Tuesday, May 17, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் ACS கல்லூரி : துவங்கியது ஆக்கிரமிப்பை அகற்றும் போராட்டம்

ACS கல்லூரி : துவங்கியது ஆக்கிரமிப்பை அகற்றும் போராட்டம்

-

acs-college-siege-by-rsyf-1மூன்று பேருந்துகள், இரண்டு வேன்கள், ஆறு ஜீப்கள் இன்னும் தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து ACS கல்லூரி கொள்ளையர்களின் யூனிஃபார்ம் போட்ட அடியாட்கள் கூட்டம் சென்னை மதுரவாயில் பகுதியினை பயமுறுத்தி கொண்டிருந்தன. சுமார் 100 அடியாட்கள் இரு பிரிவாக பிரிந்து மதுரவாயிலை சலிக்கத் தொடங்கினர். சுமார் 50 பேர், கல்லூரி வாசலில் அட்டென்சனில் நின்று கொண்டிருந்தனர். இன்னும் சுமார் இரண்டு, மூன்று கிலோமீட்டர்கள் சுற்றளவில் அகன்று விரிந்திருக்கும் ஆக்கிரமிப்பு கல்லூரியின் காம்பவுண்டு சுவரை அடியாட்கள் கூட்டம் பாதுகாத்து வந்தது.. இது போதாதென்று ஏ.சி.சண்முகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் அடியாட்கள் குவிந்திருந்தனர்.

எதுக்குப்பா இவ்வளவு போலிசு நிக்குது? என அப்பாவியாக கேட்ட வயதான ஒருவரிடம் ஏ.சி.சண்முகத்தின் கல்லூரியை ஆக்கிரமிப்பு என ‘பொய்’ சொல்லி சிலர் இடிக்க வருவதால் காவலுக்கு போலிசு நிற்கிறது என்ற ‘உண்மை’யை சொன்னதற்கு, இது எம்ஜிஆர் காலத்திலே ஆக்கிரமித்ததாச்சே! இதெப்படி பொய்யாகும்? என எதிர்கேள்வி கேட்டுவிட்டு சென்று விட்டார். அவர் பதில் கேட்காமல் போய் விட்டாலும் இந்த ‘பொய் – உண்மை’யை நாமாக சொல்லவில்லை; அந்த கல்லூரியின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தது. காலையில் செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த ‘வண்ணக் கடுதாசி’யும் அதையே சொல்லிக் கொண்டிருந்தது. இன்னும் போராட்டத்தை டிவியில் ஒலிபரப்பிய சில செய்தி நிறுவனங்களும் கூட அதை சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் உண்மை என்னவென்பதை வெள்ளத்தின்போது ஆறு சொல்லிவிட்டு சென்றிருந்தது.

ஏ.சி.சண்முகத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக அறிவித்திதலிருந்தே கல்லூரிக்கு ஆதரவாக போலிசின் புரோக்கர் வேலை துவங்கிவிட்டது. நம் தோழர்களை அழைத்து ஏ.சி.சண்முகத்தின் கல்லூரி ஆக்கிரமிக்கப்பட்டதல்ல, அதற்கான பட்டா உள்ளது. உங்களுக்கு வேண்டுமானால் தருகிறேன் என பலரும் அணுகினர். அதுமட்டுமன்றி மதுரவாயில் பகுதியில் உள்ள தோழர்களின் வீடுகளை நோட்டம் விடுவது, அவர்கள் வெளியே வரும் பகுதியில் ஆள் போடுவது என அவர்கள் அடியாள் வேலைகளை விசுவாசமாக செய்தனர்.. மற்றபடி போராட்டத்தின் முதல் நாளிலே ஆற்றிய ‘கடமை’ விசுவாசத்தை மேலே பார்த்தோம். போராட்டம் நடைபெற்ற அன்று காலையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பு.மா.இ.மு சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ராஜாவை பிடித்து வைத்துக் கொண்டிருந்தது.

10.01.2016 அன்று காலை முதலே மதுரவாயில் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக போராட்டம் பற்றி பேசப்பட்டது. பூந்தமல்லி சாலையை கடந்த எவரும் போலீசாரின் எண்ணிக்கையை கண்டு காரணம் கேட்காமலோ இல்லை தாங்களாகவே ஒரு காரணத்தை நினைத்துக் கொள்ளாமலோ செல்லவில்லை.

எனினும் கல்லரி தரப்பு மற்றும் அவர்களை காக்க அணிதிரண்ட போலிசைப் போன்று சதி வேலைகள் ஏதுமில்லாமல் பகிரங்கமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்து தோழர்கள் ஆர்ப்பாட்டத்தை  துவங்கினர். ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் எரிமலைகள் வெடிக்கட்டும் என்ற அறைகூவலுடன் ‘கூவம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ACS கல்லூரியை அகற்றுவோம்!’ என்ற முழக்கத்தை முன்வைத்து சரியாக மணி 11க்கு மக்கள் கலை இலக்கிய கழகத்தினரும் அவர்களின் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரும் பொதுமக்களுமாகிய சுமார் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

acs-college-siege-by-rsyf-3கல்லூரிக்கு சுமார் 100 மீட்டர் தொலைவிலே மோப்பம் பிடித்து கல்லூரி வாசலிலிருந்து ஓடிய தமிழக போலிசு, போராட்டக்காரர்களை மடக்கிப் பிடித்தது. பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில் வந்திருந்த தோழர்கள் ஆக்கிரமிப்புகளுக்கெதிரான முழக்கங்களை தொடர்ச்சியாக முழங்கிக் கொண்டு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியவுடன் அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்துகிறீர்கள் என சட்டம்’ பேசியது போலிசு. சாலை ஸ்தம்பிக்க, அருகில் பொதுமக்கள் கூட்டம் கூட, “போராடுவதற்கு எங்கே பர்மிசன் கொடுக்கிறீங்க? இந்த நாட்டிலே ஜனநாயகமே இல்ல” என அரசை அம்பலப்படுத்தத் தொடங்கினார் தோழர் கணேசன்.

“அதெல்லாம் முடியாது” நீங்கள் வண்டியில் ஏறுங்கள் என போராட்டத்தை முடக்கப் பார்த்தது போலிசு. கூவம் ஆத்தை ஆக்கிரமிச்சு காலேஜ் கட்டியிருக்கான் ஏ.சி.சண்முகம். அந்த ஆக்கிரமிப்பை அகற்றத்தான் நாங்க போய்க்கிட்டு இருக்கோம். நீர்நிலைகளை எவனாவது ஆக்கிரமிச்சிருந்தா அவங்கள பொதுமக்கள்தான் தட்டிக்கேட்கணும்னு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சொல்லியிருக்காரு, காஞ்சிபுரத்துல ஆக்கிரமிப்புகளை அகற்றுன ஐ.ஏ.எஸ் அமுதா சொல்லியிருக்காங்க, அப்படின்னா நீதிபதி, கலெக்டர் சொல்றது தப்புனு நீங்க சொல்றீங்களா? என போலிசை பார்த்து கேள்வி எழுப்பினார் தோழர் கணேசன். மேலும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டியது போலிசான உங்களோட வேலை, உங்க வேலைய நாங்க செய்ய வந்தா, நீங்க எங்களையே தடுக்கிறீங்களா? என தீவிரமாக தோழர் கணேசன் கேட்க, பேச்சு வார்த்தை நடத்துவது என்பதே ஒரு பேச்சுக்குத்தான், அடியாட்களின் உண்மையான வேலை ஆளும் வர்க்கத்தை பாதுகாப்பதுதான் என களத்தில் இறங்கியது போலிசு.

தொடர்ந்து தோழர்களுக்கும், போலிசுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தோழர்களை கொலைவெறிக் கொண்டு தாக்கத் துவங்கியது போலிசு. கூவம் ஆற்றினை ஆக்கிரமித்துள்ள ஏ.சி.சண்முகத்தின் கல்லூரியை பாதுகாக்க வேண்டி போராடும் மக்களை கொல்வதற்கு திட்டம் போடுகிறது பாசிச ஜெயா அரசு என போலிசை அம்பலப்படுத்தி சுற்றியிருந்த ஊடகம், பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார் தோழர் கணேசன். மற்ற தோழர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்க, ஒவ்வொருவரையும் குண்டுக் கட்டாக தூக்கி வண்டிக்குள் ஏற்றத் துவங்கியது போலிசு. குறிப்பாக பெண் தோழர்களை தாக்கி, தரதரவென இழுத்துக் கொண்டு வண்டியில் ஏற்றினர்.

இந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர்கள் காக்கிச் சட்டை அணியாத உளவு போலீசார். ஆனால், போலீசாரின் அடி, உதையை துச்சமென கருதி தோழர்கள் நடத்திய போராட்டத்தில்  அப்பகுதி மக்களும் இணைந்தது போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தியதை பார்க்க முடிந்தது. கிட்டதட்ட ஒரு மணி நேரம் வரை பூந்தமல்லி சாலை போர்க்குணமான போராட்டத்தால் கிளர்ச்சியுடன் காணப்பட்டது.

போராடிய தோழர்களை மட்டுமல்லாது சுற்றி நின்றுக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலரையும் சிவப்பு சட்டை போட்டிருந்த ஒரே காரணத்தால் கைது செய்தது போலிசு. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முதல் எதிரி போலிசுதான் என்பதையும், தாங்கள் யூனிஃபார்ம் போட்ட அடியாட்கள்தான் என்பதையும் ஒருங்கே நிரூபித்துக்காட்டியது இந்த போராட்டம்.

போலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் போலிசு தாக்குதல் தொடுத்தது. போராட்டக்காரர்களை கைது செய்த போலிசு அருகிலுள்ள லஷ்மி திருமண மண்டபத்தில் அடைத்து விட்டு பின்னர் இரவில் விடுதலை செய்தனர்.

நேற்றைய தினம் ‘நீர்நிலைகளை பாதுகாப்போம்! சென்னையை மீட்போம்!’ என்ற முழக்கத்தை முன்வைத்து SBOA மற்றும் பூவுலகின் நண்பர்கள் இணைந்து சென்னை மெரினா கடற்கரையில் பேரணி நடத்தினர். அந்த பேரணிக்கு அனுமதியும் கொடுத்து அதற்கு முழுக்க, முழுக்க பாதுகாப்பும் கொடுத்திருக்கிறது இதே போலீசு. இப்படி பொதுவாக நீர்நிலைகளை காப்போம் என அமைதி ஊர்வலமோ, இல்லை பாகுதகாப்பான சுற்றுச் சூழல் முழக்கங்களை எழுப்பி போகும் ஊர்வலமோ போனால் அது இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு பிரச்சனையில்லை. ஏனெனில் இவர்கள் எந்த நாளும் ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதில்லை. ஆனால் இதே முழக்கத்தை குறிப்பாக வைத்து செயல்பாட்டில் நீங்கள் இறங்கினால் அப்போதுதான் போலீசு தனது அரிதாரத்தை கலைத்துவிட்டு களத்திற்கு வரும்.

மழை பெய்து, வெள்ளம் வந்து வாழ்வாதாரம் முற்றிலும் பறிக்கப்பட்டு, சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ஏரியாக்களில் தண்ணீர் தேங்கி நின்று நோய்களை நிதமும் பரப்பிக் கொண்டிருந்தாலும் அந்த வெள்ளத்திற்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கூட அரசை எதிர்த்து வீழ்த்தாமல் சாத்தியமில்லை என்பதை உணர்த்துகிறது இந்த போராட்டம். உங்கள் பகுதியில் வெள்ளத்தை உருவாக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றப் போகிறீர்களா? போலிசு குறுக்கே வந்து நிற்கும், அதை என்ன செய்யப் போகிறீர்கள்? போலிசைத் தாண்டினால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றி உங்கள் உயிரை காத்துக் கொள்ள முடியும். போலீசை களத்தில் எதிர்கொள்ள தயாராவதுதான் ஒரே வழி.

(படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்)

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

******

வெள்ளச் சேதம்: இது இயற்கையின் சீற்றமல்ல!

லாபவெறி பிடித்த கார்ப்பரேட் முதலாளிகள், ரியல் எஸ்டேட் கும்பல்கள், அரசு அதிகாரிகளின் கூட்டுச்சதி!

தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி – சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் முன்பு கடந்த 08-01-2016 அன்று காலை 11.00 மணியளவில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.வி.மு. கோவில்பட்டி வட்டார அமைப்பாளர் வி. சக்திவேல் தலைமை தாங்க விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அவர் தனது தலைமையுரையில் “புறம்போக்கு நிலங்களையும், விவசாய நிலங்களையும் எப்படி ரியல் எஸ்டேட் கும்பல்கள் VAO, RI, தாசில்தார், மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமிக்கின்றனர்” என்பதை அம்பலப்படுத்தினார்.

floods-tuti-demo-1அடுத்து ம.உ.பா.மைய உறுப்பினரும், ஆதித்தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளருமான வழக்கறிஞர் பால்முருகன் கண்டன உரையாற்றினார். “இங்கிலாந்தில் வெள்ளசேதத்தில் பிரதமர் டேவிட் கேமரூன் நேரில் சென்று மக்களிடையே பணியாற்றினார். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதவோ நேரில்கூட செல்லாமல் விமானத்திலேயே பார்வையிட்டு முடித்துக்கொண்டார்” என்பதை அம்பலப்படுத்தினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில துணைச்செயலாளர் பொன் தனகரன் தனது கண்டன உரையில் “நான் இந்த அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இவர்கள் எடுக்கும் போராட்டங்கள் மிகவும் சரியாக இருக்கும்; அதுபோலவே இந்த கண்டண ஆர்ப்பாட்டமும் உள்ளது. உண்மையிலேயே மழை வெள்ளத்துக்கு காரணம் அரசும் அதிகாரிகளுமே. 1,400 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோரம்பள்ளம் கண்மாய் இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு தீர்வு உழைக்கும் மக்களின் கைக்கு அதிகாரம் வரவேண்டும்” என்று பதிய வைத்தார்.

floods-tuti-demo-2ம.உ.பா.மைய தூத்துக்குடி மாவட்ட செ.கு. உறுப்பினர் தோழர் ராமர் கண்டன உரையாற்றினார்.  “தூத்துக்குடியில் கோக்கூர் கண்மாய், அக்கரைக்கண்மாய், புலிப்பாஞ்சாங்குளம் போன்ற என்னற்ற நீர்நிலைகள் ரியல் எஸ்டேட் மாபியாக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கூட்டுக்கொள்ளையை – அவை பிளாட்டுகளாக விற்கப்பட்டன” என்பதை தோலுரித்தார். “நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து காற்றாலை முதலாளிகள் கட்டிடம் கட்டியுள்ளனர். இதுதான் வெள்ளம் குடியிருப்புக்குள் வரக்காரணம்” என்று அம்பலப்படுத்தினார். “ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலை முதலாளிகளால்தான் புவி வெப்படைகிறது. ஓசோனில் ஓட்டை விழுந்து இயற்கை தட்பவெப்பம் மாறி கனமழை பெய்துள்ளது. நேற்று இமய மலையில் வெள்ளம், இன்று தமிழகத்திலும் இங்கிலாந்திலும் வெள்ளம். தனியார்மயத்தின் விளைவாக கார்ப்பரேட்டுகள் லாபவேட்டையும், இயற்கைவளங்கள் சூறையாடப்பட்டும் நாடு நாசத்தை அனுபவிக்கிறது” என்று பதியவைத்தார்.

floods-tuti-demo-3அடுத்ததாக, மக்கள் அதிகாரம் – உசிலை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர். குருசாமி உரையாற்றினார். “மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியது அரசோ, அரசியல்வாதிகளோ அல்ல; மக்கள்தான் தன்னார்வலர்களாக, இளைஞர் குழுக்களாக, புரட்சிகர இயக்கங்களாக ஒன்றிணைந்து நிவாரணப் பணியாற்றினர். இதுதான் மக்கள் அதிகாரம். மக்களுக்காக என்று கூறப்பட்ட அரசுத்துறைகள் மக்களை கைவிட்டுவிட்டன. சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகள் வந்தாலும் இதை மாற்ற முடியாது. மாறாக கொல்லப்படுவார்கள் என்பதற்கு DSP விஷ்ணுபிரியா, வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி, தூத்துக்குடி சிவில் சப்ளை அதிகாரி முருகன் போன்று கண்முன்னே உதாரணங்கள் உள்ளன. நீதிமன்றங்களும் கார்ப்பரேட் மயமாகிவிட்டது. அங்கு ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்காது. என்வே மக்கள் தங்களின் உயிரையும், வாழ்வாதாரங்களையும் தக்கவைத்துக்கொள்ள அமைப்பாக ஒன்றிணைய வேண்டும். நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் கும்பல்களிடமிருந்து பறித்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு மக்கள் தங்களது அதிகாரத்தை நிறுவுவதன் மூலமே முடியும்” என்றார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் கோவில்பட்டியைச் சேர்ந்த தோழர் ஆதி நன்றியுரையாற்றினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தூத்துக்குடி

  1. நல்ல காலம் பிறக்கும்..காக்கிகள் கடமையை செய்யாவிட்டால் வீட்டுக்கு போகவேண்டிய சூழ்நிலை வுருவாகும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க