privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்காவிரி தமிழ் மண்ணின் பண்பாடு ! கம்பம் கருத்தரங்கம்

காவிரி தமிழ் மண்ணின் பண்பாடு ! கம்பம் கருத்தரங்கம்

-

தேனி மாவட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ”காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு , நீர்நிலைகளின் மீதான அதிகாரத்தை மக்கள் கைப்பற்றவேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தி  கடந்த 13-10-2016-அன்று  வாணியர் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஒரு வாரகாலமாக முற்போக்கு ஜனநாயக சக்திகளை சந்திப்பது, விவசாயிகள், அரசு ஊழியர்கள் மத்தியிலும், கம்பம் நகரில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடமும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

கருத்தரங்குக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் கம்பம் ஒருங்கிணைப்பாளர்,
தோழர். ஈஸ்வரன் காவிரிப் பிரச்சனையின் வரலாறை விளக்கி தலைமை உரையை துவக்கி வைத்தார்.

தோழர்.வி.இராசேந்திரன்
தோழர்.வி.இராசேந்திரன்

அடுத்து பேசிய ஏ.ஐ.டி.யு.சி. தேனிமாவட்ட துணைத் தலைவர் தோழர்.வி. இராசேந்திரன், ”காவிரி என்பது வெறும் ஆறு மட்டுமல்ல, சங்ககாலப் பாடலாக, குழந்தைகளின் பெயராக, சினிமாப் பாடலாக, தமிழர்களின் கலாச்சாரத்துடன் நெருக்கமான தொடர்புடையது. சேது சமுத்திரக் கால்வாய்க்கு எதிராக மாநிலமக்கள் நடத்திய பந்தை அன்றைய தமிழக அரசு ஆதரித்ததால், உச்சநீதிமன்றம் ஆட்சியைக் கலைப்போம் என்று நேரடியாக மிரட்டியது. ஆனால் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த முடியாது என்று கர்நாடகா சவால் விடும்போது மவுனமாக வேடிக்கைப் பார்க்கிறது.” என்று அமபலப்படுத்தினார்.

எஸ்,ஆர்.கணேசன்
எஸ்,ஆர்.கணேசன்

பென்னிகுயிக் விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் எஸ்.ஆர். கணேசன், ‘நம் நாட்டின் பரம எதிரியாக சொல்லப்படும் பாகிஸ்தானுடன் எவ்விதப் பிரச்சனையுமில்லாமல் சிந்துநதி நீரைப் பகிர்ந்துகொள்கிறோம். உண்மையில் நமக்கு எதிரியாக இருப்பவர்கள் நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மத்திய-மாநில அரசுகள்தான். இதைப் புரிந்துகொண்டு போராடும் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளால்தான் இதற்கு தீர்வு காணமுடியும்” என்றார்.

திரு.செங்குட்டுவன்.
திரு.செங்குட்டுவன்.

தமிழக விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு.செங்குட்டுவன், “ பல்லாண்டுகளாக தொடரும் காவிரி நீர் பிரச்சனையை நம் அரசியல்வாதிகளால் தீர்த்து வைக்க முடியாது என்பதுதான் நமக்கு அனுபவமாக இருக்கிறது. மீத்தேன்வாயு,கெயில் திட்டம் என அடுத்தடுத்து தமிழக மக்களின் வாழ்வுரியைப் பறிக்கும் மத்திய அரசு, பெரும் கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாகப் போய்விட்டது. நாடு விடுதலையானாலும் விவசாயிகள் இன்னும் விடுதல் பெறவில்லை! எனவே நமது நீர்நிலைகளைப் பாதுகாக்க விவசாயிகள்தான் ராணுவம் போல களத்தில் இறங்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.

திரு.மணிகண்டன்.
திரு.மணிகண்டன்.

பாலார்பட்டி கிராம பென்னிகுயிக் விவசாயிகள் சங்க செயலாளர் திரு,மணிகண்டன்,”அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டுப் போடச்சொல்லி நமது விவசாயிகளைக் கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டார்கள். ஓட்டுக்குப் பணத்தை வாங்குவதையும், அதை அடுத்தவனுக்குப் பிரித்துக் கொடுப்பதையும் பெருமையாகப் பேசுகிறான். இந்த அடிமைப் புத்தியினால்தான் காவிரிப் பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசியல்வாதிகள் எதுவும் செய்யாமல் இருப்பதைப் பார்த்தும் மவுனமாக இருக்கிறோம். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் எல்லாம் வாத்துகூட்டம்    மாதிரி டில்லிக்கு மொத்தமா போயிட்டு மொத்தமா திரும்பி வர்றாங்க. அங்க இவங்கள ஒரு பயலும் திரும்பிப் பார்க்கல. இதுக்குப் பிறகும்  இவங்கள நம்பி என்ன ஆகப் போகுது? என ஒரு விவசாயியின் மனக்குறையை வெளிப்படுத்தினார்.

திரு.குரு இளங்கோ
திரு.குரு இளங்கோ

திமுக-வின் முன்னாள் ஒன்றியச்செயலாளர் திரு.குரு இளங்கோ அவர்கள்,” நீராதாரம் செழித்திருக்கும் நாட்டில்தான் மக்களின் வாழ்வும், கலாச்சாரமும், நாகரீகமும் செழித்திருக்கும். ஒரு காலத்தில், கோயில் இருக்கும் இடமெல்லாம் குளமிருக்கும். பாசனக் குளங்கள் தனியாக இருக்கும்.ஆனால் இன்று 5௦௦ குளங்களுக்கு மேல் நான்குவழிச் சாலைக்கும்,அடுக்குமாடி வீடுகளுக்கும் அழிக்கப்பட்டுவிட்டது.1௦,௦௦௦க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்ந்து போய்விட்டன. இதனால்தான் நிலத்தடிநீர் வற்றிப்போய் விட்டது. இந்தியா ஒரு பல்தேசிய இனங்களின் கூட்டமைப்பு. கூட்டமைப்பு என்பது கண்ணாடிப் பாத்திரம் மாதிரி. ஒரு இனத்தின் தேவையும், உரிமையும் மறுக்கப்படும்போது ஒருமைப்பாடு என்பது சிதறிவிடும்! இதுவரை ஆண்ட மத்திய அரசுகள் நம்மை இதை நோக்கியே தள்ளுகின்றன!” என்றார்.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் தாலுக்கா செயலர் தோழர் முருகன், மாநிலத்தின் உள்நாட்டுக் குளம் ஏரிகளின் பராமரிப்பில் மாநில அரசியல்கட்சியினரின் அலட்சியத்தையும், ஆக்கிரமிப்புகளையும் எடுத்துக் கூறி,நீர்நிலைகளின் அதிகாரத்தை விவசாயிகள் கைப்பற்றுவதுதான் தீர்வு என்று விளக்கினார்.

இறுதியாகப் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், “பாக்கட் தண்ணீருக்கும், பாட்டில் தண்ணீருக்கும் நாட்டில் பஞ்சமில்லை! இலவச நீருக்குத்தான் இப்போது பிரச்சனை. காசில்லாதவனுக்கு தண்ணீர் இல்லை என்பதுதான் பிரச்சனை! காவிரி வெறும் ஆறு மட்டுமல்ல. தமிழர்களின் தாய்.! வாழ்வு!. பண்பாடு!. பொருளாதாரப் பிணைப்பு!”

தோழர்.காளியப்பன்
தோழர்.காளியப்பன்

“1970 வரை 5 லட்சம் ஏக்கர்தான் கர்நாடகாவின் பாசனப்பரப்பாக இருந்தது. ஆனால் இன்று ஒப்பந்த விதிமுறைகளை மீறி 2௦ லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தி விட்டார்கள். காவிரி நீரைப் பதுக்குவதற்காக ஏராளமான ஏரிகளை வெட்டி வைத்துள்ளனர். 2007-ல் வந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட 3 வருடமாகிறது. வெளியிட்ட பின்னும் தீர்ப்பை அமுல்படுத்த முடியவில்லை!

நிர்வாகப் பொறுப்பிலுள்ள மத்திய அரசு, கர்நாடகாவின் அடாவடியைக் கண்டிக்கவில்லை. மாறாக சட்டவிரோதமாக செயல்படும் கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது!

கர்நாடகாவில் தனது தீர்ப்பை அமுல்படுத்த முடியாமல் தோற்றுப்போய் நிற்கிறது உச்சநீதிமன்றம்! சட்டத்தின் ஆட்சியை இவர்களால் நிலைநாட்ட முடியவில்லை. சட்ட விரோதமாக செயல்படும் கர்நாடகாவை ஆதரிப்பதன் மூலம் சட்டவிரோதமான நிலைக்கு அரசு அமைப்பே சீரழிந்துவிட்டது! இனிமேலும் இந்த அமைப்பு முறைக்குள் தீர்வுகாண முடியாது!” என்று விரிவாகப் பேசினார்.

சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக மாற்றுக் கட்சியை சேர்ந்த ஜனநாயகவாதிகளும், இளைஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக, கம்பம் அறநிலையத்துறை வளாகத்தில் உள்ள கருப்பத்தேவர் மண்டபத்தில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தோம். நமது போஸ்டரில் “மோடி அரசு” என்ற வாசகம் இருப்பதைக் கண்டு கொதித்துப்போன இந்துமுன்னணி கும்பல் வழக்கம்போல பேடித்தனமான வேலைகளில் இறங்கியது. அறநிலையத்துறை மீது மண்டப உரிமையாளர் வழக்கு போட்டிருப்பதைக் காரணமாக வைத்து, “தீவிரவாதிகளின் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கிறார்” என்று மேலதிகாரிகளுக்கு புகார் செய்தனர். தனது வழக்குக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறிய மண்டப உரிமையாளர், நிகழ்ச்சி  நாளன்று நமக்கு அனுமதி மறுத்துவிட்டார். உடனடியாக மாற்று மண்டபம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போதே, பெயர் சொல்லத் துப்பில்லாத ஒரு அனாமத்து தோழர் மோகனுக்கு போன்செய்து “காவிரி பிரச்சனையில் எப்படி மோடி அரசைக் குற்றம் சொல்லலாம்? திமுக-அதிமுக-காங்கிரசுதான் காரணம்.” என்று வாக்குவாதம் செய்தான். தோழர் பொறுமையாக கூறிய விளக்கத்தைக் கூட கேட்காமல், “அடுத்து எங்க கூட்டம் நடத்தப் போறீங்க? உங்கள்கூட்டத்திற்கு நாங்கள் வரலாமா? எங்களுக்கு பேச வாய்ப்பு தருவீர்களா?” என்று மிரட்டும் தோரணையில் கேட்டான். “தாராளமாக வாங்க. ஆனால் பேச அனுமதிக்க முடியாது” என்று கூறிவிட்டார், ஒருவேளை கூட்டத்திற்கு வந்து கலாட்டா செய்வார்கள் என்று ஆவலோடும், தயாரிப்புடன் காத்திருந்தோம். இறுதிவரை ஒரு வானரமும் வரவில்லை!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தேனி மாவட்டம் ஒருங்கிணைப்புக் குழு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க