privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதொழிலாளிகளின் நெஞ்சை சுடும் வேல் பிஸ்கட்ஸ் !

தொழிலாளிகளின் நெஞ்சை சுடும் வேல் பிஸ்கட்ஸ் !

-

பிஸ்கட் சுடும் தொழிலாளியின் நெஞ்சை சுடும் வேல் பிஸ்கட்ஸ்! புதுச்சேரியில் தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதம்!

1990-களின் துவக்கத்தில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள், மக்களின் அன்றாட வாழ்வை தினம் தினம் பறித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்களுக்கென இருக்கின்ற 44 வகையான சட்டங்கள் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பாதிப்புக்குள்ளாகி வருகின்றன என்று கூறி அதைத் திருத்தும் வேலைகளைப் படிப்படியாக செய்து வருகின்றனர் ஆட்சியாளர்கள்.

அதே நேரம், தொழிலாளர்கள் மீதான சுரண்டல், ஒடுக்குமுறைகளைத் தீவிரப்படுத்த அவுட்சோர்சிங் என்ற பெயரில் ஜாப் ஒர்க்கிங், ஒப்பந்த முறை, குத்தகை முறை என புதிய முறைகளைப் புகுத்தவும், நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்டி, ஒப்பந்தத் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தவும், வகை செய்து முதலாளிகளின் லாபத்தை உறுதி செய்து வருகின்றனர். இருக்கின்ற சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க வக்கற்ற சூழலில் அச்சட்டங்களைத் திருத்தும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

குறிப்பாக, அரசின் இந்த நடவடிக்கைகளால் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் முன்பை விட தீவிரமாகி வருகிறது. மாருதி தொழிலாளர் மீதான கொலைக்குற்றத் தண்டனையும், பிரிக்கால் ஆலைத் தொழிலாளர் மீதான இரட்டை ஆயுள் தண்டனையும் அதன் சமீபத்திய உதாரணங்கள். இந்தியாவெங்கும் தொழிலாளர்கள் மீதான ஒடுக்கு முறைகளை தினம் தினம் அரங்கேற்றி வருகின்றனர் முதலாளிகள். இந்த நிலை தான் புதுச்சேரி திருபுவனையில் செயல்படும் வேல்பிஸ்கட்ஸ் நிறுவனத்திலும்.

சன்பீஸ்ட், மேரி லைட், மேரி கோல்டு போன்ற  பிஸ்கட்களை தயாரித்து சந்தையில் முதலிடத்தைப் பிடிக்க போட்டி போடும், ITC என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக ஜாப் ஒர்க் மூலம் தயாரித்துத் தரும் குத்தகை நிறுவனம் தான் இந்த வேல் பிஸ்கட்ஸ். (ITC – INDIAN TOBACCO COMPANY – பல்வேறு சிகரெட்டுக்களை தயாரித்து சந்தைப்படுத்தி மக்களுக்குப் புற்று நோய் உள்ளிட்ட சுவாச நோய்களை உண்டாக்கி உயிரைப் பறிக்கும் உயிர்க்கொல்லி நிறுவனம்.)

வேல் பிஸ்கட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிஸ்கட்ஸ் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம், சத்து தருவதாக விளம்பரப்படுத்தப்படும் அதே வேளையில், அந்த பிஸ்கட்டுக்களைத் தயாரிக்கும் தொழிலாளர்களை அன்றாடம் சக்கையாகப் பிழிந்து வெளியே அனுப்புகிறது நிர்வாகம். ஏறத்தாழ ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 200-க்கும் குறைவு.

சட்டப்படி செய்ய வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை நிர்வாகம் மதிப்பதில்லை. எனவே, ஆபத்தான நிலையில் தொழிலாளர்கள் வேலை செய்து, விபத்தில் சிக்கி உடல் உறுப்புக்களை இழந்து ரத்த சாட்சியங்களாக இருக்கின்றனர். இது போன்ற தங்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடவும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமாக நியூ இந்தியா பாலிமர் புட்ஸ் தொழிலாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.

ஒரு தொழிற்சாலையில் கழிவறை, ஓய்வறை, மருத்துவருடன் கூடிய மருந்தகம், குழந்தைகளுக்கான விளையாட்டு அறை, ஆரோக்கியமான, சுத்தமான உணவு உள்ளிட்டவை தொழிற்சாலைச் சட்டப்படி இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், மேற்கூறிய எந்த வசதிகளும் இல்லை. ஊதியத்தையும் சட்டப்படி தரவேண்டிய தேதிக்குத் தருவதில்லை. இக்கோரிக்கைகளை தொழிலாளர்கள் தங்களது சங்கத்தின் மூலம் நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும், அது செவிடன் காதில் ஊதிய சங்காய்த் தான் போனது.

இந்தப் பிரச்சினைகள் மட்டுமல்ல, 2017 – 18 ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வுக் கோரிக்கையையும் பேசாமல் இழுத்தடித்து வருகிறது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் பல நிபந்தனைகளின் அடிப்படையில் ரூ.1000/- உயர்வு தருவதாகக் கூறி, அதை ரூ.300/-ஆகக் குறைத்து அடாவடி செய்தது. மறுபுறம் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க, நடைமுறைச் சாத்தியமற்ற உற்பத்தி நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்துப் போடுமாறு மிரட்டியதை தொழிற்சங்கம் ஏற்க மறுத்தது.

அதனால், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சங்க முன்னணியாளர்கள், சங்க வேலைகளைக் கொண்டு செல்லும் தொழிலாளர்கள் என தொடர்ச்சியாக கடிதம் தருவது, பணியிடை நீக்கம் செய்வது, பணியிட மாற்றம் செய்வது என சட்ட விரோத செயல்களை தொடர்ந்து அரங்கேற்றியது நிர்வாகம். தொழிலாளர் சமரச அதிகாரி பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் வரவில்லை. இப்படி தங்களது சட்டரீதியான, வாய்ப்புக்கள் அடைக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும்,  தொழில் அமைதியை சீர்குலைக்கும் நிர்வாகத்தைக் கண்டித்தும், ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு காண வலியுறுத்தியும்; புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-யின் இணைப்பு சங்கமாக உள்ள நியூ இந்தியா பாலிமர் புட்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 18.08.2017 அன்று தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

தொழிலாளர்கள் மீதான நிர்வாகத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்தும், தொழிற்சாலை வேலைக்கு ஆளெடுத்து, சட்டத்திற்கு உட்படாத வகையில் இரும்பு, சிமெண்ட் விற்கும் கடைக்கு பணியிட மாற்றம் செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தும் வகையில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருக்கும் ஆணையர் வாசலில் கொடி, பதாகைகளுடன் விண்ணதிரும் முழக்கங்கள் தொடர்ந்தன.

ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஆணையர், தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி, நமது கோரிக்கைக் கடிதத்தை தொழிலாளர் துறையின் அமலாக்கத் துறைக்கு அனுப்பினார். அரசின் வார விடுமுறையாக இருக்கும் நிலையிலும், சனிக்கிழமையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்து தொழிலாளர்கள் மத்தியிலும், நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.

ஆணையருடனான பேச்சு வார்த்தையில், தொழிலாளர்களின் உரிமையை மறுக்க லட்சலட்சமாக செலவு செய்து வழக்கை நடத்தத் தயாராக இருக்கும் முதலாளி, தொழிலாளிக்குச் சட்டப்படி சேர வேண்டிய குறைந்தபட்ச தொகையைக் கூட தருவதில்லை. அது உச்சநீதிமன்றத் தீர்ப்பாய் இருந்தாலும் கூட மதிப்பதில்லை.

எந்த முதலாளியும், தொழிலாளர்களின் கோரிக்கையை தீர்ப்பதில்லை என்பதை அவர் தனது சொந்த அனுபவங்கள் மூலம் தனது வாயால் தெளிவுபட விளக்கினார். மேலும், நிறுவனத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, சட்டவிரோதமான பணியிட மாற்றத்தை தடுப்பது என இருக்கின்ற சட்டத்தின் படி மட்டுமே தம்மால் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதை மீறி நிர்வாகத்தின் பழிவாங்கும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க முடியாது என்றார்.

ஆணையரின் நடவடிக்கைக்குப் பிறகும், தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் போக்குகள் குறையவே இல்லை. இந்த அரசின் சட்டத்தையும், தொழிலாளர்களையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் நிர்வாகம் கொட்டமடித்து வருகிறது.

தொழிலாளர் துறை தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்காது என்பதையும், இந்த அரசு கட்டமைப்பில் நமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதையும், முதலாளிகள் தான் இந்த நாட்டை ஆள்பவர்கள் என்பதையும் தெளிவாக உறுதி செய்ததாக இருந்தது ஆணையருடனான சந்திப்பும் அவரது பேச்சுக்களும்.

முற்றுகையினால் உடனடி நடவடிக்கைகள் மூலம் பணியிட மாற்றம், உரிய தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்க ஆணையர் அளித்த உத்திரவாதம் தொழிலாளர் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தினாலும், தொழிலாளர் மீதான நிர்வாகத்தின் பழி வாங்கும் நடவடிக்கைகளை முறியடிக்க போராட்டமே தீர்வு என்பதை தொழிலாளர் உணர்ந்துள்ளனர்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு தொழிலாளி, முற்றுகையில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். போராட்டத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், அத்தொழிலாளி மனைவியின் பெரியப்பா என்பதால், அவரது பணியிடைநீக்கம் தொடர்பாக தான் பேசி தீர்ப்பதாகத் தெரிவித்து, தொழிற்சாலைப் பகுதியான திருபுவனை போலிசு எஸ்.ஐ.க்கு தகவல் கொடுத்து பேசச் சொன்னார்.

பேச்சுவார்த்தைக்கு வந்த நிறுவனத்தின் எச்.ஆர். அதிகாரி, தொழிலாளி மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்ததோடு, அத்தொழிலாளி தனது பிரச்சினையைத் தீர்க்க தொழிற்சங்கத்திற்கு ‘லஞ்சம்’ கொடுத்துள்ளார் என்றும், எனவே அவரது பிரச்சினையை வழக்கில் பார்த்துக் கொள்வதாகவும், இதில் போலிசு நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை என்று கூறி மிரட்டியுள்ளார். சட்டத்தைப் பாதுகாப்பதாகப் பீற்றிக் கொள்ளும் போலிசு, ஏதும் செய்யாமல் வாயடைத்து நின்று விட்டது.

மேலும், அதே தொழிலாளியின் தந்தை, அப்பகுதியின் எம்.எல்.ஏ.-விடம் சென்று முறையிட்டதால், எச்.ஆர். அதிகாரியைத் தொடர்பு கொண்டு பிரச்சினையை தீர்க்கச் சொல்லி எம்.எல்.ஏ. கேட்டுள்ளார். இத்தகவலை அந்த அதிகாரி எம்.டி.-யிடம் சொன்ன போது, தான் அந்த எம்.எல்.ஏ.-வின் கட்சித் தலைவரிடமே பேசிக் கொள்கிறேன். எம்.எல்.ஏ.-வின் வேலையைப் பார்க்கச் சொல் என்று கூறி விட்டார். மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதாகச் சொல்லி பதவிக்கு வந்த எம்.எல்.ஏ.-வும் முதலாளிக்கு அடங்கி விட்டார்.

எனவே, தொழிலாளர்களாகிய நமது பிரச்சினைகளை, தொழிலாளர் துறையோ, போலிசோ, மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களோ தீர்க்க மாட்டார்கள் என்பதை நடக்கும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது. எனவே நமது பிரச்சினைக்கான தீர்வு இந்த அரசுக் கட்டமைப்பில் இல்லை, அதற்கு வெளியில் தான் இருக்கிறது என்பதை தெளிந்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் தொழிலாளர்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801

_____________

இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா? வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க