privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅ.தி.மு.க ஆக்கிரமிப்பால் கடலூர் கெடிலம் ஆற்றில் சுனாமி

அ.தி.மு.க ஆக்கிரமிப்பால் கடலூர் கெடிலம் ஆற்றில் சுனாமி

-

டலூர் மாவட்ட வெள்ள சேதத்திற்கு மூன்று முக்கிய காரணங்களை சொல்லலாம்.

1. தென்பெண்ணை ஆற்றில் நடந்த மணல் கொள்ளை. இதை ஏற்கனவே வினவில் படித்திருப்பீர்கள்.
2. கடலூர் மாவட்டத்தில் ஓடுகின்ற கெடிலம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பு.
3. வீராணம் ஏரியில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட்டது.
இதில் கெடிலம் ஆற்றின் மீதான ஆக்கிரமிப்பை இந்தக் கட்டுரையில் காணலாம். வீராணம் குறித்த கட்டுரையை அடுத்து வெளியிடுகிறோம்.

DSC_0099
கெடிலம் ஆறு கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடருக்கு அருகாமையில் தொடங்கி விழுப்புரம், கடலூர் மாவட்டம் வழியாக வந்து கடலில் கலக்கிறது.

கெடிலம் ஆறு கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடருக்கு அருகாமையில் தொடங்கி விழுப்புரம், கடலூர் மாவட்டம் வழியாக வந்து கடலில் கலக்கிறது. இதன் நீளம் 80 கி.மீ ஆகும். இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறாக இருந்தாலும் தென்பெண்ணையாற்றின் முக்கிய துணையாறு ஆகும். இதன் கொள்ளளவு 30,000 கன அடி. இந்த தாங்கும் திறனுக்கு ஏற்ற வகையில் ஆற்றின் அகலம் அது ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. இப்பொழுது விழுப்புரம், கடலூர் இரு மாவட்டங்களிலும் ஆற்றின் இரு கரைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.

ஆக்கிரமிப்புகள் என்று சொன்னால் பொதுவாக ஆற்று கரையோரங்களில் விவசாய நிலங்கள், நிலமற்ற விவசாயிகள், ஓரளவுக்கு சிறு விவசாயி போன்றவர்கள் எடுத்துக்கொள்வதையே பொதுவில் பலரும் கூறுவார்கள்.ஆறுகள், குளங்கள் ஓடைகள் அனைத்தும் எல்லாம் மக்களுக்கு தான் சொந்தமானது. தங்களின் வாழ்வாதாரத்துக்கு சிறு, குறு விவசாயிகள் எடுத்துக்கொள்வது என்பது பிரச்சினையல்ல. வனத்தில் மலைவாழ் மக்கள் விறகு சேகரிப்பதையே சுற்றுச் சூழல் அழிவு என்று சொல்வது எவ்வளவு தவறோ அதே மாதிரிதான் இதிலும்.

உண்மையில் ஆக்கிரமிப்பு என்பது  ஆற்றையொட்டி இருக்க கூடிய நில முதலைகள், பண்ணையார்கள் நூறு, இருநூறு ஆண்டுகள் பரம்பரையாக இருக்கக்கூடிய பெரிய பணக்கார விவசாயியாக இருப்பவர்கள், இவர்கள் தான் ஆற்றின் கரையோரம் உள்ள நிலங்களை ஆக்கிரமித்து சவுக்கை போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.

ஆற்றின் கரையில் உள்ள ரெட்டியாருக்கு சொந்தமான சவுக்கை
ஆற்றின் கரையோரம் உள்ள நிலங்களை ஆக்கிரமித்து சவுக்கை போட்டு விடுகிறார்கள்

அரசின் சட்டப்படி, ஆக்கிரமிப்போ அல்லது நிலத்தை எடுப்பதோ போன்ற விஷயங்களில், அரசு நிலங்களை கையகப்படுத்தும் போது சில விதிகள் வைத்துள்ளார்கள். உதாரணமாக, ஒரு விவசாயி சவுக்கு, முந்திரி போன்றவை போட்டிருந்தால் அது நீண்ட காலபயிர் என்பதால் எடுக்கக்கூடாது என்ற சட்டம் உள்ளது. இந்த சட்டத்தை நில முதலைகள் கேடாக பயன்படுத்தி சவுக்கை போட்டு ஆதாயம் பார்க்கின்றனர். நீர்நிலைகளை எல்லாம் விவசாயம் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்வது என்பது இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பாகத்தான் உள்ளது.

2009-ல் கம்மியம்பேட்டை அருகே கெடிலம் ஆற்றின் கரையை விற்பதற்கு, ஏற்கனவே பழைய தடுப்பணை உள்ள இடத்தை தாண்டி புதிதாக ஒரு தடுப்பணையை கட்டி இவை இரண்டுக்கும் இடையில் உள்ள இடத்தை ரியல் எஸ்டேட்டாக மாற்றியிருக்கிரார்கள், அதிமுக பிரமுகர்கள். அதற்கு 2009-ம் ஆண்டிலேயே ஐம்பது கோடிக்கு பேசியிருக்கிறார்கள். இன்று அதன் மதிப்பு இன்னும் பல கோடி இருக்கும். அப்பொழுதே இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து சில பொதுநல இயக்கங்கள், மற்றும் மக்களே திரண்டு போய் போராட்டங்கள் நடத்தி ரியல் எஸ்டேட்காரர்கள் போட்டு வைத்திருந்த கொட்டகை எல்லாம அடித்து நொறுக்கினார்கள்.

DSC_0094
கெடிலம் ஆற்றின் பல இடங்களில் முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உயிர்பெற்று ஹோட்டல்கள், ஹாலோபிலாக் தொழிற்சாலைகள் கட்டுவது, திருமண மண்டபம், தியேட்டர், காம்ப்ளக்ஸ், லாட்ஜ் என்று பல வகைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

கெடிலம் ஆற்றின் பல இடங்களில் முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உயிர்பெற்று ஹோட்டல்கள், ஹாலோபிளாக் தொழிற்சாலைகள் கட்டுவது, திருமண மண்டபம், தியேட்டர், காம்ப்ளக்ஸ், லாட்ஜ் என்று பல வகைகளில் ஆக்கிரமித்துள்ளார்கள். கெடிலம் ஆற்றை நீண்ட காலமாக ஆய்வு செய்பவர்கள் “ஆறு தொடங்கிய இடத்தில் இருந்து ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆறு இன்று சிற்றாராக சுருக்கப்பட்டதன் விளைவாகத் தான் முப்பதாயிரம் கன அடி உள்ள ஆற்றில் 92 ஆயிரம் கன அடி தண்ணிர் தற்பொழுது பெய்த மழைக்கு சென்றுள்ளது” என்கிறார்கள்.

92 ஆயிரம் கன அடி தண்ணீர் ஓடியதற்கு ஒரு காரணம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல பெண்ணையாற்று நீரை கெடிலம் ஆற்றுக்கு திருப்பி விட்டது. எந்த அளவிற்கு ஆறு சுருக்கப்பட்டு இருந்தால் தண்ணீர் எவ்வளவு வேகமாக நீர் வந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதனை தான் மேல் இருந்து ஒரு சுனாமி வந்தது போல் இருந்தது என்று கூறுகிறார்கள் விசூர், பெரியகாட்டுப்பாளையம் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்.

2004-ல் சுனாமி வந்த போது ஒரு சட்டம் கொண்டு வந்தார் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆற்றின் இரு கரையோரத்திலிருந்து நூறு மீட்டர் தூரத்திற்கு யாரும் ஆக்கிரமிக்க கூடாது என்று  அந்த அவசர சட்டம் கூறுகிறது. ஆனால் இன்று இந்த ஆற்றின் இரு கரைகளையும் ஆக்கிரமித்தவர்களில் முக்கியமானவர்கள் யார் என்றால் அ.தி.மு.க பிரமுகர்கள் தான்.

குறிப்பாக கடலூர் அ.தி.மு.க-வின் நகரமன்ற துணைத்தலைவர் குமாருக்கு (முன்னாள் பரோட்டா மாஸ்டர், சேவல் குமார் என்கிற உஜாலாகுமார்) சொந்தமான கம்மியம்பேட்டை பாலம் அருகில் உள்ள ஓட்டல், பிரபு டீசல் ஒர்க்ஸ் ஆகியவையும், கே.வி டெக்ஸ் எதிரில் உள்ள கோகுலம் லாட்ஜும் கெடிலம் ஆற்றை வளைத்து போட்டு கட்டியது தான். இந்த உண்மை ஏற்கனவே வினவில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். தற்பொழுது இந்த ஹோட்டல் ஆகாஷ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.               (மூர்த்தி கபே என்பது பழைய பெயர்)

kedilar-river-encroachment-2
NB நகர், RR நகர், சிவாலயா கார்டன் ஆகியவை அனைத்தும் ஆற்றுப் புறம்போக்கு தான்

கடலூர் திருவந்திபுரத்தின் பெரும்பகுதி கெடிலம் ஆறு ஆக்கிரமிப்பில் தான் உள்ளது. பாதிரிக்குப்பம் என்ற இடத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தேங்காய் நார் கம்பனி, அதே பகுதியில் சுடுகாட்டை வளைத்து கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகள்
இவை அனைத்தும் ஆற்று புறம்போக்கு தான். மேலும் அதே பகுதியில் உள்ள SNB நகர், RR நகர், சிவாலயா கார்டன் ஆகியவை அனைத்தும் ஆற்றுப் புறம்போக்கு தான்.

அதே போல் திருவந்திபுரத்தில் அணைக்கட்டு அருகில் உள்ள ஆனந்த செங்கமலத்தாயார் மண்டபம், ஸ்ரீ ஆண்டாள் திருமண மண்டபம், தேவநாத கோவில் அண்ணதான மண்டபம் உட்பட அனைத்தும் ஆற்று புறம்போக்கு தான்.இந்த இடங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தவை. ஆனால் சட்டவிரோதமாக தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன.

மேலும் கடலூர் துறைமுக சாலையில் இயங்கி வரும் வேல்முருகன் தியேட்டர் (வள்ளி விலாஸ் காம்ப்ளக்ஸ்) , கோகுலம் லாட்ஜ், சிவா காம்ப்ளக்ஸ், KTR காம்ப்ளக்ஸ்,திருப்பதி மார்பல்ஸ், பவானி துணிக்கடை, விரைவு போக்குவரத்து கழகம், தங்கம் ஸ்டீல் கம்பனி, ஹரி ஸ்டீல், ஹோட்டல் மகாராஜா ஆகிய அனைத்தும் ஆற்று புறம்போக்கை வளைத்து கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் தான்.

நிலைமை இவ்வாறு இருக்க சில தினங்களுக்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்கள், கடலூரில் ஆக்கிரமிப்பே இல்லை என்று பேசுகிறார். அரைகுறை உண்மையை சொல்லக்கூடிய அவர்களே இப்படி என்றால் மற்ற கட்சிகளிடம் உண்மையை எப்படி எதிபார்க்க முடியும்?

இதிலிருந்து கெடிலம் ஆறு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பினால் வரக்கூடிய பிரச்சனை என்னவென்று அதிகாரிகளுக்கும் தெரியும். ஆற்று புறம்போக்கு இடத்தில் வீடு கட்ட கூடாது, வணிக வளாகம் கட்ட கூடாது என்று விதிமுறைகள் உள்ளன. ஆனால் இந்த சட்டங்களை எல்லாம் மீறி அதற்கு அனுமதியும் கொடுத்து, பட்டாவும் கொடுத்து, மின்சார இணைப்பும் கொடுத்து இதையெல்லாம் அனுமதிக்க கூடிய குற்றவாளிகள் கிராம நிர்வாக அலுவலர்,தாசில்தார், கலெக்டர் தான்.

அப்படிப்பட்ட குற்றவாளிகள் தான் தற்பொழுது மக்கள் மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்றால், தற்காலிகமாக அமைக்க கூடிய குடியிருப்பு பகுதி 2குடிசைகள், தினக்கூலிகள் வேறு வழியே இல்லாமல் அதன் கரைகளில் குடிசை போட்டு தங்க கூடியவர்கள், இவர்களைத்தான் பெரிய ஆக்கிரமிப்பாளர்கள் போல் சித்தரிக்கிறார்கள். இது ஒரு பச்சையான அய்யோக்கியத்தனம். அதுமட்டுமில்லாமல், இந்த குடிசை வாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், பெரிய பெரிய மால்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள் கட்டியுள்ள பணமுதலைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஆகும்.

கெடிலம் ஆறும், விருத்தாச்சலத்தில் உள்ள பரவனாறும் ஒரே இடத்தில் வந்து தான் கடலில் கலக்கிறது. அவ்வாறு கலக்கும் போது எந்த ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருகிறதோ அது தான் அதிக அழுத்தத்துடன் சென்று முதலில் கடலில் கலக்கும். இன்னொரு ஆறு நிச்சயமாக கலக்க முடியாமல் தண்ணீர் பின்னோக்கி தான் செல்லும். அதன் அடிப்படையில் கெடிலம் ஆற்றில் வந்த நீர் இரண்டாவதாக தான் வந்ததாக மக்கள் கூறுகிறார்கள். ஆக 92 ஆயிரம் கன அடி வேகத்தில் வந்த தண்ணீர் கடலில் கலக்க முடியாமலும், ஆறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கன நீரை தாங்கும் திறன் இல்லாமலும் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது என்பதே நிதர்சனம்.

மேலும் இரு ஆறுகளும் இணையும் இடத்தில் அருவாமூக்கு என்ற ஒரு ஒரு திட்டம் போடப்பட்டது. அந்த இடத்தில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை நாகார்ஜுனா பைனரி என்ற கம்பனி ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அருவாமூக்கு திட்டத்தை செயல்படுத்த முடியாமல் உள்ளது. இந்த காரணமும் சேர்ந்து தான் கெடிலம் ஆற்று நீர் கடலூரை இந்த அளவிற்கு பாதித்துள்ளது.

இந்த அருவாமூக்கு திட்டத்திற்கு நிரந்தரமாக ஒரு தீர்வு காணவேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பாளர்களை எந்த தயவு தாட்சண்யமும் பார்க்காமல் அகற்ற வேண்டும். தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரியாக போடப்பட்டுள்ள ககன் தீப்சிங் பேடி, மழை முடிந்த உடன் ஆக்கிரமிப்பை அகற்றுவோம் என அறிவித்துள்ளார்.

kedilar-river-encroachment-8
ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்

அவர் ஆக்கிரமிப்பை அகற்றும் முன்பு நாம் ஒரு நிபந்தனையை விதிக்கிறோம். சாதாரண மக்களை அகற்றுவது என்பது அயோக்கியத்தனம். நீங்கள் அகற்ற வேண்டும் அன்றால் யார் எல்லாம் தியேட்டர் , லாட்ஜ், காம்ப்ளக்ஸ், KTR காம்ப்ளக்ஸ், ஹோட்டல் என்று பெரியதாக ஆக்கிரமித்து வைத்துள்ளார்களோ அதனை முதலில் அகற்றி விட்டு, அதன் பிறகு சாதாரண குடிசை ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்.அப்பொழுது தெரியும் ஆக்கிரமிப்பாளர்கள் யார் என்றும், யாரால் கெடிலம் ஆறு சுருங்கி போய்விட்டது, யாரால் தண்ணீர் ஊருக்குள் வந்தது என்ற உண்மை தெரியும்.

இதனை அரசு செய்யுமா என்றால், செய்யாது. மீண்டும் வலியுறுத்துகிறோம், இந்த அரசு குற்றவாளி. இந்த அரசு தோல்வியடைந்து விட்டது. தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிராக போய்விட்டது. ஆகவே கெடிலம் ஆறை பாதுகாக்கவும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்றால் அதற்கு மக்களே தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்த அ.தி.மு.க முதலைகள், முதலாளிகள், ரியல் எஸ்டேட் தரகர்கள்தான் குற்றவாளிகள் என்பதை உறுதியாக கூறுகிறோம்.

பத்திரிக்கை செய்திகள்

– வினவு செய்தியாளர், கடலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க