privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கோவை ஐயர் கம்பெனி வீட்டில் தொழிலாளர் போராட்டம்

கோவை ஐயர் கம்பெனி வீட்டில் தொழிலாளர் போராட்டம்

-

கோவை தடாகம் ரோட்டில் வேலாண்டிபாளையத்தில் பெஸ்ட் கம்பெனி உள்ளது. இதன் கிளைகளாக கௌரி மெட்டல், ரோட்டோரா-1, ரோட்டோரா-2, என்பெஸ்ட் என ஒரு குரூப்பாக ஒரே முதலாளியின் கீழ் உள்ளது. இதன் நிறுவனர் காலஞ்சென்ற ஜெ.கௌரி சங்கர்.

பெஸ்ட் கம்பெனி போராட்டம்
தொழிலாளிகளைச் சுரண்டும் ஐயர் கம்பெனிக்கு ஐயர் ஜனாதிபதி அளிக்கும் விருது!

இதனை மக்கள் ஐயர் கம்பெனி என்றே குறிப்பிடுவார்கள். இப்பொழுது ஐயரின் மகள் ஸ்ரீப்ரியா கம்பெனியை நிர்வாகிக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நிலையில் சுமார் 300 தொழிலாளிகள் நேரடியாக பணி புரிகிறார்கள்.

பெஸ்ட் கம்பெனி போராட்டம்
எட்டு மணி நேர வேலை இல்லை; இ‌எஸ்‌ஐ, பி‌எஃப், பணிக்கொடை கிடையாது;

ஐயர் கம்பெனியின் அநீதி என்னவென்றால் ஒரு தொழிலாளி கூட நிரந்தரம் செய்யப்படவில்லை; எட்டு மணி நேர வேலை இல்லை; இ‌எஸ்‌ஐ, பி‌எஃப், பணிக்கொடை கிடையாது; பொதுவாக தொழிலாளி எனும் அங்கீகாரமே இல்லை. எல்லோருமே காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் தான். காண்ட்ராக்ட் என்றால் முறைப்படி தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகத்தில், தொழிலாளர் துறையிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விபரம் கேட்டதில் யாருமே காண்ட்ராக்டர் இல்லை எனத் தகவல் வந்தது.

கோவையில் கவுண்டர், நாயக்கர் போன்ற ஆதிக்க சாதியினர் பஞ்சாலைகள், பொறியியல் தொழிற்சாலைகள் மிகப் பெரிய அளவில் நடத்துகிறார்கள். அவர்கள் எல்லாம் குறைந்த பட்சம் இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் உரிமைகளுடன் தொழிலாளி என அங்கீகரித்து சங்கம் வைக்கும் உரிமைகளையும் கொடுத்தார்கள். ஆனால், ஐயர் கம்பெனியில் மட்டும் 50 ஆண்டுகளாக எந்த சலுகைகளையும் வழங்காமல் ஏமாற்றி வந்தார். தொழிலாளர்களை ஏமாற்றியத்தில் கோவையில் ஐயர் திறமைக்கு ஈடு இணை யாருமில்லை. தொழிற்சங்க இயக்கம் கோவையில் உச்சமாக இருந்த நாட்களிலும் ஐயர் மிகச் சாமர்த்தியமாக செயல்பட்டு எல்லா ஓட்டுக் கட்சிகளுக்கும் முறையாக தேர்தல் நிதி கொடுத்து, கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தி தொழிலாளர்களை அட்டைப்பூச்சி போல உறிஞ்சி மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்தார். இதர ஆதிக்க சாதி முதலாளிகளை வியக்க வைத்தார். தற்போது அவரது மகளும் அதே பாணியில் நடத்துகிறார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விபரம் கேட்டதில் யாருமே காண்ட்ராக்டர் இல்லை எனத் தகவல் வந்தது.

[கடிதங்களை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் உரிமைகளும் கூட தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு வில் இணைந்த பிறகுதான் 2015 ஜனவரியில் தான் கிடைத்தது. 480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் எனும் சட்டம் உள்ளது. ஆனால் ஐயர் கம்பெனியில் 4800 நாட்கள் வேலை செய்தாலும் நிரந்தரம் கிடையாது.

கோவை பெஸ்ட் கம்பெனி போராட்டம்
எங்களைத் தொழிலாளர்கள் என அங்கீகரிக்க வேண்டும். மாதச் சம்பளம் வேண்டும். இ‌.எஸ்‌.ஐ கார்டு வேண்டும். பி‌.எஃப் ரசீது வேண்டும.

இந்நிலையில் பெஸ்ட் கம்பெனியின் சங்கமாக இணைந்த தொழிலாளர்கள் மட்டும்,

  • எங்களைத் தொழிலாளர்கள் என அங்கீகரிக்க வேண்டும்.
  • மாதச் சம்பளம் வேண்டும்.
  • இ‌.எஸ்‌.ஐ கார்டு வேண்டும்.
  • பி‌.எஃப் ரசீது வேண்டும

என பு.ஜ.தொ.மு தலைமையில் போராட்டத்தில் இறங்கினார்கள். உடனே முதலாளி ஸ்ரீப்ரியா தொழிலாளர்களை பிரித்தாளத் துவங்கினார். இருந்தாலும் அஞ்சாமல் தொழிலாளர்கள் கம்பெனி கேட் முன்பு பந்தல் அமைத்து இரவும் பகலும் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு வெயில் மழையை பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள். இன்றோடு போராட்டம் 18-வது நாளை எட்டியுள்ளது.

கோவை பெஸ்ட் கம்பெனி போராட்டம்
கம்பெனி கேட் முன்பு பந்தல் அமைத்து இரவும் பகலும் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு வெயில் மழையை பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள்.

தொழிலாளர் துறையில் தொழிற் தகராறு கிளப்பினால் நிர்வாகம் வருவதே இல்லை. தொழிலாளர் துணை ஆணையரும் வாய்தாவுக்கு வாய்தா என இழுத்தடித்து வருகிறார். முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் சகல இடங்களிலும் முறைப்படி புகார் தெரிவிக்கப்பட்டுவிட்டாயிற்று. அவர்களும் வழக்கம் போல் வாங்கி வைத்துவிட்டு ஆறுதலாக சில வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைக்கிறார்கள்.

கடந்த மாதம் கௌரி மெட்டல் கிளையில் மெஷினில் சிக்கி ஒரு தொழிலாளியின் ஆட்காட்டி விரலும் நடுவிரலும் துண்டானது. அதனையொட்டி இ‌.எஸ்‌.ஐ தென் மண்டல அலுவலகத்தில் புகார் செய்த பிறகுதான் போராடியவர்களுக்கு இ‌.எஸ்‌.ஐ உரிமையே கிடைத்தது. 50 ஆண்டுகளாக இ‌.எஸ்‌.ஐ கூட இல்லாமல் ஆட்டையைப் போட்டது ஐயர் கம்பெனி.

கோவை பெஸ்ட் கம்பெனி போராட்டம்
50 ஆண்டுகளாக இ‌.எஸ்‌.ஐ கூட இல்லாமல் ஆட்டையைப் போட்டது ஐயர் கம்பெனி..

இனிமேலும் பொறுப்பதற்கில்லை, மோதுவோம் என முடிவெடுத்து ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் துவங்கியது. உடனே அன்று மாலை ஆறு மணிக்கு பத்து ஐயர்கள் கம்பெனிக்குள்ளேயே யாகம் வளர்த்தனர். அது இன்று வரை தொடர்கிறது. மாலை ஆறு மணி முதல் 7 மணி வரை யாகம் நடத்த ஒரு ஐயருக்கு கூலி 175 ரூபாய். அது போக சாப்பாடு போன்ற சலுகைகள் உண்டு. இப்படியாக ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து யாகம் நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேலைகள் நடக்கிறது. ரவுடிகளுக்கு பணம் கொடுத்து தொழிலாளர்களை ஒடுக்க முயற்சித்தனர். ஓட்டுக்கட்சி ரவுடிகளும் பு.ஜ.தொ.மு சங்கம் என்றவுடன் ஒதுங்கிக் கொண்டனர்.

கோவை பெஸ்ட் கம்பெனி போராட்டம்
ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து யாகம் நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேலைகள் நடக்கிறது.

இறுதியாக, தொழிலாளர்கள் குடும்பத்தினர் 27-ம் தேதி காவல்துறையில் தகவல் தெரிவித்து முதலாளி ஸ்ரீப்ரியா வீட்டுக்குள் புகுந்து போராட்டம் நடத்தினார்கள். சாய்பாபா காலனி காவல் துறை மூன்று வேன்களோடும், ஜீப்புகளோடும், 50-க்கும் மேற்பட்ட காவலர்களோடு களம் புகுந்தனர். உளவுப் பிரிவு போலீசாரும் படை பரிவாரங்களோடு வந்தனர். தொழிலாளர்களின் மனைவிமார்கள் அனைவரும் ஒரு சேர அறிவித்துவிட்டனர். “எங்களை கைது செய்தாலும் கவலையில்லை. தாராளமாக செய்து கொள்ளுங்கள், சிறைக்கு செல்லத் தயார்” என அறிவித்தவுடன் காவல் துறை ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அமைத்து காத்து வருகின்றனர்.

கோவை பெஸ்ட் கம்பெனி போராட்டம்
தொழிலாளர்கள் குடும்பத்தினர் 27-ம் தேதி காவல்துறையில் தகவல் தெரிவித்து முதலாளி ஸ்ரீப்ரியா  வீட்டுக்குள் புகுந்து போராட்டம் நடத்தினார்கள்.

பெண்களும், “எங்களிடம் ஸ்ரீபிரியா மேடம் பேச வேண்டும். பிரச்சினையை முடிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். முதலில் முடியாது என்று மறுத்த மேடம் கடைசியில் பணிந்து “நாளை பேச்சு வார்த்தை நடத்தலாம். வாருங்கள்” என அழைப்பு விடுத்த காரணத்தால் காலை 10 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. “நாளையும் முதலாளி வழக்கம் போல் ஏமாற்றுவார் எனத் தெரிந்தால் பிரச்சினை முடியவில்லை என்றால் நாளை மறுநாள் வருவோம்” என மிரட்டி விட்டு வந்துள்ளனர்.

போட்டோகிராபர் ஜாய்
தொழிலாளிகளின் ஒவ்வொரு செயலையும் படம் பிடிக்க ஜாய் என்னும் நபரை வேலைக்கு வைத்துள்ளார் ஸ்ரீப்ரியா.

கோவையில் செயல்படும் சங்கங்கள் அதிகபட்சமாக அதுவும் சி‌.ஐ‌.டி‌.யு வினர் காதில் பூ வைக்கும் போராட்டம், ஒப்பாரி போராட்டம், நாமம் போடும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம் என தொழிலாளர்களை இழிவுபடுத்தும் போராட்டங்களைத் தான் நடத்துவார்கள். ஆனால், நம்முடைய முற்றுகைப் போராட்டம் கம்பெனி அமைந்துள்ள வேலாண்டிபாளையத்தை கலக்கி எடுத்தது. கடந்த பத்து நாட்களாக தோழர்கள் முழக்கங்கள் பொறித்த மேலங்கி அணிந்து வீடு வீடாக பிரச்சாரம் செய்து நிதியும் வாங்கி வருகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி உள்ளது. இதனால் கம்பெனி சார்பில் மிகப் பிரமாண்டமான கட் அவுட் வைத்து தன்னிலை விளக்கம் தரும் அளவுக்கு நமது தோழர்கள் பிரச்சாரம் வீச்சாக நடைபெற்று வருகிறது. இவை போக கம்பெனி முன்பு அமர்ந்துள்ள தொழிலாளிகளின் ஒவ்வொரு செயலையும் படம் பிடிக்க வேலாண்டிபாளையத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ள ஜாய் என்னும் நபரை வேலைக்கு வைத்துள்ளார் ஸ்ரீப்ரியா. அவனும் சிறிதும் கூச்சமின்றி கம்பெனி முன்பு கேமராவோடு நின்று கொண்டிருக்கிறான்.

நமது தோழர்களின் முழக்கங்கள் பொறித்த மேலங்கி பிரச்சாரம் மக்களிடையே நல்லபடியான விளைவுகளை தோற்றுவித்தது. படித்த அனைவரும், “ஐயர் கம்பெனி இவ்வளவு மோசமாகவா நடக்குது..?” என கேள்வி எழுப்புகிறார்கள். கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி மக்களை ஏமாற்றி வந்த கும்பல் தற்போது பிளக்ஸ் வைத்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாக்கி உள்ளோம்.

கோவை பு.ஜ.தொ.மு பெஸ்ட் கம்பெனி
கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி மக்களை ஏமாற்றி வந்த கும்பல் தற்போது பிளக்ஸ் வைத்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாகியுள்ளது.

சி‌ஆர்‌ஐ தொழிலாளர்கள் ஒரு புறம் போராட பெஸ்ட் தொழிலாளர்கள் மறுபுறம் போராட பு.ஜ.தொ.மு கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே நம்பிக்கையை உருவாக்கி வருகிறது. மாநகர காவல் துறையும் ஏதாவது அசம்பாவிதம் நடக்காதா..? என கடுமையான கோபத்துடன் காத்திருக்கிறது. நாமும் என்ன ஆனாலும் பின்வாங்கப் போவதில்லை என உறுதியுடன் உள்ளோம். போராட்டம் எனும் உலைக்களத்தில் தான் பு.ஜ.தொ.மு புடம் போடப்படும் என ஆவலாய் உள்ளோம்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க