privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்பிரிக்கால் தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை - முறியடிப்போம்

பிரிக்கால் தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை – முறியடிப்போம்

-

உரிமை கேட்டால் இரட்டை ஆயுள் தண்டனை!
முதலாளித்துவ பயங்கரவாதத்துக்குத் துணை போகும்
நீதிமன்ற சர்வாதிகாரம்!

ன்பார்ந்த தொழிலாளர்களே உழைக்கும் மக்களே!

கடந்த டிசம்பர் 2, 2015 அன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரையும் உடைமையையும் காப்பாற்றிக்கொள்ள நாம் போராடியதை எண்ணிப் பார்க்கவே மனம் அஞ்சுகிறது. எதிரிக்குக் கூட இந்த நிலைமை வரக்கூடாது என அனைவரும் விரும்பினோம். அந்த நேரத்தில் அதாவது, டிசம்பர் 3-ம் தேதி அன்று, கோவை குண்டுவெடிப்பு வழக்கை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் தொழிற்சங்க முன்னணியாளர்கள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

கோவை பிரிக்கால் நிறுவனத் தொழிலாளர்களது போராட்டம் குறித்து பலருக்கு நினைவிருக்கும். 2009-ம் ஆண்டு பிரிக்காலில் எச்.ஆர். அதிகாரியாக பணிபுரிந்த ராய் ஜார்ஜ் என்பவர் தொழிலாளர்கள் மீது எண்ணற்ற அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டார். இதனைத் தட்டிக்கேட்ட தொழிற்சங்கத்தின் நடவடிக்கைகளை முடக்குவதற்கு பல்வேறு சதித்தனங்களை செய்தது, ஆலை நிர்வாகம். அது மட்டுமல்லாமல் கடுமையான உழைப்புச் சுரண்டல், உரிமை கேட்கும் தொழிலாளர்கள் பொய் காரணங்களை கூறி பணிநீக்கம், பணியிடைநீக்கம், ஊதிய வெட்டு, நேரடி உற்பத்தியில் ஒப்பந்தத் தொழிலாளிகளை ஈடுபடுத்துதல் என அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது பிரிக்கால் நிர்வாகம்.

இந்த அடக்குமுறைக்கு எதிராகத்தான் தொழிலாளர்கள் போராடி வந்தனர். போராடிய 42 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய உணர்வு பூர்வமான போராட்டத்தை ஒடுக்குவதற்கு கூலிப்படையை ஏவியது நிர்வாகம். தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் எச்.ஆர். அதிகாரி சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து போனார்.

இதனைத் தொடர்ந்து முதலாளிகளின் ஏவல் படையான போலிசு, தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று வேட்டையாடியது. முதலாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து சட்டபூர்வமாகக் கூட தொழிலாளர்கள் போராட முடியவில்லை. சுவரொட்டி ஒட்டக்கூட போலிசிடம் அனுமதி பெற வேண்டும். ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் நடத்த முடியாது.

பிரிக்கால் இரட்டை ஆயுள் தண்டனை
இரட்டை ஆயுள்தண்டை தீர்ப்பை எதிர்த்து முழக்கமிடும். தொழிலாளர்களும், உறவினர்களும் (படம் : நன்றி thehindu.com)

பிரிக்கால் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் பிரச்சனைகளை சுமுகமாகவே பேசித் தீர்க்க முயற்சித்தனர். ஆனால், அவர்கள் அடாவடியாகவும், கேவலமாகவும் நடத்தப்பட்டனர், ராய் ஜார்ஜ் தாக்கப்பட்டதாக சொன்ன நேரத்துக்கும், மருத்தவமனையில் சேர்க்கப்பட்டதாக சொல்லப்பட்ட முரண்பாடு இருந்தது. இப்போது, சட்டப்படி நிரூபிக்கப்படாமலேயே தொழிற்சங்க முன்னோடிகள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம்.

முதலாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளையும், கொடூரமான சுரண்டலையும் எதிர்த்து போராடும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை எச்சரிக்கும் வகையில் தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இதன் மூலம் அரசு நமக்கு சொல்கின்ற பாடம், முதலாளிகளை எதிர்த்து யார் போராடினாலும் அவர்கள் ‘பயங்கரவாதிகள்தான்’

யார் பயங்கரவாதி?

அதிக உற்பத்தி இலக்கு வைக்கப்பட்டு தொழிலாளர்கள் கசக்கி பிழியப்படுவதும், உரிமைகளை பறிக்கப்பட்டு அவர்கள் அடக்கப்படுவதும், தொழிலாளர்கள் தாம் விரும்பிய சங்கத்தில் சேரக் கூடாது என மிரட்டப்படுவது, அடியாட்களால் தாக்கப்படுவது, கருங்காலிகள் மூலம் தொழிலாளர் ஒற்றுமை சீர்குலைக்கப்படுவது, வேலை பறிக்கப்பட்டு தொழிலாளர்கள் வறுமைக்குள் தள்ளப்படுவது என்று பல்வேறு செயல்களில் ஈடுபடும் ஈனப்பிறவிகளான இந்த முதலாளிகள்தான் பயங்கரவாதிகள். தினந்தோறும் சுரண்டலைத் தீவிரப்படுத்தி தன் லாபத்தைப் பெருக்குக் கொள்வதற்கு பிணம் தின்னிக் கழுகைப் போல தொழிலாளர்களைக் கொல்லுவது, இந்த முதலாளித்துவம் தான்.

கோவை பிரிக்காலில் மட்டும் இந்த அடக்குமுறைகள் நிகழவில்லை, இதன் சமகாலத்திலேயே நாட்டின் பல பகுதிகளில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியான போராட்டங்களின் மூலம் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளனர். நொய்டாவிலுள்ள இத்தாலிய கிராசியானோ எனும் கார் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம்; ஒரிசாவில் கிராஃப்ட் ஆலை போராட்டம்; ஏனத்தில் ரீஜண்ட் ஆலை போராட்டம்; கும்மிடிப்பூண்டியில் எஸ்.ஆர்.எஃப் என பல ஆலைகளில் தொழிலாளிகள் போராடியுள்ளனர்.

தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதம்

கோவை சி.ஆர்.ஐ. பம்ப் முதலாளியின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் சங்கம் துவங்கியதனாலேயே ஊதிய உயர்வு அளிக்க முடியாது என திமிரோடு அறிவித்து, சங்கம் வைத்த தொழிலாளர்களை வீதியில் தள்ளி “எந்தச் சட்டமும் எதுவும் என்னைப் புடுங்க முடியாது” என கொக்கரிக்கிறான், சி.ஆர்.ஐ பம்ப் முதலாளி சவுந்திரராஜன்.

ஆமாம், சட்டம் அவரை ஒன்றும் செய்யவில்லை. மாறாக அவரின் மகளின் திருவணத்திற்கு காவல் காத்து தன் விசுவாசத்தைக் காட்டியது போலிசு! ஓசுரில் வெக் இண்டியாவிலும் இதே நிலைமைதான். பெரிய கார்ப்பரேட் நிறுவனம் என மார்தட்டிக் கொள்ளும் டி.வி.எஸ், லேலண்ட், கார்போரேண்டம் போன்ற ஆலைகளில் எந்தவித சட்டபூர்வ உரிமைகளும் இல்லாமல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நிரந்தர தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதற்கு சட்டவிரோத நடவடிக்கைகளை முதலாளிகள் மேற்கொள்கின்றனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற கொலைக் களங்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஜி.எஸ்.எச். என்கிற பன்னாட்டு நிறுவனம், சங்கம் துவங்கியதற்காகவே தொழிலாளர்களை காவு கேட்கிறது. நாடெங்கிலும் இதே நிலைமை தான்!

சங்கமாய் திரளு! வர்க்கமாய் எழு!

சங்கத்தை அங்கீகரிக்க முதலாளி மறுக்கிறான். ஆனால் தொழிலாளிக்கோ உரிமையைப் பெற சங்கம் தான் ஒரே வழி. முதலாளி மறுக்க மறுக்க வீறுகொண்டு சங்கமாய் எழுகிறது தொழிலாளி வர்க்கம்.

ஆம், தமக்கு எதிராக சங்கம் அமைத்தார்கள் என்பதாலேயே சதித்திட்டத்தில் தொழிலாளர்களைச் சிக்க வைத்து எச். ஆர் அதிகாரியை எரித்தார்கள் என்கிற பொய் வழக்கில் மாருதி தொழிலாளர்களைச் சிறையில் தள்ளியது மாருதி நிர்வாகம். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக சிறையில் வாடும் 147 தொழிலாளர்களுக்கு பிணை வழங்க மறுக்கிறது அரியானா நீதிமன்றம், எஞ்சிய 32 பேருக்கு தண்டனை உறுதி என எச்சரித்துள்ளது. இதே அரியானா நீதிமன்றம் தான் இரட்டை கொலை செய்த குற்றவாளிக்கு 15 நாட்களில் ஜாமீன் தந்திருக்கிறது. தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கு நீதிபதிகளுக்கு தடையாக உள்ள அம்சம் எது?

இதற்கு பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. முதலாளிகள் மீதான வர்க்கப் பாசம்தான் தடையாக உள்ளது! பிரிக்காலும் மாருதியும் நமக்குத் தரும் பாடம் இதுதான். முதலாளிகளுக்கு எதிராகப் போராடுகிற தொழிலாளிகள் ஒடுக்கப்படுவார்கள். இத்தனை அடக்குமுறைகளையும் மீறி, மாருதி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் தொழிலாளர்களுடன் இணைந்து நிர்வாகத்தின் அடியாள் சங்கத்தை முறியடித்து வெற்றி பெற்றது மாருதி தொழிலாளர் சங்கம். பிரிக்காலிலும் தொழிலாளர் சங்கம் உறுதியாக முன்னேறுகிறது. அந்த வகையில் நெருப்பாற்றையே தன் உழைப்பால் மாற்றியமைக்க வல்லமை படைத்தது தொழிலாளி வர்க்கம் என்பதை உணர்வோம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை தீக்கிரையாக்குவோம்!

தேவை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்

தொழிலாளர்கள் மட்டுமல்ல, மொத்த உழைக்கும் மக்களும் வாழ்வுரிமையை இழந்து நிற்கின்றனர். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருந்தச் சட்டங்கள் நீக்கப்படுகின்றன. விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு கூலிகளாக துரத்தியடிக்கப்படுகின்றனர். கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகிய அனைத்தும் பண்டமாக மாற்றப்பட்டு பணம் இருப்பவனுக்கே இந்த உலகம் என்கின்ற ‘நீதி’யை முதலாளித்துவம் நிறுவ முயற்சி செய்கிறது.

ஆனாலும், முதலாளித்துவம் தோன்றியதிலிருந்து இன்று வரை தம் சொந்த மக்களைக் கூட காப்பாற்ற வக்கற்றதாக உள்ளது. இதனை ஏன் நாம் நம் தலையில் சுமந்து கொண்டு திரிய வேண்டும்? முதலாளித்துவத்துக்கு துணை போகின்ற – அதன் சொத்துக்களை பாதுகாக்கின்ற இந்த அரசும், அதன் கட்டமைப்புகளான போலிசும், நீதிமன்றமும் ஊடகங்களும், நமக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காது என்பது தெளிவாகத் தெரியவில்லையா?

  • உழைக்கும் மக்களுக்கும் எதிராக உள்ள இந்த ஆளத்தகுதியிழந்த அரசமைப்பை தூக்கியெறிவோம்! அதிகாரத்தை உழைக்கும் மக்களுக்கு வழங்கும் அரசை நிறுவுவோம்.
  • கோவை பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!
  • தொழிற்சங்க முன்னோடிகளுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை முறியடிப்போம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு துணைபோகும் நீதிமன்ற சர்வாதிகாரத்தை முறியடிப்போம்!
  • உழைக்கும் மக்களுக்கான அரசை புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் நிறுவுவோம்!

கோவை பிரிக்கால் முதலாளிக்கு துணை போகும் நீதிமன்றம் – பு..தொ.மு ஆர்ப்பாட்டம்!

கோவை பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களின் சார்பில்

கோவை பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்
முதலாளித்துவ பயங்கரவாததுக்கு துணை போகும் நீதிமன்ற சர்வாதிகாரத்தை முறியடிப்போம்

என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்டத்தின் தலைவர் தோழர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் நாகராஜ் கண்டன உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில், ஆவடி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட பு.ஜ.தொ,மு சார்பாக திருப்பெரும்புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 500 மேற்பட்ட தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), வேலூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 8807532859, 9445389536, 9445368009, 9994386941

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் பற்றிய விபரங்களுக்கு அக்டோபர் 2009 மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான தலையங்கக் கட்டுரையை கீழே தருகிறோம்.

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்: வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் யார்?

டந்த செப்டம்பர் 21-ம் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ராஜ் ஜே. ஜார்ஜ் தொழிலாளர்களால் தாக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மாண்டு போயுள்ளான். அதைக்கண்டு முதலாளிகள் சங்கம் ‘வன்முறை’, ‘பேராபத்து’ என்று அலறுகிறது. தொழிலாளர்களை வன்முறையாளர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அமைச்சர்களோ, தொழிலாளர்களின் வன்முறைப் போக்கை நசுக்கப் போவதாக முதலாளிகளின் அடியாட்களைப் போல பேசுகின்றனர். வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக பிரிக்கால் தொழிற்சங்க முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டுள்ளனர். கோவை நகரமே கலவர பூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பிரிக்கால் ஆலையைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனமாக விரிவாக்கி வளர்க்கும் நோக்கத்தோடு, அதீத உற்பத்தி இலக்கு வைத்து தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். இந்த ஆலையில் ஏற்கனவே ஐந்து தொழிற்சங்கங்கள் இருந்தும், அவரை துரோகத்தனத்தில் இறங்கி, முதலாளி விஜய் மோகனின் அடக்குமுறைகளுக்குப் பணிந்து போயின. எனவே, கடந்த 2007-ம் ஆண்டில் பெரும்பான்மை தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து புதிய தொழிற்சங்கத்தைத் தொடங்கினர். அன்று முதல் தொழிலாளர்க்ள மீது அதிகரித்து வரும் கொடுமைகள்-அடக்குமுறைகள்-பழி வாங்கும் நடவடிக்கைகள் கொஞ்சநஞ்சமல்ல. கொத்துக் கொத்தாக வேலை நீக்கம், பணியிட மாற்றம் என்று தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். தொழிலாளர்களின் புதிய தொழிற்சங்கத்தை கடந்த மூன்றாண்டுகளாக அங்கீகரிக்க மறுத்ததோடு, தொழிலாளர் ஆணையர் முதல் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் போட்ட எல்லா உத்தரவுகளையும் ஆலை நிர்வாகம் குப்பைக் கூடையில் வீசியெறிந்தது.

தொழிலாளர்களையும், சங்க முன்னணியாளர்களையும் மிரட்டுவது; அடியாட்களை வைத்துத் தாக்குவது; கருங்காலிகளை உருவாக்கி, தொழிலாளர் ஒற்றுமையைச் சீர்குலைப்பது; வேலைநீக்கம் செய்தும் சம்பளத்தை மறுத்தும் தொழிலாளர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பது; உற்பத்தியைப் பெருக்க பெண் தொழிலாளிகளை மிரட்டி கட்டாயமாக ஓவர்டைம் செய்ய வைப்பது; 14 ஆண்டுகளாக இந்த ஆலையில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் தினக் கூலிகளாக வைத்துச் சுரண்டுவது; தொழிலாளர் ஆணையர் உத்தரவுகளை அலட்சியப்படுத்திவிட்டு அடக்குமுறைகளைத் தொடருவது – எனக் கணக்கற்ற அட்டூழியங்களைச் செய்து வந்த பிரிக்கால் நிர்வாகத்தின் கொடூரங்களைத் தாங்க முடியாமல் தொழிலாளர்கள் திருப்பித் தாக்கி விட்டனர். இதில் முதலாளியின் அடியாளாகச் செயல்பட்ட மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ராய் ஜே ஜார்ஜ் மாண்டு போயுள்ளான். இதற்காக வருத்தப்படவோ, அனுதாபப்படவோ, அச்சப்படவோ ஏதுமில்லை.

pricol-protest-2009
பிரிக்கால் நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக, அவ்வாலை வாயிலின் முன் பிரிக்கால் தொழிலாளர்கள் நடத்திய மறியல் போராட்டம் (கோப்புப் படம்)

தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதும், தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதும் பிரிக்கால் ஆலையில் மட்டும் நடக்கும் அதிசயம் அல்ல. தொழிலாளர்களுக்குக்க் குறைந்தபட்ச ஊதியம் தரவேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் கூடாது என்பதிலிருந்து தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என்பது வரை தொழிற்சங்க உரிமைகள் அனைத்தையும் பறிக்கக் கோருகிறது உலகமயமாக்கம். இதற்கு ஏற்றாற்போல தொழிலாளர் நலச்சட்டங்கள் திருதப்படுகின்றன. தொழிற்சங்கமே அமைக்க முடியாதபடி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

உலகமயமாக்கம் என்ற பெயரில், நாட்டின் தொழிலையும் வர்த்தகத்தையும் வளர்ப்பது என்ற பெயரில் எல்லா ஓட்டுக் கட்சிகளின் ஆதரவோடு இத்தகைய முதலாளித்துவ பயங்கரவாதம் கோர தாண்டவமாடுகிறது.

  • கடந்த மாதத்தில் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக இரு விமானிகளை வேலைநீக்கம் செய்ததை எதிர்த்து ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தனர். அந்நிறுவனத்தின் முதலாளியான நரேஷ் கோயல், மேலும் சில ஊழியர்களை வேலைநீக்கம் செய்து எச்சரித்ததோடு, தொழிலாளர்களை “பயங்கரவாதிகள்” என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினான்.
  • தொழிற்சங்கம் தொடங்கியதற்காக 188 தொழிலாளர்களை வேலையிலிருந்து வீசியெறிந்தது, ஹூண்டால் நிறுவனம்.
  • சென்னை அருகே. நெல்காஸ்ட் ஆலையில் விபத்தில் மாண்டுபோன ஒரிசா மாநிலத் தொழிலாளியை அனாதைப் பிணமாக தெருவில் வீசியெறிந்ததை எதிர்த்துப் போராடிய குற்றத்திற்காக 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து மிரட்டியது ஆலை நிர்வாகம்.
  • பொன்னேரியிலுள்ள கெம்பிளாஸ்ட் சன்மார் ஆலையில் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது, அந்த ஆலை நிர்வாகம்.
  • கோவையில் உள்ள சிறீராம் கோகுல் டெக்ஸ்டைல்ஸ் ஆலையில் பீகாரைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் எவ்வித உரிமையுமின்றி கொத்தடிமைகளாக அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட கொடுமை, கடந்த செப்.28-ம் தேதி வெளிவந்து நாடே அதிர்ச்சி அடைந்தது.

தமிழகம் மட்டுமல்ல, நாடெங்கும் உலகெங்கும் ஏகாதிபத்திய உலகமயமாக்கம் தொழிலாளர் வர்க்கத்தை கசக்கிப் பிழிவதும், பொருளாதாரச் சரிவைக் காரணம் காட்டி பல்லாயிரக்கணக்கானோரை வேலைநீக்கம் செய்து பட்டினிச் சாவுக்குத் தள்ளுவதும் கேள்விமுறையின்றி தொடர்கின்றன. இவற்றுக்கெதிரான தொழிலாளர் போராட்டங்கள், குர்கான் வழியில் மிருகத்தனமாக ஒடுக்கப்படுகின்றன. பாசிச அடக்குமுறைச் சட்டங்கள் ஏவிவிடப்படுகின்றன. உலகமயமாக்கத்தின்கீழ் எங்கெல்லாம் தொழிலாளர்களி அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்குமுறைகள் ஏவப்படுகின்றனவோ, அங்கெலாம் குமுறும் தொழிலாளர்கள், சட்டரீதியான வாய்ப்புகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் தன்னெழுச்சியாக எதிர்த்தாக்குதல்களை நடத்துகின்றனர்.

  • கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதியன்று நொய்டாவிலுள்ள இத்தாலியைச் சேர்ந்த கிராசியானோ எனும் ஆர் உதிரி பாக உற்பத்திக் கூடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தொழிலாளர்களால் அடித்தே கொல்லப்பட்டான்.
  • உலகின் மிகப்பெரிய இரும்பு-எஃகு நிறுவனமான அர்சிலர் மித்தல் நிறுவனத்தின் லக்சம்பர்கள் தலைமை நிர்வாக அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு கடந்த மே 12-ம் தேதியன்று அடித்து நொறுக்கி நாசப்படுத்தினர்.
  • பிரான்சு நாட்டின் டவுலோசிலுள மோலெக்ஸ் ஆலைத் தொழிலாளர்கள் அதன் தலைமை நிர்வாக இயக்குனரை நடுத்தெருவில் ஓட ஓட அடித்துத் துவைத்துள்ளனர்.
  • கடந்த ஜூலை 28-ம் தேதியன்று சீனாவின் ஜிலின் நகரிலுள்ள டோங்குவா இரும்பு-எஃகு ஆலையின் நிர்வாக அதிகாரி தொழிலாளர்களால் அடித்தே கொல்லப்பட்டான்.

அன்றாடம் தொழிலாளர்கள் மீது முதலாளித்துவ பயங்கரவாதம் ஏவிவரும் கொடூரங்களின் எதிர்விளைவுகள்தாம் இவை.

pricol-demo-2009
பிரிக்கால் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து சென்னை-அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 01-10-2009 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய தெருமுனைக்கூட்டம்.

இந்நிலையில் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிரான பிரிக்கால் தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் ஒடுக்கப்பட்டால், இனி வரும் நாட்களில் எந்தவொரு தொழிலாளர் போராட்டமும் மிருகத்தனமாக நசுக்கப்படும். எனவே, பிரிக்கால் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்பது தொழிலாளர்களின் – உழைக்கும் மக்களின் உடனடிக் கடமை.

ஆனால், போலி கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கங்களோ, முதலாளி வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு பிரிக்கால் தொழிலாளர்களின் எதிர்த்தாக்குதலை “வன்முறை” என்று ஊளையிடுகின்றன. தர்ணா, மறியல், மொட்டையடித்து நாமம் போட்டு ஊர்வலம் என்று வழக்கமான தொழிற்சங்க செக்குமாட்டுப் பாதையில், ‘அமைதியான-ஜனநாயக வழியில்’ போராடச் சொல்லி தொழிலாளர்களுக்கு உபதேசம் செய்கின்றன. இத்தகைய துரோக தொழிற்சங்கங்களை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், முதலாளித்துவ பயங்கத்தை வீழ்த்தும் ஆற்றல் பெற்ற புதிய, புரட்சிகரமான சங்கத்தை கட்டியமைத்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் முடியாது.

இன்றைய உலகமயமாக்கச் சூழலில், முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்தாடும் சூழலில், வர்க்கம் என்ற முறையில் தொழிலாளர் ஓரணியில் திரண்டு போராடினால்தான், இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்பட்டுப் போராடினால்தான், தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதையும், முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் தடுத்து நிறுத்த முடியும். உலகமயச் சூழலில் இத்தகைய தொழிலாளர் வர்க்க ஒற்றுமையையும், மாறிய சூழலுக்கு ஏற்ப புதிய போராட்ட முறைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். குறுகிய தொழிற்சங்கவாத வட்டத்திற்குள் முடங்கி விடாமல், இத்தகைய அடக்குமுறை-உரிமை பறிப்புகளுக்கு அடிப்படையாக உள்ள மறுகாலனியாக்கத்தை எதிர்த்து அரசியல் போராட்டங்களைக் கட்டியமைப்பதே இன்று தொழிலாளர் இயக்கத்தின் முன்னுள்ள உடனடிப்பணி.
______________________________________
தலையங்கம்
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2009
___________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க