Saturday, December 4, 2021
முகப்பு அரசியல் ஊடகம் லலித் மோடியை குற்றம் சொல்பவன் எவனடா?

லலித் மோடியை குற்றம் சொல்பவன் எவனடா?

-

“அடிச்சும் பாத்தாச்சு, அவுத்தும் ஓட வெச்சாச்சு” என கட்டதுரை சலித்துக் கொண்டாலும் கைப்பிள்ளைகள் அயர்வதில்லை. அடிவாங்கினால் பயப்படுவதற்கும் ஒரு நேர்மை குறைந்த பட்சமாக இருந்தாக வேண்டும். தொழில் முறை மாமாக்களிடம் அதை எதிர்பார்க்க கூடாது.

தினமணி வைத்தி
பா.ஜ.க.வின்ன் ஊடகப் பாதுகாவலர் தினமணி வைத்தி… விருது வழங்கும் விழா ஒன்றில்.

தினமணி வைத்தி-க்கு இந்த முறை நெறிகட்டியிருப்பது, சுஸ்மா ஸ்வராஜ் செய்த ஒரு மனிதாபிமான செய்கையால்.

வெறும் வாய்; மெல்ல அவல்!” என்று தலைப்பில் சதிகார நரி எல்லாம் விதி என்று ஓதிய கதையாக லலித் மோடியின் மனிதாபிமானத்தையும், அதை ஆதரிக்கும் நரேந்திர மோடி கோஷ்டி மனிதாபிமானத்தையும் காப்பற்ற துடிக்கிறார் தினமணி ஆசிரியர்.

முதலில் வைத்தி அவர்கள் ஊதுபத்தி, சாம்பிராணி போட்டு ஆன்மீக சூழலை உருவாக்குகிறார். “ஊழல், முறைகேடு இல்லாமல் ஆட்சி நடத்தும் மோடி அரசு மீது களங்கம் கற்பிக்க” இந்த பிரச்சினை எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்திருக்கிறதாம். ஆக, “மோடின்னா ஹாமம் சோப்பு” என்று கச்சேரியை ஆரம்பிக்கிறார். நிதின் கட்காரி, எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள், அதானி என்று ஏகப்பட்ட சான்றோர்கள் இந்த வரியைப் பார்த்து வெளிப்படுத்திய வெட்கத்தை படம்பிடிக்க இந்த உலகில் கேமராவே இல்லையே, என்ன செய்வது?

அடுத்து வைத்தி அவர்கள் சுருதி சுத்தமாக பல்லவியை பாடுகிறார். ஐ.பி.எல் சூதாட்டத்தைக் கண்டுபிடித்த லலித் மோடியின் மூளை, வீரர்கள் ஏலம், பெரும் பணம் போன்ற பிரமிப்புகளை நினைவுபடுத்துகிறார். “பல கோடி ரூபாய் இருந்தால் முறைகேடு இருக்கும் என்பதால் லலித் மோடி ஒன்றும் யோக்கியமானவர் இல்லை” என்று நடுநிலைமையாகவே எழுதுகிறார் வைத்தி. “பல கோடி ரூபாய் வருமானம் இருக்கும்பட்சத்தில் அவர்கள் அம்பானியாகவோ இல்லை அதானியாகவோ இல்லை கோயங்காவாகோ இருந்தால் கூட முறைகேடு இருக்கும்” என்று வைத்தி அவர்கள் சொல்லியிருப்பது ஒரு சேம்சைடு கோலென்றாலும் நேர்மையான சேம்சைடு கோல்!

சுஷ்மா சுவராஜ் - லலித் மோடி
சுஷ்மாவின் மனிதாபிமானத்தை புரிந்து கொண்டால் லலித் மோடி தப்பியதையும் மனிதாபிமானத்தோடு ஏற்றுக் கொள்ளலாமாம்.

லலித் மோடி அயோக்கியனாக இருந்தாலும் பல கோடி புழங்கிய காரணத்தால் அவருக்கு தாவுத் இப்ராஹிம் போன்ற தாதாக்களிடமிருந்து அச்சுறுத்தல் இருந்ததாம். இந்நிலையில் முந்தைய காங்கிரசு அரசு பாதுகாப்பை விலக்கிக் கொள்ள லலித் மோடி வேறுவழியின்றி லண்டனுக்கு தப்பினாராம். இதை ஊடகங்கள் வசதியாக மறந்து விட்டதாம். சுஷ்மாவின் மனிதாபிமானத்தை புரிந்து கொண்டால் லலித் மோடி தப்பியதையும் மனிதாபிமானத்தோடு ஏற்றுக் கொள்ளலாமாம்.

அதானே, குஜராத்தில் 2000 முசுலீம்களின் படுகொலைக்கு காரணமான மோடி ஒரு அயோக்கியர் என்றாலும் அவருக்கும் பயங்கரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் வந்தபடியால், குஜராத் போலீசு என்கவுண்டர் செய்த போது போலி மோதல் கொலை என்று கத்தியவர்கள் காட்டுமிராண்டிகள்தானே? 20-ஆம் நூற்றாண்டு இந்தியாவை கலவரங்களால் நிரப்பி சாதனை படைத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் போது எதிர்ப்பவர்களும் பயங்கரவாதிகள்தானே? இந்து ஞான மரபின் மனிதாபிமானத்தை புரிந்து கொள்ளாத அற்பர்களுக்காக காந்தியவாதி லலித் மோடி உயிர் துறக்கலாமா?

என்ன செய்வது, திருவாளர் தாவுத் இப்ராஹிம் மட்டும் இந்துவாக பிறந்திருந்தால் இப்படி ஓடி ஒளிந்து கராச்சியிலோ, காட்டுக்குள்ளோ பயந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. இனி தொழில் முறை தாதாக்கள் தமது ஆபரேஷன்களுக்கு முன்னால் தாம் ஒரு சுத்தமான இந்துவாக இருப்பதை உறுதி செய்து கொண்டால் அவர்கள் மனிதாபிமானத்தோடு புரிந்து கொள்ளப்படுவார்கள். அதற்கு வைத்தி மாமா உறுதி அளிக்கிறார்.

லலித் மோடி - ராஜே
(லலித் மோடி – பா.ஜ.க வின் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே வுடன்)

அடுத்தபடியாக திருவாளர் வைத்தி அவர்கள் லலித் மோடியின் காவிய ஒழுக்கத்திற்கு ஆதரவாக சில லா பாயிண்டுகளை முக்கி முக்கி எழுதப்படும் கவிதைகள் போல முன்வைக்கிறார். கவிதையோ இல்லை களவாணித்தனமோ அது வெளிப்படும் போது முக்கல் ஏற்பாட்டால்தான் கவித்துவத்திற்கோ இல்லை களவாணித்தனத்திற்கோ கேரண்டி. அதன்படிலலித் மோடி பல வழக்குகளில் விசாரிக்கப்பட வேண்டியவரே அன்றி, தேடப்படும் குற்றவாளி அல்லவாம். அதன்படி தலைமறைவாக வாழ்பவர் இல்லையாம். அவரது இலண்டன் முகவரி இந்திய அரசுக்கு தெரியுமாம்.

அப்படி பார்த்தால் நீங்கள் தேடப்படும் குற்றவாளியாக இல்லாமல் விசாரிக்கப்பட வேண்டியவராக மட்டும் இருந்தால் நீங்களும் நல்லவரே. இதை தாவுத் இப்ராஹிமும் பல வழக்குகளின் நிலையை வைத்து கேட்கலாம். அதைப் போல பிக்பாக்கெட் திருடர்கள் முதல் ஷேர் மார்கெட் முதலைகள் வரை பலரும் கேட்டாலும் அதற்கும் கருட புராணம் வழி வைத்திருக்கிறது.

லலித் மோடியே ஒரு குற்றவாளி என்று நீதிமன்றம் கூறிவிட்டாலும், போடப்பட்ட வழக்கு அரசியல் பழிவாங்கும் உள்நோக்கமுடையது, உயர் நீதிமன்றத்தில் விடுதலை கிடைக்கும் என்று புரட்சித் தலைவிக்கு எழுதிய படி பார்த்தால் இந்த உலகில் மோடிகளை மட்டுமல்ல, கேடிகளையும் குற்றம் சொல்ல முடியாது. அடித்தவனுக்கு அடுத்த கன்னத்தைத்தான் காட்டச் சொன்னார் ஏசுநாதர். வைத்தி நாதரோ அடுத்தவனுக்கு ஒட்டு மொத்த ஊரையே காட்டச் சொல்கிறார்.

வாறியா என்று கூப்பிடும் மாமா, வருபவன் சொறியா, எய்ட்ஸா, குடிகாரனா என்றா பார்ப்பான்? அவனது தொழில் தர்மத்தின் படி வாடிக்கையாளர்களே கடவுள்கள். இதுதானே கடவுள்களின் மனிதாபிமானம்?

“லலித் மோடியின் கடவுச் சீட்டு வழக்கில் சுஷ்மா ஸ்வராஜின் மகள் வழக்கறிஞராக வாதாடினாரே” என்று கேட்பவர்களை வைத்தி அவர்கள் சிம்பிள் சிரிப்புடன் மடக்குகிறார். என்னவென்றால் சாரதா நிதி மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆலோசகராக இருந்தார், தடை செய்யப்பட்ட ‘சிமிக்கு’ ஆதரவாக காங்கிரசின் சல்மான் குர்ஷித் வாதாடினார் என்று வரலாற்றை விரிக்கிறார்.

ப.சி மேட்டர் படி நீங்களும் திருடர்கள்தானே என்று நினைவுபடுத்துகிறார். சிமி மேட்டர் படி நாங்களாவது பொருளாதார விடயங்களில் பொறாமையால் குற்றம் சாட்டப்பட்டவர்களைத்தான் ஆதரித்தோம், நீங்கள் இசுலாமிய பயங்கரவாதிகளை அப்பட்டமாக ஆதரித்திருக்கிறீர்கள் என்று உண்மையை பயங்கரமாக எடுத்து வைக்கிறார்.

அசீமானந்தா, பிரக்யா சிங், கோட்சே போன்ற முன்கள சாதனையாளர்களும், சாவர்க்கர், கோல்வால்கர், மோடி போன்ற பின்கள சாதனையாளர்களும் பயங்கரவாதிகளில்லையா என்று கேட்டால் என்ன பதில்? ஐயா இவர்களெல்லாம் தருமத்திற்காக ஆயுதம் எடுத்து அப்பாவிகளை கொன்றவர்கள் என்பது கூட தெரியவில்லை என்றால் நீங்களும் பயங்கரவாதிகளே!

அடுத்து ராஜ்ஜிய உறவு சார்ந்த விசயத்தை சிம்பிளாக எடுத்து வைத்து அதற்கு மோடி அரசு காரணமில்லை என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் வைத்தி. போர்ச்சுகல் போவதற்கு தற்காலிக விசா வழங்க இந்தியாவின் அனுமதியே தேவையில்லையாம். என்றாலும் இந்தியாவின் உறவு பாதிக்க கூடாது என்று பிரிட்டன் தயங்குகிறதாம். அப்படி தயங்க வேண்டாம், உங்கள் நாட்டு சட்டப்படி அனுமதிக்கலாம் என்று சுஷ்மா கூறுகிறாராம். இதெல்லாம் பிரச்சினையா என்று அறச்சீற்றத்துடன் பொங்குகிறார் வைத்தி.

அதாவது ஒரு குற்றவாளிக்கு அனுமதி அளித்தால் அது இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படும் என்று பிரிட்டன் தயங்குகிறது. இல்லையில்லை அந்த குற்றவாளியை அனுமதியுங்கள், நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று சுஷ்மாவும், வைத்தியும் பேசுகிறார்கள். இதன்படி இங்கிலாந்திற்கு இருக்கும் குற்றவாளி குறித்த உணர்வு கூட இந்தியாவுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, அது தவறில்லை என்று வைத்தி வாதிடுகிறார். எனினும் இதன் பின்னே உள்ள நோக்கம் மனிதாபிமானமின்றி வேறு அல்ல! இதே மனிதாபிமானம் பிரிட்டன் என்ற நாட்டிற்கு இல்லை என்பதற்கு காரணம் அது மாட்டுக்கறி சாப்பிடும் தேசம் என்பதறிக.

இறுதியாக லலித் மோடியை கைது செய்யாமல் தப்ப விட்டு, குவாத்ரோச்சி, போபால் விசவாயு ஆண்டர்சன், தாவுத் இப்ராஹிம், மேமன் சகோதரர்கள் இப்படி பல தீவிரவாத, சமூக விரோதிகளை தப்பி விட்ட காங்கிரசு இப்போது சவுண்டு விடலாமா என்று வெகுண்டெழுகிறார் வைத்தி.

காங்கிரசு மீதான குற்றத்தை அப்படியே ஏற்போம். சரி, இடையில் வாஜ்பாயி ஐந்தாண்டுகள் ஆண்டார், மோடி கூட அமெரிக்கா, அண்டார்டிகா என்று உலகை சுற்றி சுற்றி வருகிறார், ஏன் மேற்கண்ட நபர்களை கைது செய்யவில்லை? அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் படி கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டாலும் அதன் இழப்பை இந்திய அரசுதான் சுமக்க வேண்டும். இதைத்தானே போபாலிலும் காட்டினார்கள். இந்தக் கேள்விகளுக்கு வைத்தி ஐயா அளிக்கப் போகும் பதில் என்ன? நாட்டு நலனுக்காக வீட்டு நலனை தியாகம் செய்ய வேண்டும் என்று விவேகானந்தரே சொல்லியிருக்கிறாரே!

அவுத்து அடிப்பதை ஒத்துக் கொண்டு எனது உள்ளாடையை திருடி விட்டான் என்று கூப்பாடு போடுவதில் கூட ஒரு நயம் வேண்டும், அது வைத்தி சாரிடம் நிறையவே இருக்கிறது.

எப்போதோ மனிதாபிமான அடிப்படையில் சுஷ்மா ஸ்வராஜ் உதவியதற்கு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொன்னால் அதை மோடி கேட்கமாட்டாராம். கேட்டால் பிறகு அடிக்கடி இதை எழுப்புவார்களாம். இதெல்லாம் மோடிக்கு கரெக்டாக தெரியும் என்று அகமதாபாத் ஐஐஎம் அறிஞர் போல பட்டையைக் கிளப்புகிறார் வைத்தி.

இறுதியில் லலித் மோடியைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை நரேந்திர மோடிக்கு இருக்கிறது என்று தலையங்கத்தை முடிக்கிறார் வைத்தி. என்னடா இதுவரை எழுதிய கீதை வரிகளின் முதலுக்கே மோசமா என்று திகைக்கிறீர்களா? எந்த லலித் மோடியை காப்பாற்ற சுஷ்மாவும், பா.ஜ.கவும் பாடுபடுகின்றதோ அந்த மோடியை தில்லி மோடி கைது செய்வார் என்று எப்படி எழுத முடியும்? என்று லாஜிக் பார்க்கிறார்களா? மாஜிக்கல் ரியலிசத்தின் அழகை மல்லாக்கொட்டை பறிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியாது ஐயா!

அல்லது இப்படியும் சொல்லலாம்.

குடிகாரர்களிடம் நிதானத்தையும், சதிகாரர்களிடம் நேர்மையையும் எதிர்பார்க்கலாமா? அது உங்களது மனிதாபிமானத்தை பொறுத்தது. அப்படியானால் மனிதாபிமானம் என்றால் என்ன? அது வைத்தி சாரிடம் கேட்க வேண்டிய கேள்வி! – கையில் கோமாதா அருளிய சாணியுடன்!

Sushma-Support-To-Lalith-Modi