privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகார்ப்பரேட்டுகளிடம் கையேந்துவதில் பாஜக முதலிடம் !

கார்ப்பரேட்டுகளிடம் கையேந்துவதில் பாஜக முதலிடம் !

-

ந்திய அரசியல் கட்சிகளிலேயே பாரதிய ஜனதா தான் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அதிகளவு நன்கொடை பெற்ற கட்சி என்பது தெரியவந்துள்ளது. 2012 – 13 காலகட்டத்திலிருந்து 2015 – 16 காலம் வரையில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை “ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு” (Association for Democratic reforms) என்கிற தன்னார்வ குழு ஆய்வு செய்துள்ளது.

மேற்படி ஆய்வின் அடிப்படையில் குறிப்பிட்ட கால கட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சுமார் 956.77 கோடி அளவுக்கு நிதி பெற்றுள்ளதும், அதில் பெரும் பகுதியை (705.81 கோடி) பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. கட்சிகள் பெற்ற நிதியில் சுமார் 384.04 கோடிக்கு முறையான பான் (PAN) எண்கள் குறிப்பிடப்படவில்லை என்பதும் மேற்படி ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கார்ப்பரேட்களின் காசில் பாஜக-வின் கொடி பறக்குது

அதே போல் சுமார் 355.08 கோடி அளவுக்கான நன்கொடை வழங்கியவர்கள் முறையான முகவரி ஏதும் அளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. முறையான முகவரியோ பான் எண்ணோ இல்லாமல் வழங்கப்பட்ட நன்கொடையில் சுமார் 99% பாரதிய ஜனதா கட்சிக்கே சென்றுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலகட்டத்தில் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையில் (956.77 கோடி) சுமார் 806.25 கோடிக்கான வருமான மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2,987 கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளன – இதில் கணிசமான நிதி சுரங்கம், ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி, ஊடகம் உள்ளிட்ட தொழிற்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களே பெருமளவு நிதியை (419.69 கோடி) அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளன. கட்சிகள் பெற்ற நிதியில் பெரும்பங்கு (432.63 கோடி) தேர்தல் நிதி வழங்குவதற்கென்றே உருவாக்கப்பட்ட டிரஸ்டுகளிடம் இருந்து சென்றுள்ளது. டிரஸ்டுகளின் மூலம் பெற்ற நிதியிலும் பாரதிய ஜனதா கட்சியே முதலிடத்தில் உள்ளது (287.69 கோடி).

ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் படியளப்பதை முறைப்படுத்துவதற்காக தேர்தல் கமிஷனால் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களைத் தொடர்ந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் ஒரே மாதத்தில் சுமார் 14 டிரஸ்டுகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு கார்ப்பரேட் முதலாளிகள் இணைந்து உருவாக்கும் இந்த டிரஸ்டுகளின் மூலம் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகள் வழங்கப்பட்டன.

ஆய்வுக்கு உட்பட்ட காலத்தில் சுமார் 35 முறை நன்கொடை வழங்கிய சத்யா எலக்டோரல் டிரஸ்ட், ஏர்டெல், டி.எல்.எப் (ரியல் எஸ்டேட்), ஹீரோ (மோட்டார் வாகனம்), இண்டியா புல்ஸ்(பங்குத் தரகு நிறுவனம்) உள்ளிட்ட 26 கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டுப் பங்கு டிரஸ்ட் ஆகும். இதே போல், டாடா, ரிலையன்ஸ், மகிந்திரா, உள்ளிட்ட பெருநிறுவனங்கள், கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலம் அரசாங்கத்திடம் தமது காரியங்களைச் சாதித்துக் கொள்வதை டிரஸ்டுகள் மூலம் நிறுவனமயப்படுத்தியுள்ளனர்.

கடந்த தேர்தல் சமயத்தில் கருப்புப் பணத்தை ஒழிப்பதே தமது லட்சியம் எனப் பீற்றிக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி பெற்ற தேர்தல் நன்கொடையில் கணிசமான அளவு முறையான பான் எண்களோ, முகவரியோ இன்றிப் பெறபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு முதலாளிகளிடம் கைநீட்டிக் காசு வாங்கியதற்கு எண்ணற்ற சந்தர்பங்களில் விசுவாசமாக நடந்து கொண்டிருக்கிறது திருவாளர் மோடி தலைமையிலான மத்திய அரசு.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மக்களிடம் இரகசியமாக வைத்திருந்த பாரதிய ஜனதா கட்சி, அவ்வாறான அறிவிப்பு வெளியாகவுள்ளதை கார்ப்பரேட்டுகளிடம் முன்னரே தெரிவித்ததாக அப்போதே செய்திகள் வெளியாயின. மேலும் சுரங்க முதலைகளுக்கும் ரியல் – எஸ்டேட் பகாசுர கார்ப்பரேட்டுகளுக்கும் மத்திய அரசு அள்ளிக் கொடுத்துள்ள சலுகைகளின் பட்டியலைத் தான் முதலாளிய அறிஞர்கள் தொழில் வளர்ச்சிக் குறியீட்டெண்களாக மதிப்பீடு செய்து கொண்டுள்ளனர்.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தரவுகள் கட்சிகளால் தேர்தல் கமிஷனில் சமர்பிக்கப்பட்ட நன்கொடை விவரங்களைக் குறித்த தரவுகளின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது. “வெள்ளையில்” வாங்கியதே தொள்ளாயிரம் கோடிகள் என்றால், புறவாசல் வழியாக “கருப்பில்” வாங்கிய தொகை எத்தனை ஆயிரம் கோடிகளாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பாரதிய ஜனதா மக்கள் விரோதி என்பதையும் முதலாளிகளின் பாதம் தாங்கி என்பதையும் புரிந்து கொள்ள தரவுகள் கூடத் தேவையில்லை – மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களும் செயல்பாடுகளுமே அதற்கான நிரூபணங்கள் தாம். எனினும், இம்முறை நமது வாழ்க்கை நடைமுறையின் ஊடாக ஏற்கனவே அறிந்த உண்மைகள் தரவுகளின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி ஆதாரம் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

ஓட்டுக் கட்சிகள் கார்ப்பரேட் கள்ளக்கூட்டை அம்பலப்படுத்தும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி