப்பட்ட ‘அநீதி’ கண்டு ஆர்த்தெழுந்த நீதியரசர்கள் ஜாமீன் வழங்கி மயில் இறகால் மருந்து தடவினர். சட்டத்தையும் நீதியையும் தாங்கள் விரும்பியபோதெல்லாம் வளைத்து பார்ப்பானுக்கு தனி நீதி என்பதையே இவர்கள் நிலைநிறுத்தி வந்திருக்கிறார்கள். முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தண்டனைக்குள்ளாகி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதவி இழக்கும் முதல் முதல்வர் என்ற சிறப்பு தகுதியை ஜெயலலிதா அடைந்ததன் விளைவாக நடைபெற்றதே திருச்சி – திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்.

ஊழல் குற்றவாளி ஜெயலலிதா
ஊழல் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய சாட்டையடித் தீர்ப்பினால் முதுகுத்தோல் உரிந்து போன ஜெயலலிதா பதவி இழந்ததால் நடக்கும் இடைத்தேர்தல்

“ஸ்ரீரங்கம் என் தாய் மண், என் சொந்த வீடு, தலைமுறை தலைமுறையாக என் முன்னோர் வாழந்து வந்த புண்ணிய பூமி. எனவே தான் என் இதயத்துடிப்போடு கலந்துவிட்ட உறவு திருவரங்கத்துக்கு உண்டு” என்றெல்லாம் பிதற்றும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு பித்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த இடைத்தேர்தல். இடைத்தேர்தல் என்றாலே அரசு எந்திரத்தின் ஆதரவுடன் ஆளுங்கட்சியே வெற்றிபெறும் என்பது ஊரறிந்த ஒன்று. எனினும், தமது ஓட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நெருக்கடியில் இருந்த பிரதான கட்சியான தி.மு.க தனது வேட்பாளரை அறிவித்த கையோடு பணப்பட்டுவாடா செய்ததிலும் முந்திக்கொண்டது.

பக்கம் பக்கமாக அறிக்கை விட்டாலும் பணபலமும், சாதிபலமும் அதிகார வர்க்கத்தின் ஆசியும் இல்லாவிட்டால் தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டியிருக்கும் என்பது ஓட்டுக் கட்சிகள் அனைவருக்கும் பொதுவானது. தலித் மக்கள் வாழும் கிராமங்களில் தனிசுடுகாடு, தனிபாதை, ஊருக்குள் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது போன்ற சாதிக் கட்டுப்பாடுகளை வன்மமான முறையில் அமல்படுத்துவதும், எதிர்த்து கேட்டால் கலவரம் செய்வதும் என சாதிவெறியாட்டம் போடும் முத்தரையர் சாதியின் ஆதிக்கம் நிறைந்த கிராமங்கள் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிகம் என்பதால், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் முத்தரையர் சாதியைச் சேர்ந்தவர்களையே தமது வேட்பாளர்களாக அறிவித்தன.

மக்களின் அடிப்படை பிரச்சனைகள் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து நிற்கும் போது அ.தி.மு.க வின் 27 எம்.எல்.ஏ க்கள் திருவரங்கத்தில் முகாமிட்டுக் கொண்டு தங்களின் ஜனநாயக கடமையாற்றினர். சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தது துவங்கி, பிரச்சாரத்தின் இறுதிநாள் வரை சகலவிதமான முறைகேடுகளிலும் அ.தி.மு.க ஈடுபட்டது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை விரிவாக மேற்கொண்டனர்.

தி.மு.க தரப்பில் ஓட்டுக்கு 500 ரூ, அ.தி.மு.க தரப்பில் முதல் முறையாக ஓட்டு போடுபவர்களுக்கு ரூ 5,000, பிறருக்கு ரூ 2,000 என கட்டுக்கட்டாய் கரன்சிகளை அள்ளிவிட்டனர். ஆட்சியில் இருக்கும் வரை கோடிகோடியாய் கொள்ளையடித்து சொத்து சேர்த்து கொள்வது, தங்களது தொழில் சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்திக் கொள்வது, பின் தேர்தல் நேரத்தில் கரன்சிகளை அள்ளிவீசி ஓட்டுக்களை பொறுக்குவது என்பது எல்லா இடைத்தேர்தல்களைப் போலவும் திருவரங்கத்திலும் நடைபெற்றது.

மக்களிடம் தங்கள் கட்சியின் கொள்கைகளை பேசி ஓட்டுவாங்குவது என்கிற அடிப்படை ஏற்கனவே தகர்த்தெறியப்பட்டுவிட்டது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற புதிய பொருளாதார கொள்கைகளை சர்வகட்சிகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன. உலகவங்கியின் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகள் வரை ஊடுறுவி விட்ட நிலையில் அவர்களின் உத்தரவுகளுக்கு நாய் ஆடினால் என்ன? நரி ஆடினால் என்ன?

எனவே, “போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்!” என்ற அடிப்படையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை விரிவாக மேற்கொண்டனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்கருத்துரிமை, பேச்சுரிமை பற்றி நீட்டி முழக்கும் ஆளும் வர்க்கங்கள் மாற்று அரசியலை முன்வைக்கும் இயக்கங்களுக்கு வாய்ப்பூட்டு போடும் விதத்தில் ‘நடுநிலை’யாளரான தேர்தல் கமிசன் மூலம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தினர். கடந்த காலங்களில் தேர்தல் புறக்கணிப்பு குறித்த தெருமுனைக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க இழுத்தடித்து காலம் கடத்துவதும், பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின் அனுமதி கிடைத்தாலும் கூட அதற்குள் கணிசமான காலம் விரையமாவதும் நடந்தது.  இம்முறை பிரச்சார இயக்கம் குறித்த நடவடிக்கைகள் எதற்கும் அனுமதி பெற கூடாது என முடிவெடுத்து பிரச்சாரங்களை துவங்கினோம். திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு ஊர்களுக்கும் செல்லும் பேருந்துகளில் ஏறி துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. மற்றொரு குழுவினர் கிராமப்புற பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு ஊர்களுக்கும் செல்லும் பேருந்துகளில் ஏறி துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. மற்றொரு குழுவினர் கிராமப்புற பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களின் எண்ணிக்கையை விட அங்கு வந்து இறங்கியிருந்த அ.தி.மு.க காரர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. திருவரங்கம் நகரம் முழுவதிலும் ஆளும் கட்சியினரின் ஆக்கிரமிப்புகளால் திணறியதை தினகரன் உள்ளிட்ட நாளிதழ்கள் அம்பலப்படுத்தியும், அரசு எந்திரத்தின் ஒத்துழைப்புடன் அ.தி.மு.க போட்ட ஆட்டம் அடங்கவில்லை. அ.தி.மு.க சார்பாக கிராமம், நகரம் வாரியாக 30 வாக்காளர்களுக்கு 20 பேர் என ஒதுக்கி ஓட்டுக்கள் விழுவதை உத்திரவாதப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
செஞ்சட்டை, பறையிசை, செங்கொடிகள் என குழுமணி, கீழமூலங்குடி, பணையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் வழியாக பெ.வி.மு தோழர்கள் தலைமையில் ம.க.இ.க உள்ளிட்ட தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரங்கள் மேற்கொண்டனர்.

தென்னந்தோப்புகளில் கரகாட்டம், கறிவிருந்து என அ.தி.மு.க வுக்கு போட்டியாக தி.மு.க வும் ஈடுகொடுத்தது. செஞ்சட்டை, பறையிசை, செங்கொடிகள் என குழுமணி, கீழமூலங்குடி, பணையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் வழியாக பெ.வி.மு தோழர்கள் தலைமையில் ம.க.இ.க உள்ளிட்ட தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரங்கள் மேற்கொண்டனர். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்களைத் திரட்டி தெருமுனைக்கூட்டங்கள், இரவு நேர கிராமக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ம.க.இ.க மைய கலைக்குழு தோழர்களின் பாடல்கள் மக்களை ‘உறக்கம்’ கலைய செய்தன.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்களைத் திரட்டி தெருமுனைக்கூட்டங்கள், இரவு நேர கிராமக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

முதலில் துண்டு பிரசுரம் கொடுத்து பேசச் சென்ற தோழர்களிடம், ‘நீங்க ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க’ என மக்கள் கேள்வி எழுப்பினர். பிரசுரத்தை படித்த மறுகணமே சிரிப்பதும், சிலர் வளைந்து நெளிந்து விளக்கம் கொடுப்பதும் என நடந்து கொண்டனர். அந்த பிரசுரத்தில் இருந்த வாசகங்கள் இவையே…

திருச்சி – திருவரங்கம் இடைத்தேர்தல்!
உங்கள் சூடு, சொரணை என்ன விலை?
கட்டுக்கட்டாய் கரன்சிமழை!
கரைபுரண்டு ஓடுது டாஸ்மாக்!
தென்னந்தோப்புகளில் கரகாட்டம், கறிவிருந்து!
காற்றில் பறக்குது தேர்தல் விதிகள்!
ஓட்டுப்பொறுக்கிகளின் காட்டுதர்பார்!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
உலக வங்கியின் அதிகாரம் ஊராட்சி மன்றம் வரை தலைவிரித்து ஆடும் போது வாக்குரிமை பற்றிய வாய்ச்சவடால் எதற்கு?

அத்தியாவசியப் பொருட்கள் முதல்
அத்தனையும் விலை உயர்வு!
மக்களின் ஆத்திரத்தை மடைமாற்ற
இலவசங்களால் வாய் அடைப்பு!
எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும்
மண்டை உடைப்பு!

உலக வங்கியின் அதிகாரம்
ஊராட்சி மன்றம் வரை
தலைவிரித்து ஆடும் போது
வாக்குரிமை பற்றிய வாய்ச்சவடால் எதற்கு?

பெட்ரோல், தொலைபேசி, மின்கட்டணம்
என சர்வத்தையும் தீர்மானிப்பது
ஓழுங்குமுறை ஆணையங்கள் எனும்போது
பாராளுமன்றமும் சட்டமன்றமும் எதற்கு
பன்னி மேய்ப்பதற்கா?

சின்னத்தை மாற்றி பயனில்லை…
சிந்திக்கும் முறையை மாற்று!
போலி ஜனநாயகத் தேர்தலைப்
புறக்கணி! மக்கள் அதிகாரத்திற்கான
கமிட்டிகளை கட்டி எழுப்பு!

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்” என தயங்கிய மக்களுக்கு நம்பிக்கையூட்டி பேசினர் தோழர்கள்.

தோழர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து பேசினர்.

“நாங்களெல்லாம் இப்போது தான் முதல் முறையாக ஓட்டுப் போட போகிறோம். யாருக்கு போடுவது என்று குழப்பமாக இருந்தது. நீங்களோ ஓட்டே போட வேண்டாம் என்று கூறுகிறீர்கள். அப்படியென்றால் வேறு என்ன செய்ய வேண்டும்” என விவாதிக்கத் துவங்கினர். மாற்று அரசியல் குறித்த எமது தோழர்களின் பிரச்சாரம் புதிய கிராமங்களில் இளைய தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
மாற்று அரசியல் குறித்த எமது தோழர்களின் பிரச்சாரம் புதிய கிராமங்களில் இளைய தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறது.

இப்பிரச்சார நடவடிக்கைகளின் போது குழுமணிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தோழர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அங்கே வந்த அ.தி.மு.க வினர் “என்ன தோழர் எங்களுக்கெல்லாம் நோட்டீசு இல்லையா” என்று கேட்டு வாங்கிச் சென்று படித்தனர். “நீங்க நடப்பதைத் தான் சொல்றீங்க” என்று சொல்லி சென்றனர்.

தேர்தல் தேதி நெருங்க நெருங்க சில இடங்களில் தி.மு.க வோடு அ.தி.மு.க வுக்கு ஏற்பட்ட சலசலப்பு, அடிதடி – மோதல்கள் என வீரியம் பெற்றது. அதற்கேற்ப போலீசு, துணை ராணுவப் படையின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
ம.க.இ.க மைய கலைக்குழு தோழர்களின் பாடல்கள் மக்களை ‘உறக்கம்’ கலைய செய்தன.

இந்நிலையில் பி.ஜே.பி யின் ‘ஊழல் ஒழிப்பு’ வேட்பாளர் சுப்ரமணியனை ஆதரித்து தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்டோர் சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்தாலும் எதிரில் இருப்பவர்கள் எண்ணிக்கையோ காற்று வாங்கியது. தி.மு.க வே அடிதடியில் இறங்கினால் தான் பிரச்சாரம் செய்ய முடியும் என்கிற நிலை இருந்ததை கணக்கில் கொள்ளாமல், சுப்ரமணியன் உள்ளிட்ட இந்து உணர்வாளர்கள் ஓட்டு கேட்கப் போன இடங்களில் அ.தி.மு.க காலிகள் ஓட ஓட அடித்து விரட்டினர். அடிவாங்கியது கூட பரவாயில்லை மண்டை உடைபட்ட தனது அடிப்பொடிகளுடன் சேர்த்து தன்மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை சுப்ரமணியனே கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

திருவரங்கத்தில் நான்குமுனைப் போட்டி என சொல்லிக் கொண்டாலும் இடது சாரிகளின் நிலையோ அந்தோ பரிதாபம். “முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறோம், இது எங்கள் ஜனநாயக உரிமை” என்றெல்லாம் சி.பி.எம் கத்திக் கூப்பாடு போட்டாலும் காதில் வாங்கிக் கொள்ளதான் ஆள் இல்லை. ஆங்காங்கே விழுந்த அடிகளின் ரணம் தாங்காமல், காந்திவழி கம்யூனிஸ்டு தோழர். ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட வேண்டியதாயிற்று. சட்டமன்ற, பாராளுமன்ற ஜனநாயம் குறித்தும் அதன் மாண்புகள் குறித்தும் வாய்கிழிய வகுப்புகள் எடுக்கும் இடதுசாரிகள் தான் அவர்கள் வாங்கிய அடிகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி தேர்தலில் மோடி மண்ணைக் கவ்வியதும் ஆம்ஆத்மி வெற்றி பெற்றதும், “மோடி அலை, சுனாமி என்பதெல்லாம் பம்மாத்து” “இந்து மதவெறியர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு மக்களின் எதிர்வினை” என்கிற முறையில் பி.ஜே.பி க்கு கிடைத்த செருப்படியாக அமைந்தது. இதனை அம்பலப்படுத்தியும் சுவரொட்டி இயக்கம் மேற்கொள்ளபட்டது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்கூடுதலாக பி.ஜே.பி யின் ஊழல் ஒழிப்பு வேட்பாளர், செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவின் கணக்கப்பிள்ளை, கல்வி (கொள்ளையன்) தந்தை என பல்வேறு முகங்களுடைய கரட்டாம்பட்டியான் சுப்ரமணியணின் யோக்கியதையை வினவு இணையதளம் தக்க ஆதாரங்களுடன் தோலுரித்ததை விரிவாக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு பிரசுரங்கள் அச்சிட்டோம்.

குறிப்பாக, சுப்ரமணியனுக்கு சொந்தமான ஆக்ஸ்போர்டு இன்ஜினியரிங் கல்லூரி, துறையூர் ஜெயராமன் கல்லூரி, அங்காளம்மன் கல்லூரியிலும் கூடுதலாக திருவரங்கம் ஆண்டவர் கலைக் கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, இந்திரா காந்தி கலைக்கல்லூரி, எஸ்.ஆர்.சி கல்லூரி ஆகியவற்றிலும் பி.ஜே.பி யின் ஊழல் ஒழிப்பு வாய்சவடாலை அம்பலப்படுத்தி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். கல்லூரி மாணவர்களில் கணிசமானோர் முதல் தலைமுறை வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்தனக்கென ஒரு வாக்கு வங்கி உருவாவதற்கு முன்பே அது தகர்க்கப்படுவதும், அதுவும் தனது கல்லூரியின் வாசலிலேயே நிகழ்வதையும் காண சகிக்காமல் தனது அடியாட்களை விட்டு பிரசுரம் விநியோகித்த தோழர்களிடம் தகராறு செய்தார் சுப்ரமணியன். அன்று மாலையே புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வந்த செய்தி என்னவெனில்… ‘ திருவரங்கம் – மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் மீது வழக்கு பதிவு, இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக சுவரொட்டி ஒட்டியதாக இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு‘.

இந்து முன்னணியின் கிருஷ்ணன் என்பவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் 153(ய), 41 சிறப்பு சட்டம் (பிணையில் வெளிவர முடியாத) பிரிவுகளில் போலீசு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பாக மாரியப்பன் என்பவரும், இந்து மகா சபையினரும் புகார் அளித்துள்ளனராம்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணி! மக்கள் அதிகாரத்திற்கான கமிட்டிகளை கட்டி எழுப்பு!

இப்படி இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக வானத்துக்கும், பூமிக்கும் இவர்கள் குதித்துக் கொண்டிருக்க சுப்ரமணியனுக்கு சொந்தமான கல்லூரிகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள் பலர்… “எங்களுடைய காலேஜ் சேர்மன் பற்றி காலையில நோட்டீசு கொடுத்தப்பவே வாங்கி படிச்சோம். உங்க வெப்சைட்ல சொல்லியிருக்க விசயம்லா சரியானது தான். இந்த ஆதாரம் எல்லாம் எங்க இருந்து எடுத்தீங்க” என்று ஆச்சர்யமாக கேட்டனர். சில மாணவர்கள் சூப்பர் என்று கூறுவதும், கல்லூரியில் தாங்கள் அனுபவிக்கும் அடக்கு முறைகளை கொட்டித் தீர்ப்பது எனவும் ஆதங்கப்பட்டனர். இன்னொரு மாணவர், “இக்கல்லூரியில் நடக்கிற பிரச்சனைகள் பற்றி எங்கு பேச கூப்பிட்டாலும் நாங்கள் வருகிறோம்” என கல்விக் கொள்ளையன் கரட்டாம்பட்டி சுப்ரமணியனுக்கு எதிராக துணிச்சலோடு பேசினர்.

இவர்களில் யாரும் தங்களது இந்து உணர்வை புண்படுத்தியதாக எங்களிடம் கூறவில்லை. வாங்கிய அனைவரும் சிரித்துக் கொண்டு தான் சென்றனர். அன்று திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருந்த ரங்கநாதனை கோவில் கருவறைக்குள்ளேயே நுழைந்து தீண்டியபோது பதறிய இதே இந்து முன்னணி கும்பல் ஆர்.எஸ்.எஸ் ன் புரவலரும், பி.ஜே.பி யின் ‘ஊழல் ஒழிப்பு’ வேட்பாளரான சுப்ரமணியனை அவரது கல்லூரி வாயிலிலேயே சென்று தீண்டும் போது, அதே பரபரப்போடு அலறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாக பார்த்தால், ஓட்டுப் பொறுக்கிகளின் அடாவடித்தனம் அதிகார வர்க்கத்தின் துணையோடு கொட்டமடிப்பதை திருவரங்கத்தின் எந்தவொரு தெருவிற்குள் நுழைந்தாலும் காணமுடியும். ஆனால், மக்கள் ஜனநாயக பூர்வமாக தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையாக வாக்குரிமை இருப்பதாக ஆளும் வர்க்கங்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
மக்கள் ஜனநாயக பூர்வமாக தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையாக வாக்குரிமை இருப்பதாக ஆளும் வர்க்கங்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்கின்றனர்.

புழுத்து நாறும் போலி ஜனநாயக அரசியலக்கு வெளியேதான் உண்மையான ஜனநாயகத்தை தேடமுடியும். தேர்தல் ஜனநாயகத்தின் மேண்மைகள், மாண்புகள் குறித்து சண்டமாருதம் செய்வோருக்கு முகத்தில் அறைந்தாற் போல் உண்மைகள் உடைத்திருக்கிறது திருவரங்கம் இடைத்தேர்தல்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
திருச்சி.
தொடர்புக்கு :- 9943176246

 1. //பக்கம் பக்கமாக அறிக்கை விட்டாலும் பணபலமும், சாதிபலமும் அதிகார வர்க்கத்தின் ஆசியும் இல்லாவிட்டால் தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டியிருக்கும் என்பது ஓட்டுக் கட்சிகள் அனைவருக்கும் பொதுவானது. தலித் மக்கள் வாழும் கிராமங்களில் தனிசுடுகாடு, தனிபாதை, ஊருக்குள் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது போன்ற சாதிக் கட்டுப்பாடுகளை வன்மமான முறையில் அமல்படுத்துவதும், எதிர்த்து கேட்டால் கலவரம் செய்வதும் என சாதிவெறியாட்டம் போடும் முத்தரையர் சாதியின் ஆதிக்கம் நிறைந்த கிராமங்கள் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிகம் என்பதால், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் முத்தரையர் சாதியைச் சேர்ந்தவர்களையே தமது வேட்பாளர்களாக அறிவித்தன. //

  வினவு எனும் புரட்டு புரட்சியாளர்களே..! இங்கே அரசியல் கட்சிகளின் மீதான உங்கள் குற்றசாட்டுகளை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும் அதே நேரம் பொய்யையும், புரட்டையும் “புரட்சி” என்ற பெயரில் மக்களிடையே வன்மத்தையும், துவேசத்தையும் தூண்டிவிடுவதை வழக்கமாக கொண்ட நீங்கள், எதோ எழுத வேண்டும் என்பதற்காக ஒடுக்கப்பட்டு, அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டு வாழும் ஒரே சமூகமாக இருக்கும் “முத்தரையர்கள்” மீது நீங்கள் வைக்கும் அபாண்டமான குற்றசாட்டு “தலித் மக்கள் வாழும் கிராமங்களில் தனிசுடுகாடு, தனிபாதை, ஊருக்குள் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது போன்ற சாதிக் கட்டுப்பாடுகளை வன்மமான முறையில் அமல்படுத்துவதும், எதிர்த்து கேட்டால் கலவரம் செய்வதும்” என்று எழுதி இருக்கிறீர்கள், இது உண்மை என்று நீங்கள் நிரூபிக்க முடியுமா..? பகிரங்கமாகவே சவால் விடுக்கிறோம், ஒரு பொய்யை, உங்களுடைய உண்டியல் வருமானத்திற்க்காக பரப்பும் “வினவு” ஸ்ரீரங்கத்தின் எந்த கிராமத்தில் இப்படி ஒரு நிலை இருக்கிறது ? என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க முன்வர வேண்டும், நீங்கள் ஏழை மக்களை சுரண்டி பிழைக்க கடைநிலை மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்காமல், நீங்கள் பிழைப்பு நடத்த வேறு தளங்களை தேர்வு செய்துக்கொள்வது நலம்.

  சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
  ஒருங்கிணைப்பாளர்
  இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

  • //இங்கே அரசியல் கட்சிகளின் மீதான உங்கள் குற்றசாட்டுகளை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும்//

   அவரசரப்பட்டுட்டியே அம்பலத்தண்ணே, கட்சிக்கார முத்தரையருங்க எல்லாரும் மோசம்னு ஒத்துக்கிறீங்களேண்ணே!

   //அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டு வாழும் ஒரே சமூகமாக இருக்கும் “முத்தரையர்கள்” மீது நீங்கள் வைக்கும் அபாண்டமான குற்றசாட்டு //

   திரும்பவும் மாட்டிக்கிட்டீங்கண்ணே, முத்தரையருங்கோ அல்லாரும் ஒரே சமூகமா வாழ்ந்தா அங்க சேரி, தீண்டாமை எல்லாம் இருந்தாகணும்னே!,

   அண்ணே ஸ்ரீ ரங்கம் தொகுதியில ஏதாவது ஒரு ஜோடி முத்தரையர்-பறையர், முத்தரையர்-பள்ளருன்னு காமிச்சீட்டினா நீ கெலிச்சிட்டேன்னு நானே ஊரைக் கூட்டி போஸ்டர் போட்டு விழா நடத்துரேண்ணே!

   சிங்கம்ணு பேர வைச்சுகிட்டு அசிங்கமா சிக்கிராதண்ணே!

   • “தலித் மக்கள் வாழும் கிராமங்களில் தனிசுடுகாடு, தனிபாதை, ஊருக்குள் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது போன்ற சாதிக் கட்டுப்பாடுகளை வன்மமான முறையில் அமல்படுத்துவதும், எதிர்த்து கேட்டால் கலவரம் செய்வதும்”

    இந்த குற்றசாட்டுக்கு சரியான ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா..? என்ற கேள்விக்கு பதிளில்லை..

    “ஏதாவது ஒரு ஜோடி முத்தரையர்-பறையர், முத்தரையர்-பள்ளருன்னு காமிச்சீட்டினா” இது உங்களின் பிழைப்புவாதத்திற்க்காக தாழ்த்தப்பட்ட மக்களிடையே செய்யும் மூளை சலவையின் ஒரு பகுதி, இப்படியான கலப்பு மணத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டதாக சொல்லவே இல்லையே..?

    “அவரசரப்பட்டுட்டியே அம்பலத்தண்ணே, கட்சிக்கார முத்தரையருங்க எல்லாரும் மோசம்னு ஒத்துக்கிறீங்களேண்ணே!” கீழ்தரமான எண்ணத்தின் வெளிப்பாடு இந்த பதில், அதிமுக, திமுக, பாஜக, கம்யூனிஸ்ட் எல்லோரும் முத்தரையர் இல்லை, அந்த கட்சிகளில் முத்தரையர்களும் இருக்கிறார்கள் அவ்வளவே…!

   • அன்புள்ள நண்பர்களுக்கு! எங்களுக்கு
    ஒரு சந்தேகம்!
    ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றமா? சட்டபடி குற்றமே!
    இந்திய அர்சியலமைப்பு அடிப்படை சட்டத்தில் இந்தியாவில் தேர்தலில் போட்டியீட இரண்டு அடிப்பதை தகுதிகள் மட்டும் கூறப்பட்டுள்ளது
    1) இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
    2)25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
    ஆனால் அந்த நபரிடம் டெபாஸிட் செய்ய பணம் இருக்க வேண்டும் என்பது எந்த அடிப்படை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது? ஒரு நல்ல எந்த குற்ற பின்னனி இல்லாத 25 வயது கட்ந்த ஒரு குடிமகனிடம் டெபாஸிட் இல்லை என்றால் தேர்தலில் நிற்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்குமா?
    டெபாஸிட் முறை இல்லை என்றால் எல்லோரும் தேர்தலில் நிற்பார்கள்.தேர்தல் நடத்த முடியாது என்பதால் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களை குறைப்பதற்காக டெபாஸிட் முறை வைத்துள்ளது. 5000 வேட்பாளர்களை 50 பேராக குறைக்க தேர்தல் ஆணையம் பணம் என்ற முறையை டெபாஸிட் என்ற முறையில் கையில் எடுப்பது சரியா? அப்படி ஆனால் அந்த 50 வேட்பாளர்களில் ஒருவரை தேர்ந்து எடுக்க சாதாரன மக்கள் பணம் என்ற முறையை தேர்ந்து எடுப்பது தேர்தல் ஆணைய வழி தானே!
    ஒட்டுக்காக பணம் வாங்குவது குடிஉரிமையை விற்பதெற்கு சமம் என்றால் தேர்தலில் போட்டி இடும் உரிமையை பணம் வாங்கி கொண்டு அனுமதிப்ப்து வேட்பு உரிமையை விற்பது ஆகாதா?

 2. நாங்களும் எல்லா தேர்தலிலும் பார்க்கிறோம். தேர்தல் வரும்போது அரசியல் கட்சிகளுக்கு வேலை இருக்கிறதோ இல்லையோ ?தேர்தலை புறக்கணியுங்கள் என்ற வசனத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் கிளம்பி விடுகிறீர்கள். ஒவ்வொரு முறையும் பல காரணங்களை சொல்வீர்கள். இப்போது முத்தரையர் ,தலித் பிரச்சினை.
  தலித்துகள் மீது உங்களுக்கு அக்கரை உள்ளதா என்றால் தலித்துககள் போட்டி இடும் ரிஸர்வ் தொகுதியிலும் உங்கள் வாசகம் தேர்தலை புறக்கணியுங்கள். உங்களுக்கு தேர்தல் மீது உள்ள வெறுப்புக்கு குளிர் காய எல்லாரையும் எரிக்க நினைப்பது அடிமுட்டாள் தான்ம் நண்பா.

 3. ம.க.இ.க. கலைக்குழு தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஆளும் கட்சியாக இருக்கட்டும், அல்லது சுரண்டல் கார்போரேட்டுகள்… என அதிகார வர்க்கத்திற்கு எதிராக செஞ்சசட்டைத் தோழர்கள் தங்கள் பணி அய் சரியாக செய்து வருகின்றனர். அறிவியல் தொழில் நுட்பம், சமூக சிந்தனை… என மக்களின் வாழ்கை முறை மாறி வருகிறது. ஆனால் நமது அரசியல் நடைமுறைகள் குறிப்பாக தமிழக அரசியல் ஒரே தளத்தில் நிற்கின்றது. தங்களின் அயராது உழைப்பு மக்களின் சமூக வாழ்வியல் முறைகளில் ஓர் மாற்றத்தை உருவாகாட்டும்.

 4. சாதி சார்ந்த உங்களது விவாதங்களை விட்டுவிட்டு ஜனநாயக கண்ணோட்டத்தோடு பாருங்கள்.. எவ்வளவு அக்கிரமங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது இந்த இடைத்தேர்தலில்..?? இந்த தேர்தலுக்காக இதுவரை ஆளும்கட்சி தரப்பில் செலவிடப்பட்ட தொகை 100 கோடியை தாண்டும்.. யாருடைய பணம் இது? எங்கிருந்து வந்தது இந்த பணம்? மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் இந்த இடைத்தேர்தல் தேவையா? அம்மையாரின் “அதிகாரத்தை” தக்கவைத்துக்கொள்ள மக்களின் வரிப்பணத்தை வீணக்குவது எந்த விதத்தில் நியாயம்? ஊழல் குற்றத்திற்க்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவி பறிப்பப்பட்டதாலேயே இந்த இடைத்தேர்தல்.. ஆனால் தேர்தலில் காவல்துறையின் உதவியோடு ஓட்டுக்கு 5000 வரை கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்க அதே விசயத்தை கையிலெடுக்கிறது ஆளும்தரப்பு.. உங்களது ஆட்சி ஒழுங்கானாதெனில்.. ஊழல் அற்ற ஆட்சி எனில் ஓட்டுக்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லையே… இவ்வளவு பணம் செலவிடப்படுப்போது அங்கே ஊழலில்லாத ஆட்சிக்கு என்ன உத்திரவாதம்.. ??

 5. எப்ப பாத்தாலும் கறி விருந்துதானா? அடுத்த தடவை எங்க தொகுதில எவன் புளியோதரை, சுட்டப்பளம், தயிர்சாதம் விருந்து போடறானோ, அவனுக்கு தான் என் ஒட்டு! அப்புறம் இந்த ஐநூறு, ஆயிரம் எல்லாம் பத்தாது. கணிசமா ஒரு அம்பதாயிரம் கொடுத்துடுங்க.

 6. ஓட்டுக்கு பணம் வாங்குவதையும் , கொடுப்பதையும் தவறு மற்றும் இந்த அரசாங்களுக்கு ஓட்டுப்போட்டு எந்த பயனும் இல்லை, தேர்தலை புறக்கணியுங்கள்!புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரளுங்கள்! என கூறும் இக் கட்டுரை சரியே, தேழர்களின் கடுமையான உழைப்புக்கு வாழ்த்துக்கள்!

  சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,முத்தரையா தமிழர் பேரவை ஆகியோரின் கருத்து சாதிய திமிரை வெளிப்படுத்துவதகவே உள்ளது,

  தலித்மக்கள் (இசையமைப்பாளர் இளையராஜா) லட்சகணத்தில் கொடுத்தும் கருவரைக்குள்நுழைய முடியாத அவலம் , திருவரங்கத்தில் அம்பேத்கர் மற்றும் பெரியார் படத்தை உயர்த்தி பிடித்து நடத்தப்பட்ட ம.க.இ.க வின் கருவரை நுழைவு போராட்டம் வரலாறு படைத்து நிருபித்துள்ளது…

  இந்த ஆரம்ப அறிவே இல்லாத உங்களுக்கு ஆதாரத்துடன் தருகிறது வினவு படித்து அறிவை வளர்த்துகொள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க