privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தடை பல தகர்த்த கோவை பொதுக்கூட்டம் - செய்தி, படங்கள்

தடை பல தகர்த்த கோவை பொதுக்கூட்டம் – செய்தி, படங்கள்

-

“சி‌.ஆர்‌.ஐ மற்றும் பெஸ்ட் பம்ப்ஸ் நிறுவன முதலாளிகளின் தொழிலாளர் விரோதப் போக்கும் கட்டமைப்பு நெருக்கடியும்” என்கின்ற தலைப்பில் வெகு எழுச்சிகரமாக நடைபெற்றது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய கோவை பொதுக் கூட்டம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கோவையில் சி‌.ஆர்‌.ஐ பம்ப்ஸ் நிறுவனத் தொழிலாளர்களும் பெஸ்ட் பம்ப்ஸ் நிறுவன தொழிலாளர்களும் சட்ட விரோத கதவடைப்புக்கு எதிராகவும் நிர்வாக அடக்குமுறை அநீதிக்கு எதிராகவும் கடந்த 125 நாட்களாக விடாப்பிடியாக போராடி வருவதை அறிவீர்கள்.

அதன் தொடர்ச்சியாக, ஒரு பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். சட்டவிரோத கதவடைப்பு, அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் சட்டபூர்வ அடியாளாக காவல் துறை அடக்குமுறை, அப்பட்டமான ஜனநாயக மீறலாய் மானாவாரியான பொய் வழக்குகள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

எதிர்பார்த்தது போலவே அனுமதி மறுப்பு கொடுக்காமல் தாமதித்தது போலீசு. உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினோம். வழக்கு பதிவாகி அங்கிருந்து அரசு வழக்கறிஞர் இங்கே பேசியவுடனே சங்க நிர்வாகிகளை அழைத்து உடனடியாக அனுமதி கொடுத்தனர்.

வழக்கமாக அனைவருக்கும் அறிவுறுத்தும் ஒழுங்கு விதிகளுடன் நமக்கு கூடுதலாக ஒன்றும் விதிக்கப்பட்டிருந்தது. “ஒழுங்கு விதிகள் அமலில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அனுமதியை ரத்து செய்வோம்” என.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கோவை மாவட்டத்தில் ஒழுங்கு விதிகள் கிட்டத்தட்ட 18 வருடங்களாக அமலில் இருக்கின்றன. இந்த ஒழுங்கு விதிகள் குறித்த எச்சரிக்கை செங்கோல், நமது அமைப்பின் மீது மட்டும் வழுவாமல் நீதி வழங்கும்.

தியாகிகளுக்கு வீரவணக்கம்
தியாகிகளுக்கு வீரவணக்கம்

உளவுப் பிரிவு போலீசார் கோவையில் உள்ள அனைத்து லித்தோ பிரஸ் உரிமையாளர்களையும் நேரில் சென்று மிரட்டியுள்ளனர். “சி‌.ஆர்‌.ஐ சங்கத்துக்காரங்க வந்தா போஸ்டர் போடக் கூடாது” என்று. அனைத்து பத்திரிகைகளுக்கும் தகவல் அனுப்பியும் சுமார் 1000 பேர் பங்கேற்ற இந்தப் பொதுக் கூட்டம் ஒரு பெட்டிச் செய்தியாகக் கூட வரவில்லை. இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு சில முதலாளிகள் சுமார் 25 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்த மாவட்ட மக்கள் எந்தச் செய்தியை பார்க்க வேண்டும் அல்லது பார்க்க வேண்டாம் என முடிவு செய்கிறார்கள். இதுதான் நம் நாட்டின் ஜனநாயகம்!

26-07-2015 அன்று மாலை சுமார் 6:30 க்கு துவங்கிய பொதுக் கூட்டம் இரவு 10:00 மணி வரை எழுச்சிமிகு உரைகளுடனும் புரட்சிகரப் பாடல்களுடனும் துடியலூர் பொது மக்களை துயில் கலைத்து அரசியல் உணர்வூட்டி நிறைவடைந்தது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் குமாரவேல் தனது தலைமையுரையில், இந்த 125 நாள் போராட்டத்தையும் அதன் நியாயத்தையும் எடுத்துரைத்தார்.

தோழர் குமாரவேல்
தோழர் குமாரவேல்

“இந்த கம்பெனியில் இன்னும் எத்தனை நாளானாலும் கதவை திறக்கும் வரையில் நாங்கள் போராடுவோம். அப்படியெல்லாம் விட்டுவிட்டு சென்று விட முடியாது. இந்த கம்பெனி முற்று முழுதாக எங்கள் உழைப்பில் உருவானது. இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு இயந்திரமும் எங்கள் உறுப்புகளை போல எங்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்து இந்த கம்பெனி உயர்ந்திருக்கிறது. புதிது புதிதாக யோசனைகளுடன் சி‌.ஆர்‌.ஐ பம்பை உழைப்பின் மூலமும் திறமையின் மூலமும் உயர்த்தியது நாங்கள். எனவே நாங்கள் எங்கள் நிறுவனத்தை விட்டுத் தர முடியாது” எனச் சூளுரைத்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சரவணன் தனது உரையில்,

“எங்களது பெஸ்ட் பம்ப்ஸ் நிறுவனர் ஐயருக்கு ஒண்ணுமே தெரியாது. நாங்கதான் உற்பத்தியில் ஈடுபடுகிறோம். ஐயர் கம்பெனி தொடங்கும் போது ஹோமம் வளர்த்தி துவங்கினார். அவர் போற வரைக்கும் அதத்தான் பண்ணாரு. இப்ப அவங்க மக ஸ்ரீப்ரியாவும் அதத்தான் செய்றாங்க. ஒரு ஒர்க் ஷாப் மாதிரி துவங்கப்பட்ட பெஸ்ட் நிறுவனத்தை இந்தளவு உயர்த்தினது எங்களுடைய உழைப்பு. அதற்கான உரிமையை பெறாமல் விட மாட்டோம், எங்களுக்கு வழிகாட்ட சங்கம் இருக்கிறது. நாங்க எதற்கும் பயப்பட மாட்டோம்” எனக் கூறினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி தனது கண்டனவுரையில்,

தோழர் விளவை இராமசாமி
தோழர் விளவை இராமசாமி உரையாற்றுகிறார்

” போராட்டம் பண்ணினால் பொய் வழக்கு போடுவோம். சிறையில் தள்ளுவோம் என கோவை மாநகர காவல் துறை இந்தப் போராட்ட வழக்குகளின் மூலம் அறிவித்திருக்கிறது. சி‌.ஆர்‌.ஐ போராட்டப் பந்தலில் சமையல் செஞ்சிட்டு இருந்த தொழிலாளிகள கைது செஞ்சிட்டு மணியக்காரன்பாளையத்தில் கைது செஞ்சென்னு எதுக்கு சொல்ற…?

நீ யோக்கியமான ஆள்னா என்ன உண்மையோ அத சொல்லு…..!

சி‌.ஆர்‌.ஐ செயலாளர் குமாரவேல் உட்பட 5 முன்னணியாளர்களை பேச்சு வார்த்தைக்கு வாங்க என பீளமேடு ஸ்டேசனுக்கு அழைத்து மூன்று மணி நேரம் பேசி விட்டு நயவஞ்சகமாக கைது செய்து கொடிசியா முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ததாக எதற்காக பொய் வழக்கு போடுறீங்க….?

தோழர் விளவை இராமசாமிஅவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், நம் மீது குண்டாஸ் போடுவதற்கு. நாம் உயர்நீதி மன்றத்தில் வாங்கிய தடையால் தற்போது அமைதி காக்கிறார்கள். அது மட்டுமல்ல, இப்பிடி இத்தனை பேரை ஜெயிலில் தள்ளியும் துடியலூரில பொதுக் கூட்டம் போட்டுப் பேசுராணுகளேன்னு கறுவிக் கொண்டிருக்கிறார்கள்.

தோழர்களே,டாடா, பிர்லா, அம்பானி கூட யோசிக்காத பிராடுத்தனத்த பெஸ்ட் கம்பெனி ஐயரு, செஞ்சாருங்க. சட்டப்படி தொழிலாளிகளுக்கு பி‌எஃப் கட்டணும். அதைப் பயன்படுத்தி தொழிலாளிக்கு தெரியாமலேயே ஒரு தொகையைக் கட்டி, அந்த பி‌எஃப் தொகை கணிசமான அளவு உயர்ந்த பிறகு அதே தொழிலாளியை கூப்பிட்டு ‘நான் வேலையை ராஜினாமா செய்கிறேன். பி‌.எஃப் பணத்தை எடுத்துக் கொள்கிறேன்’னு எழுதி கையெழுத்து வாங்கிர்ராரு. அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது. தொழிலாளிக்கு படிக்க தெரியாது.

அப்புறம் அந்த பி‌எஃப் பணம் தொழிலாளி பெயரில் காசோலையாக வந்தவுடன், அதே தொழிலாளியை கூப்பிட்டு, ‘போய் பணத்த எடுத்துட்டு வா கம்பெனி பணம்’ எனக் கூறி எடுத்து வரச் செய்து, 25000 முதல் 30000 வரையிலான அந்த தொகையை வாங்கிக் கொண்டு ஒரு 50 ரூபாயை கொடுத்து, ‘போய் டீ சாப்ட்டுக்க..’ எனக் கூறுவது, இப்படியே 30 வருஷம் ஏமாத்தியிருக்காருங்க…. இதை நாம எங்காவது பார்த்திருக்கிறமா…..? இது போன்ற அநீதிகளை யார் எதிர்ப்பது…?

ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி சங்கம் அங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஐயர் ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி சங்கத்தை ஹோம குண்டம் வளர்த்தி சுவாகா பண்ணிட்டாரு. அவரால நம்மைத்தான் சுவாகா பண்ண முடியல.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்த இரண்டு கம்பெனி தொழிலாளிகளும் ஏராளமான முறை மனுக் கொடுத்தாகி விட்டது. இவர்கள் எல்லோரும் தொழிலாளிக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். ஆதலால் இங்கு இனி பொருளாதாரப் போராட்டம் என்றால் கூட சிறைதான். கதவடைப்பு செய்தாலும் நமது போராட்டம் நடக்கிறதென்றால் அது நமது மார்க்சிய லெனினிய அரசியலின் வலிமை.

சிலர் கேக்குறாங்க, மூணு மாசத்தை கடந்து எதுக்கு நீங்க போராடுறீங்க என. ஏன்னா, எங்களோட முப்பது வருஷ இளமையை இங்க நாங்க தொலைச்சிருக்கும். எப்படி விடுறது.

பெஸ்ட் தொழிலாளி ஒருவரோட மகளுக்கு கிட்னி சுருங்கியிருக்குது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாந்தி கியர்ஸ்ல் டயாலிசிஸ் செய்றாங்க. அந்த மகள் கேட்கிறாள் அப்பா, என்னை எப்படி காப்பாத்த போற என..

கமிஷனர் விசுவநாதனுக்கு இது தெரியுமா….?

திருமணமாகி ஒரு வருடத்தில் ஒரு தொழிலாளிக்கு வேலை போயிருச்சு. மனைவி கர்ப்பிணியாக இருக்குறாங்க…

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்துறியே கமிசனரே இந்த நியாயத்தை நீ பேச வேண்டாமா…?

வழக்கு இங்கு அனைத்து தொழிலாளிகள் மீதும் இருக்கிறது. வழக்கை இந்த வறுமையிலும் சந்திக்கிறோம்.

முதலாளிக்கு எப்படிச் சொன்னா புரியுமோ… அப்படிச் சொல்லணும். இது நம் எதிர்காலத்துக்கான போராட்டம். எத்தனை முறை சிறை சென்றாலும் போராடுவோம்” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தனது சிறப்புரையில்,

தோழர் ராஜூ
தோழர் ராஜூ

“இந்த 110 பேர் போராடும் போராட்டத்தை ஒரு மாநகர கமிஷனர் ஒடுக்க நினைப்பது தான் யோசிக்க வேண்டிய விடயம். இந்த 110 பேரின் போராட்டத்தில் இந்த ஆலை திறக்கப்பட்டால் இது வரை மூடப்பட்ட ஆலைத் தொழிலாளிகள்  எல்லோரும் போராட வாய்ப்பிருக்கு. இனிமே எந்த முதலாளியும் கதவடைப்பு செய்ய முடியாத நிலைமை உருவாகும். இந்த இரண்டு விசயத்தால நிரந்தர சட்ட ஒழுங்கு பிரச்சினை வந்துரும் கோவையில.

ஒரு காவல் துறை ஆய்வாளர், தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு என அழைத்து ரிமாண்ட் செய்து சிறையில் அடைக்கிறது என்றால், அந்த தைரியம் எப்படி வருகிறது. கதவடைப்புக்கு எதிராக 50 வருடங்களாக நடக்காத இந்த முன்னுதாரணமான போராட்டம் இந்தத் தீப்பந்தம் கோவை முழுவதும் பரவி விடக் கூடாது என்பதற்காக.

அவரை கைது செய்து வழக்கு மேல் வழக்கு போடுவது தொழிலாளிகளை அச்சுறுத்துவதற்காக.

இதெல்லாம், யார் திட்டப்படி நடக்குது? முதலாளி ஏ‌.சி‌.எல், டி‌.சி‌.எல், கலெக்டர், போலீசு எல்லாம் சேர்ந்து திட்டம் இடுவது. திட்டம் போடுறதுன்னா நிச்சயதார்த்தம் போல் ஒன்றாக உட்கார்ந்து அல்ல. இதுதான் ஒன்றாக சிந்திப்பது. ஆனால், உன் கைதுக்கும், சிறைக்கும், பொய் வழக்குக்கும் நான் அஞ்ச மாட்டேன் என கடைசித் தொழிலாளி வரை நின்றால் விளவை இராமசாமியை போலீசு கைது செய்யாது. அதுதான் முக்கியம்.

முதலாளி, அதிகாரி, போலீசு அரசு யாருமே சட்டத்தை மதிப்பதில்லை. நீங்க மட்டும் ஏன் மதிக்கறீங்க..? 2000 ரூபா சைக்கிள்ல வந்த சி‌.ஆர்‌.ஐ முதலாளி இப்போ 20,000 கோடி சொத்துன்னு சொல்றீங்க.. அந்த 20,000 கோடியை எப்படி பறிமுதல் செய்றதுன்னு நீங்க இப்ப யோசிக்கணும்.

உரிமைகளுக்காக போராடுறத மொதல்ல உடுங்க…. நான்லாம் மக்கள் உரிமைக்காக நிறைய போராட்டம் பண்ணியிருக்கேன். கல்வி உரிமைக்காக ஒரு போராட்டம். சுற்றுச் சூழல் உரிமைக்காக ஒரு போராட்டம், சுகாதார உரிமைக்காக ஒரு போராட்டம் என எத்தனை போராட்டம் பண்றது. அதனால தான் நாங்க இப்ப அதிகாரத்துக்காக போராடுறோம். அதுலயே எல்லாமே வந்துரும். மக்கள் உரிமைல இருந்து மக்கள் அதிகாரத்துக்கு வந்திருக்கிறோம்.”

தோழர் ராஜு உரையாற்றுகிறார்
தோழர் ராஜு உரையாற்றுகிறார்

ஒரு உதாரண போராட்ட அனுபவமாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் முன்னெடுத்து நடத்திய வெள்ளாற்று மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தையும் அதில் அதிகாரிகள் முதல் காவல் துறை வரை மிகப்பெரிய மணல் மாஃபியா கொள்ளைக் கூட்டணிக் கும்பலை பற்றியும் அவர்கள் எவ்வாறு மக்களுக்கு எதிரான ஒரு குற்றக் கும்பலாக கிரிமினல் கூட்டமாக திரண்டு நிற்கிறார்கள் என்பதையும் தோழர் ராஜு விவரித்து சொன்னதும் அந்தப் பாங்கும் கூட்டத்தினரை பெருமளவு ஈர்த்தது.

“இனிமே, கூட்டத்துக்கு அனுமதி கேட்க நீங்க கோர்ட்டுக்கெல்லாம் போகாதீங்க… காவல் துறை கிட்ட சொல்லுங்க இத்தனான் தேதி கூட்டம் பாதுகாப்பு கொடுங்க, இல்ல எங்களை நாங்களே பாதுகாத்துக்கிறோம்.

போலீசு தனது அடக்குமுறைக்கு ஒரே ஒரு காரணம் தான் வச்சிருக்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துரும்னு. அதை தடுக்கத்தான் நீங்க இருக்கீங்க… சிவப்பு சுழல் விளக்கு போட்டுகிட்டு இவ்வளவு சுகபோகமா வாழ்ந்துக்கிட்டு, சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியாத காவல் துறை அதிகாரிகள் ரிசைன் பண்ணிட்டு போய்டுங்க..! உங்களுக்கு எதுக்கு துப்பாக்கி.. உங்களுக்கு எதுக்கு சுழல் விளக்கு.

கோயம்புத்தூருக்கு கலெக்டர் இல்லைனா இப்ப என்ன ஆய்டும்னு நினைக்கறீங்க…? இப்ப பு.ஜ.தொ.மு இல்லைனா சி‌.ஆர்‌.ஐ பம்ப் போராட்டம், பெஸ்ட் பம்ப்ஸ் போராட்டம் வீணா போயிடும் கலெக்டர் ஆபீஸ் இல்லை, கலெக்டர் இல்லைனா இங்க என்ன ஆயிரும்னு கேக்கறேன். ஒண்ணும் ஆகாது. வேண்டாத சுமையா நாம சுமந்துகிட்டு இருக்கறோம்ங்க.

ஒரு ஒரு போராட்டத்துக்கும் தனித் தனி தீர்வு கிடையாது. எல்லா பிரச்சினைக்கும் காரணம் அரசு. அந்த அரசின் அதிகாரத்தை கைப்பற்றுகின்ற போராட்டத்தை நீங்கள் சிந்திச்சாதான் நீங்க எல்லாப் பிரச்சினையையும் தீர்க்க முடியும்” என உரையாற்றினார்.

சிறப்புரையை அடுத்து, சிறப்பானதொரு கலை நிகழ்ச்சியை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு தோழர்கள் நடத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழர் பூவண்ணன்
தோழர் பூவண்ணன்

இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கோவை மாவட்ட பொருளாளர் தோழர் பூவண்ணன் நன்றியுரை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

  • அமர்ந்திருந்தோரையும் சுற்றிலும் நின்று கொண்டிருந்தோரையும் சேர்த்து சுமார் 1000 பேர் வரை கூட்டத்தை முழுவதும் கேட்டனர்.
  • கூட்டத்தில் சுமார் 6000 ரூபாய் பொதுமக்கள் நிதியளித்தனர்.
  • ஏராளமான பேர் தங்களது தொடர்பு எண்ணைக் கொடுத்துள்ளனர்.
  • புதிதாக வந்த பலரும் இந்தக் கூட்டம் தமது பிரச்சினைக்காக பேசப்பட்டதாகவே உணர்ந்து வியந்தனர்.
  • இன்னும் சிலர், இதையெல்லாம் எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என ஆச்சரியம் கலந்து கேட்டனர்.
  • முழு நாட்கள் இரண்டும் மொத்தமாக பார்த்தால் மூன்று நாட்கள் என குறுகிய காலத்தில் நிதி திரட்டல், அணி திரட்டலும் இருந்தாலும் கூட்டம் சிறப்பான வெற்றியை ஈட்டியிருக்கிறது.

(அருகதை இழந்த அரசுக் கட்டமைப்பையும் அதை தகர்த்தெறிந்து விட்டு மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டியதின் அவசியத்தையும் மக்கள் மொழியிலேயே முழங்கிய தோழர் ராஜூவின் எழுச்சி மிகு உரை தனிப்பதிவாக விரைவில் பகிர்கிறோம்)

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை.