privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கோவையில் மே நாள் : எங்களது வரலாற்றுக் கடமை என்ன ?

கோவையில் மே நாள் : எங்களது வரலாற்றுக் கடமை என்ன ?

-

கோவையில் மே தின பேரணி, ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டவுடன் வழக்கம் போல் நாம் கேட்ட இடத்தில் அனுமதி தராமல், இழுத்தடித்து வேறு இடத்தில் கொடுத்தார்கள். அதுவும், ‘4 மணிக்கு பேரணியை துவங்கி 6 மணிக்குள் முடிக்க வேண்டும்’ எனும் நிபந்தனையுடன். அதையே நம்மிடம் எழுதியும் வாங்கிக் கொண்டு ஏதோ போனால் போகிறது என்று கொடுத்தார்கள்.

ஆனால், உழைப்பாளர் தினமான மே நாளுக்கு தொடர்பற்ற அ.தி.மு.க காரர்களுக்கு மட்டும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பேரணிக்கு காவல் துறை அனுமதி கொடுத்தது. அனுமதி கொடுப்பது என்ன, அவர்களே எடுத்துக் கொண்டார்கள்.

கோவை மே நாள் பேரணி
பேரணி செங்கொடிகளுடனும், ஆசான்கள் படங்களுடனும், முழக்கப் பதாகைகளுடன் கோவையில் மே நாள்!

மே நாளன்று மாலை 4 மணிக்கு டாடாபாத் பவர் ஹவுஸ் முன்பு மாவட்டச் செயலர் தோழர் திலீப் தலைமையில் பேரணி துவங்கியது.

கோவையின் பாட்டாளி வர்க்கம் அணிவகுக்க அவர்களோடு நாமக்கல், பள்ளிபாளையம், ஈரோடு மற்றும் நீலமலைத் தோழர்களும் இணைந்தார்கள். பேரணி செங்கொடிகளுடனும், ஆசான்கள் படங்களுடனும், முழக்கப் பதாகை – கம்பீரமான முழக்கங்களுடன் கோவையின் மரபை நிலை நாட்டியது.

காவல்துறை வழக்கம் போல எதிர் நிலை எடுத்து நாகரீகம் இல்லாமல், “வேகமாக நடங்கள்” என அதிகாரத்துடன் எரிச்சல் ஊட்டிக் கொண்டே இருந்தார்கள். பேரணியின் உணர்ச்சியுடன் ஒன்றாமல் இவர்களை சமாளிப்பதே பெரும்பாடாக இருந்தது.

புரட்சிகர பாடல்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

நாங்கள் யார்..! எங்கள் வரலாற்றுக் கனவு என்ன..? கடமை என்ன..? எத்துணை உன்னதமான இலட்சியம் கொண்டவர்கள் நாங்கள்; ஒரு வரலாற்றுப் புரட்சியை நடத்தி முடிக்க வேண்டிய தீர்மானத்தின் மீது அழுந்திக் கொண்டிருக்கும் பெரும்பாறையை சிற்றுளி கொண்டு உடைத்து உடைத்து புத்தம் புது அழகுகளை படைத்தவாறு பாய்ந்து கொண்டிருக்கும் பேராற்றின் ஒரு துளியாக தன்னை, பொருத்தி அதன் ஒரு நகர்வை அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்கும் போது அந்த உணர்வின் ஊற்றாக முழக்கமிட்டுக் கொண்டிருக்கையில், கேவலம் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு வந்தனம் சொல்லும் நீ என்னை தடுக்கிறாயா..?

உனக்கு பொறுப்போ பொது நலனோ எதுவும் இல்லை. நீ சீரழிவின் சின்னமாக இருக்கிறாய். எமக்கான பொறுப்புக்கள் என்ன…! எமக்கான பணிகள் இன்னும் எவ்வளவு இருக்கிறது. எமக்கான கடமையில் நாங்கள் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் எவ்வளவு. இத்துணையையும் ஒரு சேர யோசித்தவாறு சிந்தனையில் கொந்தளிப்புகளுடன் நடந்து கொண்டிருந்த தோழர்களின் கோபம் முழக்கமாய் இன்னும் அதிக ஓசையுடன் ஒலித்தது.

பேரணி புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியில் பேரணி சிவானந்தா காலனியை அடைந்தது. அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு மாவட்ட பொருளாளர் தோழர் பூவண்ணன் தலைமை தாங்கினார்.

கோவை மே நாள் பேரணி
தோழர் பூவண்ணன்

அவர் தனது உரையில் கோவையில் பு.ஜ.தொ.மு நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்தார். எஸ்‌.ஆர்‌.ஐ கிளைத் தோழர்கள் புரட்சிகர பாடல்களை பாடினர்.

கோவை மே நாள் பேரணி
மே நாள் முழக்கங்கள்
கோவை மே நாள் ஆர்ப்பாட்டம்
“மோடி அரசின் காட்டாட்சியில் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

தோழர் நாமக்கல் சத்யா தமது உரையில், மோடி அரசு பதவியேற்றதிலிருந்து செய்து வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டார். ஆருயிர் நண்பன் அதானிக்கு 6,500 ரூபாய் கோடி கடன் கொடுத்தது, கேஸ் மானியத்தை வெட்டியது என மக்களது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபடுவதை தோலுரித்து காட்டினார்.

தோழர் ஈரோடு புஷ்பராஜ் தமது உரையில், இந்த அரசு எப்படி உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு சாதகமாகவும் இருக்கிறதென்பதை விளக்கிப் பேசினார்.

தோழர் நீலமலை பாலன் கோவையின் விசேசமான எக்ஸ்ட்ரா பாசிசத்தை சாடியவாறு தன் பேச்சை துவங்கி, ஆந்திராவில் தமிழர்கள் படுகொலையையும் அரசின் பித்தலாட்டத்தையும் அம்பலப்படுத்திப் பேசினார்.

கோவை மே நாள் ஆர்ப்பாட்டம்
கோவையின் விசேசமான எக்ஸ்ட்ரா பாசிசத்தை சாடிய தோழர் பாலன்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவண்ணன் தனது சிறப்புரையில் கோவை காவல் துறையை எள்ளி நகையாடினார். காவல் துறை, பொறுக்கிகளுக்கும் ரவுடிகளுக்கும் சல்யூட் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை, “மானமிழந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்ற துண்டு பீடிகளுக்கும் சல்யூட் அடித்தீர்களே…!” என காவல் துறையின் அவமானகரமான அத்தியாயங்களை அம்பலப்படுத்தினார்.

போலீஸ் அவமானம்
மானமிழந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்ற துண்டு பீடிகளுக்கும் சல்யூட் அடித்தீர்களே…!

இறுதியாக பேசிய பு..தொ.மு மாநிலத் துணைத் தலைவர் விளவை இராமசாமி, காவல் துறையின் திமிருக்கு பதில் சொல்லும் வகையில் உரையாற்றினார்.

“கோவையின் பாட்டாளி வர்க்கம் நாங்கள். நாங்கள் சபதமேற்கும் நாள் இது. எதிரிகளின் குலை நடுங்க வைத்து உரிமை மீட்ட நாள் இது. இந்த நாளைக் கொண்டாட எங்களுக்கு வரம்பு இட நீ யார்..? ஆலைகள் எங்களது, சாலைகள் எங்களது, கோவையின் அனைத்துமே எங்களால் நடக்குது. தொழிலாளி வர்க்கத்தை பேரணி நடத்த விடாமல் அதிகாரம் செய்கிறாயே…? நீ அணியும் காக்கிச் சட்டை, தொப்பியிலிருந்து உன் பூட்ஸ் வரை உருவாக்குவது தொழிலாளி. கோவையை இயக்குவது தொழிலாளி. இந்த சிவானந்தா காலனியில் கட்டிடங்களை எழுப்புவது தொழிலாளி.

கோவை மே நாள் ஆர்ப்பாட்டம்
“நீ அணியும் காக்கி சட்டை தொப்பியிலிருந்து உன் பூட்ஸ் வரை உருவாக்குவது தொழிலாளி. கோவையை இயக்குவது தொழிலாளி”

மொத்தத்தில், இந்த மண்ணில் தேங்கி நாறும் கழிவு நீர் போலன்றி நுரைத்து ஓடும் புது நீர் போல உற்சாகமாக இந்த மாநகரத்தை இயக்கும் எங்களுக்கு நீ அனுமதி தர மறுக்கிறாயா..? எங்களை என்ன அங்க பிரதட்சணம் பண்ணிக் கொண்டு பால் குடம் எடுத்துக் கொண்டு மொட்டையடிக்கும் கும்பல் என்று நினைத்தாயா…..? இது கூலிக்கு வந்த கூட்டமல்ல. கொள்கைக்காக வந்த கூட்டம். பிரியாணி தராமல், பிராந்தி வாங்கித் தராமல், போக்குவரத்துக்கு பணம் தராமல் தன்னார்வமாக திரண்டவர்கள். 6 மணிக்கு மேல் பேசினால் என்ன குத்தம் வந்து விடும்?

கோவையில் ஒரு மத்திய சிறையையும் 15 ஸ்டேசனையும் வைத்துக் கொண்டு எங்களை மிரட்ட முயலாதீர்கள்” என வர்க்கக் கோபத்துடன் சீறினார்.

கோவை மே நாள் ஆர்ப்பாட்டம்
“எட்டு மணி நேரம் வேலை மட்டுமல்ல, போனஸ் சம்பளம் மட்டுமல்ல, அரசு வேண்டும், அதிகாரம் வேண்டும்”

“மே நாள் என்பது இன்று ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா என உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது. 1886 மே-1 எட்டு மணி நேர வேலைக்காக சிகாகோ தொழிலாளர்கள் எந்த உணர்ச்சியில் இருந்தார்கள் அதே உணர்வில் நாங்கள் 2015-லும் இருக்கிறோம். எட்டு மணி நேரம் வேலை மட்டுமல்ல, போனஸ் சம்பளம் மட்டுமல்ல, அரசு வேண்டும், அதிகாரம் வேண்டும் என போராட்டத்தை விரிவு படுத்துவதே உண்மையான மே தின உணர்ச்சி ஆகும்.

  • ரசியப் பாட்டாளி வர்க்கம் 1917-ல் புரட்சி நடத்தி மே தினத் தியாகிகளுக்கு உண்மையான வாரிசுகள் என நிரூபித்தார்கள்.
  • 1949-ல் சீனப் பாட்டாளி வர்க்கம் செஞ்சீனம் அமைத்து மே தினத் தியாகிகளை மேலும் சிறப்பித்தார்கள்.
  • பாசிசத்தை இரண்டாம் உலகப் போரில் வீழ்த்தி சோவியத் செஞ்சேனை மே தினத்தின் பெருமையை மேலும் மேலும் மேதினிக்கு தெரிவித்தார்கள்.
  • இந்தியப் பாட்டாளிகளும் தெலுங்கானாவில் 3,000 கிராமங்களில் செங்கொடி அரசமைத்து மே தினத் தியாகிகளுக்கு உண்மையான அஞ்சலி தெரிவித்தார்கள்.
  • 1967 நக்சல்பாரியில் அதன் அடுத்த பரிமாணத்தை இந்தியப் பாட்டாளி வர்க்கம் உலகத்துக்கு தெரிவித்தது. ஆனால், போலிக் கம்யூனிஸ்டுகள் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தை காட்டிக் கொடுத்தார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

போலிகள் இது போல கட்சி நடத்தி இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு புரட்சி வராமல் இருக்க பணியாற்றிக் கொண்டு இருப்பார்கள். மே தினத் தியாகிகளின் வாரிசுகள் நாம் தான் “புரட்சி நடத்துவோம். புதிய ஜனநாயகம் படைப்போம்” எனும் அரசியல் நம்மை வழி நடத்துவதால்தான் சி‌.ஆ,ர்‌ஐ கதவடைப்புக்கு எதிராக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக கோவையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே சங்கமாக நாம் உள்ளோம். வரலாறு நம்மீது சுமத்தியுள்ள வர்க்கக்கடமையை நிறைவேற்றி புதிய ஜனநாயக அரசு அமைப்போம்” எனக் கூறி முடித்தார்.

தோழர் குமாரவேல் நன்றியுரை
தோழர் குமாரவேல் நன்றியுரை

இறுதியாக மாவட்டத் தலைவர் குமாரவேல் நன்றியுரை கூறினார்.ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக பாட்டாளி வர்க்கத்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க