privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசபர்மதியில் தெறித்த மோடியின் எச்சில் காயும் முன் ஜார்கண்டில் கொலை !

சபர்மதியில் தெறித்த மோடியின் எச்சில் காயும் முன் ஜார்கண்டில் கொலை !

-

ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் உள்ள பர்வாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது உஸ்மான். அறுபது வயது. சுமார் ஆயிரம் பேருக்கு மேல் திரண்ட கும்பல் ஒன்று முகமது உஸ்மானின் வீட்டுக்குத் தீவைத்துள்ளது. பற்றியெறிந்த நெருப்புக்குள் முகமது உஸ்மானைத் தூக்கியெறிய அந்தக் கும்பல் முயற்சித்த போது தலையிட்ட போலீசார் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

முகமது உஸ்மான் செய்த ‘குற்றம்’ என்ன?

அவர் “முகமதுவாக” இருந்தது முதல் குற்றம். மாடுகள் வளர்த்தது இரண்டாவது குற்றம். அவரது மாடுகளில் ஒன்று நோய்வாய்பட்டு இறந்தது மூன்றாவதும் முக்கியமானதுமான பெருங்குற்றம்.

தீக்கிறையாக்கப்பட்ட உஸ்மானின் வீடு

முகமது உஸ்மானிடம் எட்டு மாடுகள் இருந்துள்ளன. பல ஆண்டுகளாக தான் வளர்த்த மாடுகளில் இருந்து பால் கறந்து பர்வாபாத் கிராமத்துக்கு விற்றுப் பிழைத்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே அவர் வளர்த்து வந்த ஒரு மாடு சுகவீனம் அடைந்திருந்தது. சில நாட்களுக்கு முன் அந்த மாடு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. மாட்டை அப்புறப்படுத்தும் தொழிலாளிகளை உஸ்மான் அழைத்துள்ளார்; அவர்கள் பக்கத்து கிராமத்தி சென்றதால் மறு நாள் வருவதாகச் சொல்லியிருக்கின்றனர்.

இதற்கிடையே இறந்து போன மாட்டிலிருந்து துர்நாற்றம் வெளியாகத் துவங்கவே, அதன் உடலை பக்கத்தில் இருந்த வெற்று நிலத்தில் இழுத்துப் போட்டிருக்கின்றது உஸ்மானின் குடும்பம். அன்றைக்கு அந்த கிராமத்தில் வாரச் சந்தை. அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்து சந்தைக்கு வந்த மக்கள், இறந்த மாடு ஒன்று முசுலீமின் வீட்டுக்குப் பக்கத்தில் கிடப்பதைப் பார்த்துள்ளனர். உஸ்மான் தான் கொன்றிருக்க வேண்டும் என அதில் சிலர் கொளுத்திப் போட, விரைவிலேயே கும்பல் ஒன்று திரண்டுள்ளது.

“மாட்டைக் கொன்ற முசுலீமுக்கு” பாடம் கற்பிக்க நினைத்த கும்பல், அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளது. உஸ்மானை வீட்டுக்கு வெளியே இழுத்து கண்மூடித்தனமாக தாக்கிய வெறிபிடித்த கும்பல், அவரது குடும்பத்தாரை வீட்டின் மேற்தளத்தில் இருந்த அறை ஒன்றுக்குள் வைத்துப் பூட்டி விட்டு வீட்டுக்கும் தீவைத்துள்ளது. கொழுந்து விட்டெரியும் தீயினுள் உஸ்மானை வீசியெறிவது திட்டம். அதற்குள் போலீசார் தலையிடவே உஸ்மான் குடும்ப உறுப்பினர்கள் தற்காலிகமாக காப்பாற்றப்பட்டனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அரசு முறைப் பயணமாகச் சென்று திரும்பிய மோடியின் திக்விஜயம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக ஊடகங்கள் சொல்கின்றன. மேதகு மோடியின் உற்ற நண்பரான பரமபூஜனீய டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் சமூகம் மோடியை மூன்று முறை கட்டிப்பிடித்ததாகவும், ஐந்து முறை கைகுலுக்கியதாகவும் முதலாளிய பத்திரிகைகள் பிரஸ்தாபிக்கின்றன. திரும்பி வரும் வழியில் டச்சு பிரதமர் மானனீய மார்க் ரூத்தே அவர்களின் சமூகத்திடமிருந்து சைக்கிள் ஒன்றை பரிசாகப் பெற்றுத் திரும்பியுள்ளார் மேதகு பிரதமர்.

சந்தேகமேயில்லை; மாபெரும் வெற்றி தான்.

சபர்மதி ஆசிரமத்தில் உரையாற்றும் மோடி

கட்டிப்பிடி வைத்தியத்துக்குப் பிரதிகாரமாக அமெரிக்கா தயாரித்து தேங்கிக் கிடந்த ஆயுதங்களில் சிலவற்றை வாங்குவதற்கு இந்தியா சம்மதித்துள்ளது. ஹெச்1-பி விசா கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலாளிய பத்திரிகைகள் எவையும் காற்று பிரிக்கவில்லை என்பதால் அவை தளர்த்தப்படவில்லை என்பதை நாமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.

திரும்பி வந்த மோடி நேராக காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்துக்கு ஜூன் 29 -ம் தேதி சென்று கைராட்டை சுற்றியுள்ளார். ராட்டையில் நூல் நூற்று முடித்த பின் பேசும் போது இது காந்தியின் தேசமென்றும், இங்கே பசுக்களைக் காப்பதற்காக கொலைகள் செய்வதை பிரபல பசுநேசரான காந்தியே கூட ஏற்றுக் கொள்ள மாட்டாரென்றும் குறிப்பிட்டுள்ளார். பேச்சின் இடையே பசுக்களைக் காப்பது சரியானது தான் என்கிற இடைச்சொருகல் ஒன்றும் இருந்தது.

ஜூன் 29 -ம் தேதி. பிரதமர் பசுபயங்கரவாதம் குறித்து ’கடுமையாக” பேசியதை ரிபப்ளிக், டைம்ஸ் நௌ உள்ளிட்ட பின்பாட்டு கோஷ்டியினர் கொண்டாடினர்.

அதே ஜூன் 29ம் தேதி; அதே ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம். அஸ்கர் அன்சாரி கொல்லப்படுகிறார். மாருதி வேனில் பயணித்துக் கொண்டிருந்த அஸ்கர் அன்சாரியைத் தடுத்து நிறுத்திய கும்பல் ஒன்று, அவர் மாட்டுக்கறி வைத்திருப்பதாக குற்றம் சாட்டி அவரது மாருதி வேனையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது. பின்னர் அஸ்கர் அன்சாரியைச் சூழ்ந்து கொண்ட கும்பல் அவரை சராமாரியாக தாக்கியுள்ளது. குற்றுயிரும் குலை உயிருமாய் மீட்கப்பட்ட அஸ்கர் அன்சாரி, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போயிருக்கிறார்.

பசுப்பாதுகாப்பு குண்டர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அஸ்கர் அன்சாரி

பசுபயங்கரவாதம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ தீவிரவாத கும்பலால் ஜாடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பூதமான பசுபயங்கரவாதம், தற்போது சொந்தமுறையில் இயங்கி வருகின்றது. அப்படி சொந்த முறையில் அந்த பயங்கரவாத சிந்தனை மக்கள் மயமாக வேண்டும் என்பதும், அதன் மூலம் சமூகத்தை நிரந்தரமாக பிளவு படுத்தி வைக்க வேண்டும் என்பதும் தான் காவிகளின் திட்டம்.

சென்ற பாராளுமன்றத் தேர்தலில் காவிகள் மிகுந்த சிரமத்துக்கிடையே அணிந்து கொண்ட ‘வளர்ச்சி’ முகமூடி சல்லி சல்லியாகக் கிழிந்து விட்டதால் இனி வரும் தேர்தல்களில் அதைப் பயன்படுத்த முடியாத நெருக்கடி உருவாகியுள்ளது. இனி இந்துத்துவத்துக்கு மேக்கப் தேவையில்லை; நாகா சாமியார்களின் கோலத்தில் வெளிப்படையாகவே இந்துத்துவத்தின் பெயரால் அரசியல் வெற்றிகளைக் குவிக்க திட்டமிட்டு வருகின்றனர். அதன் காரணமாகவே வேர்மட்ட அளவில் தொடர்ச்சியாக மாட்டை முன்னிறுத்தி கலவரங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

அப்படியென்றால் மோடியின் பேச்சுக்கு என்ன பொருள்? அதற்கு அமைதிப்படை அம்மாவாசையின் வசனம் தான் பொருள் – “டேய் மணியா… நீ கொளுத்துப் போது நான், ‘அய்யையோ வேண்டாம், வேண்டாம்னு கத்துவேன்.. எல்லாம் டூப்பு.. நீ கரெக்டா இழுத்துப் போட்டுக் கொளுத்திடு”

செய்தி ஆதாரம் :