Saturday, July 20, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விசென்னை ஐ.ஐ.டி + ஆர்.எஸ்.எஸ் சதி - அதிரடி ஆதாரங்கள்

சென்னை ஐ.ஐ.டி + ஆர்.எஸ்.எஸ் சதி – அதிரடி ஆதாரங்கள்

-

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார்  வட்டம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கிலும் மாணவர்கள், மக்கள் திரளினர் மற்றும் அறிவுத்துறையினரிடையே வீச்சான விவாதங்களும் போராட்டங்களும் களச்செயல்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன. இப்பிரச்சனையையொட்டி பாசிச இந்துத்துவ மோடியின் கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தையும், இந்துமயமாக்கலையும் மாணவர்கள் தீரமுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்பலப்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக விவாத மேடையில் முன்வைக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பொதுப்புத்தியின் பேரில் இந்துத்துவ ஊடகங்களால் முன்வைக்கப்படும் பல்வேறு அவதூறுகளையும் இந்தப் பதிவு, கேள்வி பதில் வடிவில் ஆதாரங்களுடன் எதிர்கொள்கிறது.

1. பார்ப்பனியத்தின் நைச்சியம் என்றால் என்ன?

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட பிறகு, அவாள் நிர்வாகம் தனது சொந்தப் பிள்ளையான இந்துத்துவக் காலிகளின் விவேகானந்தா வாசகர் வட்டத்தின் லோகோவை ராவோடு ராவாக மாற்றியிருக்கிறது. தற்பொழுதைய காட்சியின் படி விவேகானந்தா வாசகர் வட்டம் ஐ.ஐடி மெட்ராசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னிச்சையான மாணவர் அமைப்பு (IIT Madras Approved Independent Student’s Body) என்று புதிய வேதம் ஓதப்பட்டிருக்கிறது!

இதற்கு முன்பு வரை இந்த வாசகர் வட்டத்தின் அதிகாரப்பூர்வ வாசகம் An IITM’s Student Initiative for nation building through man-making என்பது மட்டுமே!

முந்தைய தரப்பு வாக்கியம் அவாள் நிர்வாகத்தின் ஒருதலைபட்ச நடவடிக்கையை அம்பலப்படுத்திவிடும் என்பதால் இப்படியொரு ஏற்பாட்டை கனஜோராக நிகழ்த்தியிருக்கிறது அவாள் கும்பல்.

பார்ப்பனியம் தன் இருப்புக்கு பங்கம் ஏற்படுகிற பொழுதெல்லாம் கடவுளின் பெயரில் விதிகளை உருவாக்குவது, ஸ்மிருதிகளைக் கொண்டு மக்கள் திரளை அடக்குவது, தீர்ப்பில் கணக்குப் பிழை விடுவது, இப்படி லோகோவை மாற்றி தான் ஒரு நடுநிலை என்று அழுச்சாட்டியம் செய்வது என பலதரப்பட்ட புல்லுருவித்தனத்தைத்தான் பார்ப்பனிய நைச்சியம் என்கிறோம். இந்த நைச்சியத்தின் வயது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல்! இது நீடிப்பதன் பொருட்டே மந்திரங்களும் வாக்கிய தந்திரங்களும் உருவாகின்றன. கீதை, இராமயாணம், பாரதம் போன்ற பாசிசக் கதைகளின் தோற்றமும் இத்தகையதுதான்.

மாற்றிய பின்பு:

VSC-After-Change
தற்பொழுதைய காட்சியின் படி விவேகானந்தா வாசகர் வட்டம் ஐ.ஐடி மெட்ராசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னிச்சையான மாணவர் அமைப்பு (IIT Madras Approved Independent Student’s Body) என்று புதிய வேதம் ஓதப்பட்டிருக்கிறது!

மாற்றப்படுவதற்கு முன் (இணைய சேமிப்பு சேவையின் தரவுப்படி):

vsc-before-change-3
மே 16, 2015 அன்று எடுக்கப்பட்ட ஆதாரத்தின்படி இந்த வாசகர் வட்டத்தின் அதிகாரப்பூர்வ வாசகம் An IITM’s Student Initiative for nation building through man-making

2. அவாள் நிர்வாகத்தின் தீர்வு எத்தகையது? வரலாறு மாறியிருக்கிறதா?

ஆர்.எஸ்.எஸ்.-ன் கோட்டையாக இருக்கிற சென்னை ஐ.ஐ.டி, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான அறிவுபூர்வமான விமர்சனத்தையோ, விவாதத்தையோ முன்வைக்காமல் ஒழுங்குவிதி என்று இல்லாத ஒன்றை வைத்து பகடையை உருட்டிக்கொண்டிருக்கிறது. அம்பேத்கர்-பெரியார் பெயரைக்கண்டாலே அலர்ஜி என்பதற்காக, இல்லாத ஒழுங்குவிதிகளை ஐ.ஐ.டி காட்டுவதும், ஐ.ஐ.டி ஒரு தன்னாட்சி அமைப்பு என்று பாசிச மோடி அரசு கள்ள மவுனம் காப்பதும் புது வரலாறல்ல! பார்ப்பனியத்தின் போக்கே இப்படித்தான் இருக்கிறது. உதாரணத்திற்கு மதுரை வீரன் வரலாறு.

பார்ப்பனியத்தை எதிர்கொண்ட மதுரை வீரன்
மாணவர்களுக்கு பல்வேறு சனநாயக சக்திகளும் ஆதரவு தெரிவிப்பதைப்போல அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டங்களை வீதிதோறும் அமைப்பதைப் போல அன்றைக்கு பார்ப்பனியக் கோட்டை கொத்தளத்திற்குள்ளேயே மதுரைவீரனுக்கு சிலை எடுத்தார்களாம்.

சென்னை ஐ.ஐ.டி போன்றே மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் தான் அன்றிலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது. இதில் சக்கிலியரான மதுரை வீரன், கோயிலில் மீனாட்சிக்கு மஞ்சம் ஆட்டும் வெள்ளையம்மாள் மீது காதல் கொண்டு கோயிலுக்குள் புகுந்து சந்திக்கச் சென்றனாம். (இங்கே அவாள் கோட்டையில் முற்போக்கு மாணவர்கள் உள்ளே புகுந்து அம்பேத்கர்- பெரியாரை நிலைநாட்டுகின்றனர் என்பதைக் கவனிக்க!) வெள்ளையம்மாளும் மதுரை வீரனும் கோயிலில் இருந்து வெளிவருகிற பொழுது, பார்ப்பனிய நிர்வாகம் கோயிலுக்குள் ‘ஒரு சக்கிலியப் பையன் நுழைந்துவிட்டான்’ என்று கூக்குரல் இடவில்லை! மாறாக, “வெள்ளையம்மாளை கவர்ந்து செல்கிறான்” என்று சொல்லி நைச்சியமாக மதுரை வீரனின் மாறு கால் மாறு கை வாங்கினர்.

இங்கே மாறுகால்-மாறு கைக்கு பதிலாக அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டு பார்ப்பனியத்தின் புனிதம் காப்பது எத்தனிக்கப்படுகிறது. இங்கே பார்ப்பனிய நிர்வாகத்திற்கு எப்படி பாசிச மோடி அரசு, முட்டுக்காலாக இருக்கிறதோ அன்றைக்கு மதுரை வீரன் காலத்தில் திருமலை நாயக்கர் அரசு இருந்தது. பிறகு அரசு என்றால் அப்படித்தானே இருக்கும்?!

இன்றைக்கு இருக்கிற மாணவர் எழுச்சி போல், அன்றைக்கு மதுரை வீரனை வாழ்த்தி வணங்கினார்களாம் ஒடுக்கப்பட்ட மக்கள்! அதுவும் இன்றைக்கு, எப்படி மாணவர்களுக்கு பல்வேறு சனநாயக சக்திகளும் ஆதரவு தெரிவிப்பதைப்போல அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டங்களை வீதிதோறும் அமைப்பதைப் போல அன்றைக்கு பார்ப்பனியக் கோட்டை கொத்தளத்திற்குள்ளேயே மதுரைவீரனுக்கு சிலை எடுத்தார்களாம்.

மதுரை வீரனும் கம்படித்தடி வீரா என்று போற்றப்பட்டு வந்தானாம். இது கண்டு பொறுக்காத பார்ப்பனிய நிர்வாகம், ‘சக்கிலியன் என்பதற்காகத்தானே தீர்த்துக்கட்டினோம்; இன்றைக்கு கோயிலுக்குள்ளேயே சக்கிலியனுக்கு சன்னிதியா’ என்று விழிபிதுங்கி இஞ்சி தின்ன ஓநாயாக அவாள் கூட்டம் புதுப் புது அமைப்பு விதிகளை உருவாக்கியதாம்.

அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை
துரோகத்தின் வரலாறாக மதுரை வீரன் வெளியேதான் நிற்கிறான்! இதே தீர்வைத் தான் அவாள் நிர்வாகமும் அம்பேத்கர்-வாசகர் வட்டத்திற்கு வைத்திருக்கிறது.

அரசு என்றால் அதன் வஞ்சகத்தைப் புரியாத மக்கள், திருமலை நாயக்கரின் கட்டுப்பாட்டிற்கு இணங்கி, “மதுரைவீரனுக்கு கோயில் சரி. ஆனா அது ஏன் அவாள் கோட்டைக்குள்ள இருக்கணும்; பேசாம கோயிலுக்கு வெளிய வெச்சுட்டா என்ன”வென்று ரூல்ஸ் போட்டு தீட்டு என்பதைக் காரணம் காட்டி மதுரை வீரனுக்கு, கோயிலுக்கு வெளியே ஒரு சின்னக் கோயில் கட்டினார்களாம்.

அன்றைய நாளிலிருந்து இன்றைக்குவரைக்கும் துரோகத்தின் வரலாறாக மதுரை வீரன் வெளியேதான் நிற்கிறான்! இதே தீர்வைத் தான் அவாள் நிர்வாகமும் அம்பேத்கர்-வாசகர் வட்டத்திற்கு வைத்திருக்கிறது.

புதுப்புது அமைப்பு விதி என்ற பெயரில் அம்பேத்கர்-பெரியார் பெயர்களை போராட்டக்களத்தை விட்டே விரட்டி விட்டால் என்னெவென்று யோசிக்கிறது அவாள் கும்பல்.

3. மண்டகப்படி வேலை என்றால் என்ன?

ஐ.ஐ.டி-க்குள் மனுதர்மம்
மண்டபத்திற்குள் நடப்பதோ இந்துத்துவக் காலிகளின் அட்டூழியம்!

ஊர் பற்றி எரிகிற பொழுது, பார்ப்பனக் கோட்டையை மக்கள் திரள் தாக்க முற்படுகிற பொழுது, அனந்த சயனத்தில் இருக்கும் பெருமாளுக்கு ஐந்து வேளை தீபாராதனை காட்டும் அவாள் கும்பலின் செயலுக்கு மண்டகப்படி வேலை என்று பெயர். இதன் படி தடை செய்யப்பட்ட அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நியாயம் கேட்கும் பொருட்டு போராடப் போவதாக அறிவிக்கிற பொழுது அவாள் நிர்வாகம் சர்வே என்ற பெயரில் மாணவர்களுக்கிடையே மண்டகப்படி வேலையை ஆரம்பித்திருக்கிறது. மேற்படி அவாள் நிர்வாகம் சர்வே என்ற பெயரில் என்னென்ன கேள்விகள் எல்லாம் கேட்கிறது என்று சாம்பிளுக்கு இரண்டு பார்க்க வேண்டும்.

1. மாணவர் கூட்டம் (Board of students meeting) இன்னும் நடைபெறாமல் இருக்கிற பொழுது, அம்பேத்கர்பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என நினைக்கிறாயா?

பார்வை: மாணவர் கூட்டம் (Board of students meeting) இன்னும் நடைபெறவில்லை என்று சொல்கிற அவாள் நிர்வாகம் பிறகு மாணவர்களின் ஒப்புதல் இன்றி அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை எப்படி தடை செய்ய இயலும்? எதன் அடிப்படையில் ஐ.ஐ.டி நிர்வாகம் இந்தக்கேள்வியை முன்வைக்கிறது?

2. APSC அமைப்பு, மாணவர் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டுதான் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க சென்றிருக்க வேண்டுமென்று நினைக்கிறாயா? இது இன்னொரு கேள்வி

பார்வை: இது ஒழுக்கக் கேள்வி எனில் இந்துத்துவக் காலிகள் மாணவர் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு அது எடுபடாமல் தான் பாசிச மோடி அரசிற்கு மொட்டைக் கடிதாசி போட்டார்களா? இதே கேள்வியை ஏன் அவாள் நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் கும்பலை முன்வைத்துக் கேட்கவில்லை?

பிள்ளை இல்லாதவன் வீட்டிலே கிழவன் துள்ளி விளையாண்ட கதையாக மோடி கும்பலின் இந்துத்துவ திணிப்பு ஊழிக்கூத்தாக இருக்கிறது. இந்த ஊழிக்கூத்து தான் புதியதலைமுறை நேர்படப் பேசு விவாதத்திலும் ஏ.பி.வி.பி இந்துத்துவக் காலிகளை “இது எங்கள் ஆட்சி” என்று கேலிக்கூத்தாக வெளிப்படையாக கொக்கரிக்க வைத்திருக்கிறது!

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அங்கே மண்டபத்திற்குள் நடப்பதோ இந்துத்துவக் காலிகளின் அட்டூழியம்! ஏற்கனவே தீஸ்தா செதல்வாத்தின் கருத்துரையின் போது உள்ளே புகுந்து ஆட்டம் போட்ட ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர்களை வேடிக்கை பார்த்த அவாள் நிர்வாகம் இன்றைக்கு சர்வே எடுக்கிறது என்றால் மண்டகப்படியின் முழுப்பரிமாணம் அத்தகையது என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

3. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்துத்துவத் திணிப்பு நடவடிக்கைகள் இது முதல் தடவையா?

இல்லை. இன்றைக்கு எப்படி இந்துத்துவ வானரங்கள் மொட்டைக் கடிதாசி கொடுத்து அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம், மோடி அரசுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் இருக்கிறது என்று சொல்லி அமைப்பை தடை செய்து பாசிசத்தை கட்டவிழ்த்து விடுகிறார்களோ அதேபோன்று மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆர்.எஸ்.எஸ், ‘ஐ.ஐ.டி.-ல் படிக்கிற மாணவர்கள் அசைவ உணவால் தாம்ச குணங்களை பெறுவதாகவும் சைவ உணவு உண்பவர்களுக்கு தனி உணவு விடுதி வசதியை ஏற்படுத்தி தரவேண்டுமெ’ன கடிதம் எழுதியது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அன்றைக்கும் ஸ்மிருதி ஈரானி அமைச்சகம், “அனைத்து ஐ.ஐ.டி.யிலும் சுத்த சைவ உணவு விடுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று சுற்றறிக்கை வெளியிட்டது.

இந்த சுற்றறிக்கை வருவதற்கு முன்னரே இத்தகைய பாசிச அரங்கேற்றத்திற்கு முன்னோடியாக இருந்தது சென்னை ஐ.ஐ.டிதான். அன்றைக்கு விடுதியில் ஊழியர் சங்கத்தில் இருந்த நிரந்தர தொழிலாளிகள் ஒவ்வொரு விடுதியிலும் சிறப்பான முறையில் உணவு வழங்கி வந்தனர். அன்றைக்கு இதே இந்து வானரங்கள், “முட்டை, அசைவம் வழங்குவது சுத்தம் பத்தம் இல்லை” என்று சொல்லி சுத்த சைவ உணவு விடுதியை தனியாக ஏற்படுத்திக்கொண்டனர். சுத்த சைவ உணவு விடுதி என்பது அசைவ உணவு விடுதியில் இருந்தே பாத்திரம் கரண்டி என அனைத்து வகையிலும் முற்றிலும் வேறுபட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இது அவாளின் விருப்பம் என்றால் மாட்டுக்கறி உண்பதும் இந்துக்களின் உரிமை தான். அதை அவாள் நிர்வாகம் நிறைவேற்றியதா?

சொல்லப்போனால் ஸ்மிருதி ஈரானியின் சுற்றறிக்கைக்குப் பின்பு பெரும்பாலான ஐ.ஐ.டி.க்களில் அசைவ உணவு வழங்குவதே நிறுத்தப்பட்டிருக்கிறது. டில்லி ஐ.ஐ.டி.யில் அசைவ உணவு வழங்குவதற்கு கேண்டின்களில் டெண்டர் எடுக்க யாரும் வரவில்லை என்ற பொய்க்காரணம் முன்வைக்கப்பட்டது. இது பாசிச அரங்கேற்றலுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு.

4. சென்னை ஐ.ஐ.டி, உயர் கல்வியின் கேந்திரமா? ஆர்.எஸ்.எஸ்ஸின் கேந்திரமா?

அரசிலும் ஆட்சியிலும் மதத்தை தனியாக பிரிப்பதுதான் பொது சிவில் சமூகத்தின் உண்மையான நோக்கம் என்றிருக்கும் பொழுது, இது வரை ஐ.ஐ.டி சென்னையைப் பற்றி அறியாதவர்கள் இந்தப் புகைப்படத்திற்கு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருமுறை பட்டம் வழங்குகிற பொழுது பட்ட உறுதியேற்பு மொழியோடு வேத வழிபாட்டை சமஸ்கிருதத்தில் அச்சடித்துத் தருகிறது சென்னை ஐ.ஐ.டி அவாள் நிர்வாகம். அந்த சமஸ்கிருத சுலோகம் இப்படி போகிறது.

ஸஹ நாவவது ஸஹ நெள புநக்து
ஸஹ வீர்யங்கரவாவஹை.
தேஜஸ்வி நாவதீதமஸ்து, மா வித்விஷாவஹை.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

மக்கள் வரிப்பணத்தில் செயல்படுகிற ஓர் உயர்கல்வி நிறுவனத்திற்கு இது வெட்கக்கேடான விசயம் இல்லையா? இங்கு நூற்றுக்கு 99% விசயங்கள் இப்படித்தான் நடைபெறுகின்றன. வேத காலத்தில் நியுரோ சயின்ஸ் என்று அடித்துவிடுவது, சின்ன ஜீயரைக் கூப்பிட்டு பரிணாமம் குறித்து வகுப்பெடுப்பது என்று இங்கு நடக்கிற அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதில் இந்துத்துவத்தை சுவாசிக்கிற அற்ப இதயங்கள், ‘அரபு நாட்டில் குரான் இருக்கிற பொழுது இந்திய நாட்டில் இந்துமதம் தான் இருக்கும்’ என்று பல்லிளிக்கின்றன.

இந்தக் கூட்டம் இதை இந்துமதத்தின் அதிகாரப்பூர்வ எழுத்து என்று எதை வைத்து சொல்கிறது? இது யாருக்கெல்லாம் பொதுவானதாக இருந்தது? இது எப்பொழுது இந்த மக்களின் மதமாக இருந்தது என்று நேர்பட விவாதிக்க முன்வருமா? தடையே விவாதிக்க கூடாது என்பதற்குத்தானே!

5. எதற்காகத் தடை? இனி அடுத்தது என்ன?

அருந்ததிராய் சரியாகச் சுட்டிக்காட்டுவதைப் போன்று இத்தகைய மாணவர் அமைப்புகள் இச்சமூகத்தின் ஆகக்கேடான முதலாளித்துவத்தையும் பார்ப்பனியத்தையும் சரியான பார்வையில் முன்வைத்து விமர்சிக்கின்றனர். இது ஆளும் வர்க்கத்தை எதை விடவும் அதிகமாக வினைபுரிய வைக்கிறது. இதை அவர்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்த சமூக விடுதலைக்கான உயிர்நாடியை செயல்தந்திரத்தை இன்றைக்கு மாணவ சமுதாயம் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது.

மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கார்ப்பரேட் கும்பல்களும் பாசிசத்தை செலுத்தும் இந்துத்துவக் கும்பலும் 50-50 சமன்பாட்டின் அடிப்படையிலேயே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆகக்கேடான முறையில் சுரண்டி வருகிறது. இன்றைக்கு சந்தைக்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் கார்ப்பரேட்டுகளின் பகாசுர கொள்ளைக்கு தீனி போட முடியாத ஏழையாக இந்தியா நிற்கப்போகிறது.

இந்த இரு கூட்டுக்களவாணிகளையும் அடித்துநொறுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை மாணவ சமுதாயம் அரசியல் அரங்கிற்கு தீர்க்கமாகக் கொண்டுவந்திருக்கிறது. புரட்சியின் வித்துக்கள் இப்படித்தான் தோற்றுவிக்கப்படுகின்றன; ‘இந்தப்போராட்டம் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை’ என்று பகத்சிங் சொல்லியதை அரசியல் அரங்கில் நிரூபித்துக்காட்டுகின்றன. அதை பதியம் போட்டு வளர்த்தெடுப்பதும் போராட்டத்தில் ஒன்றிணைவதும் சனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவர் முன் நிற்கும் கடமையாகும்.

6. எல்லாம் சரி. போராடுவதற்கு பயமாக உள்ளதே என்ற கேள்வி இருக்கிறதா?

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதை ஒட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் தெருவில் இறங்கி போராடிய பொழுது ஆளும் வர்க்கமும் காவல்துறையும் மூர்க்கமாக போரிட்டன. தோழர்கள் பாசிசத்தை அம்பலப்படுத்தி ஆளும் வர்க்கத்தின் முகத்திரையை கிழித்தனர். இதைப் பார்க்கிற மாணவர்களுக்கு நாமும் போராட வேண்டும் என்ற உத்வேகம் வருகிற அதே சமயம் இந்த ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கிற பொதுபுத்தியோ போலீசு, அடக்குமுறை என்று பயம் காட்டவே செய்யும். அங்கு சனநாயகத்தை சரி என்று சொல்கிற மாணவர்கள் தனித்தனி தீவுகளாக நிற்கிற பொழுது பயம் ஆட்கொள்ளுதல் இயல்பே. இங்குதான் நாம் பயத்தின் அரசியலை கண்டு கொள்ள வேண்டும்.

பய உணர்ச்சி, தனிமநிலை உணர்ச்சியல்ல (It is not an absolute feeling). அது சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களை சார்ந்து எழுகிற சார்பு நிலை (Relative feeling) உணர்ச்சிதான்.

சான்றாக தனிமனிதரின் பயத்தைவிட போலீசு வர்க்கத்தின் பயம் நேற்றைய போராட்டத்தில் கடுமையாக இருந்தது. எங்கே சிவப்பு சட்டைகள் போராடினால் கலகம் பிறக்குமோ என்று அஞ்சிக் கொலைநடுங்கியது ஆளும்வர்க்கத்தின் ஏவல் வர்க்கம். இந்த பயத்தினாலேயே பேட்டியளிப்பதற்கு முன் தோழர்களை அள்ளிச்சென்றது போலீசு.

ஐ.ஐ.டி சென்னை
பயத்தினாலேயே பேட்டியளிப்பதற்கு முன் தோழர்களை அள்ளிச்சென்றது போலீசு.

இதே ஆளும் வர்க்கத்தின் பயத்தோடு ஒப்பிடுகிற பொழுது பார்ப்பனிய அவாள் நிர்வாகத்தின் பயத்தோடு ஒப்பிடுகிற பொழுது தனிமனிதனின் பயம் மிக மிக அற்பமானது. சான்றாக, இதே சென்னை ஐ.ஐ.டியில் மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் காரணமாக கொத்து கொத்தாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை அம்பலப்படுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் ஐ.ஐ.டி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவப்புச் சட்டைகளை கண்ட அவாள் நிர்வாகம் அன்றைக்கு ஐ.ஐ.டி முழுவதும் 144 தடை உத்தரவு போட்டது. வேளச்சேரி, கிண்டி, தரமணியின் கதவுகள் இறுக்கிச் சாத்தப்பட்டன. பு.மா.இ.மு எதிர்த்துப் போராடுவதை செய்தியிலும் வரவிடாமல் பார்த்துக் கொண்டன.

சில மாணவர்களுக்கே பார்ப்பனியத்திற்கு முதுகுத்தண்டை சில்லிட வைக்கிற மரணபயம் அன்றைக்கு இருந்தது. அப்படியானால் சமூக விடுதலையை சுவாசிக்க வேண்டும் என்கிற மாணவர்களின் பயமோ இந்த ஆளும்வர்க்கத்தின் பயத்தோடு ஒப்பிடுகிற பொழுது சொற்பமானது மட்டுமல்ல; அற்பமானதும் கூட. இதைப் புரிந்து கொள்வது மட்டுமல்ல; இத்தகைய புரிதலை பெளதிக சக்தியாகவும் முன்னிறுத்த வேண்டும்.

இந்த வகையில் பயம் தெளிய வேண்டுபவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணினரை தொடர்பு கொண்டு நேரடி அனுபவத்தை பெறலாம். நாடெங்கிலும் பல்வேறு மாணவர்கள் உரத்துக் கூறுவதைப்போல வீதிதோறும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தைக் கட்டியமைக்கலாம்.

– வினவு செய்தியாளர்.

 1. பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.

  சூத்திரன் என்றால் யார்?

  சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

  அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.

  இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்

  சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு

  இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

  நீங்கள் ஒரு “இந்து” என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
  ——————–

  நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!

  அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

  கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

  சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

  யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

  கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!

  கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! – நூல்: –“சிந்தனையும் பகுத்தறிவும்” பக்கம் 8-11

  *************

  மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,

  “ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்”.

  மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,

  “பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்”.

  மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,

  “அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”

  மனு அத்: – 9, ஸ்லோகம் – 317 சொல்கிறது:

  “வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”

  மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:

  “பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது”.

  அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:

  “பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”

  அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:

  “பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.

  மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:

  “வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்”.
  .

 2. // ஸஹ நாவவது ஸஹ நெள புநக்து
  ஸஹ வீர்யங்கரவாவஹை.
  தேஜஸ்வி நாவதீதமஸ்து, மா வித்விஷாவஹை.
  ஓம் சாந்தி சாந்தி சாந்தி //

  தைத்திரீய உபநிடதத்தில் இடம் பெற்று மற்ற சில உபநிடதங்கள் ஓதுவதற்கு ஓதப்படும் இந்த மந்திரத்தின் பொருள்:

  ஆச்சாரியன், சிஷ்யன் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக. அறிவின் ஆற்றல் இருவரும் அனுபவிக்க ஊக்குவிப்பராக. நம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக. கற்றது நமக்கு பயனுள்ளதாக விளங்கட்டும். எதற்காகவும் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருப்போமாக. அமைதி, அமைதி, அமைதி!

  நன்றி: கட உபநிடதம். சுவாமி ஆசுதோஷானந்தர் உரை. இராமகிருஷ்ண மட வெளியீடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க