privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்சிறுமிகள் கடத்தலில் நம்பர் 1 மாநிலம் - பா.ஜ.க ஆளும் ஜார்கண்ட்

சிறுமிகள் கடத்தலில் நம்பர் 1 மாநிலம் – பா.ஜ.க ஆளும் ஜார்கண்ட்

-

இந்திய வரைபடத்தில் ஜார்கண்ட் மாநிலம்

ந்தியாவிலேயே சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் கடத்தலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ஜார்கண்ட் மாநிலம் தான். இங்கு வேலைவாய்ப்பு மையங்கள் என்ற பெயரில் பல்வேறு ஆட்கடத்தல் கும்பல்கள் இயங்கி வருகின்றன. இக்கும்பல்கள், பதின்வயதுச் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துகின்றன. இப்பெண்களை மிரட்டிப் பணிய வைத்துப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி ஒட்டச் சுரண்டுகிறது இக்கும்பல். இவர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்களின் எண்ணிக்கை நம்மைமிரளச் செய்கின்றது.

‘இந்திய சமூகவியல் நிறுவனம்’ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, இது போன்று இந்தியாவின் பிறமாநிலங்களில் இருந்து இதுவரை டில்லிக்கு மட்டும் வேலைக்காக கடத்தி வரப்பட்ட அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 14 இலட்சம் ஆகும். இவர்களில் சுமார் ஐந்து இலட்சம் பேர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் சுமார் 72.1% பேர் இன்று வரை திருமணமாகமலேயே இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அவ்வாறு பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்களில் 70% பேர் 18 வயதுக்கும் கீழான சிறுமிகள்.

ஜார்கண்டில் குறிப்பாக ராஞ்சி, கும்லா, சிம்டெகா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் தான் இக்கடத்தல் கும்பலால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலில், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் என்ற போர்வையில் இருக்கும் இந்த ஆட்கடத்தல் கும்பல்கள், டில்லி போன்ற பெரும் நகரங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கிருக்கும் மாஃபியா கும்பல்களிடம் விற்றுவிடுகின்றனர்.

இந்த மாஃபியா கும்பல்கள் தான் இச்சிறுமிகளை பல்வேறு தொழில்களுக்குப் பிரித்து நாடு முழுவதும் அனுப்பி வைக்கின்றனர். இப்பெண்களுக்கு உரிய சம்பளத்தை அளிக்காமல், மொத்தமாக ஒரு சிறு தொகையை அளித்து விட்டு பல ஆண்டுகளுக்கு அவர்களைச் சுரண்டுகிறார்கள். மீதமுள்ள பெண்களை விற்பனைக்காக பச்சிளங்குழந்தைகளை பெற்றுத்தரும் இயந்திரமாக மாற்றுகின்றனர். இதற்கான பிரத்யேகமான வீடுகளிலோ, அலுவலகங்களிலோ அடைத்து வைத்து, செயற்கைக் கருவூட்டல் முறையில் கருத்தரிக்கச் செய்கின்றனர். முரண்டு பிடிக்கும் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, கருத்தரிக்கச் செய்கின்றனர்.

இப்பெண்கள் தப்பிச் செல்ல முடியாத வண்ணம் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர். இப்பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் அக்குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை தாயோடு வைத்திருந்து, பிறகு அக்குழந்தையை சுமார் ரூ.1,00,000 முதல் ரூ.4,00,000 வரை விற்று விடுவார்கள். அதன் பின்னர் அப்பெண்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை சந்தை நிலவரத்திற்கேற்றவாறு பணம் கொடுப்பார்கள். இங்கு பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சிறுமிகளையும் உள்ளடக்கியே.

ஒருவேளை, கருத்தரித்த பின்னர் இப்பெண்கள், இக்கும்பலிடமிருந்து தப்பி (அது அவ்வளவு சுலபமான காரியமல்ல) தமது சொந்த ஊருக்கு வந்தாலும், அவர்களது ஊரில் இருக்கும் உள்ளூர் ஏஜெண்டுகள், இப்பெண்ணிற்கு குழந்தை பிறந்ததும், அடியாட்கள் மூலமாகவோ, பணத்தின் மூலமாகவோ அக்குழந்தையைக் கடத்திச் சென்று விடுகின்றனர்.

உள்ளூர் ஏஜெண்டுகள் முதல் மாஃபியா குமபல்கள் வரை அனைவருக்கும் உள்ளூர் போலீசு முதல் அதிகார வர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும் கூட்டாளிகள் உள்ளனர். இக்கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள், இக்கும்பலிடம் இருந்து தப்பி வந்தாலும், பலர் செய்வதறியாது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். மீதமுள்ளவர்களை உள்ளூர் ஏஜெண்டுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டி வைக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் வெகு சிலரே, இக்கும்பலின் மீது போலீசு நிலையங்களில் புகாரளித்தாலும், முதல் தகவலறிக்கையில் பாலியல் வன்புணர்வு, கொத்தடிமைத்தனம் ஆகிய குற்றங்களை மட்டுமே பதிவு செய்து கொண்டு, குழந்தைகள் வியாபாரத்தையும், சிறுமிகளும், இளம்பெண்களும் வலுக்கட்டாயமாக குழந்தை பெற வைக்கப்படுவதைப் பற்றி நேரடியாக பதிவு செய்ய மறுத்திருக்கிறது கிரிமினல் போலீசு. இது குறித்து போலீசு உயரதிகாரிகள் பேசும் போது, இது கட்டாயப்படுத்தப்பட்ட வாடகைத்தாய் முறை என்பதாகத் தான் கூறுகிறார்களே ஒழிய இதன் பின்னணியில் உள்ள குழந்தைகள் விற்பனை, பாலியல் வன்புணர்வு ஆகியவற்றைக் குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர்.

இவற்றை எல்லாம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ஜார்கண்ட் மாநிலத்தின் பாஜக அரசு, இந்த மாஃபியா கும்பலைக் கண்டும் காணாமல் விட்டு அவை தங்கு தடையின்றி வளர்வதற்கு வழிகோலுகிறது. ஜார்கண்ட் மாநில பெண்களுக்கான கமிசனின் உறுப்பினரான வாசவி கிரொ, இக்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த ஒரு கடுமையான சட்டத்தை இயற்றுவதற்கு தாம் கொடுத்த சட்டப் பரிந்துரைகள் அனைத்தும் மாநில அரசால் கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளன என்று கூறிகிறார்.

ஜார்கண்ட் அரசோ, வாசவி கிரோவின் பரிந்துரைகளிலிருந்து வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கான கடுமையான வரைமுறையையும், கெடுபிடிகளையும் நீக்கி விட்டு, ”ஜார்க்கண்ட் மாநில தனியார் வேலைவாய்ப்பு முகமை மற்றும் வீட்டு வேலைப் பணியாளர்கள் ஒழுங்குமுறை மசோதா, 2016” என்ற பெயரில் ஒரு மொன்னையான சட்ட வரைவை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

ஜார்கண்ட் அரசின் இச்சட்டம் சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் மாஃபியா கும்பல்களின் வேலைவாய்ப்பு மையங்களுக்குச், சட்டப் பூர்வமான அங்கீகாரம் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படும் என்கிறார் வாசவி கிரா.

மோடி ஆட்சியில் அமர்ந்தது முதல் ‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்’, ‘உஜ்ஜாவாலா திட்டம்’, ‘பெண்கள் உதவி மையம்’, ‘மகளுடன் செல்ஃபி’ எனப் பல பெயர்களில் பெண்களுக்கான திட்டங்களைப் பகட்டாக அறிவித்து வருகிறார். அறிவிக்கப்படும் திட்டங்களில் எல்லாம் மோடியின் சத்தம் மட்டும் தான் பலமாக வருகிறதே தவிர, அவற்றின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்நிலை மேம்படவில்லை. மத்திய அரசு மட்டுமல்லாது, ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தலும், முறைகேடான குழந்தைகள் விற்பனையும் கொடி கட்டிப் பறக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் குறித்த பாஜகவின் கண்ணோட்ட்த்திற்கு, சமீபத்தில் போபாலில் ஆன்லைன் விபச்சாரம் நடத்திப் பிடிபட்ட பாஜக பிரமுகரும், கொல்கத்தாவில் குழந்தைகள் கடத்தலில் பிடிபட்ட பாஜக பிரமுகருமே சாட்சி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க