privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!

நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!

-

துரை வழக்கறிஞர்கள் 14 பேர் தற்காலிக நீக்கம்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் விசாரணையின் நேரடி ஒளிபரப்பு; மதுரை மாவட்ட வழக்கறிஞர்களைச் சங்க கட்டிடத்திலிருந்து வெளியேற்றும் உத்தரவு; 2000 தமிழக வழக்கறிஞர்களை வெளியேற்றுவேன் என்று அனைத்திந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ராவின் மிரட்டல் – நீதித்துறை அபாயகரமான வேகத்தில் பாசிசமயமாகி வருவதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

வழக்கறிஞர்கள் சென்னை ஊர்வலம்
வழக்கறிஞர்கள் பி.தர்மராஜ், ஏ.கே.ராமசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்துவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து வழக்கறிஞர்கள் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

அடக்குமுறைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் உரிமையும் வழக்கறிஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. “தமிழகம் முழுவதும் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயோ வெளியேயோ, துண்டறிக்கை, சுவரொட்டி, பேனர், ஆர்ப்பாட்டம் – ஊர்வலம், கூட்டங்கள் எதுவும் கூடாது” என்று தடையாணை பிறப்பித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர்.

“மதுரை உயர்நீதிமன்றக் கிளையை கொஞ்ச காலத்துக்கு மூடிவிட்டால் என்ன” என்ற கருத்தையும் போகிறபோக்கில் வெளியிட்டிருக்கிறார் ஒரு நீதிபதி. போராடும் தொழிலாளிகளை பட்டினி போட்டுக் கொல்ல, ஆலையை கதவடைப்பு செய்கின்ற ஒரு முதலாளியைப் போல, நீதிமன்றத்தை தங்கள் பூர்வீகச் சொத்தாகவும், வழக்கறிஞர்களை அங்கே கூலிக்கு அமர்த்தப் பட்டிருக்கும் அடிமைகளாகவும் கருதுகிறார்கள் நீதிபதிகள்.

ஒரு விதத்தில் முதலாளிகள், நீதிபதிகளைக் காட்டிலும் ஜனநாயகவாதிகளாகத் தெரிகிறார்கள். வேலை நிறுத்தம் செய்யும் காலங்களில் கூட தொழிற்சங்க கட்டிடத்தை காலி செய்ய வேண்டும் என்றோ, துண்டறிக்கை விநியோகிக்கக் கூடாது என்றோ தொழிலாளிகளுக்கு அவர்கள் உத்தரவு பிறப்பித்து விடுவதில்லை. இந்த நீதி ‘அரசர்’ களிடமிருந்து மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவது எப்படி என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

“இது நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர் சமூகத்துக்கும் இடையிலான பிரச்சினை அல்ல என்றும் ஒரு சில வழக்கறிஞர்கள்தான் பிரச்சினைக்கு உரியவர்கள்” என்றும் ஒருபுறம் சொல்லிக் கொண்டே, இன்னொரு புறம் அனைவரையும் அச்சுறுத்துகிறார்கள் நீதிபதிகள். உயர்நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரையில் தமிழகத்தின் வழக்கறிஞர்கள் அனைவரையும் தாங்கள் நீதிபதிகளின் அடிமைகள்தான் என்று ஒப்புக்கொண்டு மண்டியிடவைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என்பது தெளிவாகி விட்டது.

வழக்கறிஞர்கள் திருச்சி கூட்டம்
நீதித்துறை ஊழலையும், அதன் சர்வாதிகாரப் போக்கையும் கண்டித்து திருச்சி வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடத்தப்பட்ட கூட்டம்.

வயதில் மூத்த வழக்கறிஞர்களிடம் நேற்று வரை மரியாதையாகப் பேசிக்கொண்டிருந்த இளம் மாஜிஸ்டிரேட்டுகளிடம் திடீரென்று ஒரு திமிர்த்தனம் துளிர்த்திருப்பதாகக் கூறுகிறார்கள் வழக்கறிஞர்கள். இந்தத் திமிரை இப்போதே ஒடுக்காவிட்டால், சட்டம் – நெறிமுறை அனைத்தையும் மூட்டை கட்டி விட்டு நடுவர்களெல்லாம் நாட்டாமைகளாகி விடுவார்கள். வழக்கறிஞர்களை சொம்பு தூக்க வைத்துவிடுவார்கள்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையே அப்படித்தான் நடந்திருக்கிறது. கட்டாய ஹெல்மெட் தீர்ப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிராகத்தான் அவமதிப்பு வழக்கு. ஆனால், ஏ.கே.ராமசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விகளோ ஊழல் எதிர்ப்புப் பேரணி பற்றியவை. பண்ணையார்கள் விவசாயிகளை நடத்துவதைப் போல அந்த முதியவரை ஒன்றரை மணி நேரம் நிற்க வைத்தே கேள்வி கேட்டிருக்கிறார்கள். திரைமறைவு விசாரணை என்று ஒருநாள் உத்தரவு போடுகிறார்கள். அடுத்த வாய்தாவில் விசாரணையைத் திரையில் ஒளிபரப்புகிறார்கள். நீதிபதி வைத்ததுதான் சட்டம். நெறிகளுக்கும் மரபுகளுக்கும் மரத்தடி பஞ்சாயத்தில் இருக்கும் மதிப்பு கூட உயர்நீதிமன்றத்தில் இல்லை என்பது கடந்த சில நாட்களில் தெளிவாகிவிட்டது.

‘சட்டத்தின் ஆட்சி’யை சமாதிக்கு அனுப்புவதில் நீதியரசர்கள் காட்டி வரும் இந்த அசாதாரணமான வேகத்துக்கு முக்கியக் காரணம் மதுரை வழக்கறிஞர்களின் ஊழல் எதிர்ப்புப் பேரணி. எத்தனை பெரிய ஊழல் செய்தாலும் தங்களைப் பதவியிலிருந்து இறக்க “இம்பீச்மென்ட்” தீர்மானத்தை தவிர வேறு வழிகிடையாது என்று இறுமாந்திருந்த நீதியரசர்களை இந்தப் பேரணி அச்சுறுத்தியிருக்கிறது.

தஞ்சை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

நீதித்துறையில் ஊழல் என்பது இதுவரை கேள்விப்படாத குற்றச்சாட்டு அல்ல. இதை பல உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் நீதிபதிகளின் சதவீதம் ஐம்பதா, அறுபதா என்று தீர்மானிப்பதில்தான் இவர்களிடையே வேறுபாடு. “கூடியிருக்கும் பெண்களில் பாதிப்பேர் நடத்தை கெட்டவர்கள்” என்று யாரேனும் பேசினால், “பொதுவாகச் சேறடிக்காதே, குறிப்பாகச் சொல்” என்று கூறி சொன்னவனை அந்த இடத்திலேயே செருப்பால் அடிப்பார்கள் பெண்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இதுநாள்வரை அப்படியெல்லாம் கோவப்பட்டதே இல்லை. மதுரைப் பேரணி குறிப்பான உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை வெளியிட்டதாலும், அடுத்தடுத்து வெளியிடப்போவதாக அறிவித்ததாலும்தான் இது நீதிபதிகள் சமூகத்தின் மானப் பிரச்சினையாகி விட்டது.

ஊழலை மட்டுமல்ல, ஒரு நீதிபதியின் கார்ப்பரேட் சார்பு அல்லது சாதி-மதச் சார்பு தீர்ப்புகளையும் கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற நிலை உருவாவது நீதிக்கு நல்லதாக இருக்கலாம். நீதிபதிகளுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் நல்லதல்லவே! அதனால்தான் எல்லாத் துறைகளையும் சேர்ந்த ஆளும் வர்க்கப் பூசாரிகளும் கொதிப்படைந்து விட்டனர்.

வழக்கறிஞர்கள் சேலம் ஆர்ப்பாட்டம்
காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

கருவறையின் புனிதம் சந்தேகத்துக்குள்ளாவது குறித்து அதிகம் கவலைப்படுபவர் தேவநாத குருக்களாகத்தானே இருக்க முடியும்! சென்னை உயர்நீதிமன்றத்தின் புனிதப் பாரம்பரியம் குறித்து பொளந்து கட்டினார் தலைமை நீதிபதி தத்து. நீதிபதி கர்ணனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கில், (அது நீதிபதிகள் சிலருக்கிடையிலான ஊழல் உள்குத்து தொடர்பான வழக்கு) சம்மந்தமே இல்லாமல் தமிழக வழக்கறிஞர்களுக்கு எதிராகச் சாமியாடினார். சொல்லி வைத்தாற்போல தமிழக வழக்கறிஞர்கள் தரம் கெட்டுப் போனதைப் பற்றி ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன.

தமிழக வழக்கறிஞர்கள் மீதான இந்த ‘அனைத்திந்திய வன்மத்துக்கு’ மதுரை ஊழல் எதிர்ப்புப் பேரணி மட்டுமே காரணம் அல்ல. தமிழக வழக்கறிஞர்கள் சமூக அரசியல் பிரச்சினைகளுக்காகப் போராடுவதில் இந்தியாவிலேயே முன்னணியில் இருப்பவர்கள். காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், மூவர் தூக்கு, இந்தி சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு, சாதி மதவெறி எதிர்ப்பு போராட்டங்கள் மட்டுமின்றி, நீதித்துறை சார்ந்த பிரச்சினைகளான உரிமையியல் சட்டத்திருத்தம், குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களிலும் இந்தியாவிலேயே முன்னணிப் பாத்திரம் ஆற்றியவர்கள். ஊழல் நீதிபதி சுபாஷண் ரெட்டியை தமது போராட்டத்தின் மூலம் விரட்டியவர்களும், ஜெ வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி தத்துவின் மீது குடியரசுத் தலைவரிடம் வெளிப்படையாகக் கையெழுத்திட்டு (800 பேர்) புகார் கொடுத்தவர்களும் தமிழக வழக்கறிஞர்கள்தான்.

04-1தமிழக வழக்கறிஞர்களை எதிர்ப்பவர்கள் பல வகையினர். வழக்கறிஞர்கள் அரசியல் சமூக விவகாரங்களில் தலையிடுவதை இழிவானதாகக் கருதும் பிழைப்புவாதிகள், இந்தி பேச மறுக்கின்ற தமிழ்நாட்டை இன்னொரு காஷ்மீராக கருதும் வட இந்தியர்கள், சுயமரியாதை, திராவிட இயக்கம், பொதுவுடைமை போன்ற சொற்களைக் கேட்டாலே ஒவ்வாமைக்கு ஆட்படும் பார்ப்பனியர்கள், பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட சாதியினர் கோர்ட்டுக்குள் நுழைந்ததனால் வக்கீல் தொழிலுக்குரிய மாண்பே கெட்டுவிட்டதாகப் புழுங்கும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள், எந்த விவரமும் தெரியாமல் போராட்டமே தப்பு என்று பேசும் கலாம் ரசிகர்கள், இத்தனை நஞ்சுகளுக்கும் தேன் சேர்த்து மக்களின் நாக்கில் தடவும் ஊடகவியலாளர்கள் – என இந்தப் பொதுக்கருத்தைப் பல கைகளும் வனைந்து உருவாக்குகின்றன.

“யாகுப் மேமன் தூக்கிலிடப்படாமல் தடுக்க நள்ளிரவில் கூட நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் போராடினோம். இதுவே சென்னையாக இருந்தால், மூவர் தூக்கிற்கு செய்தது போல நீங்கள் நீதிமன்றத்தில் கலகம் செய்திருப்பீர்கள்” என்று சென்னை வழக்கறிஞரிடம் அவரது டில்லி நண்பர் ஒருவர் சமீபத்தில் கருத்து கூறினாராம். இந்தக் கருத்து நடுத்தர வர்க்க சிந்தனைக்கு ஒரு வகை மாதிரி.

உண்மையில், மதச்சார்பற்ற சக்திகள் நாடெங்கும் ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தால் யாகுப் மேமனின் தூக்குத்தண்டனையை ஒருவேளை நிறுத்தியிருக்கலாம். அப்படி போராடியிருந்தால் இந்து மனச்சாட்சியை திருப்திப் படுத்துவதற்காக கொலை செய்யப்பட்ட அப்சல் குருவின் தண்டனையைக் கூட நம்மால் நிறுத்த முடிந்திருக்கலாம். சட்டத்தை மட்டும் நம்பி இருந்திருந்தால் மூவர் தூக்கை நீதிமன்றம் ரத்து செய்திருக்காது என்பதே உண்மை.

04-2சட்டம், நெறி, மரபு ஆகியவற்றை அதன் காவலர்களான நீதிபதிகளும், அரசும், போலீசும் அன்றாடம் மீறிக் கொண்டிருக்கும்போது நாம் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் டில்லி நண்பரைப் போன்றோரிடத்தில் நாம் எழுப்பும் கேள்வி. தலித் படுகொலைக் குற்றவாளிகள் விடுதலை முதல் குஜராத் குற்றவாளிகள் விடுதலை வரை, சல்மான் கான் ஜாமீன் முதல் ஜெயலலிதா ஜாமீன் வரை எண்ணற்ற சான்றுகள் சட்டத்தின் ஆட்சி தோற்றுவிட்டதைப் பறைசாற்றுகின்றன. இருப்பினும் தாங்களே மதிக்காத சட்டத்துக்கும் நெறிமுறைக்கும் கட்டுப்படுமாறு நம்மை மிரட்டுகிறார்களே, இதற்குப் பணிவது வீரமாகுமா என்று கூட நாம் கேட்கவில்லை, அறிவுடைமை ஆகுமா என்று யாரேனும் சொல்லட்டும்.

தத்துவுக்கு எதிராக ஆதாரபூர்வமாக முன்னாள் நீதிபதி கட்ஜு ஊழல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். “என்னை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அசிங்கப்படுத்திய உச்ச நீதிமன்றம், சாந்தி பூஷண் கொடுத்த ஊழல் நீதிபதிகள் பட்டியல் அடங்கிய உறையை ஏன் பிரிக்க மறுக்கிறது?” என்று என்.டி.டி.வி-யில் கேள்வி எழுப்புகிறார் அலைக்கற்றை தீர்ப்பு புகழ் கங்குலி. நீதிபதிகளுக்கு எதிராக வீதிக்குப் போனது தவறு என்று கூறுவோர் இதற்கு பதில் சொல்லட்டும்.

ஊழலை ஒழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதும், இந்தியாவிலேயே முன்மாதிரியானது என்று அழைக்கப்படுவதுமான கர்நாடகா லோக் ஆயுக்தா பதவியில் நியமிக்கப்பட்டார் ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.பாஸ்கர் ராவ். அவருடைய மகன் அஸ்வின், “அப்பாவிடம் சொல்லி ஊழல் வழக்கு போடுவேன்” என்று மிரட்டியே 200 கோடி வசூலித்திருக்கிறான். ஒரே ஒரு தைரியசாலி இதை அம்பலமாக்கியதன் விளைவாக இப்போது சிறையில் இருக்கிறான்.

சாந்தி பூஷண், மார்க்கண்டேய கட்ஜூ
உச்சநீதி மன்ற நீதிபதிகளின் ஊழலை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய உச்சநீதி மன்ற மூத்த வழக்குரைஞர் சாந்தி பூஷண் (இடது) மற்றும் உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.

“விசாரணை முடிந்து என் மகன் குற்றவாளி என்று தீர்ப்பு வரட்டும். ராஜினாமாவைப் பற்றி அப்புறம் யோசிப்போம்” என்று தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கிறார், நீதிபதி பாஸ்கர் ராவ். குற்றவாளி என்று யாரேனும் ஒரு குன்ஹா தீர்ப்பளித்தாலும், இன்னொரு குமாரசாமி சிக்காமலா போய்விடுவார் என்பது நீதிபதியின் நம்பிக்கை.

ஊழலுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று மதுரை வழக்கறிஞர்களை மடக்கும் சட்ட வல்லுநர்கள், நீதிபதி பாஸ்கர் ராவை சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்க வழி சொல்ல வேண்டும்.

சட்டம் நெறிமுறைகள் அனைத்தும் மதிப்பிழந்து போய்க்கொண்டிருக்க, நொறுங்கிச் சரிந்து கொண்டிருக்கும் இந்த அரசமைப்பின் அங்கமான நீதிபதிகள், அதாவது பாஸ்கர் ராவின் சகோதர நீதிபதிகள், தாங்கள் வழக்கறிஞர்களால் அவமதிக்கப்பட்டு விட்டதாகவும் நீதிமன்றத்தின் மாண்பு கெட்டு விட்டதாகவும் கதறுகிறார்கள். ஒரு நாலாந்தர தெலுங்குப் படத்தின் நகைச்சுவைக் காட்சியைக் காட்டிலும் இது அருவெறுப்பானதாகத் தெரியவில்லையா?

“தமிழை வழக்காடு மொழியாக்கு” என்ற அட்டையைப் பிடித்துக் கொண்டு பத்து பேர் நீதிமன்ற அறையில் அமர்ந்தவுடனே, “எங்களால் நீதி வழங்கும்போது பாதுகாப்பாக உணர முடியவில்லை” என்கிறார் தலைமை நீதிபதி. நீதியரசர்களின் தீர்ப்புகளால் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டின் மக்களல்லவா?

04-3மலை தொலைந்தது, விளைநிலம் பள்ளத்தாக்கானது, கண்மாய் காணாமல் போனது, கடலின் நிறம் மாறியது, நரபலி நடந்தது, புற்றுநோய் பரவியது, பல்லாயிரம் நோக்கியா தொழிலாளிகள் வீதியில் வீசப்பட்டனர் – இந்தப் பாதகங்கள் எதிலும் தமது தசம பாகத்தை எந்த நீதியரசரும் பெற்றுக் கொள்ளவில்லையா? நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒழுக்கம் பற்றி உரையாற்றி அது ஊடகங்களில் வெளிவருவதையும் உத்திரவாதம் செய்து கொள்ளும் சகோதர நீதிபதிகள் பதில் சொல்லட்டும். மேற்படி தசமபாக நீதியரசர்களின் பாதுகாப்புக்கு குறைவேதும் ஏற்படவில்லையே!

தாங்கள் ஏன் பாதுகாப்பாக உணரவில்லை என்பதை தனது உத்தரவில் விளக்கியிருக்கிறார் தலைமை நீதிபதி கவுல். “வழக்கறிஞர்கள் மதுபாட்டிலோடு வருகிறார்கள், பெண் போலீசை கிண்டல் செய்கிறார்கள், கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள், நீதிமன்ற வளாகத்தில் கிரிக்கெட் ஆடுகிறார்கள், போலீசு மீது பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள், நீதிமன்றங்களில் ஊர்வலம், போராட்டம் நடத்துகிறார்கள், யோகா வகுப்பு நடத்த விடாமல் தடுக்கிறார்கள், மாட்டுக்கறி, மட்டன், கோழிக்கறி சாப்பிடுகிறார்கள்” – என்று ஒரு போலீசு உதவி ஆணையர் சொன்னாராம்.

“அப்படியானால் ஏன் ஒரு எப்.ஐ.ஆர் கூடப் போடவில்லை” என்று தலைமை நீதிபதிக்கு கேட்கத் தோன்றவில்லை. ஏனென்றால், “நான் சொல்லவில்லை அவரே சொன்னார்” என்று கூறுவதற்கு தலைமை நீதிபதிக்கு ஒரு ஆதாரம் மட்டுமே தேவைப்பட்டது. அதை போலீசு அதிகாரி வழங்கிவிட்டார். கறி, சாராயம் மற்றும் காலித்தனங்களின் வரிசையில் தமிழும், ஹெல்மெட் எதிர்ப்பும், ஊழல் எதிர்ப்பும் கொண்டு வரப்பட்டு விட்டன.

கவுல் கோரிய மத்தியப் படை மட்டும்தான் வரவில்லை. அதற்குப் பதிலாக, மாநில பார் கவுன்சிலின் அதிகாரத்தை அனைத்திந்திய கவுன்சில் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக் கொண்டு விட்டது. அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவு டில்லிக்கு வழங்கும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கும் நீட்டிக்கப்பட்டு விட்டது.

மதுரை வழக்கறிஞர்கள் 14 பேரை நேரடியாக டில்லியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து விட்டு, எதிர்ப்போரையெல்லாம் வெளியேற்றுவேன் என்று கொக்கரிக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில்.

இது வெறும் நீதித்துறை சர்வாதிகாரம் அல்ல. பார்ப்பன பாசிச சர்வாதிகாரம். மோடி அரசின் கீழ் அதிகார வர்க்கம், ராணுவம், கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்துத்துவ சக்திகளால் நிரப்பப்படுவதைப் போல நீதித்துறையிலும் நடக்கிறது. அதன் அறிகுறிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகின்றன.

தாத்ரியில் மாட்டுக்கறி தின்றதாக குற்றம் சாட்டி ஒரு முஸ்லிமை அடித்தே கொல்லலாம் என்றால், இங்கே மத்தியப் படை கொண்டு வருவதை அவசியமாக்கும் குற்றமாக மாட்டுக்கறி காட்டப்படுகிறது. தபோல்கர், பன்சாரே, கல்புர்கி போன்ற பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகளைக் கொன்றொழிக்கும் பணியில் சனாதன் சன்ஸ்தா என்ற பார்ப்பன பயங்கரவாதக் குழு ஈடுபட்டதைப் போல, இங்கேயும் அத்தகைய வழக்கறிஞர்களைத் தேடிக் களையெடுக்கும் நீதிபதிகளின் சனாதன் சன்ஸ்தா ஓசைப்படாமல் இயங்குகிறது.

சுயமரியாதைத் திருமணத்தை சட்டத்தை கொல்லைப்புறம் வழியே முடக்க முயலும் தீர்ப்பு, தி.க.-வின் தாலி அகற்றும் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடை, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை பழிவாங்குவதற்காக போடப்பட்ட பொய்வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது, ஒன்றேகால் கோடி பணத்தை ஏமாற்றி ஏப்பம் விட்ட ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் என்ற ஸ்ரீரங்கம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு டெபாசிட்டே இல்லாமல் முன்ஜாமீன் வழங்குவது, மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் மறுப்பதை நியாயப்படுத்த சிறையில் வாடும் ஏழைக் கைதிகளின் நிலையை ஒப்பிடுவது, அதே நேரத்தில் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பு.மா.இ.மு மாணவனை ஜாமீனில் விடுவதற்கு 50,000 ரூபாய் அபராதம் கட்டச் சொல்வது, யோகா வகுப்பு என்ற பெயரில் ஜக்கி வாசுதேவை உள்ளே கொண்டு வருவது, புரோக்கர் பிரபாகரனின் வழக்கறிஞர் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவது, சாதி ரீதியான சங்கங்களை வழக்கறிஞர்கள் மத்தியில் உருவாக்கி, கையாளாகப் பயன்படுத்திக் கொண்டே, வழக்கறிஞர்கள் சாதி ரீதியாக இயங்குவதாகவும் குற்றம் சாட்டுவது, விசுவ இந்து பரிசத் – பாஜக தலைவர்களுடன் இழைந்து கொண்டே அறத்தின் வீழ்ச்சி குறித்து கவலை தெரிவிப்பது – என இந்த நீதிபதிகளின் சனாதன் சன்ஸ்தா எல்லாக் கோணங்களிலும் வேலை செய்து வருகிறது.

மிஸ்ராக்கள், கவுல்கள், பாண்டேக்கள், சாதிப்பட்டத்தை போட்டுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் மதறாஸ் மாகாணத்தின் ஐயர்கள் ஆகிய அனைவரும் இதில் கூட்டு சேர்ந்திருக்கின்றனர்.

தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC) அமைக்கப்பட்டவுடன், காலியாக இருக்கும் சுமார் 300 உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் காக்கி அரை நிஜார்களை அமர வைப்பதே இவர்களின் திட்டம். அதனை எதிர்த்து நிற்கக் கூடிய வழக்கறிஞர்களைக் களையெடுக்கும் வேலைதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் இது நடத்தப்படுகிறது.

அரசியல், போலீசு, அதிகாரவர்க்கம், ஊடகத்துறை, மருத்துவத்துறை, நீதித்துறை போன்ற சமூகத்தின் எல்லாத்துறைகளிலும் கிரிமினல்கள் செல்வாக்கு செலுத்துவதை மறைத்து விட்டு, வழக்கறிஞர் சமூகத்தை மட்டும் கிரிமினல்களாகச் சித்தரிக்கும் சதியில் பார்ப்பனப் பாசிசக் கும்பல் ஈடுபட்டிருக்கிறது. தினமணி தலையங்கமே இதற்குச் சான்று.

வழக்கறிஞர் தொழிலில் கிரிமினல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள்தான் ஊழல் நீதிபதிகளின் கூட்டாளிகள், தரகர்கள். இன்னும் ரியல் எஸ்டேட் சொத்து அபகரிப்பு, ரவுடித்தனங்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள், கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் மீதெல்லாம் பார் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. இத்தகையோர் பார் கவுன்சில் பதவிகளை அலங்கரிக்கிறார்கள்.

பி.ஆர்.பழனிச்சாமி, வைகுந்தராசன் முதல் அனைத்து மக்கள் விரோதிகளும் பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பதை சட்டப்படி சாத்தியமாக்கி கொடுத்தவர்கள் சாதி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் திரட்டப்பட்ட வழக்கறிஞர் குமபலும் ஊழல் நீதிபதிகளும்தான். இவர்களை எதிர்த்து தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய நேர்மையான வழக்கறிஞர்கள்தான் இன்று பழி வாங்கப்பட்டிருக்கின்றனர்.

“நான் மட்டுமே பதிவிரதை” என்று மார்பில் போர்டு மாட்டிக்கொண்டிருக்கும் நீதிபதிகளின் தலைமையில், கிரானைட், தாதுமணல் வழக்குகளில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதிகள் ஓரணியாகத் திரண்டிருக்கிறார்கள். தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கே ஜனநாயக உரிமைகளை மறுக்க வேண்டும் என்பது பார்ப்பன பாசிசத்தின் தேவை. ஊழல் நீதிபதிகளின் தேவையும் அத்தகையதுதான்.

“ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் குற்றம் சாட்டுபவர்களையும் சாட்சிகளையும் குற்றவாளிகளாக்கி சிறையில் வைக்க வேண்டும். பிறகு அவர்களைக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் ஊழல் ஒழிப்புக்கு பார்ப்பன பாசிசம் வகுத்திருக்கும் தருமம். வியாபம் ஊழல்தான் இந்த தருமத்தை விளக்கும் இதிகாசம்.

பார்ப்பன பாசிசமும் ஊழலும் பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அணி நீதித்துறையின் தேசிய ஜனநாயக முன்னணி. அதாவது இவர்கள் வழக்கறிஞர்களின் எதிரிகள் மட்டுமல்லர், தமிழ்ச்சமூகத்தின் எதிரிகள் என்பதே நாம் கண்டடைந்திருக்கும் உண்மை. ஆகவே இனிமேலும் இதனை வழக்கறிஞர் போராட்டம் என்று சுருக்கி அடையாளப் படுத்துவது பொருத்தமற்றது.

– மருதையன்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க